கருகும் முது மாலை.
பூம்புகாரின் தொல்கரைகள் சிவக்க
நுரைக்கும் திராட்சை மதுவாய்
நெழிகிறது எழுவான் கடல்.
இது படுவான் கரையென்றால்
மாலை செம்பொன்னாய்ச் சொரியுமே.
எனினும் காதலில் சிறகுகள் உரச
கூடு ஏகும் பறவைகளின் பாட்டில்
கானல் வரி தொனிக்கிறது.
*
இந்த மதுவார்க்கும் மாலையில்
தனித்த முது கவிஞன்.
நினைவு இடறி நான்கு தசாப்தங்கள்
காலச்சரிவில் உருள்கின்றேன்.
எங்கோ ஒரு ஜப்பானியப் பாடல்
தாபம் வளர்கிறது.
*
அது ஈழத்தின்கொடும் பகையை எதிர்த்து
ஒவ்வொருவராய் நாங்கள்
போருக்கு எழுந்த காலம்.
எத்திசை செலினும் அத்திசை சோறே
அத்திசை தமிழே என
தோழர்கள் புலம் பெயர்ந்தார்..
*
இது ஆண் கடல்.
காவிரிக் கரையில்
இந்தக் கொடுங் கடலை நம்பியொரு
தொல்நகரம் இருந்ததுபோல்
என்னருகே மெல்ல
யப்பானியப் பாடல்களை இசைத்தபடி
ஆரி மக்சிமோட்டோ இருந்தாள்.
*
வாடிய தென்னந்தோப்பாய் அசையும்
நரைத்த தாடியின்கீழ்
கீழடியாய் மறைந்திருக்குமே
காதல் தொன்மங்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.