நூல் அறிமுகம்: வன்னியின் சமூகவாழ்வுச் சித்திரமாக விரியும் முல்லைமணியின் கமுகஞ்சோலைதே.கஜீபன்முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பிறந்த முல்லைமணி என்னும் புனைபெயரைக் கொண்ட வே.சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தையும் வழங்கியது. பாடசாலை அதிபராகவும், ஆசிரியகலாசாலை விரிவுரையாளராகவும், பிரதம கல்வி அதிகாரியாகவும், மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கியத்திறனாய்வு போன்ற துறைகள் மூலம் தமிழ் எழுத்துலகில் கால் பதித்தார். இவர் மல்லிகைவனம், வன்னியர்திலகம், மழைக்கோலம், கமுகஞ்சோலை போன்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவற்றுள் “கமுகஞ்சோலை” என்னும் நாவல் இங்கு அலசப்படுகிறது.

இந்நாவலின் கதைச்சுருக்கத்தை நோக்கின் கதிராமனும் கற்பகமும் திருமணம் செய்து கொள்கின்றனர். கதிராமனது அண்ணி அனைத்து பாத்திரங்களுக்கும் எதிர்ப்பாத்திரமாகக் காணப்படுவதோடு கற்பகத்தை வீட்டைவிட்டு துரத்த தன் கணவனுடன் இணைத்து சந்தேகப்பட்டம் கட்டுகிறாள். அதனை யாருக்கும் வெளிப்படுத்தாது கணவன் கதிராமனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய கற்பகம் சிறிதுகாலம் தன் தாய் தந்தையருடன் இருந்துவிட்டு தனிக்குடித்தனம்  போகிறார்கள். கதிராமனின் தந்தை நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் அக்குடும்பத்தினர் பெரும் வறுமைக்கு உட்படுகின்றனர். சீதனம் மூலமாக கதிராமனுக்கு கிடைத்த கமுகஞ்சோலை நல்ல விளைச்சலைக் கொடுத்ததால் குடும்பம் செழிப்பாகவே இருந்தது. தனது மாமா, மாமியின் நிலையினைக் கேள்வியுற்ற கற்பகம் வண்டி நிறையப் பொருட்களோடு அவர்களுக்கு உதவுவதற்காகச் செல்கிறாள். மறைந்து போன சந்தோசம் மீண்டும் அக்குடும்பத்தினரிடம் துளிர்விடுகின்றது.

இதற்கிடையில் கற்பகத்தின் திருமணத்திற்கு முன்னரான காலப்பகுதியில் செந்தில் என்பவனிடம் அவள் காதல் வயப்படுகின்றாள். ஆனால் அவன் ஆசை வார்த்தைகளைக் கூறி பல பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவன். அவனது குழந்தை கமலத்தின் வயிற்றில் வளர்வதை அறிந்த கற்பகம் தன்னை காத்துக் கொண்டதோடு அவனை அவமதித்தாள். இவ் அவமானத்திற்கு பழிதீர்க்க எண்ணிய செந்தில் கற்பகத்தை கடத்துவதற்கும், திருமணத்தை குழப்புவதற்கும் போட்ட சூழ்ச்சிகள் எவையும் நிறைவேறாமல் போகவே நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சிரமமாக இருப்பதோடு ஆங்கிலேயர்களுக்கு அதன் மூலம் எந்த வருமானமும் இல்லை எனவும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கதிராமனின் கமுகஞ்சோலையை அழிப்பதற்கான சூழ்ச்சியை மேற்கொள்கின்றான். அதிகாரியின் கட்டளை கிடைத்தததும் கமுகஞ்சோலை அழிக்கப்படுகின்றது. மக்கள் எவ்வாறான போராட்டங்களை மேற்கொண்டும் அவர்களது முயற்சி பயனின்றியே போனது. ஆனால் செந்தில் ஒரு பைத்தியக்காரியின் கத்தி குத்திற்கு இலக்காகி உயிரை விடுகின்றான். அவள்தான் இவனால் ஏமாற்றப்பட்ட கமலம். கதிராமன் பழுத்த பாக்குகளை அள்ளிக்கொண்டு ஏதோ ஒரு காலத்தில் அவற்றை பயிரிடப்போவதாக கூறிக்கொண்டு செல்கின்றான். இவ்வாறாக இந்நாவலின் கதை அமைந்து விடுகின்றது.

மக்களிடம் பயிலப்பட்டு வந்த “கமுகஞ்சண்டை” என்னும் கதைப்பாடலை அடிப்படையாகக் கொண்டே இந்நாவல் எழுதப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் இக்கதையின் மையக் கருத்தாக ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் மக்கள் எவ்வாறு அடக்கியாளப்பட்டார்கள். சமுதாயத்தின் பண்பாட்டு பாரம்பரியங்கள் எவ்வாறு  காணப்பட்டன போன்ற விடையங்கள் அமைந்துள்ளன. இந்தவகையில் “கமுகஞ்சண்டை” என்ற பாடலை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட இந்நாவல் “கமுகஞ்சோலை” என்ற தலைப்பைக் கொண்டு அமைந்துள்ளமை மிகவும் பொருத்தமுடையதாகவே காணப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் தோன்றிய நாவல்கள் தனிமனித கொள்கைகளையும் யதார்த்த வாதத்தையும் அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெற்றன. புனைகதை என்ற வடிவத்தின் ஆதாரமாக யதார்த்தவாதமே விளங்கியது. இவ்வகையில் ஈழத்து ஆரம்பகால நாவல்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் உலகில் இலக்கியதுறையின் வளர்ச்சியும் மனிதனது சிற்தனையாற்றலும் இணைந்து காலப்போக்கில் பல பரிணாமங்களைப் பெற்றுக் கொண்டன. அந்த வகையில் காதல், மர்மம், சார் நாவல்கள் பலவும் யதார்த்த பண்பை விடுத்து கற்பனையின் உச்சத்தை தொட்டு அமையப்பெற்றாலும் சமூகம், வரலாறு, தலித்தியம், பெண்ணியம் சார் நாவல்கள்  யதார்த்தத் தன்மையோடு அமையப்பெற்றன. அதனடிப்படையில் கலாநிதி முல்லைமணியினுடைய கமுங்கஞ்சோலையும் நாவல் ஒன்றிற்குதேவையான யதார்த்தப்பண்புகளை கொண்டு அமையப்பெற்றுள்ளமையைக் காணலாம்.

பொருளுடைமையாளர்களாக காணப்படும் மேல்த்தட்டு வர்க்க மக்கள் தங்களது செல்வாக்குகளின் காரணமாக தமக்குக் கீழ் காணப்படுகின்ற மக்களை ஏதோ ஒருவகையில் ஆளமுற்படுவதும் அவர்களது துன்பங்களுக்கு காரணமாக அமைவதும் வாழ்வின் உண்மைத்தன்மையே. இதனையே செந்தில் என்ற பாத்திரம் மூலமாக ஆசிரியர் எடுத்துரைக்கின்றார். பல பெண்களை காதலிப்பதும் ஆசை வார்த்தை காட்டி அவர்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவதும், ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்கள் வயிற்றில் குழந்தையுடன் சமூகத்தில் வாழமுடியாமல் தற்கொலையை வாழ்வின் முடிவாக்கிக் கொள்வதும், அவர்களிலும் ஒரு சிலர் இலட்சிய வாதிகளாக வாழ்ந்து சம்பந்தப்பட்ட ஆண்களை பழி தீர்த்து கொள்வதும், பைத்தியங்களாக தம் வாழ்க்கையை தொலைத்துவிட்டு பகட்டுப் பேச்சுகளுக்கும் பொய்க் காதல்களுக்கும் மயங்கி வாழ்வை நாசமாக்கி வாழும் பெண்களும் காணப்படுகின்றனர். இதனையே ஆசிரியர் செந்தில், கமலா, கற்பகம் என்ற பாத்திரங்களினுடாக எடுத்துரைக்கின்றார். இவ்வாறான சம்பவங்கள் நாவல் எழுந்த காலச் சூழலில் மட்டுமன்றி தற்காலத்திலும் நம் சமூகங்களிடையே நடக்காமலில்லை.
கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை என்பது நம் முன்னோர்கள் காலந்தொட்டு தமிழ் மரபில் பேணப்பட்டு வந்த ஒன்றாகும். இவ்வாழ்வியல் முறையில் அனைவரும் ஒரேமாதிரியான சிந்தனையாற்றல் கொண்டவர்களாகவும் ஒரே இயல்புள்ளவர்களாகவும் இருப்பதில்லை. அவரவர் மனநிலைகளுக்கேற்ப அவர்களது செயற்பாடுகள் அமைந்துவிடுவது இயல்பானதே. இதனைக் கைலைவாசம் என்ற குடும்பத்திலுள்ள பாத்திரங்கள் மூலமாக மிகவும் சுலபமாக ஆசிரியர் கூறிவிடுவதனைக் காணலாம். பவளத்தம்மாள் போன்ற இயல்புடையவர்கள் இன்றைய சமுதாயத்திலும் வாழத்தான் செய்கின்றார்கள். ஆனாலும் பொருளாதாரமும், நவீன மோகங்களும் இன்றைய நிலையில் கூட்டுக்குடும்ப வாழ்க்கையைச் சிதைத்துத்தான் விட்டுள்ளன. தனிக்குடித்தனமும், வெளிநாட்டு வாழ்க்கையும் நமது சமூகத்தவர் மத்தியில் பெருகிக்கொண்டு வருகின்றமை நமது மரபார்ந்த பண்பாட்டுக் கோலங்களைச் சற்று அசைக்கத்தான் செய்கின்றன.  

வன்னிச் சமுதாயத்தினுடைய நாட்டுப்புறவியல் சார் பண்பாட்டம்சங்கள் இந்நாவல் மூலம் வெளிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாட்டாரியல் வாழ்வியல் அம்சங்கள் ஒரு சமூகத்தின் வரலாற்று எழுதுகைக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. அந்த வகையில் இந் நாவலிலும் இதனைத் தரிசிக்க முடிகின்றது. சமூகத்தில் பேணப்பட்டு வந்த மரபுக்கதைகளை ஆசிரியர் நாவலிலே சித்தரித்துள்ளார். இதனை “வன்னியரசர்கள் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய குமாரபுரம் சித்திரவேலாயுதர் கோயில் அற்புதமான சித்திர, சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்ததாகவும் இது போன்ற அழகிய சிற்பங்களை வேறெந்தக் கோயிலுக்கும் செய்யக் கூடாதென்று நினைத்து சிற்பியின் கையையே வன்னியரசன் வெட்டிவிட்டதாகவும் பறங்கியர் சைவ ஆலயங்களை இடித்து வருகின்றனர் என்பதை அறிந்த ஆலயக்குருக்கள் மூலஸ்தான விக்கிரகத்தைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு கடல்மார்க்கமாக யாழ்ப்பாணம் சென்று கந்தவனக் கடவையில் பிரதிஸ்டை செய்ததாகவும்” கூறப்படுகின்றது. இது ஒரு மரபுக்கதையாகக் காணப்பட்டாலும் வன்னித்தமிழர்களது கலைகள் தொடர்பான திறன்களையும் மக்கள் இந்துப்பண்பாட்டை வளர்த்தெடுப்பதிலும் பேணிப்பாதுகாப்பதிலும் முயற்சியுடையோராய் விளங்கினர் என்பதனையும் பறைசாற்றுவதாகவே அமைகின்றது. மேலும் புராண இதிகாசச் சம்பவக்குறிப்புக்களும் இந் நாவலில் காணப்படுகின்றது. “பரதனை நாடாளவிட்டு சடைமுடிதரித்து பதின்னான்கு ஆண்டுகள் காட்டில் போய் வசிக்கும்படி அரசன் கட்டளையிட்டதாக கைகேயி சொன்னாளாம்” என்பதுபோல நாச்சியம்மாள் மாமியின் கட்டளையை பவளத்தம்மாளிடம் கூறுவதாக ஆசிரியர் கூறுகின்றார். ஆசிரியர் கதையோட்டத்திற்கேற்ப உதாரணமாகக் கூறினாலும் இவை இந்து மதம் தொடர்பான புராணக் கதை மரபுகள் மக்களிடையே பயின்று வந்திருப்பதைக் காட்டுவதாய் அமைகின்றன.  

நாட்டாரியல் வகைகளுள் ஒன்றான பழமொழிகளின் பயன்பாடும் இந்நாவலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளமையைக் காணலாம். இதனடிப்படையில் வன்னிமக்களிடையே பயன்பாட்டில் இருந்த பழமொழிகளாக, தானாடாவிட்டாலும் சதையாடும், உலைமூடியால் மூடமுடியாது, முதல்க்கோணல் முற்றும் கோணல், அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், பிள்ளையார் பிடிக்க குரங்காகியது போல, தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான், காலம்மாறக் கருத்தும் மாறும், உழுகிற நேரம் ஊர்வழி போனால்  அறுக்கிறநேரம் ஆள் வேண்டாம், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும், ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு, குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை, பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு, வெள்ளியிட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையில்லை, எலிப்பாளி எண்டாலும் தனிப்பாளி வேண்டும், போன்ற பழமொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சமுதாயத்தின் வாழ்வியல் அம்சங்களை பழமொழிகள் பிரதிபலிக்கவல்லன. கதையோட்டத்தின் நகர்விற்கேற்ப ஆசிரியர் பழமொழிகளைக் கையாண்டாலும் அவை அச்சமூகத்தில் பயின்று வந்தனவேயன்றி வேறானவையல்ல.

வன்னிவாழ் மக்களது தொழில் முறைகள், உணவுப்பழக்க வழக்கங்கள் தொடர்பாகவும் இந்நாவல் பேசுகின்றமையைக் காணமுடிகின்றது. வேட்டையாடுதல், விவசாயம் செய்தல், கள்ளுச்சீவுதல், பாக்குப் பயிர்ச்செய்கை பண்ணல், தேன் எடுத்தல், மீன் பிடித்தல், போன்றன அக்கால மக்களின் தொழிலாகக் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் பல சமுதாயப்பிரிவினர் வன்னிச்சமுதாயத்தில் காணப்பட்டனர் என்பது தெளிவாகின்றது. பனாட்டு, தயிர், கானாந்தி வறை, பால்ச்சொதி, நெய், கத்தரிக்காய்த் தீயல், முசுட்டை வறை, வாழைக்காய் பொரியல், திப்பிலிக்கொச்சிக்காய் போன்றன உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டதோடு உடும்பு, மான், மரை, உக்கிளான், முயல், காட்டுக்கோழி, றால் போன்ற மச்ச மாமிசங்களையும் உணவாக உட்கொண்டுள்ளனர். பண்டிகைக் காலங்களிலும், திருவிழாக் காலங்களிலும், விசேடதினங்களிலும் பயிற்றம் பணியாரம், அரியதரம், முறுக்கு, சிப்பி போன்ற பலகார வகைகளை உட்கொண்டதோடு மா, பலா, வாழை முதலான பழவகைகளையும் உணவின் பின் உட்கொண்டுள்ளனர். கற்கண்டு போட்டுக்காய்ச்சிய பாலையும் அக்கால மக்கள் பருகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய காலத்தில் இவற்றில் சில உணவுப்பழக்க வழக்கங்கள் அருகிக்காணப்படுகின்றமை கவனிக்கத்தக்கது.        

வன்னித் தமிழரின் சடங்குகள், சம்பிரதாயங்கள் தொடர்பாகவும் ஆசிரியர் கூறத்தவறவில்லை. திருமணம், சீதனமுறமை, சித்திரைவருடப்பிறப்பு, போன்ற பண்டிகைகள், சடங்கு சார் நிகழ்வுகள் என்பவற்றையும் மக்கள் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். சாத்திர முறைகளிலும் நம்பிக்கை உள்ளவர்களாகக் காணப்பட்டதோடு கடவுள் நம்பிக்கை மிக்கவர்களாகவும் காணப்பட்டுள்ளமையையும் இந் நாவலூடே அறியமுடிகின்றது. கசம், பிளவை போன்ற நோய்கள் தொடர்பாகவும் சித்தமருத்துவ முறைகள் தொடர்பான அறிவினைக் கொண்டவர்களாகவும் அக்கால மக்கள் காணப்பட்டுள்ளனர். கடுக்காய் பேதிமருந்து, வேர்க்கொம்பு, பனங்கட்டித்தண்ணி, கொத்தமல்லி, சித்தமட்டி, பேரமட்டி, ஆடாதோடை, தேன், போன்றவற்றின் மருத்துவக் குணம் அறிந்து மக்கள் அவற்றினை மருந்துகளாகப் பயன்படுத்தி உள்ளமைமையை நாவல் காட்டுகிறது. இன்றும் வன்னிவாழ் மக்களிடையே சித்த மருத்துவ முறமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கூத்து முறமைகளிலும் ஈடுபாடுள்ளவர்களாக அக்கால மக்கள் காணப்பட்டுள்ளனர். மகுடிக்கூத்து அக்கால மக்களிடையே ஆடப்பட்டு வந்துள்ளது. மகுடிக்கூத்து இரண்டு குழுவினரிடையே முரண்பாடுகள்  ஏற்படுவதையும் அவர்கள் தங்கள் தங்கள் மந்திர சக்திகளைப் பயன்படுத்துவதையுமே உட்பொருளாகக் கொண்டு அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இக் கூத்தின் மூலம் இஸ்லாமிய, இந்து சமயங்கள் சார் சடங்குமுறைகள் வெளிப்பட்டு நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. அக்காலப்பகுதியிலே இந்து, முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளமையினையும் நாவலூடாகத் தரிசிக்க முடிகிறது. சுல்தான் கண்டுவும், காதறுசாய்பும் கதிர்வேலனுடன் வேட்டைக்குச் செல்வதும், கிடைத்த இறச்சியைச் சமனாகப்பங்கிடுவதும்,  ஒன்றாக அமர்ந்து வெற்றிலை போடுவதும், கமுகமரங்கள் தறிக்கப்படும் போது ஒன்றாகச்சேர்ந்து போராடுவதும் இந்நாவல் காட்டிநிற்கும் இன ஒற்றுமைக்குச் சான்றாக அமைகின்றன. அத்தோடு “வேட்டைக்காரர் போகுமுன் மான் இறந்துவிட்டால் அதன் இறச்சியை முஸ்லீம் மக்கள் உண்ணமாட்டார்கள்” என ஆசிரியர் கூறுவதானது முஸ்லீம் மக்கள் கொண்டிருந்த உணவுப்பழக்கம் தொடர்பான கொள்கையினை எடுத்துக் காட்டுவதாய் அமைகின்றது.

நாவல் காட்டும் மக்களிடையே கல்வியறிவென்பது அதிகம் இருக்கவில்லை எனினும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழ் அரச உத்தியோகம் செய்ய வேண்டுமானால் அரைகுறையாகவாவது ஆங்கிலம் கற்றிருக்க வேண்டிய தேவை இருந்தது. அக்காலத்தில் அனைவரும் கல்வி கற்றிருந்தார்கள் என்பதற்கில்லை. எனினும் திண்ணைமரபுக் கல்வி முறமை இங்கு காணப்பட்டுள்ளதோடு. பனையோலையில் எழுதும் மரபும் காணப்பட்டுள்ளது. நாணயப் புழக்கங்கள் மக்கள் மத்தியில் நிலவியதோடு அக்காலத்தில் அவை சதக்கணக்கு பெறுமதியானதாக அமைந்திருந்தன. அக்கால மக்களிடையே அவை பெறுமதியானவையாகவே கருதப்பட்டன என்பது மறுப்பதற்கில்லை.

வன்னி வாழ் மக்களிடையே அக்காலத்தில் பல விளையாட்டுக்களும் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாகக் இருந்துள்ளதை இந் நாவலூடே காணமுடிகிறது. கிளித்தட்டு, பாக்குக்கட்டும் போட்டி, போர்த்தேங்காய், ஊஞ்சலாடல் போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது. அத்தோடு விளையாட்டுப் பாடல்களுள் ஒன்றான ஊஞ்சல் பாடல்களும் சிறுவர்களால் பாடப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. “ஆலமிலை போல வயிறு வாடுதேடி தோழி அழகான ஊஞ்சலை ஆறவிடு தோழி” என்னும் பாடல் கூறத்தக்கது. வன்னி மண்ணை ஆண்ட சிற்றரசனான பண்டாரவன்னியனது வாழ்க்கைவரலாற்றை நாடகமாக நடித்துக்காட்டுகின்ற நாடக மரபும் இம் மக்களிடையே நிலவியுள்ளது. வரலாற்றடிப்படையில் வன்னித் தமிழர்களது வீரத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு வரலாற்று நாடகமாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

வன்னிச்சமூகத்தின் மண் வாசனை இந் நாவலுடாக வெளிப்பட்டு நிற்றலைக் காணமுடிகிறது. இதற்குச்சிறந்த எடுத்துக்காட்டாக “ மாட்டுப்பட்டிக்குச் சென்ற வினாசியர் நான்கைந்து பசுக்களில் பால் கறந்து வந்து கற்பகத்திடம் கொடுக்கிறார். அடுக்களையில் ஈரவிறகுடன் போராடிக் கொண்டிருந்த மீனாட்சி அடுப்பை மூட்டுவதில் ஒருவாறு வெற்றி கண்டுவிட்டாள். கற்பகம் பால்கலயத்தை தாயிடம் கொடுத்துவிட்டு தனது நாளாந்த பணிகளில் ஈடுபடுகிறாள். வீடு, மால், அனைத்தையும் கூட்டித்தள்ளிவிட்டு வளவு முழுவதும் கூட்டித்துப்பரவு செய்தாள். பலா, மாச் சருகுகளை கூட்டி அள்ளிக்குப்பையைப் புறம்போக்கான இடத்தில் குவித்தாள்.” என ஆசிரியர் வினாசியின் வீடுபற்றி வர்ணிக்கும் போதே அச்சூழலின் மண் வாசனையைப் பதிவு செய்து விடுகிறார். வினாசியர் உமிக்கரியால் பல் துலக்குவதும் கதிர்வேலன் வேப்பங்குச்சியால் பல் துலக்குவதும் அச்சமூகத்தின் வழமையைக்காட்டி நிற்கின்றது. நாடக மரபுகள், கூத்துமுறமைகள், விளையாட்டுக்கள், பழமொழிகள், உணவுப்பழக்க வழக்கங்கள், தொழில் முறைகள் ஆகிய அனைத்து வாழ்வியல் அம்சங்களிலும் ஆசிரியர் வன்னிச்சமூகத்தின் மண்வாசனையைப் பதிவு செய்யத் தவறவில்லை என்றே கூறவேண்டும்.

குறிப்பிட்ட சமுதாயத்திற்கான பேச்சுவழக்கு பயன்பாடுகளையும் கொண்டு இந் நாவல் அமையப் பெற்றுள்ளமையைக் காணமுடிகிறது. சீதனபாதனப்பேச்சு, வடிவுசங்கை, இடிச்ச புளிமாதிரி இருக்கிறியள், காத்தைத்தான் குடிக்கோணும், பலிக்கடாவாக்குதல், வேசையாடுதல், தோறை, எளிர்காட்டல், கிட்டகிளலைக்கும், போன்ற சொற்பிரயோகங்கள் வன்னி வாழ் மக்களிடையே காணப்பட்டுள்ளன. இவை சாதாரணமாக அவர்களது பேச்சு வழக்கு சொற்களாகவே அமைந்துள்ளன. எனினும் இன்றைய நிலையில் இவற்றில் சில சொற்பிரயோகங்களை காணமுடிவதில்லை. மேலும் வன்னியில்லா மக்களாலும் குறிப்பாக யாழ்ப்பாணச் சமூக மக்களிடையே சில சொற்கள் வழக்கில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தான் கூறவந்த மையக்கருவை அதாவது  வன்னிச்சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வை நாவல் என்ற இலக்கிய வடிவத்தினூடாக கூறியுள்ளமையும் வரலாற்றுச் செய்திகள் சிதைவுபடாத வகையில் நாவலுக்கான புனைவினை மேற்கொண்டுள்ளமையும் வரவேற்கத்தக்கது. சம்பவங்கள் மக்கள் மத்தியில் சென்றடையக்கூடிய வகையில் கதையினைச் சலிப்பின்றி நகர்த்திச்செல்வதும் தேவையான இடங்களில் பழமொழிகள், உவமையணிகள் போன்றவற்றைப் புகுத்தியும் சிறந்த பாத்திரவார்ப்புகளின் ஊடாக கதையினை நகர்த்திச் சென்றுள்ளமையும், காட்சிப்படுத்தல் தன்மையும் ஆசிரியரின் உத்திகளாக அமைவதோடு கதையின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்துள்ளன.

வரலாற்று அறிவியற்துறையில் கல்வெட்டு, செப்பேடு வெளிநாட்டார் குறிப்புக்கள். தொல்பொருட் சான்றுகள் நாணயங்கள் போன்றன ஒருவரலாற்றை எழுத உதவும் சான்றுகளாக எவ்வாறு அமைகின்றனவோ அதேபோல நாட்டாரியல் அம்சங்களும் ஒரு சமூக வரலாற்றை எழுத முக்கிய சான்றாக அமைகின்றன. ஒரு சமூகத்தின் தொன்மை, தொழில், பண்பாடு ஆகியன குறித்த தரவுகளை நாட்டாரியல் மரபுகள் கொண்டுள்ளது. ஓர் இனத்தின்  வரலாறும் வாய்மொழி வழக்காறுகளை உள்ளடக்கிய நாட்டார் வழக்காறும் ஒன்றோடான்று  நெருங்கிய  பிணைப்பைக் கொண்டவை. சுருங்கக் கூறின் இன வரலாற்றின் ஓர் அங்கம் நாட்டார் வழக்காறுதான் என்று கூறவேண்டும்.

ஓர் இனத்தின் வாய்மொழி வழக்காறுகளிலும், சடங்குகளிலும், பழக்கவழக்கங்களிலும், மற்றும் தட்டுமுட்டுச் சாமன்களிலும் அதன் சமூக பண்பாட்டு வரலாற்றுக்கான சான்றுகள் காணப்படுகின்றன. இதனடிப்படையிலே மக்கள் வரலாற்று எழுதுகைக்கான முதன்மைச் சான்றாக வாய்மொழி வழக்காறுகளைக் கொள்கின்றனர். அந்த வகையில் கமுஞ்சோலை என்ற நாவல் ஆங்கில ஏகாதிபத்திய காலத்தில் வன்னியில் நடந்த உண்மைச் சம்பவங்களை கூறி நிற்பதோடு, மக்களது பாரம்பரிய பண்பாட்டம்சங்களை மீட்டி நிற்கின்றதென்றே கூறலாம். கதைப்பாடல்கள், பழமொழிகள், சடங்குகள், உணவுப்பழக்க வழக்கங்கள், தொழில் முறைகள், விளையாட்டுக்கள், வைத்திய முறைகள், கூத்துக்கள், நாடக மரபுகள், மரபுக் கதைகள், என்பவற்றை அடிப்படையாகப் கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூக வரலாற்றை எழுத முடியும், இதனடிப்படையில் மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு கட்டிக் காக்கப்பட்ட வன்னிப் பாரம்பரிய, பண்பாட்டு வாழ்வியல் வழக்காறுகளைப் பேசி ஓர் சமூக வரலாற்றை இந்நாவல் கட்டமைத்துள்ளது என்றே கூறலாம், நாட்டுப்புறவியல் பார்வையில் இந்நாவலைப் பார்க்க முயலும் எவருமே இதனை ஒரு சமூகவரலாற்று நாவலாகவே கொள்வர். இவற்றினடிப்படையில் கமுகஞ்சோலை என்ற இந்நாவல் ஓர் சமூக வரலாற்று நாவல் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

 

உசாத்துணைகள்
சிவசுப்ரமணியம்ஆ. (20011) அடித்தள மக்கள் வரலாறு. பாவை பப்ளிகேசன் : சென்னை.
சுப்ரமணியம்வே. (2000) கமுகஞ்சோலை. முல்லைவெளியீடு : வவுனியா

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்