யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி படகர் இன மக்களின் பூர்வகுடித் தன்மைக்குரிய, அவர்களின் பல்வேறு தனிக்கூறுகளுள் நீலகிரியைப் பற்றிய நிலவியல் அறிவும் இன்றியமையான ஒன்றாகும். நீலகிரியில் உள்ள பெரும்பான்மையான இடங்கள் படகர்களால் பெயரிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பெயர்கள் படகர்களின் தனித்திராவிட மொழியான படகு மொழியின் தொன்மையினை விளக்குவனவாகத் திகழ்கின்றன.

மலையைக் குறிக்கப் படகர்கள் “கிரி”, “கோ”, “பெட்டு”, “மந்த”, “மந்து” போன்ற பல பெயர்களை வழங்குகின்றனர். அதனடிப்படையில்தான் “நீலகிரி”, “தொட்ட பெட்டா” போன்ற படகர்களின் சொல்வழக்குகள் விளங்கிவருகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் இன்றும் படகர்களிடம் வழக்கில் உள்ளவைகளாகும். நீலநிறமுடைய குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் மலை என்ற காரணத்தினால் இம்மலைக்கு “நீலகிரி” என்று பெயரிடப்பட்டதாகக் கருதினாலும் இம்மலையினைச் சூழ்ந்த நீலவானம் மற்றும் பனிப்பொழிவுக் காலத்து நீலநிறக் கதிர்களின் சிதறல் போன்றவையும் இம்மலைக்கான காரணப் பண்புப் பெயருக்கு ஆகிவந்தது எனலாம். குறிஞ்சி மலரைக்கொண்டு இம்மலைப் பெயரிடப்பட்டது என்பதைவிட வானத்து நீல நிறத்தாலும், நீலநிறக் கதிர்களின் ஊடுறுவலாலும் பெயரிடப்பட்டது என்பதே நிலவியல் அடிப்படையில் சரியாகப் பொருந்துகின்றது.

நீலகிரியைப் படகர்கள் தமக்குள் “நாக்குபெட்டா” என்று விளிக்கின்றனர். அதாவது நான்கு மலைகள் என்பது இதன் பொருள். நீலகிரியின் நிலவியல் அமைப்பும் இதனை ஒத்துள்ளது. இந்த நான்கு பெட்டாவிலும் கால்வழியின் அடிப்படையில் வாழ்ந்துவருகின்ற படகர்கள் அதற்குத் “தொதநாடு”, “பொரங்காடு”, “குந்தெ”, “மேக்குநாடு” என்று பெயரிட்டுள்ளனர். இந்த நான்குப் பெயர்களுக்குப்பின்பு “சீமை” என்ற பின்னொட்டையும் இட்டு அழைப்பதுண்டு. “அட்டி”, “ஊரு”, “கேரி”, “சீமெ”, “நாடு”, “ஹட்டி” போன்றவைப் படகர்களின் நிலப் பொதுப்பெயர்களாகும். இதில் “நாடு” மற்றும் “சீமெ” என்பது பெரிய நிலப்பரப்பினைக் குறிப்பனவாகும்.

“சீமெ” என்றப் பெயர் படகர்களிடம் பிற்காலத்தில் தோன்றியதாக இருத்தல் வேண்டும். இதை படகர்களின் இறப்புச்சடங்கில் இன்றியமையானதாகத் திகழும், இறந்தவரின் ஆன்மாவினைப் புனிதப்படுத்தும் “கரு ஹரசோது” சடங்கில் இடம்பெறும் “நாடா மேலே ஜரதது பாப” (நாட்டின்மேல் அல்லது பிறபகுதியின் மேல் புறங்கூறியது பாவம்), “ஊரா மேலெ உரதது பாப” (தன் அல்லது பிற ஊரின்மீது பொறாமைக் கொண்டிருந்தது பாவம்) எனும் வழக்காறுகள் தெளிவுப்படுத்துகின்றன.

“நீலகிரி” – “நாக்குபெட்டா” – “ஊரு” – “அட்டி” – “கேரி” எனும் அடிப்படையில் படர்கள் தம் வாழ்க்களத்தினைப் பகுத்துள்ளனர். அதிலும் ஒவ்வொரு பெட்டாவிலும் இருக்கும் ஒவ்வொரு ஊரினைச் சுற்றியும் “அட்டிகள்” இருக்கும். ஊரோடு சேர்ந்த இந்த “அட்டிகள்” “அக்க” “பக்க” எனும் அமைப்போடுக் கட்டமைக்கப்பட்டதாக விளங்குகின்றன. தொன்றுத்தொட்டு வாழ்ந்துவரும் உறவுமுறை, தொழில்முறையின் கட்டமைப்பு மற்றும் அடையாளமாகப் படகர்களின் இந்த “அக்க பக்க” விளங்குகின்றது. ஒவ்வொரு கால்வழியினருக்கும் ஒரு “அக்க பக்க” இருக்கும். அதற்கான குறியீடுகள் அமைந்திருக்கும் இடமாக “ஊர்” திகழும், அந்த ஊரினைச்சுற்றி அதற்குரிய அட்டிகள் அமைந்திருக்கும். படர்களின் இந்த வாழிடக் கட்டமைப்பு அவர்தம் பண்பாடு மற்றும் நிர்வாக நிலையையும் காட்டுகின்றன.

எருமை மந்தை வளர்ப்பினைத் தன் தொல்வாழ்முறையாகக் கொண்டிருந்த படகர்கள் எருமைகளை அடைக்கும் பட்டிகளைத் “தோ” என்றும், “எம்மட்டி” என்றும் அழைக்கின்றனர். பாறைகளையும், கற்களையும் கொண்டு அமைக்கப்பட்ட வட்டவடிவிலான அமைப்பினைக் கொண்டதாக இந்தத் “தோ” அமைந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட ஊரினைச் சார்ந்த, கால்வழியினரின் எருமை மந்தைகளைக் கால சீதோஷண நிலைக்கேற்ப ஓட்டிச் சென்று பராமறிக்கின்ற இடங்களை “எம்மட்டி” என்று அழைக்கின்றனர். நீலகிரியின் “கொடலூரு” (கூடலூர்) பகுதியும், “கீழ்க் கோட்டெகிரிப்” பகுதியும் (கீழ்க்கோத்தகிரி) படர்களின் “எம்மட்டிகளாக” விளங்கின.

இந்த வாழ்க்களப் பெயர்களும் முழுக்க நிலவியல் அடிப்படையில் அமைந்தவையாகும். சான்றாக “கேரி” என்ற சொல்லானது வரிசையாக அமைந்த தெரு என்று பொருள். “கீறு” என்றால் படகு மொழியில் கோடு என்றுப்பொருள். ஒரு கோட்டினைப்போல வரிசையாக அமைந்த வாழிடத்தினைப் படகர்கள் “கேரி” என்று அழைக்கின்றனர்.

படகர்களின் ஊரினைக் குறிக்கும் “அட்டி” என்றச் சொல்; மலைச்சரிவினைக் குறிக்கும் “அட்டு” என்ற சொல்லிருந்து உருவாகியிருக்கலாம். மேலும் “அட்டு” என்ற சொல்லுக்குப் படகுவில் ஊற்று என்ற பொருளுமுண்டு. கால்நடைகளுக்கு மேற்கொள்ளும் மருத்துவம் மற்றும், ஆநிரை பராமறிப்புச்சார்ந்த உப்பு ஊற்றும் சமூகச் சடங்கினைப் படகர்கள் “உப்பு அட்டு” என்றே அழைக்கின்றனர். ஆகவே எருமை மந்தைகளுக்கு ஏற்ற நீர்ப்பாங்கான இடமாக அமைக்கப்பட்டமையால் இது “அட்டி” என்று பெயர்ப்பெற்றிருக்கலாம்.

படர்களின் எல்லா அட்டிகளும் மந்தைகளுக்கேற்ற புல்வெளியோடோ, காடு அல்லது சோலைக்கு ஒட்டியோ அமைந்திருக்கும். அவ்வகையில் படர்களின் வாழிட அமைப்பினைக் கூறும்போது “அட்டி அணெ” என்ற ஒட்டுச்சொல்லோடே அழைக்கின்றனர். இதில் “அணெ” என்பது புல்வெளிப்பரப்பினைக் குறிக்கும். மேய்ச்சலுக்கு உகந்த இந்த “அணெகள்” இல்லாத படகர்களின் “அட்டிகள்” கிடையாது. குறிப்பாக படகர்களின் ஊரான “மந்தணெ” என்ற ஊரினை நோக்கினால் மலைக்குமேலே அமைந்திருக்கும் ஊர் என்று இது பொருள்படும்.

படகுமொழியில் “மந்தா” என்பது மலையைக் குறிக்குமென்று முன்னரே கண்டோம். மலைக்குமேலே உள்ள “அணெ” என்ற பெயரில் “மந்தணெ” எனும் ஊர் வழங்கப்பட்டு வருகின்றது. அதே நிலையில் படர்களின் பெரும்பாலான ஊர்கள் மலைச்சரிவினையொட்டிய காடு அல்லது சோலையை ஒட்டி அமைந்திருக்கும். இந்த நிலவமைப்பினையும் படகர்களின் “அட்டி” என்ற சொல் குறிக்கின்றது. அதாவது “அட்டு + ஈ” என்ற நிலையில் அமையும் இந்த வழக்கில் “அட்டு” என்பது பெயரில் மலைச்சரிவையும், வினையில் ஊற்றுதல் என்பதையும் குறிப்பதாக ஏற்கனவே கண்டோம். அதோடு “ஈ” என்பதற்குப் படகுவில் பசுமைமறாக் காடு என்று பொருள். அதாவது மலைச்சரிவில் காடுகளையொட்டி அமைந்திருக்கும் இடம் என்றும் பொருள்படும். ஆகவே படகர்களின் வாழிடமான “அட்டி” என்பது நிலவமைப்பு, வாழ்வியல் அமைப்பு, பாதுகாப்பமைப்பு என்ற மூப்பரிமாணங்களை உட்செறித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நிலையில் தெளிந்த நிலவியல் அறிவுடன் படகர்களின முன்னோர்களால் அமைக்கப்பட்ட தொன்மையான பல ஊர்கள் இன்றுவரையும் இயற்கைச்சீற்றத்தால் பாதிப்படையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

படகர்களின் அட்டிகளின் பெயர்கள் அனைத்தும் நிலவியல் அடிப்படையிலேயே பொதுப்பெயரையும், சிறப்புப் பெயரையும் கொண்டமைகின்றன. சிலப் பெயர்கள் அவ்விடத்தில்; விரவியுள்ள கருப்பொருளின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்தப் பெயர்களெல்லாம் இருபெயர் ஒட்டுகளாகவோ, சில முப்பெயர் ஒட்டுகளாகவோ அமைந்துள்ளன. இதில் சிறப்புப்பெயர் முதலிலும், பொதுப்பெயர் இறுதியும் இடம்பெறுகின்றன. இது தமிழின் இருபெயரொட்டுப் பண்புத்தொகையின் இலக்கணத்துடன் பொருந்திப்போவது குறிப்பிடத்தக்கதாகும். சான்றாக படகர்களின் “ஜக்கல ஓரெ” என்ற ஊரினை எடுத்துக் கொண்டால் “ஓரெ” என்ற படகுச் சொல்லிற்கு மேடுபாங்கான இடம் என்று பொருள். “ஜக்கல” என்பது மூலிகைத்தன்மை நிறைந்த ஒருவகையான பழத்தினையும், அப்பழத்தின் செடியினையும் குறிக்கின்றது. ஆக “ஜக்கல” எனும் முள்செடிகள் நிறைந்துள்ள மேடுபாங்கான இடம் என்று இவ்வூர் பெயரிடப்பட்டிருப்பது படகர்களின் நிலவியல் அறிவிற்குத் தக்கச் சான்றாகும்.

படகர்கள் வேட்டை சமூகமாக இருந்து நாடோடி வாழ்க்கையை மேற்கொண்ட காலந்தொட்டு அவர்கள் தாம் பயணித்த இடங்களுக்கெல்லாம் சூட்டியப் பெயர்கள் இன்றும் பெருமளவில் மாற்றமின்றி நிலவி வருகின்றன. அப்பெயர்கள் அனைத்தும் பகுக்கக்கூடிய சொற்களாக விளங்குகின்றன. மேலும் இந்தப் பகுப்பு அவ்விடங்களின் நிலவியல் அமைப்புடன் முழுவதும் பொருந்திப்போவதாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையில் இந்த ஆய்வுக்கட்டுரை நீலகிரியில் தாம்வாழும் நாக்குபெட்டாவிற்குப் படகர்கள் இட்டப் பெயர்களை அதன் பொதுப்பெயர்கள், சிறப்புப்பெயர்கள் மற்றும் அதில் கூட்டுண்டுள்ள நிலவியல் சார்ந்த நுண்சொற்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து விளக்குகின்றது.

படகர்களின் இடப்பெயர்களை ஆராயும் முன் “அத்த” (வழி), “அட்டனெ” (புல்தரை), “அணெ” (புல்தரை), “அட்டி”, “அடி” (கீழே), “ஆட” (சமதளப்பகுதி), “ஊரு” (ஊர்), “ஏணு” (ஓரம், எல்லை, மேல்நோக்கியப்பகுதி), “ஏரி” (செங்குத்தான மேடு), “ஒல” (நிலம்) “ஓடெ” (மலைவழி), “ஓணி” (எருமை வழித்தடம்), “ஓரெ” (மேடுப்பாங்கான இடம்), “கண்டி” (மலையிடுக்கு), “கம்பெ” (எல்லை), “கல்லு” (கல்), “காலு” (வழி) “காடு” (காடு), “கேயி” (இருபுற மலைச்சரிவு), “கேரி” (தெரு), “கேரு” (எரி, குளம்), “கொரெ” (குறுங்காடு), “கோடு” (மலையுச்சி), “குண்டு” (உருண்டையானக் கல்), “குய்” (குழி), “கூடு” (கூடு), “தலெ” (மேலெ, அப்பால்), “தா” (தோ – எருமைமந்தைகளுக்கான அரைவட்டத் தொழுவம்), “தொரெ” (துறை), “திட்டு” (மேடு), “நாடு” (நாடு), “நாயி” (எருத்தின் திமில் போன்ற அமைப்பு), “பட்டு” (மனை, இல்லம் அமைக்க ஏதுவான சிறிய இடம்), “பள்ளி” (குழி), “பிள்ளு” (சந்து), “பாயிலு” (வாசல்), “பெட்டு” (வெற்பு, மலை), “பெந்நு” (புறமுதுகு), “மண்ணு” (மண்), “மந்தா” அல்லது “மந்து” (மன்று, மலை), “மநெ” (வீடு), “மலெ” (மலை), “மா” (எல்லை), “முக்கு” (முடக்கு, முனை), “முடி” (உச்சி), “மூலெ” (மூலை), “மொக்கெ” (கறட்டு நிலம்), “மொர” (மரம்), “ஸப்பெ” (சரிவு), “ஸீகெ” (பிரிவு), “ஸோலெ” (சோலை), “ஹண்ணி” (சதுப்பு நிலம்), “ஹத்து” (ஏறுமுகமான இடம்) போன்ற நிலவியல் அடிப்படையிலான, படகர்களின் நிலப்பெயரின் பின்னொட்டாக வரும் இந்த நிலவியல் சொற்களை அறிந்துக் கொள்வது அடிப்படையானதாகும்.

நாக்கு பெட்டா

. நீலகிரி மலையினைப் படகர்கள் நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கின்றனர். அவை “நாடு”, “காடு”, “சீமை" என்ற பரப்பில் அமைந்த, "மேக்கு நாடு", "தொதநாடு", "குந்தெ சீமெ", "பொரங்காடு" என்பவையாகும். இத்துடன் “துடேகுய்” என்ற பகுதியையும் இணைந்து ஐந்து சீமைகளாக, நாடுகளாக படகர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இந்த ஐந்துப் பிரிவுகளும் நிலவியல் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நீலகிரியைப்பற்றி ஆய்ந்த பல ஆய்வாளர்கள் படகர்களால் பெயரிட்டப்பட்ட இந்தப் பிரிவுகளை ஏற்று கொள்கின்றனரே தவிர, அதன் காரணம் மற்றும் தோற்றத்தை ஆராயவோ, பேசவோ இல்லை எனலாம். மேலும் நீலகிரிக்குப் படகர்கள் இட்ட இந்த இடப்பெயர்களைத் தவிர வேறு பெயர்களும் நீலகிரிக்கு இல்லை என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

மேக்கு நாடு

“மேக்கு நாடு" என்பது படகுவில் மேலே உள்ள நாடு என்று பொருள்தருகிறது. அதாவது “தொதநாடு” மற்றம் “பொரங்காடு சீமையை” ஒப்பிடும்போது மேலே அமைந்திருக்கும் நிலப்பகுதி என்பதை இது குறிக்கின்றது. சில ஆய்வாளர்கள் இதை மேற்கு நாடு என்று குறிக்கின்றனர். அது தவறு. தமிழின் திசைப்பெயரான மேற்கு என்பதன் கண்ணோட்டத்தில் அவ் ஆய்வாளர்கள் இதை நோக்கினாலும் இது நீலகிரிக்குப் பொருந்தாது. ஏனெனில் சூரிய உதயம், மறைவு எனும் இரு திசைகளே நீலகிரியின் பிரதான திசைகளாகும். மேல், கீழ் என்பதே இங்குத் திசையைக் குறிக்கும் பெருவழக்காகத் திகழ்கின்றன.

படகர்களின் இந்த “மேக்கு நாடு” என்பது “மே” - மேலே, “கூ” அல்லது “கு” - நிலம் என்று பொருள்தருகிறது. “கு", “கூ” எனும் ஓரெழுத்து ஒருமொழிக்குப் படகு மொழியில் நிலம் என்று பொருள். நிலத்தை உழும் உழ முனைக்குக்கூட படகு மொழியில் "கூ" என்றுதான் பெயர். நிலத்தினை உழுவதால் இது "கூ" என்று பெயர்பெற்றது எனலாம். அதேநிலையில் நிலத்திலிருந்து கிடைக்கின்ற வேகவைத்த, வடித்த சோற்றினையும் படகர்கள் “கூ” என்றே அழைப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


தொதநாடு

இந்த நிலப்பிரிவிற்குரிய பெயரிற்கு நிலவியல் மற்றும் காரணம் என்ற இரு நிலைகளிலும் பொருள் பொருந்தி நிற்கின்றது. படகர்களின் எருமைப்பாட்டியான “தோ” மிகுந்திருந்ததாலோ, மற்றசீமைகளைவிட பெரிய பரப்பளவினைக் கொண்டதாலோ இந்தப் பகுதி “தோ நாடு”, “தொட்டநாடு” (தொட்ட – பெரிய) எனும் அடிப்படையில் “தொதநாடு” என்றானதாக கருத இடமுண்டு. ஆனால் இந்தப் பெயரில் அமைந்துள்ள நிலவியல் கூறுகள் இந்நிலத்திற்குச் சரியாகப் பொருந்தி வருகின்றன. எனவே நிலவியல் தன்மையின் அடிப்படையிலேயே இப்பெயர் இடப்பட்டதாகத் துணியலாம்.

"தோ+அதா+நாடு" என்பதே “தொதநாடு” ஆகும். "தோ" என்ற படகு மொழி நீரினையும் குறிக்கின்றது. “அதா" என்பது கீழே என்பதைக் குறிக்கின்றது. ஆகவே நீர்நிலைகள்கள் நிறைந்த, கீழே உள்ள பகுதி என்று இப்பெயர் பொருள்படுகிறது. இந்த நிலவியல், அந்நிலப்பரப்புடன் சரியாக பொருந்தி நிற்பதும் குறிப்பிடத்தக்கதாகும். படகு மொழியில் "அதா" என்பது சேய்மையைச் சுட்டுவதாகும். இந்தத் “தொதநாட்டினை” சில ஆய்வாளர்கள் தோடநாடு என்று குறிக்கின்றனர். இதுவும் தவறாகும்.

தோடர் இன மக்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வாளர்கள் இந்த நிலப்பெயரை இவ்வாறு திரித்துக் கூறுகின்றனர். உண்மையில் தோடர்கள் இந்த இடத்தில் மட்டுமின்றி நீலகிரியின் பல இடங்களிலும் வாழ்கின்றனர். மேலும் தோடர்களுக்குத் “தொதவா” என்று பெயரிட்டழைத்தவர்களும் படகர்கள்தான் என்பது தோடர்களே குறிப்பிடும் செய்தியாகும். எருமை மந்தைகளுக்கான நீரினை (“தோ” வினை) தேடி வருபவர்கள் என்ற காரணத்தாலோ, படகர்களின் எருமைகளையும் “தோ” களில் பாதுகாத்துத் தருபவர்கள் என்றக் காரணத்தாலோ படர்கள் தோடர்களைத் “தொதவர்” என்று அழைத்திருக்கலாம். இந்த “தொதவர்” என்பதே தோடர் என்று வழங்கப்பட்டு வருகின்றது.

இன்றும் படகர்களின் கோயில் எருமை மந்தைகளைக் “கொடநாட்டினைச்” சார்ந்த தொதவர்கள் பராமறித்துத் தருவதுண்டு. அதற்கு மாற்றாகப் படகர்கள் அவர்களுக்கு உப்பு, தானியங்கள் போன்றவற்றைத் தருவது இன்றும் மரபாக நீடிக்கின்றது. இன்றும் பொரங்காடு சீமையில் நிகழும் குலதெய்வக் கோயில் திருவிழாவின்போது அனைத்து வீடுகளிலிருந்தும் உப்பினைப் பெற்றுச்சென்று “கொடநாட்டில்” தொதவர்களிடம் அளித்து எருமைகளுக்கு உப்புநீரினைக் கொடுக்கும் மரபு படகர்களிடம் தொடர்கிறது. இந்தச் சடங்கினை “உப்பக்கி ஈசோது” (உப்பினைப் பெறுவது) என்று படகர்கள் அழைக்கின்றனர். படகர்கள் கால்நடை வளர்ப்பிலிருந்து வேளாண்மைக்குப் பெருமளவில் கவனம் செலுத்தியபோது அவர்களுக்கான பணிபளுவினைக் குறைப்பதற்காகவும், தொதவர்களுக்கான உணவுச்சார்ந்த பண்டமாற்றிற்கானதாகவும் இவ்வழக்கு ஆக்கப்பட்டிருக்கலாம். இந்தக்கூறு நீலகிரியின் மரபார்ந்த பண்டமாற்றிற்கும் சமூக இணக்கத்திற்குமான சிறந்தச் சான்றாகத் திகழ்கின்றது.

குந்தெ

“குந்தெ” என்று பெருவழக்காக வழங்கப்படும் இந்தப் பகுதி “குந்தெ சீமெ" என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்தப் பெயரானது அப்பகுதிக்கான நிலவியல் கூறுகளின் அடிப்படையில் மட்டுமே விளங்கிக்கொள்ளும் வாய்ப்பினைக் கொண்டது. “கு+ அந்தெ+ஏ" என்பதே "குந்தெ" என்றாகிறது. இதில் முன்னரே கண்டதைப்போல “கு" என்பது படகு மொழியில் நிலத்தையும், "அந்தெ" என்பது இறுதி என்பதையும், "ஏ" என்பது ஏறியநிலையில் உள்ளது என்ற பொருளையும் தருகின்றது. இந்த நிலவியல் வரையறையின்படி நோக்கும்போது இந்தக் "குந்தெ சீமெ" பகுதியில் உள்ள ஊர்கள் இந்த ஒரே மலையில் ஏறியபடி அமைந்துள்ளது நோக்கத்தக்கதாகும்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது, அவர்கள் தம் ஆட்சி நிர்வாகத்திற்கு ஏதுவாக இந்தக் குந்தெ சீமையைத் தவிர்த்து மலைசார்ந்த சரிவுகளில் அமைந்துள்ள படர்கள் வாழ்ந்த மற்றப் பகுதிகளைக் கோவையுடன் சேர்த்தனர். பிறகு மீண்டும் “குந்தெ” சீமையினைப் பழையபடியே சேர்த்துவிட்டனர் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாகும். இதனடிப்படையிலேயே “குந்தெ கூட்டி நாக்குபெட்டா” (கூட்டி – சேர்த்து, குந்தெயைச் சேர்த்து நாக்குபெட்டா) என்ற சொல்வழக்கொன்று படர்களிடம் நிலவிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

பொரங்காடு

“பொரங்காடு சீமை” என்ற நிலத்தின் பெயரை நாம் நிலவியல் மற்றும் காரணத்தின் அடிப்படையில் அணுக வாய்ப்புண்டு. இதிலும் நிலவியல் அடிப்படையில் அமைந்தப் பெயரே இதன் தொன்மையாகும். “போரெ+அங்கு+காடு" என்பதே "பொரங்காடு" என்று வழங்கப்பட்டு வருகின்றது. இதில் “போரெ" என்பது படகு மொழியில் மலை என்றும் (ஒழங்கற்ற சிறு சிறு மலைகள்), “அங்கு" என்பது பள்ளம் என்றும், "காடு" என்பது இடம் மற்றும் எல்லை என்றும் பொருள் தருகின்றது.

இதனடிப்படையில் சிறு சிறு மலையும் பள்ளமும் கொண்ட நிலப்பரப்பு என்று பொருள்பட்டு, அப்பொருளோடு நிலவியல் அடிப்படையிலும் பொருந்தி நிற்கின்றது. பொரங்காடு சீமையில் உள்ள மலைகள் மற்ற சீமைகளில் உள்ள மலைகளைக் காட்டிலும் சிறியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சில ஆய்வாளர்கள் இதை பரங்கி நாடு என்று குறிக்கின்றனர். இதுவும் தவறானதாகும்.

துடேகுய்

படகர்கள் ஆநிரைகளை “ஹெம்மட்டிகளுக்காக” ஓட்டிச்செல்லும் “மேக்குநாடு” சீமையின் எம்மட்டிப்பகுதி அமைந்துள்ள “கொடலூருக்கு” (கூடலூர்) செல்லுகின்ற வழியின் மேல்விளிம்பில் அமைந்துள்ளது இந்தச் சீமை. இந்தச் சிறியப் பரப்புள்ள சீமை அங்கு விரவிக் கிடக்கும் படர்களின் புனிதச் செடியான “தூடே” செடியினைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படர்களின் பெருநிலப் பெயர்களுள் கருப்பொருள் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளப் பகுதி இதுமட்டுமே ஆகும். ஒருவேளை சிறு பரப்பில் அமைந்திருப்பதால் இப்பெயர் இடப்பட்டிருக்கலாம். “குய்” என்ற படகுச் சொல்லிற்குக் குழி என்று பொருள். ஆக குழிப்பகுதியில் அமைந்துள்ள “தூடே” செடிகள் நிறைந்தப்பகுதி என்ற நிலையில் இச்சீமைப் பெயர்ப்பெறுகின்றது. இந்தச் சீமையில் வாழ்ந்த படகுமுன்னோர்களின் தொன்மக்கதையில் படகர்கள் ஏறுதழுவியமைக் குறித்த செய்தி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மேற்கண்ட வகையில் நீலகிரி எனும் நாக்குபெட்டாவிற்கான பெரும்பரப்பினை வரையறுத்த படகர்கள் அதனுள் இடம்பெறும் சிறு நிலப்பிரிவுகளையும் நிலவியல் அடிப்படையிலேயே வரையறுத்துள்ளனர். சான்றாக இன்றைக்கு உதகை, உதகமண்டலம் என்று அறியப்படும் நீலகிரியின் பகுதிக்கு படர்கள் இட்ட ஆதிப்பெயர் “ஒத்தகெ” என்பது. அதாவது “உ+அத்த+கேயி” என்ற படக நிலவியல் நுண்சொற்காளால் ஆக்கப்பட்ட இந்தச் சொல்லில் “உ” என்பது இடையில் என்ற பொருளைத் தருகின்றது. “அத்த” என்ற படகச்சொல்லிற்கு சோலை மற்றும் வழி என்று பொருள். மற்றும் “கேயி” என்றால் இயற்கையெழில் கொஞ்சும் இருபக்க மலைச்சரிவு என்று பொருள். ஆகவே இடையில் அமைந்த சோலைகள் நிறைந்த இருபக்க மலைச்சரிவினை உடைய பகுதி என்ற நிலவியல் வரையறையின் அடிப்படையில் படகர்களால் இடப்பட்ட பெயர் இதுவாகும். மேலும் “உ” என்ற தமிழின் வழக்கொழிந்த இடைமைச்சுட்டு இன்றும் படகர்களிடம் வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் படகர்களின் தொல்மூதாதையாருள் ஒருவரான “குன்ன ஹெத்தப்பாவால்” உருவாக்கப்பட்ட குன்னூரின் பெயரும்கூட “கு+நாலி+ஓரெ” என்ற நிலவியல் நுண்பொருளோடுப் பொருந்திநிற்கின்றது. அதாவது “கு” அல்லது “கூ” என்ற படகுச் சொல் நிலத்தினைக் குறிப்பதை ஏற்கனவே கண்டோம். “நாலி” என்பது நீர் ஓடையைக் குறிக்கின்றது. “ஓரே” என்பது மேடுபாங்கான இடத்தினைக் குறிக்கின்றது. ஓடை நீர் ஓடுகின்ற மேடுபாங்கான இடம் என்ற குன்னூரின் நிலவியல் கூறோடு படகர்கள் இட்ட இப்பெயர் பொருந்தி நிற்கின்றது.

நீலகிரியில் உள்ள பெரும்பான்மையான இடங்களுக்குப் படர்கள் இட்ட பெயர்கள் அதன் நிலவியல் தன்மையோடு முழுவதும் பொருந்தி நிற்கின்றது. இன்றும் பெரிதும் மருவின்றி வழங்கப்படும் அப்பெயர்களைப் பகுத்துப்பார்க்கும் போது படகமொழியில் இடம்பெற்றிருக்கும் நிலவியல் சார்ந்த நுண்சொற்களின் தொகையாக அவை அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. இது படகுமொழியின் தொன்மையினையும், படகர்களின் இயற்கை, நிலவியல் மற்றும் மரபு அறிவினை வெளிப்படுத்துகின்றன. மேலும் இவை படகர்களுக்கான நிலைச்சான்றுகளாகவும் திகழ்ந்து வருகின்றன. நீலகிரியில் உள்ள படகர்களின் 400 மேற்பட்ட ஊர்களுக்கான பெயர்கள் குறித்த ஊர்ப்பெயராய்வுகளை நிகழ்த்தும்போது அது அவர்களின் மொழி, தொன்மை, மரபு இயற்கை அறிவு மற்றும் பண்பாடு போன்றவற்றிற்கான பன்மைக்கூறுகளின் களஞ்சியமாக திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவ்வகையில் படகர்களின் ஊர்ப்பெயர் ஆய்வுகளுக்காக தம் முழு சிரத்தையைச் செலுத்திவரும் நீலகிரியைச் சார்ந்த மொழியியல் அறிஞர்கள் பேராசிரியர் இர.கு.ஆல்துரை மற்றும் திரு. ஆனந்தராஜ் ஆகியோரின்; பணி பெரிதும் பராட்டுதலுக்குரியதகும்।

துணைநின்றவை

1. நேர்க்காணல் திரு. ஆனந்தராஜ், மொழியியல் அறிஞர், நீலகிரி மாவட்டம்.
2. நேர்க்காணல் திரு. பானிரங்கன், கடக்கோடு, நீலகிரி மாவட்டம்.
3. நேர்க்காணல் திரு. ஆலான், கம்பட்டி, நீலகிரி மாவட்டம்.
4. முனைவர். இரா.கு.ஆல்துரை, படர்களின் அறுவடைத் திருநாள், நூல்.
5. முனைவர் கோ.சுனில்ஜோகி, படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குபொருட்கள், முனைவர் பட்ட ஆய்வேடு.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R