வண்ண மொழி பேசும் வாடாமலர்கள்
சிங்காரப் பாட்டிசைக்கும் சுந்தர மழலைகள்
சிரித்தே மகிழ்ந்திட சின்னச்சின்னப் பாடல்கள்
சித்திரமாய்ப் புனைந் தெடுத்த அழகுதமிழ்க்
கவிஞனே உன் பணிக்கு எம்வணக்கம்..!
துள்ளி வரும் புள்ளி மானை
தோகை விரிக்கும் கோல மயிலை
இன்னிசை பாடும் இளங் குயிலை
எழிலாய் மிதந்திடும் உதய நிலவை
மெல்லத் தழுவிடும் இளந் தென்றலை
பாடும் கவிஞர் கூட்டத்தின் நடுவே
பாடிடத் தேடினாய் குழந்தை மனங்களை..
ஞானக்கவியே.. உன் பணிக்கு எம்வணக்கம்..!
எண்ணக் குவியலாய் எழுந்தே வந்திடும்
கண்ணின் மணிபோல் கருத்துகள் மிளிர்ந்திட
எழுது கோலை எடுத்துப் பிடித்தே
தவிக்கும் உயிர்கள் விழித்தே எழுந்திட
வைர வரிகளை வரைந்தே தந்திடும்
எழுத்தின் மன்னர்கள் தமக்கும் மேலே
பாலரை எண்ணிய பைந்தமிழ்ப் பாவலா
உன் பணிக்கே எம் வணக்கம்..!
தேனிலும் இனிய வாழ்வினைப் புரியாது
பிரபஞ்சப் படைப்பின் இரகசியம் அறியாது
வாழ்க்கைச் சூழலில் சிக்கிச் சுழலும்
ஏழை மனங்களின் துன்பச் சுமைகளை
இறக்கிட வழிகளை எழுத்தினில் காட்டிடும்
இலக்கியச் சித்தர்கள் பாடிடும் பூமேடையில்
குழந்தை மனங்கள் துளிர்த்தால் போதுமே
மானிடம் செழிக்கும் என்றே தான்
தத்துவம் சொன்ன இலக்கிய வித்தகா..
உன் மொழிக்கு எம் வணக்கம்..!
பண்பினை அன்பினை சொற்களில் அளந்தாய்
வெற்றியின் சூட்சுமம் அறிந்தாய் வென்றாய்
பிஞ்சு மனங்களைப் படித்துப் படைத்தாய்
பாட்டால் குழந்தைகள் உளந்தனில் நின்றாய்
வாழ்வின் பெருமையை இறப்பினில் காட்டினாய்
சத்தியவாழ்வை வாழ்ந்தே காட்டிய அமரதீபமே...
வாழும் உன்படைப்புகள்.. வளரும் உன்நினைவுகள்..!
ஆசிரியப் பணியினால் தேசத்தை அளந்தாய்
நேரிய சேவையால் பதவியில் உயர்ந்தாய்
எழுத்தின் மேன்மையால் பெருமைகள் பெற்றாய்
மாணவச் செல்வங்கள் மாண்புற உழைத்தாய்
சென்ற இடமெல்லாம் சிறப்புகள் கண்ட
எழுத்தின் வேந்தே வாழ்க உன்பெயர்..!
சிந்தையில் சிறார்கள் முகங்களை நிறைத்தாய்
சிறப்புற அவர்க்காய் எழுத்தினை வடித்தாய்
பண்புடன் பாலகர் பெருமைகள் பெற்றே
வாழ்வை வென்றிட வேண்டியே பாடினாய்
சிறுவர் இலக்கிய வேந்தனாய் நிமிர்ந்த
செந்தமிழ்ப் பாவலா வாழும் உன்நாமம்..
வையகத்தில் நிலைத்தே நிற்கும்..!
பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.