1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை: எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை (மீள்பிரசுரம்)
[ காலச்சுவடு சஞ்சிகையில் வெளியான இக்கட்டுரை, ஜூலை 83 இனப்படுகொலையினை நினைவு கூரும் முகமாக நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள்-]
இலங்கையில் வாழும் 'தமிழர்கள்' எல்லோரும் தமிழர்கள் அல்லர். இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த சிலர் தமிழரல்லாதோராக மாறியிருந்தனர். பெரும்பாலும் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாதவர்கள் அவர்கள். ஆனால், சிங்கள மொழியை அந்த மொழியின் அன்றாடப் பேச்சு வழக்கில் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அவர்கள் சிங்களம் பேசினால் அவர்களைத் தமிழர் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இனக்கலவரங்களின்போது உயிர்பிழைக்க இத்தகைய ஆற்றல் ஒரு முக்கியமான தேவையாகும். மொழி, அதனுடைய தொனி, பேச்சு வழக்கு போன்ற இயல்புகள் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கக்கூடியதாக மாற்றம் பெற்றுவிடுகிற கணங்கள் அவை. தமிழரல்லாத தமிழர்களான எனது இரண்டு நண்பர்கள் ஜூலை 83இல் அந்தப் பயங்கரமான படுகொலை வாரத்தில் தப்பிப் பிழைத்தார்கள். ஒருவர் இலங்கையின் தென்பகுதி நகரமான காலியில் பிறந்து வளர்ந்தவர். காலியில் நாங்கள் பாடசாலை மாணவர்களாக இருந்தோம். இப்பொழுது அவருக்கு 53 வயது. நாங்கள் அவரை டேமியன் என்று அழைக்கலாம். டேமியன் உயர்ந்த தொழிலில் இருந்தவர். அவருடைய நண்பர்கள் பலரைப் போல அன்றி, இலங்கையை விட்டு எப்போதுமே வெளியேறாதவர். இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் எதுவும் அவருக்கு இருக்கவும் இல்லை. அவருடைய மனைவி தமிழரல்லர். டேமியனும் மனைவியும் கத்தோலிக்கர்கள். கொழும்பில், காலி வீதியில் இருந்து ஒரு கூப்பிடு தூரத்தில் இருந்தது டேமியனின் வீடு. டேமியனின் தந்தை வழிப் பெயர் தமிழ்ப் பெயராகவே இருந்தது.