எனக்கு பிடித்த என்
இள அழகு முகம்
முகச்சவரம் செய்ய செய்ய
எனக்கே பிடிக்காமல்
நானாகவும் இல்லாமல்
என் சாயலிலுமில்லாமல்
ஒரே மாதிரி இருக்கும்
ஏழுபேரிலும் அடங்காமல்
எவனோ ஒருவன்
என்னுடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்ததுபோல் ஒரு
அன்னிய ரேகை
ஓடுவதையறிகிறேன்
எனக்கு பிடித்தார்போல்
தலைசீவிக்கொள்ளவோ
ஸ்டைலாக அதை களைத்து
ரசிக்கவோ முடியவில்லை
முன்புபோல் முடி கருமையில்லை
எரியுண்ட நெருப்பெச்சத்தின்
சாம்பல் நிறமானது
முற்றாக
தொலைந்துகொண்டிருக்கும்
நான்
கண்ணாடியின்
முதுகுத்தோலுறித்து
என் முகம் ஒட்டினேன்
கண்ணாடி தன்
நரைத்த மீசை தாடி என
ஒன்றடுத்து ஒன்றாகத்
தடவித்தழுவி எந்த குறைகளையும்
அவதானிக்காமல் அதை அப்படியே
என்னில் ரசித்துக்கொண்டிருந்தது
தன் இளவயோதிக அழகை
முதன்முறையாக.
◆◆◆◆◆
அறிவும் வயதும் ஐந்தே.
ஒவ்வொருவருக்கும்
அவரவர் இனக்கங்களையொத்து
அந்தந்த முகமாகவே ஒப்பனித்திருக்கிறேன்
என் சிதைக்கு வழியனுப்பவந்திருக்கும்
என் அன்பு முகமூடிகளின்
கண்களுக்கு
கடைசிவரை
காட்சிப்பிழையாகவே
நானும் என் முகமும்
எரியத்தொடங்கினோம்
என் பெயரைக்கொண்ட
நான் வளர்த்த நாய் மட்டும்
பத்தாசனையுடன்
என் ஆன்மாவையே
வழக்கம்போல இப்போதும்
சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கும்
என் திட்டாந்தரத்தை குரைத்தபடி
என் வீட்டில்
ப்ளீஸ்...
யாராவது அதனிடம்
நன்றியைப்பற்றி பேசிவிடாதீர்கள்
அதற்கு அறிவும் வயதும்
ஐந்தே ஐந்துதான்.
◆◆◆◆
அன்பே ஆதி அமுதசுரபி
எதையுமே வாய்திறந்தோ
சமிக்ஞையிலோகூட
கேட்டதாக தெரியவில்லை
கூடி நேர்ந்து
கூடி பயந்து
கூடி நம்பி, கும்பிட்டு
கூடிப்பணிந்து
கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்
எதையும் பெற்றுக்கொண்டதாக
தெரியவில்லை
வணிகத்தின் பீடத்தில்
அமர்த்தப்பட்டு
தான் தொழில்படுத்தும்
தொழிலுக்கு
எப்படி தொழில் பக்தியுடன்
காட்சியளிக்க முடிகிறது ?
அது உன் பிரக்ஞை ஒளிக்கற்றைகளிலிருந்து
பிரதிபலிக்கும்
காட்சிப்பிழையாதலால்,
உன்னை அத்தனை ஆதர்சனமாக
வணங்க முடிகிறது உனக்கு
அவ்வொளி தகிக்கும்வரை
பிறருக்கு
மீண்டுமொருவர்
மீண்டும் சிலர்
உன் அன்பின் பிம்பத்தை வைத்து
யாரோ செய்யும் சந்தைபடுத்துதலுக்கு
நீயும் ஒரு நுகர்வுரோகியாகி
குணப்படுத்திக்கொள்ள
ஓளடதங்களை நெற்றியில் பூசிக்கொள்கிறாய்
பட்டினியிலிருப்பவர்க்கும்
படிப்பு கிடைக்காதவர்க்கும்
அன்பே சிவம்
அன்பே சிலுவை
அன்பே 65 பிரியாணி
அன்பே பசி
உன் அன்பே ஆதி அமுதசுரபி
என்றுணர்ந்த பின்
கோவில் செல்ல வேண்டாம்
உன் வீட்டு நிலைக்கண்ணாடியிடம்
உன்னை காண்பி
உன் கண்களில்
கடவுள் உணர்வு
களைக்கட்டியிருப்பது
தெரியும்.
◆◆◆◆◆
வாத்சல்யமான வெயில்
சேகரமான
உணவுக்குப்பைகளின்
வீச்சத்தை சுமந்தபடி கிடக்கும்
குப்பைத் தொட்டியில்
தன் காலை உணவை
முடிந்து வைத்துவிட்டு
அதை உருட்டியபடி
சாலை வேலையில்
மும்முரமாகிறாள்
துப்புரவுப்
பணிப்பெண்ணொருத்தி.
சிறுமிக்குள் மெல்ல மெல்ல
பருவம் முகிழ்வதுபோல
இளமதியம் வெகுவாக
கொழுந்தெரியத்
தொடங்குகிறது
ஆறிப்போன உணவில்
தன் வாத்சல்ய
வெதுவெதுப்பை கிடத்தி
வெயில்
இன்னமும் சூடா...கவே
வைத்திருக்கிறது
சிற்றுண்டிப் பொட்டலத்தையும்
அவள் பசிவாதை வயிற்றையும்.
◆◆◆◆◆
ஆரோக்கியமான காற்றுக்கு
எங்கே போவது
வனத்தின் சுள்ளியை
அலகில் கவ்விக்கொண்டு
மனிதனில்லா நிலம் தேடுகிறது
ஒரு நீர் பறவை.
★★★★
தோழி
ஆண் எனும்
கல்மிஷக் குறியீடுகளைக்
கரைத்தருளும் நீ...
என்
தகப்பன் ஸ்தானத்து மகள்.
★★★★★★
திரு. அல்ல
நான்
திருநிறைச் செல்வியென
இப்பாலுலகில்
தினமும்
திருப் போர்
புரிகிறாள்
திருநங்கை.
.★★★★★
ஓட்டைகள் விழுந்த
குடைக்குள்
வெய்யிலைப்போல
சரியாக
நுழையத்தெரியவில்லை
மழைக்கு.
◆◆◆◆
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.