‘பிம்பங்கள் வழியே’ எனும் அமைப்பின் ஏற்பாட்டிலான, ‘ஆளுமை பற்றிய ஓர் உரையாடல்’ என்ற தொடரில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் அமரர் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்கள் பற்றிய இன்றைய இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்!
ஒரு தலைவன் தாம் சார்ந்த மக்களுக்கு நல்லதைச் சொல்பவனாக இருக்க வேண்டும்; சொன்ன நல்லதைச் செய்பவனாக இருக்கவும் வேண்டும். அவ்வாறு இல்லாதவன், ஒரு சிறந்த தலைவனாக இருக்கத் தகுதியற்றவன். நல்லனவற்றைச் சொன்னது மட்டுமன்றி, தாம் சொன்ன நல்லனவற்றை நடைமுறைப்படுத்தி, வாழ்ந்து காட்டிய ஒரு தலைமகனை நினைவு கூருவதற்கென்று நாங்கள் இங்கு ஒன்று கூடியிருக்கின்றோம்.
சராசரி மனிதர்கள் போலன்றி, மாறுபட்ட விதத்தில் சிந்திக்கவும் செயற்படவும் துணிச்சல் பெற்றவர்களால்தான், மனித முன்னேற்றம் சாத்தியமாகின்றது. அத்தகைய சிந்தனைத் தெளிவும், செயற் திறனும் கொண்டவராக வாழ்ந்துவந்த பிரேம்ஜி அவர்கள், சமூகம், இலக்கியம், அரசியல் ஆகிய முக்கிய தளங்களில் ஆற்றிய பணிகள் குறித்துக் கதைப்பதற்கு நிறைய விடயங்கள் உண்டு. ஆனால், இங்கு தரப்பட்ட நேரத்தை மனதிற்கொண்டு எனது கருத்துகளை “பிரேம்ஜியும் நானும்” என மிகச் சிக்கனமாகவும், “பிரேம்ஜியும் அவரது அரசியல் நிலைப்பாடும்” எனச் சற்றே விரிவாகவும் வகைப்படுத்தி உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன்.
பிரேம்ஜி என்றே பெரிதும் அறியப்பட்டு வந்தவரான ஞானசுந்தரம் அவர்களை நான் ஏற்கனவே அறிந்திருந்த போதிலும், 1975ஆம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின்போது தான் முதன் முதலாக நேரில் கண்டேன். நன்கு திட்டமிடப்பட்டு அன்றைய தினம் விளைவிக்கப்பட்ட தடையூறுகளைத் தாண்டிக்கடந்த மாநாட்டு ஏற்பாடுகள், துணிச்சலான செயற்பாடுகள், திடமும் தீட்ஷண்யமும் மிகுந்த உரையாடல்கள், இனத்துவ ஒருமைப்பாட்டை இலக்காகக்கொண்டு முன்யோசனையுடன் சமர்ப்பிக்கப்பட்ட 12 அம்சத் திட்டங்கள் போன்றன ஊடாக பிரேம்ஜி என்ற ஆளுமையின் பிரமாண்டத்தையும், அவர் ஒரு தனித்தன்மை வாய்ந்த தலைசிறந்த மனிதர் என்ற உண்மையையும் அன்று நான் நேரில் கண்டுகொண்டேன்.
பின்னர் 70களின் பிற்பகுதியில் நான் பேராதனையில் வாழ்ந்து வந்த காலத்தில், கொழும்பில் சோவியத் தூதரகச் செய்திப் பிரிவில் நண்பர் ராஜஸ்ரீகாந்தனைச் சந்திக்கச் சென்றுவந்த சந்தர்ப்பங்களில், அங்கு பணியாற்றிவந்த பிரேம்ஜியுடனும் எழுத்தாளர் மு. கனகராஜனுடனும் ஏற்பட்ட அறிமுகம், எங்களை நண்பர்கள் ஆக்கிக்கொண்டது. எண்பதுகளின் ஆரம்பத்தில் கொழும்பில் மிக எளிமையான முறையில் நடந்தேறிய எனது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாள நண்பர்களுள் பிரேம்ஜி முக்கியமானவர்.
83 ஜூலை இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு, சிதறு தேங்காய்களெனக் குடும்பத்தினர் திக்குத் திக்காகத் தூக்கி வீசப்பட்டிருந்த நிலையில், சுமார் ஒருவருடம் தன்னந்தனியனாக விரக்தியோடு கொழும்பில் வாழ்துவந்த எனது மனதில் தைரியத்தை விதைத்தவர், பிரேம்ஜி.
அனேகமாகத் தினமும் மாலை வேளைகளில் என்னைத் தேடிவந்து, மணிக்கணக்காக இருந்து, அவர் எனக்கு வழங்கிய ஆறுதல்கள், ஆலோசனைகள், வாழ்வியல் அறிவுரைகள், என்பவற்றுடன் சமூக, அரசியல், இலக்கிய, அனுபவங்கள் என்பன விலைமதிப்பற்றவை.
84இல் நாட்டைவிட்டு வெளியேறி நான் கனடாவில் பரதேசியானேன். 90களின் பிற்பகுதியில் ஏற்கனவே கனடா வந்து, வாழ்க்கையை ஆரம்பித்திருந்த தமது இரண்டு பிள்ளைகளுடன் இணைந்து கொள்வதற்கென, பிரேம்ஜியும் தமது துணைவியாருடன், இந்த பனிவயற்காடு வந்து சேர்ந்தார். எமக்கிடையிலான உறவுகளும் தொடர்புகளும் புத்துயிர் பெற்று, புதிய பரிமாணத்தில் தொடர்ந்தன. கனடாவில் சுமார் 14/15 வருடங்களாக அவர் எனக்கு வெறுமனே பிரேம்ஜியாக இல்லாமல் – மனதால் நெருக்கமும் இணக்கமும் கொண்ட நண்பராகவும், நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும், ஒரு ஞானகுருவாகவும் திகழ்ந்து வந்தார்.
ஓர்மம் மிக்கதோர் இயக்கத்தையே உருவாக்கிய அவரது நூற்றுக்கணக்கான கட்டுரைகளுள், காணாமற் போனவை தவிர, கைக்கெட்டிய ஒருசிலவற்றைத் தொகுத்து, இரவு பகலாக விழித்திருந்து - எழுத்தமைப்பு, அச்சமைப்பு, வடிவமைப்பு, ஒப்புநோக்கல், செவ்விதாக்கம் செய்தல் என்பவற்றிற்கென - எனது நேரத்தையும் உழைப்பையும் முதலீடு செய்து - எந்தவித பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல் – ‘பிரேம்ஜி கட்டுரைகள்’ என்ற காத்திரமான நூலை, எனது ‘நான்காவது பரிமாணம்’ வெளியீடாகப் பதிப்பேற்றி, 2009 செப்டம்பர் 27இல் கனடா, ஸ்காபரோ நகரில் அதற்கான வெளியீட்டு விழாவையும் பொறுப்பேற்றுச் சிறப்பாக நிகழ்த்திவைத்த மனத்திருப்தியும் மனமகிழ்ச்சியும் எனக்குண்டு.
2014 மாசி மாதம் 7ஆம் நாள், பிரேம்ஜி இந்த மண்ணை விட்டுப் பிரிந்தபோது அத்துயரச் செய்தியை உலகெல்லாம் பரவச் செய்து, அவரது குடும்பத்தவர்களது வேண்டுதலுக்கிணங்க, மரணச் சடங்கு மண்டப நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி, நண்பர்கள், உறவினர்கள், எழுத்தாளர்கள், அபிமானிகள் பலரையும் அஞ்சலியுரை நிகழ்த்த ஏற்பாடுசெய்தேன். உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்துசேர்ந்த அனுதாபச் செய்திகளை மண்டபத்தில் வாசித்துக் காண்பித்து, கனத்த இதயத்துடன் அவரை வழியனுப்பி வைத்த சம்பவங்கள் இன்னமும் எனது மனதில் ஆழப் பதிந்து கிடக்கின்றன. When an old, wise man dies, a library burns to the ground என்ற ஆபிரிக்கப் பழமொழியொன்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை - இழப்பின் பாதிப்பை எனக்கு உணர்த்திய நிகழ்வு, அவரது மறைவு!
அதே மாதம் 17ஆம் திகதி கனடா, ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் அஞ்சலிக்கூட்டம் ஒன்றை மறைந்த அதிபர் கனகசபாபதி அவர்களது தலைமையில் ஏற்பாடு செய்தேன். பேராசிரியர்களான அ. சண்முகதாஸ், நா. சுப்பிரமணியன், எழுத்தாளர் Tam சிவதாசன் ஆகியோர் சிறப்புரைகளையும், மேலும் பலர் அஞ்சலி உரைகளையும் நிகழ்த்தி, பிரேம்ஜி அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு வழிவகுத்த அன்றைய கூட்டம், ஓர் அஞ்சலி நிகழ்ச்சி என்பதற்கும் மேலாக, ஒரு அருமந்த இலக்கிய நிகழ்ச்சியாகவும் அமைந்திருந்ததாகப் பலரும் கூறிப் பாராட்டிச் சென்றமையை இப்போது எண்ணிப் பார்க்கின்றேன்.
வரலாற்று உண்மகள் மறைக்கடிக்கப்படாமல் நேர்மையாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதற்காகவும் - தனிப்பட்டவகையில் பிரேம்ஜிக்கும் எனக்கும் இடையிலான, சம்பிரதாயமேதுமற்ற அன்பு, மரியாதை காரணமாக என்னால் செய்து முடிக்கப்பட்ட தார்மீகக் கடமைகளுள், ஒருசில இவை, என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும் என்பதற்காகவும் மட்டுமே இங்கு இவற்றை வெளிப்படுத்துகின்றேனே தவிர, நிச்சயமாக சுய விளம்பரத்துக்கோ, புகழுக்கோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டு, என்னுரையின் முக்கிய பகுதிக்குச் செல்ல விழைகின்றேன்.
உலகளாவிய மனிதாபிமானம், தமது சொந்த நாடு, தமது நாட்டு மக்கள் சமூகம், தமது இனம், தமது மொழி என்பன மீதான பற்றுதல் என்ற வரிசைக் கிரமத்தில் முன்னுரிமை கொடுத்து வாழ்ந்துவந்த பிரேம்ஜி, சமூகப் பணிக்கு அரசியலே உகந்த ஊடகம் என்ற சிந்தனைத் தெளிவினை, தமது சிறுபராயத்திலிருந்தே பெற்றுக் கொண்டவர்.
அதன்பொருட்டு, தமக்கென வரித்துக்கொண்ட மார்க்சிய சித்தாந்தத்தில் அன்று தொட்டு இறுதிவரை மிகத் தெளிவான, உறுதியான, நம்பிக்கையைக் கொண்டிருந்தவர்; அந்த மார்க்சிய விஞ்ஞானத்தின் ஊடாகவே அரசியல், சமூக, பொருளாதார, கலை இலக்கியங்களை அணுகும் வழிமுறையினைக் கைக்கொண்டு வந்தவர்.
சுதந்திரம், சமத்தவம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்கள்மேல் கட்டி எழுப்பப்படும் போதுதான், ஒரு சமதர்ம சமூகம் சாத்தியமாகும் என்றும், இந்த உன்னதமான 3 அம்சங்களின் உச்சப் பலாபலன்களை பூரணமாக அனுபவிப்பதே சமதர்மக் கோட்பாட்டின் இறுதி இலட்சியம் என்றும், கார்ல் மார்க்ஸ் கண்ட கனவினால் கவரப்பட்டவர்.
கார்ல் மார்க்ஸ் வரைந்து காட்டிய, Each for all ; all for each எனும் மானிட நேயத்தின் பாற்பட்ட தத்துவத்தில் ஊன்றிய ஒரு சமூகக் கோட்பாட்டு உருவச் சித்திரத்தால் ஆகர்ஷிக்கப்பட்டவர்.
மேலும், A man can be free, without being great; but no man can be great, without being free என்ற, உலகமகா கவிஞன் கலீல் ஜிப்ரானின் வாக்கினை, வேதமாக நம்பியவர்.
இதனடிப்படையில், சுரண்டலும், அனைத்து வடிவிலான சமூக ஒடுக்குமுறைகளும் அற்ற, சமதர்ம சமுதாயம் ஒன்று தோன்றும்வரை, மானுடர் மத்தியிலுள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கும் பாகுபாடுகளுக்கும் முற்றுப் புள்ளி இட்டுவிட முடியாது, என்பதை உணர்ந்து வைத்திருந்தவர். இதேவேளை, சுரண்டலும் ஒடுக்குமுறையும் - இவற்றை அடிப்படையாகக்கொண்ட சமூக அமைப்பும், உலக வியாபிதாமானவை என்பதனாலும், ஆகவே இவற்றை ஒழிப்பதற்கான இயக்கமும், போராட்டமும் அனைத்துலக ரீதியிலான அகல்விரிவு கொண்டதாக அமையவேண்டும் என்பதனாலும், அவர் உலகளாவிய சோஷலிஸ அணியுடன் தம்மை இணைத்துக்கொண்டார்.
ஆனால், துரதிஷ்டவசமாக உலகளாவிய ரீதியில் இந்த சமதர்மக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்த முன்வந்த - ஸ்ராலின் முதற்கொண்டு, கொர்பெச்சேவ் வரையிலான சோவியத் அரசியல் தலைமைகளின், தூரநோக்கற்ற வரட்டுத்தனமான வழிமுறைகளால், கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் சோஷலிசம் துவம்சம் செய்யப்பட்டது. சோவியத் யூனியன் உடைந்து சிதறிய பின்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இனவாதமே முனைப்பான சக்தியாக ஆதிக்கம் பெற்றது. இது ஏனைய உலக நாடுகளுக்கும், கண்ணுக்குப் புலப்படாத புற்றுநோயாக, பின்னர் பற்றிப் பரவலாயிற்று. இந்த இனவாதத்தின் தத்துப் பிள்ளையான தேசியவாதம், இந்நாடுகள் பலவற்றில், அரசியல் எரிபொருளாக ஊடுபரவியிருந்து, தீப்பற்றி எரிந்தமையையும், அதன் கெடுதிகளையும் கொடுமைகளையும் பிரேம்ஜி தம் கண்முன்னே கண்டறிந்துகொண்டவர்.
இந்நிலையிலும், சோஷலிஸ யதார்த்த வாதத்தைத் தமது விருப்புக்குரிய - நம்பிக்கைக்குரிய சித்தாந்தமாக முன்வைத்து, தாம் செயற்பட்டமை முற்றிலும் சரியானதே என்று அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.
“எமது இறுதி இலட்சியமாக, நாம் வைக்கும் சோஷலிஸ யதார்த்த வாதமும், அது மூர்த்திகரித்து நிற்கும் சித்தாந்தமும், இன்று பின்போதலையும் விழுக்காட்டையும் அடைந்துள்ளது என்ற யதார்த்தத்தை நாம் பார்க்கின்றோம். ஆனால் ஒருவகைப் பரீட்சார்த்தம் தோல்வியைச் சந்தித்தது என்பதால், அச்சித்தாந்தமோ, அச்சமுதாய இலட்சியமோ தோற்றுவிட்டதாக நாம் கருதவில்லை. மாறாக, அது தனது பழைய தத்துவத்தை, நடைமுறைத் தவறுகளை திருத்திக்கொண்டு, மீண்டும் வெற்றிகரமாக முன்னேறும் என்றே நாம் நம்புகின்றோம்” எனக் கூறி வந்தவர்.
இவ்வாறாக, பொதுவுடமை ஒரு விஞ்ஞானமென்றும், அது ஒருபோதும் தோற்றுப் போவதில்லையென்றும், பரிபூரணமாக நம்பிய பிரேம்ஜி, அதன் வழியாகவே மனுக்குலத்திற்கு இறுதி விமோசனம் கிட்டும் என்று திடமாக நம்பியிருந்தவர். மார்க்ஸியத்தை வெறுமனே ஓர் அரசியல் கோட்பாடாக மட்டும் கருதி, அதன்வழி சென்று வீழ்ச்சியடைந்த அரசுகளையும் நாடுகளையும் நினைந்து விசனப்படுவதை விடுத்து, அதனை ஒரு சமூகக் கோட்பாடாக உற்று நோக்குமிடத்து, அதன் எதிர்கால நடைமுறைச் சாத்தியப்பாடுகளையும் பலாபலன்களையும் எளிதில் இனங்காண முடியும் என்ற நம்பிக்கை பிரேம்ஜியின் மனதில் ஆழப் பதிந்திருந்தது.
இனி, தமது நாடு குறித்த, அவரது அரசியல் நிலைப்பாட்டினை சற்றே உற்று நோக்குவோமாயின் –
நமது நாட்டில், 1949ஆம் ஆண்டு, தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்து, பின்னர் அலை அலையாக இன்னல்கள் பல, தமிழ் சிறுபான்மை இனத்தவரைத் தொடர்ந்து வந்தன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தே அவர்களை, தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளின. இந்தப் போராட்டங்கள், காலத்திற்குக் காலம் வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொண்டிருக்கையில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் தனக்கேயான, ஒரு தனித்துவமான பாதையைக் கைக்கொண்டு, தமிழினத்தின் சுபீட்ஷத்திற்காகப் பாடுபட்டது.
“நாம் தமிழ்த் தேசியத்தை வரவேற்றிருக்கின்றோம். தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டபோதும் - பறிக்கப்பட்டபோதும் அதை எதிர்த்துக் கடுமையான, உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
அது மட்டுமல்ல, தமிழ்த் தேசிய இனம் தனது ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கப் போராடவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளோம்.
அதேவேளை, தமிழ்த் தேசியம் ஒரு குறுகிய இனவாதமாக மாற்றப்படல் ஆகாதென்றும் - நாட்டின் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும், சுரண்டப்பட்ட மக்களும், ஒடுக்கு முறையை எதிர்த்து நடத்தும் தேசிய வியாபிதமான போராட்டங்களுடன், தமிழ் மக்கள் தமது உரிமைக்காக நடத்தும் போராட்டத்தை இணைத்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், தனியே இலங்கையிலுள்ள ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுடன் மட்டுமல்ல, உலகு முழுவதிலுமுள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விமோசனப் போராட்டங்களுடனும் இணைந்து நிற்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளோம்” என, பிரேம்ஜி பகிரங்கமாகக் கூறியும் எழுதியும் வந்திருக்கின்றார்.
தமிழ்த் தேசிய இனம் தனது பிரதேசத்தில், தனது விவகாரங்களை, தனது அபிலாஷைகளுக்கு ஏற்ப, நிறைவு செய்வதற்கான 'அரசியல் பொறியமைவாக' மாநில சுயாட்சியை ஊருவாக்குவதே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மார்க்கமென 75இல் இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்வைத்த 12 அம்சத் திட்டம் தெரிவித்தது.
தேசிய இனப் பிரச்சினைக்கு, முதலில் ஒரு ஜனநாயகத் தீர்வும், பின்னர் ஓர் உயர் நிலைத் தீர்வும் காண்பதே, அந்த மாநாட்டின் பிரதான இலக்காகவும் இலட்சியமாகவும் இருந்தது. அம்மாநாடு பற்றி அவர் மேலும் குறிப்பிடும்போது - 'அன்றைய காலகட்டத்தில் வரலாற்றுத் தேவையாக இருந்த தேசிய ஒருமைப்பாடு என்ற சுலோகத்தை, மாநாட்டில் நாம் முன்வைத்த போதிலும், அதன் மையப் பொருளாகவும் இலக்காகவும் இருந்தது, தமிழர் பிரச்சினைக்கான ஜனநாயகத் தீர்வே' என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.
'இந்த நாட்டிலுள்ள தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு, அதற்காக அவர்கள் நடத்தும் நியாயமான போராட்டங்களை ஆதரிப்பதன் மூலமே, ஏனைய ஒவ்வொரு தேசிய இனத்தினதும் கலை, கலாசாரம், மொழி, பொருளாதார வளர்ச்சி என்பவற்றிற்கு உத்தரவாதம் வழங்க முடியும்' எனவும் அவர் கூறி வந்திருக்கின்றார். தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக, பிரேம்ஜி சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னரே, மிகத்தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார் என்பதற்கு இவை தக்க சான்றுகளாகும்.
ஆயினும், இற்றைவரை தமிழினத்தவரது உரிமைகளை வென்றெடுப்பதற்கென்று மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளும் துரதிஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவிக்கொண்டமையை பிரேம்ஜியும் அவரது அணியினரும் இதய சுத்தியுடன் ஒப்புக்கொண்டிருந்தனர் என்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
கட்சிக் கட்டுப்பாடு, ஐக்கியம், வர்க்கப் போராட்டம் என்பவற்றின் பெயரால், தாம் சார்ந்த இடதுசாரிக் கட்சியினர், இனப்பிரச்சினை விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியமையை, சத்திய நேர்மையுடன் பிரேம்ஜி ஏற்றுக்கொண்டிருந்தார். இந்த இடதுசாரி இயக்கமும் தமிழ் இடதுசாரித் தோழர்களும், இனப் பிரச்சினையில் சரியானதொரு நிலைப்பாட்டை, திடவுறுதியுடன் எடுத்திருந்தால், நாட்டில் இடம்பெற்ற பேரழிவுகளும், உயிரிழப்புகளும், தேசிய மானுட அவலங்களும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என அவர் ஆதங்கப்பட்டிருக்கின்றார்.
முட்டையைப் போன்று இலட்சியமும், கை விட்டால் உடைந்து விடும் என்பதை நன்குணர்ந்த பிரேம்ஜி, தமது இலட்சியத்தை ஒருபோதும் கைதவறிப் போக விட்டதில்லை. எனவே உலக பாட்டாளி வர்க்க மேம்பாடாயினும் சரி, ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டமாயினும் சரி, நியாயத்தின் பங்காளனாக நின்று, இதய சுத்தியுடன் தமது பங்களிப்பைச் செலுத்திவந்த அவரது அரசியல் தீர்க்கதரிசனத்தையும் நிதானத்தையும் பற்றுறுதியையும் மிகத் தெளிவாக இவை அனைத்தும் கோடிட்டுக் காட்டுகின்றன.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் பிரேம்ஜி பற்றி ஒருமுறை எழுதும்போது “இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தீர்வில், முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஒரு முக்கிய இடம் வேண்டும் என்ற அவாவில், பிரேம்ஜி பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் இந்த முயற்சிகளில் ஏற்பட்டுள்ள 'வெற்றியின்மை' உண்மையில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள தோல்வியாகும்” எனக் குறிப்பிடுகின்றார்.
இருப்பினும், பிரேம்ஜியும் அவர் தலைமை தாங்கிய முற்போக்கு அணியும் அரசியல் ரீதியாக ஈட்டிக் கொடுக்கத் தவறிய வெற்றிகளை, இலக்கிய ரீதியாகப் பெற்றுகொடுத்த வரலாற்று உண்மையை யாருமே மறுக்க முடியாது. நவீன ஈழத் தமிழ் இலக்கியத்தினை பழமைவாதிகளிடமிருந்தும் பண்டிதர்களிடமிருந்தும் மீட்டெடுத்து, முற்போக்கு இலக்கியம், யதார்த்த இலக்கியம், மக்கள் இலக்கியம், தேசிய இலக்கியம் எனப் புதுவடிவங்கள் கொடுத்து, அதில் சமூக முக்கியத்துவம், மண்வாசனை, பேச்சுவழக்கு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, பெண்ணுரிமை போன்ற பல முற்போக்கு அம்சங்களைப் புகுத்தி, ஈழத் தமிழ் இலக்கியத்துகென்று ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்த பெருமை, பிரேம்ஜிக்கும், அவர் தலைமை தாங்கிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்குமே உரியது.
மானுடம் வென்றதம்மா என்றே // மானிதத்தின் வெற்றி முரசம் கொட்டிய, // கவிச் சக்கரவர்த்தி கம்பனும் - பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்றே // நானில வாழ்வின் நல்லறம் வகுத்த
பேராசான் வள்ளுவனும் - நாலாவான் அரசே அரசு என்றே // உழைப்பவர் ஆட்சிக்கு வரலாற்றில் // முதற்குரல் கொடுத்த தமிழ்த்தாய் அவ்வையும் - அரசியல் பிழைத்தோர்க்கு // அறங் கூற்றாக வந்த // இணையற்ற பெரும் புலவன் இளங்கோவும் - கலியைக் கொன்றே // கிதயுகம் தனைப் புஷ்பிக்க விளைந்த // மகாகவி பாரதியும் கையளித்த, பொற்புறு பாரம்பரியத்தை, பவ்வியமாகக் கையேற்றவாறுதான் இத்தகைய நவீன சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் தாம் முன்னெடுப்பதாகக் தமது கவின் மொழியில் கூறும் பிரேம்ஜி – ’மரபு என்பது மாறாமற் கிடக்கும் ஒன்று’ என்ற பிற்போக்குக் கூக்குரலை மறுதலித்து – ’மரபு என்பது வளர்ச்சிக்கேற்ப மாறும் ஒன்று’ என்ற முற்போக்குச் சிந்தனையை முன்னிறுத்தி, தமது அணியினை வழிநடத்திச் சென்று வெற்றி கண்டவர்.
இவ்வாறு, ஒரு மகத்தான அணிக்குத் தலைமை தாங்கிச் சாதனைகள் புரிந்திருந்தும் - நல்லது செய்யப்போய் சில சந்தர்ப்பங்களில் கல்லடி பட்டிருந்தும் - சலசப்போ சஞ்சலமோ ஏதுமின்றி, ஆழ்ந்தகன்ற சமுத்திரம் போல், அமைதியாக வாழ்ந்தமை பிரேம்ஜி எனப்படும் ஞானாவின் பலம். Perfect silence, is the border land of wisdom என ஆங்கிலத்திலும் - “மோனம் என்பது ஞான வரம்பு” என தமிழிலும் கூறப்படுவது, ஞானாவுக்கு சாலப் பொருந்தும்!
தற்பெருமை தரவல்ல பல மகுடங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள போதிலும், அவர் தன்னடக்கத்துடன் நடந்தவர். சீரிய சிந்தனை விதைகளின் விளைநிலமாக அவர் விளங்கியவர். சதா காலமும், சமூக உணர்வுடன் செயற்படும் மகோன்னத மனசுகொண்ட மாமனிதராக வாழ்ந்தவர். அன்னாரை நன்றியோடு நினைவுகூரவேண்டியது, நமது கடமையே!
முடிவாக, இன்றைய நவீன உலகிலும்கூட - ஆங்காங்கே பரவி விரவி காணப்படும் ஆதிக்க இயந்திரப் பொறிமுறைகள், சாமானிய சனங்கள் மீது திணித்துவரும் அடக்குமுறையை, அச்சுறுத்தலை, அற்பத்தனமான சிறுமையை சித்திரிக்கும் வகையில், மறைந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் ஒருமுறை வரைந்த 'வீழ்ச்சி' எனும் கவிதையை –மனிதாபிமானமே ஜனநாயக அரசியலின் அடிப்படை என்றும், மக்களைவிட மேலானதும், மக்களை அடக்குவதுமான எந்த சக்தியும் தார்மீகமானதல்ல என்றும், மனப்பூர்வமாக நம்பிய பிரேம்ஜியின் நினைவுக்குச் சமர்ப்பணமாக முன்வைத்து, விடைபெற விரும்புகின்றேன்.
காய்ந்த சருகுபோல் // ஒரு மண்புழு //
ஊர்ந்துகொண்டிருந்தது // படியோரம்.
நான் மனிதன் // என்னும் இரக்கம் மீதூர //
அதனைப் பார்த்துவிட்டுப் போனேன் // ஒருகணம்.
சுர் என்று சருகு // இரைதல்போல் கேட்டது //
திரும்பிப் பார்த்தேன்!
மண்புழு வாலில் நின்றது //
வாயைத் திறந்து கூரிய பல்தெரிய.
நாக்கு எங்கே என்று நினைக்கையில் //
நாக்கிலிருந்து தீச்சுவாலை பறந்தது.
மண்புழுவுக்குப் பல்லேது? // நாக்கு ஏது?
நினைக்கையில் தெரிந்தது //
மண்புழு உருமாறிவிட்டதென்று.
எனினும் அஞ்சவில்லை. //
குனிந்தேன் தடியெடுக்க.
நிமிரும்போது // மண்புழுவின் கையில் //
துப்பாக்கி இருந்தது.
அல்ல, // ஒரு பாம்பின் கையில் //
துப்பாக்கி இருந்தது.
அதுவும் அல்ல, // ஒரு சிப்பாயின் //
கைத்துப்பாக்கி அது!
நான் குனிந்து, // பாம்பாய் நெளிந்து //
காய்ந்த சருகின் மண்புழு ஆகி, //
ஊர்ந்துகொண்டிருக்கிறேன், //
படியோரமாக!
‘பிம்பங்கள் வழியே’ ஏற்பாட்டில் 18.07.2021 ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற ‘ஆளுமை பற்றிய ஓர் உரையாடல்’ நிகழ்ச்சியில் - இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்கள் குறித்து, க. நவம் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.