முப்பால், உத்தரவேதம், தமிழ்மறை, உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, என்னும் சிறப்பினைப்பெற்ற அரியநூல் திருக்குறள். இந்தக் குறள் வெண்பாவைவிடச் சிறந்த நூல்கள் இருந்தாலும் அந்த நூல்கள் இனம், மதம், மொழி, குலம், நாடு என்கின்ற கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கின்றது. இந்த முப்பால் மட்டும் எந்தப் பிரிவினைக்குள்ளும் சிக்காமல், எந்தக் காலத்திற்கும் பொருந்துவதான பொதுமைக் கருத்தினைச் சுமந்து நிற்கின்றது. குறளில் கூறப்பாடாத செய்திகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்துக் கருத்துக்களும் பொதிந்து கிடக்கின்றன. இவ்வாறான பல சிறப்புக்களை உள்ளடக்கிய திருக்குறளிலுள்ள அறத்துப்பாலில் (பாயிரவில், இல்லறவியல், துறவறவியல்) நீதிக்கருத்துக்களைக் குறித்து ஆய்வதாக இந்தக் கட்டுரை அமைகின்றது.
திருக்குறள் நூல் அறிமுகம்
திருக்குறள் என்னும் நூலின் ஆசிரியர் திருவள்ளுவர். திருவள்ளுவரின் இயற்பெயர் தெரியவில்லை. திரு-என்னும் மரியாதைக்குரிய சொல்லையும், வள்ளுவர் – என்னும் குலப்பெயரையும் சேர்த்து திரு+வள்ளுவர் = திருவள்ளுவர் என்று பெயர் வந்துள்ளது. இவரது காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டாகும். திருக்குறளில் அறத்துப்பாலில் முப்பத்தெட்டு அதிகாரங்களும், பொருட்பாலில் ஏழுபது அதிகாரங்களும், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பாலில் இருபத்தைந்து அதிகாரங்களுமாக மொத்தம் நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்கள் காணப்படுகின்றன. அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் 133x10=1330 குறட்பாக்கள் உள்ளன. ச. சுபாஷ் சந்திரபோஸ் தமிழ் இலக்கிய வரலாற்றில் மொத்தம் பதிமூன்று இயல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், திருக்குறள் பரிமேலழகர் உரையில் ஒன்பது இயல்கள் காணப்படுகின்றன. க.ப.அறவாணன் எழுதிய திருக்குறள் சிறப்புரை விளக்கம் கருத்து அடைவு என்னும் நூலில் பத்து இயல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு இயல்பகுப்பில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறள் வெண்பாவாலான இந்தத் திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்டமைந்துள்ளது.
திருக்குறளின் பெருமை
திருக்குறளின் பெருமையினைத் ‘திருவள்ளுவமாலை’ என்னும் நுலில் ஐம்பத்தேழு புலவர்கள் பாராட்டியுள்ளனர். திருக்குறளின் பெருமை குறித்து ஔவையார் கீழ்க்காணுமாறு எடுத்துரைக்கின்றார். அவை,
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுக்கத் தறித்த குறள்”1
என்பதாகும்.
நல்லொழுக்க விழுமியம்
சங்ககாலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில பழக்கவழக்கங்களைத் திருவள்ளுவள் ஒதுக்குகின்றார். மேலும், அறன் வலியுறுத்தல், அன்புடைமை, விருந்து ஓம்புதல், இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், நடுவுநிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறன்இல் விழையாமை, பொறை உடைமை, புறங் கூறாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், கள்ளாமை, வெகுளாமை, இன்னா செய்யாமை இதுபோன்ற அதிகாரங்களில் சமுதாயத்திற்குத் தேவையான அறக்கருத்துக்களைத் திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
அறத்திற்கான விளக்கம்
அறமெனப்படுவது பொறாமை, பேராசை கொடுங்கோபம், பிறரைப் புண்படுத்தும் சொல் இந்நான்கும் இல்லாதிருப்பதாகும். இதனை,
“அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.” 2
என்னும் இக்குறளில் காணமுடிகின்றது. இதேபோன்று,
“முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம்.” 3
முகத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு, மனதிலிருந்து இனிய சொற்களைச் சொல்லுவது அறம் எனப்படுகிறது.
விருந்தளிக்கும் அறம்
தனக்கு முன்பின் அறியாதவர், உற்றார் உறவினர் அல்லாதவர் பசியால் தம் இல்லம் நோக்கி வருபவர்க்கு விருந்து படைப்பது அறமான செயலாகும். இதனை,
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.” 4
என்னும் இந்தக் குறளின் வழி அறியமுடிகின்றது. மேலும், இக்குறளில் வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு விருந்து படைத்து அனுப்பி வைத்துவிட்டு, இன்னும் விருந்தினரை எதிர்பார்த்திருக்கின்ற விருந்தோம்பும் அறச்செயலை இக்குறளில் காணமுடிகின்றது.
செய்த நன்றியை மறவாமல் இருத்தல்.
ஒருவர் தமக்குச் செய்த நன்றியை மறத்தல் கூடாது. அதிலும் நாம் பிறருக்குச் உதவி செய்யாமலிருந்தும், இன்னொருவர் நமக்குச் செய்த உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்கக்கூடாது. தக்க சமயத்தில் பிறர் செய்யத நன்றியையும் மறத்தல் நல்ல பண்பில்லை. நல்ல நண்பராக இருந்து, துன்பம் வந்தபோது அத்துன்பத்தை நீக்குபவரின் நட்பினை ஏழு ஏழு தலைமுறையானாலும் மறக்கக்கூடாது. இந்த உண்மைகளைக் கீழ்க்காணும் குறட்பாக்கள் எடுத்துரைக்கின்றன. இதனை,
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.” 5
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.” 6
“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.” 7
“செய்யாமல் செய்யத உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.” 8
என்னும் குறட்பாக்களின் வாயிலாக நன்றி மறத்தல் நல்ல பண்பில்லை என்னும் அறக்கருத்தினை வள்ளுவர் வலியுத்துகின்றார்.
அறிவர்களும் நடுவு நிலையும்
ஒருபக்கமாகச் சாராமல் நடுவுநிலைமையில் இருப்பது என்பது சான்றோருகு்கு அழகாகும். இதனை,
“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோருக்கு அணி.” 9
என்னும் குறள் சுட்டுகின்றது. அனைவரும் நடுவுநிலையில் நிற்கிகவேண்டும் என்ற அறக்கருத்தினை இக்குறள் எடுத்துரைக்கின்றது.
ஒழுக்கமும் உயர்வும்
ஒருவர் ஒழுக்கமாக இருந்தால் அது அவருக்கு உயர்வைத்தரும். உயர்வைவிட மேன்மைவுடையவராகவும் போற்றப்படுவார். இதனை,
“ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.” 10
என்னும் குறள் புலப்படுத்துகின்றது.
பிறன்மனை நயவாமை
பிறரின் மனைவியை ஒருவன் அடைய விரும்புதலும், மனத்தால் நினைத்தலும் கூடாது. அப்படிச்செய்தால் அவனுக்கு பழி ஏற்படும். இதனை,
“பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாஆம் இல்இறப்பான் காண்.” 11
மேலும், நண்பனின் மனைவியை அடைய விரும்புபவன் உயிருடன் இருந்தாலும் செயத்தவனாகவே கருதப்படுவான் என்பதை,
“விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்து ஒழுகுவார்.” 12
என்னும் குறள் எடுத்துரைக்கின்றது. ஆகையால் பிறரின் மனைவியையும், நண்பர்களின் மனைவிமார்களையும் அடைவதற்கு நினைக்கக்கூடாது என்ற அறத்தினை வள்ளுவர் வலியுறுத்துகின்றார். இதுமாதிரியான அறங்களைக் கடைப்பிடிப்பதால் சமுதாயத்தில் ஏற்படுகின்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்களை முற்றிலும் தடுக்கமுடியும்.
சிறந்த நீதி
ஒருவர் தமக்குத் துன்பங்களையும் தீமைகளையும் செய்தாலும், தண்டித்தாலும், வசைமொழி பாடினாலும் பொறுத்துப்போகவேண்டும். இதுவே, சிறந்த அறம் என்று வள்ளுவர் கூறுகின்றார். இதனை,
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.” 13
“ஒருத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.” 14
“ஒறுத்தார்க்கு ஒருநாளே இன்பம் பொறுத்தார்க்கும்
பொன்னும் துணையும் புகழ்.” 15
என்னும் குறட்பாக்கள் எடுத்துரைக்கின்றன. இதன்மூலம் ‘பொறுமை கடலினும் பெரிது’ என்னும் பழிமொழி கூறுகின்ற அறம் நினைவுபடுத்தப்படுகிறது.
புலால் உண்ணுதல் புண் உண்ணுதலுக்குச் சமம்
ஓர் உயிரைக் கொல்லுதலும் பாவம், கொலை செய்யப்பட்ட அவ்வுயிரின் ஊனைத் திண்பதும் பாவம். மேலும், புலால் உண்ணுதல் என்பது புண்ணை உண்பதற்குச் சமம் என்கிறன்றார் திருவள்ளுவர். இதனை,
“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.” 16
என்னும் குறள் விளக்குகின்றது. இக்குறளின் வாயிலாகக் கொலை செய்யாதவனையும் புலால் உண்ணதவனையும் உலக உயிர்கள் கைகூப்பி வணங்கும் என்ற உண்மையினை,
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.” 17
என்னும் குறள்வழி அறியமுடிகின்றது.
தலையாய அறம்
அறங்களில் தலைமையான ‘அறம்’ எது என்றால், தான் உண்ணுவதற்காக வைத்திருக்கின்ற பொருளை, உணவைப் பசியாக இருக்கின்ற உயிரினங்களுக்குக் கொடுத்துப் பசியாறச் செய்தலேயாகும். இதனை,
“பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.” 18
என்னும் குறள் கூறுகின்றது. மேலும், தலைமையான அறங்களில் சிறந்த அறம் என்பது பிற உயிர்களைக் கொலைசெய்யாதிருத்தல் என்பதை,
“அறவினை யாதுஎனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.” 19
இக்குறள் எடுத்துரைக்கின்றது. இக்குறளில், கொலைசெய்தலாகாது என்னும் அறம் கூறப்படுகின்றது.
தேவர் உலகம் கிடைக்கச் செய்ய வேண்டுவன
பொய், களவு செய்யாமல் இருந்தால் ஒருவரை உலகம் மதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், களவை மனத்தாலும் நினைத்துப் பார்க்காதவருக்குத் தேவர் உலகம் கிடைக்கும் என்கிறது திருக்குறள். இச்செய்தியை,
“கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.” 20
என்னும் குறளில் காணமுடிகின்றது.
பாவச்செயல்
பிறருடைய பொருளைத் திருடினாலும் பாவம், திருடுவதற்கு மனத்தால் நினைத்தாலும் பாவம் ஏற்படும் என்பதை,
“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்!.” 21
இக்குறள் எடுத்துரைக்கின்றது.
நூல் அறிமுகச் செய்திகள், திருக்குறளின் சிறப்புக்கள், சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்கள், அறத்தின் இலக்கணம், விருந்தோம்புதால் ஏற்படும் அறம், செய்நன்றி மறக்காமை, சான்றோருக்கு அழகு நடுவுநிலமை, ஒழுக்கத்தினால் விளையும் சிறப்புக்களும் பயன்களும், பிறரின் மனைவியை அடைய நினைத்தல், நண்பரின் மனைவியை அடைய நினைத்தலால் ஏற்படும் விளைவுகள், பொறுமையே சிறந்த அறமாதல், புலால் உண்ணுதல் புண் உண்ணுதலுக்குச் சமமாதல், அறங்களில் தலைமையான அறங்கள், களவு செய்யாதிருத்தலின் பயன், களவு செய்தாலும் களவு செய்ய நினைத்தாலும் பாவம் ஏற்படும் என்னும் அறக்கருத்துக்களை இக்கட்டுரைத் தாங்கி நிற்கின்றது. இக்கட்டுரையில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ள குறட்பாக்கள் சிறந்த அறக்கருத்தினை எடுத்துரைக்கின்றது என்பதில் ஐயமில்லை. மேலும், இக்கட்டுரையின் வாயிலாக அறத்தினைப் பெறவேண்டும் என்றால் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்புக்கள்
1. ச.சுபாஷ் சந்திரபோஸ் தமிழ் இலக்கிய வரலாறு.பக்.60.
2. அறவாணன்.க.ப., திருக்குறள் மூலமும் உரையும், குறள்.35.
3. மேலது., குறள்.98.
4. மேலது., குறள்.86.
5. மேலது., குறள்.108.
6. மேலது., குறள்.110.
7. மேலது., குறள்.102.
8. மேலது., குறள்.101.
9. மேலது., குறள்.118.
10. மேலது., குறள்.131.
11. மேலது., குறள்.146.
12. மேலது., குறள்.143.
13. மேலது., குறள்.151.
14. மேலது., குறள்.155.
15. மேலது., குறள்.156.
16. மேலது., குறள்.257.
17. மேலது., குறள்.260.
18. மேலது., குறள்.322.
19. மேலது., குறள்.321.
20. மேலது., குறள்.290.
21. மேலது., குறள்.282.
துணைநூற் பட்டியல்:
1. அறவாணன்.க.ப., திருக்குறள் மூலமும் உரையும்.
2. சண்முகம் பிள்ளை, மு.திருக்குறள் ஆராய்ச்சி:6,அகப்பொருள் மரபும் திருக்குறளும்,சென்னைப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு: 1980.
3. சுபாஷ் சந்திரபோஸ், ச.தமிழ் இலக்கிய வரலாறு, பாவை பதிப்பகம்.
4. பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, சென்னை – 600 014. ஆறாம் பதிப்பு: 2002.
5. மோகனராசு, கு. திருக்குறளில் மரபுகள்,தமிழ் இலக்கியத் துறை,சென்னைப் பல்கலைக்கழகம், முதற் பதிப்பு:1981.
* கட்டுரையாளர்: - முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் – 626 126. -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.