அதீதவேளை
வாழ்வுப் புத்தகத்தில் மரணத்தின் வரிகள்
சூன்ய வெளியில் அக்னி ஜுவாலை
காற்றின் தேசமெங்கும் காந்தல் வாசம்
வீட்டின் விட்டத்தில் விண்மீன்கள்
குழந்தையின் கைகளில் தவளும் வெண்ணிலா
யானைக் கூட்டத்தில் சிக்கி
பயந்தோடும் சிறுத்தை
வனத்தில் மீதமிருக்கும்
மான் இறைச்சியை ருசிக்க
வட்டமிடும் கழுகுகள்
பசியோடு அலையும் பிச்சைக்காரன்
நினைப்பான்
கடந்து செல்லும் எல்லோரும்
உணவருந்திவிட்டதாக
தேசாந்திரியாக திரிபவன்
கிழக்கு எதுவென்று தேடிக்கொண்டே
மேற்கு நோக்கி நடந்தான்
அந்தி நேரத்துச் சூரியன்
பொன்ணொளிப் பாய்ச்சியது
விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டதையுணர்த்த
கடைசி தருணங்கள்
மேஜையின் மீது விஷம் இருந்தது
போத்தல்களில் தண்ணீர்
நிரம்பியிருந்தது
விஷம் கசக்குமா, துவர்க்குமா
முன்பின் அருந்தியதில்லை
யார் மீது கோபம்
அவனுக்கு தன் மீது
தீராக் கோபம்
ஏமாற்றம், துரதிஷ்டம்
இவைகளால்
நிரம்பியது அவன் வாழ்க்கை
எதிர்கொண்ட செயல்களனைத்தும்
தோல்வியில் முடிந்தது
இந்த நிலையில் நீங்கள்
என்ன செய்வீர்கள்
அவனுக்கு இருக்கத்தான் ஆசை
ஆனால் நாளையே
வாழ்க்கையின் கோர முகத்தை
அவன் மீண்டுமொருமுறை
எதிர்கொள்ள நேர்ந்தால்
கையிலெடுத்தான் விஷ பாட்டிலை
விழுங்கிய வேளையில்
இன்றோடு அவனுக்கான உலகம்
அழிந்துவிட்டிருந்தது.
நெடுஞ்சாலையிலொரு விபத்து
சுமார் நாற்பது வயது இருக்கலாம்
கல்யாணமானவர் போல் தான் தெரிகிறது
இருசக்கர வாகனமும் புதுசு தான்
இன்னும் பதிவு எண் கூட
வாங்கவில்லை
என்ன காரியமாய்
வீட்டிலிருந்து கிளம்பினாரோ
எப்பவும் போல் குழந்தைகள்
டாடா சொல்லியிருக்கும்
மனைவி கொடுத்த
மளிகை லிஸ்ட் கூட
பையில் இருந்திருக்கும்
கைபேசி அருகில் கிடந்தது
பேசிக் கொண்டே வாகனத்தை
அஜாக்கிரதையாக செலுத்தியிருக்கலாம்
டேங்கர் லாரி மோதி
தூக்கிவீசப்பட்டவுடன்
அவரது வாய்
தண்ணீர் தண்ணீர் என்று
முனகிக் கொண்டே இருந்தது
எனக்கும் சோடா வாங்கிக்
கொடுக்க விருப்பம் தான்
அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது
உயிர் உடலிலிருந்து பிரிந்துவிட்டிருந்தது.
ப.மதியழகன்,
115, வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி-614001,
திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு.
cell:9597332952
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.