கடந்த பதினைந்து ஆண்டுகளாக நண்பர்கள் பேச்சின் ஊடாக எனது நினைவில் பதிந்து விட்ட எழுத்தாளர் இமயம். 1990களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாகப் பண்பாட்டுத் தளத்தில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் சமூகம் சந்தித்தது. மேற்கத்தியத் தொடர்பால் பல புதிய இயக்கப் போக்குகளும் புதிய சிந்தனை வெளிப்பாடுகளும் தமிழ் இலக்கியத்திற்கு வந்து சேர்ந்தன. சமூகத்தின் முதற் பொருளாகப் பேசப்பட்ட பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம் அமைப்பியல், போன்ற சொல்லாடல்கள் மேடையேறி பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின. இந்தப் பேச்சுப் போக்கில் வந்தடைந்தவர் இமையம். கோவேறு கழுதைகள், ஆறுமுகம் போன்ற நாவல்களின் மூலமாகப் புதிய எதார்த்த சூழலை இலக்கியத்திற்குக் கொண்டு வந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்தார். அன்றிலிருந்து பின்தொடரும் ஒருவனாக ஆகிப்போனேன். செடல் படித்துவிட்டுக் கதைகளின் ஊற்று மூலம் குறித்த தேடலின் முடிவுக்கு வந்திருந்தேன். புத்தகத் தயாரிப்பில் எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தி வரும் கிரியா பதிப்பகம் இமையத்தின் அனைத்துப் படைப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருவதையும் கவனிக்கத் தவறியது இல்லை.
ஒரு படைப்பாளியின் படைப்பு ஊக்கம் அவனது கனிந்த இதயத்தில் இருக்கிறது. தான் காணும் மனிதனையும் அவனது வாழ்க்கைச் சிக்கல்களையும் அவனாக உணர்ந்து விழும் கண்ணீரிலும் உயிர்ப்பிலும் ஒரு படைப்பாளி உயிர் பெறுகிறான். இமையத்தின் படைப்புகளில் பயணிக்கும்போது மனிதம் நசுக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும் இமையத்தின் ஒரு துளி கண்ணீர் எனது இதயத்தை நினைப்பதைக் காணுகிறேன். தாயின் கருவறையில் மௌனித்து இருக்கின்ற குழந்தையின் உச்ச உணர்வுக்குச் சென்று விடுகிறேன். கண்கள், காதுகள், மனம் செயல்பட மறுத்து நிற்கின்றன அன்றாட வாழ்க்கைச் சூழலில் என்னை இணைத்துக் கொள்ள சில நாட்களை மௌனமாகக் கடந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. சமூகத்தின் ஒரு கண்ணியில் இருந்து விடுபட்டு விடவும் கூடாது அதே வேளையில் அதற்குப் பலியாகவும் கூடாது என்ற எண்ணம் தோன்றாமல் இருப்பதில்லை. பெத்தவனும் இதே பாதிப்பை ஏற்படுத்தியது.
பெத்தவன் நாவலாகவும் வடிவம் பெறாமல் சிறுகதை வடிவத்தையும் மீறி தன்னைக் கட்டமைத்துக் கொண்ட பனுவல். ஒரு அமர்வில் படித்து முடித்து விட்டாலும் எழுந்திருக்க மனமில்லாமல் சுமையோடு ஒவ்வொரு அப்பாவும் தன் மகளைப் பற்றி என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது.
நிலம் சார்ந்த கிராம வாழ்க்கை சாதியையும் சாதியப் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது. தொழில் சார்ந்த, அறிவு சார்ந்த நகர வாழ்க்கை வாழ்வியல் போராட்டம் சார்ந்தது, நெகிழ்ச்சியான சாதியப் பண்பாட்டைக் கொண்டது. சமூகத்தின் முக்கிய வளர்ச்சியில் கல்வி முதன்மை வகிக்கிறது. கிராமத்திலிருந்து நகரங்களை நோக்கிய கல்விச் சூழலானது கிராமச் சாதிய இறுக்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை. சாதிய இறுக்கமும் வன்முறையும் அவர்களுக்கு ஏற்புடைய ஒன்றாக இருக்கவில்லை. சாதியும் முரண்பாடுகளும் வறட்டுத்தனமான, கௌரவம் சம்பந்தமான அதிகார அடக்குமுறைக்கு ஆணிவேராக அவர்களுக்கு இருப்பதில்லை.
மனித வாழ்தல் என்ற விருப்பின் காரணமாக எந்தச் சாதியாக இருந்தாலும் பிடித்துவிட்ட ஆணும் பெண்ணும் வாழ்ந்துவிட முயலும் இயல்பான செயல்பாடுகள் அவர்களுக்கு வந்து விடுகின்றன. ஊரின் சாதியக் கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக உடன்படும் அப்பாவும் சாதியக் கட்டுப்பாடுகளைப் பற்றிய எந்த உணர்வும் இல்லாமல் சாதியக் கட்டுப்பாடுகளைப் பெரும் சுமையாகத் தனக்கு ஒவ்வாததாக என்னும் மகளின் மனப்போக்கும் நாவல் முழுவதும் காணப்படுகின்றன.
மண் சார்ந்த வாழ்க்கையில் பிற மனிதரின் உதவியும் உறவும் அடிப்படை அவசியம் என்ற வாழ்க்கைப் பாடத்தில் சாதி மேலாண்மை செலுத்தினாலும் தவமிருந்து பெற்ற ஒரே மகளைக் கௌரவக் கொலை செய்ய துணிய மறுக்கும் மனமும் சாதி வெறியில் தனது மகள் பொதுவெளியில் அவமானம் அடைந்து மரணித்து விட கூடாது என்ற தெளிவும் கொண்ட தகப்பனை நாவல் முழுவதும் காணலாம். அந்தஸ்து, கௌரவம், அவமானம், வீம்பு போன்ற அனைத்து மனித உணர்வுகளையும் தூர எறிந்துவிட்டு மகளின் வாழ்க்கை எப்படியேனும் எவருடனேனும் தொடர வேண்டும் என்ற உச்ச உணர்வில் தவிக்கும் பெத்தவன் மனதை விட்டு நீங்க மறுக்கும் ஓவியம்.
தாழ்த்தப்பட்டவனுடன் காதலித்து ஓடிவிட என்னும் மகளும் ஊராரின் பேச்சும் பெற்றவனைச் சாதி அமைப்புக்குள் கட்டிப்போட்டாலும் மகளைப் பலி கேட்கும் சாதிவெறிக்குப் பெத்தவனின் மறுப்பும் நாவலை எதார்த்தமாக்குகிறது. இறுதிவரையில் மகளுக்குத் தனது தவறு பற்றிய விழிப்பு இருக்கவே இல்லை. பெத்தவன் அவமானம் அடையும் செயலைக் கண்டு தானே தற்கொலை செய்து கொள்வதாக மகள் சொன்னாலும் பெத்தவனுக்கு இருக்கும் சாதிய மன அமைப்பு மகளுக்கு இல்லை. இங்கே அவளுக்குச் சாதி பெரும் சுமையாகவும் கட்டாகவும் மாறிவிடுகின்ற எதார்த்தத்தை உணரும்போது கல்வியின் கற்றலின் முக்கியத்துவம் விளங்குகிறது.
சாதிக் கோட்பாட்டைத் தாண்டி வாழ்ந்து பழகாத பெற்றவனும் சாதி என்ற உணர்வு சான்றிதழ் நிலையில் மட்டுமே நின்றுவிட்ட மகளின் வாழ்க்கைத் தேர்வும் சாதியின் எதார்த்தத்தைக் கேள்வி கேட்டு நிற்கின்றன. சாதியும் சாதிவெறியும் எதற்கு? சாதியின் பெயரால் உயிர் கொலைகள் நாடெங்கும் நடைபெறுவது ஏற்புடையதா? என்று ஒவ்வொரு மனிதனின் மனமும் தனக்குள் கேட்டுக் கொண்டாலும் சாதியம் ஒவ்வொரு சடங்கிலும் பண்பாட்டுச் செயல்பாடுகளிலும் பின்னிப் பிணைந்து கிடப்பதைக் காணும்போது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் அடையாளம் தேவையாகவே இருக்கிறது.
ஊராரிடம் கௌரவக் கொலைக்கு ஒத்துக்கொள்ளும் தகப்பன் மனநிலை ரீதியில் சாதியக் கோட்டைத் தாண்டி ஓட எண்ணுகிறான். ஆனால் அது அவனால் முடியவில்லை. தனது வாழ்நாளில் சாதிச் சண்டைகளைக் கொடுமைகளைக் கண்டுக் கேட்டு வளர்ந்து வந்த மன அமைப்பு தன்னளவில் சென்று சேர்கிறது. மகளின் வாழ்க்கை நன்றாக அமையவேண்டும் என்று எண்ணுகிறான். ஆனால் சாதியோடு முரண்பட விரும்பவில்லை. சாதியைப் புறக்கணித்து வாழ எண்ணி துணியவில்லை. அவனது வாழ்வு சாதிக்குள் இருந்து அழிந்து போவதைப் பற்றிய கவலையுமில்லை. ஆனால் மகளின் வாழ்க்கைக்காக அவனுக்குச் சாதியைக் கடந்து செல்ல தடை ஏதும் இல்லை. என்றாலும் தனது உயிர் பலியின் மூலமாக மகளைக் காத்துவிட எண்ணுகிறான்.
'மகளைக் கூட்டிக் கொடுத்து விட்டான்' என்று ஊரார் பேசுவார்கள் என்று எண்ணினாலும் மகளின் வாழ்க்கையும் வம்ச விருத்தியும் அவனை உந்தித் தள்ளுகின்றன. சாதி அவனுக்கு உடன்கட்டையாக மாறிவிட்ட சூழலை நன்கு உணர்ந்து கொண்டவனாக யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் மகளை விரும்பியவனோடு அனுப்பிவிட்டு தனது சாதியைக் காப்பாற்றிக் கொள்கிறான் பெத்தவன். தனது மரணம் மகளை வாழ வைக்கும் என்று எண்ணுகிறான். ஆனால் அவன் சாதியோடு போராட்டவோ எதிர்த்து நிற்கவோ துளியும் துணியவில்லை. சமூக வளர்ச்சிப் போக்கில் பல மேல் கட்டுமானங்கள் பல நேரங்களில் பயனற்றுப் போகும்போது அதனை மாற்ற துணியாமல் சுய பலியாவது தொடர்ந்து நிகழ்ந்து விடுவதாகிறது.
பெத்தவனின் மரணத்தில் சாதிய சுய அமைதி அமைந்துவிடுகிறது. சாதி அவனது மரணத்தை முன்னுதாரணமாகக் கொண்டு கதைகளைக் கட்டமைக்க விரும்புகிறது. இந்தப் போக்கில் மகளின் வாழ்க்கை சாதிவெறியில் கருகி விடாமல் கருணையும் புறக்கணிப்பும் கொண்ட மன உணர்வுகளால் ஓரங்கட்டப்படுகிறது. மனிதனைப் பலி கொடுப்பதன் மூலமாகச் சாதி காலம் காலமாகப் பெரும் பீதியை ஏற்படுத்தி வாழ்க்கை நடைமுறையில் ஒரு சாதியப் பண்பாட்டு ஒழுங்கைக் கதைகளாகவும் பயத்தின் உச்சங்களாகவும் ஆழ்மன பதிவாக்கி தனது சாதிய வாழ்க்கையை நீட்டிக்கிறது. இதில் பெத்தவனும் தன்னை இணைத்துக் கொள்கிறான்.
மரணங்கள் சாதியை ஒழிப்பதற்குப் பதிலாக மேலும் வலுவான கட்டமைப்பைக் கட்டியெழுப்ப பயன்படுத்தப்படுவதை வரலாறு முழுவதும் காண்கிறோம். ஒவ்வொரு சாதிய மரணமும் பத்து ஆண்டுகள் முதல் ஒரு தலைமுறை வரை சாதியை உயிர்ப்பிக்கின்றது. சாதி அமைப்புக்கும் அதிகார அமைப்புக்கும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து தேவையாக இருக்கின்றன. நீண்ட நாகரீக மனித வாழ்க்கைக்குப் பிறகும் சாதி தனிமனித வாழ்க்கை விருப்பங்களில் மேலாண்மை செய்து வருவதை எண்ணும்போது சாதிய நாட்டாமை என்ற கருத்தியலில் ஏதோ ஒரு மனிதன் வந்து நிற்கிறான். இங்கே மனிதனுக்கு மனிதனே முரண்பாடாகவும் எதிர் நிலையாகவும் இருப்பதில் சாதி என்ற கருத்தியலுக்கு மனிதனே உயிர் கொடுத்து உலவ விடுவதை அறியும்போது, சமூகப் பொருளாதார அரசியல் சூழலில் இதன் இருப்பும் தேவையும் மீண்டும் மீண்டும் சிலரால் உயிர்ப்பிக்கபடுவதும் ஆனால் மனிதனுக்குத் தேவையற்ற பெரும் சுமையாக இது இருந்து வருவதும் ஒவ்வொரு பின்நவீனத்துவ, தலித்திய பனுவல்களைப் படிக்கும்போது உணர முடிகிறது.
மனிதனும் மனித வாழ்க்கையும் மனித பண்பாடும் சமூக நிலையும் காலந்தோறும் மாறும் போதும் சில அமைப்புகள் மாற மறுத்து மனிதனைப் பலி கேட்கும் அவலமும் இதற்கு மற்றொரு மனிதனே துணை போவதும் இந்த நாவலில் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. மனித பலிகள் சாதிய பசிக்கு. இன்னும் இதற்கு எத்தனை பெற்றவனும் மகள்களும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணும் போது இரவுகள் ரகசியங்களின் கூடங்களாக ஆகின்றன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.