பிரெஞ்சு எழுத்தாளர் எமிலி சோலாஅறிஞர் அ.ந.கந்தசாமி[14.10.1951ல் சுதந்திரன் வாரப்பதிப்பில் வெளியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் எமிலி ஸோலா பற்றிய கட்டுரையிது. சுதந்திரனில் ஸோலாவின் நாவலான 'நானா'வை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு முதல்வாரம் 'நானா'வின் ஆசிரியரான எமிலி ஸோலாவைப் பற்றி அ.ந.க எழுதிய அறிமுகக் கட்டுரையாக இதனைக் கருதலாம்]. உலக எழுத்தாளர் வரிசையிலே முதலிடம் பெற்றவர்களில் ஒருவர் எமிலி ஸோலா. ஸோலாவின் வாழ்க்கை துன்பமும், துயரமும் நிறைந்தது. வாழ்க்கைப் பாதையிலே சென்று கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இருளில் மறைந்திருந்து கள்வர்கள் தாக்குவதுண்டல்லவா? உலகத்திலுள்ள மாந்தரிலெ அனேகருக்கு ஏற்படும் துன்பங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் ஸோலாவோ துன்பத்தை எதிர்கொண்டழைத்த வினோதப் பிரகிருதி. 'பாதையிலே கள்வன் இருப்பான்; அதுவும் கத்தியும், ஈட்டியும், துப்பாக்கியும் தாங்கிக் காத்திருப்பான். நானோ நிராயுதபாணியாக உள்ளத்தின் துணிவொன்றே கவசமாக, சத்தியத்தின் கேடயமே காவலாகச் செல்கிறேன். கள்வன் ஆயுதபாணியாகக் காத்திருப்பது மட்டுமல்ல, என்னைத் தாக்குவதும் நிச்சயம். இருந்துமென்ன? துன்பம் நிறைந்த அந்தப் பாதையிலே செல்ல வேண்டியது உண்மை அறிந்த எனது பொறுப்பு. உலகினரென்னைப் பார்த்து எள்ளி நகையாடுவர். கருங்கற்பாறையில் கவிஞன் தன் தலையை மோதினால் கவிஞனுக்காபத்தா கல்லுக்காபத்தா? என்று பேசுவர். இருந்துமென்ன? வானந்தூளாகினாலும், மண் கம்பமெய்தினாலும், என் மண்டை சுக்குநூறாகினாலும் இந்தப் பாதையால்தான் சென்று தீருவேன். ஒரு உத்தம கொள்கைக்காக என்னையே நான் பணையம் வைக்கிறேன்!' என்ற ஒரே மனப்பான்மையோடு துன்பத்தை வரவேற்கச் சென்ற தியாக புருஷர் ஸோலா.


ஆம, ஸோலா எவனோ ஒருவன் காட்டிய வழியில் சென்று துன்பத்தின் கையில் மாட்டிக்கொண்ட ஏமாளிப் பேர்வழியல்ல. தெரிந்தே துயரத்தை வரித்தவர். இது நம்மைக் கொல்லும் நாகபாம்பென்று தெரிந்துகொண்டே நல்ல பாம்பின் நஞ்சுப் பைக்கு அருகாக தமது கைகளைக் கொண்டுபோய் வைத்தவர் அவர்.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றுகையில் எங்கோ பார்த்த குறி எவனோ ஒரு அப்பாவியைத் தாக்கி விடுகிறது. அவ்விதம் அகஸ்மாத்தாக ஏறப்டும் மரணத்தையோ , காயத்தையோ வைத்துக்கொண்டு தியாகி, தீரர் என்று வர்ணிப்பது இந்த விளம்பர யுகத்தின் வியாதி. ஸோலா அந்த ரீதியில் தியாகியாகவும், தீரராகவும் மாறியவரல்ல. நெருப்புச் சுடும் என்பது தெரிந்து கொண்டே அக்கினிப் பிரவேசம் செய்யத் துணிவு கொண்ட உண்மையான வீரர் அவர்; சுருங்கக் கூறின் குழந்தைபோலத் தெரியாத்தனமாக விளக்கின் சுடரோடு விளையாடி விபத்துக்காளாகும் மட்டி 'வீரர்' பட்டியலில் அவரைச் சேர்த்து விட முடியாது.

****************

எமிலி ஸோலாவின் முழுப் பெயர் எமிலி எட்வார்ட் சார்ள்ஸ் அண்டோயின் ஸோலா என்பதாகும். 1840-ம் ஆண்டு ஒரு இத்தாலியருக்கு மகனாகப் பிறந்த அவர் பிரெஞ்சு இலக்கியத்தின் சிரோரத்தினமாகப் பின்னால் மலர்ந்தவர். இன்று உலக மேதைகளில் தலை சிறந்த ஒருவராகவும் கணிக்கப்பெறுகிறார். ஆம் ஸோலாவின் மேன்மை அவர் எழுத்திலே இமயம்போல் நிமிர்ந்து நிற்கிறது. ஆயினும் அவரது மேன்மை அவரது தியாக வாழ்விலே தான் சூரிய கோளம்போல் சுடர்விட்டு நிற்கிறது என்று கூறலாம்.

***************

1803 ம் ஆண்டு.

ஸோலா அப்போது பிரபலமான எழுத்தாளராகி விட்டார். அவரது நூல்களை பிரெஞ்சு மக்கள் எதிர்பார்த்து வாசிக்கும் காலம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்தான் அவரது உத்தம வாழ்க்கையின் உச்சமான அச்சம்பவம் நடைபெற்றது.

கப்டின் டிரைபஸ் என்பவன் பிரெஞ்சுப் பட்டாளத்தில் ஒரு அதிகாரி. தாய் நாட்டிலே தளராத அன்புகொண்ட தேச பக்தன்.

அவன்மீது பொய்யும் புனைசுருட்டுமான வழக்கொன்றை பிரெஞ்சு அரசாங்கத்தின் பெரிய அதிகாரிகள் ஜோடித்து விட்டார்கள். ஜீவாதாரமான ராணுவ ரகசியங்களை நாட்டின் எதிரிகளுக்கு விலைபேசி விறக முன்வந்த கொலைபாதகம் புரிந்தான் என்பதே குற்றச்சாட்டு.

தேசத்துரோகி என்று விசாரணைக் கூண்டிலேறி, சிறைக்கூண்டிலும் தள்ளப்பட்டுப் பின்னர் தீவாந்தர சிட்சையும் விதிக்கப்பட்டது.

முழு உலகமும் அவனைக் குற்றவாளி என்று நம்பியது. 'துரோகி உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவன், நாட்டைக் காட்டிக் கொடுத்த நாசகாலன்' என்று பொது மக்கள் அவனை ஏசினர்.

ஆனால் 'தான் குற்றமற்றவன், நிரபராதி!' என்று அபலை டிரைபஸ் ஓலமிட்டான்.

இந்த ஓலம் எமிலி ஸோலாவின் காதில் வீழ்ந்தது. டிரைபஸ்ஸின் வாழ்க்கையை ஆராய்ந்தார். நடந்த சம்பவங்களின் உணமை விபரங்கள் யாவை என்று துருவிப் பார்த்தார். கடைசியில் அவர் ஒரு முடிவு கண்டார். டிரைபஸ் நிரபராதி! இதனை உலகறிய முழங்க வேண்டுமென்று விரும்பினார் அவர்.

ஆனால் நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டபின் இதைபற்றி யாருமே பேசிவிட முடியாது. கோர்ட்டை அவமதித்ததற்குக் கொடுஞ்சிறையில் துஞ்ச வேண்டிவரும்.

மெளனமாய் இருக்க வேண்டியதுதான். மனதோடு புதைந்த மர்மமாக டிரைபஸ் நிரபராதி என்ற செய்தியை மறைத்துவிட வேண்டியதுதான். ஆனால் ஸோலா அவ்விதம் சத்தியத்திற்குச் சமாதிகட்டிவிட்டு வாழ்ந்திருக்கச் சம்மதிக்கவில்லை.

சாகாத சத்தியத்துக்கு பிரெஞ்சு நீதிமன்றம் சமாதி கட்டிவிட்டது. அந்தச் சமாதியைப் பொடியாக்கி சத்தியத்தை புதை குழியிலிருந்து மீட்கவேண்டும். இது ஸோலாவின் உள்ளத்தின் உயிரின் வெறித் தாகமாக ஓங்க ஆரம்பித்தது.

நீதிமன்றத்துக்கு மட்டுமல்ல அஞ்ச வேண்டியிருந்தது. பிரெஞ்சுப் பொதுமக்களைப் பார்த்தும் நடுங்க வேண்டிய நிலைமையே ஸோலாவின் நிலைமை. துரோகிக்குப் பரிந்து பேசுகிறான் என்று மக்கள் தூற்றுவர். கோபாவேசம் கொள்வர். இன்னும் என்னென்ன செய்வர் என்று கூறிவிட முடியாது.

ஸோலா இந்தப் பயங்கரப் பாதையில் வெஞ்சிறையும் மக்கள் வெஞ்சினமுமே எதிர்கொள்ளும் ஒற்றையடிப் பாதையில் கால் வைத்தார். துணிந்து நடந்தார்.

'நான் குற்றஞ் சாட்டுகிறேன்' - என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் சட்டத்துக்கும் சர்க்காருக்கும் சவால் விடுத்தார். நீதிமன்றத்தை ஏளனம் செய்தார். வருவது வரட்டும் என்று துணிந்து நின்றார். வழக்கை உருவாக்கியவர்கள்மீதும் கூடக் குற்றஞ்சாட்டினார் அவர்.

துரோகிக்குப் பரிந்து பேசும் துரோகி என மக்கள் ஸோலாவைத் தூஷித்தனர். சத்தியத்தை நிலைநாட்டிப் புகழைடைய எண்ணும் மனிதர்கள் உலகில் ஆயிரக்கணக்கில் தோன்றாவிட்டாலும் ஓரிருவராவது அவ்வப்போது தோன்றக் கூடும். கீர்த்தியின் கவர்ச்சியின் முன்னால் கஷ்ட்டங்களைச் சகித்துக் கொள்ளும் துணிவும் தைரியமும் அவர்கள் உள்ளத்திலே தோன்றி ,மலர்வதும் சாதாரணம். ஆனால் சத்தியத்தை நிலைநாட்ட முன்வந்தால் நாட்டின் இகழ்ச்சியையே அடைய நேரிடும் என்று தெரிந்தும் அந்தப் பாதையிலே செல்ல முன்வந்தவர் ஸோலா!

ஸோலாவின் வாதம் மக்களிடையே செல்லுபடியாகவில்லை. அவர்கள் டிரைபஸ் ஸோலா உருவங்களைப் போல் வைக்கல் உருவம் சமைத்துத் தீயிலிட்டுக் கொளுத்தினர். ஸோலா மீது கல்லாலெறிந்தார்கள்.

அறிஞரின் இரத்தம் வீதியில் சிந்தியது. ' அவர் என்றும் எதிர்த்துவந்த கோடீஸ்வரக் கும்ப'லும் சதித்திட்டம் தீட்டி அவர்மீது வஞ்சம் தீர்க்க முன்வந்தது. போதாதற்குப் போலிசார் அவர்மீது வழக்குத் தொடர்ந்தார்கள். நீதிமன்றத்திலே' டிரைபஸ் குற்றமற்றவன. என் சிதையிலே நீதி சிறக்குமானால் போதும்! எனக்குத் திருப்தி' என்று முழங்கினார் மகாத்மா ஸோலா.

அவர் சிதைவுண்டார். எனினும் நீதி சிறந்து விடவில்லை. அவர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்குச் சிறைத்தண்டனை விதித்தது. இதனால் புரட்சிக்காரர் பலரும் செய்த வேலையையே அவரும் மேற்கொள்ளும்படி ஏற்பட்டது. பிரான்ஸை விட்டு இங்கிலாந்துக்கு கம்பி நீட்டினார் பெரியார்.

ஆனால் காலம் செல்ல நிலைமை மாறியது. பிரான்சிய அரசியலிலே மாற்றம். புதிய மந்திரி சபை ஒன்றும் உருவாகியது. உண்மையான தேசத்துரோகி எஸ்டர் ஹேஸி என்பவன் கோர்ட்டில் நிறுத்தப்பட்டான். அப்போது வெளிவந்த தகவல் மீண்டும் டிரைபஸ் பிரச்சினையை நாட்டிலே கிளப்பிவிட்டது. புனர் விசாரணை ஆரம்பித்தது.

ஸோலாவுக்கு வெற்றி! 1899ம் ஆண்டு ஸோலா உற்சாகம் நிறைந்த மனதோடு திரும்பினார். டிரைபஸ் விசாரணை நீண்டு கொண்டே போயிற்று. ஆனால் அதற்கிடையில் 1902ம் ஆண்டு ஸோலா ஒரு அடுப்பினால் ஏற்பட்ட விபத்திலே சிக்கி காலமாகி விட்டார். எனினும் அந்த மகானின் முயற்சி வீண் போகவில்லை. 1906ம் ஆண்டு டிரைபஸ் வழக்கிலே முடிவான் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

ஆம்! டிரைபஸ் நிரபராதி. ஸோலா பாவிக்குப் பரிந்து பேசியவரல்ல! நீதிக்குப் பரிந்து பேசியவர்! - என்று உலகம் அறிந்து கொண்டது.

அவரது கல்லறையிலே பிரபல பிரெஞ்சுக் கதாசிரியர் அண்டோஸ் பிரான்ஸ் உருக்கமான பிரசங்கம் செய்தார். ஸோலாவின் வாழ்க்கையின் பெருமையை நாடறியப் பேசினார் அவர்.


*******

ஸோலாவின் துயர்ச் சரிதை இது. கண்ணிராலும், வீரத்தாலும், தியாகத்தாலும், அன்பாலும், நெஞ்சுரத்தாலும் சமைக்கப்பட்ட அற்புதமான சரிதம். இந்தச் சரிதத்தை உலகமறியச் செய்த எப்ருமை அமெரிக்க சினிமாத் தயாரிப்பாளர் டாரிஸ் ஸெனக்குக்கு உரியதாகும். இதுவரை வெளிவந்த வாழ்க்கைச் சரிதச் சினிமாப் படங்களிலே ஒப்பற்ற சித்திரம் என அகிலம் கொண்டாடுவது 'எமிலி ஸோலா வாழ்க்கையே'யாகும்.

***********

ஸோலாவின் இலக்கிய வாழ்விலே இனிப் புகுவோம்.

ஸோலா இலக்கியத்திலே மோகனமான கனவுகளைத் தோற்றுவிக்கும் போக்கில் நம்பிக்கை கொண்டவரல்ல. சாக்கடை உலகைச் சாக்கடை நாற்றத்தை நாம் உணரத்தக்கவகையில் இயற்கைத்தன்மையுடனே சமைப்பதில்தான் அவரது சிறந்த கலை வெற்றி பெறுகிறதென்று கூறலாம். 'இயற்கை வாதம்' (Naturalism) என்று அவரும் அவரது கோஷ்ட்டியினரும் தமது இலக்கியப் பாணிக்கு நாமகரணம் செய்து கொண்டனர்.

ஸோலாவின் வாழ்க்கை பாரிஸ் குமாஸ்தாவாக ஆரம்பித்தது. சமூகத்தைத் திடுக்கிட வைத்து எழுதுவதில் அவர் சமர்த்தர். 1877ல் அவர் வெளியிட்ட 'லா அசமோயர்' நாவல் குடிகார வாழ்க்கையைச் சித்திரிப்பது. இதுவே அவரது புகழ் என்னும் கோட்டையின் கோபுரவாசலாக அமைந்தது எனக்குறிப்பிடலாம்.

சமுதாயம் அவர் பச்சை பச்சையாக எழுதிய விஷயங்களைக் கண்டு கொதிப்படைந்தது. சீறி உறுமியது. அவர் 'லா அசமோயர்' ஆவலை 'லா போய்ன் பப்ளிக்' என்னும் பத்திரிகையில் தொடர்கதையாக வெளியிட ஆரம்பித்தவுடனே நாடெல்லாம் அதிர்ச்சி. பத்திரிகையின் சந்தாதார்கள் சந்தாக்களை வாபஸ் பெற ஆரம்பித்து விட்டனர். 'பெரிய புள்ளிகள் கண்டனக் கடிதம் எழுதினார்கள். முடிவில் கதையைத் வெளியிட முடியாது எனப் பத்திரிகாசிரியர்கள் ஸோலாவுக்குத் தெரிவித்து விட்டனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது ஸோலாவினதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இன்னொரு சஞ்சிகை 'இதோ நான்பிரசுரிக்கிறேன்' என்று முன்வந்தது. அந்தப் பத்திரிகையின் பெயர் 'லா ரிப்பப்ளிக் டி லெட்டர்ஸ்' என்பதாகும். இதில் கதையின் பிற்பகுதி வெளியாயிற்று.

இந்த எதிர்பாராத விளம்பரத்தால் முடிவில் புஸ்தக ரூபத்தில் இந்நாவல் வெளியானபோது வெகுவிரைவாகவே ஒரு லட்சம் பிரதிகள் விற்றுப் போய்விட்டதாம்.

ஸோலா விமர்சகர்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி விடவில்லை. துணிவே உருவான அவர் என்ன கூறினார் தெரியுமா?

'முதலில் அவர்கள் எங்களைப் பார்த்து நகைப்பதில் ஆரம்பிப்பார்கள். ஆனால் பின்னர் எங்களைப் பார்த்து 'காப்பி' அடிப்பதில்தான் அவர்கள் முடிவடைவார்கள். ஆம். இலக்கியத்திலே ஒரு புது நூற்றாண்டை நாம் சமைக்கத் தொடங்கி விட்டோம்'.

'நானா' வெளியாயிற்று!

'நானா' தான் ஸோலா வாழ்வின் பெருவெற்றி. டிரைபஸ் சம்பந்தமாக அவர் அடைந்த வெற்றியோடு சமதையாக இந்த அபூர்வமான நூலைக் குறிப்பிடலாம். நாடக் அரங்கில் நட்சத்திரமாய் ஒளிவீசிய 'நானா' விபச்சாரத்தைத் தொழிலாய் நடத்திய ஒரு வேசி. அவளது வாழ்க்கையின் தோற்றம், மலர்ச்சி, சீரழிவு என்பனதாம் கதையின் பொருட்கள். நானா பாத்திரம் இலக்கிய உலகில் தனியிடம் தேடிக் கொண்டது.

இப்புஸ்தகம் வெளிவந்ததும் முழுப் பாரிஸ் நகரமும் புஸ்தகக் கடைகளுக்கருகே குழுமியது. முதற்பதிப்பான மொத்தம் 50,000 பிரதிகளும் வெளியான முதலாவது தினமே விற்றுத் தீர்ந்துவிட இரண்டாம் பதிப்பு 10,000 பிரதிகளை அடுத்த நாளே வெளியிடும் நிர்ப்பந்தம் பிரசுரகர்த்தாக்களுக்கு ஏற்பட்டது.

இன்று 'நானா' மொழிபெயர்க்கப்படாத வளம் பெற்ற பாஷை கிடையாது. ஆங்கிலத்தில் மட்டும் 15 லட்சம் கையடக்கப் பிரதிகள் இதுவரை விற்பனையாகியுள்ளன.

'நானா' புஸ்தகம் வேசியின் கதை அல்லவா? இது ஆசிரியரின் சொந்த அனுபவம் என்ற கயிறு திரிப்புகள் பலவும் வெளியாகின. 'நானா' என்ற வேசியோடு அவருக்கு நேரில் அறிமுகம் என்றும் அவளையே கதாநாயகி ஆக்கிவிட்டாரென்றும் வசைமாரி பொழிந்தனர்.

ஸோலாவும் 'மாடம் பவாரி' எழுதிய குஸ்தாவ் பிளாபரியும் நண்பர்கள். சிறுகதை மன்னர் மாப்பசான் ஸோலாவின் அந்தரங்க சிஷ்யர். எப்பொழுதும் ஸோலாவின் முன்னும் பின்னும் திரிவார் அவர். ரஷ்ய எழுத்தாளர் ரீடர்கினீவும் அவரை நேரிலும் வந்து தரிசித்தார்.

பிளாபரியின் இலக்கியப் போக்குக்கும் ஸோலாவின் இலக்கியப் போக்குக்கும் வித்தியாசம். இருந்தபோதிலும் பிளாபரி பிளாபரி ஸோலாவின் அகண்டாகாரமான இலக்கிய வளத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவருக்குப் பிடிக்காத அம்சம் ஸோலாவின் எல்லை மீறிய - சில சமயங்களில் அருவருப்பூட்டும் யதார்த்தவாதமேயாகும். பிளாபரி ஸோலாவைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'கலை உலகில் கால்கள் அழுக்கடைந்த விஸ்வரூபம் அவர். அதனால் என்ன? அவர் விஸ்வரூபம் படைத்தவர் என்பதை யார்தான் மறுத்துவிட முடியும்?'

ஸோலா சிறந்த ஆசிரியர். சிறந்த மனிதர். சிறந்த ஆசிரியனுக்கும் சிறந்த மனிதனுக்கும் உலகில் மதிப்பு நிலை பெற்றிருக்கும்வரை ஸோலாவின் புகழ் குன்றிலிட்ட தீபம் போல் அமர ஒளி வீசிக்கொண்டேயிருக்கும்.

- 14.10.1951ல் சுதந்திரன் வாரப்பதிப்பு. -

 

'பதிவுகள்' ஜூலை 2008இல் வெளிவந்த கட்டுரையின் மீள்பிரசுரம். இக்ககட்டுரை 14.10.1951 ஆண்டில் வெளிவந்த 'சுதந்திரன்'  பத்திரிகையின் வாரப்பதிப்பில் முதலில் பிரசுரமானதென்பது குறிப்பிடத்தக்கது. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்