ஆதிகாலப் பழந்தமிழரின் வாழ்வியலைப் பதிவுசெய்வது சங்க இலக்கியமாகும். ஒரு செல் உயிரி முதல், பிற உயிர்களனைத்தும் இயற்கையின் ஆதாரமாகத் திகழுகின்றன. பண்டைய காலந்தொட்டுத் தற்போதைய நவீனக்காலம் வரை, ஒவ்வொரு உயிரும் தன்னைச் சுற்றிருக்கும் சூழலைச் சார்ந்து வாழ்கின்றது. நமது முன்னோர்களான சான்றோர்கள் அருளிய இயற்கைக் குறித்த சிந்தனை, தெளிவு, பாதுகாப்பு, இயற்கையைப் பேணுதல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அடிப்படை அறிவை ஆராயுமிதமாக, “பட்டினப்பாலைவழி: பழந்தமிழர் வாழ்வில் சூழல் விழிப்புணர்வு” என்கிற தலைப்பின்கீழ் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.
மனித இனத்தின் பகுத்தறிவு சாதனையாகக் கருதுவது அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகும். எவற்றையும் அறிவியல் கண் பார்வைக்கொண்டுப் பார்க்கும்போக்கு இந் நூற்றாண்டில் சாத்தியமாகியிருக்கிறது. மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தான் சார்ந்த இடத்தைப் பாதுகாக்கவும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும் வேண்டி பல முயற்சிகளை எடுத்திருக்கிறான். அதன்பொருட்டு தோன்றியதே அறிவியல் யுகம்.
சுற்றுச்சூழல் என்ற சொல் சுற்றுப்புறங்களை உணர்த்தும் சொல்லாக்க (Etymologically) விளக்கமாகும். இது ஒரு ஒருங்கிணைந்த சொல்லாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் இச்சொல் உயிரினங்கள் வாழும் முறைமைகளையும் நீர், உணவு, சூரிய ஒளி ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
மேற்கூறிய கருத்தினை ஆராயும்போது, எல்லா உயிர்களும் சுற்றுப்புறத்தைச் சார்ந்து இருக்கின்றன. அதுபோல், ‘சுற்றுச்சூழல்’ என்கிற சொல்லும் உயிரினங்களைச் சார்ந்து தான் பொருள் தருகிறதென்பதை அறியமுடிகிறது.
பகுத்தறிவின் முதிர்ச்சியாக நாம் கருதப்படும் மனித இனம் தொடக்கத்தில் இயற்கைத் தந்த அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்தி வந்திருக்கிறது. நமக்கும் இயற்கைக்குமான இவ்விணைப்பை வலுபடுத்தவே நாம் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன் விளைவாகத் தோன்றியதுதான் அறிவியல் சிந்தனை. முதலில் நல்வழிக்கு உட்படுத்திய இத்தகையச் சிந்தனை, பிற்காலத்தில் இயற்கையை அழித்து செயற்கை நிலைக்குத் தள்ளப்பட்டு வந்திருக்கின்றதென்பதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
மக்கட்தொகைப் பெருக்கத்தினால், பேராசையினால் மனித இனம் இயற்கையைத் தன்வயப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இதனால், பல பருவகால மாறுதல்களும் சுற்றுப்புறத் தூய்மைக்கேடும் தோன்றி, இயற்கையைக் கழிவாக மாற்றுகிறது. இதனை-
இடமும் ((Topographic) காலநிலைகளும் (Climatic) நிலப்பரப்பும் (Civil factors) உயிரினங்களும் (Biotic factors) நான்கு காரணிகளாக அமைந்து சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அதிகம் இயற்கையான சுற்றுச்சூழல் செயலியக்கம் ஒரு பக்கம் அமைய, ஆடம்பர வாழ்க்கை வசதிக்காக நாம் உருவாக்கி வைத்திருக்கின்ற தொழில்நுட்பங்கள் அனைத்தும் செயற்கையான சுற்றுச்சூழலாக அமைகின்றன. இவையிரண்டையும் பயன்படுத்துகிற முறையில் முரண்பாடுகளை உண்டாக்கும்போது மாசுபடுதல் தவிர்க்க இயலாததாகிறது.2
மேற்கூறிய கூற்றின் அடிப்படையில், நாம் இயற்கைக்கு மாறாக ஏற்படுத்திக் கொள்கின்ற செயற்கையான வசதிகளும், சுகமாக வாழ பிறரைக் கெடுப்பதுபோல் நமக்குக் கொடையாக இருக்கின்ற இயற்கையைக் கெடுப்பதும் ஒரு வகையில் பாவம் தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கருத்து விளக்குகிறது.
மனிதன் சுகமாக வாழ அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளே போதுமானது. அதனைவிடுத்து, ஆசையின் காரணமாக உயிரினத்தையும் இயற்கையின் அல்லது இயற்கை ஆதாரத்தையும் அழிக்கும் எமனாக மனிதன் உருவெடுக்கின்றான். இவனுக்கு ஏதுவாக அறிவியல் கண்டுபிடிப்புகளும் தற்போதைய நிலையில் சுற்றுச்சூழலை நாசமாக்கி வருகின்றன.
காற்றுவெளி மாசுபாடு (Air Pollution), நீர் மாசுபாடு (Water Pollution), கடல் மாசுபாடு (Marine Pollution), மண் மாசுபாடு (Soil Pollution), உணவு மாசுபாடு (Food Pollution), கதிரியக்க மாசுபாடு (Radio Action Pollution), இரைச்சல் மாசுபாடு (Noise Pollution), மனையக மாசுபாடு (Indoor Pollution), திடக்கழிவு மாசுபாடு (Solid Waste Pollution), போன்றவை சூற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளாக இருக்கிறதென்பது அறிவியல் அறிஞர்களின் விளக்கமாகும்.
இக் கட்டுரைத் தலைப்பின் பொருண்மையில் விளக்கப்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் குறித்த அறிவும் அவற்றின் பொதுப்பண்புகளும், சம காலம்போல் சங்க கால மக்களின் வாழ்வியலில் பொதிந்துள்ளமையைப் பட்டினப்பாலை இலக்கியத்தின் வழியாக நாம் கண்டுணர இயலுமென்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
பத்துப்பாட்டினுள் ஒன்பதாம் பாட்டாகத் திகழ்வது பட்டினப்பாலையாகும். பாட்டுடைத் தலைவனாகச் சோழவேந்தன் கரிகாற் பெருவளத்தான் மீது கடியலூர் உருத்திரங்கண்ணனரால் பாடப்பட்டதென்பது இலக்கியச் சான்று. ஆகம்-புறம் சார்ந்த பொருண்மையுடன் சங்க இலக்கியம் பயணிக்கிறது. அதுபோல், சுற்றுப்புறச் சூழலும் இலக்கியத்தில் இடம்பெறத்தான் செய்கிறது.
இலக்கியம் முதல், கரு, உரி என்கிற மூன்றின் அடிப்படையில் அமையப்பெற்றிருப்பதைக் கவனிக்க முடிகிறது. சுற்றுச்சூழலை வைத்தே உரிபொருள் என்ன என்பதை இலக்கியவியலாளரும் உரையாசிரியர்களும் சுட்டுவதை நாம் தொல்காப்பிய இலக்கணப் பனுவலிலும், இலக்கியச் சான்றின் வழியிலும் பார்க்க முடிகிறது. இத்தகைய நிலை கருதியே பட்டினப்பாலை மக்கள் சுற்றுப்புறத்தை எவ்வாறு கருதினார்கள்? சுற்றுச்சூழல் மாசுபட ஏதுவாக அமைந்த நிகழ்வுகள் என்னென்ன? ஆக, இவற்றிலிருந்து பெறப்பட்ட கருத்தினைப் புலப்படுத்தும் விதமாக அடுத்தடுத்த பாடல்களில் விளக்கப்படுகின்றன.
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்கிற பஞ்சபூதங்கள் அடங்கியதுதான் இந்த இயற்கையுலகம்; இந்த ஒவ்வொன்றுக்கும் தொடர்பு இருக்கிறது. இவற்றில் ஒன்றில்லாமல் ஓர் அணுகூட அசையாது. அதனால்தான் சங்கப் புலவர்களும் தற்கால கவிஞர்களும் இயற்கையை முன்னிருத்தியே பல்வேறு பாடல்களைப் புனைந்துள்ளனர். ‘கடவுள்’ என்கின்ற கருத்தாக்கம் இயற்கையிலிருந்து உருவானது தான். இந்தப் புரிதலைத் திருக்குறள் முதலாக எல்லா இலக்கியங்களும் செப்புகின்றன. ஆகவே, சுற்றுச்சூழல் குறித்தான பார்வையைப் பட்டினப்பாலை பாடல்களில் பார்க்க முடிகிறது.
விளைவு அறா வியன் கழனி
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின் வாடி
நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச் சாம்பும் புலத்து ஆங்கண்
காய்ச் செந்நெல் கதீர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்.
இப்பாடலில், ஒரு கழனியில் கரும்புகள் பலவாய் முளைத்துள்ளன. அது பார்ப்பதற்குப் பசுமை மாறா காட்சியாகத் தெரிகிறது. அதே கரும்பு ஆலையில் பயன்படுத்தும்போது அங்கிருந்து வெளிப்படும் தீ கரும்புகையைக் கக்குகிறது. இதன் விளைவு பக்கத்து வயல்களில் நிற்கும் நீரில் நன்கு மலர்ந்துள்ள நெய்தல் மலர்களை வாட்டுவதாகவும், செந்நெல்கதிர்களை உண்ணுகின்ற பருத்த வயிற்றைக்கொண்ட எருமைகள் சோறுற்று நெல்கூடுகளின் நிழலில் உறங்குவதாகவும் புலவர் கூறுவது சுற்றுச்சூழல் மாசுபடுவதால் எத்தகைய விளைவைச் சந்திக்கவியலுமென்பதை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
புலிப் பொறிப் போர்க் கதவின்
திருத் துஞ்சும் திண் காப்பின்
புகழ் நிலைஇய மொழிவளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி
ஏறு பொரச் சேறாகி
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறுபட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டும்.
இப்பாடலில், ‘அறம்’ என்கிற சொல் ‘அன்னம்’ என்று பொருள் கொள்கின்றது. அறம் செய்வதற்கென்றே அமைக்கப்பட்ட சமையல் செய்யும் அறைகள் வடிமைக்கப் பட்டுள்ளன. அந்த அறையில் சோற்றினை வடித்த கஞ்சி ஆறுபோல் ஓடுவதாகப் புலவர் உவமைப்படுத்துகிறார். எருமைகள் சோற்றுக் கஞ்சியினைப் பருக வரும் காட்சியானது பகைவர்களுடன் போர்ச் செய்தலை ஒத்தது என்று கூறும் அவர், சாலைகளில் சோறு சேர்களாக மாறி, பல தேர்களின் சக்கரத்தில் புழுதி படிந்து, அருகில் இருந்த அரண்மனையிலிருக்கும் அழகிய ஓவியத்தை அழுக்காக்கியதாகவும், அந்த இடத்திற்கு வருவோர் போவோருக்கு துர்நாற்றம் வீசுவதாகப் புலவர் கூறுகிறார். இந்தக் காட்சியானது, தற்கால நிகழ்விலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தன் கேணித் தகை முற்றத்து
பகட்டு எருத்தின் பலசாலை;
தவப் பள்ளி; தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையொடு இரியல் போகி
பூதம் காக்கும் புகல் அருங் கடி நகர்
தூது உண் அம் புறவொடு துச்சிற்சேக்கும்.
இப்பாடலில், அந்நகர் குளிர்ந்த சிறிய குளங்களுடைய முன்றிலில் பெரிய எருத்துகளையுடைய வைக்கோல் இடும் சாலைகளைக் கொண்டிருந்தன. தவம் செய்வோரின் தவப்பள்ளிகள் அமைந்த தழைத்துத் தாழ்ந்த பொழில்களைப் பெற்றிருந்தன. ஒளி விளங்கும் சடைகளைத் தாங்கிய முனிவர்கள், ஓம குண்டத் தீயின்கண் நெய் அவி முதலியவற்றை இடும்போது, எழுந்த புகையை வெறுத்த கருத்த பெரிய பெண்ணும் ஆணும் ஆகிய குயில் பறவைகள் அவ்விடம் விட்டு நீங்கின. அவை பூதங்கள் காக்கும் புகுவதற்கு அரிய காவலமைந்த நகரில் சிறுசிறு கற்களை உண்ணும் இயல்பினவாகிய அழகிய புறாக்களுடன் ஒதுங்கும் இடம்பார்த்துத் தங்கின என்று விளக்கம் கூறும் உரையாசிரியர்கள். இந்தக் காட்சியானது, மனிதர்களால் ஏற்படுத்துகின்ற வேள்வியானது உயிரினங்களுக்கும் துன்பத்தைத் தருமென்ற கருத்தினை ஒத்ததாக இருக்கிறது.
நிறைவாக, ஒரு அரசனின் அருமை பெருமைகளை விளித்துக்கூறும் புலவர்கள், முதலில் மன்னனின் நாடு, வளம், செழிப்பு மற்றும் சுற்றிருக்கும் நீர், நிலைகள், மலைகள் இன்னபிற அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறிய பின்னரே, மன்னனின் வீர, தீரம், கொடை, அரசாட்சி பற்றிக் கூறுவர். ஆகவே, சுற்றுப்புறத்தை வைத்தே ஒருவரின் தரம்பிரித்துப் பார்க்கப்படுகிறது. புலவர்கள் கூறிய சுற்றுப்புறச் சூழ்நிலைகளைக் கவனிக்கும்போது, அவற்றிற்கு தீங்கு ஏற்படவும் செய்கின்றன என்பதை மறைமுகமாக அறிவுறுத்திச் செல்கின்றனர்.
மேலும், சங்க காலப் பழந்தமிழரின் வாழ்க்கைச் சூழலில் சுற்றுச்சூழலின் பங்கு முக்கியமானதாகக் கருதப்பட்டு வந்திருக்கிறதென்பதை பட்டினப்பாலைவழிக் கூறும் பாடல்களில், இடம்பெற்றமையை மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில் கண்டுணர முடிகிறது. சங்க காலப் புலவர்கள் அரசனை மையமிட்டுப் பாடல்கள் பாடினாலும் சுற்றுப்புறம் குறித்தும் அவர்களுக்குக் கவனம் இருந்திருக்கிறதென்பதை உவமை அடிப்படையில் உணர்ந்துகொள்ள முடிகிறது.
துணைநின்ற நூல்கள்
சோமசுந்தரனார், பொ.வே., (2001). பத்துப்பாட்டு பட்டினப்பாலை. சென்னை. சைவ
சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
நாகலிங்கம், அ. (ப.ஆ) (2000). பத்துப்பாட்டும் பாடலும் பொருளும். சென்னை:
சிவசக்தி நிலையம்.
மகிழேந்தி, (2003). சுற்றுச் சூழலியல் நோக்கில் சங்கத் தமிழகம். சென்னை: தி பார்க்கர்
பதிப்பு.
ஜெகந்நாதாசார்யரும், சி. (1961). பத்துப்பாட்டு. சென்னை: வை.மு.
கோபாலகிருஷ்ணமாசாரியர் கம்பெனி திருவல்லிக்கேணி.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.