கலாநிதி நா. சுப்பிரமணியன்[ஐக்கிய ராச்சியம் லிவர்ப்பூல் ஹோப் பல்கலைக் கழகத்தில் 2018ஜூன் 27,28,29 நாள்களில்  நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டு ஆய்வரங்கில் வாசிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரை. கட்டுரையாளர் : பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் ]


தோற்றுவாய்
திருக்குறள் பற்றிய பார்வைகளிலே கவனத்துட் கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கிய அம்சத்தை ஆய்வுநிலையில் முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகிறது. அந்நூலைப் பற்றி இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்துள்ள ஆய்வுப் பார்வைகள் பலவும் அதனை ’உலகப் பொதுவானஒரு அறநூல் ’ஆக, சரியாகவே இனங்காட்டிவந்துள்ளன. அவ்வகையில் அப் பார்வைகள் பலவும் அந்நூலின் ’அறவியல் சார்ந்த உள்ளடக்க அம்சங்களின் சிறப்பு’களை, உலகளாவியநிலைகளிலான அத்தகு சிந்தனை மரபுகளுடன் தொடர்புறுத்தி நோக்கித் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளன என்பதும் வெளிப்படை. இவ்வாறு அதனை உலகப் பொது வானஒரு அறநூலாகக்கொண்டு நிகழ்த்தப் பட்டு வரும் ஒப்பியல்சார் பார்வைகளிலே, ‘இதுவரை தனிநிலையில் உரிய கவனத்தைப்பெறாத’ ஒரு அம்சத்தை அடையாளங் காட்டும் ஆய்வுமுயற்சியாகவே இக்கட்டுரை அமையவுள்ளது. அந்தஅம்சம், அந்நூலின் ’வாழ்க்கை பற்றிய நோக்கு நிலை‘ தொடர்பானதாகும். குறிப்பாக, ’இல்வாழ்க்கை’ எனப்படும் ’குடும்பக் கட்டமைப்பு சார்’ வாழ்வியலுக்கு அந்நூல் அளித்துள்ள முதன்மையே  இவ்வாய்விலே நமது கவனத்துட் கொள்ளப்படுகிறது. இவ்வாறாக அவ்வாக்கம் அளித்துள்ள அம்முதன்மை நிலையின் வரலாற்று முக்கியத்துவத்தை நுனித்து நோக்கும் முயற்சியே இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது. 

திருக்குறளின் கட்டமைப்பிலே – குறிப்பாக பால் மற்றும் இயல்களுக்குப் பெயரிடுவ திலும் அவற்றின் வைப்பு முறைகளிலும் - வேறுபாடுகள் நிலவி வருவதால் இங்கு எனது இப்பார்வைக்கு பரிமேலழகருரையுடனான கட்டமைப்பையே ஆதாரமாகக் கொண்டுள் ளேன் என்பதை முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறேன். 

1. திருக்குறள்  இல்வாழ்க்கைக்கு தந்துள்ள முதன்மை –சில சான்றுகள் 

வாழ்க்கை பற்றிய நோக்குநிலைகளை முக்கியமான இரு வகைகளில் அடக்கலாம். அவற்றுள் முதலாவது நிலையானது கணவன்>மனைவி> பிள்ளைகள் மற்றும் சுற்றத்தினர் ஆகியோரை உள்ளடக்கியதான ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையாகும். மேற்படி குடும்பக்கட்டமைப்புசார் நிலையே தமிழில் இல்வாழ்க்கை எனப்படு கிறது. இதிலே உலகியல்சார்ந்த நடைமுறை அனுபவங்கள், அவைசார்ந்த அற-ஒழுக்க நியமங்கள் மற்றும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் முதலியன முக்கியத்துவம் பெறுகின்றன.

இரண்டாவது நிலையானது ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை  ஏற்காத – அதாவது அதற்குப் புறத்தே நிற்கும் - நிலையாகும். இந்த நிலையானது மேற்படி உலகியல்சார் அனுபவங்களினின்று விலகிநிற்பதாகும். குறித்த சில அற - ஒழுக்கநியமங்களைப் பேணிக் கொள்வது மற்றும் சமூகத்துக்கான சில கடமைகளை ஆற்றுவது ஆகிய எல்லைகளுடன் இந்த இரண்டாவது நிலை நிறைவுபெற்றுவிடுகிறது.

 

இவ்வாறான நிலையே தமிழில் துறவுநிலை எனப்படுகிறது. திருக்குறள் மேற்படி இரு நிலைகளையும் பற்றி எடுத்துரைத்துள்ளது. எனினும் இவற்றுள் ’இல்வாழ்க்கை’ எனப்படும் ’குடும்பக் கட்டமைப்பு சார் வாழ்விய’லுக்கே அந்நூல் முதன்மை அளித்துள்ளது .

அந்நூலின் அறத்துப்பால் என்ற முதற் பகுதியைச் சார்ந்த 38 அதிகாரங்களில்  பெரும்பாலான அதிகாரங்கள்(20 அதிகாரங்கள்) இல்வாழ்க்கை தொடர்பான அறவியல் அம்சங்களையும் அநுபவ நிலைகளையுமே பேசுவன. இரண்டாம் பகுதியான பொருட் பால் கூறும் அரசியல், பொருளியல் மற்றும் சமூகவியல் ஆகியன சார் செய்திகள் அனைத்துமே குடும்பக்கட்டமைப்பு சார்ந்த சமூக மனிதர்களை மையப்படுத்தியவையேயாகும். மூன்றா வதான காமத்துப்பால் முழுமையும் மேற்படி குடும்பக் கட்டமைப்பின் அடிப்படையிலான ஆண்-பெண் (காதலன் -காதலி மற்றும் கணவன் –மனைவி)உறவுநிலைகள் சார்ந்த அநுப வங்களின் பதிவுகளாகவே திகழ்வனவாகும். அவ்வகையில் 20+70+25=115 அதிகாரங்கள் இல்லறவாழ்வுடன் தொடர்புடையனவேயாகும். அறத்துப்பாலின் ஒருபகுதியான துறவறவிய லின் 13அதிகாரங்களும் பாயிரவியலில் இடம்பெற்றுள்ள நீத்தார்பெருமை என்ற அதிகாரமும் மட்டுமே (13+1+14) குடும்பக் கட்டமைப்புக்கு அப்பாலான வாழ்வியல் பற்றிப் பேசுகின்றன. எனவே திருக்குறளின் மிகப் பெரும்பாலான அதிகாரங்கள் இல்லற வாழ்வு சார்ந்தனவேயென்பது வெளிப்படை. 

இவ்வாறாக திருக்குறளானது, இல்வாழ்க்கை என்ற வாழ்வியல் முறைமைக்கு  அதிகார எண்ணிக்கையடிப்படையில் முதன்மை வழங்கியுள்ளதுமட்டு மன்றி, கருத்தியல் நிலையிலும் முதன்மை வழங்கியுள்ளது. அதன் சிலகுறள்கள், ’இல்வாழ்க்கை யானது துறவுநிலையைவிட மேலானது என்ற பொருள்படும் வகையிலான கருத்துகளையும் முன்வைத்துள்ளன. பின்வரும் மூன்று குறள்கள் இங்கு நமது கவனத்திற் குரியவையாகும் . அவை:

“ துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை “ (குறள் : 42)

“ அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற் 
போஒய்ப் பெறுவ தெவன்” ( குறள்:46)

“ இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை” ( குறள்: 47)

மேற் சுட்டிய முதலாவது குறள், ’இல்வாழ்வானுடைய துணையை நாடிநிற்பவர் களில்ஒரு பகுதி யினராக’த் துறவிகளைச் சுட்டிநிற்பது வெளிப்படை. இரண்டாம்குறளானது, ’இல்வாழ்வான் தனக்குரிய அறவழிகளில் செயற்பட முடியுமாயின் அதற்குப் புறம்பான எவ்வகை வாழ்க்கை முறைமைகளையும் அவன் நாடவேண்டிய அவசியம் இல்லை’ என்ற பொருளைத் தருவது. மூன்றாவது குறளிலே, ’பிற வழிகளில் வாழ முயலும் எல்லோரையும் விட இல்வாழ்வானே தலையாயவன்’ என்ற ஒப்பீட்டுக்குக் குறிப்பை நோக்கமுடிகிறது. மேற்சுட்டிய இறுதி இரு குறள்களிலும் இல்வாழ்க்கைக்குப் புறம்பான முறைமைகள் என உணர்த்தப்படுபவை குறிப்பாக துறவு நெறியையே சுட்டிநிற்பன என்பது உய்த்துணரக் கூடிய தாகும். 

திருக்குறளின் இரண்டாம் பகுதியான பொருட்பால் கூறும் செய்திகள் அனைத்துமே குடும்பக்கட்டமைப்பு சார்ந்த சமூக மனிதர்களை மையப்படுத்தியவையேயாகும் என்பது மேலே பொதுவகையில் நோக்கப்பட்டது. அத்தொடர்பிலே சிறப்புநிலையிலான மேலதிக விளக்கமொன்று இங்கு அவசியமாகிறது.

பொருட்பாலில் இடம்பெற்றுள்ள குடிமை(96) மற்றும் குடி செயல்வகை (103)ஆகிய அதிகாரங்கள் குடும்ப வாழ்வியலை மையப்படுத்திய பண்புநலங்களையும் செயன்முறை களையும் சுட்டி நிற்பனவகும். குடிமை என்பது, ’குடும்பவாழ்வுக்குரிய சிறப்புப்பண்பு’ என்ற பொருளையும் குடிசெயல்வகை என்பது, ’குடும்ப வாழ்வியல்சார் நற்பண்புகளை மேம்படுத்தும் செயல்திறன்’ என்ற பொருளையும் தருவன. ’நற்குடியில் – அதாவது பலதலைமுறைகளாக நற்பண்புகளைப் பேணிவரும் குடும்பத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே பழி பாவங்களுக்கு அஞ்சுபவர்களாகவும் நடுவுநிலைமையைப் பேணுபவர்களாகவும் திகழ்வர்’ என்ற கருத்து குடிமை அதிகாரத்தின் முதலாவது குறளிலே எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அக்குறள் வருமாறு:

“ இற்பிறந்தார் கண்ணல்லதில்லை இயல்பாகச் 
செப்பமும் நாணும் ஒருங்கு ” (குறள்:951)

இதிலே இற்பிறந்தார் என்பதன் அடிச்சொல்லான ’இல்’  என்பது குடும்பம் என்ற இல்லற அமைப்பையே சுட்டிநிற்பது என்பது வெளிப்படை. இவ்வாறான ‘குடும்பத்தைப் பேணுவதே – அதாவது குடும்ப வாழ்வின் சிறப்பம்சங்களைப் பேணிக்கொள்வதே ஒருவரது ஆளுமைப் பண்புக்குப் பெருமை தருவது’ என்ற கருத்து குடிசெயல்வகை என்ற அதிகாரத்திலே இடம்பெற்றுளது. இப்பொருள்தரும் குறள் வருமாறு: 

“நல்லாண்மை என்ப தொருவர்க்குத் தான்பிறந்த 
இல்லாண்மை யாக்கிக் கொளல்” (குறள்: 1026)

திருக்குறளானது,‘வாழ்க்கைபற்றியநோக்குநிலை‘என்றவகையிலே’இல்வாழ்க்கை’  எனப்படும் ’குடும்பக் கட்டமைப்பு சார் வாழ்விய’லுக்கே முதன்மை அளித்துள்ளது.’ என்ப தற்கு மேலே தந்துள்ள விளக்கங்களே போதுமானவை.

இவ்வாறு, ’திருக்குறள்’, ’இல்வாழ்க்கை’க்குத் தந்துள்ளமுக்கியத்துவ’த்தைப் புரிந்து கொள்ளும் நிலையில் அடுத்து, நாம் ஆய்வுநோக்கிலே தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம்,’அந்நூல் எழுந்த காலப் பகுதிக்கு முன்னரோ அல்லது சமகாலத்திலோ இவ்வாறன இல்வாக்கைக்கு முக்கியத்துவமளிக்கும் வேறு சிந்தனைகள் இந்திய மண்ணிலோ அல்லது உலகளாவிய நிலையிலோ நிலவியுள்ளனவா?’ என்பதாகும். இவ்வாறான வினாவை எழுப்பும் நிலையிலே முதலில், திருக்குறளின் காலம் பற்றிய ஒரு குறிப்பு அவசியமாகிறது. அவ்வாக்கம் எழுந்த காலம் தொடர்பாக ஆய்வுலகிலே இதுவரை ஒத்தகருத்து உருவாகவில்லை. அதன் காலத்தை கி.மு. முதலாம் நூற்றாண்டுவரை கொண்டுசெல்லும் சிந்தனைகள் தமிழ் ஆய்வுச்சூழலில் நிலவுகின்றன. ஆயினும் அவ்வாக்கம் சங்க இலக்கியங்களின் காலத்திற்குப் பிற்பட்டது என்ற வகையிலும் பக்தியிலக்கியங்களின் காலத்துக்கு முற்பட்டது என்றவகையிலும் கி.பி.3-4ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தது. அதாவது சங்கமருவியகாலம் சார்ந்தது- என்பதே இக்கட்டுரையாளரின் நிலைப்பாடாகும். அவ்வகையில் குறிப்பிட்ட அக்கால கட்டத்தில் அல்லது அதற்கு முன்னர் மேற்படி ’இல்வாழ்க்கையை முதன்மைப்படுத்தும் சிந்தனைகள் ’ இந்திய நிலையிலும் உலக நிலையிலும் நிலவியுள்ளனவா? என்பதே இங்கு நம்முன் நிற்கும் வினாவகும். 

இந்த வினாவுக்கான முழு நிலையிலான விடையை இந்த ஆய்வுரையில் முன்வைப்பது சாத்தியமில்லை. ஒப்பியல்நிலையிலான விரிவான பார்வைகள் மற்றும் விவாதங்கள் ஆகியவற்றின் பின்னரே இவ்வினாவுக்கான திட்டப்பாங்கான விடையைக் காண்பது சாத்தியமாகும். எனவே அவ்வாறான ஒப்பியல் நோக்கிலான விரிவான பார்வையில் கவனத்தைப் பெறக்கூடிய அடிப்படையான சில முக்கிய அம்சங்கள் மட்டுமே இவ்வாய் வுரை சுட்டிக்காட்டப்படவுள்ளன. இவ்வகையிலே முதலிலே கி. பி. 4ஆம் நூற்றாண்டு வரையான கால கட்டத்தில் இந்தியமண்ணிலும் உலகளாவிய நிலையிலும் நிலவிய சிந்தனைகளின் பொதுவான நோக்குநிலைகள் நமது முதற்கவனத்துக் குரிய வாகின்றன 

2. கி.பி.நான்காம் நூற்றாண்டுவரையான காலப்பகுதியில் இந்திய மண் ணிலும் உலகளாவிய நிலைகளிலும் நிலவிய சிந்தனைகளின் பொது வான நோக்கு நிலைகள் - சுருக்கக் குறிப்பு

கி. பி. நான்காம் நூற்றாண்டுவரையான காலப்பகுதியில் இந்தியமண்ணிலும் உலக ளாவிய நிலையிலும் நிலவிய சிந்தனைகளை அவற்றின் நோக்குநிலைகளின் அடிப்படையில் மூவகைப் படுத்தலாம். ஒரு வகையின,’உலகத்தின் தோற்றம், இருப்பு மற்றும் அதன் இயல்பு ஆகியவை தொடர்பான அடிப்படைமசங்களை ஆராயும் நோக்கில் உருவானவை’யாகும். இன்னொருவகையின, ’இறை நம்பிக்கை மற்றும் அவை தொடர்பான சடங்காசாரங்கள்’ ஆகியவற்றை விளக்கியுரைக்கும்  நோக்கில் உருவா னவை. மூன்றாவதுவகையின,’மனிதநடத்தை மற்றும் வாழ்வியல் நிலைப்பாடுகள் ஆகியவற்றை மையப்படுத்தி அறம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் நோக்கில் உருவானவை’யாகும். இவை மூன்றும் தனித்தனியாக உருகியவை யாயினும் நாளடைவிலே ஒன்றோடொன்று தொடர்புகொண்டு தம்மை வலுப்படுத்திக்கொண்டன . இது மேற்படி காலகட்டம்வரையான சிந்தனைமரபுகளின் பொதுவான வரலாற்றுச் செல்நெறி யாகும். 

’உலகத்தின் தோற்றம், இருப்பு மற்றும் அதன் இயல்பு ஆகியவற்றை ஆராயும் நோக்கிலான சிந்தனைகளுக்கான மூலநிலைகளை இந்திய வேதமரபிலும் கிரேக்கத்தின் ‘யுனிக்’ தத்துவவாளர்களின் சிந்தனைகளிலும் நோக்கியுணரமுடியும்.1 இறைநம்பிக்கை சார்ந்த சிந்தனைகளுக்கு முக்கிய மூலாதாரங்களாக அக்காலப்பகுதியில் திகழ்ந்தவை இந்தியமண்ணின் வேதமரபுசார் சிந்தனைகளும் மேலைத்தேயத்தில் உருவாகியிருந்த யூதமத கிறிஸ்தவ மத சிந்தனைகளுமாகும். வடமொழியில் அமைந்தவையான இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய மூல நூல்கள் அவற்றின் வழிவந்த உபநிடதங்கள் மற்றும் புராணங்கள், இதிஹாஸங்கள், மனுஸ்மிருதி முதலிய தர்மசாஸ்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பெருந் தொகுதியே இங்கு வேதமரபுச் சிந்தனைகள் எனச் சுட்டப்படுகின்றன. மேற்படி மூன்றாவதான மனித நடத்தை தொடர்பாக உருவானவை என்ற வகையிலே இந்தியமண்சார்ந்தவையான சமணம், பௌத்தம் ஆகியன முக்கியமானவை. 

மேற்படி மூவகைச் சிந்தனைகளில் முதல் இரண்டும் பொதுவாக இல்வாழ்க்கை என்ற குடும்ப வாழ்வியலின் தளத்தில் முளைவிட்டன என்றே கொள்ளப்படவேண்டியன. அத்துடன் அத்தளத்தைச் சார்ந்துநின்றே வளர்ந்தவையுமாகும். மூன்றாவதானசமணம், பௌத்தம் ஆகியன இல்வாழ்க்கைக்குப் புறம்பான தளத்தில் – குறிப்பாகத் துறவுநிலை சார்ந்தவர்களின் பார்வைகளாக – உருவானவையாகும். இல்வாழ்க்கை சார்ந்த அனுபவ நிலைகளை விமர்சிப்பதான போக்குடன் உருவானவை இவை என்பதே அவை எமக்குப் புலப்படுத்தி நிற்கும் பொதுவான காட்சியாகும். 

இனி, மேற்படி மூவகைச் சிந்தனைகளையும் திருக்குறளின் இல்வாழ்க்கை தொடர்பான பார்வையுடன் ஒப்பிடும் நிலையில் புலப்படும் பொதுமை மற்றும் வேறுபாடு ஆகியவற்றை நோக்கலாம் 

3. ஒப்பியல் நோக்கிலே …

மேற்படி மூவகைச் சிந்தனகளுள் மேலைத்தேசங்களின் சிந்தனைகளாக அறியப்பட் டவை இல்வாழ்க்கையின் முக்கியத்துவம் தொடர்பாகத் திருக்குறள் தருவது போன்ற விரிவான செய்திகளை எடுத்துக் கூற முற்பட்டனவல்ல என்பது இங்கு நமது கவனத்துட் கொள்ளவேண்டிய செய்தியாகும். திருக்குறளை ஆய்வு நோக்கில் அணுகிய மேலைத் தேசத் தவர்கள் இத்தகைய சிந்தனைகள் அம்மண்ணில் நிலவியமைக்கான சான்றுகள் எவற் றையும் எடுத்துக்காட்ட முற்பட்ட தாகவும் எனது பார்வைக்கெட்டியவகையில் தெரியவில்லை. அவ்வகையில் திருக்குறள் இல்வாழ்க்கை பற்றிப் பேசும் செய்திகள் மேற்படி மேலைச் சிந்தனைகளிலிருந்து வேறுபட்டதாகவே கொள்ளப்படவேண்டியனவாகும்.  

இந்தியச்சிந்தனைகள் என மேலே நாம் நோக்கியவற்றுள் சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய இரண்டும் இல்வாழ்க்கை சார்ந்து உருவான சிந்தனைகள் அல்ல என்பதையும் அது சார்ந்த அனுபவநிலைகளை விமர்சிப்பதான பண்புடன் உருவானவை என்பதையும் மேலே நோக்கியுள்ளோம். உலகியல் அம்சங்களைத் துன்பியலாக அணுகுவதே இவற்றின் பொதுவான நோக்குநிலையாகும். இவற்றுள் பௌத்தமானது உலகியல் வாழ்வைத் துக்கம், துக்கோற்பத்தி, துக்கநிவாரணம், துக்கநிவாரண மார்க்கம்  ஆகிய தளங்களில் நின்றே தரிசிப்பது என்பது வெளிப்படை. அவ்வகையில் உலக நிலையாமை, வாழ்க்கை நிலை யாமை மற்றும் வினைப்பயனின் தொடர்ச்சி முதலான கோட்பாடுகளை முன்னிலைப் படுத்தல் மேற்படி இரு சிந்தனைகளுக்குமான பொதுவான பண்புகளாகும். இவற்றின டிப்படையில் இன்பியல் உணர்வுகளை இகழ்வது உடலை வெறுப்பது ஆகிய எல்லைகள் வரை இவ்விரு சிந்தனைகளும் சென்றுள்ளன. இத்தொடர்பில் இரு சான்றுகள் மட்டும் இங்கே தரப்படுகின்றன. 

“முல்லை முகைமுறுவல் முத்தென்றிவை பிதற்றும் 
கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவனோ 

எல்லாருங்காணப் புறங்காட்டுதிர்ந்துக்க 
பல்லென்பு கண்டொழுகுவேன்.” (நாலடியார்:45)

“வினையின் வந்தது வினைக்கு விளைவாயது
புனைவன நீங்கிற் புலால் புறத்திடுவது 
மூப்பு விளிவுடையது தீப்பிணி இருக்கை 
-------- ------- -------- --------
மக்கள் யாக்கை இது …. ” (மணிமேகலை: 4 : 113,-15,20)

இவ்விரு பாடல்களும் ஏறத்தாழத் திருக்குறளின் சமகாலத்தில் தமிழகத்தில் நிலவிய சமணம் மற்றும் பௌத்தம் ஆகியன சார்ந்த இலக்கியங்களின் பதிவுகளாகும். இவற்றின் பொருள் வெளிப்படை. நிலையாமை மற்றும் வினைப்பயன்  ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் இன்பியல் உணர்வுகளையும் உடலையும் வெறுத்தொதுக்கும் பண்பை இவற்றில் நோக்கியுணரமுடியும் எனவே இல்வாழ்க்கையின் அநுபவங்களையும் பொறுப்பு களையும் பற்றித் திருக்குறள் பேசும் செய்திகள் இவ்விரு சிந்தனைகளிலிருந்தும வேறுபட்டவை என்பது தெளிவாகவே தெரிவதாகும். 

ஆயினும் சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய சிந்தனைகளுடன் திருக்குறள் கொண்டிருக்கக்கூடிய உறவை முழுதாகப் புறக்கணிகவும் முடியாது என்பதையுமிங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. அந்நூலிலே பொதுநிலையிலான அறம் மற்றும் ஒழுக்கம் ஆகியனபற்றிப் பேசுமிடங்களிலும் துறவுநிலை பற்றிய விளக்கங்களிலும் மேற்படி இரு சிந்தனைகளின் செல்வாக்கு உளது என்பது வெளிப்படை. இத்தொடர்பில் ஆய்வாளர் பலரும் விரிவாகவே எடுத்துரைத்துள்ளனர். பௌத்த நூலான தம்மபதத்தின் சிந்தனைகளுடன் திருக்குறளின் கருத்துகள் பல ஒத்துள்ளமையும் ஆய்வாளர் பலராலும் எடுத்துக் காட்டப் பட்டுளது.

இவ்வாறு அவ்விரு சிந்தனைகளின் செல்வாக்கானது திருக்குறளில் புலப்படும் நிலைகளை ஆராய்ந்தறிய முற்பட்டவர்களில் பலரும் அவ்வச் சிந்தனைகளின் தளத்திலேயே அந்நூல் உருவாகியிருக்கவேண்டும் என்றமுடிவுகளுக்கும் வந்துள்ளனர். குறிப்பாக, பெரும் பான்மையான ஆய்வாளர்கள் சமணம் சார்ந்த அறநூலாகவே திருக்குறளை அடையாளப் படுத்தியுள்ளனர். தொடர்ந்து அடையாளப்படுத்தியும் வருகின்றனர். 

திருக்குறளைச் சமண நூலாகக் கருதுவதை மறுத்து, பௌத்தத்தின்பால் அதனை இட்டுவரும் வகையிலான விவாத நிலைப்பட்ட பார்வைகளும் ஆய்வுலகில் பதிவாகியுள்ளன. ’திருக்குறளில் சமணமா?’ என்ற தலைப்பிலே திரு. மருதமுத்து என்பார்  எழுதியுள்ள கட்டுரை இவ்வகையில் குறிப்பிடத்தக்கவொன்றாகும். 2

மேற் சுட்டியவாறு சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவற்றுடன் திருக்குறளைச் சார்த்திக்காட்டும் வகையிலான முயற்சிகளை மேற்கொண்டவர்கள் தொடர்பாக இங்கு நாம் வைக்கக் கூடிய முக்கிய விமர்சனம், ‘இவர்கள் திருக்குறள் இல்வாழ்க்கைக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தினை முக்கிய பிரச்சினை அம்சமாகக் கருதவில்லை ’ என்பதேயாகும். இவர்கள் அந்நூலை ஒரு அறநூலாக மட்டுமே தரிசிக்கமுற்பட்டுள்ளனர். அதனை, ’ஒரு வாழ்வியல் நூலாக அதாவது இல்வாழ்க்கைக்கு முக்கியத்துவமளித்துள்ள ஆக்கமாக’ இவர்கள்  தரிசிக்க முற்பட்டிருப்பின் அந்நூலை அவை மேற்படி இரு சிந்தனைகள் சார்ந்து உருவானதாகப் பேச முற்பட்டிரார்’ என்பதே எனது ஊகமாகும். ஏனெனில் திருக்குறளின் வாழ்வியல் நோக்கானது சமணம், பௌத்தம் ஆகியவற்றின் வாழ்வியல் நோக்கிலிருந்து தெளிவாகவே வேறுபட்டது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பர். 

அடுத்து, திருக்குறளின் ’இல்லறம்’ சார் சிந்தனைகளை வேத மரபு சார் சிந்தனைகளுடன் ஒப்பிட முயல்வோம். இச்சிந்தனைமரபானது பொதுவாக ’இல்வாழ்வையும் அது சார்ந்த அனுபவ அம்சங்கள் மற்றும் கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டதாகும். உபநிஷதங்கள், புராணங்கள் இதிஹாஸங்கள் ஆகியவற்றின் கதையம்சங்கள் இதனைத் தெளிவுறுத்துவன.

இம்மரபிலே ’சமூக - பண்பாட்டுஅம்ச’ங்களை வரையறுக்கும் நோக்கில் உருவா னதாகிய தர்மசாஸ்திரம் என்ற நூற்பரப்பானது ’ஆசிரம தர்மம்’ என்ற பகுதியில் இல்வாழ்க்கையின் முக்கியத்துவம் தொடர்பான பல செய்திகளை எடுத்துரைத்துள்ளது. இப்பகுதியானது ஒருவரது வாழ்க்கைப் படிநிலைகளை, பிரமசரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், ஸந்யாஸம் என நான்காக வகைப்படுத்துவது. அத்துடன் அவ்வப் படிநிலைகளிற் பேணிக்கொள்ளப்படவேண்டிய ’அற-ஒழுக்க நியமங்கள்’ மற்றும்  ஆற்றவேண்டிய கடமைகள்,  பொறுப்பபேற்கவேண்டிய அம்சங்கள்  ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைப்பதுமாகும். 

மேற்படி படிநிலைகளுள் இரண்டாவதான கிருஹஸ்தம் என்பது இல்வாழ்க்கை என்ற படிநிலையைச் சுட்ட்டுவதாகும். இப்படிநிலை தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ள அம்சங்கள், திருக்குறள் குறிப்பிடும்  ’இல்லறம்’ சார் சிந்தனைகளுடன் பொதுவகையில் ஒத்தனவாக உள்ளன. குறிப்பாக, இல்லறத்தாருடைய பொறுப்புகள் மற்றும் கடமைகள் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவனவற்றை ஒத்தசெய்திகள் மேற்படி கிருஹஸ்தம்  பற்றிய பகுதியிலும் இடம்பெற்றுள்ளன.3 அவ்வகையில்  வேதமரபானது திருக்குறளைப் போலவே இல்வாழ்க்கையின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமன்றி அதனை ஒரு நெறிமுறையாக எடுத்துப்பேசும் சிந்தனைப் பாரம்பரியமாகவும் கூடத்திகழ்ந்து வந்துள்ளமை தெளிவாகவே தெரிகிறது.

இவ்வாறு இல்வாழ்க்கைக்கு முக்கியத்துவமளித்துவந்துள்ள சிந்தனைகள் என்ற வகையில் திருக்குறளுடன்  வேதமரபை   இணைத்து நோக்க இடமுளது எனினும் இரண்டும் இல்வாழ்க்கைக்கு அளித்துள்ள முக்கியத்துவங்களில் உள்ள முக்கிய வேறுபாடுகளையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. வேதமரபிலே இல்வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த வாழ்க்கையின் ஒரு பகுதி-அதாவது ஒருபடிநிலை-மட்டுமே. மாணவப்பருவத்தின் நிறைவிலே திருமணத்தோடு தொடங்குவதான அப்படிநிலையானது பிள்ளைகள் பிறந்து வளர்ந்து. அவர்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்கும் வரை மட்டுமே தொடர்வதாகும். அச்சூழலில் குடும்பப் பொறுப்புகளை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி ஓய்வுபெறும் நிலையானது வேதமரபிலே வானப்பிரஸ்தம் என்ற படிநிலையாக அடையா ளப்படுத்தப்பட்டுளது. திருக்குறளிலே இல்வாழ்க்கையானது ஒரு படிநிலையன்று. அது எப்பொழுது நிறைவடைகிறது என்பதை அந்நூல் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை, கணவன் மனைவி ஆகிய இருவரும் இணைந்தநிலையில் வாழும் நிலைவரை அது தொடர்வது என்பதே அந்நூல் உணர்த்திநிற்கும் செய்தியாகும்.

இவ்வகையில் ஆசிரம தர்மம் காட்டும் இல்வாழ்க்கையினின்று திருக்குறள் காட்டும் இல்லறவாழ்க்கையானது வேறுபட்டுள்ளமை வெளிப்படை. (இவ்வாறு சிந்திக்கும்போது, ’திருக்குறள் சுட்டிநிற்கும் துறவு என்ற நிலையை எவ்வாறு புரிந்துகொள்வது?’ என்ற வினா எழுகின்றது. திருக்குறள் கூறும் துறவறமானது இல்லறத்தின் தொடர்ச்சியாக அமைந்ததன்று. அது இளம் பருவத்திலிருந்தே ஒருவர் தேர்ந்துகொள்ளும் வாழ்க்கைமுறையாகும். அதாவது உலகியலில் ஈடுபடாமல் இளமையிலிருந்தே துறவை நாடும் ஒரு நெறியாகவே திருக்குறள் கூறும் துறவை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.4

தர்மசாஸ்திர மரபு சுட்டும் இல்வாழ்க்கையிலிருந்து திருக்குறள் காட்டும் இல்லறவாழ்க்கையை வேறுபடுத்தி நிற்கும் இன்னொரு முக்கிய அம்சம் இரண்டினுடைய நோக்குநிலைகளின் வேறுபாடாகும். திருக்குறள் இல்வாழ்க்கை தொடர்பாக முன்வைத் துள்ள கருத்தாக்கமானது சராசரி மானுட அநுபவ நிலைப்பட்ட உலக நோக்கின் தளத்தில் உருவானதாகும். குறிப்பாக அன்றைய காலப்பகுதியில் தமிழ் மண்ணில் வாழ்ந்த சான்றோர் களின் அறவியல் நோக்கு என்ற தளத்திலே முளைவிட்ட கருத்தாக்கமாகவே அது கொள்ளப் படவேண்டியதாகும்.

ஆனால் வடமொழி சார்ந்த தர்மசாஸ்திர மரபு முன்வைத்துள்ள ஆசிரமதர்ம முறைமையானது வேத மரபுசார்ந்த இறை நம்பிக்கைகள், அவற்றினடிப் படையிலான சடங்காசாரங்கள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுசார் உணர்வு நிலைகள் ஆகியன சார்ந்த அதிகாரமையங்களின் சிந்தனைத் தேறல்களாக வெளிப்பட்டவையாகும். அவ்வகையில் தர்மசாஸ்திர மரபு சுட்டும் இல்வாழ்க்கை பற்றிய செய்திகள் , ’சமூக அதிகார வர்க்கங்களின் ஆணைகள்’ என்ற கணிப்புக்குரியவையாகின்றன என்பது வெளிப்படை. அவ்வகையில் அம்மரபு சுட்டும் இல்வாழ்க்கை திருக்குறள் சுட்டும் இல்வாழ்க்கையினின்று நோக்குநிலையில் குறிப்பிடத்தக்க தூரத்தில் விலகிநிற்பதென்பது தெளிவாகவே தெரிவதாகும்.

திருக்குறள் கூறும் இல்வாழ்க்கை பற்றிய விளக்கங்களுக்கு மேற்படி தர்மசாஸ்திரமரபுசார் சிந்தனைக் கூறுகள் துணை புரிந்திருக்கக்கூடும். ஆனால் அவையிரண்டும் வேற்பட்ட சிந்தனைத் தளங்களில் வேறுபட்டவை என்பதே இங்கு நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய முக்கிய செய்தியாகும். 

நிறைவாக…

’இல்வாழ்க்கை’ எனப்படும் ’குடும்பக் கட்டமைப்பு சார்’ வாழ்வியலுக்குத்திருக்குறள்  வழங்கியுள்ள தொடர்பான முக்கிய விளக்கங்கள் இதுவரைமுன்வைக் கப்பட்டன. அந்நூல், ’தான் எழுந்த காலப்பகுதியிலே இல்வாழ்க்கை தொடர்பாகத் திகழ்ந்திருக்கக் கூடிய ஏனைய சிந்தனைகளிலிருந்து வேறுபட்ட தாகவும் அவ்வகையில் தனித்தன்மை கொண்டதாகவும் திகழ்ந்தது’ என்பதும் இங்கு ஒப்பியல் நோக்கினூடாகச் சுட்டிக்காடப்பட்டுள்ளது. 

திருக்குறளுக்கு உலகப்பொதுநூல் (The Book of the World) என்னும் தகுதிப்பாட்டினை யுனெஸ்கோ (UNESCO) மூலம் பெற்றுத்தரும் குறிக்கோளை முன்வைத்து நிகழும் இம்மாநாட்டிலே ’திருக்குறளின் உலகளாவிய நிலையிலான தனித்தன்மை’யை அழுத்திப்பேசும் முயற்சிக்கு இக்கட்டுரைப் பொருண்மையும் துணைபுரியும் என்ற நம்பிக்கையுடன் இவ்வாய்வுரையை நிறைவுசெய்கிறேன். 

குறிப்புகளும் சான்றுகளும்

1.மேலதிக விளக்கத்திற்கு : 
அ. ரா. ஸ்ரீ. தேசிகன் ,  மேலைநாட்டுத் தத்துவம், தமிழ் வெளியீட்டுக் கழகம் , சென்னை. 1966 பக். 3-41
ராகுல் சாங்கிருத்யாயன், ஐரோப்பியத் தத்துவ இயல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்சென்னை ,1985.  பக்: 1-55

2. மருதமுத்து, ”திருக்குறளில் சமணமா?” வள்ளுவம் இருதிங்கள் இதழ்-3
திருக்குறள் பண்பாடு ஆய்வு மையம் , விருத்தாசலம் . (மே-சூன்,1999) பக். 87-93.

3. பார்க்க: 
கலாநிதி நா. சுப்பிரமணியன் & கௌசல்யா சுப்பிரமணியன், இந்தியச் சிந்தனை 
மரபு 2 ஆம் பதி.,சவுத் ஏசியன் புக்ஸ். சென்னை. 1966. பக். 71-72

4. பார்க்க: மேற்படி பக். 72-73

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்: - பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்  -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R