சவுமியா மருத்துவர் அறையிலிருந்து வந்து கொடுத்துப் போன மாத்திரை அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ணமயமாக இருந்தன. வர்ணப் புள்ளிகளை கோலத்திற்காய் விட்டு விட்டுப் போன மாதிரி இறைந்து கிடைந்தன.
படுக்கை அறையின் சுத்தமும் வாசமும் அவளுக்குப் பிடித்திருப்பது போல் சுற்றிலும் பார்த்தாள்.சுவற்றில் இருந்த படங்களில் குழந்தைகள் வெகுளித்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் பிரசவம் சீக்கிரம் வந்துவிட்டது என்று நினைத்தாள். இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாமோ என்று பட்டது. நான் எங்கு அவசரப்பட்டேன். கார்த்தியின் குடிவெறி அவளைப்படுக்கையில் கிடத்தி விடுகிறது. இரவு நேரத்தில் போதை இல்லாமல் அவனால் தூங்க இயலாது என்பது போல்தான் கார்த்தி இருந்தான். சீக்கிரம் கர்ப்பமாகி விட்டாள்.
அவளிடம் மருத்துவர் கேட்ட கேள்வியை அவள் நினைத்துக் கோண்டே இருந்தாள். “ இதற்கு மேல் ஏன் படிக்கலே ” என்று கேட்டார்.
“ முடியலெ.. வசதியில்ல டாக்டர்.”
“இங்க மலேசியாவுலே படிக்க நிறைய வசதிக இருக்கு இது ரெண்டாம் பிள்ளைங்கற ..நல்லா படிக்க வையி.நீ படிக்காட்டியும் ”
கோலாம்பூரின் சுத்தமும் அழகும் பிடித்திருப்பது போல் அந்த அரசு மருத்துவமனையும் அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஊரில் என்றால் ஒவ்வொன்றுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். இங்கு எல்லாம் சுலபமாக இருப்பதாக சவுமியாவுக்குத் தோன்றியது.
அவள் கன்னத்தில் முகிழ்த்திருந்த சிறு பரு அவளின் சுண்டு விரலில் தட்டுப்பட்டது. இது என்ன இந்த சமயத்தில் வந்து கிடக்கிறது.முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறபோது அருவருப்பாய் பட்டிருக்கிறது.
இரண்டாம் குழந்தையோடு நிறுத்திக் கொள்ள வேண்டியது தான் என்று தீர்மானமாக நினைத்தாள். அத்தை கூட அப்படித்தான் சொல்லி இருந்தாள். தோட்டக்காட்டில் ஆகும் பிரசவங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
கார்த்தி மருத்துவமனைக்கு இரண்டு நாளாக வரக்காணோம். அவ்வை அவனின் அலுவலகத்திற்கு தொலைப்பேசி செய்தபோது சரியான பதிலில்லை. வரவில்லை என்றார்கள்.
“ எங்காவது குடித்து விட்டுக் கிடக்கிறானோ ” பயமாக இருந்தது அவ்வைக்கு. கொள்ளி போட இருக்கும் மகன். எப்படியாவது கூட இருந்தால் போதும். சகித்துக்கோள் என்பதுதான் அவளின் தீர்மானமாக எப்போதும் இருந்தது.அதைத்தான் ஏதாவது கஷ்டம் என்று வருகிற போது சொல்வாள்.
அவ்வை கொள்ளி போட இருக்கும் மகன் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பாள். அப்படித்தான் தூரத்து உறவு வேலுத்தம்பி கேட்டான் “ எம்பையனும் பத்து வயசிலெ சிகரெட்டை உதட்ல வெச்சிட்டு , என்னைப்பாத்து ஊதிட்டு நான் ரெடியா நீ ரெடியான்னு கேக்கறான். உம் பையன் அப்பிடி நேரடியாக் கேக்கறானா “ என்று ஒரு தரம் சொன்னபோது அதிர்ந்து விட்டாள்.
“ அப்பிடி குடிச்சுட்டு கெடக்கற ஆளா அவன் .. மருமகளே ”
“ யாருக்கும் தெரியும். அத்தை இருபத்தஞ்சு வருஷம் பக்கத்தில இருக்கீங்க.. உங்களுக்குத் தெரியாதா... மூணு வருசத்திலெ நான் என்ன பெரிசா தெரிஞ்சுக்க.. நீங்கதா சொல்லனும். ”
அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்த அன்றைக்கு உலவிக் கொண்டிருந்தான். “ குடிச்சிட்டெல்லா இங்க வராதே ” என்று ஒரு நர்ஸ் சத்தம் போட்டது சவுமியாவின் காதுகளில் விழுந்தது. கோஷா போன்று உடலை மொத்தமாக மறைக்கும் ஆடையில் உலவிக் கொண்டிருந்த செவிலிகளுக்கு மத்தியில் தான் களையிழந்த செடி போல் இருப்பதாகப் பட்டது.
மூன்றாம் நாள் கார்த்தி வந்தான். “ என்ன ஆளக் காணம். டாக்டர், நர்சுன்னு எல்லாரும் கேள்வி கேக்கறாங்க.. ”
“ என்னக் கேள்வி கேட்டங்களா .. நர்சுகளா ”
“ யாரா இருந்தா என்ன... என்னாச்சு... ”
“ போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தன். ”
குடிபோதையில் இரவில் இரட்டை சக்கர வாகனத்தை தாறுமாறாய் ஓட்டியபோது பிடிபட்டிருக்கிறான். சந்தேகத்தில் நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். வெளிநாட்டு டூரிஸ்ட் பெண் ஒருத்தி கிள்ளானில் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். அந்தப் பக்கம் போனவனை சந்தேகத்தில் பிடித்து கேள்வி கேட்க அவனின் பதில் திருப்தியாக இருக்கவில்லை.
“ ஜெயில் மோசமில்லை ஆனா ஒரு பைத்யகாரப் பையனை கூட ரூம்லெ வச்சிருந்தாங்க அவன் தூங்கவுடலெ அதுதா சிரமம் ”
“ கொழந்தை நல்லா இருக்கான். சுகப்பிரசவம்தா சிசேரியன் இல்லே. ”
“ தகவலுக்கு தேங்க்ஸ் சவுமியா.. நெலமை கொழம்பிப் போச்சு அதுதா. சாரி.. ”
“ சாரி சொல்றது பெரிய விஷயந்தா ”
“ சாரி.. ”
இப்படி மற்ற விசயங்களுக்கும் அவன் சாரி சொல்ல ஆரம்பித்தால் நிலமை சுமூகமாகி விடும் என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. நல்ல நிலையில் இருக்கும் போது சாரி சொல்லிவிட்டு அதை யோசித்தால் கூட போதும் என்று நினைப்பாள்.
அவ்வை “ ஆணும் பொண்ணும்ன்னு ரெண்டு போதுண்டா. ” என்றாள்.
“ நானா வேணும் வேணும்கறே. உனக்கு வாய்ச்சமாதிரி நான் ஒருத்தன் தானே.. ”
“ ஒண்ணோ ரெண்டோ குடும்பத்தைக் காப்பாத்தனும். நீ என்னைக் காப்பாத்துடா...”
“ இந்த வயசிலே உன்னை என்னமா நான் பாத்துக்க வேண்டியிருக்கு. நீயோ உன்னைப் பாத்துக்கம்மா காலம் மாறிட்டிருக்கில்லே... ”
“ கொள்ளி போடனும் அதுக்கு ஒருத்தன் வேணுமுன்னு நெனைப்பேன். ”
“ செரி.. செரி.. அதெல்லா அந்தக் காலம். கண்டதையெல்லா நெனச்சு பேசிட்டிருக்காதே “
கீச்சுமூச்சென்று ஏதோ பறவைகளின் சப்தம் வந்த கிழக்கு திசையைப் பார்த்தான். வெகு தூரத்தில் இரட்டை கோபுரம் வெய்யில் பட்டு மினுங்கிக் கொண்டிருந்தது. எங்கு போய் நின்றாலும் இரட்டை கோபுரம் கண்களில் படுகிறது.
சவுமியாவிற்குப் பின்புறம் இருந்த திரைச் சீலைகளின் அசைவை ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். திரைச் சீலைகளில் இருந்த பறவைகள் நிதானமாய் பறந்து கொண்டிருந்தன.
அந்தப்பறவைகளைப் போல தானும் காணாமல் போய் விட வேண்டும் என்று நினைத்தாள் அவ்வை.
“ இதெல்லாம் பாக்க வேண்டியிருக்கே “ என்று சொல்ல ஆசைப்பட்டாள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.