1. சிக்கலில் சிக்கிய வினாக்கள்
மனசெனும் படகில்
வினாக்களின் பயணம்
துடுப்படிப்பாரின்றி
தளும்பி... ததும்பி..
நகர்கிறது
தொலைவில் புலப்படும்
சஞ்சல சுழலில்
சிக்கி தவித்தல்
உறுதி செய்யப்பட்ட நிமிஷங்கள்
நெஞ்சக் கரைகளில்
தொங்கும் மரங்கள்
கிளைகள் பட்டுவாடா செய்த
புயல் காற்றால்
தள்ளப்படுகிற படகு
தற்காலிகமாய்
வேற்றுப் பாதையேற்று
தொடர்கிறது..
பொருளடக்க விளக்கங்களின்
விவரணம் தேடும்
பயணத்தை
அணை சேர்ந்த தருவாய்
தவறி முறிந்த படகு
அள்ளி வீசப்பட்ட வினாக்கள்
தப்பியனவை மட்டும்
மதகு மோதி ஒட்டிக்கொள்ளும்
மீண்டும் விடைகள் தேடி
எட்டிப்பார்த்த தருணம்
அணையில்
நீர் வரத்து அதிகரிப்பின்
எச்சரிக்கை கொடி
********************
2. கிராமங்கள் கற்பிக்கும்
விரிந்த நெஞ்சு
துரித தேடல்
தெளிந்த பார்வை
தற்காப்பு கணிதம்
பகைவெல்லும் பயிற்சி
பொது உயிர் காப்பு
தியாக பொறுப்பு
வேண்டிய அளவைகளில்
வெற்றி கண்டு
பொறுக்கப்பட்ட பூனைகள்
வித்தை மறந்த வேளை
இல்லவேயில்லை...
வீரம் விட்டொழித்த காலம்
வேட்டையாடப்படுகிறது
தலைவர்களின் உயிரும்
ஆட்சியர் மனைவியின் கண்ணீரும்
வியூகம் அழிக்க தவறியதன்
விளக்கம் அளிக்குமுன்
நினைவிருத்திக்கொள்ளலாம்
வந்த பாதை பின்னோக்கி போகையில்
வழி மறிக்கும் ஆலமரம்
வடக்குப்பக்கம் காணியில்
வாளெடுத்து குதிரையேறி நிற்கும்
ஊர்க்காவல் மாசனக்காளை
கற்காத ஓலை
கடமை தவறாத சிலை
மொத்த கிராமத்து மூச்சும்
மாரி கொத்தனார் வடித்த மீசையில்
காத்தலின் குறள் கேட்க
கள்புட்டி படைத்தல் போதும்
மாசனக்காளை
கிராமத்து பூனையல்ல
கரிசல் வாழ்வின் சேனை !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.