‘உங்கள் ஈரல் பல காலம் ஓவர்டைம் செய்த ஈரல்’என்று எஸ்.பொ. மரணிப்பதற்கு சில கிழமைகள் முன்பு அவர் ‘ஈரலில் பிரச்சினை’என்றபோது கூறினேன்.
‘அது சரிதான்’ என்று மெதுவான சிரிப்பு தொலைப்பேசியில் கேட்டது.
‘உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’
‘அதுதான் அநுரா பார்க்கிறான்’
‘அம்மாவாலும் அநுராவாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. எனது மனைவியின் தமையன். சமீபத்தில் சுவாசப் புற்றுநோயால் இறந்தவர் .வாழ்க்கையில் மனிதன் தண்ணியோ சிகரட்டோ வாயில் வைக்காதவர். நோய்கள் எவரையும் விட்டு வைப்பதில்லை’என்றேன்.
‘தமிழ் இலக்கிய தோட்டத்தில் எஸ்.பொ. என்ற பொன்னுத்துரை நீண்டு, பருத்து , அறுபது வருடங்கள் மேல் ஓங்கி வளர்ந்து கிளைவிட்ட வேப்பமரம் போன்றவர். அவரால் வெளிவந்த பிராணவாயுவைச் சுவாசித்து எழுதத் தொடங்கிய என் போன்றவர்களின் கையைப் பிடித்து இலக்கியத்தின் ஏடு தொடக்கியவர். இந்தப்பயணத்தில் பல வருடங்கள் மனதளவில் என்னுடன் துரோணராக வந்தவர். சிலவேளையில் சிலருக்கு வேப்பம் கசப்பாக இருந்தாலும் ஈழத்து இலக்கியத்தில் முக்கிய பாவனைப் பொருளாக அவர் இருந்தார். இப்படிப்பட்ட எஸ்.பொ. வை ஆரம்பக்காலத்தில் நான், எனது நண்பனின் தந்தையாகவே சந்தித்தேன். எனது மனைவியும் அநுராவும் அவுஸ்திரேலியாவில் மருத்துவ பரீட்சைக்கு படித்த காலத்தில் அவரைச் சந்தித்தேன். அதற்கு முன்பு எஸ்.பொ.வை சந்தித்ததில்லை.கேள்விப்பட்டதில்லை.
அவுஸ்திரேலியாவில் உதயம் நடத்திய காலத்தில் நான் எழுதிய வீட்டு மிருகங்கள் மருத்துவ அனுபவம் பற்றிய கதைகளை ‘தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத பகுதியை நீ எழுதி இருக்கிறாய்” எனச் சொல்லி அவற்றை புத்தகமாகப் பிரசுரிக்க என்னைத் தூண்டினார். அதன்பின் என்னால் மதவாச்சிக் குறிப்புகளாகப் பல காலத்தின் முன்பு, எழுதிக் கிடப்பிலிருந்த கை எழுத்துப்பிரதியை வண்ணாத்திக்குளமாக்கத் தூண்டினார். அதன்பின் எனது இரண்டு புத்தகங்களை பதிப்பித்தார்.
சாதாரணமாக நான் எழுதிய வாக்கியத்தை இப்படி மாற்று… அப்படி மாற்று… என்பதன் மூலம் அவற்றை அழகுறச் செய்வார். ஒரு சம்பவம் இன்னமும் நினைவுக்கு வருகிறது. 'உனையே மயல் கொண்டு' நாவலில் கடைசிப்பகுதியில்
“ஜுலியா, சார்ள்சின் தொடர்பு நிரந்தரமானதா…?”
‘என்பதற்கு பதிலாக “அவள் சிரித்த போது, கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டதுபோல் இருந்தது “
என நான் எழுதியிருந்தேன்” ‘
அதை “பறவைகள் விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை என்று நல்லாயன் கூறிய உவமை நினைவுக்கு வருகிறது எனச் சொல்லி மார்பு குலுங்கச் சிரித்தாள் “ எனப் பேனையால் திருத்தி எழுதி அனுப்பினார். அவரது வசனத்தைச் சேர்க்க எனக்கு ஆரம்பத்தில் சுயகௌரவம் தடுத்தாலும், அந்த இலக்கிய உவமையின் அழகு மட்டுமல்ல, ஆழமும் அந்த வரிகளை இணைத்துக்கொள்ளச் செய்தது.
'உனையே மயல் கொண்டு' நாவலின் முகப்பு அட்டையில் பெண்ணின் அரைநிர்வாணப் படத்தருகே ஆலமிலையும் புத்தரின் படத்தையும் பதிந்து அதனை எனது அங்கீகாரத்திற்கு அனுப்பியபோது அதை நீக்கச் சொன்னேன். அப்பொழுது எந்த தடையும் சொல்லாமல் அதனை நீக்கினார்.‘எனது அரசியல் வித்தியாசமானது. ஆனால் உனது அரசியல்படி நீ நடக்கிறாய்’ என்பார்.
தமிழர்களில் , அரசியலில் வித்தியாசமானவர்கள் ஒன்றாகப் பழகுவது கிடையாது. அப்படிச் சிலர் இருந்தாலும் உள்ளன்போடு நட்பாக இருப்பது இல்லை. மனதில் பல விடயங்களை வைத்துக்கொண்டு பழகும் ஜனநாயகப் பண்பாடு நமது சமூகத்தில் இன்னமும் வேர் விடவில்லை. வித்தியாசமான சிந்தனையுள்ளவனைக் குறைந்த பட்சம் மனதிற்குள் பலதடவை கொலை செய்வார்கள். பெண்ணானால் கற்பனையில் பாலியல் பலவந்தம் செய்யும் எமது சமூகத்தில் எஸ்.பொ.வின் நாகரீகம் என்னைப் பொறுத்தவரை மிகப்பிடித்தது.
அரசியல் வித்தியாசத்திற்காகக் கொலை செய்யும் சமுகம் – நடேசனைப் புறக்கணி என்று காலம் காலமாக வானொலியில் கூப்பாடு போட்ட காலத்தில் சிட்னிக்கு என்னை அழைத்து, பலரது எதிர்ப்புக்கள் மத்தியில் எனது புத்தகத்தை வெளியிட்டவர் எஸ். பொ.
இலக்கியவாதி- மொழி பெயர்ப்பாளர்- புத்தக எடிற்ரர் எனப் பல முகங்கள் கொண்டவர் ஈழத்தில் எழுத நினைப்பவர்கள் , அனுமானைக் கடந்து சென்ற வீமனாக அவரைக் கடந்துதான் செல்லமுடியும். அவரது இடம் தனித்துவமானது; மிகவும் உயரத்தில் உள்ளது. அவரது தரமான எழுத்துகளாக நான் கருதுவது சடங்கு நாவல் அடுத்தது நனைவிடைதோய்தல்
சடங்கு நாவல்
ஈழத் தமிழ் உலகில் எஸ்.பொ. வின் சடங்கு வித்தியாசமான நாவல் மட்டுமல்ல, அகண்ட தமிழ் இலக்கியப்பரப்பில் தனித்து நிற்கக்கூடியது. தமிழ் நாவல்களில் குறியீட்டுத்தன்மையால் சடங்கு முன்னுதாரணமாகிறது. கதை மூன்று முக்கிய பாத்திரங்களை மட்டும் கொண்டு சொல்லப்படுகிறது. அதிலும் மூன்றாவது மனிதனாக கதை சொல்லத் தொடங்கி செந்தில்நாதனின் அகக்குரலை மட்டும் பிரதானமாக வைத்து எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் வெர்ஜினியா வுல்ஃப் ஒரே நாளில் நடப்பதாக எழுதிய (Mrs Dalloway)போன்று மனசாட்சியின் குரலாக (stream of consciousness)) கொண்டு செல்லும் மொடனிஸ்ட் நாவல். இங்கே எஸ்.பொ. வெள்ளிக்கிழமை தொடங்கிய கதையைப் புதன்கிழமையில் முடிக்கிறார்.
ஜெயமோகன் தனது கட்டுரையில் எஸ். பொவை எமிலிசோலா போன்ற நச்சுறலிஸ்ட் எழுத்தாளர் என்றார் .அவரது உள்ளடக்கம் நச்சுரலிசமாக இருந்தபோதிலும் சொல்லும் முறையில் மொடனிசம்(stream of consciousness with plot less ) உள்ளது.
ஒரு சில இடத்தில் அன்னலெட்சமியின் அகக்குரலில் கதையைச் சொல்ல வந்தபோதும் நாவலின் பெரும்பகுதி செந்தில்நாதனின் அகநிலை எண்ணங்களாலேயே பின்னப்படுகிறது. எஸ்.பொ. மிகவும் திறமையாக யாழ்ப்பாணத்துச் சமூகத்தை நக்கல் அடித்தது இந்த சடங்கு மூலம்தான். ஆனால், பலர் இதை இந்திரிய எழுத்து எனப்புறந்தள்ளுவதன் மூலம், தெரிந்து செய்தார்களா தெரியாமல் செய்தார்களா என்பது எனக்குத்தெரியாது. என்னைப்பொறுத்தவரை சடங்கு நாவல், யாழ்ப்பாணத்து மேட்டுக்குடியினரை மாமிக்குப் பயந்து மனைவியோடு கூட உடலுறவு துய்க்காத ஆண்மையற்றவர்களாக சினிமாஸ்கோப்பில் காட்டியுள்ளது. யாழ்ப்பாண நகரத்தின் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்த எஸ்.பொ. தனது சுற்றுவட்டாரத்து மேட்டுக்குடியினரை எடுக்காமல் ஏன் பருத்தித்துறையை தெரிந்தெடுத்தார்..? இங்கேதான் அவரது கூர்மையான அறிவு தெரிகிறது. வடக்கைப் பொறுத்தமட்டில் மற்றைய பகுதிகளிலும் பார்க்க சாதியம் அதிகமாகத் தவழ்ந்து விளையாடியது வடமராட்சி பிரதேசத்தில்தான்.
முரண்பாடுகளை முன்வைக்காமல், புளட் எனப்படும் எந்தக்கதையாக்கமற்று தனியாக ஒரு பாத்திரத்தின் நினைப்புகளுடனேயே கதையை நகர்த்திச் சென்றிருக்கிறது. சடங்கு. புளட் இல்லாததால் ஒரு நெடுங்கதையாக எடுக்கலாம் என்ற தேவகாந்தனது கூற்றிலிருந்து மாறுபடுகிறேன் . (ஜீவநதி நாவல் சிறப்பிதழ்) முழுமையான பாத்திரத்தைக் கொண்டு நாவலை ஆக்கமுடியும் - உதாரணம் ஜேஜே குறிப்புக்கள். சடங்கு நாவல் 60 ஆண்டின் கால ஆண் பெண் குடும்ப உறவுகளுடன் மட்டுமே நின்று விடுகிறது . ஆனால் காலப்போக்கில் உறவுகள் அமைந்த விதம் சிதைகிறதே! . தற்பொழுது விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு உடலுறவுக்கு வரும் அரசாங்க உத்தியோத்தர்கள் இருப்பார்களா? அதேபோல் அவரது நனைவிடைதோய்தல் என்ற சிறு வயது நினைவுகள் மெல்பேன் மரபு சஞ்சிகையில் வந்தது . இங்கு 60 ஆண்டுகளில் உள்ள யாழ்ப்பாண நிலை அழகாகத் தரப்படுகிறது. அவரது நினைவுகள் எங்களுக்கு வரலாகிறது. அவரது நல்ல சிறுகதைகளுக்கும் அதுவே நடக்கிறது . உதாரணமாகத் தேர் என்ற கதையும் அக்காலத்துக்குரியது .
மேற்கண்ட சடங்கு, நனைவிடைதோய்தல் மற்றைய சிறுகதைகள் காலத்தின் சக்கரங்களில் சிதையும். புதிய தலைமுறைகள் அவற்றை வரலாற்று நிகழ்வாக மட்டுமே பார்க்கலாம்.
எஸ். போவின் மாஸ்டர் பீஸ் எழுத்துகளாக நான் பார்ப்பது இரண்டு நூல்கள். வரலாற்றில் வாழ்தல் என்ற அவரது சுயசரிதை நூல் மற்றது தீ நாவல். இரண்டையும் சிறிது ஆழமாகப் பார்ப்போம்.
வரலாற்றில் வாழ்தல்
இதுவரை தமிழில் சுயசரிதையை இவ்வளவு ஆழமாக எழுதியவர்கள் எவருமில்லை. இது ஒரு வரலாற்று இலக்கியம். இந்த நூலை நான் இலக்கியம் என்று சொன்னால் நீங்கள் எவ்வகை இலக்கியம் எனக் கேட்பது நியாயம். ஆங்கிலத்தில் கத்தாசில் (Catharsis or Cathartic literature)) எனப்படுவது. ஆரம்பத்தில் கிரேக்க அறிஞர் அரிஸ்ரோட்டிலால் இலக்கியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பொருள் தன்னை சுத்தப்படுத்துதல். இதை மதத்தில் பலிகள் கொடுத்தோ, கழுவியோ கடவுளை வழிபடுவது.
கங்கையில் மூழ்கியோ இல்லை மசூதிக்கு செல்லுமுன் தடாகத்தில் உடல் கழுவியோ மனிதர்களை புனிதமாக்குவதாக மதங்களில் உள்ளது. பிற்காலத்தில் சிக்மண்ட் ஃபரய்டால் இது மனம் சம்பந்தப்பட்டதாகிறது. அடிமனத்து நினைவுகளை வெளியகற்றுதல் என்று பொருள்படுகிறது. மொத்தத்தில் அழுத்தங்களை இறக்கி வைக்கும் செயல் இது.(ராணுவத்தில் Debriefing என்பார்கள்.)
பொன்னுத்துரை தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால் அவரை தொடர்ச்சியாக யாழ்ப்பாண சமூகம் புறக்கணிக்கிறது. பாடசாலைகளில் அவரை மாணவராக ஏற்க மறுக்கிறது இந்தியாவில் இருந்து பட்டதாரியாக வந்து ஊர்காவற்றுறை கத்தோலிக்க பாடசாலையில் அவரது சாதி தெரியாமல் ஆசிரிய பதவி கொடுத்த பின்னர் அவரது சாதி தெரிந்து அவரை அடித்து உதைக்க முற்படுகிறார்கள். இந்துக்கள் மட்டுமல்ல கத்தோலிக்க சமயத்தில் கூட புகலிடம் இல்லையென,கம்பளை ஸாகிரா மகாவித்தியாலயத்தில் தனது ஆசிரிய பதவியைப் பெறுகிறார் . மட்டக்களப்பில் திருமணமாகிய பின் 17 வருடங்கள். அங்கே வாழ்ந்தபோதும் யாழ்ப்பாணத்தவன் என்பது அங்கு பாதிப்பிற்கான விடயமாகிறது. இதைவிட எஸ்.பொ.வின் வித்துவத்தில் அதிருப்தியடைந்தவர்கள், முக்கியமாக முற்போக்கு எழுத்தாளர் கூட்டமும் ஈழத்தின் மூடிசூடா மன்னர்களாகிய பல்கலைக்கழப் பேராசிரியர்கள்- கைலாசபதி சிவத்தம்பி போன்றவர்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகிறார். இப்படியாக பலவிடயத்தில் பாதிப்படைந்த எஸ்.பொ, தொடர்ச்சியான சமரில் ஈடுபடுவதோடு, பல வில்லன்களையும் சந்திக்கிறார். அல்லது உருவகிக்கிறார். மட்டக்களப்பு அங்கத்தவர் இராசதுரை, தில்லானா மோகனம்பாள் வைத்தியாக வருகிறார். பிற்காலத்தில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த டொக்டர் கந்தையா , அந்த பாத்திரத்தைக் கொழும்பில் எடுக்கிறார். இப்படி பலமான அரசியல், சமூக சக்திகளால் பந்தாடப்படும் எஸ்.பொ. துரதிருஷ்டவசமாக இரண்டு புத்திரர்களை இழக்கிறார். மித்ர விடுதலைப்புலிப் போராளியாகவும் புத்ரவை தற்செயலான விபத்திலும் பறிகொடுக்கிறார். புத்திரசோகம் என்பது கொடுமையானது. இவற்றின் பாதிப்புகளிடையே தனது தமிழ் இலக்கியப் படைப்பை, தமிழுக்கான ஊழியமாக அல்லது தவமாக கம்பன், வள்ளுவன், பாரதி புதுமைப்பித்தன், ஜானகிராமன் , வரிசையில் செய்ததாக பதிந்திருக்கிறார். இதேவேளையில் வாழ்க்கையில் தோல்வியடைந்த இடங்களையும் குறிப்பிடுகிறார்.
எஸ்.பொ.வின் நகைச்சுவை உதாரணம் சொல்கிறேன்
கொழும்பில் நடைபெறவிருந்த ஒரு விழாவின் மலருக்கு வி. கே ரி. பாலன் என்பவர் ஊடாக சரஸ்வதியைக் கோட்டோவியமாக வரைந்தபோது டொக்டர் கந்தையா ‘அசிங்கம் ஆபாசம்’ என்றார். டாக்டர் கந்தையா பின்பு என்னிடம், எஸ். பொ. உங்கள் கருதத்தென்ன எனக்கேட்டார்.
‘பாலன் இதை ஆர்வக்கோளாறால் செய்வித்துவிட்டான் பாவம். பாலனோ அந்த ஓவியர்களோ சத்தியமாக சரஸ்வதியைப் பார்த்ததில்லை. டொக்டர் நீக்கள் பார்த்த சரஸ்வதியின் உண்மைக் கோலத்தை சொன்னால் அவர்கள் திருத்திக் கொள்வார்கள் என்கிறார்.
இந்த நூல் சுயசரிதை மட்டுமல்ல, தமிழ் இலக்கியம் , புலம்பெயர் இலக்கிய வரலாற்றுடன் யாழ்பாண, கிழக்கு மாகாண , தென்னிந்திய வரலாறு மட்டுமல்ல நைஜீரிய வரலாறும் உள்ளது . சிலர், சில தவறுகள் இருந்தன என சொன்னாலும் தனிமனிதன் பார்வையில் அவை ஏற்படலாம். ஆனால் எவரும் இதுவரை சுயவரலாற்று நூல் ஆழமாக அகவயமாக எழுதவில்லை என்பதே எனது கருத்து .
எஸ்பொவின் தீ -நாவல் பற்றி சொல்லவிரும்புகிறேன்
60 வருடங்கள் முன்பாக எஸ் பொன்னுத்துரையால் எழுதப்பட்டது தீ என்ற நாவல், பல பேரால் பல கோணத்தில் பேசப்பட்டது .காமத்தைப் பேசும் நாவலாக எழுத்தாளர்களாலும், மறைத்து வைத்துப் படிக்க வேண்டிய நாவலாக வாசகர்களாலும் , கொளுத்தப்படவேண்டியதென ஒழுக்க சீலர்களாலும் எழுதப்பட்டது. யானையைப் பார்த்த குருடர்களாக இந்த நாவலை எல்லோரும் பார்த்தார்கள் .
எஸ் பொன்னுத்துரை தவிர்த்து யாராவது ஒருவர் இந்த நாவலை எழுதியிருந்தால் இந்த நாவல் தமிழ் உலகில் மேலும் முக்கியத்துவப்படுத்திருக்கும். நாவல் காமத்தைத் தீயாக உருவகப்படுத்தி, தீ எந்தப் பொருளைக் கொண்டு எரிகிறதோ, அதைச் இறுதியில் அழித்து சாம்பலாக்கிறது என்ற படிமத்தின் வடிவமாகிறது. அதைப் பலர் புரிந்துகொண்டார்களா என்பது கேள்வியாகும் .
நாவலில் இறுதியில், திலகா என்ற ருதுவாகாத இளம்பெண்ணை ஒரு ஆசிரியராக உறவு வைத்த பகுதி வரும்போது என்னால்கூட தொடர்ந்து படிக்க முடியவில்லை . சிறுவயதில் சிறுவனும் சிறுமியினதும் பாலியல் உறவுகளை ஏற்றுக்கொள்ளும் எனது மனது, இங்கே குருவாகப் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கும் பொறுப்பில் உள்ளவர் நடந்துகொண்ட விடயத்தை ஏற்க முடியவில்லை . ஆனால் சிறிது யோசித்தால், இவைகள் நடக்காதனவா? நாம் கேள்விப்படாத விடயங்களா ? ஆசிரியர்கள், வைத்தியர்கள் என்போர், அவர்களுக்குப் பதவிகள் அளித்த மரியாதையையும் சந்தர்ப்பத்தை துஸ்பிரயோகம் செய்யவில்லையா?
நாவலுக்கு முக்கியமானது நம்பகமாக இருக்கவேண்டும். பாத்திரப் படைப்பு செறிதாக இருக்கவேண்டும் . பாத்திரத்தின் செய்கைகள் மற்றும் மன ஓட்டங்களுக்குக் காரணங்கள் கற்பிக்கவேண்டும். யோசப் சாமியாரால் விடுதியில் வைத்து ஒரு சிறுவனது அப்பாவித்தனம் சூறையாடப்பட்டு , வக்கிரம் விதைக்கப்படுகிறது. இது கூட மிகவும் சாதாரணமாகக் கல்லூரி, ஹாஸ்டல், மற்றும் குருத்துவப்(Seminary) பாடசாலைகளில் நடக்கும் விடயங்கள். ஆண் சிறுவர்கள் சூறையாடப்படும்போது அவர்கள் கருக்கொள்ளாததால் சமூகத்தில் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை . கண்ணுக்குத் தெரியாதவற்றை தற்போதைய கொரானா வைரஸ்போல் நாம் கணக்கில் எடுப்பதில்லை, கடவுளைத் தவிர. ஆனால் அப்படி , அப்பாவித்தனம் சூறையாடப்பட்டவர்கள் பிற்காலத்தில் சூறையாடியவர்களின் புதிய பதிப்பாகிறார்கள் . அப்படியான ஒருவரே தீயின் கதாநாயகன்.
உண்மையான வரலாற்றைப் படித்து நாம் புரிந்து கொள்வதன் காரணம் அதன் மூலம் சமூகத்தைப் பரிந்து கொள்ள முடியும் ஆனால் இலக்கிய புனைவுகளே தனிமனிதர்களின் மனக்குகையின் வக்கிரங்களை வெளிக்கொள்ளும் சாதனம். நமது சமூகம் இலக்கியத்தையும் வரலாற்றையும் ஒதுக்கி விடுவதன் மூலம் நடந்தவை , மீண்டும் நடக்கின்றன. தீயில் வரும் கதாநாயகன் மட்டுமே இங்குள்ள ஒரே பாத்திரம் .மற்றைய பெண்களாக வருபவர்கள் தட்டையானவை. அத்துடன் ஒரு பாத்திரத்தின் உறுதியற்ற தன்மை, தோல்விகளுக்கு, காம உணர்வுகளின் மூலம் வடிகால் தேடும் பரிதாபத்துக்குரிய பாத்திரமாக ஆண் உருமாறுவதற்கு ஊக்கிகளாக வருகிறார்கள்.
எஸ். பொன்னுததுரையின் தீ நாவலில் உள்ள மற்ற முக்கிய விடயம் மனவோட்டங்களின் வழியே கதையின் பெரும்பகுதி சொல்லப்படுகிறது . இது அக்கால தமிழ் நாவல்களில் அரிது . இதைச் சடங்கிலும் பயன் படுத்தியுள்ளார் . எந்த புறச்சித்தரிப்புமற்ற நாவலாக வருகிறது. பாத்திரத்தின் நினைவில் காமம் நதியாக ஓடியபோது பல இடங்களில் கரையை மீறுகிறது என்பதாக உருவகிக்க முடியும். இப்படியான நாவல்கள் நம்மிடையே குறைவே. காமமும் அதன் மீறல்களும் காலம் காலமாகத் தொடரும் என்பதால் எமது தலைமுறையில் மட்டுமல்ல எதிர்கால தலைமுறையில் தீ தொடர்ச்சியாகப் பேசப்படும் செவ்வியல் நாவலாகும்.
தீயில் உள்ள பாலியல் எண்ணங்களை எழுதுவதற்குக் கூச்சப்பட்ட எஸ் பொன்னுத்துரை வைரமுத்துபோல் தேவையற்ற அலங்கார வார்த்தைகளால் இடறுவது நாவலின் குறைபாடு – ஆங்கிலத்தில் இதை பேப்பில் புரோஸ் (Purple prose)என்பார்கள் எஸ் பொ வின் கடைசி காலங்களில் அவர் சேர்ந்த தமிழ்த் தேசியம் மலட்டுத்தன்மையானது. அதைவிட அவரோடு சேர்ந்து கோஷம் போட்டவர்கள் அவரது ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்கு இடராக இருந்தார்கள் என்பது எனது கணிப்பு. அது அவருக்கும் தெரியும். அவரது கடைசிப் படைப்பான மாயினி நாவல் –அவரது எழுத்து வரலாற்றில் ஒரு கறை. அரசியற் கோட்பாட்டிற்காக இலக்கியம் படைக்க எவ்வளவு மேதையான ஒருவன் முன் வந்தாலும் இறுதியில் ஒரு கட்சி அறிக்கையைப்போலத்தான் முடியும் என்பதற்கு உதாரணம்.
தனிமனிதராக நான் கண்ட எஸ் பொ, ரீன் ஏஜ் வயது பெண் பிள்ளைகள் முரண்டுபிடித்து கதவை அடித்து மூடுவதும், நிலத்தில் விழுந்து புரளுவதும், சாப்பிடாமல் விடுவதும்,, மற்றும் தன்னை அலங்கரிக்காது கல்லூரி செல்வதற்கு ஒத்ததாக விடயங்களையும், இலக்கிய மேதையான எஸ்.பொ. வில் பார்த்தேன். இந்த இயல்பை ஆங்கிலத்தில் Tantrum எனலாம். யாராவது ஏதாவது எழுதியோ சொல்லியோ விட்டால் வெகுண்டெழுந்துவிடுவார்.
நண்பர் முருகபூபதியோடு உலகத் தமிழ் எழுத்தாளர் விழாவில் வாளெடுத்தது போரிட்டதும் இப்படியான ஒரு சிறு பிள்ளை முயற்சியே
நான்கூட ஒரு முறை சொன்னேன் காலில் ஒரு கல்லு குத்தியது என்றால் – அதனைத் தூக்கி எறிந்துவிட்டுப் போவது இல்லாமல் அந்த கல்லைக் குத்தி தூளாக்குவது என்ன பிரயோசனம்…? எனது கருத்தை ஏற்காதபோது சிரிப்பால் புறந்தள்ளுவார்.
எஸ் பொ எந்த ஒரு விருதும் பெறாதவர். தமிழ் இலக்கிய உலகில் ஒருவன் எதுவித விருதுகளும் கிடைக்காமல் தொடர்ந்து எழுதுகிறானோ அவன் கூர்ந்து பார்க்கப்படவேண்டியவன் என்பது எனது கருத்து. இவ்வளவு திறமைகள், தெளிவு, உலக சிந்தனை , ஆங்கில அறிவும் மொழிவளமும் கொண்ட எஸ்.பொ. தனது ஆற்றலுக்கு ஏற்ற அளவு இலக்கியத்தில் படைத்தாரா…? என்னும் கேள்வியை கேட்டால் நான் இல்லையென்றுதான் சொல்வேன். இதனால் அவருக்கு நட்டமில்லை. எம் தமிழுக்கே நட்டம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.