- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


1

பேராசிரியர் நுஃமான் அவர்கள், மஹாகவி குறித்து 1984இல் எழுதிய, தனது அறிமுகத்தில், அவரது உள்ளடக்கங்களின் சிறப்புகளைப் பின்வருமாறு பட்டிலிடுகின்றார்:

1. ஆழமான மனிதாபிமானம்.
2. வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ வேண்டும் என்ற முனைப்பும்.
3. ஏற்றத்தாழ்வின் மீதும், போலி ஆசாரங்களின்; மீதுமான அவரது எதிர்ப்பு. ப-21

இறுதியில் குறிப்பார்:

“இங்கு எடுத்துக்காட்டிய சிறப்புப் பண்புகள் சிலவற்றுக்கு எதிரிடையான சிலவற்றை அவரது கவிதையில் இருந்து நாம் எடுத்துக்காட்ட
முடியும்… ஆயின் அவை புறநடைகளே. புறநடைகளைக் கொண்டுன்றி பொது பண்புகளைக் கொண்டு ஒரு கவிஞனை நாம் மதிப்பீட
வேண்டும். எனினும் புறநடைகளை நாம் ஒதுக்கி விடவும் முடியாது. இந்த அறிமுகத்திலே அத்தகைய ஓர் ஆய்வு தேவையற்றது என கருதி தவிர்த்துக்கொண்டேன்”. ப-45

மேற்படி கூற்றில் ஓர் தள்ளாட்டம் தெரிகின்றது என்பது வெளிப்படை.

“புறநடைகளை நாம் ஒதுக்கி விடவும் முடியாது” என்று கூறும் அதே வீச்சில் “அது தேவையற்றது என்று ஒதுக்கியும் விடுவேன்” என கூறவும் தலைப்படுகின்றார் என்பதே இங்கே உறுத்தலான விடயமாக அமைந்து போகின்றது.

அதாவது, ஏன் இப்படி, ஒரே வீச்சில் 'ஒதுக்கி விடுவும் முடியாது' என்று கூறும் அதே கணத்தில் 'ஒதுக்கியும் விட்டேன்' என கூற நேர்கின்றது என்ற கேள்வி அனைவரையுமே ஈர்க்கக் கூடிய ஒன்றுதான்.

ஆனால், சற்று நிதானித்துப் பார்க்கும் போது, மஹாகவியை சிலாகிக்க முற்படும் எவர்க்கும் இச்சிக்கல் தவிர்க்கப்பட முடியாத ஓர் அம்சமாகவே இருந்து போகக் கூடும் - அதாவது, ஒருவர் மஹாகவியின் ஆக்கங்கள் பொறுத்து முழுமையாக கதைப்பதானாலும் சரி அல்லது அதனை விடுத்து பேராசிரியர் நுஃமான் அவர்களின் “புறநடையை ஒதுக்கி விடும்” அணுகுமுறையைக் கைக்கொண்டாலும் சரி – மேற்படி தள்ளாட்டம் ஏதோ ஒரு வகையில் வந்து சேர்ந்து விடும் என்பது பிறிதொரு விடயம்.

இருந்தும், மேற்படி “புறநடையை ஒதுக்கிவிடும்” அணுகுமுறைக்கு நேரெதிராக திரு. முருகையன் அவர்கள் மஹாகவி பொறுத்து எழுதியுள்ள 'மஹாகவியின் சிறு நாடகங்கள்' என்ற தனது அறிமுகக் குறிப்பைப் பின்வருமாறு நிறைவு செய்வதும் அவதானிக்கத்தக்கதே:

“மஹாகவி எனும் கவிஞனின் இயல்பான வளர்ச்சியின் இன்றியமையாத ஓர் அங்கமாக அவரின் சிறு நாடகங்களும் அமைந்து விடுகின்றன என்பதில் ஐயமில்லை” - ப-120

(முருகையன், சிறுநாடகங்கள் பொறுத்தே குறிப்பிட்டிருப்பினும், 'ஒதுக்குவது' என்ற ஒரு கேள்வியின் பின்னணியில், சிறுநாடகம், பா நாடகம், காவியங்கள், தனிப்பாடல்கள் - அவற்றின் உள்ளடக்கங்கள் - உருவங்கள் - இத்தியாதி - இவை அனைத்தும், ஏதோ ஒரு வகையில் கைக்கோர்த்து விடு செய்யும் என்பதும், அஃது, கவிஞனின் ஆளுமையில் இருந்து பிரித்தெடுக்க முடியாத சங்கதிதான் என்பதும் மறுதலிக்க முடியாதபடி புலனாகிவிடும்).

அதாவது, மஹாகவியின் குறித்த சில கவிதைகளை, ஒருவர் “புறநடை”, “தேவையற்றது” என்று கருதத் துணிகையில் மற்றவரோ அவை “இன்றியமையாத அங்கம்” தான் என்று கூற முனைவது அவரவர் பார்வை வித்தியாசங்களை எடுத்துரைப்பதாக உள்ளது.

இருந்தும், இத்தகைய, விமர்சகர்களுக்கிடையிலான முரண்பட்ட நிலைமையினை சம்பந்தப்பட்ட கவிஞன் மாத்திரமே தோற்றுவிப்பவனாக இருக்கின்றானா அல்லது சம்பந்தப்பட்ட விமர்சகர்களுக்கிடையே முகிழ்க்ககூடிய வேறுபட்டதான கருத்துநிலைகளும், இப்பார்வை வித்தியாசங்களுக்கான ஊக்குவிப்பு காரணிகளாக அமைந்து போகின்றனவா அல்லது இவை இரண்டு காரணிகளும் ஏதோ ஒரு வகையாக சம்பந்தமுற்ற நிலைமையில் இம்முரண் காணக்கிடக்கின்றதா என்பதுவும் கூட நிதானித்து நோக்கத்தக்க ஒன்றேயாகும்.

மஹாகவியின் கவிதைகளின் உள்ளடக்கம் அல்லது அவரது கவிதை வெளிப்பாடு முறைமையானது, முக்கியமாக அன்றாட வாழ்க்கை அல்லது அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவம் என்பதனை சிக்கென பற்றிப் பிடித்துக் கொண்டுதாகவும், 'பேச்சோசையை' அதன் முதன்மை வெளிப்பாடுhகக் கொண்டு இயங்குவதாகவும், கட்புலக் காட்சியை கட்டியமைப்பதாகவும் விபரிக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய ஒரு அடித்தளத்திலிருந்தே, ஓர் சமூகத்தின் ஆசாரங்களை அவர் எதிர்ப்பதும், சமத்துவத்தையும் மானுட நேயத்தையும் போற்றுவதும் நடுந்தேறுவதாகக் கூறப்படுகின்றது (அல்லது கட்டியெழுப்பப்படுகின்றது). அதாவது, மஹாகவியின் முக்கியத்துவம் ஆசாரங்களை எதிர்ப்பதிலும், சமத்துவத்தை நாடுவதிலும், மானுட நேசத்தை வழிமொழிவதிலும் உள்ளடங்குகின்றது என்பதனை விட அவர் அன்றாட நிகழ்ச்சி அனுபவத்தைத் தமது கவிதையில் சித்திரிப்பதில் வெற்றி கணடார். அதன் வாயிலாகப் பேச்சோசையை அல்லது ஓர் விவரண நடையை சென்றடைந்தார் என்பதிலேயே அவரது முக்கியத்துவம் அடங்குவதாக கூறும் போக்கு இன்று தலையெடுக்கின்றது.

இத்தகைய ஒரு பயணத்தின் போதே, மஹாகவி, பாரதியையும் விஞ்சும் ஒரு கவிஞனாக, தனது பேச்சோசை மூலமாகவும், தன் விவரண நடையின் மூலமாகவும் காட்சி தருவதாக பேராசிரியர் நுஃமானாலும் திரு.சண்முகம் சிவலிங்கம் அவர்களாலும் ஒருங்கு சேர விதந்துரைக்கப்படுகின்றது.

2

திரு.சண்முகம் சிவலிங்கம் அவர்கள் கூறுவார்:

“இந்த அன்றாட நிகழ்ச்சி அனுபவம் என்பது கூரிய அறிவுதிறனும் கண்டுப்பிடிப்பாற்றலும் (வாய்க்கப்) பெற்றது”.  ப-58

இக்கூற்றானது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததே.

ஏனெனில், இந்நகர்வே மேலே கூறியது போன்று, அடிப்படையில், மஹாகவி அவர்கள் பாரதியை தாண்டுவதற்கும் கால்கோளாகின்றது என்பது திரு. சண்முகம் சிவலிங்கத்தின் கருத்தாகின்றது. திரு. சண்முகம் சிவலிங்கம் கூறுவார்:

“தமிழ் நாட்டில் விருத்தப்பாவில் இருந்து வசனக் கவிதைக்கு வந்து, அதிலிருந்து அன்றாட வாழ்க்கையை நோக்கி திரும்பாமல் அதிலிருந்து (அன்றாடு வாழ்விலிருந்து) பெற்ற கருத்துக்களை நோக்கி திரும்பி, கருத்து தளத்தில் தமது கவிதையை இயக்க (தமிழ்நாட்டுக் கவிஞர்) முற்பட்டனர்”

“இது அவர்களை, தனிமையும் விரக்தியும் கொண்டு ஒரு 'கருத்துமுதல் வாதத்திற்குள்' ஆழ்த்தி விட்டது.”

மேலும் கூறுவார் சண்முகம் சிவலிங்கம்:

“(ஆனால்) கருத்துமுதல் வாதத்துக்குள் அகப்படாமல் யதார்த்த நிகழ்ச்சி அனுபவங்களுக்குள் வந்து சேர்ந்தார் மஹாகவி” ப-58 மேற்படி கூற்றுக்களில் முக்கியத்துவப்படும் மூன்று விடயங்கள் வருமாறு:

i. ஒன்று, அன்றாட நிகழ்ச்சி அனுபவம் என்பது மஹாகவியின் தலையாய கவிதைப் பரப்பாகின்றது என்பது.
ii. இரண்டாவது, இவை யதார்த்த நிகழ்ச்சி என்று வரையறை செய்யப்படுவது.
iii. மூன்றாவது, இத்தகைய அடிப்படையில் பிறப்பெடுக்காக் கவிதைகள் கருத்துமுதல்வாதக் கவிதைகள் என வகைப்படுத்தப்படுவது. (கருத்துத் தளங்களில் இயங்குபவை.)

'குமரன் கவிதைகள்' எனக் கூறப்பட்டவற்றை எடுத்துக்கொண்டாலும் கூட, அவை பெருமளவில் நேரடி அன்றாட நிகழ்ச்சியனுபவத்தையோ அல்லது பேச்சோசையையோ வெளிப்படுத்தவில்லை என்பது தெளிவு. இருந்தும் இக்காரணத்தினாலேயே இவை கருத்துமுதல்வாத கவிதைகள் என வகைப்படுத்தப்பட முடியுமா என்பது கேள்வியாகின்றது.

அதாவது, அவை அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சியில் இருந்து நேரடியாக முகிழ்க்காமல், அவ்வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஏற்படுத்தித் தந்த கருத்து கோலங்களிலிருந்தே பிறப்பெடுப்பதாய் உள்ளன என்பதாலேயே இவற்றை இங்கே நாம், கருத்துமுதல்வாத கவிதைகள் எனப் பொருள் கொள்ளலாமா என்பதே கேள்வி. இருந்தும், கருத்துதளங்களில் இயங்க முற்படும் கவிதைகள் அனைத்தும் கருத்துமுதல்வாத கவிதைகள் என்பதுமில்லை – அதுபோல யதார்த்த நிகழ்வுகளில் இருந்து இயங்க முற்படும் கவிதைகள் அனைத்தும் பொருள்முதல்வாத கவிதைகள் என்பதும் இல்லை என்பதெல்லாம் தெரிந்த விடயங்களே.

உதாரணமாக, இன்குலாப்பின் கவிதைகள் சில, கூறுமாப்போல், அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளில் இருந்தும், பேச்சோசை கொண்டும் உருப்பெற்றிருக்கவில்லை என்பதனால் மாத்திரம் அவற்றை கருத்துமுதல்வாத கவிதைகள் என எப்படி வகைப்படுத்தப்பட முடியாதோ அப்படியே, மேற்படி தர்க்கத்தின் அடிப்படையும் அமைகின்றது. மொத்தத்தில் கருத்துமுதல் வாதத்தின் தோற்றுகைக்கான வேர்கள் எப்படி வேறுவகைப்பட்டவையாக இருக்கின்றனவோ அதே போன்று பொருள்முதல் வாதத்திற்கான தோற்றுவாய்களும் வேறுபட்டவையே.

சுருங்க கூறின், வரலாற்றில், கருத்துமுதல்வாதம் என்பதும் பொருள்முதல்வாதம் என்பதும் மிக தெளிவாகவே வரையறை செய்யப்பட்டு வந்ததாய் இருக்கின்றது. இவற்றை குழப்பிக் கொள்வது பொருந்தாதது.

இவை அனைத்தையும் ஒன்று கூட்டிப் பார்க்குமிடத்து, மேற்படி குறிப்புகளில் காணக்கிட்டம் ஒரு வகை தெளிவின்மையும் ஒருவிதமான தள்ளாட்டமும் மிகத் தெளிவாகவே இருக்கின்றது. அடையாளம் காணக்கூடியதாக இருந்தபோதும், பேச்சோசைக்கும் (அல்லது அன்றாட நிகழ்ச்சி அனுபவம் என்பதற்கும்) கருத்துமுதல் வாதத்திற்குமான மேற்படி தொடுர்பாடுல்களை ஒரு கணம் ஒதுக்கிவிட்டு, மேற்படி குறிப்புகளில் காணக்கிட்டும், யதார்த்தம் பற்றிய புரிதல்களை தெளிவுபடுத்திக் கொள்வது, விடயங்களை மேலும் சரியாக வகைப்படுத்திக் கொள்ள உதவுவதாக அமைதல் கூடும்.

 

3

மஹாகவியின் எழுத்துக்களில் மேலோங்கும் 'யதார்த்த பண்பு' என்ற விடயம் பொதுவில் சண்முகம் சிவலிங்கத்தாலும் பேராசிரியர் நுஃமானாலும் மிக அழுத்தமாகவே பல்வேறு இடங்களில் பதியப்பட்டள்ளது.

நுஃமான் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

“மஹாகவி, புனைகதைக்குரிய யதார்த்தத்தைக் கவிதைக்குள் கொண்டு வந்தவர். அவரது 'யதார்த்தம்' கருத்து ரீதியானது அல்ல  காட்சி ரீதியானது”. ப-17

“கிராமிய வாழ்வை 'யதார்த்தபூர்வமாக' சித்தரிக்கும் இப்படைப்புகள் (மஹாகவியின் படைப்புகள்) தமிழ்க் கவிதைக்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்துள்ளன” ப-10

“மஹாகவியின் கிராமிய சித்தரிப்பில் கால அடிப்படையில் இருவேறுபட்ட நிலைகளை காண முடியும்… ஆரம்ப காலத்தில் காணப்பட்ட
கற்பனாவாதமும் (Romanticism) பிற்காலத்தில் அவரிடம் வலுப்பெற்ற 'யதார்த்தவாதமும்' (Realism) இந்த வேறுபாட்டுக்குக் காரணம்…”

மேற்பட்ட கூற்றுகளில் 'யதார்த்தபூர்வமான சித்தரிப்பு' என்பதும் 'யதார்த்தவாத பாற்பட்டது' என கூறவரும் போக்குகளும் சகஜமாக மீள மீள இடம்பெறுவது அவதானிக்கத்தக்கதே.

இதேபோன்று சண்முகம் சிவலிங்கம் அவர்களும் மஹாகவியை ஓர் யதார்த்தவாதியாக பின்வரும் வழிகளில் காணுகின்றார்:

“மஹாகவி போல், தமிழ் நாட்டில் பிச்சமூர்த்தியோ அல்லது வேறு எவரோ அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவம் என்ற பௌதீக அடிப்படையை அல்லது யதார்த்த அடிப்படையை நோக்கி திரும்பியிருந்தால் இன்று தமிழ்நாட்டின் கவிதை சரித்திரம் வேறாக இருந்திருக்கும்…” ப-58

“மஹாகவி…. கருத்து முதல்நிலைக்கு உட்படாமல், திடமான, மெய்மையான, யதார்த்தமான அன்றாட நிகழ்ச்சி அனுபவங்களில் கால்குத்தி நின்றார்…” ப-58

“மஹாகவி தமிழ் கவிதைக்கு உருவாக்கிய கலையம்சம் தனித்தன்மை வாய்ந்தது. இதையே நாம் யதார்த்த நெறி என்கிறோம்…” ப-178

“மஹாகவியின்,'ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்' யதார்த்த நெறியையும், இடையீடு இட்ட அமைப்பு முறையையும் கொண்டுள்ளது”.

சுருக்கமாகக் கூறினால், பேராசிரியர் நுஃமான் - திரு.சண்முகம் சிவலிங்கம் ஆகிய இருவரது பார்வையிலும் மஹாகவி ஓர் யதார்த்தகநெறியை பின்பற்றிய கவிஞன் எனக் கணிப்பிடுவது தெளிவாகின்றது.

இக்கூற்றுக்களே எம்மை யதார்த்தநெறி பொறுத்த வரைமுறை சார்ந்த கேள்விகளுக்கு இட்டுச் செல்வதாய் அமைந்து விடுகின்றன.
.

[தொடரும்]


உசாத்துணை நூற்பட்டியல்

1. மஹாகவியியல் - மஹாகவி குறித்த விமர்சன தொகுப்பு நூல் - பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் - ப10பாலசிங்கம் பதிப்பகம் - 2008
2. நவீனத்துவத்தின் முகங்கள் -அசோகமித்திரன் - தமிழினி பதிப்பகம் - 2003
3. கவிதை நயம் - கைலாசபதி-முருகையன் - குமரன் பதிப்பகம் - 2000
4. பஞ்சமர் நாவல் - கே.டானியல் - அடையாளம் வெளியீடு - 2005
5. ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி – தளையசிங்கம்
6. தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம் - 2021
7. Lenin - On Literature and Art – Leo Tolstoy as the mirror of the Russian Revelution – Progress Publishers - 1967
8. Marxim Gorky’s Collected Works Vol – 8
9. Marxim Gorky’s Collected works - Vol -9 - 1982
10. Marxim Gorky on Literature – Progress Publishers
11. The complete Letters of Vincent Van Gogh – Vol -3 - 1958
12. Wings Of Fire – A.J.P. Abdul Kalam – University Press - 1999
13. My Journey - A.J.P. Abdul Kalam - Ruba Publication - 2015

Zoom Meetings and Youtubes

i. பௌசர் - Zoom Meeting
ii. மஹாகவி நினைவு பேருரை (20.09.2021 – சென்னை பல்கலைகழக ஏற்பாட்டில்ää பேராசிரியர் ய.மணிகண்டன் தலைமையில் இடம்பெற்றது)
iii. ஹம்சன் குமாரின் தட்சிணாமூர்த்தி குறித்த ஆவணப்படம்.
iv. தட்சிணாமூர்த்தி குறித்த (Youtube)
v. தட்சிணாமூர்த்தி குறித்த ஆவணப்படம் வெளியீட்டு விழா. (Youtube)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R