- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -மொழியும் பண்பாடும் இரண்டறக் கலந்தவை. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற தொல்காப்பியரின் கூற்றிற்கு மேலும் வலுவூட்டுகின்றது மொழியோடு கூடிய பண்பாடு. யுனெஸ்கோவின் மலைகள் கூட்டமைப்புச் சங்கத்தின் உலக பூர்வீகக் குடிகள் பட்டியலில் இணைக்கப்பட்ட நீலகிரி படகரின மக்களின் வாழ்வியலில் எண்ணற்ற தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் விரவிக்கிடக்கின்றன. தனித்திராவிட மொழியாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட படர்களின் மொழியான “படகு” மொழியிலுள்ள பெரும்பான்மையான சொற்கள் இயற்கையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அவர்தம் மொழியியற்கூறும் அவர்களின் தொன்மைக்குச் சிறந்த சான்றுகளாகும்.

இயற்கையின் அரிய கொடையாகவும், மனித சமூகத்தின் அரிய கண்டுப்பிடிப்பாகவும் நெருப்பு விளங்குகின்றது. நெருப்பினை ஒருவகையில் மனிதனின் ஆதிக் கண்டுப்பிடிப்பு என்றும் துணியலாம்.

படகர்கள் ஆதியிலிருந்து நெருப்பினை இரண்டு வகைகளில் உருவாக்குகின்றனர். தீக்கடைக்கோலான ஞெலிகோலினைக் கொண்டு கடைந்தும், சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு உரசியும் நெருப்பினை உருவாக்குகின்றனர். ஞெலிகோலினைப் படகர்கள் அதே, சங்கச் சொல்மாறாமல் “நெலிகோலு” என்றே அழைக்கின்றனர். பெரும்பாலும் தவட்டை மரத்தினால் (litsoea Wightiana) ஆனதாக நெலிகோலு அமைந்திருக்கும். சிக்கிமுக்கிக் கல்லினைப் “பிங்கசக்கல்லு” என்று அழைக்கின்றனர்.

நெலிகோலு –
நெருப்பினை உண்டாக்க படகர்கள் பயன்படுத்திய கோலான நெலிகோலின் வழக்கு, சங்கம் தொட்டு வழங்கிவருவதை நாம் கண்டோம். அதிலும் இடையர்களோடு நெருங்கிய தொடர்புடையதாக இந்தக்கோல் விளங்கியது.

செல்கின்ற இடத்தில் நெருப்பினை உருவாக்க ஞெலிகோலினைக் கொண்டுச் சென்றதையும், அதை மழையில் நனையாது காக்க தோற்பையில் இட்டு பாதுகாத்து வைத்ததையும் “ஞெலிகோல் கலப்பை அதளடு சுருக்கி” (நற்றிணை 142) என்ற வரிகள் விளக்குகின்றது. அதேபோன்று குளிர்மிகுந்த, இருள் மயங்கும் மாலை நேரத்தில் சிறிய தீக்கடைக் கோலினால் கடைந்து இடையனொருவன் தீ உண்டாக்குவதை “புல்லென் மாலை சிறு தீ ஞெலியும் கல்லா இடையன் போல” (புறம் 331) என்ற வரிகளும், மாடு மேய்க்கின்ற இடையன் கையால் முயன்று தீக்கடைக்கோலின் தீ மூட்டி, அந்தத் தீயின் உதவியால் காட்டு மூங்கில் துண்டில் துளையிட்டு புல்லாங்குழல் செய்து, அதில் பாலைப்பண்பாடி மேயும் மாடுகளை மகிழ்வித்ததை “ஒன்று அமர் உடுக்கை, கூழ் ஆர் இடையன் கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி, அம்நுண் அவிர் புகை கமழ, கைம் முயன்று ஞெலிகோல் கொண்ட பெருவிறல் ஞெகிழிச் செந் தீத் தோட்ட கருந்துளைக் குழலின் இன் தீம் பாலை” (பெரும்.பா 175) என்ற வரிகளும், வெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலினையுடைய இடையர்கள் ஏற்றையுடைய நிரைகளை வேறு நிலங்களில் மேயவிட்டு, நிலத்தைவிட்டு நீங்கிய தனிமையால் கலங்கி, நீண்ட இதழ்களையுடைய வெண்காந்தள் மலர்க் கண்ணிகளிலிருந்து நீர் அலைத்ததால் உடம்பில் கொண்ட பெரும் குளிர்ச்சிக்கு வருந்தி, பலருடன் சேர்ந்த கையை நெருப்பிலே காய்ச்சியவர்கள் தங்கள் கையால், தங்களுடைய கன்னத்தைத் தட்டி நடுங்கியதை “கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க” (நெடுநல்வாடை 8) என்ற வரியும், பழங்குடிகள் உப்புக் கண்டம் போட்டு வைத்ததை நெருப்பில் சுட்டு உமணர்களுக்கு அளித்ததை “ஒழிந்ததை ஞெலிகோற் சிறுதீ மாட்டி” (அகம் 169) என்ற வரிகளும் விளக்குகின்றன. மேலும் தீயினை “ஞெகிழி” என்ற வழக்கில் அழைத்ததை பெரும்பாணாற்றுபடையின் 177 ஆம் வரியும், குறிஞ்சிப்பாட்டின் 225 ஆம் வரியும் விளக்குகின்றன. இதில் “கானவர் விண்தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த” என்று குறிஞ்சிப்பாட்டின் வரிகள் பரண்மேல் தீக்கடைக்கோலினைக் கொண்டு நெருப்பினை உண்டாக்கியதை விளக்குகின்றது. அதேநிலையில் “ஞெலி” என்பதும் தீயினைக் குறிக்கிறது.

1. நெலிகோலினைக் கொண்டு படகர்கள் நெருப்பினைக் கடைதல்

-  நெலிகோலினைக் கொண்டு படகர்கள் நெருப்பினைக் கடைதல் -

மேற்கண்ட ஞெலிகோலினைக் குறிக்கும் சங்கவரிகளின் நிலவும்சூழல் ஆயர்களாக விளங்கும் படகர்களின் வாழ்வியலோடு பொருந்தி நிற்பது குறிப்பிடத்தக்கது. படகர்களின் வாழ்வியல் வேட்டை, ஆநிரை மேய்த்தல் மற்றும் வேளாண்மைச் சமூகம் என்ற மூன்று பரிமாணங்களை உட்செறித்தது. அதற்கான சான்றுகளாக அவர்களின் சமூகம் சார்ந்த மற்றும் சில வாழ்க்கை வட்டச் சடங்குகள் விளங்குகின்றன.

எருமை மந்தை பேணலையும், வேளாண்மையினையும் தங்கள் தன்னிறைவு வாழ்வியலாகக் கட்டமைத்து படகர்கள் வாழ்ந்து வருபவர்கள். இதற்கு சான்றாக அவர்தம் சமூகம்சார்ந்த சடங்குகள் அனைத்தும் கால்நடை மற்றும் வேளாண்மை சார்ந்தவையாக விளங்குவதைக் காணலாம். அதிலும் கால்நடைத் தொடர்பான அவர்களின் சடங்குகள் தொன்மை மிக்கவையாக விளங்குகின்றன.

படர்களின் வழக்காறுகளிலும், குறிப்பாக முதுமொழிகளில் வேளாண்மையைக் குறிக்கும் வழக்காறுகளைக் காட்டிலும் எருமைகள் குறித்தவையே மிகையாகும். படகர்கள் எருமையைக் குறிக்கப் பயன்படுத்தும் சொற்களும் சங்க சொற்களோடு பொருந்தி நிற்கின்றன. பெண் எருமையை படர்கள் “நாகு” என்று அழைக்கின்றனர். “எருமையும் மரையும் பெற்றமும் நாகே” என்கிறது தொல்காப்பியத்தின் 607 ஆவது நூற்பா.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வழக்கிலிருந்த சொல்லினை இன்றளவும் படகர்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். தன் குலதெய்வக் கோயிலிற்கு நேர்த்திக்கடனாக படகர்கள் இன்றும் இந்த நாகு எருமையை நேர்ந்துவிடும் வழக்கினைக் கொண்டுள்ளனர். அதே நிலையில் ஆண் எருமையினைப் படகர்கள் “கோணா” என்றழைக்கின்றனர். அதாவது கோ + ஆ ‘கோ’ என்பது ‘நிரை’ அதில் ‘ஆ’ என்பது ஆண் அதாவது ஆண்நிரை என்று வழங்கப்படுகின்ற வழக்கும் சங்கச் சொற்களோடு ஒப்புநோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

“கோண நீருக பாகிரவா? நீரு கோணக பாகிரவா?” (கோண – ஆண் எருமை, நீருக – நீரிற்கு, பாகிரவா – குனியுமா?, நீரு – நீர், கோணாக – ஆண் எருமைக்கு, பாகிரவா – குனியுமா?) என்ற படகர்களின் முதுமொழி வழக்கொன்று தனித்துவமானதாகும். எந்த நிலையிலும் எருமை நீரிற்கு குனிந்து அருந்த வேண்டுமே தவிர, ஒருபோது நீர் எருமைக்கு குனியாது என்று பொருள்படுகின்றது இந்த முதுமொழி. அதிலும் ஆண் எருமையானாலும் இதுதான் இயற்கை என்று இந்த முதுச்சொல் வலியுறுத்துகின்ற நிலையானது, எருமை மந்தையினை வழிநடத்திச் செல்லும் ஆண் எருமை பெறுகின்ற இடத்தினையும் சுட்டிக்காட்டுகின்றது.

“காடு எம்மெ”, “பள்ளெம்மெ”, “பெள்ளோடெம்மெ”, “பூ எம்மெ” என்ற பல்வேறு வகையான எருமைகள் பற்றிய வழக்காறுகள் படர்களிடையே காணப்படுகின்றது. இது அவர்களின் ஆநிரை வாழ்வின் தொன்மையினைப் பறைசாற்றுகின்றது. எருமையை “எம்மெ” என்றும், எருமை மந்தையினை “பண்டா” என்றும் படகர்கள் பொதுநிலையில் அழைக்கின்றனர்.

படகர்கள் ஆநிரைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதற்கு இரண்டு நிலைகளை கையாளுகின்றனர். நன்கு பழக்கமான இடமானால் எருமைகளை மட்டும் மேய்ச்சலுக்கு ஓட்டிவிடுவார்கள். அவை மேய்ச்சல் முடிந்ததும் மாலையில் தன் “தோவிற்கு” (எருமைப் பட்டியினைப் படகர்கள் “தோ” என்றழைக்கின்றனர். இது வட்டவடிவில் எழுப்பப்பட்ட ஐந்து அல்லது ஆறு அடியுள்ள கற்சுவர் அமைப்பாகும்) திரும்பிவிடும். சற்று தொலைவிற்கு அழைத்து செல்வதாக இருந்தால் எருமைகளை ஓட்டிகொண்டு அவர்களும் செல்வதுண்டு. அவ்வாறு செல்லும்போது “சீலெ” எனும் மேற்போர்வையினுள், பொருட்களை வைப்பதற்காக அவர்கள் உருவாக்கும் “கோட்டெ” பகுதியில் நெலிகோலினையும் இட்டு எடுத்து செல்வார்கள். நற்றிணையின் 142 ஆவது பாடலின் சூழலோடு படகர்களின் இந்த வழக்கு பொருந்தி நிற்பதைக் காணலாம்.

படகர்களிடையே பாலினையோ, பால்சார்ந்த பொருட்களையோ விற்கின்ற வழக்கம் பண்டையில் இல்லை. அதே நிலையில் கறக்கின்ற பாலினைக் காய்ச்சும் வழக்கமும் இல்லை. மேலும் நீலகிரி மக்கள் தேநீருக்குப் பழகிய காலனிய ஆட்சிக்காலம்தொட்டு படகர்கள் தாம் தயாரிக்கும் தேநீரில் பாலினைக் கலப்பதில்லை. அதை பாலிற்கான புனிதக் குறைவாகவும், தம் முன்னோர்களின் மரபினை பேணுகின்ற நிலையாகவும் இதை கருதுகின்றனர்.

தன் வாழ்வியல் தேவைக்காக மட்டுமே எருமை மந்தைகளைப் பேணுகின்ற படகர்களின் இயற்கை நோக்கிய வாழ்வியலை இந்த வழக்காறுகள் சான்று பகர்கின்றன. அதே நிலையில் தன்னோடு வாழ்கின்ற அண்டை சமூகங்களான ஊருவிகள், கசவர்கள், குறும்பர்கள், கோத்தர்கள், தொதவர்கள் போன்றோர்களுக்கும் பண்டமாற்றாக தாம் விளைவித்த வோளாண் பொருட்களை வழங்குவார்களேயன்றி பால்படு பொருட்களை படகர்கள் அளிப்பதில்லை.

 புகரி இசைக்கருவியினைக் கொண்டு படகர்கள் இசைத்தல்

-  புகரி இசைக்கருவியினைக் கொண்டு படகர்கள் இசைத்தல் -

படகர்களின் இறுதி மாதமான “ஹெம்மாட்டி” மாதத்தோடு நெடுநல்வாடையின் 8 ஆம் வரியின் சூழலமைவு பொருந்தி நிற்கின்றது. கடும் பனிபொழிவுக் காலமான இந்த மாதமானது மந்தை பராமரிப்பு அடிப்படையில் பெயர்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ஹெம்மெ’ – எருமை, ‘ஓட்டி’ – ஓட்டிச்செல்வது என்று பொருள்தரும் இந்த மாதத்தில் கடும்பனி மற்றும் மழையிலிருந்து எருமை மந்தைகளைப் பாதுகாக்க, கடல்மட்டத்திலிருந்து நீலகிரியைவிட உயரம் குறைந்த, வெப்பமிகுந்த பகுதியான “கொடலூரிற்கு” (கூடலூர், கொட – பள்ளம்) மந்தைகளை ஓட்டிச் செல்வார்கள். சென்று இந்தச் செயல்பாட்டிற்கென்று மரபார்ந்து அமைக்கப்பட்டிருக்கும் “ஹெம்மட்டிகளில்” (ஹெம்மெ – எருமை, ஹட்டி – ஊர் அதவாது எருமைகளுக்கான ஊர்) எருமைகளைச் சேர்த்து, தம் ஊர்களில் இயல்பான சூழல் திரும்பியதும் மந்தைகளோடு ஊரினை அடைகின்றனர்.

“ஹெம்மாட்டியோ ஹெம்மெய ஹொருவ ஜடி” (ஹெம்மாட்டியோ – ஹெம்மாட்டி மாதத்தில், ஹெம்மெய – எருமையை, ஹொருவ – அடித்துச் செல்லும், ஜடி – அடைமழை) என்ற படகர்களின் முதுமொழி ஹெம்மாட்டி மாதத்தின் மழையின் தீவிரத்தை குறிக்கின்றது. ஹெம்மட்டியை அடையும்வரை சந்திக்கும் அடைமழையினை சமாளிப்பது என்பது பெரும் சவாலானது. இந்நிலையில் இடையில் அடைமழையில் அகப்படும்போது நனையாமல் பாதுகாத்த நெலிகோலு மற்றும் உலர்ந்த “பாம்பெ உல்லு” எனும் ஒருவகைப் புல்லினைக் கொண்டு நெருப்பினை உருவாக்கி குளிரினைப் போக்கியிருக்கின்றனர்.

எளிதில் தீப்பற்றும் தன்மையுடைய இந்த பாம்பெ உல்லு எனும் புல்லின் காய்ந்த வேர்ப்பகுதியைத் தீப்பந்தமாகவும் பயன்படுத்துகின்றனர். இதன் வேர் சற்றுநேரம் நின்று எரியும் தன்மைக்கொண்டது. இந்த ஹெம்மாட்டிப் பயணம் படர்களுக்கான மரபுப் பயணமாகும். படகர்களின் ஆநிரை வாழ்வின் தொன்மைக்குச் சான்றுபகரும் கூறுகளுள் இந்தக் கூறு இன்றியமையானதாகும். படக ஆண்கள் மட்டும் மேற்கொள்ளும் ஹெம்மாட்டிப் பயணத்தில் அவர்கள் கொண்டுச் செல்கின்ற பொருட்களுள் தவிர்க்கவியலாததாக நெலிகோலும், “புகிரி” எனும் இசைக்கருவியும் திகழ்கின்றன.

மூங்கினைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற படகர்களின் மரபார்ந்த “புகிரி” எனும் இசைக்கருவி மந்தையை வழிநடத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. சடங்கு நிலையிலும், அன்றாட வாழ்வியல் நிலையிலும் பயன்படுத்தக்கூடிய இன்றியமையான கருவியாகவும் இது திகழ்கின்றது. பொதுவாக நீலகிரியில் வாழ்கின்ற ஊருவியரு, கசவர் மக்கள் இக்கருவியினைப் படகர்களுக்கு அளித்து பண்டமாற்றாக தானியங்களைப் பெற்றுச் செல்வர். ஆனால் தன் சடங்கார்ந்து இக்கருவியினை நெலிகோலினைக் கொண்டு உருவாக்கிய நெருப்பினில், பாங்கான மூங்கிலினை எடுத்து, குடைந்து, துளையிட்டு படகர்களே உருவாக்குகின்றனர். இந்தச் செயல்பாட்டிற்கென்று மூங்கில் கொண்டுவர மலைக்கும், வனத்திற்கும் செல்வதை தனி சங்காகவே படகர்கள் நிகழ்த்துகின்றனர். இந்தச் சடங்கினை “பெத்துக ஓப்பது” (பெத்து - மூங்கில், ஓப்பது – எடுக்க செல்வது) என்று அழைக்கின்றனர். மூங்கிலினை “பிதிலு” என்றும், “பெத்து” என்றும் படகர்கள் அழைக்கின்றனர்.

படகர்கள் ஹெம்மாட்டிப் பயணத்தின்போது மந்தைக்கூட்டத்திற்கு முன்னோ, பின்னோ புகிரியினை இசைத்துக் கொண்டு செல்கின்றனர். நீண்ட பயணம் மேற்கொள்ளும் எருமை மந்தைகளை தம் குலதெய்வம் காக்கட்டும் என்றும், அப்பயணத்தின் இனிமைக் கூட்டுவதற்கென்றும், களைப்பினைப் போக்குவதற்கென்றும் இக்கருவியினை இசைக்கின்றனர். அதேநிலையில் ஓய்வெடுக்கின்ற இடங்களிலும் புகரியை இசைத்து களிக்கின்றனர்.

வாயில் காற்றினை அடைத்துவைத்து இக்கருவியை இசைப்பது அவ்வளவு எளிதான செயலல்ல. அதற்கு காற்றினைக் கட்டுப்படுத்தும் பெரும் திண்மையும், பயிற்சியும் வேண்டும். இது குழல்வகையிலான கருவியாக இருந்தாலும் இதன் பெயர்பெறும் முறையானது குழலிலிருந்து வேறுபடுகின்றது. இதிலிருந்து எழும் பூ…. பூ….. எனும் ஒருவகையான இசையினால் இக்கருவி பெயர் பெறுகின்றது.

படகர்களிடையே உள்ள எருமைகள் குறித்த “பூ எம்மெ” எனும் வழக்காறு படகர்களின் எருமை மந்தைகளிலிருந்து பிரிந்து சென்று காட்டு எருமைகளாக மாறி வாழ்கின்ற எருமைகளைக் குறிக்கின்றது. ஒருவேளை புகரியின் இசையால் பழக்கப்படுத்தப்பட்ட, புகரியின் இசைக்குப் பழக்கப்பட்ட எருமைகளாகக் கருதி அவைகட்கு இப்பெயர் இடப்பட்டிருக்கலாம்.

எருமை மந்தையோடோ, மேய்ச்சல் நிலத்திலோ இசைக்கப்படும் புகரி எனும் கருவியை இசைப்பதை படகர்கள் “புகரி இடப்பது” என்று அழைக்கின்றனர். அதாவது ‘இடி’ என்பதற்கு ‘பிடி’ என்று பொருள். காற்றைப்பிடித்து இக்கருவியின்வழி வெளியேற்றி இசையாக்கு என்பது இதன் விரிபொருளாகும். படர்களின் இந்தச் சூழல் பெரும்பாணாற்றுப்படையின் 175 – 179 வரிகளோடு பொருந்தி நிற்பதை காணலாம். இந்தப் புகரி இசையெழுந்தகணம் தம் குலதெய்வம் வந்துவிடுவதாக படகர்கள் நம்புகின்றனர். தம் குலதெய்வம் சார்ந்த நிகழ்வுகளில் இந்த இசையைக்கொண்டு தம் தெய்வத்தினை அழைப்பது அவர்களின் வழிபாட்டு முறைமையின் முதல் கூறாகத் திகழ்கின்றது.

படகர்களிடம் கோயில் வழக்கம் கிடையாது. அவர்களின் குலதெய்வ வழிபாடுகள் தம்முன்னோர்கள் வாழ்ந்த வீடுகளை அடிப்படையாகக் கொண்டே விளக்குகின்றன. தம்முன்னோர்கள் வாழ்ந்த வீடுகளை “தெவ்வ மனெ” என்றும் (தெவ்வ – தெய்வம் (தம் முன்னோர்) மனெ – வீடு) “ஹெத்தெ மனெ” (ஹெத்தெ – பாட்டி, ஹெத்தெப்பா – பாட்டன்) என்றும் அழைக்கின்றனர்.

நீலகிரியில் படகர்கள் வாழ்கின்ற நாக்குபெட்டா (நாக்கு – நான்கு, பெட்டா – மலை) பகுதியின் நிர்வாகத்திற்காக “அக்க பக்க” என்ற அமைப்பினைப் படகர்கள் உருவாக்கியுள்ளனர். இது ஒரே கால்வழியினைக் கொண்ட அக்கப்பக்கத்திலுள்ள ஊர்களின் கூட்டமைவாகும். ஒரு அக்க பக்கத்திற்கு ஒரு “பன” என்ற அமைப்பும் இதில் அடங்கும். “பன” என்பதற்கு வனம் என்று பொருள். படகர்களின் அக்க பக்கத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் “பனகுடி” என்ற பாம்பெ உல்லு புல்லினைக் கொண்டு கூரைவேய்ந்த அமைப்புண்டு. ஆதியில் தம் மூதாதையர்கள் இங்கு வாழ்ந்ததாகவும், வேட்கைக்குச் சென்றபோது இங்கு தங்கியதாகவும் படர்கள் நம்புகின்றனர்.

படகர்கள் கோயிலை “குடி” என்று அழைக்கின்றனர். முதலில் “பன” என்று அழைக்கப்பட்ட இடம் இன்று புனிதம் கருதி “குடி” என்று அழைக்கப்படுகின்றது. படகர்களின் வேட்டைசார்ந்த வாழ்வின் சான்றாக இந்தப் பனகுடி விளங்குகின்றது.

நீலகிரி வனப்பகுதியின் எல்லைகளிலெல்லாம் காடார்ந்து செல்லும்போது படகர்களின் முன்னோர்கள் தங்கிய இடங்கள் இன்று வனக்கோயில்களாக விளங்குகின்றன. அவ்வகையில் நீலகிரியின் எல்லைப்பகுதியில் உள்ள வனக்கோயில்களின் நிர்வாகத்தினை இன்றும் படகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பனகுடிகளில் மேற்கொள்ளப்படும் மந்தகிச்சு என்ற வழக்கு படகர்களின் தொன்மையான வழக்காகும். இந்த வழக்கினை அவர்கள் தம் மரபுசார்ந்த எல்லா வழிபாடுகளிலும் பின்பற்றி வருகின்றனர்.

நெலிகோலினைக் கொண்டு படகர்களின் புனிதமரமான “நேரி” மரத்தில் (நாவல் மரத்தில்) இடப்படும் மந்தக்கிச்சுவின் வெளிச்சத்தில் இரவைக் கழிக்கின்றனர். ஆதியில் வனத்தில் வேட்டையாடும்போது வெளிச்சத்திற்கும், அஃறிணை உயிர்களிடமிருந்தும், குளிரிலிருந்தும் தம்மை தற்காத்து கொள்வதற்கும் படகர்கள் இந்த மந்த கிச்சுவினைக் கைக்கொண்டனர். இதே நிலையில் தம் குலதெய்வ வீடுகளில் நிகழ்த்தும் சடங்குகளிலும் இந்த மரபு வழக்கினைப் பின்பற்றி வருகின்றனர்.

படகர்களின் மரபார்ந்த வழிபாட்டிடமான “தெவ்வமனெ, தொட்ட மனெ, ஹெத்தெ மனெ, பனகுடி” போன்ற இடங்களில் தவறாது இருக்கவேண்டிய புனிதப்பொருட்களுள் நெலிகோலு முதன்மையிடம் பெறுகின்றது. இன்றளவிலும் இத்தகு சடங்குகளில் நெலிகோலினைக் கொண்டு நெருப்பினை உண்டாக்குவதே மரபாகக் கொள்ளப்படுகின்றது.

பண்டிலிருந்து ஒரு கால்வழியினர் வாழ்கின்ற படர்களின் ஹட்டிக்கான நெருப்புப் பயன்பாட்டிற்கான ஆதாரமாக “தொட்டமனெ” என்ற, அந்தக் ஹட்டியில் முதலில் தோன்றிய வீடு விளங்குகி வருகின்றது. இந்தத் தொட்ட மனெயிலிருந்தே ஹட்டியிலுள்ள அனைவரும் தமக்குரிய நெருப்பினை எடுத்துச் செல்வர். எனவே தொட்டமனெயில் உருவாக்கப்படும் நெருப்பினை அணையாமல் பாதுகாப்பதும், எந்தநிலை வந்தாலும் தொட்டமனெயினை அடைக்காமல் இருப்பதும் படர்களால் பேணப்பட்டுவரும் மரபு வழக்குகளாகும்.

“பெரத்து பந்தமக பெக்கெய கொடாதது பாப” (பெரத்து – குளிரால் விறைத்து, பந்தமக – வந்தவனுக்கு, பெக்கெய - வெக்கையை, கொடாதது – அளிக்காதது, பாப – பாவம்) என்ற படர்களின் முதுமொழியொன்று விருந்தாக வருபவர்களை ஓம்பவேண்டிய விருந்தோம்பலை, அடிப்படையை வலியுறுத்துகின்றது. இதில் நெருப்பு முன்னிலை வகிப்பது நோக்கத்தக்கது.

படர்களின் வேட்டைச்சமூக வழக்கம் இன்று சடங்குநிலையாக மட்டும் எஞ்சி நிற்கின்றது. கடமான், ஆடு, கோழி போன்றவற்றை வேட்டையாடி உண்ட படகர்கள் இன்று ஆடு, கோழி ஆகியவற்றை உண்கின்றனர். வேட்டையாடிய உணவினை பகிர்ந்து உண்டனர். மீதமானதை குறிப்பாக, சத்து நிறைந்த மான் மற்றும் ஆட்டின் தொடைப்பகுதியினை வீட்டின் முற்றத்திலோ, அடுப்பிற்கு மேலே அமைக்கப்பட்டுள்ள “பெசெ கெட்டி” என்ற இடத்திலோ உப்புக்கண்டம் இட்டு வைத்தனர். “கொரத்து திந்தலெ கொரெக எச்சா. சுட்டு திந்தலெ சுட்டகெக எச்சா” (கொரத்து – வெட்டி, திந்தலெ – உண்டால், கொரெக – துண்டத்திற்கு, எச்சா – மிஞ்சாது, சுட்டு திந்தலெ - சுட்டு உண்டால், சுட்டகெக - ஈரலுக்கு, எச்சா – மிஞ்சாது) என்ற படர்களின் முதுமொழி இவ்வழக்கிற்குத் தக்க சான்றாகும். படகர்கள் “தெவ்வ ஹப்பா’ என்ற தம் அறுவடைத் திருவிழாவில் தம் குலதெய்வத்திற்கு வேட்டையாடி பிடித்த ஆட்டின் ஈரலை சுட்டுப் படைக்கின்றனர். இன்றளவும் தொடரும் இம்மரபர்ந்த வழக்கிற்கு நெலிகோலினைக் கொண்டே நெருப்பினை உண்டாக்குகின்றனர். இது அகநானூற்றின் 169 பாடலோடு பொருந்தி நிற்பதைக் காணலாம்.
மந்தக் கிச்சு மரபு

- மந்தக் கிச்சு மரபு -

படர்கள் நெருப்பினை “கிச்சு” என்று அழைக்கின்றனர். நெலிகொலினைக் கொண்டு கடையும் வினையில் உண்டாவாதால் உருவாக்கத்தின் அடிப்படையில் காரணப்பெயராக இப்பெயர் உருவாகியிருக்கலாம். நெருப்பினை உருவாக்குவதைப் படகர்கள் “கிச்சு கடவது” (கடவது – கடைவது) என்று அழைக்கின்றனர். நெய்யினை உருவாக்குவதை “துப்ப கிடுக்கோது” (துப்ப – நெய், கிடுக்கோது – சூடேற்றுவது அல்லது காய்ச்சுவது) என்கின்றனர். இந்தக் கடெ, கிச்சு என்ற சொற்கள் “கிச்சு” என்று மாறியிருக்கலாம்.

பல்லைக்காட்டி இளிப்பதைக் குறிக்க படகர்களிடையே “கிசிய” (“ஹல்ல கிசிய பேட” ஹல்ல - பல்லை, கிசிய - காட்ட, பேட - வேண்டாம்) என்ற சொல்லொன்று உண்டு. ஆக இடைவினையால், இயற்கையால் காட்டப்படுவது என்ற நிலையில்கூட தீயிற்கு “கிச்சு” என்ற பெயர் வந்திருக்கலாம். ஆனால் இந்தக் ‘கிச்சு’ என்ற சொல்லினைத் தோற்றத்தினைக் கண்டறியவியலாத இடுகுறிச் சொல்லாகவே பலரும் கருதுகின்றனர். “மரக்கட்டைகள் அல்லது கற்கள் ஒன்றோடொன்று உரசுதலால் அதவாது தேய்வதால் நெருப்புண்டாகின்றது. அவ்வகையில் தேய் என்ற சொல்லிலிருந்துதான் தீ என்ற சொல்லும் தெய்வம் என்ற சொல்லும் பிறந்திருக்கின்றன என்கின்றனர். படகுவில் நெருப்பைக் குறிக்க தீ என்னும் சொல் வழக்கில் இல்லை. ஆனால் தெய்வம் என்ற சொல் தெவ்வ என்ற பெயரில் வழக்கில் உள்ளது” (படகர் சமய நம்பிக்கை, இரா.கு.ஆல்துரை) எனும் கூற்று நெருப்பிற்கான படகர்களின் தொன்மையும், தனித்தன்மையினையும் விளக்குகின்றது.

வேளாண் நிலையில் பரண் அமைத்து திணைப்புனம் காக்கும் வழக்கம் படகர்களிடம் கிடையாது. நிலவும் குளிர் மற்றும் மழையின் காரணமாக “குள்ளு மனெ” அல்லது “குடிலு மனெ” என்ற பெயரிலிலான சிறிய ஓரறை வீட்டினை அமைத்து விளைநிலத்தினைப் பாதுகாக்கின்றனர். இரவில் நிலம்புகும் அஃறிணை உயிர்களைத் தடுக்க நெருப்பினைத் துணையாகக்கொண்டனர். குடிலிற்கு முன்பு நெலிகோலினால் உண்டாக்கிய நெருப்பினை இரவுமுழுவதும் அணையாமல் காத்து நிற்பர். இந்த வேளாண் பணிக்குப் படகர்களோடு குறும்பர்களும் துணைக்கிருந்தனர். இது குறிஞ்சிப்பாட்டின் 225 வரிகளோடு ஒப்பிட்டு பார்க்கவல்லது.

வேளாண் தொழிலில் படகர்களுக்குத் துணையாக நின்று, அதன்வழி பெறும் தானியங்களால் தன் வாழ்வின் உணவுத் தேவையினை குறும்பர்கள் நிறைவேற்றிக் கொண்டனர். “ஒட்டெ தும்பித குறும குள்ளு மனெய கிச்சிக்கின” (ஒட்டி – வயிறு, தும்பித – நிறைந்த, குறும – குறுமன், குள்ளு மனெய – வேளாண் குடிலுக்கு, கிச்சிக்கின – நெருப்பு வைப்பான்) என்ற படகர்களின் முதுச்சொல் செல்லொன்று வயிறு நிறைய உண்ட அசதியில் காவல் காத்த குறுமன் உறங்கிப்போக, வீட்டிற்குச் சென்ற படகன் திரும்புவதற்கு முன்பாக குடிலின் முன் இடப்பட்ட நெருப்பினால் குடில் எரிந்துப் போனதை வெளிப்படுத்தி, வேளாண் நிலத்தில் நெருப்பினை பேணவேண்டிய விழிப்பினை வலியுறுத்துகின்றது.

பிங்கசக் கல்லு –

நெருப்பினை உண்டாக்கும் சிக்கி முக்கிக் கல்போன்ற ஒருவிதக் கல்லினைப் படகர்கள் “பிங்கசக் கல்லு” என்றழைக்கின்றனர். வெண்மை நிறமுறைய இந்தக் கல்லினையும், தம் தொன்மையான சில சடங்குகளில் நெருப்பினை உண்டாக்கப் பயன்படுத்துகின்றனர். வெளிச்சத்தை படகர்கள் “பிசலு” என்கின்றனர். வெயிலினைப் “பிசிலு” என்று அழைக்கின்றனர். இருள் விலகி விளங்குவதை “பாகு” என்றும் “பீகு” என்றும் அழைக்கின்றனர். ஆக இருளினைப் போக்க, வெளிச்சத்தைத்தர நெருப்பினை உருவாக்கும் கல் என்ற அடிப்படையில் இந்தக்கல் ‘பிங்கசக் கல்லு’ என்று பெயர்பெறுகின்றது.

இந்தப் பிங்கசக் கல்லினை யாரும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது எனும் விலக்கொன்றினையும் படகர்கள் பின்பற்றுகின்றனர். இக்கல்லின் துகள்களை இரும்புக்கருவிகளைக் கூர்த்தீட்டுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இப்பயன்பாட்டின் பிறகு அக்கல்லினை வெளியிலுள்ள “மிண்டேரி பள்ளியில்” (முற்றத்தில் பொருட்களை வைப்பதற்காக சுவற்றினைக் குடைந்து உருவாக்கியுள்ள பகுதி) வைக்கின்றனர். பெரும்பாலும் தொட்ட மனெகளில் மட்டும் இந்தக் கல்லினை வைக்கின்றனர். மீறி இக்கல்லினை வீட்டில் வைத்திருப்பது வீட்டிலுள்ள உறவுகளுக்கு ஆகாது என்றும் உறவுகள் முரண்படுவதற்கான சூழலை உருவாக்கும் என்றும் இவர்கள் நம்புகின்றனர். பிங்கசக் கல்லின் அருமைக்கருதி அதன் பயன்பாட்டினைப் பொதுநிலையில் வைக்க இந்த நம்பிக்கைசார்ந்த வழக்கினை இவர்கள் கையாளுவதை நாம் உணரலாம்.

படகர்கள் தீயினை உண்டாக்க கைக்கொள்ளும் பொருட்கள், அதன் வழக்காறுகள் மற்றும் தீயினைக் குறிக்கும் படகர்களின் சொல்லாக்கம் போன்றவை தொன்மையும், தனித்தன்மையும் கொண்டிருப்பதைக் காணலாம். படகர்களின் தீக்கடைக் கோலான நெலிகோலின் பயன்பாடும், பயன்பாட்டுச் சூழலும் சங்க இலக்கியப் பதிவுகளோடு பெரும்பாலும் பொருந்தி நிற்பதையும் காணலாம். இவை படகர்களின் அவ்வழக்கார்ந்த தொன்மை நிலைக்குத் தக்க சான்றாகும். காலம், தேவை கருதி மேம்பட்ட படகர்களின் தொன்மையான, மரபான வாழ்வியலின் தொப்புள் கொடியாக நெருப்பின் உருவாக்கம் விளங்குகின்றது. ஒவ்வொரு முறையிலும் நெருப்பின் ஆக்கத்திலும் தம் முன்னோர்களின் மரபினைத் தழுவிக்கொள்ளும் நெருப்புசார்ந்த படகர்களின் மரபார்ந்த வழக்காறு இவர்களின் பூர்வக்குடித் தன்மைக்குத் தக்கவொரு சான்றாகும்.

துணைநின்ற நூல்கள்

1. சங்க இலக்கியம், கழக வெளியீடு
2. தொல்காப்பியம், கழக வெளியீடு
3. படகர் சமய நம்பிக்கை, இரா.கு.ஆல்துரை
4. படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குப் பொருட்கள், முனைவர் பட்ட
ஆய்வேடு, முனைவர் கோ.சுனில்ஜோகி
5. நேர்காணல் திரு. கல்லாகவுடர், ஒரசோலை, நீலகிரி
6. நேர்காணல் திரு செவணன், கடக்கோடு, நீலகிரி
7. நேர்காணல் திருமதி. மிச்சி, குண்டாட
8. நேர்காணல் திரு. பானி ரங்காகவுடர், கடக்கோடு, நீலகிரி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R