பதிவுகள் இணைய இதழ் மற்றும் முகநூலில் தொடரும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் ,தன் கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றார் இலண்டனில் வசிக்கும் சமூக, அரசியற் செயற்பாட்டாளரான ராகவன்.
சாதியச் சிந்தனையும் நடைமுறையும் மொழி , பண்பாட்டு வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அது அனைத்து தளங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்படுகிறது. இந்தத் தொழிற்பாட்டின் பின்னணியில் சாதிய அதிகாரக் கட்டமைப்பு இயங்குகிறது. சாதிய அமைப்புக் கொண்ட சமூகங்களில் சாதிய சிந்தனை எவ்வாறு தொழிற்படுகிறது? அது எவ்வாறு இயல்பாக்கம் அடைந்திருக்கிறது? என்பதை அவதானிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கு.
"சாதியம் என்பது வெறும் பாகுபாடு காட்டுதல் அல்ல. பாகுபாடு என்பது சாதியத்தைச் சட்டரீதியாக அணுகும் பக்கம் மட்டுமே. பாகுபாடு காட்டுதல், தீண்டாமை, மனிதவுரிமை மீறல்கள் போன்றவைக்கு அப்பால், மேலோட்டமாகப் பார்க்கையில் இயல்பாக்கம் அடைந்த சாதிய நடைமுறைகள் ஆபத்தற்றவை என்ற தோற்றப்பாட்டை அளிக்கின்றன" என்கிறார் பாலமுரளி நடராஜன் என்ற ஆய்வாளர்.
பண்பாட்டுத் தளத்தில் பார்க்கும் போது, மத ஆசாரங்கள் தொடங்கி கல்வி, இசை , நாடகம், வழிபாடு, சடங்குகள், அரசியல் , மொழி போன்ற பல்வேறு தளங்களிலும் தினசரி வாழ்க்கை நடைமுறைகளிலும் சாதியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்படுகிறது. சாதியம் என்பது வாழ்முறையின் பிரிக்க முடியாத அங்கமாகி அரூபமாகத் தொழிற்படும் ஒரு நச்சுக்கிருமி. அத்துடன் ஆதிக்கசாதியைச் சேர்ந்தவரின் சாதி அந்தஸ்து ( caste privilege) என்பதும் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. தீண்டாமை, அக மணம், சாதிய வன்முறை போன்ற நேரடியான அடக்குமுறைகள் இலகுவாக அடையாளப்படுத்தக்கூடியவை. எனவே இயல்பாக்கம் பற்றியே இந்த கட்டுரை பேசுகிறது.
ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சமூகம் சாதி ரீதியாகத் தன்னை அடையாளப்படுத்தி, தனது பிறப்பால் தான் உயர்ந்தவன் என்ற கருத்தியலைக் கைக்கொள்ளும் போது, மற்றைய சமூகங்களைத் தாழ்வாக மதிப்பது மட்டுமல்லாமல் அவர்களை மாற்றார் / பிறத்தியார் எனக் கற்பிதம் செய்து வெளியே நிறுத்துகின்றது. இந்தச் சமூகக்கற்பிதம் ( social imaginary) மதிப்பீடுகள், சமூகக் கட்டுமானங்கள், நிறுவனங்கள், சட்டங்கள் , குறியீடுகள் போன்ற பல்வேறு அம்சங்களும் சேர்ந்த ஒரு முழுமை. இந்தச் சமூகக் கற்பிதம் ஆதிக்கக் கருத்தியலாகப் பண்பாட்டுத் தளத்தில் இயங்குகிறது. இந்தச் சமூகக் கற்பிதத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் ஆதிக்க சாதியினர் தங்களைப் பிறப்பால் உயர்வாக கருதுவதால் ஏற்படும் சாதி அந்தஸ்து ( caste privilege).
தலித்தாக இருப்பவர் அறிவு சார்ந்து சிந்திக்க மாட்டார், அவர் அசுத்தமானவர், ஒன்றுபட மாட்டார், வன்முறையாளர், குடித்துவிட்டுக் கூச்சல் போடுபவர், நம்பத்தகாதவர், ஏமாற்றுக்காரர் , பயந்தவர், மூளையற்றவர், சுயமாகச் சிந்திக்க தெரியாதவர் போன்ற பல்வேறு அடையாளங்களை பல நூற்றாண்டு காலமாக மதம், பண்பாடு என்ற கற்பிதங்களூடாகத் திணித்து, ஆதிக்க சாதிகள் தமது ஆதிக்கத்தைப் பண்பாட்டு தளங்களில் நிலைநிறுத்தி வருகின்றனர். இந்தக் கற்பிதங்கள் நாளடைவில் இயல்பாக்கம் அடைந்து நியாயப்பாடுகளாகத் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்தச் சமூகக் கற்பிதங்கள் ஆதிக்க கருத்தியலாக ஒடுக்கப்பட்ட சாதியினர் மத்தியிலும் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தைச் செலுத்துகின்றன என்பதும் யதார்த்தம். இந்த ஆதிக்க சாதிக் கருத்தியலை எதிர்த்த மாற்றுக் கருத்தியல் கொண்ட இலக்கியங்களும் அரசியலும் மாற்றுக் கலாச்சார தளங்களில் எழுந்து வருகின்றன என்பதும் உண்மை. இந்த ஆதிக்கக் கருத்தியல் ஒரு தளத்தில் நேரடியாகவும், இன்னொரு தளத்தில் மறைமுகமாகவும் தொழிற்படுகின்றன. இந்த மறைமுகத் தொழிற்பாடு ஆழ்மனதில் உறைந்திருந்து சமயம் பார்த்து தனது நச்சுப் பல்லை நீட்டுகிறது. அது ஒரு புறமிருக்க, இயல்பாக்கம் எவ்வாறு தொழிற்படுகின்றதெனப் பார்ப்போம்.
சாதியத்துக்கு எதிராகப் போராடியவர், மெய்யுள் தத்துவத்தை இலங்கைத் தமிழ்ப் பரப்பில் அறிமுகப்படுத்தியவர் என்றெல்லாம் விதந்துரைக்கப்படும் மு.தளையசிங்கம் அவரது 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"மிக முக்கியமான ஒர் மனோவியல் உண்மை. தாழ்த்தப்படோர் மேல்சாதிக்காரனை தனது தலைவனாக வைத்திருக்க விருப்பினாலும் , தங்கள் வர்க்கத்தில் இருந்து வரும் ஒருவனைத் தலைவனாக வைத்திருக்க விரும்பாமாட்டர்கள். மேல்சாதிக்கார்கள் கீழே இறங்கி வரத் தயாராக இருந்தால் கூட, தாழ்த்தப்பட்ட பிரிவினர் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையைக் காணவோ கலந்துகொள்ளவோ விரும்பார். விருப்புவது கஷ்டம்".
அதே நூலில் இன்னொரு இடத்தில் தளையசிங்கம் இப்படிக் குறிப்பிடுகிறார்:
"தாழ்த்தப்பட்ட சமூகநிலை ஆத்திரத்தையும் வெறுப்பையும் தூண்டி அதிகாரத்தை நாடச் செய்வது இயற்கை. அந்த அதிகாரத் தேடல் இல்லாவிட்டால் அதற்குப் பதிலாக நசிந்த குணமும், நக்கல் கலந்த பேச்சும், தருணத்துக்கு ஏற்றமாதிரிச் சமாளித்துக் கொள்ளும் தந்திரமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஆயுதங்களாக இருக்கும்".
இது மு.தளையசிங்கம் என்ற தனிநபருக்கு மேலான விமர்சனம் அல்ல. மாறாக, இயல்பாக்கம் எவ்வாறு இயங்குகிறது என்பதை மேற்கண்ட வரிகள் பேசுகின்றன என்பதை எடுத்துரைக்கவே நூலிலிருந்து இந்தப் பகுதிகளைச் சுட்டிக்காட்டினேன். தளையசிங்கம் சாதி வெறியர் அல்ல. தலித் மக்கள் கிணற்றில் நீர் அள்ளும் உரிமைக்காக அவர் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், தலித் மக்களைப் பற்றிய அவருடைய பார்வை ஆதிக்க சாதிக் கற்பிதத்தின் அடிப்படையில் எழுந்த ஆதிக்கசாதிக் கருத்தியலே என்பதற்கு அவரது மேற்கண்ட எழுத்துகளே சாட்சி. அத்துடன் அவரது சாதி அந்தஸ்தும், கல்வியும், சமூக அந்தஸ்தும் அவர் இவ்வாறான சாதிய வசையை இயல்பாக எழுதி கடந்து செல்ல அரண் செய்கின்றன.
அதேவேளையில், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த நா.சண்முகதாசன் சாதியத்தக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நிகழ்த்தினார் என்பது உண்மை எனினும், அவரது சாதி அந்தஸ்து இங்கு இன்னொரு தளத்தில் இயங்குகிறது. 'உயர்' சாதியைச் சேர்ந்த ஒருவர், தலித் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார் எனக் குறித்துச் சொல்வதும் அவரது சாதிய அந்தஸ்தை அங்கீகரிக்கும் இயல்பாக்க மனநிலை தான். அம்பேத்கரை தலித் மக்களின் தலைவராகக் குறுக்கிச் சொல்வதும் அந்த இயல்பாக்கத்தின் இன்னொரு பக்கம்தான். இங்கு சாதியத்துக்கு எதிரான போராட்டம் மனித விடுதலைக்கான போராட்டம் என்ற அடிப்படை இயல்பாக்க கண்ணாடிக்குள்ளால் பார்க்கப்பட்டுச் சாதியச் சிந்தனையாகிறது.
ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் சாதியத்தை வெறுப்பவராக இருக்கலாம். சாதியத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவராகவும் இருக்கலாம். ஆனால், அவரது சாதிய சமூக இருப்பானது சமூகக் கற்பிதங்களால் எழுந்த கருத்தியல் தளத்தில் இயங்கி இயல்பாக்கம் அடைகிறது. அவர் அந்தக் கருத்தியலையும் இயல்பாக்கத்தையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்காமல் இருந்தால், அவர் அந்த இயல்பாக்கத்தின் பாகமாகவே செயல்படுவார். இந்த இயல்பாக்கம் இலகுவில் அடையாளம் காணப்படாமல் சூட்சுமமாக ஆபத்தற்றது போன்று இயங்குகின்றது. இதுதான் அடிப்படைப் பிரச்சனை.
ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் அடக்கப்பட்ட சாதிகள் மேலான ஒடுக்குமுறையை மனப்பூர்வமாக எதிர்ப்பவராக இருக்கலாம். ஆனாலும் ஒடுக்கப்பட்ட சாதியினர் வாழ்வில் ஒவ்வொரு கணமும் சந்திக்கும் நேரடி , மறைமுக ஒடுக்குமுறைகளை , வார்த்தைப் பிரயோகங்களை அவர் அனுபவித்திருக்கமாட்டார். அவ்வகையில் அவர் அந்த யதார்த்தத்தையும், சாதிய இயல்பாக்கத்தையும் புரிந்துகொண்டு தனது சாதி அந்தஸ்தின் பாத்திரத்தையும் அதனால் கிடைக்கும் சாதியச் சலுகைகளையும் விளங்கிக்கொள்ளாமல் செயற்பட்டால் அவரது சாதியத்துக்கெதிரான நிலைப்பாடு மேம்போக்கானதே.
சாதிய இயல்பாக்கத்தின் இன்னொரு வடிவம் கிண்டல்களும் கேலிகளும் . உதாரணமாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் 'சாதிப் புத்தி' என்று கேலியாக ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த நண்பர் ஒருவரை விளித்தாலோ அல்லது 'நீங்கள் அறிவார்ந்து பேசுகிறீர்களே..நீங்கள் ஆதிக்க சாதியை சேர்ந்தவரா?' என்று நக்கல் அடித்தாலோ அது சாதாரண விடயம் அல்ல. இது இரு தளங்களில் செயற்படுகிறது. முதலாவது கிண்டலடிப்பவரின் சாதி அந்தஸ்து. மற்றையது இயல்பாக்கம். கிண்டலடிப்பர் தனது சாதி அந்தஸ்தின் காரணமாக அந்தச் சொல் பிரயோகத்தைத் தவறாகக் கருதுவதில்லை. அவ்வாறான மொழிப் பிரயோகம் இயல்பாக்கம் அடைந்திருப்பதால், அவர் அதனை வெறும் நக்கலாகவே கருதுவார்.
இந்த அடிப்படையில் தான், சமீபத்தில் நிகழ்ந்த மு தளையசிங்கம் குறித்த கலந்துரையாடலில் அனோஜன் பேசியவற்றை மதிப்பீடு செய்கிறேன். தளையசிங்கத்தின் இலக்கிய, தத்துவப் பங்களிப்புகளைப் பற்றிய உரையில் "டொமினிக் ஜீவாவுக்கு கைலாசபதி மீதிருந்த அச்சத்தாலேயே தளையசிங்கம் சாதிக்கெதிரான போராட்டத்தில் பொலிசாரால் அடிக்கப்பட்ட செய்தியை மல்லிகையில் பிரசுரிக்கவில்லை" என்றார் அனோஜன். அந்த தகவலின் பின்னணியை, அதற்கான ஆதாரங்களை அந்த உரையாடலில் பங்கு பற்றியவர்கள் யாரும் அனோஜனிடம் கேட்கவில்லை. ஷோபாசக்தி அந்த உரையாடலை முகநூலில் பார்த்துவிட்டு, அதுவொரு ஆதாரமற்ற அவதூறு என எழுதினார்.
டொமினிக் ஜீவாவின் மீதான அரசியல், இலக்கிய விமர்சனங்களை மேற்கொள்வதும் ஆதாரமற்று அவதூறு செய்வதும் வெவ்வேறானவை. 'எவரும் எனக்கு எசமானன் அல்ல' என்று தொடர்ந்தும் முழங்கி, உறுதியுடனும் தன்மதிப்புடனும் வாழ்ந்த ஆளுமை ஜீவா. அவரது அற்புதமான சமூக - இலக்கியப் பங்களிப்புகளைப் பற்றிப் பலர் எழுதியும் பேசியுமுள்ளனர். டொமினிக் ஜீவாவைச் சிறுமைப்படுத்தும் வகையில் அனோஜனின் கூற்று வலிந்து புகுத்தப்பட்டதாகவே இருந்ததது என்பதைப் பலரும் அவதானித்து அனோஜனுக்கு எதிர்வினை ஆற்றிக்கொண்டுள்ளார்கள்.
அனோஜனின் உரையை பார்த்த போது, அவரது 'டொமினிக் ஜீவாவுக்கு அச்சம்' என்ற கூற்று சாதிய இயல்பாக்கத்தின் விளைவு என்றே எனக்குத் தோன்றியது. ஏனெனில்; கைலாசபதி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவரிடம் தலித் சமூகத்தைச் சேர்ந்த டொமினிக் ஜீவா அஞ்சியிருந்தார் எனக் கருதுவது சாதிய இயல்பாக்கத்தின் விளைவே. எனது முகநூல் பதிவொன்றில் அதைக் குறிப்பிட்ட நான், டொமினிக் ஜீவா ஆதிக்க சாதியைச் சேர்ந்த எழுத்தாளனாக இருப்பின் 'கைலாசபதியுடனான நட்புறவின் காரணமாக' என வந்திருக்கும் என்பதையும் குறிப்பிட்டேன்.
அந்தப் பதிவை நான் எழுதியபோது, மூன்று வருடங்களுக்கு முன்பாக அனோஜன் நண்பர் முரளி சண்முகவேலனுக்கு நக்கலாகச் சொன்ன வார்த்தைகளும் என் நினைவுக்கு வந்தன. அதனையும் எனது பதிவில் குறிப்பிட்டேன்.
முரளி சண்முகவேலன் தலித் அரசியல் செயற்பாட்டாளர். எழுத்தாளர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஒஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல் தொடர்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர். மூன்றாண்டுகளுக்கு முன்பாக 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படம் பற்றிய விமர்சனக் கூட்டத்தில் முரளி சண்முகவேலன் உரையாற்றினார். நிகழ்வு முடிந்த பின்பாக, அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றிய பலரும் பௌசரின் புத்தக நிலையத்தில் சந்தித்தோம். ஒரு கூட்டம் முடிந்தபின் இவ்வாறான சந்திப்புகள் வழமை, அங்கும் விவாதங்கள் தொடரும். அனோஜனும் அங்கு வந்திருந்தார். அன்றுதான் அனோஜன் முதற்தடவையாக முரளி சண்முகவேலனைப் பார்த்தார். முன்னே பின்னே பழக்கமில்லை.
அங்கேதான் அனோஜன் "நீங்கள் தெளிவாகவும் நுணுக்கமாகவும் பேசுகிறீர்களே, நீங்கள் பிராமணரா?" என்று முரளி சண்முகவேலனிடம் கேட்டார். முரளி எதுவும் பேசவில்லை. நான் தலையீடு செய்து 'அனோஜன் இவ்வாறு கேட்பது சாதிய மனநிலையின் வெளிப்பாடு' என விளக்கினேன். அதன் பின்பு நானும் முரளியும் வெளியே சென்று இன்னும் நிறையப் பேசினோம்.
இதை நான் முகநூலில் குறிப்பிட்ட போது ''ராகவனின் இந்தக் கூற்று தவறானது, நான் முரளியிடம் நீங்கள் அதிகம் பேசுகிறீர்களே, நீங்கள் என்ன பிராமணரா? எனக் கேலியே செய்தேன்" என அனோஜன் எதிர்வினை ஆற்றியிருந்தார். "அதிகம் பேசுகிறீர்கள், நீங்கள் பிராமணரா?" என்று கேட்பதில் ஒரு லொஜிக் இல்லை . ஏனெனில் பார்ப்பனர்கள் அதிகமாகப் பேசுவார்கள் என்ற சொல் வழக்கு நடைமுறையில் இல்லையென்றே சொல்லமுடியும்.
என்னை மறுத்த அனோஜன் தனது எதிர்வினையில் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட மற்றைய நண்பர்கள் இது குறித்துச் சாட்சியமளிக்குமாறு கோரியிருந்தார். மற்றைய நண்பர்களின் சாட்சியத்தைவிட, அனோஜனின் சாதிய நக்கலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட நண்பர் முரளி சண்முகவேலனின் சாட்சியமே முக்கியமானது என நான் கருதினேன். எனவே இது குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுமாறு நான் முரளி சண்முகவேலனிடம் கேட்டுக்கொண்டேன்.
இந்தக் கட்டுரை அனோஜன் மேலான எதிர்வினை அல்ல. அனோஜன் சாதிப் பற்றாளர் என்று நிரூபிப்பதும் அல்ல. சாதியம் எமது மொழி, பண்பாடு ஆகிய தளங்களில் எவ்வாறு நுணுக்கமாகச் செயற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். சாதியப் பெருமையும் , சாதிய அந்தஸ்தும் வாழ்வின் அங்கமாகி எவ்வாறு இயல்பாக்கமடைகிறது என்பதைக் கூர்ந்து கவனித்தல் காலத்தின் தேவை. எவ்வாறு வார்த்தைப் பிரயோகங்கள் சாதிய மனநிலையைப் பிரதிபலிக்கின்றன என்பதற்குமான உரைகல் அனோஜனின் சொற்பிரயோகங்கள். அவ்வார்த்தைப் பிரயோகங்களினால் ஒருவர் எவ்வாறு உளவியல்ரீதியாக பாதிக்கப்படுகிறார் என்பதை விளக்குவது முரளி சண்முகவேலனின் குறிப்பு. சாதியத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களுக்கு தமது சாதி அந்தஸ்தையும் இயல்பாக்கத்தையும் ஒவ்வொரு கணமும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய பெரும் பொறுப்பு உண்டு. அப்போது தான் சாதியத்தின் வேர்களை அசைக்க முடியும்.
கீழேயிருப்பது முரளி சண்முகவேலனின் குறிப்பு:
நண்பர் பௌசர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, நண்பர் ராகவனின் நெறியாள்கையின் கீழ் ஈஸ்ட் ஹாம் ட்ரினிட்டி மையத்தில் 'பரியேறும் பெருமாள்' படத்தைப் பற்றிய ஒரு விமர்சனக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். கூட்டம் முடிந்ததும் பௌசரின் புத்தக நிலையத்தில் அப்படத்தைப் பற்றியும் பொதுவாகவும் தொடர்ந்து பேசக் கூடினோம்.
ராகவன் இக்கட்டுரையில் சொல்லியிருப்பது போல், அனோஜன் எனக்கு முன்பின் பழக்கம் இல்லை. நான் பேசிக்கொண்டிருக்கும் போது அனோஜன் என்னை இடைமறித்து “நீங்கள் தெளிவாகவும் நுணுக்கமாகவும் பேசுகிறீர்களே நீங்கள் பிராமணரா?!” என்று கேட்டது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. பௌசர் நல்ல நண்பர் என்றாலும் - அந்த இடம், சூழல் எனக்குப் புதியது. எனவே இந்த மாதிரியான சாதியக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று நான் யோசிக்கையில், ராகவன் என் சார்பாக அனோஜனைக் கேள்வி கேட்டார். இப்போது சொல்கிற எந்த விளக்கத்தையும் அந்தத் தருணத்தில் அனோஜன் சொல்லவில்லை. எனவே, இப்போது அவர் சொல்கிற விளக்கங்களெல்லாம் வெறும் சப்பைக்கட்டு தான்.
லண்டனுக்கு வந்த பிறகும் நம்முடைய பழக்க வழக்கங்களை சாதிய அடையாளத்தின் மூலம் தான் எடை போடுகிறார்கள் என்ற போக்கு என்னை மிகவும் உறுத்தியது. அது மட்டுமல்ல, அனோஜன் மறைமுகமாக என்னுடைய சாதி என்ன என்று கேட்டதாகவே எனக்குத் தோன்றியது. இது குறித்து பின்பு ராகவனிடம் நான் சில முறை உரையாடியுள்ளது உண்மைதான்.
அனோஜன் என்ன காரணத்திற்காகவோ அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம். அவரோடு எனக்கு எந்த தனிப்பட்ட நிந்தனையும் இல்லை. ஆனால், ஒருவரின் சாதி பற்றியும் – மறைமுகமாக அதை அவரின் அறிவோடு சம்பந்தப்படுத்தியும் என்னை விட வயதில் இளையவரான ஒருவரால் லண்டனில் கேள்வி கேட்க முடியும்; அதை நாம் கண்டும் காணாமல் கடந்து செல்ல வேண்டும் – என்கிற எழுதப்படா சமூக நிலை என்னை மிகவும் உறுத்தியது. உறுத்துகிறது. லண்டனிலும், ஐரோப்பாவிலும், அமெரிக்கக் கண்டத்திலும் சாதியம் தொடர்கிறது என்பதற்கு இதுவோர் உதாரணம்.
அன்றைய தினம் அந்த உரையாடலுக்குப் பின்னர் அனோஜனும் நானும் ஒரு ரயில் வண்டியில் ஏறி 'ப்ளாக்ஹார்ஸ் ரோடு' ஸ்டேசனில் இறங்கி அவரவர் வீட்டிற்குச் சென்றோம். அப்படிச் செல்கையில் நான் அவரிடம் இது பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை; கேட்கத் தோன்றவில்லை; கேட்க முடியவில்லை. இது பற்றி பல நாட்கள் நான் யோசித்தது உண்டு. அப்படி நான் குரல் எழுப்பாமல், அனோஜனைக் கேள்வி கேட்காமல் விட்டதனால் தான் அந்த சம்பவத்தை என்னால் மறக்கமுடியவில்லை. ஆக, உண்மையில் அதிகம் பேசியது அனோஜன் தான்!
முரளி சண்முகவேலன்,
லண்டன்