முன்னுரை
கடல் என்னும் நீர்நிலையானது, நீர் நிலைகளில் தனித்துவமான ஒன்றாகும். வருடம் முழுவதும் நீரினைக் கொண்டதாகக் கடல் திகழ்கின்றது. அதன் பிரம்மாண்ட அளவும், அது கொண்ட நிறமும், அதன் செயல்பாடும் கொண்டு கடலை பல்வேறு பெயர்களில் நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனா். ஆசிரியப்பா என்னும் இலக்கண வடிவத்தில் கவிபுனைந்த புலவர்கள், கடற் பெயர்களை அவரவர் புலமை அனுபவத்தில் செம்மையான சொற்செட்டுமானத்துடன் படைத்திருப்பதை நற்றிணைப் பாடல்களின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கடலும் அதன் குடிவழிகளும்
தமிழன் பயன்படுத்திய நீர்நிலைகளில் பல அழிந்துபட்டும் வனப்பு கெட்டும் காணப்படுவதை அறிவோம். இதில் கடல் என்பது மனிதப் பயன்பாட்டில் பெரிய நீர்நிலையாகும். மனிதனால் பெரிதளவு ஆக்கிரமிப்பு செய்யப்படாத நீர்நிலை என்றும் சொல்லலாம். பொதுவாக ஆற்றங்கரைகளின் அருகிலே மனிதகுல நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டதாய்க் கூறுவர். அதுபோல கடல் அருகிலும் நாகரிகம், இனக்குழுக்கள் தோன்றியுள்ளன. அந்நாகரிகத்தைக் கடற்கரை நாகரிகம், அங்கு தோன்றிய இனக்குழுக்களை பரதவர் இனம் எனும் பெயரில் குறிக்கலாம். ஏனைய திணைகளில் நீர் நிலை அருகாமைக் குடியிருப்புகள் எல்லாம் வேளாண்மை தவிர்த்த பிற தொழில்களால் ஈர்க்கப்பட்டு நீர்நிலைகளுக்கு அடுத்த இடங்களுக்கு மக்கள் நகரத் தொடங்கினா். நெய்தல் நிலக் குடிகள் பெரிதாக நகர்வுக்கு ஆட்படாமல் அந்நிலத் திற்கு உரித்தான தொழில்களையே செய்து நிலவயப்பட்டோராக வாழ்ந்து வருகின்றனா். கடலால் நெய்தலோர் ஈர்க்கப்படக் காரணம் அதன் நீர்வளமும் அது கொண்ட பிற வளங்களும் ஆகும். கடலுக்குச் சென்று கடல் பொருட்களைக் கொண்டுவரும் மீனவர்கள் ஒரு புறம் இருந்துள்ளனா். கடல் நீரால் உப்பு தயாரிக்கும் உமணர்களும் அந்நிலத்தில் வசித்து வந்துள்ளனா். இவைபோக முத்து, கிழிஞ்சல்கள், சங்கு போன்றவற்றால் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் மக்களும் அவற்றை விற்பனை செய்யும் மக்களும் அந்நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனா். இவ்வாறு கடல் பலதரப்பட்ட மக்கள் வந்து பழகிய இடமாக இருந்துள்ளது. இன்று பொழுதுபோக்கு இடமாக இருக்கும் பல கடற்கரைகளை நாம் பார்க்கின்றோம். அன்றும் கடற்கரைகளில் காதல் வளர்த்த மக்கள் கடற்கரைகளில் இருந்துள்ளனா். இதனாலேயே அகம் சார்ந்த பல பாடல்களில் எரிதிரைக் கொண்கன், மல்குநீர் சேர்ப்பன், பனிநீர்ச் சேர்ப்பன் என்ற அடைகளால் பலவாராகக் காதல் தலைவர்கள் சுட்டப்பெறுகின்றனா்.
புலவர்களும் கடலும்
காதல், வணிகம் ஆகிய இரண்டுமே சங்கப் புலவர்களின் பொருண்மைக் கோட்டைகளான அகம், புறம் போல கடற்புறத்தில் பரவிக் கிடந்துள்ளன. நோக்கர்களான புலவர் பெருமக்களும் இக்காட்சிகளைக் கண்டுதெளிந்து நெய்தல் பாடல்களை வடித்துள்ளனா். அவர்களின் கட்புலனாக்கும் செயல்பாட்டிற்காகக் கடலைப் பல்வேறு முன்னொட்டுக்கள் (அடை) கொண்டு பாடியுள்ளனா்.
பொதுவாக வண்ணம், வடிவம், அளவு, மணம், உணர்வு முதலிய தன்மைகளால் கடலுக்குப் பல பெயர்கள் கிட்டுகின்றன.
வடசொல்லும் கடலும்
சங்கப் புலவர்கள் பலர் வடமொழியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், மாட்சிமை பெற்றவர்களாகவும் இருந்துள்ளனா். வடவர் வரவு என்பது பிற்காலத்தில் வந்தது என்று கூறிவருவது இங்கு ஆராயத்தக்கதாகும். புலவர்கள் தம் அறிவை விசாலப்படுத்த, புலமை அறிவைப் போதிக்க வடமொழியை அதாவது வடவர் தொடர்பு கொண்டிருக்கலாம். நற்றிணையில் மட்டும் கடலை பௌவம் என்ற வடசொல்லால் மூன்று இடங்களில் புலப்படுத்தியுள்ளனா். அப்பாடல்கள் நற்றிணை 74, 207, 245 ஆகும். இவற்றில் 207 ஆம் பாடலுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மற்ற இரு பாடல்களும் உலோச்சனார், அல்லங்கீரனார் ஆகியோரால் பாடப்பெற்றுள்ளது.
‘‘இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்’’ – நற்., 74 (2)
‘‘திரை எழு பௌவம் முன்னிய’’ – நற்., 207 (11)
‘‘துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி’’ – நற்., 245 (4)
என்றவாறு வடசொல் பதிவு கடலைக் குறிப்பதற்குப் பயன்பட்டுள்ளது. இச்சொல்லைப் பயன்படுத்தியதற்குக் காரணம் இது ஆசிரியப்பாவில் இயற்றும் பாடல் ஆதலாலும் , சீர் மற்றும் தளையினை பெரிதாகப் பாதிக்காது என்பதனாலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதுபோல சாகரம், சமுத்திரம் போன்ற சொற்களும் கடலைக் குறிக்கும் சொற்களாக வடமொழியில் உள்ளன. ஆனால் அவையெல்லாம் நற்றிணையில் பயன்படுத்தப்பெறவில்லை. முன்னரே சொன்னபடி சொற்செட்டுமானத்திற்கு இச்சொல் கச்சிதமாகப் பொருந்தி வருகின்றது.
நெய்தல் – பலர் பழகும் நிலம்
நெய்தல் நிலத்தில் மீன்களை வாங்கிச் செல்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்துள்ள செய்தியை,
‘‘கொழுமீன் கொள்பவர் பாக்கம் கல்லென,
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே’’
நற்றிணை., 207 ( 3 – 4)
என்ற அடிகளால் அறிந்து கொள்ளலாம். இதுபோக ஏனைய கடல் பொருள்கள் வாங்குவதற்கும் மக்கள் நெய்தல் நிலத்தை நாடியிருக்கலாம். இவர்களோடு புலவர்களும் அப்பகுதிகளுக்குப் பயணப்பட்டிருப்பர். இதனாலே நெய்தல் பாடல்கள் மொத்த சங்கப் பாடல்களில் பெரிய அளவினைப் பெற்றுள்ளன. மொத்தம் 344 பாடல்கள் நெய்தல் திணையைச் சார்ந்ததாக உள்ளன. மேற்கண்ட பாடல் பல செய்திகளைத் தருகின்றது. நெய்தல் நிலம் மக்கள் நடமாட்டம் மிகுந்த, பல்வேறு பழக்க வழக்கங்கள் உடைய மக்களைச் சந்திக்கவைத்த நிலமாக இருந்திருக்க வேண்டும். இவர்களில் காதலர்களும் அடங்குவர்.
நிறம் கொண்டு பெயர் பெறும் கடல்கள்
பொதுவாகக் கடல்கள் நீல நிறத்தில் காட்சி தரும். மாலை நேரம், மழைக் காலங்களில் கருநிறத்தில் காட்சி தருவதைக் கண்டிருப்போம். மேலும் நேரத்திற்கு நேரம் கடல் பல வண்ணங்களில் காட்சிதரும். அலைகளை மிகுதியாகச் சுமந்துவரும் கடலானது தூய வெள்ளை நிறத்தில் காட்சி தருவதைப் புலவர் பார்க்கிறார். மேலும் மாலை நேரத்தில் கடலானது நிலவின் ஒளியைக் கிரகித்து பால்போல் வெள்ளைநிறம் தரித்து காட்சிதருவதை வருணனை, உவமை உணர்வு பொங்க,
‘‘…… நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே’’
நற்றிணை., 348, (1 – 2)
என்றவாறு வெள்ளிவீதியார் பதிவு செய்துள்ளார்.
கடல் தெளிந்த நிலையில் காணப்படுவதைக் காணும் புலவர்கள் ‘‘தெண்கடல்’’ என்ற பெயரால் நற்றிணை 303, 356, 363 ஆகிய பாடல்களில் பதிவு செய்துள்ளனா். தெண் என்ற சொல்லிற்கு தெளிந்த என்று பொருள் 1. தெண்கடல் என்பதற்கு தெள்ளிய கடல் என்று பொருள்.
‘‘…… தெண்கடல்
வன்கைப் பரதவர் இட்ட செங்கோல்’’
நற்றிணை, 303 ( 4 – 5)
என்ற பாடலடிகளால் அறியலாம். மேலும் நற்றிணை பாடல் 245 ‘‘துணி நீர்’’ என்ற பெயரால் தெளிவான நிலையில் இருக்கும் கடலைக் குறிக்கின்றது.
‘‘துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி’’
நற்றிணை, 245 (4)
என்ற அடியினால் அறிந்து கொள்ளலாம்.
செயலால் கடல் பெறும் பெயர்கள்
கடல் ஓயாது அலையினைக் கொண்டு மோதுவது வாடிக்கை நிகழ்வாகும். அச்செயல்கொண்டு பல பெயர்களைக் கடல் பெறுகின்றது. நற்றிணையின் 235 ஆவது பாடல் உரவுத்திரை, பொங்கு திரை, 378 ஆவது பாடல் முழங்கு திரை, 347 ஆவது பாடல் முழங்கு கடல், 17 ஆவது பாடல் உரவு நீர், 335 ஆவது பாடல் பொங்குதிரைப் புணரி, 211 ஆவது பாடல் ஊர்கடல், 319 ஆவது பாடல் ஓதம் என்றவாறு பெயர்பெற்று நிற்கின்றன.
மணம் காரணமாகக் கடல்பெறும் பெயர்
கடலின் கரையில் மீன், ஆமை, நண்டு ஆகிய உயிர்களின் எச்சம் மற்றும் இருப்பு காரணமாக நாற்றம் வீசுகின்றது. அதுகொண்ட கடலைக் குறிக்க நற்றிணை 385 ஆவது பாடல்,
‘‘புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு
அலவனும் அளைவயிற் செறிந்தன ..’’
நற்றிணை 385, (2 – 3)
என்று கடலானது புலவு நீர் என்று சுட்டப்பெறுகின்றது.
அளவின் அடிப்படையில் கடல் பெறும் பெயர்கள்
கடலானது நீர்நிலை வகைகளில் ஆழமும் அகலமும் மிக்கதாகும். எனவே பல இடங்களில் அவற்றின் அடிப்படையில் பெயர்களைப் பெறுகின்றது. நற்றிணையின் 378 ஆவது பாடலில் ‘‘பரவை’’ என்ற பெயரால் கடல் குறிக்கப்பெறுகின்றது. இதனை வேர்ச்சொல் அடிப்படையில் பார்த்தால் பரந்துபட்டுக் கிடப்பது என்ற பொருளில் காணலாம். மேலும் பரவை என்ற சொல்லுக்குக் கடல் பரப்பு என்று அகராதி விளக்கம் தருகின்றது. 2 நற்றிணை 303 ஆவது பாடல் ‘‘நெடுநீர்’’ என்று கடலைச் சுட்டுகின்றது. இது நீளத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பெயராகும். பாடல் எண் 74, 331 ஆகியன ‘‘வளைநீர்’’ என்ற பெயரில் கடல்கைளச் சுட்டுகின்றன. இப்பெயருக்கு நிலப்பரப்பை எல்லாம் சூழ்ந்திருக்கக் கூடிய நீர்ப்பரப்பு என்று பொருள் உணரலாம்.
குளிர்மையால் பெறும் பெயர்கள்
கடலானது குளிந்து கிடப்பதைக் கண்ட புலவர் பெருமக்கள் நற்றிணை 291 ஆவது பாடலில் தண்கடல் என்றும், 287 இல் பனிநீர் என்றும் பதிவு செய்கின்றனா்.
மேலும் அவை கொண்டுள்ள அதிகப்படியான நீரினைக் கருத்தில் கொண்டு மலிநீர், மல்கு நீர், நளிகடல் என்ற பதங்களால் கடல்கள் குறிக்கப்பெறுகின்றன. நளி என்ற சொல்லிற்குத் தொல்காப்பிய உரியியல்,
‘‘தடவும் கயவும் நளியும் பெருமை ’’ 3
‘‘நளி என் கிளவி செறிவும் ஆகும் ’’ 4
என்ற இரு நூற்பாக்களில் நளி என்னும் சொல்லின் பொருள்களை உணர்த்துகின்றது.
முடிவுரை
கடல் பெயர்களுக்கெல்லாம் உள்ளிருக்கும் சூட்சமம் யாதெனில் அளக்கமுடியாத கடல்களை ஆசிரியப்பா வரம்பினுள் சீர் மற்றும் தளை வரம்பினுள் கொண்டுவந்து, அவற்றின் தன்மைகளை முன்னிறுத்தி புலவர் பெருமக்கள் பெயர்களை இட்டுள்ளனா். இதன்வாயிலாக உற்றுநோக்கல், புலமைத் திறம் கடற்பெயர்களுக்குக் காரணமாவதை இக்கட்டுரையின் வழி அறியமுடிகின்றது.
சான்றெண்விளக்கம்
https://ta.wiktionary.org/
https://ta.wiktionary.org/
தொல்காப்பியம், நூற்பா. 805
தொல்காப்பியம், நூற்பா, 808
துணைநூற்பட்டியல்
நற்றிணை மூலமும் உரையும், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (உ.ஆ.,), கழக வெளியீடு, சென்னை – 1, 1952
தமிழ்க் காதல், வ.சுப. மாணிக்கம், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 1
தமிழர் சால்பு, சு.வித்யானந்தன், தமிழ்மன்றம், கல்ஹின்னை, கண்டி, இலங்கை, 1954
தொல்காப்பியம், ச.வே.சுப்பிரமணியன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108
* - ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.