1. கவிதை: நிலைப்புணருதல்! - அருணா நாராயணன் -
உண்மைக்கும் நம்பிக்கைக்கும்
நம்பிக்கைக்கும் உண்மைக்கும்
நடுவில் என்ன நிலை.
எடுகோள்கள் இன்றும்
மாறி மாறிக் கொண்டே
கடவுளையும் சாத்தானையும்
மோத விட்டுவிட்டு
பசிக்காய் அலைந்து கொண்டிருக்கின்றன.
இல்லாததை இருப்பதாய்
நம்பும் ஒருவர்
அந்த நம்பிக்கையிடம் கடவுச்சீட்டு வாங்கிக் கொண்டார்.
இருந்தும் இருப்பதை
உணராத அவரும்
அந்த அறிவிடம் அனுமதி
பெற்றுக் கொண்டார்.
அறிவும் நம்பிக்கையும்
எதிர் எதிர் திசையில் பயணித்து கொண்டு இருந்தது.
ஆனாலும் நடுவில் மனம் மட்டும்
ஒற்றைக் கோடாய் புறப்பட்ட இடத்தில் கோட்பாடுகளை
துவைத்து கொண்டு இருந்தது.
உண்மைக்கும் நம்பிக்கைக்கும்
நம்பிக்கைக்கும் உண்மைக்கும்
நடுவில் உள்ளதை
காதலுக்கும் காமத்திற்கும்
காமத்திற்கும் காதலுக்கும் நடுவில் நின்று
அவரவர்கள் தேடிப் பார்த்தார்கள்.
பொறி சுட்ட உணர்வே
சர்வம் என உணர்ந்த
ஆதாமும் ஏவாளும்
உண்மைக்கும் நம்பிக்கைக்கும்
நம்பிக்கைக்கும் உண்மைக்கும்
நடுவில் அந்த ஆப்பிளை மட்டும் கடித்தார்கள்.
உண்மைக்கும் நம்பிக்கைக்கும்
நம்பிக்கைக்கும் உண்மைக்கும் நடுவில்.....
அட
நீயும் நானும்...
அவளும் அவனும்...
அது
காதலும் காமமும்
காமமும் காதலும்
புணர்ந்த
இறைவியும் இறைவனும்.
கடவுளும் சாத்தானும் மறைந்து போனார்கள்.
2. கவிதை: வெஞ்சனம்! - அருணா நாராயணன் -
வெள்ளன எழுப்புஞ்சை!
விசனப்பட்டு ஏத்திகிட்ட சரக்கில்
சத்தியமா ஒன்னும் இல்லை.
கோளாறு குறிபாக்க
ஊரணிக்குத் தெக்கிட்டு
நொண்டிக் கருப்பேன்வாசலுக்கு
ஒரு நடை போய் வரணும்.
எப்பத்தான் வெளங்குமோ
எல்லாம் போல எம்புள்ள
எழுந்து நடக்குமோ?
மாமவோய்...! குடுச்ச போதைக்கு
பகுமானமா சேதி சொல்லி
குமட்டிக்கிட்டு வரும் உம்புட்டு ஞாயம்
விடிஞ்சாப் போச்சு.
பாவி மக பொழுதெல்லாம்
இப்படி பொழைப்பா போச்சு.
கருவாப் பயலே...! ஒத்த நாடி....ஒன் நெடி
என் உச்சந்தலை ஏறுது
உம்புட்டு உளறளும் என் உயிரை
உலையில ஏத்தி வச்சு நோக்குது.
அடியே...! இவளே அடிவயிறு எரியுது.
இந்த மீளாத பொறப்புக்கு
மீஞ்ச கஞ்சியக் கொஞ்சம்
வட்டியிலே ஊத்திக் கொடு.
வக்கனையாய் இல்லாட்டியும்
தீஞ்ச கஞ்சி வகுத்துக்குள் இறங்க
என்ன வச்சு தரப்போற?
வையாதே என் மாமா! வைக்கத்த சனங்களுக்கு
தொட்டுக்க ஏது மச்சான்?
தொண்டைக் குழியில் இறங்கிப் போக
இன்னைக்கும் என்னைக்கும்
உன் வெஞ்சனம் நான்தான்
வா மாமா?
பொல்லாச் சிறுக்கி மவளே
இல்லாத பந்தியிலே தினம் தினம்
சொல்லாம விருந்து வைக்கும்
என் கொல தெய்வமே
இனி நாளைக்கு குடி இல்லை.
வந்து படுடா
பொசகட்ட எம்மாமா
அந்த சாமக்கோழி கூட சங்கடமா நெளியுது.
என்னைக்காவது வெஞ்சனம் கிடைச்சா
என்னை மறந்திடாத எம்மாமா.
அன்னைக்கு என் வெஞ்சனம்
நீதாண்டி என் மாப்பிள்ளே!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.