ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்போமா?நிலவுலகில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழலினை ஏற்படுத்தி தருவது இயற்கையின் அறமாகும். இயற்கையின் சமநிலைத்தன்மையில் ஏதேனும் இடர்கள் நேரிட்டால் பாதிப்பென்பது அதன் ஒவ்வொரு கூறிலும் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படுவதை, மனிதனை தவிர்த்த பிற உயிரினங்கள் அனைத்தும் தங்களின் நுண்ணுணர்வினால் உணர்ந்து கொள்ளவியலும் . ஆனால் அதை உணரும் திறனை மனித சமூகமானது தொடர்ந்து இழந்து கொண்டே வருகின்றது. தவிரவும் ஒவ்வொரு தலைமுறையும் தொடர்ந்து இயற்கையின் பிணைப்பில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவே விரும்புகிறது. இவ்வாறு விலகி செல்லும் மனிதர்கள், இயற்கையின் அருட்கொடையாக விளங்கும் இயற்கையின் அறத்தினை மட்டும் எவ்வாறு அறிந்திட இயலும். அதனுடன் ஒன்றி, உறைந்து வாழ்பவர்களால் மட்டுமே அதை உணர்ந்திட இயலும்.

அவ்வழியில் இயற்கையுடன் தங்களின் வாழ்வினை இடையறாமல் இணைத்தும் பிணைத்தும் வாழும் பழங்குடி மக்களால் மட்டுமே அதன் சிறப்பினை உணர்ந்திட இயலும். நீலகிரியானது மேற்குத்தொடர்ச்சிமலையின் தொடர்ச்சியாகவும் தமிழ்நாட்டின் மலை மாவட்டமாகவும், உலகின் தலைசிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாகவும், தொல்பழங்குடிகள் செறிவாக வாழும் பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு இயற்கையுடன் இயைந்த வாழும் பணியர் என்னும் பழங்குடிகளின் காடுபடுபொருள் சேகரிப்புச் செயல்பாட்டிலும், காட்டுநாயக்கர் பழங்குடிகளின் வாய்மொழிப் பாடலிலும், ஆலுகுறும்பர் பழங்குடிகளின் விடுகதைகளிலும் எவ்வாறு இயற்கை அறமானது வெளிப்படுகிறது என்பதை தக்க சான்றுகளுடன் இக்கட்டுரை வழியே காணலாம்.

அன்பும் அறமும்

அறக்கூறுகளில் தலைசிறந்ததாக ஒன்றாக விளங்குவது அன்பாகும். ஆகவேதான் அன்பு அறத்தில் உறைந்திருக்கிறது. அன்புடைய ஒருவர் இவ்வுலகில் எதையும் தமக்கு மட்டுமே உரிமை உடையது என்று எண்ணமாட்டார். பொதுமை உணர்வினை உருவாக்கும் இயல்பு அன்புக்கு உண்டு. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு எனும் அப்பொதுமை உணர்வே அறம் எனப்படுகிறது. எனவேதான் அன்பினூடாக அறம் பிறக்கிறது. அன்பின் வழியில் பிறப்பதே அதன் தனிச்சிறப்பாகும் . அன்பற்ற வழிகளில் அறம் பிறக்குமானால் அது அழிவுக்கே வழிகோலும் என்கிறார் திரு.விக. அத்தகு உயர்ந்த மாண்பினை பெற்றது அன்பும் அறமுமாகும்.

இயற்கை அறம்:

“மனத்துக்கண் மாசிலான் ஆதல் அனைத்து அறன்" என்கிறது குறள். மனம் மொழி, மெய்களால் எந்த உயிரினத்துக்கும், எந்தக் காலத்திலும், எந்த அளவிலும் தீங்கு செய்யாமல் இருப்பதுவே அறம் எனப்படுகிறது. இத்தகு அறம் ‘இறைவன் தனித்தும் உலக உயிர்களுள் கலந்தும் நிற்பதைப்போல, ஆகாயம் தனித்தும் மற்ற நான்கு பூதங்களில் கலந்து நிற்பது போலவும், அறமும் தனித்தும் பொருளிலும், இன்பத்திலும் இரண்டற கலந்து நிற்கின்றது என்றும், அறமற்ற பொருளும், இன்பமும் தொல்லை தந்து அமைதியை குலைப்பன’ என்று அறத்தின் முதன்மையை மேலும் வழியுறுத்துகிறார் திரு.வி.க. இத்தகு அறஉணர்வு அறிவாகி , எவ்வாறு உலகின் உயிர்களுள் உறைந்து படிமலர்ச்சி அடைகின்றது என்பதைத் தொல்காப்பியம் வரையறுக்கிறது.

தொல்காப்பியமும் உயிர்ப்பகுப்பும்

தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும் . அதன் மூன்று அதிகாரங்களுள் ஒன்றான பொருளதிகாரம் தமிழின் அகப்புற மற்றும் செய்யுள் மரபுகளை விரிவாக உரைக்கின்றது. அவற்றுள் இடம்பெற்றுள்ள மரபியல் நூற்பாவானது

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
............................................................
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” (தொல் – மரபியல் - 1520)

என நிலவுலகில் உயிரினங்கள் தோற்றம் கொண்டது என்பதும் ஓரறிவுடைய புல்லும்,மரனும் முதலாக ஆறறிவுடைய மானுட இனம் வரை பரிணாம வளர்ச்சி அடைந்த நிலையினை விரிவாக பகுத்து உரைக்கின்றது. உடம்பால் மட்டும் அறிவன ஓரறிவு உயிர்கள் எனவும், உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவுடைய உயிர்கள் எனவும், உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூவறிவு உயிர்கள் எனவும். உடம்பு, நா, மூக்கு, கண் இ​வை நான்காலும் அறிவன நாலறிவுடைய உயிர்கள் எனவும், உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது இ​வை ஐந்தால் அறிவன ஐந்தறிவு உயிர்கள் என பகுத்து கூறுகிறார் தொல்காப்பியர் ஆறாவது அறிவை மானுட அறமாக போற்றுகிறார்.

மானுட அறம்

ஐந்தறிவுடன் மனத்தாலும் அறியும் அறிவுடையவர்களே ஆறறிவுடையவர்கள் என்று நேரிதின் உணர்ந்தவர்கள் நெறிப்படுத்தியதாக மொழியும் தொல்காப்பியர் , மக்கள் தாமே ஆறறிவினவே என்று மானுடர்களின் சிறப்பை வரையறுக்கிறார், அதனூடே தொல்காப்பியர் மானுடர்கள் பேண வேண்டிய அறத்தினையும் பின்வரும் நிலைகளில் வலியுறுத்துகிறார்.

1). மனிதன் உலக உயிர்களுள் உயர்ந்தவன் 2). பிற உயிர்கள் அனைத்தும் உடலாலும் உறுப்புக்களாலும் அறிவினை அறியும் போது மனிதன் மனத்தினால் உணர்கிறான். 3). மனதால் உணரும் மனிதன் பகுத்தறியும் திறனை இழந்த உயிர்களையும் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்கிறான் 4). ஓரறிவு முதலாக ஐயறிவு ஈறாக உள்ள உயிர்களை பாதுகாப்பதன் வழி அனைத்து உயிர்களும் வாழும் இந்த உலகத்தையும் பாதுகாக்க வேண்டும். 5)உலகினை, உயிர்களை பகுத்தறிவினூடே பாதுகாக்க மனிதன் இயற்கை அறத்தினையே கைக்கொள்ள வேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.

​உயிர்களின் பரிணாம வளர்ச்சி​யை பகுத்து பகர்ந்த தொல்காப்பியர் பல்லுயிரின வளர்ச்சி​யையும் அவற்​றை அழிக்காது பாதுகாக்கும் மானுட ​அறத்தினையும் ​ மரபியல் வழி நமக்கு அறிவுறுத்துகிறார். தொல்காப்பியர் வகுத்தளித்த இயற்கை அறம் இயற்கையுடன் இன்றளவும் இயைந்து வாழும் நீலகிரி தொல்பழங்குடி மக்களிடம் வழக்காறாக வழங்கிவருவதை பின்வரும் பண்பாட்டு நிலைகளில் காணலாம்.

நீலகிரியின் உயிர்ச்சூழல்

ஐந்திணை தமிழ் மரபில், மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலமே நீலமலைத்தொடர் ஆகும். இதன் சிகரத்தில் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி மலரினால் நீலகிரி எனும் இப்பெயரினைப் பெறுகிறது. தவிரவும் நீலகிரி மலைத்தொடர் உலகின் தலைசிறந்த உயிர்ச்சூழல் மையமாகவும், (Ecological Hotspot) உயிர்சூழல் மண்டலமாகவும் (Biospare resrve) விளங்குகிறது. இது இந்தியாவின் முதல் உயிர்ச்சூழல் மண்டலமாக நீலகிரியை 1986-ம் ஆண்டு, முதன் முதலாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. அதன் தனித்துவமான தன்மையினாலும் உயிர்-பன்முகத்தன்மையின் காரணமாகவும் இது உலகின் 34 உயிர்ச்சூழல் மையங்களுள் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது.

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலமானது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிடையே எல்லைகளெங்கும் பரவியுள்ளது. இந்தியாவில் உள்ள புலிகள் மற்றும் யானைகளில் பாதியளவு நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் உள்ளன. இந்த மண்டம், 4 தேசிய பூங்காக்கள், 4 புலிகள் காப்பகங்கள், 3 யானைகள் வாழ்விடங்கள் உள்ள பகுதியாக விளங்கிவருகிறது “மலைகளின் அரசி” என்னும் சிறப்பினையும் பெறும் நீலமலையின் மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா மலை ஆகும். இதன் உயரம் 2,637 மீட்டராகும். இதனை உள்ளடக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம்

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலமானது தமிழகம், கேரளம், கர்நாடகம் என மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது . இம்மண்டலமானது 5,560 ச.கி.மீ., பரப்பளவை உள்ளடக்கியுள்ள இப்பரப்பில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் 2,537 ச.கி.மீ, பரப்பளவையும், கர்நாடகத்தில் பந்திப்பூர், நாகர்ஹோலே உள்ளிட்ட வனப்பகுதிகளில் 1527 ச.கி.மீ. பரப்பளவையும், கேரளத்தில் வயநாடு, அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் 14,55 ச.கி.மீ., பரப்பளவையும் உள்ளடக்கியது. இங்கு மழையளவு 500 மி.மீ முதல் 7000 மி. மீ வரையாகும். முட்புதர்க்காடு, வறண்ட இலையுதிர்க்காடு, இலையுதிர்க்காடு, பசுமைமாறாக்காடு, மலைக்காடுகள், சோலைவனம், புல்வெளிகள் மற்றும் ஈரப்புலங்கள் என பல்வகைக் காடுகள் இங்குக் காணப்படுகின்றன. இவ்வுயிர்க்கோளக் காப்பகம் தெற்கு மேற்குத்தொடர்ச்சிமலை ஈரப்புலக் காடுகள், தெற்கு மேற்குத் தொடர்ச்சிமலை வறண்ட இலையுதிர்க்காடுகள், தெற்கு தக்கணப் பீடபூமி மழைக்காடுகள் என மூன்று சூழலியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது..

உயிரினங்களின் வாழ்விடம்

ஈரப்பதம் நிறைந்த பசுமை மாறா காடுகள், சோலை புல்வெளிகள், இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள், "சவானா' புல்வெளி காடுகள் இங்கு உள்ளன. உலகில் உள்ள 3238 பூக்கும் இனங்களுள் சுமார் 135 இனங்கள் இங்கு உள்ளன. பூச்சியுண்ணும் தாவரங்களான, "டொசீரா', "பெல்டேட்டா' போன்றவை, இமயமலைக்கு அடுத்தப்படியாக இங்கு மட்டுமே உள்ளன. இந்தியாவின் தேசிய விலங்கான புலி இனம் அனைத்து பகுதிகளிலும் குறைந்து வரும் சூழலில், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் முதுமலை, பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோலே பகுதிகளில் மட்டும் அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் ஒரே வாழ்விடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் வாழ்ந்துவரும் பகுதியும் இதுவாகவே உள்ளது. ஆசிய யானைகளும், புலிகளும் உலகம் முழுவதும் அழிந்தாலும், நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மட்டுமே அதன் கடைசி வாழ்விடமாக இருக்கும் என சூழலியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விலங்கினங்களும் தாவர இனங்களும்

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் விலங்கினங்களைப் பொறுத்தவரையில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரித்தான 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவைகள், 80 வகையான இரு வாழ்விகள், 39 வகையான மீன்கள், 31 வகையான ஊர்வன, 316 வகையான வண்ணத்துப்பூச்சியினங்கள் மற்றும் எண்ணிலடங்கா முதுகெலும்பற்ற விலங்கினங்கள் இம்மண்டலத்தில் காணப்படுகின்றன.

தாவர உயிர்ப்பரவல் மிகுந்து காணப்படுகிறது. ஏறத்தாழ 3300 க்கும் மேற்பட்ட பூக்கும் தாவர வகைகள் உள்ளன. இதில் 1232 தாவர வகைகள் இவ்விடத்திற்கே உரித்தனவாக உள்ளன. பேயேலெப்சிஸ் என்ற தாவரப்பேரினம் உலகில் இங்கு மட்டும்தான் காணப்படுகிறது. பெருநெல்லி, சிலைவாகை, நாவல், பலா, தோதகத்தி, ரோடோடென்ட்ரான் மற்றும் சந்தனம் போன்றவை இங்கு பொதுவாக காணப்படும் மரவகைகளாகும். மிளகு போன்ற கொடியினங்களும் மிகுந்து காணப்படும் இங்கு மேற்குத் தொடர்ச்சிமலையின் 80% பூக்கும் தாவரங்கள் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தை சேர்ந்தவையாகவும் கண்டறிந்து உள்ளனர்.

தொல்பழங்குடிகள்

உலகின் தலைசிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாக விளங்கிவரும் நீலகிரியில்தான் தமிழ்நாட்டின் தொல்பழங்குடிகள் இனம் காணப்பட்டுள்ளனர். இந்திய அரசு அவ்வாறு இனம்காண 1969 ல் சிலுஆவோ குழுவினை அமைத்தது. அவர்கள் பின்வரும் நான்கு வரையறைகளை வகுத்துகொண்டது. அவைகளாவன

1).வேளாண்முறை தோன்றுவதற்கு முந்தைய தொழில்நுட்பத்தை மட்டும் கொண்டிருத்தல்
2). மக்கள் தொகை எண்ணிக்கை உயராமல் குறைந்து கொண்டே செல்லுதல்
3). மிகவும் பின்தங்கிய வாழக்கை முறையினை கொண்டிருத்தல்
4). மிகக் குறைவான கல்வி அறிவினை கொண்டிருத்தல்

இவ்வறையறையின் அடிப்படையில் இந்தியாவெங்கும் 75 தொல் பழங்குடி குழுக்களும், தமிழ்நாட்டில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், காட்டுநாயக்கர், பணியர் ஆகியோரும் கண்டறியப்பட்டனர். இத்தகு சிறப்பு வாய்ந்த தொல்பழங்குடிகள் உலகின் தலைசிறந்த நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில் பன்நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள்தொகை 7,62,141. இதில் பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம். நீலகிரி மலைத் தொடரை அதன் சிகரமாக விளங்கும் தொட்டபெட்டா முதலாக அதன் நான்கு திசைகளிலும் இம்மலை தொடரின் அடிவாரங்கள் வரை இதன் பல்வேறு பகுதிகளை பகிர்ந்து கொண்டு இயற்கையுடன் இயைந்த பண்பாட்டு வாழ்வை மேற்கொண்டுள்ளனர்.

பணியர்

தென்னிந்திய பழங்குடிகளுள் அடிமைச்சமூகமாக இனம்காணப்படும் பணியர் பழங்குடிமக்கள் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர், பகுதிகளிலும், கேரளாவின் வயநாடு மாவட்டத்திலும் செறிவாக வாழ்ந்து வருகின்றனர். கூடலூர், வயநாடு பகுதிகளில் மலைத்தொடர்களுக்கிடையே உள்ள வயல்களில் உழவுபணிகளுக்காக அடிமையாக பணியமர்த்தப்பட்ட இப்பழங்குடிகளின் குடியிருப்புகள் நீரோடைகளின் கரைகளில் அமைந்துள்ளது. ஆகவே இவர்களின் பண்பாட்டு வாழ்வியல் முறை வயலும் வயல் சார்ந்தும் இடம்பெறுகிறது.

கூடலூர், பந்தலூர் வட்டங்களில் 80 குடியிருப்புகளில் பரவலாக வாழும் பணியர் பழங்குடிகள்,தங்களது குடியிருப்புகளை தங்கள் பணியாற்றும் நிலவுடைமையாளர்களான வயநாடன் செட்டி,மற்றும் மௌன்டாடன் செட்டி ஆகியோரின் வயல்களின் கரையோரங்களில் அமைத்துள்ளனர். இவர்களின் தோற்றம் நீலகிரியின் பிற பழங்குடி சமூகங்களிலிருந்து வேறுபடுகின்றனர். உயரம் குறைவான இவர்கள் சுருள் சுருளான முடியினை கொண்டுள்ளனர். வட்டமான முகங்கள், குறுகிய மற்றும் அகலமான அல்லது தட்டையான மூக்குகளைக் கொண்டுள்ளனர். ஆண்கள் தலைமுடியை வளர்க்கவும், பெண்கள் தோள்களுக்கு கீழே தலைமுடி வளர அனுமதிப்பதில்லை. அவர்களின் பெண்களின் சிகை அலங்காரம் தனித்துவமானது.

உழவுப்பணிகளில் ஈடுபடும் பணியர்கள் காடுபடு பொருட்கள் சேகரிப்பு பணிகளையும் மேற்கொள்கின்றனர். வயல்களை உழவு மேற்கொண்ட பிறகு அதில் காணப்படும் ஒருவகையான நத்தைகளையும் சேகரித்து அவற்றை வெந்நீரில் வேகவைத்து அவற்றையும் உணவாக கொள்கின்றனர்.

கிழங்குகளையும் சேகரித்து உணவாகக் கொள்ளும் இவர்கள் ‘காரவள்ளி’ என்னும் மூலிகை கிழங்கினை நீளமான முன்புறம் கூரிய இரும்பு பொருத்தப்பட்டுள்ள கோளினை கொண்டு அகழ்ந்து எடுக்கின்றனர். அவ்வாறு எடுக்கும் போது நீளமான வேரினை கொண்டுள்ள காரவள்ளி கிழங்கினை தொண்டி எடுக்கும் போது அவற்றின் மேல்பகுதியை வெட்டி அகழ்ந்த குழிக்குள் இட்டு தொண்டி எடுத்த அனைத்து மண்ணையும் குழிக்குள் இட்டு மூடி விடுகின்றனர்.

கிழங்கு தோண்டி எடுக்கும் ஒவ்வொரு குழியினையும் மூடிய பிறகே பிற பகுதிகளுக்கு செல்கின்றனர். ஏன் இவ்வாறு தோண்டிய குழிகளை மூடிவிட்டு செல்கிறீர்கள் என்று கள ஆய்வின்போது அவர்களிடம் கேட்ட போது “நிலத்தை தோண்டி அப்படியே விட்டு செல்வது நிலத்திற்கு நாம் செய்யும் அழிவு என்றும், அவ்வாறு செய்தால் அடுத்த பருவத் தில் காரவள்ளி கிழங்கு இப்பகுதியில் கிடைக்காது என்றும் கூறுகிறார்கள். அரிய செயல்களின் மூலம் இயற்கையின் அறத்தினை பாதுகாத்து வருகின்றனர்.

காட்டுநாயக்கர்    

இவர்களுள் ஒரு பிரிவினரான காட்டுநாயக்கர்கள் தங்களது வாழ்வியலை முழுமையாக முதுமலை வனம் சார்ந்தே அமைத்துக்கொண்டுள்ளனர். காடுகளின் தலைவன் என்னும் பொருள்தருவதே ‘காட்டுநாயக்கன்’ என்பதாகும். இத்தகு தன்மையே இவர்களின் தனித்த அடையாளமாகவும், தனிச்சிறப்பாகவும் விளங்குகிறது. கூடலூர் பகுதியில் இவர்களது குடியிருப்புகளின் அமைவிடங்களை கொண்டு இதனை உறுதி செய்ய இயலும். பந்தலூர் வட்டத்துக்கு உட்பட்ட விலங்கூர் சிற்றூரில் ஊருக்குள் இருந்த குடியிருப்புகளை விடுத்து முதுமலை வனத்துடன் இணைந்த பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்து குடியிருந்து வருவதை இயற்கையுடன் இயைந்த வாழ்வில் எத்தகு நிலையினை கொண்டுள்ளனர் என்பதை உணர முடிகின்றது.

இயற்கையின் உயிர்ப்பென ஒலிக்கும் இவர்களின் வாய்மொழி பாடல்களிலும் இத்தகு பண்புகள் நிறைந்து இருப்பதை காண முடிகிறது. அவற்றுள் ஒன்றுதான் இப்பாடல்

“கட்டம்பி
கார்யக்காய்
நெலா மாலிகே”

இவ்வரிகள் மோனையால் பாடலாகவும், வடிவினால் புதுக்கவிதையாகவும், பொருளினால் ஹைக்கூ கவிதையாகவும் பரிணமிக்கலாம். ஆனால் இது ஏட்டில் எழுதப்பட்ட பாடல் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்களின் உள்ளத்தில் உறைந்து நாவில் நவிலும் வாய்மொழிப் பாடலாகும்.

இப்பாடல் உணர்த்தும் பொருளானது.. “எங்களின் முதுமலை வனமெங்கும், உடலெல்லாம் முள்ளாகவும், வனமே வறண்டுள்ள கோடைக்காலங்களில் இலைகளில் மட்டும் பசுமையை இளந்தளிராக தேக்கி, உயர்ந்து நிற்கும் காரைக்காய் மரமே.. உன்னுடைய உடலெங்கும் அம்புகளை போன்ற கூரிய முட்களை அணிகளாய் கொண்டுள்ளாய். எலுமிச்சைபோன்ற இளங்காய்கள் உன் கிளைகளில் காய்த்து நிறைந்து இருக்கின்றன.

பசிய உன் காய்களிலோ நச்சுத்தன்மையே நிறைந்துள்ளது. உடலெங்கும் முள்ளையும், காய்களில் நஞ்சையும் கொண்டு இலைகளில் மட்டும் நிழலினை பரப்பும் காரைக்காய் மரமே.. உன் நஞ்சு நிறைந்த காய்களை நிலத்தில் உதிர்த்து விடாதே. மண்ணெல்லாம் நஞ்சானால் விதைகள் விளையாதே..எனவும்

கோடையில் இலைகளை உதிர்ந்துள்ள மூங்கில் குத்துகளின் வேரினை தழுவி ஓடுகிறது நீரோடை. நெளிந்து ஓடும் நீரில் மீன்களோ நிறைந்து இருக்கும். நீரோடையில் உன் காய்களை உதிர்த்தால், மீன்கள் மயங்கி மிதக்கும். ஆகவே காரைக்காய் மரமே நிலத்திலோ, நீரிலோ நஞ்சு மிகுந்த காய்களை எக்காரணம் கொண்டும் உதிர்த்து விடாதே.” என்பதாக இப்பாடல் உணர்த்தும் பொருளினை விரிவாக விரித்து உரைகின்றனர் வனமே வாழ்வென கொண்டுள்ள காட்டுநாயக்கர்கள்.

மனிதர்களின் அறம்பிறழ்ந்த பேராசையினால் காடுகளின் அழிவும், புவி வெப்பமயமாதலும், காலநிலைமாற்றமும் மிகப்பெரும் சவாலாக உருவெடுத்து இயற்கையினையும், உலக உயிர்களையும் அச்சதின் விளிம்பில் நிறுத்தியுள்ள இன்றைய சூழலில், இவர்களின் பாடலோ மனிதர்களை நோக்கி இயற்கைக்கு அநீதி இழைக்காதீர்கள் என்று பாடாமல், இயற்கையிடமே இறைஞ்சுகிறார்கள். இயற்கையை போற்றும் இயற்கையின் அறம் இவர்களின் பண்பாட்டில் இவ்வாறு வெளிப்படுகிறது.

ஆலுகுறும்பர்

நீலகிரிமலைத்தொடரில் வாழும் மற்றொரு தொல்பழங்குடிகள் குறும்பர் ஆவார். இவர்கள் முள்ளுகுறும்பர், பெட்டக் குறும்பர், ஆலுகுறும்பர், தேனுகுறும்பர், ஊராளி குறும்பர் என ஐந்து வகைகளாக மலைத்தொடரின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். ஆலு குறும்பர்கள் ஆலு குறும்பர், ஹால் குறும்பர் அல்லது மாற்றாக பால் குறும்பர் என்றும் அழைக்கப்படுகிறனர்,

இப்பழங்குடியினர் பேசும் மொழியானது தமிழ்-கன்னடமும் சேர்ந்த மொழியாக இருக்கின்றது. எனினும் இது தென்திராவிட மொழியாகும். இது பெரும்பாலும் கன்னட மொழியின் பேச்சுவழக்கு என்று கருதப்படுகிறது; இருப்பினும் ஆய்வாளர்கள் இதை ஒரு தனி மொழியாக வகைப்படுத்துகிறனர். ஆலுகுறும்பர்கள் நீலகிரி மலைத்தொடரில் குன்னூரின் பரலியாறு, சின்னகுறும்பாடியிலும் கொத்தகிரியின் பனகுடி, பாவியூர் மஞ்சூரின் ஓணிக்கண்டி,சின்னதரை ஆகிய பகுதியில் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் வனம்சார்ந்தே இவர்களது குடியிருப்புகள் அமைந்துள்ளன. இவர்களின் மொழியில் வழங்கும் விடுகதை ஒன்று பின்வரும் நிலையில் இயற்கை அறத்தினைப் போற்றுகிறது.

“ஓதது ஓய்ட்டத்து
பந்தவா பந்துட்டத்து
குலிதவா குலிதுட்டத்து
அது ஏனா ?”

இவ் விடுகதை விடுவிக்கும் நேரடியான பொருளாவன

போனவ போய்ட்டாங்க
வந்தவங்க வந்துட்டாங்க
உட்கார்ந்தவாங்க உட்கார்ந்துட்டாங்க
அது என்ன ?
(போனவர்கள் )என்பவர்கள் முன்னோர்கள்
(வந்தவர்கள்) என்பவர்கள் அவர்களின் பிள்ளைகள்
(உட்கார்ந்தவாங்க) என்பவர்கள் அவர்களின் மரபும் இயற்கையும் தெய்வமும்

போனவர்களாக போற்றப்படும் முன்னோர்களையும், உட்கார்ந்தவர்களாக குறிப்பிடப்படும் இயற்கையையினையும் , அவர்களின் இயற்கையுடன் இயைந்த பண்பாட்டு மரபினையும், வழிபடும் தெய்வமாக இருக்கும் இயற்கையினையும் பாதுகாத்து, நெறிப்படுத்தி, வழிநடத்தி வழிவழியாக வரும் தலைமுறைக்கு கையளிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டியவர்கள் வந்தவர்களாக குறிக்கப்படும் முன்னோர்களின் பிள்ளைகள்தான்.

ஆலுகுறும்பர்களின் பண்பாட்டு மரபினையும் இயற்கைச் சூழலையும்,முன்னோர்கள் மற்றும் இயற்கை ஆகியவற்றின் முழுமையான வடிவமாகத் திகழும் தெய்வத்தினையும் பாதுகாக்கும் பணியானது வந்தவர்களாக குறிக்கப்படும் இப்பொழுது வாழ்கின்றவர்களைச் சாரும். அவர்கள் தங்களின் மரபான கடமைகளில் இருந்து தவறுவார்களானால் இயற்கை சூழல், பண்பாட்டுமரபு, இயற்கையின் உருவான தெய்வம் ஆகியவை சிதைந்து இயற்கையுடன் இயைந்த இடையறாத தொடர்ச்சியினைக் கொண்ட ஆலு குறும்பர்களின் வாழ்வும் வரலாறும் அழிந்துவிடும். வாய்மொழி வழக்கறான இவ்விடுகதையில் இயற்கை அறம்தான் விடுபடாமல் உள்ளதை உணரமுடிகின்றது.

முடிவுரை:

உலகில் பல இனங்களும், மொழிகளும், தங்களை நாகரிகமும், பண்பாடும் மிக்கதாக உறுதிப்படுத்தி, உயர்த்திக்கொள்வதற்கு பல்வேறு அகச்சான்றுகளையும் புறச்சான்றுகளையும் தொடர்ந்து தேடியும், பொருந்தாத சான்றுகளையும் பொருத்தியும் , வரலாற்றை திருத்தி எழுதியும் நிறுவி வருகின்றனர். பழங்குடி மக்களின் மொழி எழுத்து வழக்கும்,இலக்கிய இலக்கண வளமாற்றதாகவும், அவர்தம் வாழ்வியல் நாகரிகமும், பண்பாடும் அற்றதாகவும் பொது சமூகத்தினால் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இயற்கையுடன் இயைந்த வாழ்வினை இடையறாமல் இன்றளவும் பின்பற்றி வரும் பழங்குடி மக்களும் குறிப்பாக நீலமலைத்தொடரில் வாழும் தொல் பழங்குடி மக்கள் தங்கள் வாழும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த உயிர்ச்சூழல் மண்டலத்தின் தனித்தன்மையை உணர்ந்தும் உணராமலும் பாதுகாத்து வருகின்றனர். அவ்வாறு பாதுகாக்க அவர்கள் தங்களின் பண்பாட்டினூடே இயற்கை அறத்தினை கைக்கொண்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையினையும் கிழக்கு தொடர்ச்சி மலையினையும் இணைக்கும் நீலகிரி மலைத்தொடரும், உயிர்ச்சூழல் மண்டலமும் இங்கு பன்நெடுங்காலமாக வாழ்ந்து வரும் தொல்பழங்குடி மக்களையும், தொல் பழங்குடி மக்கள் தாங்கள் வாழும் உலகின் அரிய உயிர்ச்சூழலினையும் பாதுகாத்து வருகின்றனர். இயற்கையின் அறம் சூழலையும் பழங்குடி மக்களையும் இடையறாமல் இணைத்தும் பாதுகாத்தும் வருகின்றது.

பார்வை நூல்கள்

1.தொல்காப்பியம் மூலம்
2.திருக்குறள் மூலமும் உரையும்
3. பக்தவத்சல பாரதி - தமிழகப் பழங்குடிகள்
4. செ துரைமுருகன் - கூடலூர் வட்டார தொல்பழங்குடிகளின் வழக்கு தமிழ் ஆய்வேடு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R