1. மனிதர் மனிதராக இல்லை..
மனிதசாதி – மனுக்குலம் இன்று
மனிதம் மறந்து மனிதமிழந்து
மனித மிருகமாகின்றதே.
புனிதரெனப் பகட்டாக இவர்
புனைய ஓர் ஆடையெதற்கு!
மனிதர் மிருகவேட்டை யாடுவார்,
மனிதர் தலைகுனிவா யின்று
மனித வேட்டையாடுகிறாரே ஏன்!
இலையாடை மனிதராகவே இவர்
அலைந்திருந்தால் தருமம் உலகில்
நிலைகுலையாது வாழ்ந்திருப்பாரோ!
கலை கல்வியென்றிவர் பல
வலைகளை விருத்தி செய்துமென்ன!
நிலைகுலைந்து நெறி பிறழ்ந்து
தலை கவிழ்ந்த வாழ்வைத்தானே
நிலைப்படுத்துகிறார் இன்றிங்கு!
விழியாக மனித குலத்திற்கு
மொழியைக் கண்டுகொண்டார்.
பழியற்ற வாழ்வுக் கொரு
வழியாக மதம் கண்டார்
இழிவின்றி உரையாட நல்ல
வழியிருந்தும், மொழி மதத்தைக்
கழியாக்கி, ஒருவரோடொருவர் மோதி
அழிகிறார் அநியாயப் பாதையில்.
ஒரளவிற்கு மேல் உயர்ச்சி
பெருமை தராதோ! மறுபடி
அருமையிழந்து அதலபாதாளத்தை
நெருங்குவது தான் நியதியோ!
பகுத்தறிவு மனிதரின் பயணம்
திகைப்பான திசையிலின்று சிதையும்
வகையின் சுயநலமும் நானெனும்
நகைப்பான ஆணவமும் காரணமாகிறதே.
7-12-14
2. மகிழ்ச்சிப் பாதை.
அறிவுப் பாதை வழியேகும்
அன்பு நூலகம் சென்றிட
அகந்தையற்ற அகநிலை கொண்ட
அக்கறைப் பாதை தேவை.
அங்கீகாரப் பாதைத் தெரிவு
அகமகிழும் பாதையாக வேண்டும்.
செந்நெறி விலகிய பாதையில்
செல்லும் பயணம் தொடராது.
செழிப்பில்லாப் பாதை விரிப்பில்
விழிபிதுங்கும் சுத்த சுவாசம்.
செழிப்புடை செயற்பாட்டு ஏற்பாடு
செவ்வழிப்பாதையாய் அமையும்.
குருட்டுப் பாதைக்கும் ஒரு
குறியீட்டுப் பலகை உண்டு.
குறிப்பாலுணர்ந்து வெற்றி மனிதர்
குறி தவறாது பயணிக்க வேண்டும்.
குருடாகிப் பயணிக்கும் மனித
குணாதிசயங்கள் மிக வியப்பு!
தோப்பாகும் பாதை நிழல்
தோகை விரித்து வரவேற்கும்.
தோன்றும் சிந்தனைக்கு விலங்கிடாத
தோட்டம் தோதான தோற்றுவாய்.
வேம்பாகக் கசந்து பிரியத்தின்
வேரறுபடாப் பயணமே வெற்றி.
வித்தகப் பாதை விளைநிலங்கள்
வியாபித்துள்ளது வியனுலகில்
வித்தை செய்யும் பாதைக்கு
சொத்தையற்ற தெரிவு தேவை.
விருப்பப் பாதைத் தெரிவிலே
விளைவது என்றும் மனமகிழ்வே!
7-12-14
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.