திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியவற்றுள்
சில இருப்பதாகத் தோன்றுகிறது.
அது
இறந்து போன ஒரு பறவையின் நீண்ட சிறகாக இருக்குமெனில்,
அது தன்னுடைய மரணத்திற்கு முன்பு
பறந்த வானத்தை
மீண்டும் சிருஷ்டிக்க முடியும்.
அத்தகைய சிருஷ்டியில் இருப்பவை
அது அமர்ந்திருந்த மரத்தை
அம்மரத்தில் தனது காதல் நிகழ்ந்த கூட்டை
அதன் எண்ணிக்கையில்லாக் குஞ்சுகளை
அதன் பறத்தலை
மீண்டும் கண்டு இன்புற முடியும்.
அம்மரத்தின் கிளையை
அக்கிளையில் பூத்திருந்த
அழகான மஞ்சள் நிறப் பூவை,
அப்பூவின் மனத்தால் ஈர்க்கப்பட்ட தேனீக்களை
அத்தேனீ ரீங்கரித்த ஓசையை
அவ்வோசயை எதிரொலித்த பெரிய மலையை
அங்கே பரந்தவெளியில் முளைத்திருந்த புற்களை
அப்புற்களின் மீது பெய்த பனித்துளிகளை
அப்பனித்துளிகளை பெய்த மேகக் கூட்டங்களை
அக்கூட்டங்களின் நடுவே ஆயிரமாயிரம் கூட்டமாய் பறந்த பறவைகளை
அவைகள் பறந்து சென்று கொண்டிருந்த திசையை
அத்திசையை நோக்கி மங்கலாக மறைந்து கொண்டிருந்த சூரியனை
அச்சூரியன் மறைந்த அக்கணத்தில்
வேறொரு திசையில் முளைத்துக் கொண்டிருந்த
நிலவை, அதன் பிறை வடித்தை
அது அப்பொழுது தேய்ந்து கொண்டோ அல்லது பிறையிலிருந்து வளர்ந்து கொண்டோ
மீண்டும் தேய்ந்து மீண்டும் வளர்ந்து பின் தேய்ந்து
அது
முழுமையைப் பெறவேண்டி வளர்ந்து கொண்டிருந்த வளர்தலை அல்லது
முற்றாய் தேய்ந்து போதலை
அத்தகைய அழகான சீழ்பிடிக்காத தருணத்தை
இயற்கையாக மீண்டும் விளைவிக்கச் செய்யலாம்.
அதற்கொரு பறவையின் சிறகு வேண்டும்.
அச்சிறகு அதனுடைய மரணத்திற்கு முன்பு உதிரும் தன்மையில்
இருக்குமெனில் யாருக்குத்தான் பரவசம் உண்டாகாது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.