மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான 'சசிபாரதி" சபாரத்தினம் ஈழத்தில் பத்திரிகைத் துறையினர் - இலக்கியவாதிகள் யாவருக்கும் நன்கு அறிமுகமானவர். 'சசிபாரதி" சபாரத்தினம் 1951 -ம் ஆண்டு 'வீரகேசரி" பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்தவர். 1961 - ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 'ஈழநாடு" பத்திரிகை தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இவர் இணைந்துகொண்டார். 'ஈழநாடு" பத்திரிகையில் உதவி ஆசிரியராக - செய்தி ஆசிரியராகப் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். பத்திரிகையில் எழுத்துப்பிழைகள் - வசனங்களில் இலக்கணப் பிழைகள் ஏற்படாது மிகச் சிறப்பாகத் திருத்தங்கள் செய்வதில் வல்லவர் எனப் பாராட்டுப் பெற்றவர். பல பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவிருந்து வளர்த்துவிட்டவர்.
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்தவர்.
இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள பல எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இவரை நன்றியோடு நினைவுகூர்வர். ஈழநாடு பத்திரிகை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய எஸ். திருச்செல்வம் ஆசிரியராக விளங்கிய 'முரசொலி"ப் பத்திரிகையிலும் சிறிது காலம் பணிபுரிந்தார். சிறுகதைகள் - குட்டிக்கதைகள் பல எழுதியவர். அவை நூல்களாகவும் வெளிவந்தன. இவரது குட்டிக் கதைகள் நூல் ஆங்கிலத்திலும் வெளியாகிப் பாராட்டுப் பெற்றது.
யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். யாழ் இலக்கிய வட்டத்தின் சார்பில் பல நூல்கள் வெளியிட உந்துசக்தியாகச் செயற்பட்டவர். மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள்வரை அன்பாகப் பழகி இலக்கிய உரையாடல் செய்வதில் மகிழ்ச்சியடைந்தவர். அரசியல் கட்சியினர் - மருத்துவத் துறையினர் - ஆசிரியர்கள் - தொழிற்சங்கவாதிகள் எனச் சகல துறையினருடனும் நெருங்கிப் பழகி வந்தவர். யாழ்ப்பாணம் - வைமன் வீதியிலுள்ள தனது வீட்டில் வசித்துவந்த இவர் போர் உக்கிரமடைந்தகாலத்தில் இடம்பெயர்ந்து தமிழ்நாடு சென்றார். பிள்ளைகள் எல்லோரும் புலம்பெயர்ந்து சென்றுவிடத் திருச்சி நகரில் மனைவியோடு அமைதியாக வாழ்ந்துவந்தார். தமிழகத்திலுள்ள பல இலக்கியவாதிகள் - பத்திரிகையாளர்களுடன் தொடர்புகளைப் பேணி மதிப்புப் பெற்றவராக இருந்தார். பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள் கண்டு நிறைவாழ்வு வாழ்ந்தார்.
2010 -ம் ஆண்டு அக்டோபர் 10- ம் திகதி திருச்சி நகரில் இவரது அபிமானிகளால் இவரின் 'முத்துவிழா" சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 'இனிய நந்தவனம்" சஞ்சிகை முத்துவிழா மலர் வெளியிட்டுக் கௌரவித்தது. யான் 2012 மே மாதம் திருச்சியில் இவரது வீடு சென்று சந்தித்தபோது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தார். என்னைக் கண்டதும் மிக உற்சாகமடைந்து உரையாடினார். ஒரு நாள் முழுவதும் அவரோடு தங்கிப் பல ஆண்டுகள் நாம் சந்தித்துப்பேச முடியாமல்போன அரசியல் - இலக்கிய விடயங்கள் - சர்ச்சைகள் குறித்து மிகவும் சுவராசியமாகப் பேசிக்கொண்டோம். பல்வேறு விடயங்களும் என்னுடன் பேசிக்கொண்டமை தனக்கு ஆறுதலளிப்பதாக அவர் மனந்திறந்து சொன்னவை இன்றும் ஞாபகத்திலுண்டு.
அவர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்..!
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான 'சசிபாரதி" சபாரத்தினம் திருச்சியில் 13 - 03 - 2013 -ல் காலமானார்.
என் கல்லூரிக் காலம்முதல் பல வருடங்கள் அன்பாகப் பழகிய அவரது மறைவை நினைக்கையில் நெஞ்சு கனக்கிறது..!
காலம் பல கடந்தாலும் ஈழத்து இலக்கிய - பத்திரிகைத்துறை வரலாற்றில் அவர் நாமம் நிலைத்திருக்கும்..!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.