வீடியோக் கமெராவின் மிகையான வெளிச்சத்திலும் அதிலிருந்து வரும் வெப்பத்திலும் என்னுடைய முகம் வியர்க்கிறது, கண்கள் கூசுகின்றன. வீடியோக் கமெராக்காரரினதும், படமெடுப்பவரினதும் அறிவுறுத்தல்களுக்குத் தக்கதாகத் திரும்பித் திரும்பி அலுத்துப் போய்விட்டது.
“நிரோ வடிவாச் சிரியும் பாப்பம். உதென்ன சிரிப்பு,” இது மாமியின் விமர்சனம். எனக்கு அழ வேணும் போல் இருக்கிறது. பிறகெப்படி நெடுகப் பொய்யுக்குச் சிரிக்கிறது? அதை விட சிரிக்கிறதாய் பாசாங்கு பண்ணிப் பண்ணி வாய் ஒரு பக்கம் நோகிறது.
“பெரிய ஹோல், குறைஞ்சது முன்னூறு பேர், பூ ஊஞ்சல்…, உதுகளைக் கேட்கக் கேட்க எனக்கு குமட்டுது. பிளீஸ் அம்மா எனக்கு உது ஒண்டும் வேண்டாம்,”
“நிரோ, நீ எங்களுக்கு ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளை. உன்ரை கலியாண வீட்டைப் பாக்க நாங்கள் இருப்பமோ இல்லையோ... அதைவிட நீ ஆரை, எப்படிக் கலியாணம் கட்டுவியோ ஆருக்குத் தெரியும். இதை எங்கடை ஆசைக்குச் செய்து பாக்க வேணும். அதோடை எல்லோரும் செய்யேக்கை நாங்கள் செய்யாட்டி அது எங்களுக்கு மரியாதை இல்லை,”
“இயற்கையிலை நடக்கிற ஒரு விஷயத்தை ஏன் இப்படிப் பெரிசுபடுத்திறியள், எல்லாரும் தான் சாமத்தியப்படுகினம்; உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கேல்லைத் தானே.”
“இப்பத்தான் தேவை இருக்குது பிள்ளை. மாமாவை, சித்தியவை எல்லாம் அவுஸ்ரேலியா, லண்டன் எண்டு சீவிக்கினம். அவைக்கு இப்பிடியெல்லாம் செய்து அனுப்பினால் தானே அவையின்ரை உறவும் விளங்கும், எங்கடை கலாச்சாரமும் நிலைக்கும்.” ‘அது மட்டுமில்லை, எத்தனை பேர் பாப்பினம். பாத்துப் போட்டு சொந்தத்திலையிருந்து பொம்பிளை கேட்டு வந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்,’ மனோகரி மீதியைத் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள்.
“இப்படிச் செய்யிறது அநியாயம் எண்டு தமிழ்ப் படங்களிலேயே பிரச்சாரம் பண்றாங்கள். நீங்கள் இங்கை, அதுவும் கனடாவிலை இருந்து கொண்டு இப்படி அமளிப்படுத்திறியள். எனக்கு உது ஒண்டும் பிடிக்கேல்லை.”
“பிள்ளை, இப்ப உனக்கு வாய் கூடிப் போச்சுது. இதிலை உன்ரை விருப்பம், முடிவு எண்டு ஒண்டுமில்லை. நாங்கள் தான் முடிவெடுக்கிறது. எங்களுக்கெல்லாம் இப்படி ஆர் செய்தது? ஏதோ கடவுளே எண்டு நாங்கள் வசதியாய் இருக்கிறதாலை, இதை எல்லாம் உங்களுக்கு செய்ய முடியுது. அதற்கு நன்றியாயிருங்கோ.”
“ஓ, எல்லாம் எனக்காகத் தானே நீங்கள் செய்யிறியள்; பிள்ளை கலியாணத்துக்கு ரெடி என்று ஊரெல்லாம் பறை தட்டச் சொல்லி நானே சொன்னனான்?”
கதவைச் சடாரென்று சாத்திவிட்டு எனது அறைக்குள் புகுந்து கொள்கிறேன். என் வேண்டுகோள், ஆசை எதுவுமே எடுபடாத போது அம்மாவில் கோபிப்பதைத் தவிர வேறு எதையுமே என்னால் செய்ய முடியவில்லை.
இப்ப எல்லோருக்கும் முன்னாலை ஏதோ காட்சிப் பொருள் மாதிரி அலங்கரித்து விடப்பட்டிருக்கிறேன். எரிச்சல் எரிச்சலாய் வருகிறது. விடிய ஐந்து மணிக்கு எழுப்பி, குளிக்க வார்ப்பதைக் கூட ஈர உடுப்புடன் மிகை வெளிச்சத்தில் படமாக்கி, அலங்காரம் என்ற பேரில் மிகுந்த நகைகளைச் சாத்தி, உடம்பை இறுக்கும் சட்டையும், பாவாடையும் உள்ள உடுப்பிலை பல மணி நேரம் நிற்கும் தண்டனை எனக்கு.
“உங்கடை பிள்ளைக்கு இப்ப என்ன பன்னிரண்டு வயசு தானே. இங்கத்தைய சாப்பாடு வெள்ளனவே எல்லாரையும் குந்தவைக்குது என்ன,” இது அம்மாவின் சினேகிதி மாலா
“சீஸ், இறைச்சி எண்டு அப்படி ஒன்றும் அவள் பெரிசாய்ச் சாப்பிடுறேல்லை. எல்லாம் ஜீன்ஸ் தான். நான் சாமத்தியப்பட்டது பதினொரு வயசிலை…”
“அது அங்கையெண்டபடியால் பரவாயில்லை. இங்கை நீங்கள் இனிக் கண்ணிலை எண்ணை வாத்த மாதிரி வலு கவனமாயிருக்க வேணும்.”
“ஓம், ஓம் அதுவும் இந்த நாட்டிலை சொல்லவேணுமே? ஒருத்தன்ரை கையிலை பிடிச்சுக் குடுக்கும் வரைக்கும் முள்ளிலை நடக்கிற மாதிரித் தான்.”
அவர்கள் கதைக்கிறதைக் கேட்க எனக்கு இன்னும் அருவருப்பாக இருக்குது. என்னில் எந்த நம்பிக்கையும் இல்லாத புலம்பல்.
“அம்மாவுக்கும் சித்திக்கும் தான் எத்தனை வித்தியாசம். சித்தி எதையும் ஊருக்காகச் செய்வதில்லை. பிறந்தநாள் கூட ஆடம்பரமாய் கொண்டாடுவது கிடையாது. பிள்ளைகளுடன் ஒரு டின்னருக்குப் போவார்கள் அல்லது பிள்ளைகள் விருப்பப்பட்டதைச் செய்வார்கள். எங்கடை வீட்டிலோ இரவிரவாய் குடிப்பாட்டி வைச்சு, அப்பாவும் அவரின்ரை சினேகிதர்மாரும் எங்கடை பிறந்த நாளைச் கொண்டாடுவினம். என்ரை அம்மாவுக்கு தன்ரை சாப்பாட்டையும், உடுப்பையும், நகைகளையும் மற்றவைக்குக் காட்டிப் புழுகிறதிலை, அவையின்ரை பாராட்டைக் கேட்கிறதிலை தான் முழுச் சந்தோஷமும். எங்கடை விருப்பு, வெறுப்புகளைப் பற்றி அவைக்கு எந்த அக்கறையுமில்லை.
குத்துவிளக்குக் கொளுத்தி, ஆரத்தி எடுக்கவிட்டு, பூத் தூவலை வாங்கி, வந்த எல்லோருடனும் படங்களுக்கு போஸ் கொடுத்து எல்லாம் முடிய ஊஞ்சல் ஆட்ட வாங்கோ என்று எல்லோரையும் அம்மா கூப்பிட்டு விடுகிறா. ரீன் ஏஜ் போய்ஸ் கூட வந்து நின்று ஆட்டுகிறார்கள். எனக்கு என்னத்தைச் செய்கிறது என்று தெரியவில்லை. பெரிய அசௌகரியமாகவிருக்கிறது. பிறகு எனக்கு அன்பளிப்புக்கள் தர ஒரு வரிசை, சாப்பாட்டுக்கு என்று இன்னொரு வரிசை என வந்தவையெல்லாம் அணிவகுத்து நிற்கிறார்கள். அம்மாவுடன் போய் இப்படி மற்றவர்களின் விழாக்களில் நிற்கின்ற நேரங்களில் எங்களின் அவசரமும் நாங்கள் படும் எரிச்சலும் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதே போல், ஏதோ அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்துப் போட்டு சாப்பிட்டு முடித்து விட்டால் இங்கிருந்து விடுதலை பெற்று விடலாம், அடுத்ததாக எங்கே ஒட வேணும் என்று ஒவ்வொருவரும் மனக்கணக்குப் பார்ப்பதும் தெளிவாகத் தெரிகிறது.
சரி ஆசைக்கு செய்கிறார்கள் என்பதையாவது பொறுத்துக் கொள்ளலாம் ... இப்படிப் பெரிய எடுப்பு எடுக்காமல், நல்லாய்த் தெரிந்த, என்னில் உண்மையான பாசமுள்ளவர்களை மட்டும் கூப்பிட்டிருந்தால். நேரத்துடன் போட்டி போட்டுக்கொண்டு ஓடுகிற வாழ்வில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு அவர்களின் நேரத்தை விரயமாக்குவதையும், வர விருப்பமில்லாவிடிலும் போலிக்காக வந்து எல்லோரும் நிற்பதையும் நினைக்க ஏனடா தமிழனாய் பிறந்தேன் என எனக்கு அலுப்பாய் இருந்தது.
“உடுப்பை மாத்திப் போட்டு, கேக் வெட்டினால் போதும், பிறகு ஒண்டுமில்லை” என்று அம்மா வந்து சொல்லிப் போட்டு போறா.
அடுத்த உடுப்பான பஞ்சாபிக்குரிய தலை அலங்காரம் செய்யவேன மேக்கப் பண்ண வந்திருந்தவரிடம் மாமி மீண்டும் என்னைக் கூட்டிக் கொண்டு போகும் போது “என்ன நிரோ பாக்கிலை போய் வீடியோ எடுக்க மாட்டன் எண்டு போட்டீராம்? அந்தக் காலத்திலை நாங்கள் எங்கடை அம்மா, அப்பா சொல்லுறதை எதிர்த்து ஒரு சொல்லுச் சொல்லியிருக்க மாட்டம். இப்ப நீங்கள் எல்லாம் நினைச்ச படி நடக்க வெளிக்கிட்டிட்டியள். உங்களைச் சொல்லி என்ன, எப்ப எங்கடை நாட்டை விட்டு வெளிக்கிட்டோமோ அன்றே இந்த மரியாதை எல்லாம் தொலைச்சுப் போட்டம்,” என்று ஒரு பாட்டம் சுய கழிவிரக்கப் பேச்சைப் பேசி முடித்தா.
அடுத்த வாரம் பள்ளிக்கூடம் போனபோது, “என்ன உம்மைக் காணேல்லை, எப்படிச் சமாளித்தனீர்?” என்று ஜானுவைக் கேட்கிறேன். “நான் அம்மாவுக்கு சொல்லிட்டன்; உந்தக் கேளிக்கைகளுக்கெல்லாம் நான் வரமாட்டன் எண்டு. கலியாண வீட்டுக்கு மட்டும், அதுவும் பொம்பிளையையோ மாப்பிள்ளையையோ நல்லாய் தெரிஞ்சால் மட்டும் தான் நான் போறனான்,” என்கிறாள் ஜானு. “பானுவுக்கு சாமத்தியச் சடங்கு வைக்கேல்லை எண்டு கவலையாம். தாய்க்கு உதுகள் ஒண்டும் விருப்பமில்லையாம்”, என்ற ஆர்த்தியிடம் “கௌரிக்கு தனக்கு சாமத்தியச் சடங்கு எண்டு ஒரே புழுகு, பெரிய லெவலா எல்லாருக்கும் சொல்லிக் கொண்டு திரிகிறா,” என்று சொல்கிறாள் ஜானு
“மனிசர் பலமாதிரி, எதிரும் புதிருமாய், ஒரு குடும்பம், எங்கடையைப் போலை வந்தமைஞ்சால் தானே பிரச்சனை,” என்ற சுமி தொடர்ந்து “குத்து விளக்குக் கொண்டு போக பன்னிரண்டு பொம்பிளைப் பிள்ளைகள் வேணும் எண்டு உம்மடை அம்மா எங்கடை அம்மாவைக் கேட்ட போது நான் எனக்கு அந்த நேரம் பீரியட் வரும் எண்டு பொய் சொன்னனான். பிறகு வயித்துக் குத்து என்று வீட்டிலை நிண்டிட்டன். என்ரை நிலைப்பாட்டை ஒருத்தரும் விளங்கிக் கொள்ள மாட்டினம். அதாலை வருத்தம், அது, இது எண்டு பொய் சொல்ல வேண்டியிருக்கு. ஆனால் நான் வராட்டில் நீர் கோவிக்கமாட்டீர் எண்டு எனக்குத் தெரியும்,” என்று சொல்கிறாள்.
“கலாச்சாரம் எண்டு சொல்லிச் சொல்லி இவை திணிக்கிறதுக்கு அளவில்லை. எனக்கு இது எல்லாத்தையும் உடைச்சுக் கொண்டு எப்ப ஓடுவன் எண்டு இருக்கு,” என்கிறேன் நான். “அக்கா சொல்லுறா, எங்கடை அம்மாவை வெளிநாடுகளுக்கு வந்து இங்கத்தையக் கலாச்சாரத்தைப் பாத்தவுடன் தங்கடை அழியப் போகுதோ எண்டு பயப்படுகினம். அதாலை தான் வலோக்காரத்துக்கு இது எங்கடை கலாச்சாரம் எண்டு எல்லாத்தையும் தங்களோடை இழுத்து வைச்சுக் கொண்டிருக்கினம் எண்டு. இங்கை இப்ப நடக்கிகிற மாதிரி அங்கை இவ்வளவு அதிகமாய் சங்கீத, நடன அரங்கேற்றங்களே நடக்கேல்லையாம்,” என விளக்கம் தருகிறாள் ஆர்த்தி.
“அங்கை குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டும் பணச்சடங்காகச் செய்ததை, இங்கை இவை போட்டி போட்டுக் கொண்டு ஒரு ஆளை மற்ற ஆள் மிஞ்சுற விதத்திலை பணத்தை அழிக்கும் சடங்கா வைக்கினம்” வெறுப்புடன் சொல்கிறேன் நான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.