முன்னுரை
பதினெண் மேற்கணக்குநூல்களில் இடம் பெற்ற பத்துப்பாட்டில், பத்தாவதாய் இடம்பெற்ற நூல் மலைபடுகடாம் ஆகும். இரணிய முட்டத்துப்பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார், கல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்சூவன் நன்னன் சேய் நன்னனைப் பாடிய ஆற்றுப்படைநூலாகும். கூத்தரை ஆற்றுப்படுத்திப் பாடியதால் இந்நூல் கூத்தராற்றுப்படை எனவும் பெயர் பெறும்.
மலைபடுகடாம்
இலக்கியங்கள், அவை தோன்றிய காலத்திய மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் 583 அடிகளைக் கொண்ட இந்நூல் அக்காலத்திய மக்களின் வாழ்க்கைமுறை, மன்னன் ஆட்சி, இயற்கை வளம் போன்றவற்றை அழகுற எடுத்துரைக்கிறது. காட்டில் கேட்கின்ற பலவகையான குரல்களும் ஒருங்கிணைந்து மலையில் மோதி எழும்புகின்ற முழக்கத்தை 56 அடிகளில் தொகுத்துக் கூறிமலையாகிய யானையின் பிளிறல் எனும் பொருள்படும் படி மலைபடுகடாம் என புதுமைப் பெயர் பெற்று இசைச் செறிவோடு, பண்பாடும் காட்டி நிற்கின்றது.
பண்பாடு
பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், சமயங்கள், வழிபாட்டுமுறைகள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை, புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியல் அமைப்புகள், ஆடை, அணிகலன்கள், திருவிழா, உணவு, பொழுதுபோக்கு போன்றவற்றைக் குறிக்கும்.
Culture என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்சொல்லே பண்பாடு ஆகும். “மனிதன் தன்னுடைய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவியே பண்பாடு”என சி.சி. நார்த் குறிப்பிட்டுள்ளார். பண்பாடு என்றால் ஒரு குழுவின் வரலாறு, மொழி, பண்புகள், சமய நம்பிக்கைகள், தொழில்கள் போன்றவற்றை, அடுத்தடுத்து வரும் மற்ற மக்களுக்குக் காட்டும் அளவு கோலாகும். காட்டு மிராண்டியாய் சுற்றித்திரிந்த மனிதன் பல்வேறு கட்ட பண்பட்ட, பண்பாட்டு வளர்ச்சியினால் தனக்கென பல அடையாளங்களைப் பதித்துச் சென்றான். மனிதனின் பரிணாம வளர்ச்சியின் படிக்கட்டுகளாய் பண்பாடு பயணித்து வருகிறது.
தெய்வ நம்பிக்கைகள்
நவிரமலையின் மக்கள் காரியுண்டிக் கடவுளை வணங்கினர் என்று,
“நீரகம் பனிக்கும் அஞ்சுவருகடுந்திறல்
பேரிசை நவிரமே எயுறையும்
காரியுண்டிக் கடவுள தியற்கையும்” (மலை 81-83)
எனும் அடிகள் சுட்டுகின்றது. புறநானூறும்,
“கறைமிடறணியலு மணிந்தன்றக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே” (புறம் 1-5,6)
என்று ஆலகாலநஞ்சினை உண்டதனால், அவ்விடம், கண்டத்தில் நின்றதனால் ஏற்பட்ட கறைகழுத்திற்கு அழகு செய்தும், வானோரின் உயிர்பிழைக்கக் காரணமானதால் வேதம் பயின்ற அந்தணர்களால் புகழப்படுபவன் நீலகண்டன் என அழைக்கப்படும் காரியுண்டிக்கடவுளாவார் என குறிப்பிடுகின்றது.
கோயில் கோபுரங்கள் பூவேலைப்பாடுகளுடனும் அழகுறக்கட்டப்பட்டிருந்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலிலிருந்து உயிரைப் பறிக்கும் கூற்றுவனை மக்கள் வழிபட்டனர். இயற்கையான மணத்திலிருந்து மாறுபட்ட மணம் வீசும் மலர்களையும், குவளைமலர்களையும் தெய்வங்களுக்கு அதிகமாக சூட்டினர். பாடல்கள் பாடும் விறலியர் முதலில் இறையருளைப் பாடியபின்பே மற்றப்பாடல்களைப் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதிலிருந்து, இன்றைய நடைமுறைபோல், அன்றும் இறைவணக்கத்தை முதலில் பாடுவது வழக்கமாகக் கொண்டிருந்தனர் என அறிந்து கொள்ளமுடிகிறது. மன்னனைக் கண்டு பரிசில் பெறப்போகும் கூத்தர்கள் மலை ஏறும் போது குறிஞ்சிப் பண்பாடி எல்லாத் தெய்வங்களையும் வணங்கி விட்டே மலைமேலே ஏறினர் என்பன போன்ற தெய்வ நம்பிக்கைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
தொழில்கள்
விவசாயம், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், தேனெடுத்தல், மண்பாண்டம் செய்தல், நூற்ற இளைபோன ஊடறிய முடியாதபடி மெல்லிய துணிநெசவு செய்தல், கரும்புச் சாறுபிழிதல், அவல் இடித்தல் போன்ற தொழில்கள் செய்தனர். மேலும் நாயை ஏவி உடும்பு பிடிக்கும் முறை பற்றியும்குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயம்
நெல், வாழை, தினை, அவரை, கரும்பு, கடுகு, இஞ்சி, மஞ்சள் போன்றவையும், கவலை, கூவை, சேம்பு போன்ற கிழங்குவகைகளும் பயிரிட்டனர் என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. வயல் உழும் போது ஏர்மங்கலப்பாட்டு பாடியதாகவும், நெல் முற்றி அறுக்கும் போது மருதப்பறைக் கொட்டி அறுவடை செய்தனர் என்பது பற்றியும் சுட்டப்பட்டுள்ளது. இதையேசிலப்பதிகாரம்,
“கொழுங்கடி அறுகையும் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்தவிரியல் சூட்டிப்
பார்உடைப்பனர் போல்பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றார் ஏர்மங்கலமும்
அரிந்து கால்குவித்தோர் அரிகடாவுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப்பாட்டும்” என
(சிலம்பு 10-32-37)
அறுகம்புல்லும், குவளை மலரோடும் சேர்ந்து காணப்படும் நெற்கதிர்களோடே மாலைசூட்டி, கைதொழுது நிற்க, ஏறுபூட்டி நிற்பவர் பாடுகின்ற ஏர்மங்கலப்பாட்டும், நெல்லினை அரிந் துஒருபக்கம் குவித்தோர், மாடு விட்டு சூடு அடித்து அதன் மூலம் துவைத்துப் பெற்ற செந்நெல்லினை முகந்து தரும்போது பாடுகின்ற பாட்டான முகவைப்பாட்டும் பாடப்பட்டதாக சிலம்பு குறிப்பிடுகின்றது.மேலும்;
“புனந்து புனிறு போகிய புனஞ்சூழ்குறவர்
உயிர்நிலைஇதனம்ஏறிகைபுடையூஉ
அகன்மலை இறும்பில் துவன்றியயானைப்
பகல்நிலை தவிர்க்கும் கவண் உமிழ்கடுங்கல்
இருவெதிர் ஈர்ங்களைதத்திக் கல்லென”
(மலைபடு 206 – 207)
எனும் அடிகள் தினைபுனம் காக்கும் குறவர்கள் பரண் அமைத்து பரணின்மேல் நின்று கொண்டு கவணில் கல் வைத்து எய்துயானைகளை விரட்டினர் என்னும் தகவலை சுட்டிநிற்கின்றது. மேலும் கல்லினால் ஆன பெரிய பொறிகளைக் கொண்டு பன்றிகளை பிடித்தனர் என்பது பற்றியும், சேம்பு, மஞ்சள் போன்றவற்றை தோண்டி தின்ன வரும் பன்றிகளை பறைகொட்டி விரட்டியடித்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகளிர் நிலை
உயர்ந்து வளர்ந்த மலைகளிலே தங்கள் பாதம் சிவக்க நடந்து விறலி மகளிர் கூத்தருடன் சென்று ஆடிப் பாடி பரிசில் பெற்றனர். விறலியர் கைகளில் சங்கினால் ஆன வளையல்கள் அணிந்தனர் என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. பெண்கள் யாமரப் பூ மற்றும் வெண்கடம்புப் பூக்களை கற்றாளை நாரில் கட்டிதலையில் சூடினர் என்பதை,
“தேம்பட மலர்ந்தமராஅமெல் இனரும்
உடம்பல் அகைந்தஒண் முறியாவும்
தளிரொடுமிடைந்த காமருகண்ணி
திரங்குமரல் நாரில் பொலியச்சூடி”
என்னும் அடிகள் விளக்கி நிற்கின்றது. மேலும் ஆயர்மகளிர் ஆநிரை மேய்க்கும் செய்தியும், மகளிர் வயலில் தினைபுனம் காத்தனர் என்பனப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விருந்தோம்பல் பண்புகளிலும் சிறந்து விளங்கினர் என்பன பற்றியும் சுட்டப்பட்டுள்ளது.
விருந்தோம்பல
விருந்தோம்பல் தமிழரின் தலையாயப் பண்பாகும். தன் வாசல் தேடி வந்தது விரோதியேயானாலும் இன்முகத்தோடு வரவேற்று உணவளித்து உபசரித்ததை இலக்கியங்கள் பலவும் பறைசாற்றி நிற்கின்றன .மலைபடுகடா மும்மக்களின் விருந்தோம்பல் பண்பின் சிறப்பைப் பலவாறு பதிவு செய்துள்ளது.
கானகத் தேவசிக்கும் வேடர்கள், ஆயர்குலத்தவர் மற்றும் குறவர் என அனைவரும் தங்களை நாடிவரும் கூத்தர்களுக்கும், விறலியருக்கும், மற்றவருக்கும் விருந்து கொடுத்து மகிழ்வித்தனர் என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
மன்னன் நன்னன் வேண்மானின் விருந்தோம்பல் சிறப்பு பற்றி,
“இழைமருங் கறியாநுழைநூற் கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ
முடுவல் தந்தபைந்திணத் தடியொடு
நெடுவெணெல்லின் அரிசிமுட்டாது
தலைநாள் அன்னபுகலொடு வழிசிறந்து
பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது”
(மலை - 561-566)
எனும் அடிகள் தன்னை நாடிவந்தவருக்கு மெல்லிய ஆடைகளைக் கொடுத்து அணியச் செய்து நாள்கணக்கில் அவர்கள் தங்கியிருந்தாலும் முதல்நாள் தந்த விருப்பமும், மகிழ்வும் குறையாமல் ஊனும், வெண்ணெலரிச்சோறும் தந்து விருந்து உபசரித்தான் என்று குறிப்பிடுகின்றன.
தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர் உண்ட பின் எஞ்சிய உணவையே மகிழ்வோடு உண்டனர் என்பதனை,
“விருந்துஉண்டு எஞ்சியமிச்சம் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது”
(குறிஞ்சிப்பாட்டு. 206-207)
என குறிஞ்சிப் பாட்டு பதிவு செய்துள்ளது. தண்டலையர் சதகம்,
“திருஇருந்த தண்டலையார் வளநாட்டில்
இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தாயினும் இன்றி உண்டபகல்
பகலாமோ? உறவாய்வந்த பெருவிருந்துக்கு
உபச்சாரம் செய்துஅனுப்பி இன்னும் அங்கே
பெரியோர் என்று வருவிருந்தோடு உண்பது
அல்லால் விருந்து இல்லாது
உண்ணும் சோறுமருந்து தானே”
(தண்டலையர்சதகம் - 9)
என ஒரு விருந்தாவது இல்லாது உணவு உண்டநாள் நாளாகாது .வந்த விருந்தினரைகளைப் நீக்கி உணவளித்து அவர்களை அனுப்பிய பின், அடுத்த விருந்தினர் எங்கே என எதிர்பார்த்து பின்பு வந்த விருந்தினரோடு உண்பதன்றி, விருந்தினர் அல்லாமல் உண்பது மருந்து போல கசப்பாக இருக்குமென பாடல் அடிகள் விளக்குகின்றது. திருக்குறளும்,
“செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு” (கு. 86)
என வந்த விருந்தினரைப் போற்றி அடுத்து வரும் விருந்தினரை எதிர்பார்த்து காத்திருப்பவன் வானத்து தேவர்க்கும் நல்ல விருந்தாவான் என விருந்தோம்பல் சிறப்பு பற்றிக் குறிப்பிடுகின்றது.
உணவுமுறைகள்
வேடர்களின் உணவாக இனியப் பழங்களும், கிழங்குவகைகளும், நெய்யில் பொரித்த பன்றி இறைச்சியும் தினைச்சோறும், குறவர்களின் உணவாக மூங்கிலரிசிச் சோற்றுடன், நெல்லரிசிச் சோறும், அவரை விதையுடன் புளிகரைத்து ஊற்றி சமைத்த புளிக்கறி உணவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறவர்களின் உணவாக தேனும், தினைமாவும், இறைச்சியும், மூங்கில் குழாய்களில் ஊற்றி நெடுநாட்களாக வைக்கப்பட்டஇனியகள் தேனையும், நெல்லரிசியில் தயாரித்தகள்ளையும், மேலும் பலாக்கொட்டை மாவுடன், புளிக்குழம்பும் மோரும் சேர்த்து மூங்கிலரிசிச்சோறுடன் சேர்த்து சாப்பிட்டனர் என்பதை,
“வேய்ப்பெயல்விளையுள் தேக்கள்தேறல்…..
இன்புளிக் கலந்துமா மோர்ஆகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து”
(மலைபடுகடாம் 171 - 180)
என்ற அடிகளின் மூலம் அறிந்துக் கொள்ளமுடிகிறது. மேலும் கடமான்கறியும், நாய் மூலம் ஏவி கொண்டுவரப்பட்ட உடும்பு இறைச்சியும் உண்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இடையர் கள்பால், பால்சோறு, பாலினால் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மருதநில மக்கள் கள்ளும், நெல்லரிச் சோறும் வலைவீசிப் பிடித்த வாளைமீனும் , தூண்டில் போட்டு பிடித்த விரால்மீனும் நண்டுக் கறியும் சாப்பிட்டமை சுட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தூண்டில் மற்றும் வலையை வீசி மீன்பிடித்தார் கள் என்ற பண்பாட்டுச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடுகல் வணக்கம்
எதிரி அரசனோடு போரிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக அவர்களின் பெயர் பதித்த நடுகற்களை நட்டு அக்கற்களை தெய்வமாக வணங்கினர் என்பதனை,
“செல்லும் தேஎத்துப் பெயர்மருங்கு அறியார்
கல்எறிந்து எழுதிய நல்அரைமரா அத்த”
(மலைபடு 94 – 95)
என்ற அடிகள் சுட்டிநிற்கின்றது
பயணப் பண்பாடுகள்
இரவுப்பொழுதில் காடுமலைப் பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்த்தும், அங்ஙனம் நேரிட்டால் பாதுகாப்பானக் குகைகளில் தங்கினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடர்ந்தக் காட்டுப் பகுதியில் செல்பவர்கள் கல்லில் ஒலி எழுப்பி பிறரை உதவிக்கு அழைத்தமை பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுகுன்றுப் பகுதிகளில் போகும்போது, வழுக்குப் பாறைகளையும், குழிகளையும் கடந்து செல்ல கோல்களை ஊன்றியும், கால்களில் கம்பைக் கட்டிகம்புக் காலுடன் சென்றமை குறிப்பிட்டுள்ளது. போகின்ற பாதை தவறாமல் இருக்க ஊகம் புல்லை முடிந்து வைத்து அதன் மூலம் தங்கள் பாதையை சரியாக்கி நடந்து சென்றனர் என்பதனை
“சந்துநீவிப்புல் முடிந்து இடுமின்”
(மலைபடு 193)
என்ற அடிசுட்டி நிற்கின்றது. மேலும் பயணத்தின்போது வழியில் குளிப்பதும், பயணத்திற்கு வேண்டிய குடிநீரை எடுத்துச் சென்றனர் என்றத் தகவலையும்
“முரம்பு கண்உடைந்து நடவைதண்ணென
உண்டனர் ஆடிக்கொண்டனிர் கழிமின்”
(மலை 432,433)
என்ற அடிகள் சுட்டுகின்றது. இசையும், பாடலும் சேர்ந்ததே கூத்தாகும். ஆகவே பரிசில் பெற கூத்தரும், பாணரும் இணைந்து பண்ணிசைக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அங்ஙனம் செல்லும்போது அவர்கள் மத்தளம், சிறுபறை, கஞ்சதாளம், நெடுவங்கியம், தூம்பு, குழல், தட்டைப்பறை, கரடிகை, சல்லிகை, ஆகுளி, முழவு, கோடு முதலான இசைக் கருவிகளையும் பாதுகாப்பான உறைகளில் போட்டு, தோளின் இருபக்கமும் கட்டித் தொங்கவிட்டு காவடிபோல் சுமந்து சென்றனர் என்பவையும் சுட்டப்பட்டுள்ளது. மேலும்,
“தொடித்திரிவு அன்னதொண்டு படுதிவவின்…
வணர்ந்தேத்து மருப்பின்வள்ளுயிர்ப் பேரியாழ்
அமைவரப் பண்ணிஅருள் நெறிதிரியாது”
(மலைபடு 21 – 38)
எனும் அடிகள் பேரியாழின் வருணனையை கூறி, அதைமீட்டவும், மற்றும் பலவகையான இசைக்கருவிகளையும் இசைக்கவும், அவற்றைப் பத்திரமாக பாதுகாக்கவும் செய்தனர் என்ற பண்பாட்டுத் தகவல்களை பதிவு செய்கிறது.
முடிவுரை
விளைநிலங்களைக் காவல் காக்கும் மறவர்கள் தாங்கள் இருப்பதை, வேல் நிறுத்தி அடையாளம் காட்டியதையும், ஆட்டுத் தோலை, இடையர்கள் பாயாகப் பயன்படுத்தியதையும், தினைப் புல்லை வீட்டுக் கூரையாகப் பயன்படுத்தினர் என்றும், எதிரியாக இருந்தாலும் தங்களை நாடி வந்தவரை உபசரித்தனர் என்றும், தனக்குத் தெரிந்த நல்லவைகளை மற்றவர்க்கும் சொல்லி உதவினர் என்னும் பலவகையான பண்பாடுகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்பாட்டின் சிறப்புகளாக கூத்தர், பாணர், விறலியரின் இசைத்திறன், மக்களின் வாழ்வுமுறைகள், விருந்தோம்பல், உணவுவகைகள், தொழில்கள், சமய நம்பிக்கைகள் போன்ற பல்வேறு பண்பாட்டுப் பதிவுகளும் மலைபடுகடாமில் பதிவு செய்யப்பட்டுள்ளமை இக்கட்டுரை மூலம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.
பார்வைநூல்கள்:
தமிழர்பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும், ஜுன், 2010.
பத்துப்பாட்டும் பண்டைத்தமிழரும் பிப்ரவரி, 2009.
பத்துப்பாட்டு விளக்கவுரை, டிசம்பர் 2002.
சிலப்பதிகாரம், புலியூர்கேசிகன் தெளிவுரையுடன், 1958.