க.நா.சு என்று அனைவராலும் அறியப்படும் க.நா.சுப்ரமண்யம் என்பதன் விரிவாக்கம் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். இவர் தன் விமர்சனங்களுக்காக அதிகமாக அறியப்பட்ட படைப்பாளர். இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இவர் 1912ஆம் ஆண்டில் சனவரி 31 இல், தஞ்சாவூரை அடுத்த சுவாமி மலையில் (வலங்கைமானியில்) பிறந்தவர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். இவர் முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தவர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமரிசனம் எனப் பல தளங்களில் தன் படைப்பாளுமையை வெளிப்படுத்தியர். ஐரோப்பிய படைப்புகளை மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாக அறியச் செய்த பெருமை க.நா.சு வுக்கு உண்டு. க.நா.சு வின் படைப்புலகத்தை அவரின் நூல்களின் வழி வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் மையப்பொருளாகும். இருபதாம் நூற்றாண்டில் பல எழுத்தாளர்கள் இருந்தாலும் தன் படைப்புகளான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் விமரிசனங்கள் என அனைத்து தளத்திலும் சிறந்து விளங்கிய க.நா.சுப்ரமண்யத்தின் படைப்புலகத்தை அவரின் வாழ்வு மற்றும் படைப்பின் வழி காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
க.நா.சு வின் தந்தை நாராயணசாமி ஐயர் தபால் துறையில் வேலை பார்த்தார். தன் மகன் ஆங்கிலம் படித்து இலக்கியம் எழுதிப் பெயர் பெற வேண்டும் என்பது அவர் இலட்சியமாக இருந்தது. க.நா.சு வை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்தார். படிப்பு முடிந்ததும் வேலைக்குச் செல்ல அவசியம் ஏற்படவில்லை. தந்தையார் ஆங்கிலத்தில் எழுத ஊக்கம் கொடுத்தார். அதிகமாகப் படிக்க வைத்தார். படிப்பு மற்றும் (வாசிப்பு) அவருக்கு பரந்துபட்ட இலக்கியத்தை அறிமுகப்படுத்தியது.அவர் படிப்பின் வாயிலாக வாழ்க்கைக்கு ஒரு தத்துவத்தை அமைத்துக் கொண்டார்.அவர் தத்துவம் பற்றி பின்னால் கூட எழுதவில்லை. ஆனால் தத்துவம் அவரின் வாழ்க்கையிலும் படைப்புகளிலும் ஆழப் பதிந்துவிட்டது.
க.நா.சு ஆங்கிலத்தில் எழுதிப் பெயர் பெற வேண்டும் என்ற நாராயணசாமியின் ஆசையை அவர் நிராகரித்துவிட்டார்.இருந்தாலும் 1928 முதல் 1934 வரை எதற்காக எழுதுகிறேன் என்ற சிந்தனையே இல்லாமல் ஆங்கிலத்தில் பல கட்டுரைகள், கதைகள் எழுதியதாகச் சொல்கிறார்.‘க.நா.சு வின் முதல் ஆங்கிலக் கட்டுரை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1928 இல் வெளிவந்தது’1
படித்த ஒரு மொழியில் அந்த மொழிக்குப் பழக்கம் இல்லாத வாழ்க்கையை எழுதுவது எத்தனைதான் சிறப்பாக எழுதினாலும் அது நியாயமானதாகத் தெரியவில்லை என்று கருதினார். 1934, 1935 ஆம் ஆண்டுகளில் சென்னையில் நடந்து கொண்டிருந்த இலக்கிய முயற்சிகளைக் கண்டுள்ளார்.அப்போது டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திக் கொண்டிருந்த ‘காந்தி’ என்ற பத்திரிகையில் வெளிவந்த ‘வத்திலக்குண்டு எஸ்.ராமய்யா என்பவரின் வார்ப்படம் என்கிற கதைதான் முதன்முதலில் க.நா.சு வுக்கு தமிழில் எழுத வேண்டும் என்கிற எண்ணத்தை உண்டு பண்ணியது’2 பின்பு மணிக்கொடியிலும் எழுதலானார்.தாய்மொழியில் எழுதுவதுதான் ஆன்மீகமான ஒரு காரியம் என்று எண்ணித் தமிழில் எழுதத் தொடங்கினார்.கவிதை, சிறுகதை, நாவல் என்று படைப்பு இலக்கியத்தை எழுதினார்.
க.நா.சு 1951க்குப் பிறகு மீண்டும் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார்.‘ஆரம்பகாலத்தில் எழுதிய ஆங்கில எழுத்துக்களைவிட இந்தக் காலப் பகுதி எழுத்து எனக்கு அதிகத் திருப்தியும் ஆனந்தமும் தருகிறது’3 என்று எழுத்து இதழில் கூறியுள்ளார். மேலும் க.நா.சு இன்றைய இந்தியாவில் எழுதுகிற இலக்கியாசிரியன் இரண்டு மொழிகளில் எழுதுகிறவனாக இருப்பதுதான் நல்லது என்கிறார். ‘இரண்டு மொழிகளிலும் எழுதுகிறவன் இலக்கிய சிருஷ்டியின் ஆனந்தத்தைக் காண முடியும் அதுவே அவனுக்கு கிடைக்கிற லாபம்’4 என்று க.நா.சு கூறியுள்ளார்.
க.நா.சு வின் படைப்பு பட்டியல்களை வைத்துப் பார்க்கும் போது க.நா.சு தன் இளம்வயதிலே 14 மற்றும் 15 வயதில் எழுதத் தொடங்கியவராக இருப்பார் என்றும் கட்டுரை, விமரிசனம், மொழிபெயர்ப்பு தவிர்த்து சுமார் நூற்றிருபதிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருப்பார் என்றும் கூற முடிகிறது.
‘க.நா.சு சுமார் தொண்ணூறு சிறுகதைகள்’5 எழுதியிருப்பதாக நீல பத்மநாபன் விமர்சனங்களையும் படைப்பிலக்கியங்களாகக் கருதியவர் க.நா.சு எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
‘க.நா.சு இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நாவல்கள், பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கில விமரிசனக் கட்டுரைகள்’6எழுதியிருப்பதாக ஜி.குப்புசாமி உன்னதங்களைப் பரிந்துரைத்த ஒற்றைக்குரல் எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து க.நா.சு.எழுதிய படைப்புகளின் பட்டியல் விவரங்களை, அதாவது ‘நாவல்கள் 31, அச்சில் வராதவை 6 நாவல்கள்’7 என்று பழ. அதியமான் க.நா.சு; ஓர் எழுத்தியக்கம் எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
க.நா.சு 1979இல் குமரன் ஆசான் நினைவு விருது பெற்றுள்ளார்.1986 ஆம் அண்டு ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’ என்ற விமரிசன நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.இவரின் கோதை சிரித்தாள் என்ற நாவல் தமிழக அரசின் பரிசைப் பெற்றுள்ளது.
‘க.நா.சு வும் புதுமைப்பித்தனும் 1936 முதல் 1947 வரை இலக்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்’8 என்பதைப் புதுமையும் பித்தமும் நூலின் வாயிலாக அறிய முடிகிறது.
க.நா.சுப்ரமண்யம் மணிக்கொடி பரம்பரையினரில் ஒருவர் என்று ம. திருமலை குறிப்பிடுகிறார்.‘தி.ஜ.ர, மௌனி, சி.சு.செல்லப்பா, கு.ப.ரா, லா.சா.ரா, ந. பிச்சமூர்த்தி, பி.எஸ்.இராமையா, புரசு பாலகிருஷ்ணன், சிதம்பர சுப்பிரமணியன், க.நா.சு போன்றோர் மணிக்கொடி பரம்பரையினர் என்கிறார்.’9
க.நா.சு தன் முப்பது வயதில் எடுத்த முடிவின்படி (அதிகமாக எழுத வேண்டும்) எழுபத்தாறு வயது வரையில் முடிவில்லாத வாழ்க்கையைப் பற்றி முடிவு காணமுடியாத முறையிலேயே எழுதினார்.
படைப்புகளின் சிறப்புகள்
க.நா.சு தன்னுடைய படைப்புகளில் இலக்கியத் தரத்திற்கு முதலிடம் கொடுத்தார்.தமிழையும் ஆங்கிலத்தையும் ஒரே நேரத்தில் கையாண்டவர்.
இலக்கியவட்டம் என்ற இலக்கியப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோது அவர் எழுதிய சிந்தனை ஆழமிக்க கட்டுரைகள் இன்னும் சிறப்பைத் தருகிறது.யாப்பென்னும் விலங்கிலிருந்து தமிழ்க் கவிதையை மீட்ட முதல்வர்களில் மயனும் ஒருவர் என்பதை உணரமுடிகிறது.
படைப்புகள்
ஆங்கிலக் கல்வியே பயின்ற க.நா.சு ஒரு நவீன இலக்கியப் படைப்பாளி.மௌனி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், சங்கரராம் போன்ற பல எழுத்தாளர்களோடு நல்ல பரிச்சயம் உடையவர். பத்திரிகைத் தொடர்புகளின் காரணமாக ஆரம்பகால வளர்ச்சி இலக்கியப் பத்திரிகைகளைச் சார்ந்து அமைந்தது இலக்கிய வட்டம், சந்திரோதயம், சூறாவளி, ராமபாணம் போன்ற பத்திரிகைகளை நடத்தியும் பங்குகொண்டும் பத்திரிகை அனுபவம் பெற்றவர்.
எழுத்துப் பத்திரிகையில் விமரிசனங்கள் எழுதி விமரிசன இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் க.நா.சு வின் எழுத்திற்கு நல்ல ஆரம்பகளனாக அமைந்தது எனலாம். க.நா.சு குங்குமம், தினமணிக்கதிர், துக்ளக், முத்தாரம்’10 போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தவர் என்ற குறிப்பு உள்ளது.
‘க.நா.சு வின் அனைத்து நூல்களையும் சொந்தப் பெயரில் வெளியிட்டுள்ளார். மயன் பெயரில் கவிதைகளை எழுதி வந்தவர். பத்திரிகையில் எழுதும்போது நசிகேதன் என்ற பெயரைப் பயன்படுத்தியவர்’11 ‘சரஸ்வதியில் க.நா.சு வை விமர்சித்து வந்த ஒரு கட்டுரையில் மணிவாசகன் என்பவர் வேறொரு நோக்கில் குறிப்பிட்ட ஒரு தொடரில் க.நா.சு வின் சில புனைப்பெயர்கள் விவரம் பதிவாகி இருக்கிறது’12 என்கிறார்.
சிறுகதைகள்
க.நா.சு கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்துள்ள சிறுகதைகள் அனைத்தும் சூறாவளி, சந்திரோதயம், கலைமகள், சக்தி, குமரிமலர், சுதேசமித்திரன், வாரப்பதிப்பு போன்ற பத்திரிகைகளில் வந்தவை. க.நா.சு தன் சிறுகதைகள் மூலம் வாழ்க்கையின் சிறுபரப்பை காண முயலுவதாகக் கூறுகிறார்.13
க.நா.சு கதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்ற கதைகளாக வருவன, வாஸவதத்தை, வரவேற்பு, மணிக்கூண்டு, கண்ணன் என் தோழன், அழகி, மகாத்தியாகம்.மனமாற்றம், சாவித்திரி, காவேரி, கிரகப் பிரவேசம், சோதனை, கல்யாணப் பெண், சிட்டுக் குருவி, தூக்கம், முதற்சுடர் என்பன. இக்கதைகளில் வாஸவதத்தை, வரவேற்பு, மணிக்கூண்டு, கண்ணன் என் தோழன், அழகி, மகாத்தியாகம் என்பவை க.நா.சு வுக்குப் பிடித்தக் கதைகள் என்று க.நா.சுவே கூறியதாகக் குறிப்புகள் உள்ளன.14
க.நா.சு இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.க.நா.சு சிறுகதைகளில் இருபது இருபத்தைந்து கதைகள்தான் புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன.பிற இன்னும் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படவில்லை.ஆனால் இன்றைய நோக்கில் அவை தொகுக்கப்பட்டாலும் வெற்றி பெறும் என்றும் சொல்ல இயலவில்லை.க.நா.சு வின் சிறுகதைகளில் எவ்வித நவீனத்துவ கூறினையும் நாம் காண இயலாது. மிக வழக்கமான முறைகளில் எழுதப்பட்ட வழக்கமான நடுத்தர வர்க்க பிராமண சமுதாயச் சிறுகதைகள் என்று அவற்றை மதிப்பிட முடியும்’15 என்கிறார் க. பூரணச்சந்திரன். ஆனால், ‘தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவர்கள் என்று புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி போன்றோரை க.நா.சு அடையாளப்படுத்தியவர்.இவர் மூவர்களோடு சேர்க்கத்தக்க ஒருவர் க.நா.சுப்ரமண்யம்’16 என்கிறார் சா.கந்தசாமி.
பழ. அதியமான் குறிப்பிடும் க.நா.சுப்ரமண்யம் கதைகள்
அழகி முதலிய கதைகள் (1944), ஆடரங்கு (1955), இரண்டு பெண்கள் (1965), க.நா.சு கதைகள் I,II,III (1988), சாவித்திரி சிறுகதை, சுந்தாபாட்டி சொன்னாள், தீ!தீ! கதைகள், தெய்வ ஜனனம் (1943), நாயக்கர் தஞ்சை கதைகள், பதினேழு கதைகள், மணிக்கூண்டு, மராட்டியர் தஞ்சை கதைகள் என்பன.
இச்சிறுகதை பட்டியலில் ‘சுந்தா பாட்டி சொன்னாள்’ என்று ஒரு சிறுகதையைக் கொடுத்துள்ளார்.ஆனால் இது பெண்மனம் என்ற சிறுகதையின் முதல்வரி.“சுந்தாபட்டி சொன்னாள்; படிக்கப் படிக்க ஆண்களுக்கு அறிவு அதிகமாகிறது. படிக்கப் படிக்கப் பெண்களுக்கு அன்பு அதிகமாகிறது”17 என்று கதை தொடங்குகிறது. இக்கதை பட்டியலில் சுந்தாபாட்டி சொன்னாள் என்பதற்குப் பதிலாகப் பெண்மனம் என்று கொடுத்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.
க.நா.சுப்ரமண்யத்தின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்த சிறுகதைகளாக சா. கந்தசாமி தொகுத்துள்ளார். அவை, பெண்மனம், ஒரு கடிதம், முதல் கதை, ஆடரங்கு, கிரகப் பிரவேசம், பேரன்பு, படித்த பெண், மகாத்தியாகம், பாத ஸரம், வாழ்க்கைப் பந்தயத்தில், வரவேற்பு, சாவித்திரி, காவேரி மடத்துக் கிழவர், அழகி, முதற்சுடர் அலமேலு, புளிப்பு, கல்யாணங்கள், உலகத்தின் முடிவு, சாதாரண மனிதன், விதியும் மதியும், கனவுகள், மார்க்கண்டன், கபாஷ் என்பவை.
கவிதைகள்
தமிழில் புதுக்கவிதை என்ற சொல்லை உருவாக்கியவர் க.நா.சு தான்.
க.நா.சு மயன் என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதியவர்.“மயன் கவிதைகளில் அழகு, வெளிச்சம், வேகம் எதையும் பார்க்க முடியவில்லை”18 என்ற விமரிசனக் கருத்தை எளிதில் மறந்துவிட முடியாது என்கிறார் க. பூரணச்சந்திரன்.
க.நா.சு இந்தக் காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக் காலத்துக்கேற்ற சிக்கலான வார்த்தை சேர்க்கையில் நிரந்தரமாக்குவதற்கு அழியாத இலக்கிய உண்மையாக்குவதற்குப் புதுக்கவிதை தேவை. அப்போதுதான் சங்ககாலத்தில் சிறந்த கவிதை சிருஷ்டிகளையும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் தனித்தன்மையையும் நாம் இன்று எட்ட முடியும்.மேலும், “நம்முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம்பெறுகிற விசயங்கள் எல்லாமே உவமைகள், உருவகங்கள், ஏக்கங்கள், ஆசைகள், வார்த்தைகள், மௌனம் எல்லாமே என் கவிதைக்கு விசயம்”19என்கிறார்.
புதுக்கவிதையைப் பற்றி க.நா.சு கூறுகையில் “புதுக்கவிதை மட்டுந்தான் புதுக்கவிதை என்பதில்லை பழங்கவிதையும் புதுக்கவிதைதான்”20 என்கிறார்.சிலப்பதிகாரம் அதன் காலத்தில் மட்டுமல்ல இன்றும் புதுக்கவிதைதான் என்று சொல்லியிருப்பது சிறப்பைத் தருகிறது.
தன் கவிதை அனுபவத்தைப் பற்றி க.நா.சு கூறுகையில் “என் கவிதைகளை நூலாகப் படித்துப் பார்ப்பது எனக்கே ஒரு நூதனமான அனுபவமாகப்பட்டது. இது மற்ற கவிகளுக்கும் இப்படித்தானோ என்று எனக்குத் தெரியாது.ஆனால் அடிக்குறிப்பில்லாத இந்நூலிலுள்ள வேறுசில கவிதைகளுக்கும் ஆதாரம் வேறு கவிகளின் எழுத்தில் இருப்பது போலத் தோன்றுகிறது.தெரிந்து காப்பியடிக்க வேண்டும் என்று செய்ததில்லை அது. ஆதார கவியின் பெயர், கவிதையின் தலைப்பு மறந்தும் போய்விட்டது. இரண்டு மூன்று தமிழாயிருக்கலாமோ என்று எண்ணுகிறேன். மற்றவை பெரும்பாலானவை எனக்குத்தான் சொந்தம்”21 என்று கூறியுள்ளார்.
க.நா.சு கவிதைகள் எனும் தொகுப்பு 31.01.1988 இல் வெளிவந்தது. இதில் இடம்பெற்ற கவிதைகள், அனுபவம், இன்னொரு ராவணன், நீதிக்கிளி, போ, விலை, நல்லவர்களும் வீரர்களும், புதுமைப்பித்தன், கூஃபி, இரு விமர்சகர்கள், சாவு, நாவலாசிரியை, உயில், காதலும் காமமும், ஏமாளி என்பன. மேலும்,
புதுக்கவிதைகள் (1989)மறுபதிப்பு,
மயன் கவிதைகள் (1977) எனும் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
நாடகங்கள்
க.நா.சு கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று பல தளங்களில் இயங்கியிருந்தாலும் நாடகம் என்ற தளத்தில் இயங்கி பல நாடகங்கள் எழுதியுள்ளார் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.
க.நா.சுவின் நாடகங்களாவன,
1. ஏழு நாடகங்கள் (1944)
2. நல்லவர் (1957)
3. ஊதாரி (1961)
4. கலியாணி
5. பேரன்பு (கவிதை நாடகம்)
6. மஞ்சளும் நீலமும்
7. வாழாவெட்டி என்பவை.
மொழிபெயர்ப்பு
க.நா.சு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குமாக அதிகமாக மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு திருக்குறள், சிலப்பதிகாரம், குறுந்தொகைக் கவிதைகள் உள்ளிட்ட சங்க இலக்கியப் பகுதிகள் ஆகிய பழைய இலக்கியப் பகுதிகளை மொழிபெயர்த்திருக்கிறார். பாரதியாரின் சில கவிதைகள், பாரதிதாசனின் சில கவிதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார்.புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா, தி.ஜானகிராமன், சா.கந்தசாமி, வண்ணநிலவன், சண்முகசுந்தரம் போன்றோரின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.
நீல பத்மநாபனின் தலைமுறைகள், சா.கந்தசாமியின் சூரிய வம்சம், நாவல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
க.நா.சு வின் மொழிபெயர்ப்பு கதைகள் காலத்தினால் வயதாகதவை என்றும் ‘தமக்குத் தெரியாததைத் தெரியாது என்று சொல்லக்கூடிய நேர்மை படைத்தவர் க.நா.சு’22 என்றும் க. பூரணச்சந்திரன் குறிப்பிடுகிறார்.
க.நா.சு மொழிபெயர்த்த உலக இலக்கியத்தில் இருக்கும் சிறுகதைகள், மனுஷ்ய நாடகம், வில்லியம் ஸரோயன், அவள், ஜாலம், கயிறு, அவன், திருட்டு, அந்தமரம், பாட்டியின் பரிதவிப்பு, குருதிப் பூ, உடைந்த கண்ணாடி, பங்களா, விருந்தாளி – ஆல்பர் காம்யு, காதற் கதை – கிரேஸியா டெலடா, காளி – பால்வான் ஹேய்ஸே, தேவமலர் – ஸெல்மா லாகர்லெவ், கடல் முத்து – அண்டோனியா பாகஸாரோ, அதிசயம் – பிரான்ஸ்வா காப்பி, அடிமைப்பெண் – ஸெல்மா லாகர்லெவ், சுவர்கத்தில் காரி ஆஸென் – யோஹன் போயர் ஆகிய கதைகள்.
இதில் அவள் கதை முதல் பங்களா கதை வரையுள்ள கதைகளை காதரின் ஆன்போர்ட்டர் மொழிபெயர்த்துள்ளார்.
‘நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கவிஞர், விமர்சகர், கட்டுரையாளர், நாடகாசிரியர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யனின் முக்கிய பங்களிப்பு மொழிபெயர்ப்பே’23 என்கிறார் ஜி. குப்புசாமி.
உலக இலக்கியம் என்பது ஓர் இயக்கமாக உருவெடுக்க வேண்டுமென்ற சிந்தனையைத் தமிழில் முதன்முதலாகப் புகுத்தியவர் க.நா.சு தான்.இதற்கான வழிவகைகள் என்னவென்று சிந்திப்பது தன்னைப்போன்ற இலக்கியவாதியன் கடமையென்ற நம்பிக்கை க.நா.சுவுக்கு இருந்தது.‘உலகத்தில் எந்த மொழியில், எந்தப் பகுதியில் மிகத்தரமானது, உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் மட்டுமல்ல, தமிழ்போன்ற எல்லா மொழிகளிலுமே வருவதற்காக வழிவகைகள் வகுத்துக் கொள்ள வேண்டும்’24 என்ற க.நா.சு தமிழுக்கு அறிமுகப்படுத்திய, மொழிபெயர்த்த எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளின் தேர்வு மிக முக்கியமானது.
கிரேஸியா டெலடா, ஸெல்மா லாகர்லெவ், பேர் லாகர்க்விஸ்ட் போன்ற நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களைப் பெரும்பாலும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.
‘வணிகப் பத்திரிகைகள் பிரபலமான, பெரும்வாசகர்களைக் கொண்டிருந்த ஆங்கில எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டு கொண்டிருக்கையில் க.நா.சு முதன்முதலாகக் கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தமிழில் கொண்டு வந்தார். இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் படைப்புகளை வாசிக்கையில் ஒருவித அந்நியத் தன்மையை உணர்வதாகவும் கிழக்கு ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கும் தமிழ் வாழ்க்கை முறைக்கும் இடையில் ஏதோ ஒற்றுமை இருப்பதாகவும் அவர்கள் தமது குடும்பம் சார்ந்து பேசினாலும் நம்மால் அதை உணர்ந்து கொள்ள முடிகிறது’25என்றும் க.நா.சு கூறியதாக சுந்தர ராமசாமி தனது நினைவோடையில் குறிப்பிடுகிறார்.
க.நா.சு மொழிபெயர்ப்பின் சிறப்புகள்
மேற்கத்திய விமரிசனங்கள் அதிகம் கொண்டாடாத காதரின் ஆண்போர்ட்டர் போன்றோரின் மிகச்சிறந்த கதைகளை மொழிபெயர்த்துத் தொகுப்பாகவே வெளியிட்டிருக்கிறார். க.நா.சு மொழிபெயர்த்த பேர்லாகர் க்விஸ்ட்டின் பாரபாஸ், அன்புவழி மற்றும் ஸெல்மா லாகர்லெவ்வின் மதகுரு போன்ற நாவல்கள் தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் பெரும் ஆதர்சமாக இருந்திருக்கின்றன. வண்ணநிலவன் தனது முதல் நாவலான கடல்புரத்தின் முன்னுரையில் அன்புவழியைப் போன்றதொரு நாவலை தன் வாழ்நாளில் எழுதிவிட முடிந்தால்… என்று ஏங்குகிறார். மதகுரு நாவலை கிருஷ்ணன் நம்பி பாராயணமே செய்து வந்ததாக சுந்தரராமசாமி கூறுகிறார்.
நட்ஹாம்சனின் நிலவளம் தனது பள்ளிப் பிராயத்திலேயே எத்தகைய ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி உலக இலக்கியத்தின்பால் தன் கவனத்தைத் திருப்பியது என்று எஸ்.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
க.நா.சு வின் சமகால இலக்கியவாதிகள் சரத் சந்திரர், காண்டேகர் ஆகியோரைக் கொண்டிடாடிக் கொண்டிருந்தபோது அந்தப் பொது வழியிலிருந்து விலகி தாராசங்கர், பந்தோ பாத்தியாயா, விபூதி பூஷன் போன்றோரின் நாவல்களை ஆர். சண்முகசுந்தரம் மொழியாக்கம் செய்ததும், தி.ஜானகிராமன் அன்னை, குள்ளன் போன்ற ஐரோப்பிய புனைகதைகளை மொழிபெயர்த்ததும் க.நா.சு உருவாக்கிய மரபின் தொடர்ச்சியே என்று சொல்லலாம்.
க.நா.சு தனது மொழிபெயர்ப்புகளைச் சரளமாகப் படிக்கும்படி செய்வார்.வாசிப்புப் பயிற்சியில்லாத வாசகனுக்கும் புரிய வேண்டும்.நமது கலாச்சாரத்திற்கு அந்நியமாக ஒரு படைப்பு இருந்துவிடக் கூடாது என்ற அளவில் இலக்கியப் பரிந்துரையாளராக அவரது கருத்து ஒப்புக்கொள்ள கூடியதுதான்.இன்றைய சூழலில் அவரைப் பொருத்திப் பார்க்கும்போது க.நா.சு வை பரிபூரணமான மொழிபெயர்ப்பாளர் என்று கூறமுடியாது”26 என்கிறார் ஜி.குப்புசாமி.
ஜி.குப்புசாமி கூறுவது இன்றைய சூழலில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் இது முழுமையான முடிவல்ல ஏனெனில் இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் சிலருக்கு க.நா.சு மொழிபெயர்ப்புகள் வழிகாட்டிகளாக உள்ளன என்று கூறுவது பொருத்தமுடையதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
“க.நா.சு ஒரு நூலை மொழிபெயர்ப்பதற்கு முன்பு அந்நூலை கிட்டத்தட்ட ஐம்பது தடவையாவது படித்திருப்பதாக மதகுருவின் முன்னுரையில் கூறியுள்ளார்.”27
இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலும் தத்தமது இலக்கியச் சிறப்புகளை ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதவும் ஆவேசமாக முழங்கவும் ஏராளமானோர் இருந்தபோது அத்தகைய காரியங்களைத் தமிழுக்காகத் தனியாக நின்றுகொண்டு செய்துவந்தவர் க.நா.சு மொழிபெயர்ப்பில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மீறித் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.
“புதுமைப்பித்தன், மௌனி போன்றோரின் மேதமைகளைப் பல ஆங்கிலக் கட்டுரைகளில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சிலப்பதிகாரத்தையும், நீல பத்மநாபனின் தலைமுறைகள், சண்முகசுந்தரத்தின் சட்டி சுட்டிது, இந்திரா பார்த்தசாரதியின் குருதிபுனல் போன்ற நாவல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார்.”28
க.நா.சு வின் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய வாழ்க்கையில் அவர்பதினைந்தாயிரம் கட்டுரைகள் எழுதியிருப்பதாக Financial Express இல் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் ஆர்.வெங்கட்ராமன் கூறுவதாகச் சொல்கிறார் ஜி.குப்புசாமி.
க.நா.சு மொழிபெயர்ப்புக் கதைகள் தொகுதி ஒன்றில் அடங்கியுள்ள மொழிபெயர்ப்புக் கதைகளாவன,
1. ஜார்ஜ் ஆர்வெலின் 1984
2. ஜார்ஜ் ஆர்வெலின் விலங்குப்பண்ணை
3. போர்லாகர் குவிஸ்டுவின் பாரபாஸ்
4. ரோஜர் மார்டின் தூ கார்டுவின் தபால்காரன்
5. ஆந்த்ரே ழீடுவின் குறுகிற வழி
6. நட்ஹாம்சனி பசி
இதை காவ்யா சண்முகசுந்தரம் மறுபதிப்பாக திசம்பர் 2007இல் பதிப்பித்து உள்ளார்.
க.நா.சு வின் முதல் நாவலாக வெளிவந்த பசி (1942) வேறு.மொழிபெயர்க்கப்பட்ட நட்ஹாம்சனின் பசி வேறு.
ஆங்கிலம் வாயிலாகத் தமிழுக்கு மொழிபெயர்த்த நாவல்கள்
1. பேர்லாகர்குவிஸ்டு எழுதிய – அன்புவழி
2. நட்ஹாம்சனின் – நிலவளம், பசி
3. ரோமன் ரோலந்தின் –ஜீன் கிரஸ்தஃபர்
4. மார்டின் து கார்ட் எழுதிய – தபால்காரன்
5. லேகர் லெவின் எழுதிய – மதகுரு
6. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய – விலங்குப் பண்ணை (1984)
‘க.நா.சு ஓர் எழுத்தியக்கம்’ எனும் கட்டுரையின் வாயிலாக பழ. அதியமான் குறிப்பிடும் மொழிபெயர்ப்புகள்:
1. அன்புவழி – ஸ்வீடிஸ் – போர்லாகர்க்விஸ்ட் (1956)
2. ஆல்பர்ட் ஷ்வைட்ஸரின் – சுயசரிதம்(1958)
3. உலகின் சிறந்த நாவல்கள் (1959)
4. எளிய வாழ்க்கை – ஹென்றி டேவிட் தேபரோ (1956)
5. ஐரோப்பியச் சிறுகதைகள் (1987)
6. குடியானவர்கள் போலந்து
7. தாசியும் தபசியும் – பிரெஞ்சு
8. நல்ல நிலம் – கெரோல்
9. நிலவளம் – நார்வேஜியன் – நட்ஹாம்சன்
10. மதகுரு – போலந்து
11. மிருகங்கள் பண்ணை – ஜேம்ஸ் ஆர்வெல் (1956)
12. விருந்தாளி – பிரெஞ்சு – ஆல்பெர் காம்யூ
விலங்குப் பண்ணை என்பதை மிருகங்கள் பண்ணை என்றும் ஜார்ஜ் ஆர்வெல் என்பதை ஜேம்ஸ் ஆர்வெல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், லேகர் லெவின் எழுதிய மதகுரு என்பதை மதகுரு – போலந்து என்றும் ரோமன் ரோலந்து என்பதை போலந்து என்றும் குறிப்பிட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
க.நா.சுவின் ஆங்கில நூல்களாகத் தற்போது கிடைத்திருப்பவை
1. Contemporary Indian short Stories (E.D) (1977)
2. Contemporary Tamil Short Stories (1978)
3. Generations (Novel) – Neela padmanaban (1972)
4. Movements For Literature Sons of the Sun (Novel) 2007, Sa. Kandasamy.
5. The Anklet Story (1977)
6. The Catholic Community in India (1970)
7. Thiruvalluvar and Thirukkural (1989)
8. Barathiyin kattchi (1989) என்பன.
இதில் Thiruvalluvar and Thirukkural Barathiyin Kaatchi இரண்டும் க.நா.சு இறந்தபிறகு மறுபதிப்பாக வந்துள்ளன.
கில்காமெஷ் (உலகத்தின் ஆதிகாவியம்)
உலகத்தின் ஆதிகாவியம் என்று சொல்லப்படுகிற கில்காமெஷ் என்பது பழமையைப் போற்றும் விதமாகவும், ஃபிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய இலக்கியம் கிரேக்க, லத்தின் பாதிப்பினால் ஏற்பட்டது. இப்பாதிப்பைவிட இந்த இலக்கியங்கள் நகரவேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் விதமாகவும் இம்மொழிபெயர்ப்பு க.நா.சுவால் செய்யப்பட்டது என்பதை உணரமுடிகிறது.
விமரிசனம்
தமிழ் நவீன இலக்கியத்தில் முதன்முதலில் தரம் என்பதை வலியுறுத்தியவர் க.நா.சு என்று கூறலாம்.ஏனெனில் முதன்முதலில் தமிழில் சிறந்த இலக்கியாசிரியர்கள் இவர்கள்.உலக இலக்கிய கர்த்தாக்கள் இவர்கள் என்று பட்டியல் போட்டுக் காட்ட ஆரம்பித்ததும் க.நா.சு தான் அதற்காகப் பலரால் தூற்றப்பட்டும் இருக்கிறார். பண்டிதர்கள் மீதும் பெரும் பத்திரிகைகளின் மீதும் ஜனரஞ்சக எழுத்துகள் மீதும் திட்டவட்டமான தாக்குதலை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தியவரும் இவரே.29 (க. பூரணச்சந்திரன், க.நா. சுப்ரமண்யம், திராவிடப் பல்கலைக்கழகம், பக். 16,17)
இலக்கிய சாதனையாளர் என்ற தலைப்பில் க.நா.சு குறிப்பிட்டிருக்கும் (விமர்சித்திருக்கும் ) ஆளுமைகள்:
1. ராஜாஜியும் நானும்
2. புதுமைப்பித்தன் என்று ஒரு மேதை
3. வ.ரா. என்றொரு உற்சாகி
4. ஃபாக்னர் என்கிற நாவலாசிரியர்
5. மாஸ்தி என்று ஒரு தமிழர்
6. கல்கி என்று ஒரு பத்திரிகாசிரியர்
7. கு.ப.ரா என்ற ஒரு தெலுங்கர்
8. ஸாத்ர் காம்யூ, மால்ரோ
9. ஆர். கே. நாராயணன்
10. சண்முகசுந்தரம் என்கிற பண்பாளர்
11. ச.து. சுப்பிரமணியம் என்ற ஒரு யோகி
12. கு. அழகிரிசாமி
13. பி.எஸ். ராமய்யா
14. தகழி சிவசங்கர பிள்ளை
15. ஏ. கே. செட்டியார்
16. டி.கே. சி என்று ஒரு பண்பாடு
17. அம்ருதா ப்ரீதம்
18. சிதம்பர சுப்பிரமணியன்
19. தி. ஜானகிராமன்
20. ஆர்தர் கொய்ஸ்லர்
21. எஸ். வி.வி
22. கம்பதாஸன்
23. கொத்தமங்கலம் சுப்பு
24. வையாபுரிப்பிள்ளை
25. தி.ஜ. ரங்கநாதன்
26. சங்கரராம்
27. கே.எஸ். வேங்கடரமணி
28.ராஜாராவ்
29. வை. கோவிந்தன்
30. கிருஷ்ணன் நம்பி
31. டி.எஸ். சொக்கலிங்கம்
32. பி.ஸ்ரீ. ஆசாரியா
33. அல்லையன்ஸ் குப்புசாமி அய்யர்
34. ஸ்டீபன் ஸ்பெண்டர்
35. திரு.வி.க
36. சாமிநாதையர்
37. ரா. ராகவைய்யங்கார்
38. ரஸிகன்
39. வடுவூரார்
40. கி.ரா. என்று ஒரு மணிக்கொடிக்காரர்
41. அ. சீனுவாஸராகவன்
42. விசுவநாத சத்திய நாராயணா என்று பல்வெறு ஆளுமைகளைப் பற்றி விமர்சனக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இலக்கிய வளர்ச்சி என்ற கட்டுரை தொகுப்பில் வெளிவந்த கட்டுரைகள்:
(விமர்சனம் 1986)
புதுமைப்பித்தன் – காஞ்சனை, தீபன் – அரும்பிய முல்லை, ந. சிதம்பர சுப்பிரமணியன் – இதயநாதம், எஸ்.வையாபுரிப்பிள்ளை – தமிழ்ச்சுடர்மணிகள். லா.ச.ரா - ஜனனி, எஸ்.வி.வி – உல்லாஸ வேளை, வ.வே.ஸு ஐயர்- மங்கையர்க்கரசியின் காதல், யதுகிரி அம்மாள் – பாரதி நினைவுகள், வ.ரா. – நடைச்சித்திரம், சங்கரராம் – மண்ணாசை, ஏ.கே.செட்டியார் – உலகம் சுற்றும் தமிழன், தி.ஜானகிராமன் – கொட்டுமேளம், மு.வரதராஜன் – கரித்துண்டு, தி.ஜ. ரங்கநாதன் – நினைவலைகள், ஆர்.சண்முகசுந்தரம் – நாகம்மாள், கு.அழகிரிசாமி கதைகள், பாரதிதாசன் – கவிதைகள், கு.ப.ரா – கனகாம்பரம் போன்றவை.மேற்குறிப்பிட்ட படைப்பாளர்களையும் படைப்புகளையும் க.நா.சு விமர்சித்திருக்கிறார் என்பதைத் தெரியப்படுத்தவே இப்பட்டிலை உருவாக்கினேன்.
க.நா.சு வின் விமர்சன நூல்கள்
1. கவி ரவீந்திரநாத் தாகூர் (1941)
2. புகழ்பெற்ற நாவல்கள் (1955) இரண்டு தொகுதிகள்
3. முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (1957)
4. படித்திருக்கிறீர்களா? I,III (1957)
5. விமர்சனக்கலை (1959)
6. இலக்கிய விசாரம் (ஒரு சம்பாஷணை) (1959)
7. உலகத்தின் சிறந்த நாவல்கள் (1960)
8. மனித குல சிந்தனைகள் (1966)
9. தமிழ் இலக்கிய விமர்சகர்கள் (1979)
10. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984)
11. இந்திய இலக்கியம் (1984)
12. சிறந்த பத்து இந்திய நாவல்கள் (1985)
13. இலக்கிய சாதனையாளர்கள் (1985)
14. இலக்கிய வளர்ச்சி க.நா.சு பார்வையில் (1986)
15. கலை நுட்பங்கள் (1988)
16. மனித சிந்தனை வளம் (1988)
17. உலக இலக்கியம் (1989)
18. இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் (2002)
19. புதுமையும் பித்தமும் (2006)
க.நா.சு விமர்சகர் பிறர் படைப்புக்கு எதிர்மறையான கருத்துச் சொல்லக்கூடியவர் என்பதை உடைத்தெறிந்தவர்.படைப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தக் கூடியவர் என்பதை அவரின் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் வாயிலாக உணரமுடிகிறது.
எடுத்துக்காட்டாக, 1980இல் ”டில்லியில் துவங்கப்பெற்ற ஓர் இலக்கிய சங்கத்தில் ‘தலைமுறைகள்’ நாவலைப் பாராட்டி க.நா.சு வெளியிட்டிருந்த கருத்துகள், அக்காலத்தில் டில்லியிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த Thought இதழில் ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்த ஆணித்தரமான கட்டுரை பிறகு டில்லி ஓரியண்ட் பேப்பர் பேக்ஸ்க்காக (Orient Paper Backs) ஆங்கிலத்தில் இந்நாவலின் அவருடைய மொழியாக்கம் ( Generation), மிரர் (Mirror), ஆங்கில மாத இதழில் 10 மகத்தான இந்திய நாவல்கள் (Ten Great Novels of India) என்று அவர் எழுதிய ஆங்கிலத் தொடர் கட்டுரையில் இவையெல்லாம் அதுவரை என்னைத் தெரியாதிருந்த தரமான இலக்கிய வாசகர்களின் இடையில் என்னைத் தெரிந்துகொள்ள உதவின”30 என்று நீல பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.
‘க.நா.சு வை ஒரு கடுமையான விமர்சகராகத்தான் தமிழுலகம் அறியும்.ஆனால், முதல் ஐந்து தமிழ் நாவல்களைப் படித்தவர்கள் அவ்வாறு கருதமாட்டார்கள். நாவல் எழுதுவது ஒரு கலை என்றால் அதைப் படித்து அனுபவித்து அனுபவித்ததை மற்றவர்கள் சுவைத்துப் படிக்கும் வண்ணம் எழுதுவதும் ஒரு கலைதான்’31 என்பதை பாரதி முதல் சுஜாதா வரை எனும் கட்டுரையில் காட்டியிருக்கிறார் க.நா.சு.
நாவல்கள்
க.நா.சு சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, விமர்சனம், நாவல்கள் என்று பல தளங்களில் இயங்கியவராக இருந்தாலும் நாவல்களில்தான் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.‘க.நா.சு தன் நாவல்களின் மூலமாக முழு வாழ்க்கையையும் காண முயலுவதாகக் கூறுகிறார்.’32
க.நா.சு 1940களில் நாவல்கள் எழுதுவதில் ஆர்வத்தினைச் செலுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன.
நாவல்கலை என்பது வாழ்க்கையில் அனுபவத்தை ஒட்டியது. அனுபவங்களுக்கு எப்படி முடிவு கிடையாதோ அப்படியே நாவல் கலைக்கும் முடிவு கிடையாது. சங்க இலக்கியம் (கவிதை), காவியம் என்கிற துறைகள் கவர்ச்சியும் பெருமையும் பெற்றிருந்த அளவுக்கு தற்போது நாவல் என்கிற துறை பெருமையும் கவர்ச்சியும் பெற்றிருக்கிறது என்று க.நா.சு நாவல் கலையில் குறிப்பிட்டுள்ளார்.
1985இல் க.நா.சு ‘நாவல்கலையில்’ தன்னுடைய எழுத்தைப் பற்றி நம்பிக்கை தொனியோடு எழுதுகிறார்.‘முதல் நாவல் பசி (1942) இல் வெளிவந்தது.முதலில் எழுதிய நாவல் சர்மாவின் உயில் (1945) இல் புத்தகமாக வெளிவந்தது. பின்னர் வரிசையாகப் பொய்த்தேவு (1946), ஏழுபேர்(1946) , ஒருநாள் (1951), அசுரகணம் (1956), வாழ்ந்தவர் கெட்டால்(1957), ஆட்கொல்லி (1958), பெரிய மனிதன் (1958), அவரவர் பாடு (1963) ஆகிய நாவல்கள் வெளிவந்தன’33என்கிறார்.
ஒரு நாவலைப் போல இன்னொன்று அமையக்கூடாது என்றும் உத்தி விசேஷங்கள் அளவில் சோதனை முயற்சியும் கவனமும் வேண்டுமென்றும் சொந்தமான ஒரு தனி தத்துவ தரிசனத்துடன் எழுதினார்.மிகப்பழைய பாணியிலிருந்து மிகவும் நவீனமான பாணிகள் வரையில் இந்த நாவல்களில் கையாண்டு பார்த்து நாவல்கலையின் எல்லைகளை விரிவாக்க வழி செய்திருக்கிறார்.
•பொய்த்தேவு என்பதில் ஒருவன் ஜீவியத்தை எட்டிநின்று சொல்ல முயன்றிருக்கிறார்.
•ஏழுபேரில் ஒரு சமுதாயப் பிரச்சனையை சம்பந்தப்பட்டவர்கள் எப்படி அணுக முயல்கிறார்கள் என்று சொல்லப் பார்த்திருக்கிறார்.
•ஒருநாளில் கிராமத்துக்குப் புதிதாக வருகிற ஒரு வாலிபன் மனோபாவத்தை எப்படி கிராமத்துப் பாத்திரங்கள் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார்.
•அசுரகணம் நாவலில் மனோதத்துவ ஆராய்ச்சி ரீதியில் ஒருவன் மனநோக்காகச் சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன.
•அவரவர்பாடு என்பது ஒரு திரில்லர் முயற்சி எழுத இந்நீண்ட விமர்சனம் க.நா.சு படைப்பாளி என்ற மனோநிலையிலிருந்து வெளிப்படுகிறது.
க.நா.சுப்ரமண்யம் நாவல்களை பழ. அதியமான் பின்வருமாறு அட்டவணைப்படுத்தி உள்ளார். அவை வருமாறு,
அசுரகணம் (1959), அவதூதர் (1988), அவரவர் பாடு (1963), ஆட்கொல்லி(1957), ஆயுள் தண்டனை, ஏழுபேர் (1946), ஏழுமலை, ஒருநாள் (1946), கந்தர்வலோகத்தில் கொலை, கருகாத மொட்டு (1966), கோதை சிரித்தாள் (1986), கோபுர வாசல், சக்தி விலாசம், சத்யா கிரஹி, சமூகச் சித்திரம் (1953), சர்மாவின் உயில் (1948), தந்தையும் மகளும், தாமஸ் வந்தார், நடுத்தெரு. நளினி (1959), நான்கு நாவல்கள் (1955), பசி (1943), பட்டணத்து வாழ்வு (1961), பித்தப்பூ (1987), புழுதித்தேர், பெரிய மனிதன் (1959), பொய்த்தேவு (1966), மாதவி (1959), மூன்று நாவல்கள் (1985), வாழ்ந்தவர் கெட்டால் (1951), வாழ்வும் தாழ்வும் என்பன. மேலும், அச்சில் வராதவைகளாக திருவாலங்காடு, மால்தேடி, வக்கில் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர் போன்றவைகளாக மொத்தம் முப்பத்தேழு நாவல்களை குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்டுள்ள நாவல்களில் அடைப்புக்குள் கொடுத்திருக்கும் ஆண்டு அவர் பார்த்துள்ள அவருக்கு கிடைத்துள்ள பதிப்புகளின் விவரங்களாக இருக்கலாம். அது நாவல்கள் வெளிவந்த ஆண்டாக இருக்க முடியாது. ஏனெனில் ஆய்வின்போது கிடைத்த நாவல்களின் பதிப்பு ஆண்டுகள் மாறியுள்ளன. அவை,
பசி (1942), சர்மாவின் உயில் (1945), பொய்த்தேவு (1946), ஒருநாள் (1951), வாழ்ந்தவர் கெட்டால் (1951), அசுரகணம் (1956), நளினி (1956), ஆட்கொல்லி (1958), அவரவர் பாடு (1963), பித்தப்பூ (1984) போன்றவைகளாகும்.
நாவல் படைப்பிற்கென க.நா.சு சில அடிப்படையான கருத்துகளை வைத்திருப்பதாக க. பூரணச்சந்திரன் குறிப்பிடுகிறார். அவை,
“ஒரு நாவலைப் போல இன்னொரு நாவல் அமையக்கூடாது; சோதனை முயற்சிகள் நாவல்களில் இடம்பெற வேண்டும்; வித்தியாசமான உத்திகளுடன் நாவலின் உருவமும் உள்ளடக்கமும் அமைய வேண்டும்.சொந்தமான ஒரு தத்துவ தரிசனம் அதில் காணப்பட வேண்டும்“34 என்பன.
நாவல்கலை குறித்து தான் படித்த அத்தனை உத்திகளையும் க.நா.சு தன்னுடைய நாவல்களின்தான் காட்டியிருப்பதாகக் கூற விரும்புகிறார். அவை, நவீனமான பாணி, ஆன்மீகம், கிராமியம், மனோதத்துவம், தத்துவ தரிசனம், திரில்லர் முயற்சி என அனைத்தையும் ஒவ்வொரு நாவலிலும் பயன்படுத்தியிருப்பதாக க.நா.சு கூறுகிறார்.
இறுதியாக,
•க.நா.சு தன் சமகால எழுத்தாளர்களுக்கும் எழுதுவதற்கு இடம்கொடுத்து அவர்கள் முன்னேற வழிவகுத்தவர் என்பதையும் அவரின் எழுத்துகள் தமிழ்ச்சூழலிலும் பிற இடங்களிலும் விரிவாகப் பரவலாக்கப்பட்டுள்ளன என்பதையும் உணரமுடிகிறது. தான் முப்பது வயதில் எடுத்த முடிவின்படி கணக்கில்லாமல் எழுதிக் குவித்தவர் என்பதை அறியமுடிகிறது.
•க.நா.சு வின் படைப்புகள், படைப்புகள் வாயிலாகப் பிற எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட பரிச்சயம், இவர் ஆரம்பத்தில் எழுதிவந்த பத்திரிகைகள் போன்றவற்றையும் இவரின் புனைப்பெயர்கள் உட்பட சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், மொழிபெயர்ப்பின் சிறப்புகள், மொழிபெயர்ப்பு பற்றி க.நா.சு கூறும் கருத்துகள், ஆங்கில நூல்கள், விமரிசனங்கள் போன்றவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது.
•இக்கட்டுரையின் ஊடாக க.நா.சுப்ரமண்யம் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்நாள் முழுவதும் எழுதுவதற்காகவே நேரத்தை செலவிட்டவர் என்பதும் தத்துவத்துடன் அவருக்கு இருந்த உடன்பாடும், எழுதுவதற்காக அவர் தந்தை ஊட்டிய ஊக்கமும் அளவிடற்கரியன.
•மேலும், இவரின் இளமைக்கால கட்டுரைகள், தமிழின் மீது இவருக்கு இருந்த ஈடுபாடு, தமிழின் மீது கொண்ட தாக்கத்தினால் இவர் எழுதிய படைப்புகளை இன்றைய ஆய்வுலகம் அறிந்துகொள்ள இக்கட்டுரை வழிவகுக்கும்.
•க.நா.சு வின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் ஆளுமைகள், இவரின் ஒட்டுமொத்த நாவல்கள் அச்சில் வந்தவை, வராதவை என்று இன்னும் க.நா.சுவின் அறியப்படாத படைப்புகளை வெளிக்கொணரவும் கோட்பாடுகளின் அடிப்படையில் க.நா.சு வின் அனைத்துப் படைப்புகளை ஆய்வுசெய்யவும் இக்கட்டுரை முயலும்.
சான்றெண் விளக்கம்
1. எழுத்துப் பிரசுரம், எதற்காக எழுதுகிறேன், ப.41.
2. மேலது,
3. மேலது, பக். 40
4. எழுத்துப் பிரசுரம். ப.3
5. நீல பத்மநாபன், விமர்சனங்களையும் படைப்பிலக்கியங்களாகக் கருதியவர்
(கட்டுரை), காக்கைச் சிறகினிலே, இதழ், மார்ச் 2013.
6. குப்புசாமி, ஜி, உன்னதங்களைப் பரிந்துரைத்த ஒற்றைக்குரல் (கட்டுரை),
7. அதியமான்.பழ, க.நா.சு : ஓர் எழுத்தியக்கம், (கட்டுரை) காலச்சுவடு, 144. டிசம்.2011.
8. க.நா.சு., புதுமையும் பித்தமும், காலச்சுவடு பதிப்பகம்.
9. திருமலை, ம. தமிழ்ச்சிறுகதை நேற்றும் இன்றும் ப.II, ஐந்திணைப் பதிப்பகம்,
10. கணேசன், பு.சி, க.நா.சுவும் கைலாசபதியும் ப.40, காவ்யா, 1988.
11. தஞ்சை பிரகாஷ், இந்திய இலக்கியச் சிற்பிகள், க.நா.சு, சாகித்திய அகாதெமி.
12. அதியமான். பழ. க.நா.சு : ஓர் எழுத்தியக்கம், (கட்டுரை) காலச்சுவடு 144, டிசம், 2011.
13. க.நா.சு, நாவல்கலை, ஸ்டார் பிரசுரம், 1985.
14. க.நா.சு., க.நா.சு, கதைகள், ஸ்டார் பிரசுரம்.
15. பூரணச்சந்திரன்.க. க.நா.சுப்ரமண்யனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், ப.16. சாகிக்திய அகாதெமி.
16. மேலது.,
17. பூரணச்சந்திரன்.க., க.நா.சுப்ரமண்யம், ப.V, 14,
திராவிடப் பல்கலைக்கழகம்,மேலது பக் 59 -60
18. க.நா.சு, சரஸ்வதி ஆண்டுமலர், 1959.
19. மேலது.,
20. க.நா.சு, மயன் கவிதைகள், 1977.
21. பூரணச்சந்திரன்.க. க.நா.சுப்ரமண்யம், ப.15, திராவிடப் பல்கலைக்கழகம்.
22. குப்புசாமி.ஜி., உன்னதங்களைப் பரிந்துரைத்த ஒற்றைக் குரல், காலச்சுவடு இதழ், மார்ச், 2013.
23. மேலது.,
24. அரவிந்தன், சு.ரா., நினைவோடை (தொகுப்பு), காலச்சுவடு பதிப்பகம், மு.ப.ஆகஸ்ட், 2003.
25. குப்புசாமி. ஜி., உன்னதங்களைப் பரிந்துரைத்த ஒற்றைக்குரல், காலச்சுவடு இதழ், மார்ச். 2013.
26. நீல பத்மநாபன், காக்கைச் சிறகினிலே, மார்ச் 2013.
27. குப்புசாமி.ஜி, உன்னதங்களைப் பரிந்துரைத்த ஒற்றைக் குரல், காலச்சுவடு இதழ், மார்ச் 2013.
28. பூரணச்சந்திரன்.க., க.நா.சுப்ரமண்யம், பக். 16 -17, திராவிடப் பல்கலைக்கழகம்.
29. நீல பத்மநாபன், விமர்சனங்களையும் படைப்பிலக்கியங்களாகக் கருதியவர் க.நா.சு (கட்டுரை), காக்கைச் சிறகினிலே, மார்ச், 2013.
30. க.நா.சு பாரதி முதல் சுஜாதா வரை, ஸ்டார் பிரசுரம். க.நா.சு, நாவல் கலை, ஸ்டார் பிரசுரம், மே. 1988.
32. கணேசன், பு.சி. க.நா.சுவும் கைலாசபதியும், காவ்யா மு.ப 1988.
33. பூரணச்சந்திரன், க. க.நா.சுப்ரமண்யம், திராவிடப்பல்கலைக்கழகம்
34. மேலது. பக். 59 -60.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.