ஒட்டு என்பது ஓர் அடிச்சொல்லின் பின்னரோ அல்லது ஒரு முழுச் சொல்லின் பின்னரோ இணைந்து புதிய பொருளைத் தோற்றுவிப்பது அல்லது புதிய பொருள் ஏற்படுவதற்கு வித்திடுவது. காட்டாக, கவி+அர்=கவிஞர் என்பதைச் சுட்டலாம். இதனுள் கவி என்பது பாட்டு (Poem), பாவலன் (Poet), ஞானி (Sage), குரங்கு (Monkey) (2005:238) என்ற பொருண்மைகளுடைத்து. அச்சொல் ஓர் அடிச்சொல் வகைத்து. அச்சொல்லுடன் அர் எனும் பலர்பால் ஈறு ஒட்ட இடையில் ஞ் எனும் மெய் தோன்றி கவிஞர் எனும் புதியச் சொல்லையும் பொருளையும் தருகின்றது. அச்சொல் கவிதை எழுதும் ஆடவரையோ அல்லது பெண்டிரையோ குறிக்கும் பொதுச்சொல்லாயிற்று.
பொதுவாக, மொழியியலார் முன், பின், உள், மேல் ஆகிய ஒட்டுக்கள் இவ்வுலகில் வழங்கப்பெறும் மொழிகளில் காணப்படுகின்றன என்பர். இவற்றுள் முன்னொட்டு (Prefix) கொடைமொழிச் சொற்கள் கொள்மொழிக்குக் கடனாளப்படும் போது நிகழும் (காண்க: ராம: - இராமன்) தன்மையது. உள்ளொட்டு (Infix – அடிச்சொல்லின் உள்ளே நிகழும் மாற்றம். எ – டு. Kitāb) எகிப்து, அரபு மொழிகளிலும்; பின்னொட்டுத் (Suffix – வேர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்தமைவது. எ – டு. தந்த நிலம். இவற்றில் வரும் அம் பின்னொட்டு) தமிழிலும்; மேலொட்டு (Suprafix – முழுமையும் மேல்நிலை ஒலியன்களால் நிகழ்வது. எ – டு. ma – tone) சீனமொழியிலும் காணப்படுகின்றன (2011: 265). இவ்வாறு பல்வகை ஒட்டுக்கள் உலகமொழிகளில் வழங்கினாலும், குறிப்பாகத் திராவிட மொழிகளில் பின்னொட்டே வழங்குகின்றன என்பது அறிஞர்களின் கருத்து. இதனை அவ்வம் மொழி இலக்கணங்கள் விளக்கியுள்ளமையிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதனைத் தமிழின் தொல்காப்பியத்திலும் தெலுங்கின் பாலவியாகரணத்திலும் காணலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.
தமிழில் தொல்காப்பியர் இடை, உரி ஆயிரு இயல்களில் ஒட்டுக்கள் குறித்துப் பேசினாலும் பெரும்பான்மையான அறிஞர்கள் உரியியலை அகராதியியலாகவே கருதுகின்றனர். காரணம்: உரிச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் அடையாய் வருவது; ஆனால் இடைச்சொல் பெயரையும் வினையையும் சார்ந்தே வரும் விகுதிகளும் உருபுகளும் (1972:234) என்பதேயாம். ஆயின் அதனை விடுத்து இடையியலையும், தெலுங்கில் சின்னயசூரி தத்தித பரிச்சேதம், கிருதந்த பரிச்சேதம் என்றாயிரு இயலமைவுகளில் ஒட்டுக்கள் குறித்த கருத்தியலை முன்வைத்திருப்பதனால் அவ்விரு இயல்களையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.
தொல்காப்பியர் குறிப்பிடும் இடை ஒட்டுக்கள் பெயரையும் வினையையும் சார்ந்து வருவன (தொல். சொல். பெயர்.5). ஆயின் சின்னயசூரி தரும் ஒட்டுக்கள் பெயரடியின் பின்னால் வருவது தத்திதம் என்றும், வினையாலணையும் பெயர் என மாற்றம் பெறுவது கிருதந்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும் அவ்விரு பரிச்சேதங்களில் வரும் விதிகள் பெயர், வினைச் சொற்களுக்குப் பின்பு இணையும் ஒட்டுக்கள் குறித்தே விளக்கி நிற்கக் காணலாம்.
தொல்காப்பியர் இடையியலில் மன், தில், கொன், உம், ஓ, ஏ, என, என்று, மற்று, எற்று, மற்றையது, மன்ற, தஞ்சம், அந்தில், கொல், எல், ஆர், குரை, மா, மியா, இக, மோ, மதி, இகும், சின், அம்ம, ஆங்க, போலும், யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, ஆக, ஆகல், ஆ, ஈ, ஊ, ஐ, எனா, என்றா, உந்து, ஒடு ஆகிய ஒட்டுக்களை அறிமுகப் படுத்தியுள்ளார் (தெய்வச்சிலையார் கருத்துப்படி). ஆயின் சின்னயசூரியோ தத்தித பரிச்சேதத்துக்கண் கா, ஈ, இக, தந, றிக, கத்திய, இமி, ந, உக, ஆடி3, அரி, இ, த, இcடி3, எடு3, பண்டி3, கொலது3 ஆகிய ஒட்டுக்களையும், கிருதந்த பரிச்சேதத்துக்கண் அக, அவு, இ, இக, இமி, உ, க, கலி, குவ, க3ட3, ட, டு, டு3, த, தங், நஙி, ப, பு, ப3டி3, வடி3, வி, வு ஆகிய ஒட்டுக்களையும் (நரசிங்க ரெட்டியின் குறிப்புப்படி) அறிமுகப் படுத்தி நிற்கின்றார்.
அவ்விருமொழி இலக்கண அறிஞர்கள் குறிப்பிட்ட ஒட்டுக்களில் இக, கா, ஈ ஆகியன ஒத்த வடிவுடையனவாகவும், பிற வேறுபட்ட வடிவுடையனவாகவும் அமைந்துள்ளன. இதனைப் பின்வரும் அட்டவணை விளக்கும்.
பொருண்மைகள் | தொல்காப்பியம் இடையியல் | பாலவியாகரணம் | |
---|---|---|---|
தத்திதம் | கிருதந்தம் | ||
ஒத்த வடிவின | இக, கா, ஈ (3) | இக, கா, ஈ (3) | இக (1) |
வேற்று வடிவின | மன், தில், கொன், உம், ஓ, ஏ, என, என்று, மற்று, எற்று, மற்றையது, மன்ற, தஞ்சம், அந்தில், கொல், எல், ஆர், குரை, மா, மியா, மோ, மதி, இகும், சின், அம்ம, ஆங்க, போலும், யா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, ஆக, ஆகல், ஆ, ஊ, ஐ, எனா, என்றா, உந்து, ஒடு (42) | தந, றிக, கத்திய, இமி, ந, உக, ஆடி3, அரி, இ, த, இcடி3, எடு3, பண்டி3, கொலது3 (14) | அக, அவு, இ, இமி, உ, க, கலி, குவ, க3ட3, ட, டு, டு3, த, தங், நஙி, ப, பு, ப3டி3, வடி3, வி, வு (21) |
கூடுதல் | 45 | 17 + 22 = 39 |
இங்கு ஒத்த வடிவினவாய் வரும் ஒட்டுக்கள் பற்றி அவ்விருமொழி இலக்கண அறிஞர்கள் விளக்கம் காணும் முறை ஒப்பிட்டாரயப்படுகின்றது. தொல்காப்பியர் குறிப்பிடும் இக, கா, ஈ ஆகிய ஒட்டுக்கள் முறையே முன்னிலை அசைச் சொல்லுக்குரியதாகவும், அசைநிலைச் சொல்லுக்குரியதாகவும் அமைந்துள்ளனவாக உரையர் கருதுவர்.
எ – டு.
புறநிழற் பட்டாளோ இவளிவட் காண்டிகா – கலித். 99
கண்பனி யான்றிக என்றி தோழி!
தண்டுறை யூரயாம் கண்டிக
இவ்வெடுத்துக் காட்டுகளில் வரும் சொற்களாகிய காண்டிகா, யான்றிக, கண்டிக ஆகிய முறையே கா, இக ஆகிய ஒட்டுக்கள் பெற்று வந்துள்ளன. இவை சங்கப் பாடல்களில் பயின்றுவரக் காணலாம். இங்கு அச்சான்றே காட்டப்பட்டுள்ளதால் செய்யுள் வழக்குகளில் உள்ள ஒட்டுக்களையே அறிமுகப்படுத்தியுள்ளாரோ என எண்ண இடமளிக்கின்றது. இருப்பினும் அவர் இருவகை (செய்யுள் வழக்கு, பேச்சு வக்கு) வழக்குகளையும் ஆண்டிருக்கின்றார்.
தொல்காப்பியத்திற்கு முன்பு, இலக்கியங்கள் பலவும் இருந்தன. இலக்கணங்கள் சிலவும் இருந்தன. இவை இரண்டும் ஏட்டு வழக்குகள். இவையன்றி மக்கள் வழங்கும் நாட்டு வழக்குகளும் வழங்கின. தொல்காப்பியர், நாட்டு வழக்கையும் ஏட்டு வழக்கையும் அடித்தளங்களாகக் கொண்டே எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்றையும் எழுதினார் (க.ப. அறவாணன், 2002:42)
குறிப்பாக அவர் இடையொட்டுக்களை பொருண்மை நோக்கிலே வரையறை செய்கின்றார்.
அவ்விடத்து ஈ எனும் ஒட்டுக்கு மட்டும் சான்று காட்டப்படாமையின் காரணம் என்னவெனின் தொல்காப்பிய மொழியைப் புரிந்து கொண்ட உரையரிடையே வேறுபாடு நிலவுவதேயாம்.
ஈரள பிசைக்கு மிறுதியி லுயிரே
யாயிய நிலையுங் காலத் தானும்
அளபெடை நிலையுங் காலத் தானும்
அளபெடை யின்றித் தான்வரு காலையும்
உளவென மொழிப பொருள்வேறு படுதல்;
குறிப்பி னிசையா நெறிப்படத் தோன்றும் – தொல். சொல். நச். 283
என்பது தொல்காப்பிய விதி. இவ்விதியைப் பழைய உரையர் எவ்வாறு புரிந்துகொண்டு விளக்கியுள்ளனர் என்பதைப் பின்வரும் உரைக் கருத்துக்கள் தெளிவுறுத்தும்.
இரண்டு மாத்திரையை யுடைத்தாய மொழிக் கீறாகா தெனப்பட்ட ஔகாரம், பிரிவி லசைநிலை யென மேற்கூறப்பட்டனபோல இரட்டித்து நிற்குமிடத்தும், இரட்டியாது அளபெடையாய் நிற்குமிடத்தும், அளபெடையன்றித் தான் வருமிடத்தும், பொருள் வேறுபடுதலுள; அப்பொருள் வேறுபாடு சொல்வான் குறிப்பிற்குத் தகுமோசை வேறுபாட்டாற் புலப்படும் எ – று.
பொருள் வேறுபாடாவன வழக்கு நோக்கச் சிறப்பும் மாறுபடுமாம்.
(எ – டு.) ஔஔவொருவன் றவஞ் செய்தவாறு என்றவழிச் சிறப்புத் தோன்றும். ஒரு தொழில் செய்வானை ஔஔவினிச் சாலும் என்றவழி, மாறுபாடு தோன்றும் (2003:47)
எனச் சேனாவரையரும்,
இரண்டு மாத்திரையை இசைக்கும் ‘உயிரௌ எஞ்சிய இறுதியாகும்; (எழுத்.69) என்றதனான் மொழிக்கு ஈறாகாது என்ற ஔகாரம், ஆயியல் நிலையும் காலத்தானும் ‘கவவோ டியையின் ஔவு மாகும்’, (எ.70) என்ற இயல்பின் கண்ணே கௌ,கௌ என மொழிக்கு ஈறாய் நிற்குங் காலத்துக் கண்ணும் (எவ்வாறு நிற்கும்? எனின்) அவை அளபெடுத்து நிற்குங் காலத்தினும் பொருள் வேறுபடுதல் உளது என்று கூறுவர் ஆசிரியர். அப்பொருள் வேறுபாடு தான் சொல்லுவான் குறிப்பினான் உளதாம் ஓசை வேறுபாட்டான் வழிப்படப் புலப்படும், எ – று.
முன்னர் நின்ற உம்மை சிறப்பும்மை. பின்னர் நின்ற இரண்டும் எண்ணும்மை.
ஆசிரியர் முன்னர்க் கூறியதனை ஈண்டு இறுதியில் உயிரே என்று ஒருதலைமொழி என்னும் உத்தியாகக் கூறினமையானும், உரையாசிரியரும், ‘நெட்டெழுத் தேழு ஓரெழுத் தொருமொழி’ (எ.43) என்புழி ஔகாரத்தினை உதாரணங் காட்டாது, ‘கவவோடியையின்’ (எ.70) என்பதனான் கௌவௌ என உதாரணங்காட்டினமையானும், ஈண்டு, ‘அளபெடை நிலையும்’ காலத்தானும் அளபெடை இன்றித் தான்வரு காலையும்’ என்னும் இரண்டிற்கும் ஔஉ, ஔ என்று உயிரையே உதாரணமாகக் காட்டுதல் ‘மாறுகொளக் கூறல்’ ஆமென்று உணர்க (2003:244 – 245)
என நச்சினார்க்கினியரும்,
இரண்டு மாத்திரையாகி யொலிக்கும் உயிர்களுள் இறுதியாகிய ஔகாரம் அல்லாத உயிர்கள் மேற்கூறியவாறு போல இரட்டித்து வருங் காலத்தினும், அளபெடை பெற்று வருங்காலத்தினும், தனிவருங் காலத்தினும் பொருள் வேறுபடுதல் உள என்று சொல்லுவர் ஆசிரியர். அவை ஒரு பொருள் உணர்த்தும் வழி, ஓசையானும், குறிப்பானும் பொருள் உணர்த்தும் எ – று.
(எ – டு.) அவையாவன:- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, என்பன. ஒருவன் தகுதியல்லாத செய்த வழியும், அரியன செய்தவழியும், ஆ, ஆ என்ப. வியப்புள வழியும், துன்பமுள வழியும் ஆஆ என்ப. தமக்கு இசைவில்லாதது ஒன்றை ஒருவன் சொன்னவழி, அதனை மறுப்பார் ஆ என்ப. ஈ என்றவழி அருவருத்தலை உணர்த்தும் (2003:212)
எனத் தெய்வச்சிலையாரும் உரை கொள்வர். இம்மூவரும் மதத்தால் வேறுபட்டு இருப்பதாலே, அவர்தம் உரைகளும் வேறுபடுகின்றன என்பது சுப்பிரமணிய சாத்திரியாரின் கருத்து.
உரையாசிரியர், சேனாவரையர், இவ்விருவர் மதமும் ஒன்றே. நச்சினார்க்கினியர் மதம் வேறு. தெய்வச்சிலையார் மதம் வேறு. நச்சினார்க்கினியர் கூறும் ‘கௌ’வும், ‘வௌ’வும் இடைச்சொல்லா? ‘கௌ’ ‘இடைச்சொல்லாயின் ஔகார விறுதிப் பெயர்நிலை முன்னர்…’ (எழுத்.உயிர்.93) என்னுஞ் சூத்திரத்தில் ‘கௌ’ என்பதைப் பெயராகக்கொண்டு கௌவுக்கடிது முதலிய உதாரணங்கள் கொடுத்தது எவ்வாறு பொருந்தும்? அளபெடை நிலையும் என்பதற்கும் தான்வரும் என்பதற்கும் எழுவாய், ஈரளபிசைக்கு மிறுதியிலுயிராயின், சூத்திரப்போக்குக்கு அது பொருந்துமா? (1930:163 – 164).
இக்கருத்து தெய்வச்சிலையாரின் உரை சரியானதாக இருக்கலாம் என எண்ண இடம் தருகின்றது. ஏனெனின் காலத்தால் பிந்தியவர் தெய்வச்சிலையார். இவர் முன்னோர் உரைகளை நன்கு வாசித்துப் பின்பு பொருள் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு கொண்டிருப்பின் அதனை அவ்விதிக்கு ஏற்ற உரையாகக் கொள்ளலாம் என்பது கருத்து. இங்கு விளக்கப்பெற்ற கருத்துக்களின் மூலம் தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மூன்று ஒட்டுக்களும் வினைச் சொல்லின் ஈற்றிலே நிற்பதைக் காணமுடிகின்றது.
ஆனால், சின்னயசூரி வட்டார வழக்குச் சொற்களுக்காகவா அல்லது செய்யுள் வழக்கிற்காகவா விதியமைத்துள்ளார் என்பதை அறிவதில் சிக்கல் உள்ளது. ஏனெனின் மூலநூலாசிரியரே விதிக்கானச் சான்றுகளையும் தருகின்றார். அச்சான்றுகள் செய்யுளிலிருந்துதான் எடுத்தாண்டுள்ளார் என்பதற்கு எவ்வித அடையாளம் தெரியவில்லை. அவர் வெளியுலகம் அறியாமலே தன் வாழ்நாளைக் கழித்தார் எனும் கருத்து ஒன்று உண்டு (ஆனைவாரி ஆனந்தன், 1999). இக்கருத்து எந்த அளவிற்கு உண்மை எனக் கூறமுடியாது. ஏனெனின் அவர் தெலுங்கு மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. ஆக, அவர் விளக்கமுறையில் செய்யுளும் வழக்கும் இடம்பிடித்தன எனலாம்.
(எ – டு.) தத்திதம்
1. அரமர + இக – அரமரிக (தெ.பெயர், Difference of opinion - கருத்துவேறுபாடு)
2. நட3வடி3 + இக – நட3வடி3க (சமசு.பெயர், Behavior - நடத்தை)
3. நாடு3 + இக – நாடி3க (தெ.வினை, நடுதல்)
4. இப்3ப3ந்தி3 + கா + டு3ங் – இப்3ப3ந்தி3கா3டு3 (தெ.பெயர், One Type of Tiger – பிரச்சினைக்குரிய கரடி)
5. பரி + கா + டு3ங் – பரிகாடு3 (தெ.பெயர், Leader Elephant – யானைக்குழுத் தலைவன்)
6. அடமட + ஈ + டு3ங் – அடமடீcடு3 (தெ.பெயர், Cheat – வஞ்சித்தல்)
7. கம்மத + ஈ + டு3ங் – கம்மதீcடு3 (Farmer – உழவன்)
8. மெக்கலி + ஈ + டு3ங் – மெக்கலீcடு3 (தெ.பெயர், Thief – திருடன்)
9. கல்லர + ஈ +டு3ங் – கல்லரீcடு3 (தெ.பெயர், Liar – பொய்யர்)
கிருதந்தம்
10. அஞ்ஜு + இக – அஞ்ஜிக (சமசு.பெயர், Fear – பயப்படுதல்)
11. அமர + இக – அமரிக (தெ.பெயர், Set up - பொருத்தம்)
12. அரயு (to know – அறிந்துகொள்ளுதல்) + இக – அரயிக (தெ.பெயர், Knowledge - அறிவு)
இக்காட்டுகளின் அடிப்படையில் நோக்கினால் சின்னயசூரி தெலுங்குச் சொல் + ஒட்டு, சமசுகிருதம் + ஒட்டு என வகுத்து விதியமைத்துள்ளார் என்பது புலப்படும். அவர் தெலுங்கு மொழிச் சொற்களுக்குப் பின்பும் சமசுகிருதச் (தற்சமம் அல்லது தற்பவம்) சொற்களுக்குப் பின்பும் அமைந்து நிற்கும் ஒட்டுக்களுக்கு ஒரே விதியில் விளக்கம் தந்துள்ளமை கவனிக்கத்தக்கது. காட்டாக,
அரமராது3லகு ஸ்வார்த2ம்பு3 நந்தி3க வர்ணகம்பகு3 – தத்தி.9
(அரமராதிகளுக்குச் சுவார்த இக உருபாகும்)
The Suffix –ika will occur after a stem of aramara – class in the sense of the stem itself (2002:185)
இக வர்ணகம் ப3ஞ்ஜ்வாது3லககு3 – கிரு.12
(இக உருபு அஞ்ஜுவாதிகளுக் காகும்)
The Suffix –ika occur after a root of the anju – class (2002:274)
என்றாயிரு விதிகளைக் குறிப்பிடலாம். இவ்விரு விதிகளும் தெலுங்குச் சொற்களுக்கும் சமசுகிருதச் (தற்சமம் அல்லது தற்பவம்) சொற்களுக்கும் பின்னர் வரும் ஒட்டுக்கள் எவ்வாறு புதிய சொல்லை உருவாக்குகின்றது என விளக்குகின்றன. அதனை மேற்காண் எடுத்துக்காட்டுகள் (காண்க: 1, 2, 3, 10, 11, 12) புலப்படும்.
அடுத்து, வேற்று வடிவுடைய ஒட்டுக்களுள் எவ்வெவ் வொட்டுக்கள் சொல்லிற்கு முன்பும் பின்பும் வருவன என்பதைப் பின்வரும் அட்டவணை துலக்கும்.
ஒட்டுவகை | தொல்காப்பியம் இடையியல் | பாலவியாகரணம் | |
---|---|---|---|
தத்திதம் | கிருதந்தம் | ||
முன்னொட்டு | கொன், மற்று, எற்று, மற்றையது, எல், அம்ம, ஆங்க, மாது (8) | - | - |
பின்னொட்டு | மன், தில், உம், ஓ, ஏ, என, என்று, மன்ற, தஞ்சம், அந்தில், கொல், ஆர், குரை, மா, மியா, மோ, மதி, இகும், சின், போலும், யா, பிற, பிறக்கு, அரோ, போ, ஆக, ஆகல், ஆ, ஊ, ஐ, எனா, என்றா, உந்து, ஒடு (34) | தந, றிக, கத்திய, இமி, ந, உக, ஆடி3, அரி, இ, த, இcடி3, எடு3, பண்டி3, கொலது3 (14) | அக, அவு, இ, இமி, உ, க, கலி, குவ, க3ட3, ட, டு, டு3, த, தங், நஙி, ப, பு, ப3டி3, வடி3, வி, வு (21) |
கூடுதல் | 42 | 14 + 21 = 35 |
இவ்வட்டவணையின் மூலம் கொன், மற்று, எற்று, மற்றையது, எல், அம்ம, ஆங்க, மாது ஆகிய ஒட்டுக்கள் பழைய உரையர்களின் (இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார்) கருத்துப்படி முன்னொட்டுக்களாகவே அமைந்துள்ளன. ஆக அவர்கள் தொல்காப்பியர் அவ்வொட்டுக்களை முன்னொட்டுக்களாகவே வரையறை செய்துள்ளார் எனப் புரிந்து கொண்டுள்ளனர் எனலாம். அதனை அவர்கள் காட்டிய காட்டுகள் சுட்டிக்காட்டும். அக்காட்டுகள் வருமாறு:
கொன் – கொன்முனை யிரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே – குறுந். 91
மற்று – மற்றுங் கூடும் மனைமடி துயிலே – நற். 360
எற்று – எற்றென் உடம்பின் எழில்நலம்
மற்றையது – மற்றையது கொணா
எல் – எல்வளை எம்மொடு நீ வரின் – கலி. 13:10
அம்ம – அம்ம வாழி தோழி! – ஐங். 31, குறுந். 77
ஆங்க – ஆங்கக் குயிலும் மயிலும் காட்டி
கேள்வனை விடுத்துப் போகி யோளே
மாது – விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் நெஞ்சே – நற். 178
ஆகத் தொல்காப்பியர் இடையொட்டுக்களை செய்யுள் வழக்கையும் பேச்சு வழக்கையும் துணையாகக் கொண்டு முன், பின் ஒட்டுக்களை வரையறுத்துள்ளார் என்பது வெளிப்படை. இதனை,
முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும்
தம்மீறு திரிதலும் பிரிதவண் நிலையலும்
அன்னவை எல்லாம் உரிய என்ப – தொல். சொல். இளம். 246
எனும் தொல்காப்பிய விதி துலக்கும். ஆனால் சின்னயசூரி மொழியில் காணப்பெற்ற பின்னொட்டுக்களையே விளக்கியுள்ளார் என்பதை அறிய முடிந்தது.
இதுகாறும் விளக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நோக்கும் பொழுது இருமொழி இலக்கணங்களும் பெயர், வினைச் சொற்களுக்குப் பின்பு சேரும் ஒட்டுக்கள் குறித்து விளக்கின என்பதையும், குறிப்பாகப் பின்னொட்டாக்கங்களையே பெரிதும் வரையறை செய்துள்ளன என்பதையும், தொல்காப்பியம் தமிழ்மொழிச் சொற்களுக்கு விதியமைக்க, பாலவியாகரணம் தெலுங்குமொழிச் சொற்களுக்கும் சமசுகிருதத்திலிருந்து கடனாளப்பட்ட சொற்களுக்கும் இணைத்தே விதி வகுத்துள்ளது என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.
அவ்விருமொழி இலக்கணங்களும் மிகுதியாக பின்னொட்டை ஏற்கும் தன்மை குறித்து விளக்குவதால் பண்டைக் காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் தமிழுக்கும் தெலுங்குக்கும் இலக்கண அளவில் உறவு இருந்து வந்துள்ளமையை அறிய முடிகின்றது. அதாவது, தெலுங்கு இலக்கணங்கள் சமசுகிருத மரபை உள்வாங்கினாலும் தமிழ் உறவையும் புறந்தள்ளி விடவில்லை என்பதை பாலவியாகரண ஒட்டுக்களின் விளக்குமுறைகள் புலப்படுத்திவிட்டன எனலாம்.
துணைநின்றவை
தமிழ்
1. அகத்தியலிங்கம் ச. முருகையன் க. (பதி.), 1972, தொல்காப்பிய மொழியியல், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
2. அறவாணன் க.ப., 2002, அற்றை நாட் காதலும் வீரமும், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்ம்பரம்.
3. ஆனைவாரி ஆனந்தன் (மொ.ஆ.), 1999, பரவஸ்து சின்னையா சூரி, சாகித்தியா அக்காதெமி, சென்னை.
4. இளவழகன் கோ.(பதி.), 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
5. …………………., 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
6. ………………, 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
7. ……………….., 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
8. கோவிந்தசாமி பிள்ளை (பதி.), 1997, தொல்காப்பியம் சொல்லதிகாரம், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
9. சண்முகம் செ. வை., 1992, சொல்லிலக்கணக் கோட்பாடு – 3 தொல்காப்பியம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
10. சுப்பிரமணிய சாஸ்திரி பி. சா., 1930, தொல்காப்பியச் சொல்லதிகாரக்குறிப்பு, The Madras Law Journal Press, Madras.
11. தமிழண்ணல் (உரை.), 2008, தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
12. பரமசிவம் கு., 2011, இக்காலத் தமிழ் மரபு, அடையாளம், திருச்சி.
13. ……………, 2011, இக்கால மொழியியல் அறிமுகம், அடையாளம், திருச்சி.
14. ஜகந்நாதராஜா மு.கு., 2005, தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
தெலுங்கு
15. நரசிங்க ரெட்டி சி. (உரை.), 2011, பாலவியாகரண வியாக்கியன சகிதம், தெலுங்கு அக்காதெமி, ஐதராபாத்து.
16. பரவத்து சின்னயசூரி, 2005, பாலவியாகரணம், பாலசரசுவதி புத்தாலயம், சென்னை.
17. வச்சல சினசீதாராமா சாத்திரி (உரை.), 1959, பாலவியகரணோத்தியோதம், ஆந்திர தேச சாகித்திய அக்காதெமி, ஐதராபாத்து.
18. வந்தராம் ராமகிருட்டிணராவ் (உரை.), 1987, பாலவியாகரண கண்டபாதம், விசாலாந்திர பதிப்பகம், ஐதராபாத்து.
ஆங்கிலம்
19. Brown C.P., 2011, Telugu-English Dictionary, Asian Educational Services, New Delhi.
20. Subrahmanian P. S., 2002, Ba: lavya: karaNamu, Dravidian Linguistics Association, Thiruvanandhapuram.
அகராதி
21. இராமலிங்கம் டி. எஸ். (பதி.), 2005, நர்மதாவின் தமிழ் அகராதி, நர்மதா பதிப்பகம், சென்னை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.