“வாட் நான்சென்ஸ்! உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு மிருதுளா? என்று மனைவியிடம் கொந்தளித்தான் கணவன் வருண்.
“ஏன் இப்படி கோபப்படுறீங்க? கொஞ்சம் அவசரபடாம, கோபப்படாம, பொறுமையா யோசிச்சிப்பாருங்க”.
“இல்ல மிருதுளா நான் கோபப்படவும் இல்ல, அவசரபடவும் இல்ல! நான் ரொம்ப கூலதான் இருக்கேன். ஆனா நீ சொல்லற விஷயம் கொஞ்சமாவது நியாமா? சரிபடுமா? நடக்குமான்னு நீயே யோசிச்சிப்பாரு!”
“வெளியில யாராவது கேள்விபட்டாக்கூட, நம்பள பத்தி என்ன நெனப்பாங்க? ரொம்ப கேவலமா பேசுவாங்க! என்னை பத்தியும், உன்ன பத்தியும் என்ன நெனப்பாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சிப் பாத்தியா? நீ என்ன சமாதானம் சொன்னாலும் நியாயம் சொன்னாலும் என்னால ஏத்துக்கவே முடியாது!”
“ஏங்க நாம வாழறது, நமக்காகத்தாங்க. ஊரு உலகத்துக்காக இல்ல! நாலு பேரு என்ன சொல்லுவாங்க நாலு பேரு என்ன நெனப்பாங்கன்னு, அதையே யோசிச்சி பயந்துகிட்டிருந்தா நம்ம வாழ்க்கைய நிம்மதியா வாழ முடியாது. இத மட்டும் உறுதியா நெனச்சிக்குங்க! "
"அதில்ல மிருதுளா, இது நீயோ நானோ மட்டும் சம்பந்தபட்ட விஷயமில்லையே? சம்பந்தபட்ட ரெண்டு பேரின் விருப்பமும் முக்கியமில்லையா? "
"ஆமா நீங்க சொல்லறத முழுசா ஏத்துக்கிறேன்! ஆனா நாமதான் அவங்களுக்கும் சொல்லி புரியவைக்கணும்."
"சினிமாத்தனமா இருக்கு மிருதுளா நீ சொல்லறது. சினிமாவுல வேணும்னா நீ சொல்லற மாதிரி நடக்கலாம். சினிமாதானே அது கற்பனையில எடுக்கறதால வேணா ஏத்துக்குவாங்க. அதையே நிஜத்துல நடத்துனா, எள்ளி நகையாடுவாங்க. சும்மாவா சொன்னாங்க, உலை வாய மூடுனாலும் மூடலாம், ஊர்வாய மூட முடியாதுன்னு!"
"எல்லாத்துக்கும் ஒரு பழமொழி ரெடியா வச்சிருக்கீங்க! கொஞ்சம் பாசிட்டிவ்வா திங் பண்ணுங்க!"
"ஹிம்... ஒகே! அவங்க ரெண்டுபேருகிட்டயும் பேசிப்பாரு! எனக்கு ட்வென்டி பெரசன்ட்டேஜ் கூட பாசிபிலிட்டி இருக்கும்னு தோணல!"
பெரியவா் அருணாசலம் மிருதுளா சொன்னதை கேட்டு அதிர்ந்துவிட்டார். “ஏம்மா என்னை வெச்சி எதுவும் விளையாடலையே?
"உங்களுக்கு நான் ஏதாவது பாரமா தொல்லையா இருக்கிறதா இருந்தா வெளிப்படையா சொல்லிடுங்க. நான் ஏதாவது ஆசிரமத்துல தங்கி மீதி காலத்த தள்ளிக்கிறேன். என்ன, பேர பிள்ளைங்கள பிரியறத நெனச்சாதான் துக்கம் தொண்டைய அடைக்குதும்மா? பாவம் அதுங்களும் என்ன விட்டு பிரிஞ்சிட்டா தவிச்சிப்போயிடும்! நான் ஏதாவது உனக்கு பிடிக்காம நடந்துகிட்டிருந்தாலும் தெரியாம ஏதாவது தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிச்சிடுமா! இனிமே அது மாதிரி நடந்திக்க மாட்டேம்மா! நீ சொல்லறது மட்டும் விட்டுடும்மா! இல்ல அடிமனசிலிருந்தே அழிச்சிடும்மா!"
“ஏன் நான் சொல்லறத யாருமே சரியான கோணத்துல புரிஞ்சிக்கமாட்றீங்க!? உங்க மேல எந்த தப்பும் இல்ல! உங்கள தொரத்திவிட்டிடணும்னும் எங்களுக்கு எண்ணமுமில்ல! நான் சொல்லறதா உணர்ச்சி வசப்படாம யோசிச்சிப்பாருங்க!"
பெரியவா் அருணாசலம்தான் அப்படின்னா மீனாட்சியம்மா அதுக்கு ஒருபடி மேல போய் சொன்னத கேட்டதும் அழுது தீர்ந்துவிட்டார்.
“அம்மா ஏதோ என் சூழ்நிலை தலைவிதி இப்படியெல்லாம் ஆயிடிச்சி! புராணத்துல சொல்லற மாதிரி உயிரவிட்டிடிடாம வாழ்ந்துகிட்டிருக்கேன். வயிறுன்னு ஒண்ணு இருக்கே, அத கழுவுறதுக்காகத்தாம்மா உங்க வீட்டுல பத்து பாத்திரங்கள கழுவிக்கிட்டுருக்கேன். நீ நல்லவங்களா இருந்ததாலதாம்மா என்னோட நிலைமைகள மனசவிட்டு சொன்னேன். அதுக்காக இப்படியா என் தலைமேல இடிய எறக்குவீங்க? உங்கள என் சகோதரியா நெனச்சி கேக்கறேம்மா உங்க எண்ணத்த மாத்திக்கோங்கம்மா! இல்லன்னா சொல்லுங்க இருக்கவே இருக்கு ஏதாவது ஒரு ஆறோ குளமோ பாத்து என் உயிர மாய்ச்சிக்கிறேம்மா!"
“மாய்ச்சிகலாம்! மாய்ச்சிகலாம்! எல்லாரும் சாகாமலா இருக்கப்போறோம்!"
தனித்தனியாக மோதிப்பார்த்துவிட்டாள் மிருதுளா. தற்போது சிங்கத்தை ஒன்றுகூடி எதிர்த்த மாடுகளாய் ஒன்றுகூடிவிட்டனா். மிருதுளாவிற்கு இது உச்சகட்ட சோதனைதான். ஆனாலும் சளைக்காமல் போராடி வெற்றிபெறுவது அவளின் இயல்பாயிற்றே! விட்டுவிடுவாளா என்ன?
“வருண் நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க. திரும்பவும் பழையபடி ஊரு, ஒலகம், நியாயம், தர்மம்ன்னு பேச ஆரம்பிச்சிடாதீங்க!”
"மாமா நம்மகூட சந்தோஷமாதான் இருக்காரு. ஆனா அத்தை அதான் உங்கம்மா இருந்தப்ப இருந்த மாதிரி இப்ப முழு சந்தோசமா இல்ல! நாம சாப்பாடு போடலாம். மருந்து மாத்திரை வாங்கிக்கொடுக்கலாம். கவலை இல்லாம பாத்துக்கலாம். ஆனா ஒரு மனைவி இருந்து அன்பா, நட்பா, ஸ்பரிசமா தொட்டு உறவாடி கவனிச்சிக்கற மாதிரி நாம கவனிச்சிக்க முடியாது. உங்கப்பாவுக்கும் அதெல்லாம் இப்ப தேவைப்படல. அத்தை போன பிறகு அவரும் தன்போக்கையெல்லாம் மாத்திகிட்டு தன்வேலைகளை தானே செய்துகிட்டுதான் வாழுறாரு! "
"ஆனா உங்கம்மா இருந்தப்ப இருந்த வாழ்க்கைய அவரால இப்ப வாழ முடியல. ஒரு பெண் மகளா, மருமகளா இருந்து உதவி செய்றதுக்கும், மனைவியா இருந்து தொண்டு செய்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. அதுக்காக அவரு நமக்கு பாரமா இருக்காரு, எதையாவது செய்துவிட்டு நாம ஒதுங்கிக்கிலாம்ன்னு நெனச்சி இத நான் சொல்லல!"
‘மீனாட்சியம்மா பாவம் இப்ப அனாதையா நிக்குறாங்க! சொந்த பந்தம் இல்லாத வாழ்க்கையில கட்டிகிட்ட கணவணும் கடன்வாங்கி குடிச்சி குடிச்சி உடம்ப கெடுத்துகிட்டு கடைசியில அனாதையா தவிக்க விட்டுட்டு போய்ச்சேர்ந்திட்டான். கடன்கள அடைக்கவும் வயித்துபாட்டுக்காகவும் நம்ம வீட்டுல பத்துபாத்திரங்கள கழுவிகிட்டு வயித்தையும் கழுவிகிட்டிருக்காங்க"
"மாமாவுக்கு மீனாட்சியம்மாவ மறுமணம் செய்ஞ்சி வச்சிட்டா என்ன? மாமாவுக்கும் ஒண்ணும் அதிக வயசாகிடல. நடுத்தர வயசிலேயே மனைவி இழந்துட்டு மனைவிக்குரிய அன்பை பெற முடியாம வாழ்க்கைய ஓட்டுறாரு. மீனாட்சியம்மாவ கட்டிவெச்சிட்டா மீதமிருக்கிற வாழ்க்கைய முழுசா சந்தோசமா வாழ்ந்திடுவாரு!"
"மீனாட்சியம்மாவுக்கும் இழந்த வாழ்க்கைய மீட்டு சொந்தபந்தத்தோட வாழ வழி பிறக்கும். அதுவும் இல்லாம இன்னைக்கு சமுதாயத்துல புருஷன் இல்லாம ஒரு பொண்ணு வாழ்ந்தா என்னென்ன கஷ்டமெல்லாம் வரும்னு நான் சொல்லி தெரிஞ்சிக்க வேண்டியதில்ல. மகன் நீங்களும் மருமக நானுமே சம்மதிக்கிறோம்! இதுல ஊரப்பத்தி உலகத்த பத்தி கவலை நமக்கெதுக்கு? ஊரு உலகத்துல அவனவன் பொண்டாட்டி இருக்கும்போதே எப்படியெல்லாம் சீரழிஞ்சி கெடக்கான். "
"ஒவ்வொருத்தி பட்டினத்தார் சொன்னமாதிரி நான் அப்படித்தான் இருப்பேன்னு தெரிஞ்சே சீர்கெட்டு வாழுறாளுங்க. இப்படிபட்ட ஊரு உலகத்த பத்திதான் நாம கவலைப்பட்டுகிட்டு இருக்கோம்!"
"மாமா! நீங்க எங்களுக்கு பாரமா இருக்கறதா எப்பயும் நான் நெனக்கலை. மீனாட்சியம்மா! உங்கள ஒரு நாளும் எளப்பமா நெனக்கல! நீங்க எங்க வீட்டு வேலைக்காரிய மட்டும் நெனக்கல. எங்க வீட்டுல ஒரு உறுப்பினராதான் பாத்தோம்.
என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சிய பண்ணிட்டேன். இனிமே நீங்கதான் என் முயற்சிக்கு நல்ல பலனைத் தரணும்"
………
“மிருதுளா... கொஞ்சம் காபி எடுத்துகிட்டு வாம்மா!” மீனாட்சியம்மாள் மாமியாருக்குரிய தோரணையுடன் கேட்டாள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.