1. மழுங்கிய முனைகள்
அது ஏனோ தெரியவில்லை
உண்மையான அறிவையும் உயர்வான உழைப்பையும்
உப்பளமாய் மண்டியுள்ள செல்வாதிகாரச்செல்வாக்குகளின் முன்
மண்டியிட்டுக் குழையத் தெரியாத ஆளுமையையும்
கண்டாலே
உதறலெடுக்க ஆரம்பித்துவிடுகிறது சிலருக்கு….
உளறத் தொடங்குவதோடு நில்லாமல்
உருட்டுக்கட்டைகளையும் தூக்கிக்கொண்டு துரத்திவருகிறார்கள்.
ஊரும் பேரும் சீரும் சிறப்பும்
யாருடைய பரம்பரைச் சொத்தும் அல்ல.
வெள்ளத்தால் போகாது வெந்தணலில் வேகாது என்று
பன்னிப்பன்னிச் சொன்னாலும்
புரிந்துகொள்ளவியலாப் பேதைகள்
போதாததற்கு பதவுரை பொழிப்புரையெல்லாம்
தயாரிக்கத்தொடங்கிவிடுகிறார்கள்.
‘எதற்கு?” என்ற கேள்வி சிலரால்
‘எவ்வெவற்றுக்கு?’ என்று உள்வாங்கப்பட,
சிலரால் ‘என்ன கருமாந்திரத்துக்கு’ என்று கொள்ளப்படலாம்.
கவிதைக்குத் திறந்த முனை யிருக்கலாம் – எனில்
தவறைத் தவறெனச் சொல்வதிலும் சொல்லாதிருப்பதிலும்
சரிவருமோ, செய்யத் தகுமோ அது?
2. மண்ணாந்தை மன்னர்கள்
யாரோ கையில் கோலைக் கொடுத்துவிட்டு
காலணாக் கிரீடத்தையும் சூட்டிவிட்டார்கள்.
கேட்கவேண்டுமா கர்வத்துக்கு?
ஆசானாகத் தன்னைக் கற்பிதம் செய்துகொண்டுவிட்ட மண்ணாந்தையொன்று
பேசலாகாப் பேச்செல்லாம் பேசிமுடித்து
நீசத்தின் உச்சத்தில் நின்றபடி
கெக்கலித்துக்கொண்டிருந்தது.
கொக்கரக்கோவென்று கூவியா
பொழுது விடிகிறது?
கடி துடி அடி மடி
படி இடி குடி முடி
யொவ்வொன்றுக்கும் உன் அகராதியில்
அதிகபட்சம் பத்து அர்த்தங்களென்றால்
அவர் அகராதியில் நூறுபோல்…
இவர் அகராதியில் ஆயிரத்திற்கு மேல்!
கவிதையின் அரிச்சுவடி தெரிந்திருந்தால்
கவியின் மனப்பிறழ்வுக்காய் முதலைக்கண்ணீர்
வடித்திருக்க மாட்டாய்.
கவிதையெழுதும்போதெல்லாம் கவிஞர் காதலனாய்
கிறுக்கனாய்
மாறுவது உனக்குத் தெரியுமா?
சொட்டுச்சொட்டாய் சேகரித்த முத்துகளை
கொட்டாவி விட்டபடியே கையாடல் செய்யப்புகும் உன்
கீழ்மையை ஒளிக்க
எப்படியெல்லாம் பீடாதிபதியாகித் தொங்குகிறாய் தலைகீழாய்
‘Ten Commandments’ தருவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும்.
தன்னைத்தான் சிலுவையிலறைந்துகொண்டு கவிதை படைக்கும் கவிஞர்
ஒரே சமயத்தில் தனிச் சொத்தும் பொதுச்சொத்துமாய்….
உனக்கெல்லாம் எங்கே புரியப்போகிறது இது?
’அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’ அறிவாயா?
கோபிகிருஷ்ணனின் ’உள்ளேயிருந்து சில குரல்கள்’ கேள்விப்பட்டிருக்கிறாயா?
’நாராய் நாராய் செங்கால் நாரா’யும்
’வாராய் என் தோழி வாராயோ’வும்
’தேரா மன்னா’வோடு ஒட்டி முட்டும் இடங்கள்
என்னவென்று கேட்டால்
இந்த நூலில் கொஞ்சம்
அந்த நூலில் கொஞ்சம் எடுத்தாண்டு
கம்பவுண்டர் பட்டங்கள் நாலைந்து பெற்றுவிடல் எளிது.
எம்பாவாய் கம்புமாவிலிருந்து கிளம்பியதாய்
விளம்பிவிட்டால்
பின், புதுக்கண்டுபிடிப்பாளரன்றோ நீ!
சிரிக்காதே வெட்கங்கெட்டு.
பாட்டி சொல்லக் கேட்டதில்லை?
”புழுத்துப்போகும் வாய் பொய் பேசினால்”.
வீசும் காற்றுக்குச் சுருக்கிடப்பார்க்கும் உன்
மடமையை என்னென்பது...
சிற்றிதழ் வெளி யோர் வழுக்குப் பாறை;
இங்கே கரணம் தப்பினால் மரணம்.
அழகுநடை பழகுவதான பாவனையில் சற்றே
தெனாவெட்டாய் நடந்தால்
வினாடி நேரத்தில் கழுத்து உடைய
விழுந்திடுவாய் அதலபாதாளத்தில்.
கெட்ட முட்டாள் கனவானா யிருப்பதைக் காட்டிலும்
பெட்டிக்கடை வைத்துப் பிழைப்பது எவ்வளவோ மேல்
3. யாத்திரை
”நலம்; நலமென்று நம்புகிறேன்” –
விதவிதமாயிந்த வரிகளை எழுதி
எதிர்ப்படுகிறவர்களிடம் வினியோகித்தபடி நாம்…..
காசி என்பது தலமா?
வலமா? இடமா?
அகமா? புறமா?
பாசிவழுக்கலாய் மேற்செல்லும் வழியெல்லாம்
காசியாக
பயணநாளெல்லாம் புதிதுபுதிதாய்
பிறந்துகொண்டிருக்கிறோம்.
4. நன்றி நவிலல்
மொழிபெயர்க்கும்கவிதைகளெல்லாம்
என் மனவழியின் கிளைபிரியும் பாதைகளாய்….
மேசையின் இருபுறமும் அமர வாராமலேயே
தேனீர் அருந்துபவர்கள்,
இரவில் வலி மிக எழுதிய கவிதையை
பகலில் படித்து நெருப்புக்காயம் பெறுபவர்கள்,
கனவில் காதலியை அரவணைத்து
களிப்பா, கலக்கமா என்று புலனாகா
அந்தரவெளியில்
மனம் கனத்திருப்போர்,
கானகத்துளிநிலக் கண்ணாடியில்
தன் விசுவரூபம் கண்டு தவிப்போர்,
குழந்தைத் தொழிலாளியாய் அழுதிருப்போர்,
இறுதி யாத்திரை செல்லும் உடலில் தன்னைப்
பொருத்திக்கொள்வோர்,
அதுவேயாய், குறியீடாய் பொழிமழையின் அழகில்
தானழிந்திருப்போர்....
ஆன அனைவரிலும் தானாய் முளைக்கின்றன
என் பாதங்களும், காதங்களும்!
(*சமர்ப்பணம்: சக கவிஞர்களுக்கு)
5. மௌனசாட்சி
பெருகும் அன்பின் எதிர்துருவங்களில்
வெறுப்பும் வன்மமும் பரவிய குரல்வளைகள்
விரல்நுனிகளில்.
சிபிச்சக்கிரவர்த்தியின் நியாயத்தராசில்
சிறகொடிந்த பறவையைச் சீராட்டும் பாவனையில்
மரணத்தின் இருமருங்கும்
முண்டியடித்துக்கொண்டிருக்கின்றன
மெத்தப்படித்தவர்களின் மனவக்கிரங்கள்.
6. அழைப்பு
அழைப்பு வந்துகொண்டேயிருக்கிறது
அனைவருக்கும்.
செவிநுழையாத பாவனையில்
விறுவிறுவென அப்பாலோடியபடி நாம்.
வகுத்துரைக்கப்பட்டதொரு திருப்பத்தில்
கால்தடுக்கி கீழேவிழ
நெருங்கிவிடும் அக்குரலின் பிரவாகம்
இறுக்கிப்பிடித்து
உள்ளிழுத்துக்கொண்டுவிடுகிறது.
பின்
என்னவாகிறது?
விடையறியா கேள்வியினூடாய்
கடைவிரிக்கும் வாழ்வொரு
நாள்போல்….
(*சமர்ப்பணம் – இறந்துவிட்ட, இறந்துகொண்டிருக்கிற, இறக்கப்போகும் நம் அனைவருக்கும்)
7.நிலையாமை
நேற்றிரவு
சுற்றித் திரியும் சில மின்மினிப்பூச்சிகள், சில வண்ணத்திப்புச்சிகள்
என் தலைக்கு மேலாய் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
அரிய வெளிச்சத்தை வழியவிட்டபடி;
வாழ்க்கை வெறும் ‘VANITY FAIR’ ’ அல்ல என்று நிரூபித்தபடி;
அத்தனை நேர்த்தியாய் அவையோர் கவிதையில் ஊடுபாவாய்
நெய்யப்படும் என்ற நம்பிக்கையோடு.
எனில், புதிய அறை தரும் பயமும், பாதி உறங்கிப்போய்விட்ட தேகமும்
மீதிக் கண்கள் செருகிக்கொண்டிருக்கும் கோலமுமாய்
கனக்கும் மனதுடன் அவற்றை விரட்டிவிட்டேன்.
இன்று நான் முழு விழிப்பில் காத்துக்கொண்டிருக்கிறேன்
அந்த மின்மினிப்பூச்சிகளின் வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்காய்.
தங்கள் சிறகுகளும் ஒளிர்வுமாய் அவை எனக்கோர்
கவிதைவரம் அருளும் என்ற நம்பிக்கையோடு.
ஆனால், எத்தனை முயன்றாலும் அவை என் கோரிக்கையை ஏற்க மறுக்கின்றன.
வெற்றிடமாகினேன் இனி ஒருபோதும் திரும்பிவராத தருணம் இட்டுநிரப்ப
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.