1. கவியெழுதி வடியும்
இலையிருளில் இருந்தவண்ணம்
எனையழைத்து ஒருபறவை பேசும்
இதயத்தின் கனத்தையெல்லாம்
இதமாகச் செவியறையில் பூசும்
குரலொலியில் மனவெளியைத்
தூண்டிலென ஆவலுடன் தூவும்
குரலினிமை குழலினிமை
கொஞ்சும்மொழித் தேனாக மேவும்
துயில்கின்ற மனமானோ
துள்ளலுடன் கனவாடை கலையும்
கனவாடை கலைந்தாலும்
கவிவாடை தானாக விளையும்
பொருள்புரியா மொழிகேட்டு
புலர்காலை ஏக்கமுடன் விடியும்
புள்ளினத்தின் மனமறியாப்
பொங்குமனம் கவியெழுதி வடியும்
(அதிகாலையில் ஒருபறவையொலிகேட்டு எழுதியது. தொடங்கியது 26.03.2017 முடித்தது 1.03.2017)
2. குயில் தோப்பு (சிங்கப்பூர்)
ஒற்றைக் குயிலோசை
ஒலிக்கிறது நாடெங்கும்
காலையிலும் மாலையிலும்
கண்ணுறங்கும் வேளையிலும்
காற்றில் கரைகிறது
காதுவழி நிறைகிறது
கேட்கும் குரலொலியில்
கேள்விப் பிறக்கிறது
பாடி மகிழ்கிறதா?-துணையை
பாடி அழைக்கிறதா?
கூடிழந்து சோகத்தைக்
கூவி அழுகிறதா?
உறவை இழந்ததனால்
ஒப்பாரி வைக்கிறதா?
என்ன சோதனையோ
எதனால் வேதனையோ
மொழியும் புரியவில்லை
மொழிபுரிய வழியுமில்லை
உண்ணக் கனிகள்தரும்
உறங்கிவிழ நிழல்கொடுக்கும்
விண்ணைத் தொடுமரங்கள்
வேரோடு அகன்றதனால்
விருட்சம் இருந்த இடம்
வீடெழுந்து நிற்பதனால்
காடென்றும் கழனியென்றும்
கரடென்றும் குன்றென்றும்
தோப்பென்றும் துரவென்றும்
மலையென்றும் முகடென்றும்
மழைவழங்கும் கார்முகிலால்
ஆறென்றும் அருவியென்றும்
பேரெடுக்கும் நீர்வளத்தால்
அடர்ந்த மரக்கூட்டத்தால்
படர்ந்தபசுஞ் செடிகொடியால்
மனம்மகிழ கண்குளிர
இருந்த எழிலியற்கையை
இழந்தபெரும் துயராமோ
என்ன காரணமோ
எதுவும் தெரியவில்லை
ஏதென்று உணர
எனக்கும் முடியவில்லை
அன்னாந்து மரம்பார்த்து
அமர்ந்திசைக்கும் குயிலினிடம்
என்னான்னு கேட்கத்தான்
இதயம் துடிக்கிறது
கண்ணிரண்டின் வழியே
கவலையினைச் சொல்லலாம்
இறக்கைகளை அசைத்து
இதயத்தைக் காட்டலாம்
உல்லாச உணர்விருந்தால்
உற்சாகம் பொழியலாம்
அடர்ந்த மரக்கிளையில்
அதைப்பார்க்க முடியலையே
இலைகளுக் கிடையேதான்
இருந்துகொண்டு இசைக்கிறது
இரவாகி விடுவதனால்
இருளாடை மறைக்கிறது
பகலெல்லாம் கண்ணுக்குப்
பார்க்கத் தெரிவதில்லை
ஆனாலும் குயிலோசை
ஆங்காங்கே கேட்கிறது
குயில்கூவும் தோப்புஇது
குருவிகளின் சோலையிது
பறவைகள் வாழ்வதற்குப்
பலவழிகள் தருகிறது
உறவுப் பிரிந்தாலும்
உறவின்றி வாழ்ந்தாலும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உயிர்ப்பொழுதாய்க் கழிகிறது
உயிர்உருகிக் கரைகிறது
உயிர்க்காற்றாய் நுழைகிறது
உயிர்நீள இசைக்கிறது
தனிமைப் பெருஞ்சுமையைத்
தவிக்கும் மனப்புயலை
நீக்கும் மாமருந்தே
நீங்காப் பெருந்துணையே
பாட்டுப்பாடித் தினம்
பாடாய்ப் படுத்துகிறாய்
காட்டுத் திருமுகத்தைக்
கானக் கருங்குயிலே
தேனாய் இனிக்கின்ற
தெவிட்டா நல்லமுதாம்
மணக்கும் உன்பாட்டால்
கனக்கிறது என்மனசு
(எழுதத்தொடங்கியது 6.2.2015 எழுதிமுடித்தது 8.2.2015)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.