இனக்குழு மக்களின் வாழ்க்கைவட்டச் சடங்குகளுள் மரபு, பண்பாடு, நம்பிக்கை, சமூகம் மற்றும் குறியீட்டு நிலைக்கான பன்பரிமாணங்களை உட்செறித்ததாக இறப்புச்சடங்குத் திகழ்கின்றது. ஆன்மா மற்றும் உடல் எனும் இருநிலைகளை மையமிட்டு நிகழ்த்தப்படும் இறப்புச் சடங்கில் அவ்வினக்குழு மக்களின் நம்பிக்கையே முன்னிலை வகிப்பதோடு அச்சடங்கின் போக்கினையும் தீர்மானிக்கின்றது எனலாம். இறப்புச்சடங்கார்ந்த எல்லா சடங்கியல் வினைகளும், அச்சடங்கிற்குரிய புழங்குபொருட்களும் அச்சடங்கின் மரபு மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியின் நிலைக்களனாகவும், மரபு மற்றும் பண்பாட்டினைக் காக்கும் பெட்டகமாகவும் திகழ்கின்றன. அவ்வகையில் யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட, தொன்மையான வாழ்வியலைக் கொண்டு விளங்கும் நீலகிரி, படகர் இன மக்களின் இறப்புச் சடங்கில் மரபு, பண்பாடு, மரபறிவு, சடங்கியல், குறியீடு, புனிதம், சமூகம், தொன்மை, வழிபடுபொருள் மற்றும் வாழ்முறை போன்ற பன்பரிமாண கூறுகளைத் தன்னுள் உட்செறித்துள்ள தொன்மையான புழங்குபொருளாக ‘ஆப்பி’ விளங்குவதை நிறுவுவதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.

படகர்களும் இறப்புச்சடங்கும் –

படகர்களின் இறப்புச்சடங்கில் ஆப்பியின் பயன்பாட்டினை ஆராய்வதற்கு முன்பு படகர்கள் இறப்பினையும், இறப்புச் சடங்கினையும் எவ்வாறு கொள்கின்றனர் என்பதார்ந்த புரிதல் அவசியமாகும். படகர்களிடம் மறுபிறப்புச் சார்ந்த நம்பிக்கை இல்லை. இறந்தவர்களை இயற்கைக்குச் சமர்ப்பிப்பது என்பதைத்தாண்டி அவர்களின் உடல் மற்றும் ஆன்மாவினைத் தம் முன்னோர்களிடம் சேர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு இறப்புச் சடங்கினை நிகழ்த்துகின்றனர். இவ்வுலகிலிருந்து நீத்தவர்கள் தம் முன்னோர்கள் வாழ்வதாகக் கருதுகின்ற மறுமை உலகத்தில் இதே உருவோடு வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இவர்களிடம் திகழ்கின்றது. அவ்வகையில் சடலத்தினை எரித்து, எஞ்சும் எலும்புகளைச் சேகரித்து, அதை சிறிய மண்குடுவையிலோ அல்லது துணியிலோ முடிந்து, தாம் மரபார்ந்து இறந்தவர்களின் எலும்புகளைச் சேகரித்து வைத்திருக்கும் எலும்புக்குழியுள் இட்டு மூடுகின்றனர். இந்த எலும்புக்குழி குகைபோன்றோ அல்லது தரையில் கல்வேயப்பட்ட குழிபோன்றோ அமைந்திருக்கும். இதை படகர்கள் “இலுகுய்” (இலு – எலும்பு, குய் - குழி) என்று அழைக்கின்றனர். படகர்களின் இந்தத் தொல்வழக்கு முதுமக்கள்தாழி முறையோடு நெருங்கிய தொடர்புடையதாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

படம் 1 - “கெரிசி கும்புடோது” சடங்கில் ஆப்பியால் மெழுகப் பட்ட “கெரிசி"-

எரியூட்டும் இடத்தினைப் படகர்கள் “துவ்வெ” என்கின்றனர். எரியூட்டுவதற்கென்றும், எரியூட்டுவதற்கான நெருப்பினை உருவாக்குவதற்கென்றும் இருப்பிரிவுகளைக் கொண்டதாக இந்தத் “துவ்வெ” அமைந்திருக்கும். இதில் சிதைமூட்டுவதற்கான நெருப்பினை உருவாக்கும் பகுதியினைத் “தொட்ட துவ்வெ” (தொட்ட – பெரிய) என்று அழைக்கின்றனர். நெருப்பினைக் கடைந்து உருவாக்குவதற்கான சூழலையும், அவ்வாறு கடையப்பட்ட நெருப்பின் புனிதம் கருதியும் இவ்விடம் “தொட்ட” எனும் அடையுடன் அழைக்கப்படுகின்றது. குழவிகள் இறக்கநேர்ந்தால் படகர்கள் அதைப் புதைக்கவும் செய்கின்றனர். அந்தப் புதைக்கின்ற பகுதியையும் “துவ்வெ” என்றே அழைக்கின்றனர்.

படகர்களின் தாய்மொழியான, தனித்திராவிட மொழியான “படகு” மொழியில் “து(தூ)” என்பதற்குச் சாம்பல், எருமைக்கன்று என்று பொருள். அதாவது எரிக்கப்பட்டுச் சாம்பலாகும் இடம் என்ற அடிப்படையிலும், இறந்தவரின் நினைவாகவும், இறந்தவர் செல்லும் மறுமையுலகத்திலும் அவருக்கு எருமைத் தேவைக்கருதியும் எருமையினை அடித்து பலியிடுகின்ற வழக்கினைப் படகர்கள் கொண்டிருந்தனர். சடங்கியல் அடிப்படையிலான படகர்களின் இவ்வழக்கானது காலப்போக்கில், அவர்களின் பண்பாட்டின் வளர்ச்சியால் பலியிடுவது என்ற நிலையிலிருந்து, இறந்தவரின் நினைவாக இவ்வுலகில் விடுவது என்பதாக “கரு ஹரசோது” எனும் சடங்காக மருவிநிற்கின்றது. அவ்வகையில் எருமையை இறந்தவருடன் மறுமையுலகம் அனுப்ப பலியிட்ட இடமாகவோ, பிறகு எருமைக்கன்றினை இறந்தவரின் நினைவாக விடப்பட்ட இடமாகவோ விளங்கியதால் இவ்விடம் “துவ்வெ” என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

இறந்தவர்கள் மறுமை உலகினை அடைந்தாலும், தேவையேற்படும்போது அவர்கள் இம்மை உலகிற்கு வந்து தம்மைக் காணவும் செய்வார்கள் எனும் நம்பிக்கையும் படகர்களிடம் உண்டு. மேலும் மறுமை உலகில் வாழ்கின்ற தம் முன்னோர்கள் தம் அழைப்பிற்கு இசைவார்கள் என்றும் நம்புகின்றனர். அவ்வகையில் இறந்தவரின் ஆன்மாவினைத் தம்முன்னோர்களை அழைத்து அவர்களுடன் அனுப்புகின்ற வழக்கினையும், நம்பிக்கையினையும் படகர்கள் கொண்டுள்ளனர். எனவே படகர்களின் இறப்புச்சடங்கின் நோக்கமும், சடங்கியல் முறையும் இயற்கையையும் முன்னோர்களையும் மையமிட்டே அமைந்துள்ளன. இதில் அவர்களின் நெடிய வாழ்வியல் முறையும், பண்பாடும் வெளிப்படுகின்றன.

படகர்கள் இறந்தவருடன் அவருக்குத் தேவையானப் பொருட்களை, குறிப்பாக தம் மரபார்ந்த வாழ்வியல் சார்ந்த ஈட்டி போன்ற வேட்டைக்கருவிகள், எருமை, உழவுக்கருவிகள், உண்பதற்காக பொரிக்கப்பட்ட தானியங்கள் போன்ற பொருட்களையும் இட்டு எரிக்கின்ற, அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்ற நிலையில் படகர்களின் வாழ்வியல் பரிணாமம் மற்றும் பரிமாணத்தினையும் உணரலாம். மேலும் இறந்தவருடன் இடும்பொருட்கள் தம் முன்னோர்களுக்கும் சென்று சேரும் என்ற நம்பிக்கையும், இதன்வழி மறுமையுலகுடன் தொடர்புக்கொள்ள இயலும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் நிலவிவருவது குறிப்பிடத்தகுந்ததாகும். ஆகவே இம்மை உலகிலிருந்து தம் முன்னோர்கள் வாழ்கின்ற மறுமை உலகிற்கு செல்கின்ற, அனுப்பி வைக்கின்ற ஓர் பயணமாகவே படகர்கள் இறப்புச்சடங்கினைக் கொள்கின்றனர். உடலால் பிரிந்தாலும் ஆன்மநிலையில் அவர்களுடனான உறவு என்றும் தொடர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையும் உடலளவிலும்கூட அவரின் நினைவாக விடப்படும் எருமைக்கன்றினை இறந்தவராகவே கருதும் மனப்பான்மையும் படகர்களிடம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆப்பியும் இறப்புச் சடங்கும் –

‘ஆ’வின் ‘பி’யே ஆப்பியாகும். ‘பி’ என்பது மலக்கழிவினைக் குறிக்கின்ற தொன்மையான சொல்லாகும். படகர்களிடமும் இந்தத் தொல்வழக்கு வழக்கிலுள்ளது. மூக்கில் மலம் அல்லது சாணத்தின் வாடை நீங்காமல் நிலைத்திருக்கும் பாதிப்பினைப் படகர்கள் “பிநாசி” என்று அழைக்கின்றனர் (பி – மலநாற்றம், நாசி - மூக்கு). இதற்காக தம் மரபார்ந்த மூலிகை மருத்துவத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஆவின் கழிவினைப் படகர்கள் “செகிணி” என்று அழைக்கின்றனர். அதாவது வெப்பத்தினைக் குறிக்கும் “செகெ” எனும் சொல்லிருந்து இந்தச் “செகிணி” எனும் சொல்லைப் படகர்கள் ஆக்கியிருக்கலாம். குளிர்ப்பிரதேசமான நீலகிரியில் தம் வாழ்க்களத்தில் வெப்பத்தினைத் தக்கவைக்கும், சமநிலைப்படுத்தும் பொருளாக இந்தச் சாணம் திகழ்ந்ததால் இதற்கு இப்பெயரினை இட்டிருக்கலாம். சிலர் இதை “சகிணி” என்றும் அழைக்கின்றனர். மேலும் ஆவின் சிறுநீருடன் கலந்திருக்கும் சாணத்தினைக் “கொரெ” என்றும், கீழே விழம் நிலையில் எழும் “தொப்” எனும் ஓசையைக் கொண்டு பசுஞ்சாணத்தினைத் “தொப்பெ” என்றும் அழைக்கின்றனர்.

வீட்டினைச் சாணத்தால் மெழுகுகின்ற நிலையில் “செகிணி தார்சோது” (தார்சோது – மெழுகுதல்) என்றும், தொழுவத்திலுள்ள மாட்டின் சிறுநீர்க்கலந்த சாணத்தினை எடுக்கும் நிலையில் “கொரெ எத்தோது” (எத்தோது – எடுத்தல்) என்றும், சாணக்கரைசலைத் தெளிக்கும் நிலையில் “தொப்பெ இடோது” மற்றும் “தொப்பெ பீரோது” (“இடோது” - இடுவது அல்லது தெளித்தல், “பீரோது” – பரப்பித் தெளித்தல்) என்றும் அதன் தன்மையின் அடிப்படையில் சாணத்தினைப் படகர்கள் வழங்குகின்றனர். மேலும் தம் மரபார்ந்த சில மருத்துவத்திற்குச் சாணத்தினை நீரில் கரைத்து அளிக்கும் நிலையில் அச்சாணக்கரைசலைக் “கொரெநீரு” என்றே அழைக்கின்றனர். சாணம் குறித்த இந்தச் சொல்லாக்கம் படகர்களின் ஆநிரைசார்ந்த நெடிய வாழ்முறையால் விளைந்தது எனலாம். படகர்களின் எல்லா வாழ்வியல் மற்றும் சமூகச் சடங்குகளிலும் இந்தச்சாணம் தவறாது இடம்பெறுவதும் இவர்களுக்கும் மாட்டுச் சாணத்திற்குமுள்ள மரபுநிலையை விளக்குவதாகும். குறிப்பாக இறப்புச்சடங்கில் “செகிணியாகவும்”, “தொப்பெயாகவும்” சாணத்தினைக் காரணக்காரியத் தொடர்புடன் படகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இறப்புச்சடங்கில் ஆப்பியின் பயன்பாட்டுநிலைக்கான தொன்மையைப் புறநானூற்றின் “வரி நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி, அழுதல் ஆனாக் கண்ணள், மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே” எனும் 246 ஆவது பாடல்வரிகள் விளக்குகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டினைச் சார்ந்த தும்பி சேர்கீரனார் பாடிய இந்தப் பாடலானது தன் கணவனை இழந்த பெண்ணொருத்தி தன் நெற்றியில் வரிவரியாய் திருநீறுப்பூசி, தரையில் முறம் அளவிலான பரப்பைச் சாணத்தால் மெழுகினாள். அவள் அழும் கண்ணீரும் மெழுகும் அச்சாணத்துடன் கலந்தது என்று கணவனை இழந்து கைம்மை நோன்பு மேற்கொள்ளும் பெண்ணொருத்தியின் கற்புநிலையை வெளிப்படுத்துகின்றது. நிலம்முழுவதும் அல்லாமல் முறத்தின் அளவுமட்டும் நிலத்தினைச் சாணமிட்டு மெழுகுவது என்ற இப்பாடலில் இடம்பெறும் சடங்குநிலையின் காரணமானது நோக்கத்தக்கதாகும். இப்பாடலுக்கு உரைஎழுதிய பெருமக்கள் பலரும் அவள் மெழுகிய அவ்விடத்தில் தம் கணவனுக்கு உணவினைப் படைப்பதாகவோ, அவ்விடத்தில் உணவினையிட்டு உண்பதாகவோ கருதுகின்றனர். சடங்கியல் நிலையிலும் இது ஏற்புடையதாகவே விளங்குகின்றது.

படகர்கள் இறப்பினை அது நிகழும் இடத்தினைக் கொண்டு “மனெசாவு”, “காடுசாவு” என்று இருநிலைகளில் கொள்கின்றனர். வீடு மற்றும் ஊரில் நிகழும் மரணத்தினை “மனெசாவு” என்கின்றனர் (மனெ – மனை (வீடு)). ஊரிற்கு வெளியில் நிகழும் மரணத்தினைக் “காடுசாவு” என்கின்றனர். “மனெசாவு” நிகழ்ந்தால் உறவினர்கள் வரும்வரை வீட்டின் “இதமனெ” என்னும் நடுவறையில் வைத்து பிணத்தினைக் காப்பார். “காடு சாவாக” இருந்தால் ஊரின் எல்லையில் ஒருசில சடங்குகளை மேற்கொண்டபிறகே ஊரிற்குள் கொண்டுவருவர். அதை வீட்டிற்குள் கொண்டுச்செல்லாமல் வீட்டின் வெளியிலேயே வைத்து சடங்குநிகழும்வரை பிணத்தினைப் பாதுகாப்பார். இதில் உள்ளார்ந்த பெரும் தற்காப்புநிலையும், சடங்கியல் நிலையும் நிலவுவதைக் காணலாம். வெளியில் உயிர்ப்பிரியநேரின் அவரைச் சடலமாக மனையினுள்ளே கொண்டுச்செல்வதைத் தவிர்க்கின்றனர். மேலும் இது வெளியில் நிகழ்ந்ததால் ஏற்பட்டிருக்கும் தொற்றுநிலையையும், அதுகுறித்த தற்காப்பினையும் அடிப்படையாகக் கொண்டது. மேற்கண்ட இருவகையான இழப்புகளிலும் ஆப்பி முக்கியமான இடத்தினை வகிக்கின்றது.


இறப்புச் சடங்கிற்குச் “செகிணியைக்”; கொண்டுவருதல்

இறப்பு நிகழ்ந்தவுடன் இறந்தவரின் அத்தை முறைக்காரார் தொழுவத்திற்குச் சென்று சாணத்தினையும், ஆற்றிற்குச் சென்று மண்சட்டியில் நீரினையும் கொண்டுவருவார். அப்போது கொண்டுவரும் நீரினை “ஒசநீரு” (“ஒஸ்து” – புதிய, “நீரு” – நீர்) என்கின்றனர். இதைக்கொண்டுவந்து வீட்டிற்கு வெளியில், முற்றத்தின் ஒரு ஓரத்தில் அவர் வைக்கின்றார். அதேபோல இழவு வீட்டினைச்சார்ந்த மூத்த ஆண் “காடு உப்பெ” எனும் செடியினைக் கொண்டுவந்து அப்பொருட்களுக்கு அருகில் வைக்கின்றார். இது இறப்புச்சடங்கின் முதன்மைச் சடங்காகத் திகழ்கின்றது. மேலும் இச்சடங்கினைத் தொடங்கும் நபரே இறப்புச்சடங்கார்ந்த, பெண்நிலைச்சார்ந்த அனைத்து சடங்குகளையும், குறிப்பாக ஆப்பியைக் கொண்டு செய்யப்படும் எல்லாவற்றையும் மேற்கொள்பராக இருப்பார். ஒருவகையில் இறப்புச் சடங்கார்ந்த பெண்ணிலைச் சடங்கின் தொடக்கமாக, குறியீடாக, அங்கீகாரமாக, பொறுப்பொப்புதலாக இந்த ஆப்பி எடுக்கும் சடங்குத் திகழ்கின்றது.


“செகிணி தார்சோது” அல்லது “செகிணி ஆக்கோது” –

படம் 2 - ஆப்பி உடன் “காடு உப்பெகிடு” தாவரம் (செகிணி ஆக்கோது சடங்கிற்கு பிறகு)

உறவினர்கள் அனைவரும் வந்தப்பிறகுச் சடலத்தினை மனையைவிட்டு வெளியே எடுத்துச்சென்றவுடன் வீட்டிலுள்ள எல்லா திரவப்பொருட்களையும், சமைத்துவைத்து உணவுப் பொருட்களையும் வெளியே கொட்டுகின்றனர். பின்னர் ஆப்பியைக் கொண்டுவந்தப் பெண் வீட்டின் வெளியில் வைக்கப்பட்ட புதுநீர், வைக்கப்பட்டிருந்த ஆப்பியிலிருந்து பகுதியளவு மற்றும் “காடுஉப்பெ” செடி ஆகியவற்றை வீட்டிற்குள்ளே கொண்டுவருவார். தரையில், குறிப்பாக சடலத்தினைவைத்த “இதமனெ” எனும் நடுவறையில் சாணத்தினையிட்டு, அதில் புதுநீரினைத் தேவையானளவு ஊற்றி “காடுஉப்பெ” செடியினால் மேலிருந்து கீழ்நோக்கி திரும்பாமல் மெழுகிக்கொண்டே, பின்னர் திரும்பியவாறே வீட்டினைவிட்டு வெளியேறி, மெழுகிய “காடுஉப்பெ” செடியினை வீட்டின் முன்முற்றத்தின் ஓரத்தில் வீசுகின்றனர். இச்சடங்கினைச் “செகிணி தார்சோது” என்றழைக்கின்றனர். அன்றாட வீட்டினை சாணமிட்டு மெழுகுவதை “செகிணி தார்சோது” என்று படகர்கள் குறிக்கின்ற நிலையில் இறப்பின் தீட்டினை போக்கும் இந்தச் செயல்பாட்டினை வேறுபடுத்திக் காட்டுவதற்காக “செகிணி ஆக்கோது” என்றும் அழைக்கின்றார். அதாவது “ஆக்கோது” என்றால் படுகு மொழியில் போடுவது என்றுபொருள். ஆக கண்டிப்பாகப் போடவேண்டியது மற்றும் “செகிணி தார்சோது” செயல்பாட்டினைவிடவும் சற்றுத் திண்ணமாகச் சாணியைப் போடுவது என்று இது பொருள்தருகின்றது.

இந்தச் “செகிணி ஆக்கோது” சடங்கும் இறப்புச்சடங்கில் இன்றியமையானதாகும். இதில் பயன்படுத்தபடும் “காடுஉப்பெ” செடி மருத்துவக் குணம்கொண்ட மூலிகைச்செடியாகும். மேலும் இழவிற்கான அடையாளமாகவும், சிறந்த கிருமிநாசினியாகவும், வீட்டிற்கான காப்பாகவும் விளங்கக்கூடியதாகும். படகர்களின் சடங்கியல் சார்ந்த தாவரவழக்காறில் தவிர்க்கவியலாத இடத்தினைப்பெறும் இந்தச் செடியினைத் தேவையில்லாமல் அவர்கள் பறிப்பதில்லை. அதைப் பெரும்பாவமாகக் கருதுகின்றனர். இந்தச் செடியின்மீது இவர்கள் கட்டமைத்துள்ள இந்த மதிப்புநிலையே இதன் இன்றியமையாமையை உணர்த்துகின்றது. மேலும் இறப்புச் சடங்கார்ந்த “கொரம்பு” எனும் சடங்கிற்கான நாளைக் கணிக்கவும் இந்தச்செடியின் மஞ்சள் நிற மலர்களைப் பயன்படுத்துகின்றனர்.

தம் முன்னோர்களை அழைத்து இறந்தவரின் ஆன்மாவினைச் சேர்க்கும் சடங்கினை படகர்கள் “கொரம்பு” என்கின்றனர். ஆண்கள் இறந்தால் ஞாயிறன்றும், பெண்கள் இறந்தால் வியாழனன்றும் இச்சடங்கினை மேற்கொள்வது இவர்களின் மரபாகும். ஆக இந்த நாள்களைக் கணக்கிட வீட்டின் சுவற்றில் இறப்புச்சடங்கு நிறைவுற்ற ஒவ்வொருநாளின் தொடக்கத்திலும் வீட்டின் “கீயாடு” எனும் நடுஅறையின் கீழ்ப்புறச்சுவற்றில் சிறிய சாணத்தினை உருண்டைப்பிடித்து, அதில் “காடுஉப்பெ” செடியின் ஒரு மலரினைக் காம்புடன் கோர்த்து, ஒட்டி வைக்கின்றனர். இதேபோல அச்சடங்கு நிகழ்த்தப்படும் நாட்கள் வரை இவ்வாறு செய்து அதற்குரிய நாளினைக் கணிக்கின்றனர். நாட்காட்டியில்லாத ஆதிகாலத்தில், காலத்தினைக் கணிக்கும் மரபறிவாக இம்முறை திகழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கும் சாணத்தின் பங்களிப்பு இன்றியமையானதாக விளங்கியது. மேலும் இறந்தவரின் ஆன்மாவினை முன்னோர்களிடம் சமர்பிக்கும்வரை கிருமிசார்ந்த தற்காப்பாகவும் இம்முறைத் திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தம் முன்னோர்களிடம் சேர்க்கப்படாத இறந்தவர்களின் ஆன்மாவினால் இல்லத்தாருக்கு எந்தத் தீங்கும் ஏற்படக்கூடாது எனும் காப்பு நடவடிக்கையாகவும், ஆப்பி வழிப்பாடாகவும் இம்முறைத் திகழ்கின்றது. கொரம்புச் சடங்கு முடிந்தப்பின்னர் “கீயாட்டில்” உள்ள இந்த சாணஉருண்டைகளை எல்லாம் எடுத்து ஆற்றில் எறிந்துவிடுகின்றனர். இதை ஒரு சடங்காகவே படகர்கள் மேற்கொள்கின்றனர். இறந்தவரின் தம்பிமுறையாக விளங்கும் நபர் இதை மேற்கொள்கின்றார். அவரை இறப்புச்சடங்கார்ந்து “தலையக்கி” என்று அழைக்கின்றனர். அதாவது முதல் வாய்க்கரிசியிடும் நபர் என்று பொருள். அவரே இறப்புச்சடங்கு முழுவதிலும் முன்னிலை வகிப்பவராகத் திகழ்வார்.

“செகிணி ஆக்கோது” சடங்கினை முடித்தப்பிறகு, அப்பெண் படகர்கள் “ஒலெ” என்று அழைக்கும் விறகடுப்பிலுள்ள சாம்பலினை அகற்றி, அதைத்துடைத்து அதில் இறந்தவருக்கு அளிக்கவேண்டிய சீரிற்காகத் தானியங்களை வறுப்பதற்கான ஏற்றபாடுகளை மேற்கொள்கின்றார். இச்சடங்கினை அவர்கள் “ஓடு பீப்பது” அல்லது “உரியோடு பீப்பது” என்று அழைக்கின்றனர். வறுப்பதற்காக படகர்கள் பயன்படுத்தும் பக்கவாட்டில் சிறு துளையிடப்பட்ட மட்பாண்டத்தினை “ஓடு” அல்லது “உரியோடு” என்று அழைக்கின்றனர். ஏற்கனவே வீட்டிலுள்ள “உரியோடு” பழுதான நிலையில் புதிதாக “உரியோடு” தயாரிக்கும் நிலைவரின் அதை தூய்மைச்செய்வதற்கான, தீட்டுக்கழிப்பதற்கான சடங்கிலும் “செகிணி” முக்கியப்பங்கு வகிக்கின்றது. “மடக்கெ கனப்பது” என்று அழைக்கப்படும் இச்சடங்கில் “உரியோட்டிற்கான” மட்பாண்டத்தின் தீட்டுக்கழிக்க சாணத்தினை வலதுக்காரத்தால் எடுத்து உள்ளேயும் வெளியேயும் “தலையக்கியானவர்” பூசி இச்சடங்கினை நிகழ்த்துகின்றார்.

“கொரம்பும் செகிணியும்” –

படம் 3  - கொரம்பிற் கான “மடக்கெ கனப்பது” சடங்கு

இறந்தவரின் ஆன்மாவினைத் தம் முன்னோர்களை அழைத்து அவர்களுடன் அனுப்பும் “கொரம்புச்” சடங்கினைப்பற்றி முன்னரே கண்டோம். இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்தப்பின்னர் கொரம்பிற்காக வரையறுக்கப்பட்ட நாள்வரை இழுவுவீட்டினர் யாரும் குளிக்கவோ, வீட்டினைவிட்டு செல்லவோ கூடாது. குறிப்பாக ஊரின் எல்லையைத் தாண்டக்கூடாது. இழவிற்கு வந்திருந்த சொந்த பந்தங்களும் இச்சடங்கினை முடித்தப்பின்பே செல்லவேண்டும் என்பது படகர்களின் ஆதிமரபாகும். இழவு நடந்த ஊர்முழுமையும் இழவுவீட்டாரோடுச் சேர்ந்து, தமது ஒருசில பணிகளை மேற்கொள்ளாது அவர்களின் இழப்பில் பங்குக்கொள்வதுண்டு. இந்தச்சடங்கு முடியும்வரை அவ்வூரார் படகர்களின் சிறப்புணவாகக் கருதப்படும் “உரி ஓட்டில்” தானியங்களை வறுத்துப்போட்டும் செய்யும் குழம்பினையோ, நறுமணம் எழும் குழம்பினையோ, இறைச்சியையோ செய்வதோ, உண்பதோ இல்லை. இது இவர்களின் உறவுநிலையின் ஒற்றுமைக்கான சிறந்தக்கூறாகத் திகழ்கின்றது. ஆனால் இன்று இச்சடங்கின் கடினம் குறித்து சிலர் “கொரம்புச் சடங்கினை” நல்லடக்கம் செய்த அன்றே நடத்துவதுண்டு. ஊராரின் ஒப்புதலுடன், தம் முன்னோர்களிடம் இந்த மரபுமீறலுக்கு மன்னிப்புக்கோரி, அனுமதியைப்பெற்று இறப்புச்சடங்கன்றே நிகழ்த்துகின்றனர். இந்தக் கொரம்புச் சடங்கிலும் “செகிணியின்” பங்கு இன்றியமையானதாகும்.

நல்லடக்கம் செய்து வந்தப்பின்னர் “தலெஅக்கி” எடுத்தவர் “கொரம்புச்” சடங்கிற்கான “இண்டெகூ” எனும் படையல் உணவினைத் தயாரிப்பதற்காக ஆற்றிலிருந்து புதுநீர்க் கொண்டுவருவார். அதற்கென வாங்கிவைத்திருக்கும் “மடக்கெ” எனும் புது மண்சட்டியினை ஆற்றங்கரையிலேயே வைத்து அதற்கு தீட்டுக்கழிக்கும், தூய்மைசெய்யும் “மடக்கெக் கனப்பது” சடங்கினை நிகழ்த்துகின்றார். அதில் இந்தச் சாணம் முன்னிலை வகிக்கின்றது. வீட்டின் முற்றத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கும் சாணத்திலிருந்து சிறிதளவினை அவர் ஆற்றங்கரைக்கு எடுத்துசெல்வார்.

மண்சட்டியைத் தூய்மைச்செய்தப்பின்னர் அதில் நீர் கொணர்ந்து தம் வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு இல்லத்தினை அடைகின்றார். அதற்குள்ளாக ஏற்கனவே “சகிணி ஆக்கோது” சடங்கில் ஈடுபட்ட பெண் கொரம்புசடங்கிற்கான “மொறா” (முறம்) மற்றும் “கெரசி” எனும் மூங்கிலாலான பொருட்களைச் சாணமிட்டு மெழுகி, உலர்த்தி வைத்திருப்பார். மேலும் வீட்டினை சாணத்தால் கைகளைக்கொண்டு மெழுகி, அடுப்பிலிருந்து சாம்பலினை அகற்றி, சுத்தம் செய்து அடுப்பில் பகுதியளவு நிர்நிரப்பிய மண்சட்டியினை வைத்து, அதனுள் படகர்களின் சடங்கியலில் முக்கியத்துவம்பெறும் உலர்ப்பட்டாணி விதைகளை இட்டுவிட்டு வீட்டினைவிட்டு வெளியேறுவார். அதற்குமுன்பாக ஏற்கனவே “செகிணி ஆக்கோது” சடங்கிற்கு நீர்கொணர்ந்துவந்த மண்சட்டியில் ஆற்றிலிருந்து புதுநீர்க்கொண்டுவந்து அடுப்பிற்கருகில் வைத்திருப்பார். கொரம்புச் சடங்கு நிகழும்போது பெண்களுக்கு வீட்டிலிருந்து விலக்கினைக் கட்டமைத்துள்ளனர்.

இந்தக் “கொரம்புச் சடங்கிற்கான” தாயரிப்பிற்கும் சாணமானது பெருபங்கு வகிக்கின்றது. கொரம்பிற்கான படையல் உணவினைத் தயாரிக்கும் “மடக்கெக்கு” அப்படையல் தயாரிக்கும் உலையில் வைத்து “மடக்கெ கனப்பது” சடங்கினை மேற்கொள்கின்றனர். அதற்கும் செகிணியின் பங்களிப்பு இன்றியமையானதாகும். “இண்டெக்கூ” தயாரித்தப்பிறகு அதை “கச்சுகங்குவா” எனும் படகர்களின் சடங்கியல் சார்ந்த வெண்கலத்தட்டில் இட்டு, தம் முன்னோர்களை அழைத்து அவர்களுக்குப் படைத்துண்ணும் இடத்தையும் சாணத்தால் மெழுகவேண்டியது படர்களின் மரபாகும். ஏற்கனவே முழுவதும் மெழுகப்பட்ட நிலையில் அப்படையல் உணவினைப் படைத்துண்ணும் இடத்தினை சற்ற கவனத்துடன் மெழுகி அதில் படைக்கின்றனர். படகர்களின் இந்தத் தொல்வழக்கம் புறநானூற்றின் தும்பி சேர்கீரனாரின் பாடல்வரியோடு பொருந்திப்போவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தம் முன்னோர்களுக்கும், ஆநிரைகளுக்குமான சடங்குகளில் படையலுக்கான அனைத்துக் களத்தையும் சாணமிட்டு மெழுகியப்பிறகே அதன்மேல் அப்படையலைப் படைக்கும் படகர்களின் மரபும் நோக்கத்தக்கதாகும். படகர்கள் மண்தரையிலிருந்து பளிங்குக்கல் தரைக்கு மாறிய இன்றும்கூட “கொரம்புச் சடங்கில்” சாணத்தினைத் தவிர்ப்பதில்லை. வீட்டின் முற்றம்வரை சாணத்தால் மெழுகுவதற்கான சூழல் இல்லாவிட்டாலும் இந்தச் சடங்கின் மரபுவழுவாமைக்காகக் கழுவும்நீரில் சிறிதளவு சாணத்தினைக் கரைத்து வீட்டினைக் கழுவுகின்றனர்.


“அக்கி ஆக்கோது” (வாய்க்கரிசி) சடங்கும் “செகிணியும்” –

படம் 4 - அக்கி ஆக்கோது” எனும் வாய்க்கரிசி சடங்கில் ஆப்பியைக் கலத்தல்

இறப்புச்சடங்கில் வாய்க்கரிசிபோடும் சடங்கினைப் படகர்கள் “அக்கி ஆக்கோது” என்று அழைக்கின்றனர். தாம் விளைவித்த “பத்தா” எனும் உமிநீக்காத சாமையை வாய்க்கரிசியாக படகர்கள் இறந்தவருக்கு அவரின் குடும்பத்தார் போடுகின்றனர். சில இடங்களில் “நெல்லினை” இடுகின்றனர். ஊரில் வாசிக்கும் கால்வழியினர் மற்றும் அந்த ஊரிற்கு வந்து குடியேறிய “நட்டா” எனும் மாமன் முறையுள்ள கால்வழியினருக்கு ஏற்ப வாய்க்கரிசிபோடும் இந்த அரிசிகள் குறியீட்டு நிலையில் மாறும். நீலகிரியில் “பூசெகுன்னூர்” பகுதிகளில் படகர்கள் நெல்விளைவித்ததாக கூறப்படுகின்றது. ஆனால் பல ஊர்களில் “பத்த அரிசியினை” மட்டுமே வாய்க்கரிசியாகப் பயன்படுத்தி வருகின்றனர். “பத்த அரிசியே” படகர்களின் தொன்மைவாய்ந்த தானியமாகும். நெல்லரிசியின் பயன்பாடு இவர்களிடம் பிற்காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம்.

வாய்க்கரிசிக்குரிய அசிரியைத் தயாரிக்கும் சடங்கின்போது சாணமிட்டு மெழுகும் முறத்தில் இறந்தவரின் வீட்டிலுள்ள “பத்தஅரிசியைக்” கொட்டி, அதில் படகர்கள் “குடி கறிக்கெ” என்று அழைக்கும் அருகம்புல்லின் வகையினையும், “துப்ப” என்று அழைக்கும் நெய்யினையும், அதனுடன் சிறிதளவு சாணத்தினையும் இடுகின்றனர். இட்டு அதை நன்றாகக் கைகளால் கலந்தப்பின் இறந்தவரின் கால்வழியின் மூத்தவர் இழவுவீட்டின் வாசலின் உட்புறத்தில் இருந்தப்படி தம்பி, மகன், மகள், பேரன், பேத்தி எனும் உறவுமுறையின் அடிப்படையில் இறந்தவரின் கால்வழியினருக்கு அவ்வாய்கரிசியை எடுத்துக் கொடுக்கின்றார். இதில் இடப்படும் கூட்டுப்பொருட்களான சாணம் மற்றும் நெய் படகர்களின் ஆதிவாழ்வான எருமைமந்தைப் பேணலின் மரபுத்தொடர்ச்சியாகத் திகழ்கின்றன. மேலும் புனிதநிலைக்கான கூறாகவும் திகழ்கின்றன.

இவ்ஆய்வின் முடிவாக,

    நீலகிரிவாழ் படகர்களின் இயற்கையுடனான நெடியவாழ்வியலின் மரபு, பண்பாட்டு மற்றும் மரபறிவு போன்றவற்றின் தொடர்ச்சியாக அவர்களின் இறப்புச்சடங்கில் ஆப்பி திகழ்கின்றது.

    எருமை மந்தை பரமாறிப்புசார்ந்த தம் ஆதிவாழ்வின் குறியீடாகவும் அவர்களின் இறப்புச்சடங்கில் ஆப்பி திகழ்கின்றது.

    சடலத்தினை வீட்டிலிருந்து வெளியே கொண்டுச் சென்ற பின்பும், நல்லடக்கம் செய்து இல்லத்தினை அடைந்தப்பின்பும், “கொரம்புச் சடங்கின்” முன்பும் மேற்கொள்ளும் மேற்கண்ட “செகிணி தார்சோது” மற்றும் “செகிணி ஆக்கோது” எனும் சடங்கில் சாணத்தினைக் கிருமிநாசினியாகப் படகர்கள் கொள்கின்றனர். சாணம் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அனைவரும் அறிந்தவொன்று. மேலும் இது படகர்களின் மரபறிவிற்கும் தகுந்தச் சான்றுப்பகர்கின்றது.

    “உரியோடு பீப்பது”, “கொரம்புச்” சடங்கிற்கான நீர்; எடுத்து வருதல், “கொரம்புச் சடங்கிற்கான” “இண்டெக்கூ” படையலைத் தயாரித்தல் போன்றவற்றிற்கான “மடக்கெ கனப்பது” எனும் மேற்கண்டச் சடங்குகளிலும், “செகிணி தார்சோது” மற்றும் “செகிணி ஆக்கோது” சடங்கிலும், வாய்க்கரி போடும் சடங்கான “அக்கி எத்தோது” சடங்கில் முதல்நிலை நிகழ்வான “அக்கி ஈசோது” (ஈசோது – பெறுவது) சடங்கிலும் ஆப்பியைப் புனிதப்பொருளாக, புனிதப்படுத்தும் பொருளாக படகர்கள் பயன்படுத்துகின்றனர்.

    “செகிணி தார்சோது” மற்றும் “செகிணி ஆக்கோது” சடங்கில் “காடு உப்பெ” தாவரத்தோடும், “அக்கி எத்தோது” சடங்கில் “குடி கறிக்கெ” தாவரத்தோடும், “கொரம்புச் சடங்கிற்கான” நாட்களைக் கணக்கிடும் முறையின்போது “காடுஉப்பெ ஊ” எனும் “காடுஉப்பெ” செடியின் மலரோடும் சாணத்தினைக் கூட்டுப்பொருளாகச் சேர்ப்பது படகர்களின் முன்னோர்களின் மரபு மற்றும் மரபறிவின் தொடர்ச்சியாகத் திகழ்கின்றன. இதில் பயன்படுத்தும் தாவரங்கள் அனைத்தும் மூலிகைகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவை சிறந்த கிருமி நாசினிகளாகவும் திகழ்கின்றது. அதிலும் தரைசார்ந்த நாசினியாக “காடுஉப்பெ” தாவரமும், கைகள்சார்ந்த, பண்டம்சார்ந்த சுத்தத்திற்காகக் “குடிகறிக்கெ” செடியும் ஆளப்பட்டுள்ளது படகர்களின் இயற்கை மற்றும் மருத்துவம் சார்ந்த அறிவிற்கான தக்க சான்றாகும். இம்மேற்கண்ட இந்தச்சடங்கிற்குரிய தாவரங்களைத் தேவையில்லாமல் பறிப்பதைப் பெரும்பாவமாக கட்டமைத்துள்ள பாங்கு படகர்களின் இயற்கைப் பேணலிற்கான சான்றாகவும் திகழ்கின்றது. மேலும், சடலத்தினை மனையிலிருந்து வெளியே எடுத்துச்சென்றப்பின் இல்லத்திலுள்ள திரவப்பொருட்கள் மற்றும் சமைத்த உணவினைக் கொட்டும் நிகழ்வில் அப்பொருட்களில் இறந்த உடலால், அவர் உற்றிருந்த தொற்றால் தொற்று ஏற்பட்டிருக்கும் என்பதற்கான தற்காப்புசார்ந்த மரபறிவும் வெளிப்படுகின்றது.

    சாணம் மற்றும் “காடுஉப்பெ ஊ” எனும் மலரினைக் கொண்டு “கொரம்பிற்கான” நாட்களைக் கணக்கிடும் முறையானது படகர்களின் மரபறிவிற்கான சான்றாக விளங்குவதோடு ஆப்பி வழிப்பாட்டிற்கான கூறாகவும் திகழ்வதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    இழவிற்கான சாணத்தினைப் இறப்புச்சார்ந்த பெண்ணிலைச் செயல்களுக்குப் பொறுப்பேற்கும் பெண் கொண்டுவருவது, இறப்பிற்கு மட்டும் உரிய “காடுஉப்பெ” செடியினைக் கொண்டுவருவது, பிணத்தினை எடுத்துச் சென்றப் பின்னர் “காடு உப்பெ” செடியினைக் கொண்டு நிகழ்த்தும் “செகிணி தார்ச்சோது” அல்லது “செகிணி ஆக்கோது” சடங்கில் பின்னோக்கியவாறே வீட்டினை மெழுகிச் செல்வது, “அக்கி எத்தோது” சடங்கில் வாய்க்கரிசியுடன் சாணத்தினைக் கலப்பது போன்றவற்றில் ஆப்பியினைக் குறியீட்டு நிலையிலும், நம்பிக்கை நிலையிலும் பயன்படுத்துகின்றனர். இறப்புச் சடங்கில் பெண்ணிலைசார்ந்த சடங்குகளை நிகழ்த்தும் பெண் இவர்தான் என்பதையும், வாய்க்கரிசியை எடுத்துக் கொடுப்பவர் இவர்தான் என்பதையும் ஆப்பியே குறியீடாக நின்று முடிவுசெய்வது குறிப்பிடத்தகுந்ததாகும். மேலும் “செகிணி தார்சோது” மற்றும் “செகிணி ஆக்கோது” சடங்கில் பின்னோக்கியவாறு வீட்டினைத் துடைத்துச்செல்வது சாணத்தோடு பின்னோக்கி நகர்வதைப்போல இனி இந்தவீட்டில் சாவுக்கேடு நிகழாது சென்றுவிட வேண்டும் என்றும் குறியீடு மற்றும் நம்பிக்கை நிலைக்கொண்டாதத் திகழ்கின்றது.

    “கொரம்பு” மற்றும் “அக்கி ஆக்கோது” எனும் சடங்கிற்குரிய முறம், “கெர்சி” ஆகிய மூங்கிலான பொருட்களைச் சாணமிட்டு மெழுகுவதும், சடங்கு நிகழும் இடத்தினை, குறிப்பாக “கொரம்புச் சடங்கிற்கான” “இண்டெக்கூ” படையலை வைக்குமிடம் ஆகியவற்றை சாணமிட்டு மெழுகுவது மரபுநிலைப் பேணலாகவும், புனிதப்படுத்தும் செயலாகவும், கிருமிநாசினிக் கொண்டுத் தூய்மைப்படுத்தும் செயலாகவும் திகழ்கின்றது. படகர்களின் இந்தக்கூறு புறநானூற்றின் பாடல்வரிகளில் இடம்பெறும் சடங்கியல் நிலையுடன் பொருந்திப்போது படகர்களின் மரபார்ந்த இச்சடங்கின் தொல்நிலைக்குத் தக்க சான்றாகும்.

    பயன்பாட்டு நிலைக்கேற்ப, சாணத்தின் தன்மைக்கேற்ப சாணத்திற்குப் படகர்கள் இட்டுள்ள காரணப்பெயர்கள் படகர்களின் சூழலறிவையும், அவர்களின் தாய்மொழியான படகுமொழியின் சொல்வளத்தினையும் விளக்குகின்றது.

    “கொரம்புச் சடங்கிற்கான” நாட்களைக் கணிக்கும் முறை மற்றும் இறப்புச்சடங்கார்ந்த பிற செயல்பாடுகளுக்குப்பிறகு பயன்படுத்திய சாணத்தினைக் கொண்டுச்சென்று ஆற்றில் இடுவது சாணத்தின் மீது அவர்கள் கட்டமைத்துள்ள புனிதம் மற்றும் மதிப்புநிலையை வெளிப்படுத்துகின்றது. அதேபோல “காடு உப்பெ” தாவரத்தினையும் ஆற்றில் போடுவதும் அத்தாவரத்தின்மீது அவர்கள் கட்டமைத்துள்ள மதிப்பு மற்றும் புனிதநிலையை வெளிப்படுத்துகின்றது.

இம்மேற்கண்ட ஆய்வுமுடிவுகளை நோக்கும்போது படகர்களின் இறப்புச்சடங்கில் ஆப்பியானது மரபு, பண்பாடு, நம்பிக்கை, மரபறிவு, குறியீடு, புனிதம், மதிப்புநிலை போன்ற பல்வேறு பரிமாணங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெளிவாகின்றது. இதனுள்ளே இழையோடும் படகர்களின் மரபு மற்றும் பண்பாட்டு நிலையானது அறுபடாது தொடர்வதற்கான சூழலையும் இயற்கையின் அருட்கொடையான ஆப்பி இடையறாது அளித்துக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் படகர்களின் தொல்குடித் தன்மைக்கும், தனித்துவத்திற்கும் சிறந்த சான்றாக இறப்புச்சடங்கார்ந்த இந்த ஆப்பி வழக்காறுகள் திகழ்கின்றன.


துணைநின்றவை

    1. புறனானூறு, கழக வெளியீடு.
    2. நேர்க்காணல் திரு. ஆனந்தராஜ், மொழியியல் அறிஞர், நீலகிரி மாவட்டம்.
    3. நேர்க்காணல் திரு. மகாலிங்கன், ஆய்வாளர், எடக்காடு, நீலகிரி மாவட்டம்.
    4. நேர்க்காணல் திரு. கல்லன், ஒரசோலை, நீலகிரி மாவட்டம்.
    5. நேர்க்காணல் திருமதி. சௌ;ளி, ஒரசோலை, நீலகிரி மாவட்டம்.
    6. நேர்க்காணல் திரு. பானிரங்கன், கம்பட்டி, நீலகிரி மாவட்டம்.
    7. நேர்க்காணல் திரு. ஹிரியன், கம்பட்டி, நீலகிரி மாவட்டம்.
    8. முனைவர் ஆ.இரமகிருஷ்ணன், பொரங்காடு சீமை படகர்களின் வழிபாட்டுமரபுகள், முனைவர்பட்ட ஆய்வேடு, பராதியார் பல்கலைக்கழகம்.
    9. முனைவர் கோ.சுனில்ஜோகி, படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குபொருட்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியர் பல்கலைக்கழகம்.
    10. முனைவர் கோ.சுனில்ஜோகி, பொரங்காடுசீமெ படகர்இன மக்களின் மூலிகை மருத்துவம், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, பாரதியர் பல்கலைக்கழகம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R