இது எந்த நாட்டில் நடந்தது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எங்களுக்குப் புகலிடம் தந்து எங்களை அரவணைத்த கனடா நாட்டில்தான் நடந்திருக்கின்றது. புதைகுழிகள் என்றதும் எங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தாயகத்தில் செம்மணிப் புதைகுழிதான். செம்மணியைத் தொடர்ந்து தாயகத்தில் ஏராளமான புதைகுழிகள் வரலாற்றில் பதியப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டன. யுத்த சூழலில் இன்னும் அனேகமான புதைகுழிகள் அடையாளம் காட்டப்படாமலே இருக்கின்றன. இரண்டு தலைமுறை போனால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பில் எல்லாமே மூடிமறைக்கப் பட்டிருக்கின்றன. காலம்கடந்தாலும், மறைக்கப்பட்ட யுத்தகாலப் புதைகுழிகள் ஒருநாள் தோண்டப்படும் போது பல உண்மைகள் தெரிய வரலாம். ஆனால் இதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதற்குக் குற்றம் புரிந்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தினம் தினம் எதிர்கொள்ளும் வலியும், வேதனையும் யாருக்கும் சொல்லிப் புரியப்போவதில்லை. சொந்த மண்ணைப் பறிகொடுத்த, எங்களுக்கு ஏற்பட்ட அதே வலியைத்தான் இங்கே உள்ள முதற்குடி மக்களும் எதிர் கொள்கிறார்கள். ஆனால் இங்கு ஜனநாயக கோட்பாடுகள் பின்பற்றப்படுவதால், உண்மையை ஓரளவாவது கண்டறிய முடிகின்றது. 2008 ஆம் ஆண்டு கனடா பிரதமர் இப்படி நடந்தற்காக முதற்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். தற்போதய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கத்தோலிக்க திருச்சபை இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கனடிய மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இழப்பு இழப்புத்தானே!

சில வருடங்களுக்கு முன், யூலை 1 ஆம் திகதி 150 வது பிறந்த தினத்தை வெகுசிறப்பாகக் கொண்டாடிய கனடா நாடு இம்முறை பிறந்த தினத்தை கொண்டாட முடியாத சூழலில் அகப்பட்டிருக்கின்றது. கோவிட் - 19 காரணமாக மக்கள் ஒன்று கூடமுடியாத நிலையில் இருந்தாலும், புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட ஏராளமான முதற்குடி இனத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகளின் புதைகுழிகள் கனடாவை உறைய வைத்திருக்கின்றது. தொடர்ந்து அதிர்ச்சி தரும் இந்தச் சம்பவங்கள் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது. முதற்குடி மக்கள் கல்விகற்ற கத்தோலிக்க இந்திய உறைவிடப் பாடசாலை மைதானங்கள் புதைகுழிகளாக எப்படி மாறின என்பதை முதலில் பார்ப்போம்.

சுமார் 520 ஆண்டுகளுக்கு முன் வட அமெரிக்காவில் ஐரோப்பியர்களான ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் வந்து குடியேறினர். மிருகங்கள், பறவைகளின் தோல் வியாபாரமே முக்கியமாக இடம் பெற்றது. இங்குள்ள முதற்குடி மக்களை கிழக்கே உள்ள ‘இந்தியர்கள்’ என்று தவறாக நினைத்து இவர்களை இந்தியர்கள் என்று ஐரோப்பியர் அழைத்தனர். முதற்குடி மக்களிடம் அப்போது வில்லும், அம்பும்தான் இருந்தன. இவர்களிடம் துப்பாக்கி இருந்தது. எனவே முதற்குடி மக்களை இலகுவாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குகள் கொண்டு வந்தனர். அடங்க மறுத்தவர்களைச் சுட்டுக் கொன்றனர். மெல்ல மெல்ல முதற்குடி மக்களோடு வியாபாரத்தில் ஈடுபட்டும், அவர்களை வேலைக்கு அமர்த்தியும் தங்களை முதலாளிகளாக மாற்றிக் கொண்டனர்.

முதற்குடி மக்களின் புதிய தலைமுறையினரின் எழுச்சியை அடக்குவதற்காக, அவர்களுக்குக் கல்வி அறிவூட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். கனடா முழுவதும் சுமார் 132 இந்திய உறைவிடப் பாடசாலைகள் இப்படி இயங்கின. முதற்குடி மக்களின் பிள்ளைகளுக்கு ஐந்து வயதானதும் அவர்களைக் கட்டாயமாகப் பெற்றோரிடம் இருந்து பிரித்து வெகுதொலைவில் உள்ள கத்தோலிக்க இந்திய உறைவிடப் பாடசாலைகளில் சேர்த்தனர். பிரிவுத் துயர் மட்டுமல்ல, போதிய உணவு இன்றி நோய்வாய்ப்பட்டும் இறந்த பிள்ளைகள் அதிகம். போதிய ஆவணங்கள் இல்லாததால், பெற்றோர் யாரென்றே தெரியாமல் வளர்ந்த பிள்ளைகள் இதைவிட அதிகம். வேலியே பயிரை மேய்ந்த கதைiயாகப் பருவமடைந்த பிள்ளைகள் பாலுறவுக்கும் உட்படுத்தப்பட்டனர். பிள்ளைகளைப் பெற்றோர் தேடிச் சென்றபோது, ‘பிள்ளைகள் தப்பி ஓடிவிட்டார்கள்’ என்று காரணம் சொல்லப்பட்டது. தங்கள் பிள்ளைகளும் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டிருப்பதை அப்போது பெற்றோர்கள் அறிந்திருக்கவில்லை. நடந்தது என்வென்று தெரியாமலே பல பெற்றோர்கள் இறந்துபோயினர். அப்போது உள்ள நிலையில் முதற்குடி மக்கள். படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால் இவர்கள் சொன்ன எல்லாவற்றையும் நம்பினார்கள்.

கனடாவில் 1.7 மில்லியன் முதற்குடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் கனடா குடிமக்கள் தொகையில் சுமார் 5 வீதமானவர்கள். 1863 ஆம் ஆண்டிலிருந்து சுமார் ஒன்றரை லட்சம் பிள்ளைகள் வரை முதற்குடியினரின் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இப்படிப் பிரித்து எடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தங்கள் மொழியைப் பேசும் உரிமை மறுக்கப்பட்டது. அவர்களது பண்பாடு, கலாச்சாரத்தைப் பின்பற்ற முடியாத சூழ்நிலையும் உருவாக்கப்பட்டது. பிள்ளைள் எல்லோரும் கத்தோலிக்க மதத்திற்கு மதம் மாற்றப்பட்டனர். கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுத்த பிள்ளைகள் மாயமாக மறைந்தார்கள். சில பிள்ளைகள் வீட்டு வேலைகள் செய்வதற்காகத் தத்தெடுக்கப்பட்டார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த பெண் ஒருவர் தனது பெற்ரோரைக் கனடாவில் தேடினார். சின்ன வயதிலே பாடசாலையில் இருந்து தான் அமெரிக்கக் குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டதாகவும், தனது பெற்ரோரைப் பற்றி அறிந்து கொள்ளத் தான் படித்த பாடசாலையில் விசாரித்த போது அதற்கான ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்று கைவிரித்து விட்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். உயிரோடு இருந்த பெற்ரோரையே பார்க்க முடியாத சூழ்நிலையில் முதற்குடி மக்களில் பலர் இப்படி இருக்கின்றார்கள்.

ஒன்ராறியோவின் போட் அல்பானி என்ற இடத்தில் இருந்த முதற்குடி மக்களின் பிள்ளைகள் கல்விகற்ற இந்திய உறைவிடப் பாடசாலையான ‘சென். அனீஸ் இன்டியன் ரெசிடன்ரல் ஸ்கூல்’ (ழுடிடயவநள ழக ஆயசல ஐஅஅயஉரடயவந யனெ வாந புசநல ரேளெ ழக வாந ஊசழளள) மிகவும் மோசமானதாகக் கணிப்பிடப்பட்டது. இந்தப் பாடசாலை 1902 ஆம் ஆண்டு தொடக்கம் 1976 ஆம் ஆண்டு வரை இயங்கியது. இங்கு கல்விகற்ற பிள்ளைகள் மிகவும் கேவலமாக நடத்தப்பட்ட விடயம் விசாரனைகளின் போது தெரிய வந்தது. பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளைப் பிரித்ததாகவும், அவர்களின்மொழி, கலாச்சாரம், பண்பாடு, மதம் போன்றவை திட்டமிட்டு அழித்ததாகவும், ஆங்கில மொழி புகுத்தப்பட்டதாகவும், கத்தோலிக்கர்களாக மதம் மாற்றப்பட்டதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இதைவிடப் பாலியல் ரீதியாகவும் பல மாணவ, மாணவிகள் துன்புறுத்தப்பட்டனர். குழந்தைகளை உறைவிடப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த முதற்குடிப் பெற்றோர்கள் தண்டிக்கப்பட்டார்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவில் காம்லூப்ஸ் என்ற இடத்தில் இருந்த கத்தோலிக்க இந்திய உறைவிடப் பாடசாலையின் மைதானத்தில் மாணவர்களின் புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 215 மாணவர்கள் வரை அங்கு புதைக்கப் பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. 1890 ஆம் ஆண்டு தொடக்கம் 1978 ஆம் ஆண்டு வரை இந்தப் பாடசாலை இயங்கியது. 2018 ஆம் ஆண்டு நான் காம்லூபஸ்; சென்றபோது, முதற்குடி மக்களுடன் உரையாட முடிந்தது. எங்கள் நாட்டுப் பிரச்சனைகளை கேட்டறிந்த அவர்கள் தங்கள் உறவுகளுக்கு நடந்த கதைகளைச் சொன்னார்கள். கல்காரியில் உள்ள பன்னெவ் நகரத்திலும் இது போன்ற கதைகளை முதற்குடி மக்களிடம் இருந்து கேட்க முடிந்தது. வான்கூவர் நகரத்திலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்லி அழுதார்கள். நாங்கள் மட்டுமல்ல, சிறுபான்மையினர் எல்லா நாடுகளிலும் ஒதுக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. முதற்குடி மக்களுக்குப் போதைப் பொருட்களை அறிமுகப்படுத்தி வைத்தன் மூலம் அவர்களை மேற்கொண்டு சிந்திக்க விடாமல் தடுத்துவிட்டார்கள். எங்கள் மண்ணிலும் இது போன்ற நிகழ்வுகளை இப்போது அவதானிக்க முடிகின்றது.

கனடாவின் ஒன்ராறியோ, சஸ்கெச்சுவான் ஆகிய இரண்டு மாகாணங்களும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். காரணம் இந்த மாகாணங்களின் பெயரில் கனடா இரண்டு தொடர்வண்டி எஞ்சின்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்திருந்தது. கொழும்பிற்கும் காங்கேசந்துறைக்கும் இடையே இவை சேவையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தன. காம்லூப்ஸில் நடந்த இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சஸ்கெச்சுவான் மாகாணத்தில் இருந்த முதற்குடி மாணவர்களுக்கான இந்திய உறைவிடப் பாடசாலை மைதானத்தில் இன்னுமொரு புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பாடசாலை 1899 ஆம் ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு வரை செயற்பட்டது. அக்கால கட்டத்தில் இப்படியான பாடசாலைகளில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளில் சுமார் 6000 பிள்ளைகள் வரை தொலைந்து போனதாக பெற்ரோரின் முறைப்பாட்டில் இருந்து அறிய முடிகின்றது. நன்கு திட்டமிடப்பட்டு ஒரே முறையான அடக்குமுறை கனடாவில் உள்ள எல்லா இந்திய உறைவிடப் பாடசாலைகளிலும் நடந்திருக்கின்றன. தொலைந்து போனதாகச் சொல்லப்பட்டவர்கள், உண்மையிலே தொலைந்து போனார்களா அல்லது புதைகுழிக்குள் இருக்கிறார்களா என்பது இனிவரும் காலங்களில்தான் தெரியவரும், உண்மை வெளிவரும்வரை காத்திருப்போம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R