இது ஒரு துப்பறியும் கதையோ மர்மக் கதையோ அல்ல என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எனினும் இந்தக் கதை இப்படித்தான் தொடங்குகிறது..
நட்ட நடு நிசி!
வாசற் கதவடியில் தடபுட என ஓசைகள்! அதன் பின் யார் யாரோ அழைக்கும் குரல்கள்!
வீட்டிற்குள் நின்றபடியே யன்னலூடு பார்த்தேன். கேற்றிற்கு வெளியே ஐந்தாறு பேர் நிற்பது வீதி வெளிச்சத்தில் தெரிந்தது. முன் பின் தெரியாத முகங்கள். மோட்டார் சைக்கிளில் இருந்தபடியே கூப்பிட்டார்கள். ஒருவன் கேற்றைத் திறப்பதற்கு முனைகிறான். கேற் பூட்டப்பட்டிருக்கிறது.
முன் மின் விளக்குகளைப் போட்டேன். மனதுக்குள் சற்றுத் தயக்கம். துணைவியை (மனைவி) எழுப்பலாமா என்று யோசித்தேன். (மனைவி இப்படியான நேரங்களில் துணைவி ஆகிவிடுகிறாள்!) இந்த நேரம் கெட்ட நேரத்தில் வந்து கூப்பிடுகிறார்களே.. யாரோ? எவரோ? எதற்கு வந்தார்களோ?
போவதா? விடுவதா?
விடாது அழைத்துக்கொண்டிருந்தார்கள்.
'கொஞ்சம் பொறுங்க…! வாறன்!"
இந்தக் குரலை அவர்களுக்கு எந்த மொழியில் வெளிப்படுத்துவது என்று தெரியாமலிருந்தது. சிங்களமா? தமிழா? வந்தவர்களின் சொந்தமொழி எதுவாயிருக்கும்?
வீட்டுக் கதவைத் திறந்தேன்.. தயக்கத்துடன்தான். எனினும் நான் இன்னும் அவர்கள் முன்னே போவதற்குத் தயாரில்லை. மனைவியின் முகத்தைப் பார்த்தேன்.. 'ஆட்கள் ஆரெண்டு தெரியாது… போகவேண்டாம்.." கையைப் பிடித்து இழுத்தாள்.
மனைவியைக் கண்டதும் எனக்கு ஒருவித துணிச்சல் வந்து விட்டது. அல்லது எனது தயக்கத்தை மனைவிக்குக் காட்டிக்கொள்ளக்கூடாது என்ற ஆண்மபலம்!
'என்ன பயம்? பயப்படாமல் நில்லுங்க. போய் பார்த்திட்டு வாறன்!" - மனைவியிடம் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினேன்.
உரத்த குரலில் இருமிச் செருமியவாறு (நான் மிகவும் தைரியத்துடன் போகிறேனாம்) கேற்றடியை நோக்கி நடந்தேன்.
கேற்றிலிருந்த பூட்டைத் திறந்தேன். அவர்களை உள்ளே விடாமல் நான் வெளியே போனேன். முகங்களை நோட்டமிட்டேன். ஒவ்வொரு முகங்களும் ஒவ்வொரு கோணங்களில் தோன்றியது. அல்லது எனக்கு நித்திரைக் கலக்கமோ… தயக்கமோ?
'சுரேஷ் வந்தவனோ?"
இது அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி. சற்று அதட்டலாகத்தான்.
'இல்லை!"
'இங்க வராமல் எங்கை போயிருப்பான்!" - தண்ணி போட்டிருப்பார்கள் போலிருக்கிறது. வாடை அடித்தது.
'சுரேஷ் இங்க இல்ல… லீவிலை போயிட்டான். என்ன விஷயம்?"
'விஷயத்தைப் பிறகு சொல்லுறம்…! அவனைப் பிடித்து உதைக்கவேணும்… விலாசத்தைத் தரமுடியுமா?"
உதை என்றதும் எனக்கு ஒருமுறை உறைத்தது.
'அவன்ட விலாசம் எனக்குத் தெரியாது. என்ன விஷயம் என்று சொல்லுங்க!"
'உங்களிடம் வேலை செய்யிறவனின் விலாசம் உங்களுக்குத் தெரியாதா?" எனக்கு எரிச்சலாகக்கூட இருந்தது. ஒரு பொலிஸ்காரர் கேட்பதுபோன்ற தொனியில் அந்தக் கேள்வி.. இவர்கள் யார்?
நான் சொல்வதை அவர்கள் நம்பவில்லை.
சுரேஷ் எனது பண்ணையில் சுமார் மூன்று வருடங்கள் வேலை செய்வது உண்மைதான். ஆனால் உண்மையிலேயே அவனது இருப்பிட விலாசம் எனக்குத் தெரியாது.
'இந்த இரவு நேரத்தில் வந்து கரைச்சல்படுத்த வேண்டாம்… அக்கம் பக்கத்தில் வீடுகள் இருக்கு. சத்தம் போட்டு இடைஞ்சல் குடுக்கக்கூடாது. விஷயம் என்னென்று சொல்லுங்கோ! நீங்கள் ஆர் ஆட்கள்? ஏன் அவனைத் தேடுறீங்கள்?"
'உங்கட ஃபாமுக்கு கிட்ட உள்ள ஒரு ஃபாமிலதான் நாங்கள் வேலை செய்யிறம். சுரேஷ் பகல் வந்தவன்.. இரவு ஏழு மணி போல எங்கட செல்ஃபோனையும் கொண்டு ஓடியிட்டான்.!"
எனக்கு ஒரே குழப்பமாயிருந்தது. சுரேஷ் அப்படிப்பட்ட ஆளல்ல. இவர்களுடன் ஏன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டான்?
மோட்டார் சைக்கிள்களுக்கு உதைத்தார்கள். 'காலயில வாறம்… விலாசத்தை எடுத்து வையுங்க!" - இல்லாவிட்டால் எனக்கு உதை விழும்போலிருந்தது.. அந்தமாதிரி அட்டகாசமாகச் சத்தமிட்டுக்கொண்டு.. சார்…ர்ர்.ரெனக் கிளம்பிப் போனார்கள்.
00 00 00 00
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் என்னோடு சேர்ந்துகொண்டவன் சுரேஷ். எனது ஃபாமில் வேலை செய்வதற்கு அப்போது ஆள் தேவைப்பட்டது. பண்ணையில் வேலை செய்த சரியான அனுபவமுள்ள ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை. பலரிடம் விசாரித்தும்… சொல்லிவைத்தும் பலனில்லை.
ஒருநாள் இவன் வந்தான். அப்போது நான் ஃபாமில் நின்றேன். கடுமையான வெயில் நேரம். காய்ந்து கருவாடு போன்ற கோலத்துடன் வந்து நின்றான். மெலிந்த பொடியன். இருபதோ இருபத்தொரு வயதிருக்கும். 'என்ன?" என்று கேட்டேன். வேலை ஒன்று தேடி வந்திருப்பதாகக் கூறினான்.
'என்ன மாதிரியான வேலைகள் செய்வாய்?" ஏற்கனவே பண்ணையில் வேலை செய்த அனுபவம் உள்ளதாகக் கூறினான். மேலோட்டமாக பண்ணை வேலைகள் பற்றி விசாரித்தேன். அவனுக்கு நிறையத் தெரிந்திருந்தது. அது எனக்குப் போதுமாயிருந்தது. கும்பிடப் போகும் தெய்வம் குறுக்கே வரும் என்று சொல்வார்கள். இது நேரிலே வந்து நின்றது. தெய்வத்தின் பெயர் என்ன என்று கேட்டேன்.
'சுரேஷ்.."
அவனது ஊரைக் கேட்டேன். சொன்னான். ஒரு சிங்களக் கிராமம்.
அவனைச் சேர்த்துக் கொண்டேன்.
மிகச் சீக்கிரமாகவே அவனது வேலைத் திறமைகளும் நன் நடத்தைகளும் புலப்படத் தொடங்கின. பொடிப்பயல்தான். ஒட்டல் உடம்பு. சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டிருக்கிறான் என்பது அவனது நடவடிக்கைகளில் தெரிந்தது. சாப்பாடு சரியாக விழுந்தால் சரி! வேறு எந்தக் கவலைகளும் அவனுக்கு இல்லை. (அப்படித்தான் எண்ணியிருந்தேன்) வேலைகளில் சூரன். மாய்ந்து மாய்ந்து வேலை செய்வான். பண்ணைக்கு எப்படியான ஒருவன் தேவையெனக் கருதியிருந்தேனோ அவன் அப்படியானவனாக இருந்தான். பண்ணையில் வேலை செய்கிற மற்றைய தொழிலாளர்களை விட வேலை நுட்பங்களைத் துல்லியமாகத் தெரிந்துவைத்திருந்தான். பண்ணையிலுள்ள இயந்திர வகைகள் தண்ணீர்ப் பம்புகள் போன்றவற்றின் பராமரிப்பு பாதுகாப்பு போன்ற வேலைகளையும் பொறுப்புடன் கவனித்துக் கொண்டான்.
எப்போதாவது இடைசுகம் வீட்டிற்கு லீவில் போய்வர விருப்பமா என்று கேட்டால் மறுத்து விடுவான். “யண்ட ஓணநே..! (போகத் தேவையில்லை..!)” என்று கூறுவான். அவனுக்கு ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என்று சில கிழமைகளுக்கு இடையில் ஓரிரு நாட்கள் பண்ணையிலிருந்து என் வீட்டிற்குக் கூட்டிவருவேன். வீட்டுக்கு வந்தாலும் சும்மா இருக்கமாட்டான். புல்லுவெட்டுதல் தென்னைகளில் தேங்காய் பறித்தல் பூக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சுதல் வளவைச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவான். (அதற்காகத்தான் வீட்டிற்குக் கூட்டிவருகிறேனோ..!) பிள்ளைகளுடன் ஒரு சகோதரன்போலப் பழகுவான். அவர்களைச் சைக்கிளில் ஏற்றிப் பாடசாலைக்கோ ரியூசன் வகுப்புக்களுக்கோ கொண்டுசெல்லும் உதவிகளையும் புரிவான். ஒரு சொல்கூடத் தமிழ் தெரியாமல் வந்தவன் தமிழைப் புரிந்து கொள்ளவும் பேசவும் பழகிவிட்டான்.
'இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்.." என்பது போன்ற உணர்வுதான் எனக்கு.
00 00 00 00
ஒரு நாள் நான் ஃபாமில் இருந்தபோது 'மஹத்தயா… ஆவிகளைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?" எனக் கேட்டான்.
(சுரேஷ் வழக்கமாகத் தயாரித்துக்கொண்டு வந்து என் பக்கத்தில் வைத்திருந்த தேநீர் ஆவி பறந்துகொண்டிருந்தது)
'ஆவியா..! என்ன ஆவி?"
சுரேஷ் அதிகம் படிக்காதவன். கேற்றிலில் தேநீர் தயாரிக்கும்போது மூடி கிடுகிடு என அடித்துக்கொண்டிருக்கிறது. அதைக் கவனித்திருக்கிறான்போலும். பயந்திருப்பானோ? அல்லது விஞ்ஞானபூர்வமான சிந்தனைகௌல்லாம் இவனிடத்தில் தோன்றுகிறதே என எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. உடனே அதுபற்றி சில விளக்கங்களை அவனுக்குக் கூறத் தொடங்கினேன். தண்ணீர் சூடாகும்போது எப்படி ஆவியாகிறது… அது மூடியில் பட்டு ஏற்படுத்தும் விசை…
'மஹத்யா… நான் செத்த ஆக்களுடைய ஆவியைப் பற்றிக் கேட்கிறேன். அதை நீங்கள் நம்பிறீங்களா?" பகல் நேரமாயினும் அதைக் கேட்டதும் ஒரு கணம் எனக்கு மயிர்கூச்செறிந்தது. பண்ணை வெட்டவெளியான தனிமைப்பட்ட இடத்தில் அமைந்திருக்கிறது. அண்மையில் ஒரு மயானம் உள்ளது. இவன் இரவு எதையாவது கண்டு தொலைத்திருப்பானோ தெரியாது. அல்லது கனவு கினவு கண்டிருப்பானோ? பிள்ளை பயந்திருப்பான் போலிருக்கிறது.
'சீச்சி… அதெல்லாம் பொய்க்கதை… நம்பாதை!"
'இல்ல மஹத்தயா நான் ஆவியோடை பேசியிருக்கிறேன்!"
நான் இருந்த இடத்திலிருந்து எழுந்துவிட்டேன். முன் எச்சரிக்கையுடன் அவனது முகத்தைப் பார்த்தேன். நேரகாலத்துடன் வீட்டுக்குப் போய்ச் சேர்வது உத்தமம் போலிருந்தது.
'என்ன… ஆவியா? இங்க வந்ததா?" சற்று ஏளனம் போலத் தோன்றும்படிதான் அப்படிக் கேட்டேன். ஆனால் என்னவென்று அறியும் ஆர்வம் என்னுள் இருந்தது.
'இல்ல மஹத்தயா! கனகாலத்துக்கு முதல்ல பேசியிருக்கிறேன்!"
இவன் ஏதோ கதை அளக்கிறானோ என எண்ணி மேற்கொண்டும் விசாரித்தேன்.
ஏதோ ஒரு கிராமத்தின் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னான்.. 'அங்கு ஒருவர் இருக்கிறார். அவரிடம் போனால் இறந்தவர்களின் ஆவியுடன் பேசலாம். காலையில் போகவேண்டும். வெற்றிலையும் ஒரு எலுமிச்சம்பழமும் கொண்டுபோகவேண்டும்!"
காசு அடிப்பதற்காக யாராவது விளையாட்டுக் காட்டுவதாக இருக்கலாம். எனக்கு வேடிக்கையாய் இருந்தது. 'அவங்க காசுக்காக ஏமாத்துறாங்கள். நம்பவேண்டாம்!"
'இல்ல மஹத்தயா! நான் உண்மையாகவே பேசியிருக்கிறேன்… ஆனால் அது உண்மையா பொய்யா என்று விளங்கேல்ல… அதுதான் உங்களிடம் கேக்கிறன்!"
'நீ பேசியது எந்த ஆவியுடன்?"
'அம்மா"
'அம்மாவா? யாருடைய அம்மா?"
அவன் தனது நெஞ்சைத் தொட்டுக்காட்டினான். அப்போதுதான் அவன் தாயை இழந்தவன் என்பது எனக்குத் தெரியவந்தது. கவலை பொங்கியது.
'சுரேஷ்..! அம்மா எப்போது இறந்துபோனார்?"
'எனக்கு ஏழெட்டு வயதாயிருக்கும்போது!"
'ஏன்?"
'தற்கொலை செய்துகொண்டார!;"
எனக்கு அதற்கு மேற்கொண்டு எதையும் விளையாட்டுத்தனமாக அவனிடம் கேட்கமுடியவில்லை.
'அம்மாவிடம் என்ன பேசினாய்?"
'ஏன் இறந்துபோனார் என்று கேட்டேன்!"
'ஏன்?" என அவனது முகத்தைப் பார்த்தேன்.
'அப்பாவுடன் சண்டை… அப்பா கசிப்புக் குடிப்பார். அம்மாவுக்கு அடிப்பாராம். வேறு மனிசிகளுடன் சிநேகிதம். அம்மாவுக்குத் தாங்கமுடியவில்லையாம்.."
'சுரேஷ்! அந்தச் சாமியார் எதையாவது கற்பனை செய்து சொல்லியிருக்கலாம். அதைப்பற்றி நீ மனதை அலட்டிக்கொள்ளவேண்டாம்."
'இல்ல மஹத்தயா… வெற்றிலையையும் கொடுத்துவிட்டு நாங்கள் யாருடன் பேசவேண்டுமோ… அவர்களை நினைத்துக்கொண்டு இருக்கவேண்டும். அவரிடம் சொல்லத் தேவையில்லை. அவர் மந்திரம் செபித்து கண்களை மூடிக்கொண்டிருப்பார்… அவரது குரல் அம்மாவின் குரல் போலவே மாறி எங்களுடன் பேசுவார்!"
இதிலுள்ள உண்மை பொய்களை ஊகித்து அவனுக்கு விளக்குவது கஷ்டமாயிருந்தது. எனினும் ஏழெட்டு வயதுச் சிறுவனாயிருந்தபோது தாயை இழந்து… பின்னர் அந்த இழப்பு வேதனையிலும் மனத்துடிப்பிலும் அவன் வளர்ந்த காலங்களை நினைத்துப் பார்க்கக்கூடியதாயிருந்தது. அவனது தந்தையைப்பற்றி விசாரித்தேன். அவர் இப்போதும் கசிப்புக் குடித்தே அழிகிறாரென்றும் தன்னைக் கவனிப்பதில்லை என்றும் கூறினான். தான் வேலை பார்க்க வெளிக்கிட்டதே அவரது தொல்லை தாங்க முடியாமல்தானாம்.
சுரேஷ் மீதிருந்த கருணையும் கரிசனையும் இன்னும் பெருகியது. அவனை எங்கள் வீட்டுப் பிள்ளையாகவே கருதினேன்.
காலம் ஆக ஆக சுரேஷின் நடை உடை பாவனைகள் மாற்றமடைந்து வந்தன.. தானும் தன் பாடும் வேலையுமாக ஆரம்ப காலங்களில் ஒதுங்கியிருந்த தன்மைகள் மாறி… மற்றவர்களுடன் கலகலத்துப் பேசவும் சிரிக்கவும் பழகியிருந்தான்.
லீவில் ஊருக்குப் போய் வந்தான். அவனது நடவடிக்கை முதலில் ஆரோக்கியமானதாகவே இருந்தது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை லீவில் போகும்போது சம்பளப் பணத்தையெல்லாம் கணக்குப் பார்த்துப் பெற்றுக்கொண்டு போவான். பின்னர் வெறுங்கையுடன் வருவான். பணத்துக்கு என்ன நடந்தது எனக் கேட்டால் “பாங்க்” புத்தகத்தில் போட்டிருப்பதாகக் கூறுவான்.
பின்னர் அடிக்கடி இவனுக்கு தொலைபேசி அழைப்புக்களும் வரத் தொடங்கின. ஒரு பெண்ணின் குரலில்! அதன் பின்னர் சுரேஷ் லீவில் போகவேண்டுமென அரிக்கத் தொடங்கிவிடுவான். நல்ல தொடர்போ கெட்ட சகவாசமோ என எனக்குள் கவலையாயிருக்கும். கேட்டால் சரியாகச் சொல்லமாட்டான்.
00 00 00 00
நட்ட நடுநிசி கடந்த நேரம்! (மீண்டும் கதையின் ஆரம்பத்துக்கு வருகிறோம்).
நான் உறக்கம் குழம்பிப்போய்ப் படுத்திருந்தேன். வந்தவர்களுக்கும் சுரேஷிற்கும் என்ன தொடர்பாயிருக்கும் என தலையைப் போட்டு உடைத்தேன்.
அண்மையில் ஃபாம் வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. சுரேஷ் நீண்ட நாட்கள் லீவில் போயிருந்தான். அந்த நாட்களில் ஃபாமில் இருந்த இரண்டு தண்ணீர் பம்புகள் களவு போய்விட்டன. இரண்டினதும் பெறுமதி குறைத்து மதிப்பிட்டாலும் ஒன்றரை இலட்சம் ரூபா அளவில் வரும். சுரேஷ் நின்றிருந்தால் இது நடந்திருக்காது. அவன் லீவில் சென்றுவிட்டதை அறிந்துதான் யாராவது அந்த வேலையைச் செய்திருப்பார்கள். இடையில் ஒருமுறை வந்தபோது சுரேஷ் இதுபற்றி அறிந்து கவலைப்பட்டதும் என் நினைவில் உழன்றது.
'மஹத்தயா கவலைப்படா வேண்டாம். நான் எப்படியாவது கள்ளனைப் பிடித்துத் தருவேன்… நான் திரும்ப வந்து எப்படியாவது கள்ளனைப் பிடித்துத் தருவேன்…"
வந்தவர்கள் சுரேஷ் அன்று முழுவதும் தங்களுடன் இருந்ததாகக் கூறினார்கள். ஒருவேளை சுரேஷ் தனது துப்பறியும் வேலைகளைத் தொடங்கிவிட்டானோ? உதைக்கப்போவதாக அவர்கள் கூறினார்கள். பாவம் அநியாயமாக வேண்டிக்கட்டப் போகிறானே…
அடுத்த நாட் காலையிலும் அவர்கள் தேடிவந்தார்கள்.
'சுரேஷ் வந்தவனா? அவன் இருக்கும் இடம் தெரியுமா?"
சுரேஷின் இருப்பிடத்தின் குறிப்பை கூட வேலைசெய்யும் மணி அண்ணனிடம் கூறியிருப்பது எனக்குத் தெரியும். மணி அண்ணனை விசாரித்தால் கண்டுபிடிக்கலாம்.
'என்ன நடந்தது என்று சொல்லுங்க!" என அவர்களை விசாரித்தேன்.
'சுரேஷ் நேற்று முழுக்க எங்களுடன்தான் இருந்தான். எங்களுடைய செல்போனைப் பார்த்து ஆசைப்பட்டான். விலைக்கு கேட்டான். பத்தாயிரம் ரூபா என்று சொன்னோம். வாங்குவதாக ஒப்புக்கொண்டான். பொழுதுபட பஸ்ஸிற்குக் கொண்டுவந்து விடச் சொன்னான். மோட்டார் பைக்கில் றோட்டுக்குக் கூட்டி வந்தோம். ஃபோனை ஒருமுறை கேட்டான். உங்களுடைய நம்பருக்குத்தான் ஒரு கோல் எடுத்தான். இரவு ஏழு மணிபோல உங்களுக்கு ஒரு கோல் வந்ததுதானே? நாங்கள் எதிர்பார்க்கவில்லை.. சட்டெனப் போனையும் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டான். பிடிக்க முடியவில்லை."
சுரேஷ் ஒரு முயல்குட்டியைப்போல ஓடக்கூடியவன்தான்.
இரவு ஏழு மணிபோல சுரேஷிடமிருந்து எனக்கு ஒரு கோல் வந்ததை மனதில் ஞாபகப்படுத்தினேன்.. 'மஹத்தயாத கத்தாகறன்னே?" (மஹத்தயாவா கதைக்கிறீங்கள்?) எனக் கேட்டான். பதில் சொல்ல முதல் “கட்” ஆகிவிட்டது.
ஒருவேளை சுரேஷ் களவுபோன பம்ப் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்திருப்பானோ? எனக்குத் தகவல் தர முயன்று அவர்களிடம் பிடிபட்டு ஃபோனையும் கொண்டு ஓடியிருப்பானோ?
நான் வந்தவர்களிடம் கதைவிட்டுக் கதை பிடுங்கத் தொடங்கினேன்.
இடையில்… களவு போன பம்ப்களைப் பற்றி ஒரு கேள்வி போட 'பம்ப் இருக்கிறது!" என வந்தவர்களில் ஒருவன் பதில் கூறினான். உடனே மற்றவன் கதையை மாற்றினான்.
'இல்லை பம்ப்கள் இரண்டும் சுரேஷிடம்தான் உள்ளது. அவன் ஒரு இடத்தில் வைக்கக் கொடுத்திருக்கிறான்.."
அந்தச் சம்பாஷணையின் பின் அவர்கள் என்னைவிட்டு சீக்கிரமாகப் போய்விட்டார்கள்.
சுரேஷ் எதற்காக இவர்களது கைத்தொலைபேசியைப் பத்தாயிரம் ரூபா கொடுத்து வாங்கப் போயிருக்கவேண்டும் என யோசித்தேன். இப்பொழுதுதான் மூலைக்கு மூலை உள்ள கடைகளில் எல்லாம் கைத்தொலைபேசிகள் மலிவு விலைகளில் குவிந்து கிடக்கிறதே?
00 00 00 00
நீண்ட நாட்கள் லீவில் போன சுரேஷ் திரும்ப வருவான்.. அல்லது எங்கிருந்தாவது தொடர்புகொள்வான் என்று பார்த்திருந்தேன்.
பொருள் களவு போனதை நான் எப்போதோ மறந்துபோய்விட்டேன். சுரேசைப்பற்றியதும் அவனது சகவாசங்கள் பற்றியதுமான நினைவு அவ்வப்போது மனதை அழுத்தும்.
மிக மிக நீண்ட நாட்களாகிவிட்டது..
ஒரு நாள் அவனை மறந்திருந்த நேரத்தில் கேற்றைத் திறந்து உள்ளே வந்தான் சுரேஷ். வந்து முன்திண்ணையில் அமர்ந்துகொண்டான். காய்ந்து கண்கள் குழிவிழுந்து எலும்பும் தோலுமான தோற்றத்தில் இருந்தான்.
'மெச்சற கல் கோஹித கியே…? அப்பி அமத்தக வெலாத? (இவ்வளவு காலமும் எங்க போனாய்…. எங்களை மறந்திட்டாயா?)" எனக் கேட்டேன்.
சுரேஷ் உடன் பதில் கூறாது மௌனமாயிருந்தான். பின்னர் சில கதைகளைக் கூறினான்.
அவனுக்கு ஊரில் அவனை விட வயது கூடிய ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவளுடன் வாழ்ந்திருக்கிறான். இவனிடமிருந்து கறக்கக்கூடிய பணத்தையெல்லாம் கறந்துகொண்டு கைகழுவி விட்டுவிட்டாள். எனக்கு ஆச்சரியம் ஒரு பக்கம்… வேதனை மறுபக்கம்… இவனுடைய வயது என்ன? எப்படி அவளிடம் மாட்டிக்கொண்டான்?
'மஹத்தயா என்ன மன்னிச்சிடுங்க!"
நான் புரியாமல் அவனது முகத்தை நோக்கினேன்.
'நான் உங்களுக்குக் குத்தம் செய்திட்டன்… பம்ஃப் மோட்டார்கள் களவு போனதுக்கு நான்தான் காரணம்… ஆனால் அவங்களும் என்னை ஏமாத்தியிட்டாங்க…! அவங்களுக்குத்தான் வித்தன்.. சல்லி தரயில்ல!"
சட்டென ஒரு கோபம் என் தலைக்கேறியது. எழுந்த வேகத்தில் இழுத்து அவனது கன்னத்தில் அறைந்தேன். (அவன் மறுகன்னத்தையும் தருவதற்குத் தயாராயிருந்தான்.)
மனைவி ஓடிவந்து என்னைத் தடுத்தாள்.
'என்ன இது…? அவன் தாயில்லாப் பிள்ளை! இப்படிப் போட்டுப் அடிக்கலாமா…?"
மனைவி அவனைத் தேற்றியதும் சுரேஷ் விம்மலெடுத்து அழத்தொடங்கினான்.
00 00 00 00
- மல்லிகை - 2004 -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.