1
திரு திருமதி செல்வன் அடுத்த வீடு பார்க்க தொடங்கிவிட்டார்கள்.
கையில் ஒரு சூட்கேசுடன் கனடா வந்து இறங்கிய செல்வனுக்கும் மனைவிக்கும் முதல் இருப்பிடம் நண்பனின் நிலக்கீழ் அறைதான் .சில மாதங்களில் செல்வனுக்கு ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிட்டது . மனைவி நித்தியா கணக்கியல் படிக்க பாடசாலை செல்ல தொடங்கியிருந்தார் . கையில் கொஞ்சம் காசு சேர சூரியஒளி படாத அந்த இடத்தை விட்டு ஒரு அப்பார்மென்ட் எடுத்தது போய்விட்டார்கள் .
நித்தியாவிற்கு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது ,செல்வனுக்கு வருமானமும் சற்று அதிகரிக்க சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்து நித்தியா வேலை செய்யும் வங்கிக்கு அருகில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டார்கள் .
இருவருக்கும் நிரந்தர வேலை ,நல்ல சம்பளம் ,இரண்டு கார்கள் ,மூத்தமகனுக்கு ஏழு வயது,இளைய மகளுக்கு நாலு வயது . இனி இதைவிட பெரியதொரு வீடு தேவை என்று தீர்மானித்து அடுத்த வீடு தேடும் படலம் ஆரம்பித்துவிட்டது .இம்முறை இன்னொருவரின் வீட்டை வாங்காமல் புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றை வாங்குவது என்று தீர்மானித்து எந்த இடத்தில் வாங்குவது ,எந்த வீடு கட்டும் நிறுவனத்திடம் கட்டக்கொடுப்பது என்ற ஆராய்ச்சியில் இருவரும் இறங்கிவிட்டார்கள் .
இருவரும் தினமும் வேலையால் வந்து இதே ஆராய்சிதான் .வேலைக்கு செல்ல போக்குவரத்து வசதி ,பிள்ளைகளின் படிப்பு என்று பார்த்து வீட்டை மார்க்கம் நகரில் வாங்குவது என்றும் ,புது வீடு கட்டும் நிறுவனங்கள் Mattamy , Greenpark , Remington போன்றவர்களின் விளம்பரங்களை பார்ப்பதும் பின்னர் அவர்களின் மாதிரி வீடுகளுக்கு செல்லுவதும் என்று திரிந்து முடிவில் அகண்ட காணியுடன் சதுரமா திறந்த உள்ளக அமைப்பை கொண்ட Mattamy நிறுவனத்திடம் நாலு அறைகள் மூன்று குளியலறைகள் கொண்ட ஒரு வீட்டை வாங்க முடிவெடுத்துவிட்டார்கள் .ஒரு சனிக்கிழமை காலை பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு Mattamy நிறுவனத்திடம் போய் வீடு கட்டி முடிய ஒன்றரை வருடங்கள் ,கட்டு காசு இருபது வீதம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு அவர்ளே அந்த நிறுவனம் வைத்திருந்த வரைபடத்தில் இவர்கள் வீட்டின் மேலே ஒரு பச்சை பட்டனை குத்த சொல்ல அதை சந்தோசமாக மகளை கொண்டு குத்திவிட்டு வீடுதிரும்பிவிடார்கள் .
அவர்கள் கட்ட கொடுத்த வீட்டின் பின்பக்கம் ஒரு பெற்றோல் நிலையத்திற்கு அருகில் இருந்ததால் மாதத்திற்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோ காரை கொண்டுபோய் பெற்றோல் நிலையத்தில் விட்டு விட்டு தாம் கட்ட கொடுத்த வீடு எந்த நிலையில் இருக்கு என்று அத்திவாரம் போட தொடங்கியதில் இருந்து அதை பார்ப்பதும் படம் எடுப்பதாகவும் இருந்தார்கள் .
இப்போ வீடு கட்டும் நிறுவனம் தாம் கட்டும் வீடுகளை சுற்றி பாதுகாப்பிற்கு வேலியையும் அடைத்து உள்ளே பொதுமக்கள் எவரும் புகமுடியாமல் ஒரு காவலாளியையும் போட்டுவிட்டார்கள் .இப்போ வீடு எந்த அளவில் இருக்கு என்று பார்க்க இரண்டு முறை முயற்சித்தும் காவலாளி அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்துவிட்டார் .பின்பக்கம் வந்து வேலியால் எட்டி பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள் .
அன்று வேலையால் வந்த நித்தியா செல்வனிடம் ஒரு குண்டை தூக்கி போட்டாள் .புது வீடு கட்டுபவர்கள் கோயிலில் பூசை வைத்து நூறு சங்குகள் அத்திவாரத்தில் புதைக்கின்றார்களாம் .வீடு கட்டும் நிறுவனமும் அதற்கு அனுமதி கொடுக்குதாம் ,உங்களுக்கு இவற்றில் நம்பிக்கை இல்லை என்று எனக்கு தெரியும் , நீங்கள் ஒருவாறு என்னையும் இப்ப கொஞ்சம் உங்களை மாதிரி மாத்திப்போட்டீர்கள் ஆனால் புது வீடு கட்டிய பலரும் தாங்கள் சங்கு தாட்டதாக சொல்ல எனக்கும் அதை செய்யவேண்டும் போலிருக்கு .வீடு இப்ப அத்திவாரம் தாண்டி மேலே எழுந்துவிட்டது சங்கு தாக்காவிட்டாலும் பரவாயில்லை என்ரை மனதிருப்திக்கு ஐயரிடம் ஒரு பூசை வைத்து மஞ்சள் தண்ணி தெளித்துவிடுவம் . மனைவியின் மனத்தை நோகடிக்க விரும்பாமல் செல்வன் அடுத்த வெள்ளிகிழமை மனைவி பிள்ளைகளுடன் கோயிலுக்கு செல்ல ஐயர் ஒரு சிறிய வெள்ளிகுடத்தில் மஞ்சள் தண்ணி,விபூதி ,சந்தனம் ,அஷ்டலட்சுமிற்கு போர்த்தது என்று ஒரு மஞ்சள் பட்டுத்துணியும் கொடுத்தார் .
வீட்டின் நிலகீழ் அறைக்குள் போய் நிலத்தில் மஞ்சள் தண்ணியை தெளித்து சுவரில் திருநீறு சந்தனத்தை பூசி ஏதாவது ஒரு வீட்டு கூரையுடன் இருக்கும் நிலையில் மஞ்சள் பட்டை கட்ட சொல்லிவிட்டு இருநூறு டொலரை வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டார் .
காருக்குள் மனைவியுடன் சண்டை போட தயாராக ஏறிய செல்வன் பிள்ளைகளுக்கு முன் வேண்டாம் என்று விட்டுவிட்டான் .வீடு கட்டும் இடத்திற்கு போய் காவலாளிக்கு தமது சம்பிரதாயம் என்று எவ்வளோ விளங்கபடுத்தியும் அவன் புது வீட்டிற்குள் போவது பாதுகாப்பு இல்லை என்று உள்ளே விட மறுத்துவிட்டான்.
எல்லோரும் மனத்தாங்கலுடன் வீடு திரும்பிவிட்டார்கள் .இரவு பத்துமணி இருக்கும் செல்வன் நித்தியாவை கூப்பிட்டு யோசிக்கவேண்டாம் தான் எப்படியும் ரகசியமாக வேலி தாண்டி அலுவலை முடித்து விடுவதாக சொன்னான்.
செல்வன் ஐயர் கொடுத்த பொருட்களுடன் தனது நண்பனையும் அழைத்துகொண்டு பயம் தெளிய சற்று ஏற்றிவிட்டு புதுவீட்டை நோக்கி புறப்படுகின்றான் . பெற்றோல் நிலையத்தில் காரை நிற்பாட்டி நண்பனை காவலுக்கு விட்டு விட்டு செல்வன் தெருவில் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு மெதுவாக வேலி பாய்ந்துவிட்டான்.
ஒரே இருட்டு .தனது வீடு இருக்கும் குறிப்பு அறிந்து பாதி கட்டிமுடிந்து விட்ட கதவில்லாத வீட்டின் முன்புறம் போய் நிலக்கீழ் அறைக்கு போகும் படிகளில் தட்டு தடுமாறி இறங்கி மஞ்சள் தண்ணியை நிலமெங்கும் தெளித்துவிட்டு விபூதியை சுவரில் பூசி அதற்கு மேல் சந்தனத்தை வைத்து விட்டு மஞ்சள் பட்டை எடுத்து கூரையுடன் இருக்கும் ஒரு சிலாகையில் கட்டிவிட்டு அலுவலை கனகச்சிதம் ஆகமுடித்த திருப்தியில் திரும்ப வேலி பாய்கின்றான்
ஏதோ பெரிய இராணுவ தாக்குதல் செய்த திருப்தியில் பெருமிதத்துடன் வீடு போய் சேர்ந்த செல்வன் நித்தியாவின் அதி உச்ச வரவேற்புடன் படுக்கப்போய்விட்டான் .
2
புது வீடு குடி புகுந்து நாலு வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் செல்வனும் நித்தியாவும் நிம்மதியை தொலைத்தும் நாலு வருடங்கள் .
இரண்டு மாதங்கள் புல்லு வெட்டாததால் ஒரு அடிக்கு மேல் வளர்ந்திருந்த புல்லை வெட்டுவதற்கு செல்வனுக்கு சரியான சிரமமாக இருந்தது .Lawn Mower ஐ நாலாம் நம்பருக்கு உயர்த்தி ஒருக்கா வெட்டிவிட்டு பின்னர் முதலாம் நம்பருக்கு இறக்கி திரும்ப ஒருமுறை வெட்டினால் தான் சரி என்ற முடிவிற்கு வந்தவனாக செல்வன் புல்லைவெட்டி தள்ளிக்கொண்டு மனதில் பொருமிக்கொண்டு இருந்தான் .
இந்த வீட்டிற்கு வந்து நாலு வருடங்கள் ஆகின்றது .புது வீடு என்று தளபாடங்கள் ,Curtain என்று தொடங்கி பின்னர் Backyard இல் பெரிய Deck அடிக்க Home Depot ஐ கொண்டு செய்து ,பின்னர் வீட்டிற்கு முன்பக்கம் கார்கள் தரிக்க ஒரு இத்தாலி கொம்பனியை கொண்டு Interlock என்று விலை கூடிய கல்லுகளை பதித்து கட்டியாகிவிட்டது .முதல் வருடத்திலேயே அளவுக்கு மீறிய செலவால் Line of Credit எடுத்து குடும்ப பொருளாதாரம் சற்று தடுமாறத் தொடங்குகின்றது .பிள்ளைகளின் படிப்பு ,அவர்களின் செலவுகள் இன்னும் அதிகரிக்க எடுத்த கடன்களை கட்டமுடியாமல் வாழ்க்கை பெரும் நெருக்கடியில் தொடர்கின்றது .
வீட்டின் விலை கூடிக்கொண்டு போகும் விடயம் ஒன்றுதான் அப்போ அவர்களுக்கு ஆறுதலை கொடுப்பதாக இருந்தது .ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு செல்லுபவர்கள் இந்த இரு வருடங்களும் அதற்கும் செல்லவில்லை .
புது வீடு பற்றிய கனவு மறைந்து பிள்ளைகள் படித்தால் காணும் என்ற நிலையில் வாழ்க்கை ஓடத்தொடங்கிவிட்டிருந்தது .அடிக்கடி உறவினர்கள், நண்பர்களுக்கு வைக்கும் பார்டிகளும் படிப்படியாக குறைந்துகொண்டு போய்விட்டது .
அடுத்த வருடம் சற்று பண கஸ்டத்தால் சற்று நிமிருவது போல ஒரு நிலைவர நித்தியாவிற்கு வேலையால் Layoff , கொஞ்ச பணமும் வேலை செய்த அனுபவத்திற்காக கொடுத்திருந்தார்கள் . இனி இந்த பண கஷ்டத்தில் இருந்து மீள்வது என்றால் இரண்டாவது வேலைக்கு போகவேண்டியதுதான் என்று செல்வன் முடிவுசெய்கின்றான் .கனடா வந்து பதினைந்து வருடங்கள் இரண்டாவது வேலை ஒன்றையே நினைத்திருக்காத செல்வன் தனக்கு வந்த விதியை நொந்து மரத்தொழிற்சாலை வேலை முடிய Swiss Chalet யில் Delivery தொடங்கிவிட்டான் .
இப்போ ஆறுநாள் வேலை, காலை போனால் வீடு திரும்ப பத்து மணியாகிவிடும். மனைவி பிள்ளைகளை சந்திப்பதே அரிதாகிவிட்டது .பிள்ளைகள் ஒழுங்காக படித்து வந்தததால் அவர்களை குழப்பாமல் செல்வனும் நித்தியாவும் செலவுகளை முடிந்தவரை குறைத்து வரும் வருமானத்தில் கையும் கணக்குமாக காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள்
ஆசையாக வாங்கிய வீடு ,தோட்டம் ,பூமரங்கள் எல்லாம் கவனிப்பராற்று இப்போ Backyard இல் புல்லு ஒரு அடிக்கு வளர்ந்து பத்தையாகி விட்டிருந்தது. அதைத்தான் இப்போ செல்வன் வெட்டிக்கொண்டு இருக்கின்றான் .
ஞாயிற்றுகிழமை எப்படியும் புல்லை வெட்டவேண்டும் என்று முன்னரே முடிவெடுத்து இருந்த செல்வன் இப்ப தன்னை தானே திட்டிக்கொண்டு, புது வீடு வாங்கியதில் இருந்து மனுசர் ஒருநாள் கூட நிம்மதியாக இருக்கமுடியவில்லை என்று நொந்தபடி இந்த வீட்டை வாங்கித்தானே இவ்வளவு கஷ்டமும் வந்தது, ஏன் இந்த வீட்டை விற்றுவிட்டு இதிலும் சிறிதாக வேறு வீடு வாங்கினால் என்ன நினைப்பும் வந்து போகின்றது .
பக்கத்து வீட்டில் இருந்தும் புல்லு வெட்டும் சத்தம் கேட்கின்றது. தொடங்கி விட்டான் வெள்ளைக்காரன் என்று மனதில் சிறு எரிச்சல் செல்வனுக்கு வந்தது . பக்கத்து வீட்டில் இருப்வர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் உடுப்பு நடப்பு செல்வனுக்கு வீடு வாங்கிவந்த நாட்களில் இருந்தே பிடிக்காமல் போய்விட்டிருந்தது . அயலில் இருக்கும் வெள்ளை இனத்தவர்களுக்கு காணும் நேரம் எல்லாம் வணக்கம் சொல்லுவதும் வீட்டின் முன்பக்கத்தில் சற்று குப்பைகள் சேர்ந்தாலும் உடனே துப்பரவு செய்துவிட்டு நாங்கள் கனடாவில் இப்படிதான் இருக்கவேண்டும் என்றும் புத்திமதி சொல்லும் பிலிப்பன்ஸ்காரரை செல்வனுக்கு கண்டாலே ஆகாது .
கதைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டு விலை ஏறுவது பற்றியும், வங்கி வட்டி வீதம் பற்றியும் கதைத்து செல்வனை வெறுப்பேற்றி வைத்திருந்தார் . Hockey Season தொடங்க Maple Leafs கொடியை காரில் ஏற்றிவிட்டு சும்மா ஒரு வலம் வருவார் .விடுமுறை நாட்களில் ஒரு பியர் போத்தலை வைத்து உறிஞ்சிக்கொண்டு சுங்கானில் அவர் புகை விட செல்வனுக்கு பத்திக்கொண்டு வரும் .
புல்லு வெட்ட வெளிக்கிட்டால் ஒரு கண்ணாடி ,வேலை செய்பவர்கள் அணியும் Safety shoes , தொப்பி ,உடம்பு முழுக்க மறைக்கும் நீள அங்கி எல்லாம் போட்டுக்கொண்டு ஏதோ சந்திர மண்டலத்திற்கு செல்வது போல காட்சியளிப்பார் . இ ற்றை பார்த்துத்தான் செல்வன் அவருக்கு வெள்ளைக்காரன் என்று பட்டம் வைத்து இந்த மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருபவர்களின் கனவே வெள்ளைகளை போல வாழுவதுதான் என்று நித்தியாவிற்கு சொல்லி சிரிப்பான் .அவன்தான் சரி நீங்கள் தான் மாறமாட்டீர்கள் என்று நித்தியா அவனுக்கு வக்காலத்து வாங்குவார்
ஒருநாள் செல்வன் வீட்டு Backyard இல் BBQ பார்ட்டி, பழைய பாடசாலை நண்பர்கள் ,கிரிக்கெட் விளையாடும் உறவுகள் என்று பலர் வந்திருந்தார்கள் .மணிக்கணக்கில் பார்ட்டி இழுபட்டு இறுதியில் பாட்டு கச்சேரி தொடங்கிவிட்டது . நேரம் அதிகாலை இரண்டை தாண்ட யாரோ வாசல் மணியடித்தார்கள் போய் பார்த்தால் போலிஸ் . சனிக்கிழமை என்று தெரியும் இருந்தாலும் நேரம் நன்றாக போய்விட்டது அயல்வீட்டுக்காரர்கள் அழைத்து சொன்னதால் தான் வந்தோம் அவர்கள் நித்திரை கொள்ளவேண்டும் எனவே பாட்டு கச்சேரி வைப்பதென்றால் வீட்டுக்குள் அல்லது கராஜுக்குள் வையுங்கள் என்றுவிட்டு போலீஸ்காரர்கள் போய்விட்டார்கள் ,செல்வனுக்கு பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் தான் பொலிசிற்கு அடித்திருப்பான் என்று ஒரு சந்தேகம் .
இப்போ செல்வன் இரண்டு வேலைகள் செய்வதால் வெள்ளைகாரனை போன சம்மருக்கு பிறகு சந்திக்கவில்லை .இப்போ அவரும் மெசினை தள்ளிக்கொண்டு வருகின்றார் போல என செல்வன் நினைக்க ,
Hello Buddy என்றபடி சந்திரமண்டலத்திற்கு செல்வது போல ஆள் வருகின்றார் .வழக்கம் போல வீட்டு விலை நல்லா கூடிவிட்டது என்று தொடங்கி தனது வீடு மிகவும் ராசியான வீடு . Bombardier இல் நிரந்தரம் இல்லாமல் வேலை நிறுத்தம் என்று இழுத்துகொண்டிருந்த தனது வேலை நிரந்தரமாகிவிட்டது ,வேலை தேடிகொண்டிருந்த மனைவி நேர்சிங் படித்து வேலை எடுத்துவிட்டார் .கல்யாணம் செய்து பன்னிரண்டு வருடங்கள் பிள்ளை இல்லாமல் இருந்த எங்களுக்கு பிள்ளை பிறந்திருக்கு என்று அடிக்கிகொண்டு போகிறார் .
By the way வாற சனிக்கிழமை மகனின் முதலாவது பிறந்த நாள் .ஒரு சின்ன பார்ட்டி வைக்கின்றேன் நீ கட்டாயம் குடும்பத்துடன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்து செல்வன் தலையாட்ட Don't forget it என்றபடி போகின்றார் .
மனைவியும் பிள்ளைகளும் என்னப்பா அவர்களுடன் அவ்வளவு பழக்கம் இல்லை என்று பார்ட்டிக்கு வர மறுத்துவிட வெள்ளைகாரனின் மகனுக்கு வாங்கி வைத்த பரிசையும் கொண்டு செல்வன் பக்கத்து வீட்டு பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்கின்றான் .சில அயலவர்களும் பல உறவினர்களும் வீடு முழுக்க நிரம்பியிருகின்றார்கள் .பரிசை கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்துவிட்டு வெள்ளைகாரனின் கையை குலுக்க எங்கட பார்ட்டி பேஸ்மெண்டிற்குள் தான் என்றபடி செல்வனை கீழே படிகளால் அழைத்து செல்லும் போது இன்னமும் நான் பேஸ்மென்ட் முடிக்கவில்லை தேவையும் வரவில்லை என்கிறான் .
பல வகை குடிவகைகள் ,உணவு வகைகள் அடுக்கி வைக்கபட்டிருக்கு .செல்வனை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு என்ன குடிகின்றாய் என்று செல்வனை கேட்டுவிட்டு பின் பிளக் லேபலை ஊற்றி ஐஸ் போட்டு கொடுத்துவிட்டு Help Yourself எனக்கு மேலுக்கு வேலை இருக்கு என்று மேலே செல்கிறான் வெள்ளைக்காரன் .
கிளாசுடன் அங்கிருந்தவர்களுக்கு சியேர்ஸ் சொல்லிவிட்டு வாயிற்குள் விஸ்கியை விடும்போது சற்று நிமிர்ந்தால் பேஸ்மென்ட் கூரையின் சிலாகையில் மஞ்சள் பட்டும் சற்று தள்ளி சுவரில் அழிந்தும் அழியாத நிலையில் விபூதிக்குள் சந்தனம் தெரிகின்றது