நொடிந்து போவதற்கும் வீழ்ந்து போவதற்கும் விருப்பமாக இருந்தால் தமிழில் இதழ் ஒன்றை தொடங்கலாம் என்பது முதுமொழி. ஐம்பது அறுபது ஆண்டுகளின் தமிழ் இதழ்களை திரட்டும் போது இது எதற்கென விளங்கும்.
எழுத்து, சரஸ்வதி, மணிககொடி போன்ற தொடக்க கால இலக்கிய இதழ்கள் ஒரு காலக்கட்டம். தீபம், கணையாளி, சுபமங்களா, தீராநதி, காலச்சுவடி ஆகிய அடுத்த கட்டம்.
கண்ணதாசன், கவிதாசரண், யுகமாயினி, செம்மலர், தாமரை, ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சாவி, குங்குமம், இதயம் பேசுகிறது. கல்கண்டு, கலைமகள், மஞ்சரி, கலைக்கதிர் ஆகியவற்றை அறுபது எழுபதுகளின் கால வரிசையில் சேர்க்கலாம்.
தேன் மழை, அலிபாபா, புதிய பார்வை, முங்காரி, குமுதம் நெஞ்சம், நூதன விடியல், மன ஓசை, கலியுகம், கோடங்கி மகளிர் குரல், மனிதநேய மடல், சமவெளி, நவீன விருட்சம், சோலை குயில், முல்லைச் சரம், திசை எட்டும், காவ்யா தமிழ், முகம் போன்றவற்றை ஒரு தொகுப்பாக்கலாம்.
இந்த மூன்று வரிசைகளைத் தவிர சிறுவர் இதழ்கள் கண்ணன், அணில், வாண்டு மாமா, டும்டும் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
தென்மொழி, தமிழ்ப் பாவை, குயில், தமிழ்ச்சிட்டு, முதல் மொழி, தமிழ்ப் பொழில், அறிவு கடல், தமிழ்நிலம், அறிவு, கைக்காட்டி, குறளியம், தமிழம், பாவை, தமிழ்ப்பாவை, பூஞ்சோலை, மாணாக்கன், முப்பால் ஒளி, குறள் நெறி, இயற்றமிழ், தமிழோசை, தமிழ்த்தேன், தமிழியக்கம், தீச்சுடர், எழுச்சி, வானம்பாடி, வேந்தம், வல்லமை, தமிழ்ப் பறை, வண்ணசிறகு, நெய்தல், பொன்னி, வலம்புரி, தமிழ் நிலம், தமிழ்நாடு, நெறிதமிழ், மறுமொழி, எழு கதிர், வெல்லும் தூய தமிழ், அறிவியக்கம் போன்ற தனித்தமிழ் சஞ்சிகைகள்.
புதுவை, மும்பை, பெங்களூர் போன்ற ஏனைய மாநிலங்களிலிருந்து வெளி வந்துள்ள திங்கள், காலாண்டிதழ்கள் பட்டியலாக்கப்படவில்லை.
இந்த எண்ணிக்கையில் வேறு மொழிகளின் இதழ்கள் கிடைக்குமா என்பது ஐயத்துக்குரியது. பல குறிப்பிடப்பட்ட பட்டியல்களில் சில விடப்பட்டிருக்கலாம்.
இவற்றுள் பல இதழ்கள் குறிப்பாக சிற்றிதழ்கள் படிக்க படிக்க இலக்கிய தரமான படைப்புகளை வெளியிட்டு மறைந்து போயின. அவற்றை மதிப்பீடு செய்தால் மேலும் பெரியதொரு தொகுப்பு வெளிவர கூடும்.
கனவு
கனவு எண்பது இயற்கை. பகல் கனவு காண்பது எளிதும் கூட. பகல் கனவு வெற்றி பெறுவதற்கு உழைப்பு இன்றியமையாதது. அந்தத் தடத்தில் தனத பயணத்தை முன் எடுத்து செல்லும் நண்பர் சுப்ரபாரதிமணியன் போற்றுதலுக்கு உரியவர்.
இதழ்ப்பணி தொடர வேண்டுமெனில் விளம்பரம் தவிர்க்க முடியாதது. விளம்பர தேடுதலின்றி தனி ஒருவர் இதழைக் கொண்டு வருவது இமாலயப் பணி என்றால் மிகையன்று. இதழ்ப் பொறுப்பேற்று நடத்தி வருபவர்களுக்கு, நடத்தியவர்களுக்கு அதன் சுமை தெரியும்.
முப்பத்தைந்து ஆண்டுகளாக நவீன இலக்கிய தாக்கத்துடன் இந்த இதழ் வெளிவந்து கொண்டுள்ளது. பத்துடன் ஒன்றாக பதினொன்றாக இருந்து விடாமல் இதழுக்குரிய சிறப்பு அம்சங்கள் தாங்கி வெளியிடுவது பாராட்டுக்குரியது.
நூல் வெளியீட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றிருப்பவர் காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள். அவருடைய வெளியீட்டில் கனவு தொகுப்பு வெளி வந்திருப்பது பெருமைக்குரியது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கனவு இதழில் திரைப்படங்களின் தொடர் வெளிவந்ததும் நினைவுகூரத்தக்கது. உலக தரம் வாய்ந்த சினிமாக்களை அறிமுகப்படுத்திய பெருமையும் கனவு நமக்குண்டு. தன்னை விளம்பரம் படுத்திக் கொள்ளாமலேயே சிறுகதை, கவிதை போட்டிகள் நடத்துகிறது இந்த இதழ். கடந்த ஆண்டில் கவிதை, சிறுகதை போட்டியிலும் ஓசூரைச் சேர்ந்த கருமலைத் தமிழாழன் கவிதைக்கும், பெங்களூரைச் சேர்ந்த ஜெ வெங்கட்ராமன், இராம இளங்கோவன் இருவருக்கும் சிறுகதைக்கான சிறப்பு செய்தார். திருப்பூரிலிருந்து பெங்களூர் வந்து மேலே குறிப்பிட்ட மூவருக்கும் சிறப்புப் பரிசும் கொடுத்ததற்கு காரணமாக கனவு இதழ் இருந்தது. இது மேலும் தொடரும் என்று தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார் கனவு இதழின் ஆசிரியரான சுப்ரபாரதிமணியன்.
‘நவீன கன்னடக் கவிதைகள்’ பாவண்ணன் மொழி பெயர்த்திருந்தார். 1992ஆம் ஆண்டில் கனவு இதழின் முப்பத்தேழு கவிதைகளை சுப்ரபாரதி மணியன் வெளியிட்டத இங்கு குறிப்பிடுவது சாலச் சிறந்தது எனக் கருதுகிறேன்.
கனவு இதழில் வெளியாகும் சிறுகதைகள் நவீனத்துவம் பின் நவீனத்துவம் சார்ந்த சார்ந்து இருப்பதும் பாராட்டக்கூடிய தனியொரு மாந்தனாக இலக்கிய படைப்புகளை எழுதி வருகிற சுப்ரபாரதிமணியன் புதிய எழுத்தார்களை வாசர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் பாராட்டுக்குரியது.
வணிக இதழ்களுக்கு மாற்றாக இலக்கிய தரமான படைப்புகளை வெளியிடுவதில் சிற்றிதழ்கள் மட்டுமே அன்று முதல் இன்று வரையில் தன்னை இனங்காட்டி கொள்கின்றன. சுப்ரபாரதிமணியனின் இலக்கிய தாகம் வருங்காலத்தில் கனவு இதழ் மூலம் மேலும் தீர்த்து வைக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்னாரின் முயற்சிக்கு உறுதியாக இருப்பதே அவருக்கு செய்கிற நன்றி கடனாகும் என்பதை படைப்பாளர்களும், வாசகர்களும் உணர்வார்கள் என நம்புகிறேன்.