கலை, இலக்கியத்தின் பல்வகை வடிவங்களிலும் பங்களித்து வருபவரும் கவிஞரும், சமூக அரசியற் செயற்பாட்டாளருமான வ.ஐ.ச.ஜெயபாலனுடனான நேர்காணலொன்று 'நடு' இணைய இதழில் வெளியாகியுள்ளது. 'நடு; இணையை இதழின் ஆசிரியரான கோமகன், ஏப்ரில் 2019இல் நடத்திய நேர்காணலிது.
நேர்காணலுக்கான இணைப்பு: https://naduweb.com/?p=17475
இந்நேர்காணலில் ஜெயபாலன் கவிதை, ஈழத்தமிழர்களின் அரசியல், புகலிடத்தமிழர்களின் அரசியல், தனது அரசியல் அனுபவங்கள், தனது ஆரம்ப கால வாழ்பனுவங்கள், அவரது சினிமா அனுபவங்கள் எனப் பல்வகை அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
இவர் என்றுமே மதில் மேல் பூனையாக இருந்ததில்லை. தான் நம்பியதை, நம்புவதை எப்பொழுதும் எவ்விதத்தயக்கமும் இல்லாமல் எடுத்துரைக்க, இடித்துரைக்கத் தவறுவதில்லை. அது இவர் மீதான என் அபிமானத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று.
இவருடனான எனது தொடர்புக்கு நீண்ட வரலாறுண்டு. அடிக்கடி சந்தித்திராத போதும் , சந்தித்த சந்திப்புகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. 81/82 காலப்பகுதியில் இவரை யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாகச் சந்தித்தேன். இரண்டு காரணங்கள்: ஒன்று அப்பொழுது நான் என் பட்டப்படிப்புக்காக ஈடுபட்டிருந்த 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' ஆய்வுக்காக, இவரிடம் 'யாழ்ப்பாண வைபவமாலை' இருப்பதை அறிந்து அதனைப்பெறுவது முதற் காரணம். இரண்டாவது காரணம் - அப்பொழுது நான் மொறட்டுவைத் தமிழ்ச் சங்கத்தில் இதழாசிரியராகவிருந்தேன். தமிழ்ச் சங்கம் வெளியிட்டு வந்த ஆண்டிதழான 'நுட்பம்' சஞ்சிகைக்காக கவிதையொன்றினைப் பெறுவது. சஞ்சிகைக்காக அப்போது இவர் தந்த கவிதைதான் 'கள்ளிப்பலகையும் கண்ணீர்த்துளிகளும்'. எனக்கு மிகவும் பிடித்த இவரது கவிதை அதுவேயென்பேன். அதில் வரும் பின்வரும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை:
* "ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்
கையா லாகாத கோழையைப் போல
கொடுமையும் சூதும் நிறைந்த உலகை
சகித்தும் ரசித்தும் பாவனை செய்தும்
சான்றோன் என்று மாலைகள் சூட
நானும் எனது நண்பரும் விரும்போம்"
* தடைகள் சீனப் பெரு மதிலாயினும்
தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால்
ஆர்வமாய்ச் செய்வேன் அங்குரார்ப்பணம்.
தடைகளைத் தகர்த்தும் விலக்கியும்
தொடர்ந்து
அதிமானிடனாய் முன்சென்றிடுவோம்.
விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி
எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார். "
* "குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்
பெறுமதி கூடிய காலணி இலங்கும்
கால்களைத் தேடி முத்தம் கொடுப்பர்.
பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால்
உலகம் அவர்களைக் கெளரவம் செய்யும்.
வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்
வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்
எங்களுக்காக இருக்கவே செய்யும்."
முழுக்கவிதையையும் இப்பதிவின் இறுதியில் சந்தித்துள்ளேன்.
அச்சந்திப்பில் கவிஞரிடமிருந்து யாழ்ப்பாண வைபவமாலை நூலையும் , நுட்பம் சஞ்சிகைக்கான கவிதையையும் பெற முடிந்ததுடன், அடுத்துச் சில நாட்கள் சைக்கிளில் யாழ் நகரில் சுற்றித்திரியவும் முடிந்தது.
பின்னர் இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கையில் சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது இவரது ஆங்கிலக் கட்டுரைகள் லங்கா கார்டியன் சஞ்சிகையில் வெளியாகிக்கொண்டிருந்தன. அச்சந்திப்பொன்றில் இறங்க வேண்டிய இடத்தையும் தவறவிட்டு விட்டு, என்னுடன் ஆர்மர் சந்தி வரை உரையாடிக்கொண்டே வந்தார். வார்த்தைக்கு வார்த்தை 'ராசா' என்று கூறுவது அப்போது இவரது வழக்கமாகவிருந்தது. அச்சந்திப்பு இன்னும் பசுமையாக நினைவிலுள்ளது.
மேற்படி 'நடு' இணைய இதழில் வெளியான ஜெயபாலனுடனான நேர்காணல் இவரைப்பற்றிய நினைவுகளை அசை போட வைத்துவிட்டது.
'80/81 வெளியான நுட்பம் சஞ்சிகையில் வெளியான கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதை.
கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
முரட்டு மேதை என்பர் மேலோர்
'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்
கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்
ஓயாது துரத்தும் சவக்குழி விழுங்குமுன்
ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்
கையா லாகாத கோழையைப் போல
கொடுமையும் சூதும் நிறைந்த உலகை
சகித்தும் ரசித்தும் பாவனை செய்தும்
சான்றோன் என்று மாலைகள் சூட
நானும் எனது நண்பரும் விரும்போம்.
வீணையோடும் தூரிகையோடும்
மூலைமட்டம் ஸ்டெதஸ்கோப் அரிவாள்
சம்மட்டி போன்றவை பழகிப் போன
கைகளை உயர்த்தி நெஞ்சுகள் நிமிர்த்தி
எனது தோழர் புடை சூழ்வார்கள்.
பொன்னாய் அழகு பொழியினும் விலங்கை
அப்பிய மலமாய் அருவறுத் தெறிவோம்.
வெடி மருந்துகள் தோய்ந்த எம்நாவு
ஓய்ந்திருக்காது.
தடைகள் சீனப் பெரு மதிலாயினும்
தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால்
ஆர்வமாய்ச் செய்வேன் அங்குரார்ப்பணம்.
தடைகளைத் தகர்த்தும் விலக்கியும்
தொடர்ந்து
அதிமானிடனாய் முன்சென்றிடுவோம்.
விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி
எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார்.
கடலின் மணலை எண்ணித் தீர்ப்பினும்
மானிடர் எமது வம்சக் கொடியை
சவக்குழி உனக்கு
விழுங்கித் தீர்த்திடல் முடியுமோ?
விலங்கும் சிறையும் வளைத்திடல் கூடுமோ?
விடுதலை பெற்ற தோழியரோடு
கட்டாந் தரையின் வாழ்வே உவப்பு.
பெரிய இடத்துச் சீமை நாய்களாய்
கார்ப்பவனி வரும் இல்லறக் கனவில்
எமது தோழர் தோழியர் தேயார்.
கொடிய உலகம் சான்றோன் என்னவும்
இளம் சீமாட்டிகள் இனியவன் என்னவும்
குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்
பெறுமதி கூடிய காலணி இலங்கும்
கால்களைத் தேடி முத்தம் கொடுப்பர்.
பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால்
உலகம் அவர்களைக் கெளரவம் செய்யும்.
வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்
வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்
எங்களுக்காக இருக்கவே செய்யும்.