மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்!
‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்’
என்ற பாரதியாரின் வரிகளை முன்வைத்து
ரசனை என்பது வாழ்க்கைக்குத் தேவை
அந்த நிலைக்கு என்னை
அழைக்கிறது கவிதை
நிகழ்காலத்தை
நித்தியமாக்கி என்னுள் உறையவைக்கிறது
திறவாத கதவுகளை
சவாலாக்கித் திறக்கிறது
மார்ச் எட்டு உலகப் பெண்கள் தினமாம்
எனக்குப் புரியவில்லை
தினங்களின் கொண்டாட்டமா? இல்லை
பெண்களின் கொண்டாட்டமா?
இன்று பெண்களைக் கொண்டாடுவோம்
பெண்ணுக்கோ உருவத்தில்
துன்புறுத்தும் சவால்கள்
குவியும் அறைகூவல்களை
கூவி நாம் தெரிவு செய்வோம்!
ஓவ்வொரு பிள்ளையையும் ஈன்றெடுக்க
முதலாம் மாதம் வாந்தி
ரண்டாம் மாதம் மயக்கம்
மூன்றாம் மாதம் மகிழ்ச்சி
நான்காம் மாதம் தலைவலி
ஐந்தாம் மாதம் வயிற்றுவலி
ஆறாம் மாதம் இடுப்புவலி
ஏழாம் மாதம் வயிற்றில் ஒலி
எட்டாம் மாதம் சோர்வு
ஒன்பதாம் மாதம் ஒருவித பயம்
பத்தாம் மாதம் மறுபிறப்பு என்று
எம்மை உலகிற்குக் காட்டினாளே ஒரு பெண்
எமது வீட்டில் இருக்கின்ற
ஒவ்வொரு தாயையும் இன்று நாம்
கொண்டாடுவோம்!
அவள் யார் தெரியுமா?
அவள்தான்
ஆணின் முதல் காதலி!
பெண் அற்புதமானவள்
பெண் அதிர்ச்சி தரக்கூடியவள்
பெண் புதிரானவள்
பெண் அழகானவள்
எத்தனை வடிவங்களாகி
இந்தப் பெண்கள்!
புதுமைப் பெண்ணே!
சாதித்துவிட்டுத்தான் சாவேன் என்று நினை!
முடியும் என்று துணிந்து நில் உன்
மூளைக்குள் மின்சாரமே பிறப்பெடுக்கும்!
விழுந்து கிடந்தால்
சிலந்தி வலைகூட உன்னைச் சிறைப்பிடிக்கும்
தன்னம்பிக்கை என்னும் நெருப்புப் பொறி உன்
நெஞ்சுக்குள் புரளட்டும்
எண்ணியதோ எண்ணியவாறு நடக்கட்டும்!
பெண்ணே!
வெற்றி பெறும்வரை அமைதியாக இரு
வெற்றிக்குப் பின்னர் அடக்கமாய் இரு
முயற்சிக்கு முன்னால் தயக்கமும்
வெற்றிக்குப் பின்னால் மயக்கமும் உன்
உயர்ச்சியைக் கெடுத்துவிடும்
உணர்ந்துகொள் நிதமே!
நித்தம்
உழைத்துக்கொள் பெண்ணே!
உலகில் உன்னை உயர்த்திக்கொள்!
அன்பின் ஆரம்பம்
உள்ளத்தில் மழலை
அறிவுரையின் ஆசான்
வெறுப்பில் ஒரு நெருப்பு
உள்ளத்துள் வெற்றி
துணிவின் இருப்பிடம் நீ என்று
துணிந்து சொல் பெண்ணே!
பீனிக்ஸ் பறவை என்று
எழுந்து நில் முன்னே!
சிறகுதனை விரித்து!
முதல் முதலாக
அலுவலகம் சென்ற பெண்ணை
படுத்தியபாட்டை கேட்டாயா?
மடக்கிப் பார்க்கும் ஒரு அடக்குமுறை
நிழலைப் பார்த்துப் பயப்படாதே
எங்கோ ஒரு வெளிச்சம் இருக்கிறது!
நினைவில் கொள்!
அமைப்புகள் வைத்துக்கொண்டு
அர்த்தத்தைப் புரிந்துகொண்டும் பெண்
தினங்களில் மகிழ்வோமா?
நிலவில் வீடு கட்டி
நிறங்களின் குணம் தெரிந்தும்
அறிவியல் மந்திரியாகிச் சிலர்
பெண்களை
பதவியும் இறக்குவார்கள்
நெஞ்சிலே முட்களை வைத்துக்கொண்டு
நாவிலே நந்தவனமும் வளர்ப்பார்கள்
அடி புதுமைப்பெண்ணே!
நடக்கப் பாதையில்லையே –என்று
கவலைப்படாதே
நீ நடந்தாலே அதுவே ஒரு பாதைதான்..!
வன்முறை தீங்கானது
அது என்னை அழவைக்கிறது
துன்புறுத்துகிறது
பெண் ஆண் குழந்தைகளை
பாலியல்படுத்தும் சமுதாயமே!
கற்பையும் கருப்பையையும்
ஆண்களுக்குள் வைத்துப் பார்ப்போமா?
வேண்டாம் இந்த வன்புணர்வை
புரிதல் கொண்டு தடுத்திடுவோம்!
இன்று
உன் சவால்களைத் தெரிவு செய்!
அதற்கு முன் நீ சுதந்தரம் ஆனவளா?
புலத்தில் நீ
எதையெல்லாம் செய்ய விரும்புகிறாயோ
அதையெல்லாம் செய்வதுதான்
சுதந்திரம் என்று நினைக்கிறாய் பெண்ணே!
ஓம் அது தானே!
மகிழ்ச்சிதான் - ஆனால்
நினைவிற் கொள்
எதனை?
எதையெல்லாம் செய்ய விரும்பவில்லையோ
அதையெல்லாம் நீ
செய்யாமல் இருப்பதுவும்தான் உன் சுதந்திரம்!
ஓ... அப்படியா?
சந்தைக்குள் மாய்கிறது
சமூகம்
பணத்தை அளக்கிறது
அரசு
முட்டாளாகி அலைகிறது
வைரசு
மனஅழுத்தம் குழந்தைகளுக்கும் என்கிறார்
வைத்தியர்
மூளையமைப்பில் ஈகியூ அதிகமாகிப்
பெண்கள்
சிந்தனையில் பெருக்கெடுக்கிறது
சகிப்பு!
பெண்ணே!
சவால்களைத் தெரிந்துகொள்!
சமத்துவம் இல்லாமல்
வன்முறை வெடிப்பதை வெறுத்துப்பார்!
உலக சபை கூடி என்ன?
உன் உடல்தான் உனது வாழ்க்கை!
அழகியலை ஆராய்ந்து
மானிடத்தை இயல்பாக்கி
மகிழ்ச்சியை அணைத்துக்கொள்!
குதிரைக்குள் வண்டியைப் பூட்டியிருப்பதுபோல்
தப்பிக்க முடியாமல் சில பெண்கள்
சிவந்து சிவந்து சிந்திவிட்ட ரத்தம்
இயற்கையின் சீற்றம்
வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது
மின்தூக்கியில் தனியாக
அந்தப் பெண் இறங்குகின்றாள்
ஆணும் பெண்ணும் சேர்ந்து
லயமாக வாழ்வோமா? என்கின்றாள்
திறவாத ஒரு கதவு திறக்கிறது
வாழ்க்கையை எப்படி வாழ்வது?
தீக்குச்சிகளாக்கிப் பார்க்கின்றாள்
விரிவாகும் நம்பிக்கையில்
பொறுமை சத்தியம் தைரியத்தை
தீபமாக்கி வணங்கு என்றாள்!
இவற்றைச் சவாலாக்கி
நம்பிக்கையால் நீ வெல்வாய் என்றாள்
கதவுகள் எல்லாம் திறந்துகொண்டன
ஆண் பெண்ணுக்காகவும்
பெண் ஆணுக்காகவும்..... என்ன சொல்கிறாய்?
பரிவுகொண்டு போராடுவோம் என்றாள்...
அதுவா?
வாழ்வின் உள்ளீடு அதுதான் என்றாள்... ம்;
பெண்களால் உலகமே உயர்ந்துகொண்டன!
நான் கூறியவை ஒன்றுமே புதிதல்ல
உனக்குத் தெரிந்ததுதான் என்றாள்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.