சென்ற ஜனவரி 7ம் திகதி 2012 'சொப்கா' என்று அழைக்கப்படுகின்ற 'ஸ்கிறீன் ஒவ் பீல்' மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் தீபாவளி நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வருடாவருடம் நடக்கும் இந்தக் கொண்டாட்டம் இம்முறையும் மிகவும் சிறப்பாக பல்கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. மிசசாகாவில் உள்ள ஸ்குயவண் முதியோர் அரங்கில் இந்தப் பல்கலாச்சார நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்றது. பிரதம விருந்தினர்களாக வைத்தியகலாநிதி திரு. திருமதி மோகன் இரட்ணசிங்கம் அவர்கள் கலந்து கொண்டனர். விசேட விருந்தினராக குக்ஸ்வில் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் தீப்பிகா தர்மிலா அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மங்களவிளக்கு ஏற்றப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து கனடிய தேசியகீதமும் தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றன. தெடர்ந்து சொப்கா ஒன்றியத்தின் கீதம் முதன்முறையாக இடம் பெற்றது.
அடுத்த நிகழ்ச்சியாக சொப்கா அமைப்பின் உபதலைவர் குரு அரவிந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. வரவேற்புரையைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. அடுத்து குழுநடனம் இடம் பெற்றது. நடனத்தைத் தொடர்ந்து இந்தக் கொண்டாட்டங்களின் சிறப்புப் பற்றி சிறுவன் ஐங்கரன் சிவபாதத்தின் உரை இடம் பெற்றது. அடுத்து சொப்கா சிறுவர் சிறுமிகள் ஒன்று சேர்ந்து கரோல் பாடல்களை இசைத்தனர். அடுத்ததாக சொப்கா செயற்குழு அங்கத்தவர் திரு. கே. ஞானபண்டிதரின் பல்குரல் நிகழ்ச்சி இடம் பெற்றது.
பல்குரல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சொப்காவின் தலைவர் திரு. அந்தோனிப்பிள்ளை ஜேசுதாசனின் தலைவர் உரை இடம் பெற்றது. தன்னார்வத் தொண்டர்களுக்கான விருது – 2012 ஐச் செயற்குழு அங்கத்தவர்களான திரு. சி. பாலசுப்ரமணியமும் திரு. எம். அழகன் சின்னத்தம்பியும் பெற்றுக் கொண்டனர். அடுத்து சொப்கா சிறுவர்களின் குழு நடனம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து திரு. எம் அழகன் சின்னத்தம்பியின் பாடலும் திரு. கே. ஞனபண்டிதன் திரு. அ. ஜேசுதாசன் ஆகியோரின் குரலிசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன.
அடுத்ததாகப் பிரதம விருந்தினர் வைத்திய கலாநிதி மோகன் இரத்தினசிங்கத்தின் உரை இடம் பெற்றது. தொடர்ந்து சொப்கா சிறுவர்களின் நகைச்சுவை உரையாடலும்இ தொடர்ந்து சிறுவர்களின் திரையிசைப் பாடல்களும் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து சொப்கா அங்கத்தவர்களின் நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து சொப்கா செயலாளர் இராகுலா சிவயோகநாதனின் நன்றியுரை இடம் பெற்றது. நன்றியுரையைத் தொடர்ந்து இறுதி கலை நிகழ்வாகத் திரையிசை நடனம் இடம் பெற்றது.
அரங்கம் நிறைந்த இந்த விழாவைத் தொடர்ந்து இரவு பத்து மணியளவில் விருந்துபசாரமும் இடம் பெற்றது. விழாவில் பங்குபற்றியவர்களின் நுழைவுச் சீட்டில் இருந்து ஐந்து அதிஸ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குப் பரிசும் கொடுக்கப்பட்டது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர்ளாக ருவிங்கா சிறிசண்முகதாசனும் சிவானி சிவசெல்வசந்திரனும் மிகவும் சிறப்பாகக் கடமையாற்றினார்கள். முற்று முழுதிலும் சொப்கா அங்கத்தவர்களைக் கொண்டே இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மிகவும் திறமையாக இந்த நிகழ்வை நடத்தி முடித்த அமைப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். சுமார் பதினொரு மணியளவில் நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.