கட்டுரையாளர்: முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.


நீலகிரி படகர்கள் குறிஞ்சி வாழ்வியலை இடையாறாது பின்பற்றி வருபவர்கள். அவர்களை நீலகிரியில் வாழ்கின்ற குறிஞ்சி ஆயர்கள் எனலாம். ‘நாக்கு பெட்டா’ என்று வரையறுத்து வாழ்கின்ற நீலகிரியின் இவர்தம் புழங்குவெளி சிறப்பான கட்டமைப்பினை உடையது. இயற்கை சான்றது. தகவமைப்பின் நுட்பங்களை உட்செறித்தது. காலநிலைக்கேற்பக் காப்பு நிலையைத் தரித்தது. கடும் குளிரினையும், அடர் பனியினையும், அடை மழையினையும் கொண்ட நீலகிரியில் வாழ்வதற்குப் புறப் பாதுகாப்பினைத் தாண்டி, உணர்வுநிலை நீடும் அகப் பாதுகாப்பும் அவசியம். இது, சுற்றத்தால் அமைவது. அவ்வகையில் ‘மதிலு’, ‘அக்க பக்கா’ எனும் படகர்களின் புறம் சார்ந்த தொல்கூறுகளையும், ‘ஏகித்து கட்டோது’ எனும் அகம்சார்ந்த கூறினையும் இக்கட்டுரை ஆய்கிறது. இவை மூன்றும் சங்கக் கூறுகளோடு நெருங்கிய தொடர்புடையது நோக்கத்தகுந்தவை.

மதிலு கொரோச்சோது

தொல்காப்பியர் “இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்” (தொல்காப்பியம், புறத்திணையியல், 69) என்ற உழிஞைத்திணையை வரையறுக்கும்போது குறிப்பிடும் வரிகளில் இடம்பெறும் மதில் எனும் சொல்லாச்சி படகர்களிடம் பண்பாட்டுச் சொல்லாக இன்றும் வழக்கிலுள்ளது. கோட்டைச்சுவற்றினை மதில் எனும் வழக்கம் இன்றும் படகர்களிடம் உண்டு. வீட்டின் நடு அறைகளின் இடைவாயிலை இவர்கள் ‘மதிலு’ என்று அழைக்கின்றனர். இது இரண்டு அறைகளுக்கான இடைத்தடுப்பாக இருப்பதோடு வீட்டின் அகல் விளக்கினை வைக்கும் இடமாகவும் திகழ்கிறது. இந்த மரபார்ந்த வழக்காறு இவர்களின் மரபறிவையும் பறைசாற்றுவது நோக்கத்தக்கது.

விளக்கினை இவர்கள் ‘தீவிகெ’ என்று அழைக்கின்றனர். ‘அகெ’ என்பதற்கு ‘படுகுவில்’ அவிழ்த்தல், முளைத்தல் எனும் பொருளுண்டு. அதாவது நெருப்பினை அவிழ்ப்பது என்ற நிலையில் விளக்கினை இப்பெயரிட்டு அழைக்கின்றனர். படர்களுக்கே உரிய மாதப்பெயர்களில் “தொட்ட தீவிகெ”, “கிரு தீவிகெ” எனும் இரண்டு மாதங்கள் “தீவிகெ” எனும் இப்பெயரினைக் கொண்டமைகின்றன. தண்டியலாங்காரம் தீவக அணியைக் குறிக்கும்போது

“குணம் தொழில் சாதி பொருள் குறித்து ஒரு சொல்
ஒருவயின் நின்றும் பலவின் பொருள் தரின்
தீவகம் செய்யுள் மூவிடத்து இயலும்” (தண்டியலங்காரம், 39)
என்று தீவகம் என்ற சொல்லில் விளக்கினையே குறிக்கின்றது.

நடுஅறையின் மதில்மீது வைக்கப்படும் அகல்விளக்கின் ஒளி அவ்விரண்டு அறைகளிலும் பரவும் என்ற நிலையில் அங்கே இவர்களின் முன்னோர்கள் விளக்கினை வைத்திருக்கின்றனர். மரபார்ந்த சடங்குகளின் போதும், சூரிய அஸ்தமனதிற்குப் பிறகும் மாதிலில் உள்ள விளக்கினை ஏற்றுவதை மரபாகக் கொண்டுள்ள படகர்கள் அவ்விளக்கின் ஒளியை தம் முன்னோர்களாக எண்ணி வழிபடுகின்றனர். மதிலில் ஏற்றப்பட்ட விளக்கிற்கு நேராக நின்று, கைக்கூப்பி தம் முன்னோர்களை அழைப்பார்கள். அவர்களின் எல்லா சடங்குகளுக்கும் முதல் கூறாக இந்தச் சடங்கு விளங்குகின்றது. இன்றும் இவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த “தொட்ட மனெகளில்” அகல்விளக்கின் ஒளியைத்தவிர வேறு ஒளியை அனுமதிப்பதில்லை. அதேபோல, இவர்களின் ஆநிரைவாழ்வின் குறியீடாக உள்ள “ஆகோட்டு:” எனும் புனித அறைக்குள்ளேயும் விளக்கொளியை மட்டுமே அனுமதிக்கின்றனர். அந்த விளக்குகளுக்கு இவர்கள் கடைந்தெடுக்கும் நெய்யை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதேபோல, அவ்விளக்குகளை ‘நெலிகோலினைக்’ கொண்டு நெருப்பினைக் கடைந்தே ஏற்றுகின்றனர். ஏற்றும் இவ்விளக்கினை இவர்கள் அணைப்பதில்லை. சிலவேளைகளில் அணைக்கப்படும்போது அதற்கு மங்கலச்சொற்களைப் பயன்படுத்துகின்றனர். விளக்கினை அணைப்பதை இவர்கள் “தும்போது” என்று அழைக்கின்றனர். ‘தும்போது’ என்றால் நிறைதல், நிறைத்தல் என்று பொருள். விளக்கினை அணைப்பது என்று சொல்வதை அமங்கலமாகக் கருதி மங்கலமானச் சொல்லினைப் பயன்படுத்துகின்றனர். இது இவர்களின் மங்கல வழக்காகும்.

அக்க – பக்க

படகர்களின் ஒரு கால்வழினர் வாழ்கின்ற பகுதியின் தலைமை ஊரிற்கான குறியீடக ‘அக்க – பக்க’ எனும் குறியீட்டு அமைப்பு விளங்குகின்றது. ஆதியில் தன் முன்னோர்கள் வாழ்ந்த இடங்கள் இன்று குறியீடுகளாக மாறி நிற்கின்றன. முன்வாயில், ஆநிரைகளை கட்டும் இடம், தங்குமிடம் என்ற இவர்களின் முன்னோர்களின் பண்பட்ட ஆதிவாழ்வியலின் குறியீடாகத் திகழும் இந்த அமைப்பு படகர்களின் மரபார்ந்த சடங்குகளில் இன்றியமையான ஒன்றாகும். இவர்களின் மூதாதையர் வழிபாடு, அறுவடைச் சடங்கு, ஆநிரைகளுக்கு உப்பு ஊற்றும் சடங்கு உள்ளிட்ட பல சடங்குகளில் இந்த இடம் முன்னிலைப்படுகின்றது. மேலும், தம் மரபார்ந்த எல்லா சடங்குகளின்போதும் இந்த ‘அக்க – பக்கவிற்குள்’ தம் முன்னோர்களை வணங்கும் விதமாக, தம் முன்னேர்களின் வாழ்வியலை நினைவுகூரும் விதமாக நுழைந்து செல்கின்றனர். இதை ‘பக்க உக்கோது’ என்று அழைக்கின்றனர்.

இந்த அமைப்பின் ‘அக்க’ என்ற சொல்லின் பொருளை ஆராயும்போது அது படுகில் தானியம் என்று பொருள்படுகின்றது. இதில் இடம்பெறும் ‘பக்க’ என்ற சொல்லின் பொருளை நாம் முன்னரே கண்டோம். அதேபோல அருகிலிருக்கும் உறவுகளைக் குறிக்கவும் இந்தச்சொல் பயன்படுத்தப்படுகிறது. படகர்களின் ‘தெவ்வ’ சடங்கின்போது ஒரு ‘அக்க – பக்காவில்’ வாழ்கின்ற அனைவரும்கூடி முதல்விதைப்பில் விளைந்த தானியங்களை தம் முன்னோர்க்கு படைக்கின்றனர். அதை ‘அரிகட்டோது’ என்றழைக்கின்றனர். ‘கப்பிளிகுடி’ என்ற ஒருவிதமான காட்டுக் கொடியில் அறுவடைசெய்த ‘கஞ்செ’ எனும் இவர்களின் மரபார்ந்த தானியத்தின் கதிர்களை கட்டி ‘அக்கவின்’ முன்வாயிலில் கட்டுகின்றனர். ஆதியில் விளைச்சலைக் கொண்டுவந்து குவித்துப் பங்கிய இடமாகவும் இதை கருதலாம். அதேபோல, படகர்களின் திருமணமுறைக்கான வரையறையாகவும் இந்த அமைப்பு விளங்குகிறது. ஒரு கால்வழியைச் சார்ந்த மக்கள் கூடுகின்ற இடமாகவும், வாழ்நிலை மற்றும் மரபுநிலையின் அடையாளமாகவும் விளங்கும் இந்த ‘அக்க – பக்க’ எனும் அமைப்பும் சடங்கும் “அஃகம் சுருக்கேல்” எனும் ஒளவையின் முதுமொழியைப் பறைசாற்றுகின்றது.

ஏகித்து கட்டோது

இது படகர்களின் தனித்துவமான இறப்புச் சடங்காகும். மறுவாழ்வின்மீது நம்பிக்கையில்லாத படகர்கள் இறந்தவரை உடலளவில் மட்டும் மறைந்தவர்களாகக் கருதுகின்றனர். இறந்தவரின் ஆன்மாவை தம் முன்னோர்களை அழைத்து அவர்களோடு அனுப்பி வைக்கின்றனர். மறுமை உலகின்மீது நம்பிக்கைகொண்ட இவர்கள் மறுமை உலகினை “ஆ நாடு” மற்றும் “மல்லாடு” என்று அழைக்கின்றனர். ‘ஆ’ என்பது படுகுமொழியில் சேய்மைச் சுட்டாகும். இறப்புச் சடங்கினை வழிபாட்டிற்கு மேலாக நிகழ்த்தும் இவர்கள் அச்சடங்கிற்குள் பல்வேறு தனித்துவமான மரபுக் கூறுகளைக் கட்டமைத்துள்ளனர்.

இறந்தவரின் சகோதரி, குறிப்பாக தங்கை தன் முன்னந்தலையிலிருந்து சில கூந்தல் மயிரினைப் பீய்த்து இறந்தவரின் கட்டைவிரலில் கட்டி வணங்குவதே இச்சடங்கின் சாரமாகும். மாண்டவர் இம்மை உலகில் உறவுகளோடு மேற்கொண்ட நல்லுறவின் குறியீடாக இந்தச் சடங்குத் திகழ்கின்றது. பெண்களுக்கு முன்னுரிமையளிக்கும் படகர்களின் வாழ்வியலில் சகோதரியைப் பேணிக்காப்பது தலையாய கடமையாக அவர்களின் முன்னோர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. தம் குடும்பத்தைச் சார்ந்த பெண் இறந்துபோகும்போது இறுதிவரை அப்பெண்ணின் வீட்டார் குறிப்பாக அப்பெண்ணின் உடன்பிறந்தோர் இருக்கும்வண்ணம் அவர்களின் மரபார்ந்த இறப்புச் சடங்குகள் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும்.

பெண்களின் தலைமுடியை படகர்கள் ‘ஏ’ என்கின்றனர். பெண்கள் கூந்தலை வெண்ணெய் அல்லது நெய்யிட்டு வகிடெடுத்து சீராக்குவதை ‘எணெக்கெ’ என்று அழைக்கின்றனர். நல்லுறவின் குறியீடாக விளங்கும் இந்த ‘ஏகித்து கட்டோது’ எனும் சடங்கே தம் வாழ்வை அர்த்தப்படுத்துகின்றது என்பதில் அவர்கள் திண்ணமாயுள்ளனர். இச்சடங்கு எங்குத் தனக்க நிகழாமல் போய்விடுமோ என்று அஞ்சி நன்னெறியில் வாழ்ந்துவருகின்றனர். இந்தக் குறீயீடோடுச் செல்லும்போது மட்டுமே இறந்தவரின் ஆன்மாவினை தம் முன்னோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றனர். மரபியல் நிலையில் உறவின் குறியீடாக விளங்கும் தலைமயிரினை நல்லுறவின் குறியீடாகக் கொள்ளும் படகர்களின் இந்த மரபுச்சடங்கு நோக்கத்தகுந்தவொன்றாகும். மேலும், உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள பிணக்கினை நீக்கும், உறவினைப் புதுப்பித்துக்கொள்ளும் சடங்காகக் கொள்ளப்படும் இச்சடங்கு சகோதரிகள் தன் அன்பினைக் காட்டக்கூடிய குறியீடாகவும் விளங்குகின்றது.

படகர்கள் கூந்தலுக்கு இட்டுள்ள இந்த ‘ஏ’ என்ற சொல்லாக்கத்தினை “ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த” (நற்றிணை – 116) எனும் சங்கவரியோடு வைத்தெண்ணலாம். இவ்வரியில் இடம்பெறும் ‘ஏ கல்’ என்பதற்கு பெண்களின் கூந்தலைப்போல விரிந்து, உயர்ந்து நிற்கும் கற்கள் நிரம்பிய மலை என்று பொருள். இது பெண்களின் கூந்தல் அமைப்போடு பொருந்தி நிற்கின்றது. படகர்களின் இச்சொல்லின் ஆக்கமும், தொன்மையும் வியப்பிற்குரியதாகும்.

இந்தப் புற மற்றும் அகக்கூறுகள் நுட்பம் நிறைந்தவை. சங்க காலத்தோடு பொருந்துபவை. இன்றும் வழக்கிலுள்ளவை. இதன் நிலைப்பிற்கு இது சடங்காகத் தொடர்வதே அடிப்படையானதெனலாம். ‘அக்க – பக்க’ எனும் படகர்களின் சமூக உருவாக்க நிலையானது அவர்தம் வாழ்வில் இன்றியமையான அசைவியக்க நிலையாகும். படிமலர்ச்சியாகும். இன்றும் இது, இவர்களிடையே நீளும் தெளிவான, ஆரோக்கியமான மண உறவு முறைக்கு வழிகோலியது எனலாம். அதோடு, எருமை மந்தைகளோடுகூடிய இவர்தம் மலைப்புல வேளாண்மையின் பிணைப்பு வாழ்க்கை நிலையின் குறியீடாகவும் இதனைக் கொள்ளலாம். இதிலும் இவர்தம் ஆதி வாழ்வியலான எருமை மந்தை பேணலே வேராகத் தொடர்வதை உணரலாம்.

துணை நின்றவை

1. சங்க இலக்கியம், கழகவெளியீடு, 2000.

2. பொறங்காடு சீமை படகர்களின் மூலிகை மருத்துவம், கோ.சுனில்ஜோகி, ஆய்வியல் நிறைஞர்பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2011.

3. நீலகிரி படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குபொருட்கள், கோ.சுனில்ஜோகி, முனைவர்பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2015.

மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்