கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக இவர் வரலாற்றில் இடம் பெறுகின்றார். இதற்கு முன் இப்பதவியில் இருந்தவர்கள்: ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா குமாரதுங்க. ஹரிணி அமரசூரிய நன்கு தமிழில் உரையாற்றக் கூடியவர் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன். வாழ்த்துகள்.
அமரசூரிய 2020 முதல் 2024 வரை தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அதற்கு முன் அவர் இலங்கை திறந்தவெளி பல்கலைக்கழக சமூக ஆய்வுத்துறையின் மூத்த விரிவுரையாளராக இருந்தார். இளைஞர் வேலைவாய்ப்பு, பெண்ணியம், பாலின சமத்துவம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இலங்கை கல்வி முறைமையின் செயல்திறன் குறைபாடுகள் போன்ற விடயங்களில் ஆய்வுகள் செய்தவர். நெஸ்ட் (Nest) அமைப்பின் இயக்குனர்களில் ஒருவர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் 'இந்து'க் கல்லூரியில் சமூகவியலில் இளங்கலையில் கெளரவப் பட்டம், மாக்வாரி பல்கலைக்கழகத்தில் ( Macquarie University) பிரயோக மானுடவியல் மற்றும் அபிவிருத்தியில் முதுகலைப் பட்டம் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் (University of Edinburgh) சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் எனப் பட்டங்கள் பல பெற்றவர்.
இளைஞர்கள், அரசியல், பாலினம், அபிவிருத்தி, அரசு -சமூகம் உறவுகள், குழந்தைகள் பாதுகாப்பு, உலகமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்கள் பற்றிய நூல்களை , ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். இவர் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்து இலவசக் கல்வியை கோரி போராட்டங்களில் ஈடுபட்டவர். பாலின சமத்துவம், LGBTQ+ உரிமைகள் மற்றும் மிருக நலனுக்காகக் குரல் கொடுத்தவர்.