முன்னுரை
திருமணம் என்பது பழங்காலந் தொட்டே இருந்து வருகின்ற ஒன்று. இத்திருமணம் பற்றித் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் களவியல், கற்பியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவிக்குரிய ஒப்புமைகளையும் ஒப்பில்லா குணங்களையும் தொல்காப்பியர்கூறியுள்ளார். அவற்றில் தலைமக்களுக்குரிய ஆகாத குணங்களை அகநானூற்றோடு ஒப்பிட்டு ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் உணர்த்தும் தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்’ எனும் இக்கட்டுரை ஆராயவுள்ளது.
தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்
இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பன்னிரெண்டு தன்மைகளையும் தொல்காப்பியம் கூறியுள்ளது. தற்பெருமை, கொடுமை, தன்னை வியத்தல், புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக் கூடாது, மறதி, ஒருவரையொருவர்ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பன்னிரெண்டு தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்றார். இதனை,
“நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறைப்போ டொப்புமை
என்றிவை யின்மை என்மனார்புலவர்.” (நூ.26)
எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். மேலும் இதனைக் குறித்து தமிழண்ணல் அவர்கள், “தொல்காப்பியர் பன்னிரண்டு ஆகாப் பண்புகளைக் கூறி, அவற்றைப் போக்க வேண்டும் என்று கூறுகிறார். திருமணத்திற்கு முன் இத்தகைய தீய குணங்கள் இல்லாதவர்களாகப் பார்த்து மணம் பேச வேண்டும். திருமணமாகிவிட்டாலோ, இத்தீய குணங்களை அறிவுரை கூறித் திருத்த வேண்டும். இன்றேல் இல்லறம் இனிதாக அமையாது.” (தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், ப.37) எனக் கூறியுள்ளார். அதாவது மேற்கண்ட குணங்கள் இல்லாதவர்களைப் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் இல்லையேல் திருமணம் என்பது இனிமை பயப்பதற்கு பதிலாக துன்பத்தை - துயரத்தைப் பயப்பதாகவே அமையும் என்பது அவர்தம் கருத்தாக உள்ளது.
நிம்பிரி
நிம்பிரியாவது பொறாமை, பிறர்நல்வாழ்வு கண்டு பொறுக்க முடியாத சிறுமை. இதன் தோற்றத்தினை, “இளையோர்பருவத்தில் G+ப்பின் மாற்றங்கள் ஏற்பட்டு விட்ட பின்னர் எதிர்பாலினர் பற்றிய அக்கரை வளரும் போது பொறாமைக் குணங்களும் தோன்றுகின்றன.” (இளையோர்உளவியல், தொகுதி -2, ப.88) மேலும், “பொறாமை என்பது சினம், அச்சம், அன்பு, இழப்பு ஆகியவைகள் இணைந்த மனவெழுச்சியாகும்.” (மேலது, ப.87) என அ. அப்துல்கரீம் கூறியுள்ளார். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.
கொடுமை
கொடுமை என்பது மற்றவர்களுக்கு கேடு ஏற்படுத்த வேண்டும் என்கின்ற தீய எண்ணம். இதனை இரா. இளங்குமரனார், “கொடுமை என்பது எந்த குற்றத்தையும் செய்யத் தயங்காத கொடிய தன்மை.” (தொல்காப்பியர்காட்டும் குடும்பம்,ப.30) என்பார். மேலும், “இளையோர் சினங்கொள்ளும் போது அவர்களின் சினத்தை உண்டாக்குகின்றவர்களை நேரடியாகத் தாக்காமல், ஒதுங்கிவிடுவர் அல்லது தங்களின் கைக்குக் கிடைத்தவற்றை எடுத்து அவர்கள் மீது வீசி எறிவர். சமயத்தில் குமுறலான செயல்களின் வழி மறைமுகமாக தங்களின் சினத்தை வெளியிடுவர். தங்களால் அச்சூழ்நிலையில் வேறொன்றும் செய்ய முடியாவிடில், பின்னர்வாய்ப்பு கிட்டும்போது எங்ஙனம் இதற்குப் பழிவாங்க வேண்டுமென்பதை மனதிற்குள் திட்டமிடுவர்.” (இளையோர்உளவியல், தொகுதி -2, ப.86) என அ. அப்துல்கரீம் கூறியுள்ளார். கொடுமை குறித்து அகநானூற்றில் பாடல் இல்லை.
வியப்பு
வியப்பு தன்னை தானே பெரியவனாக நினைத்தல். இது தற்புகழ் பாடுபவரிடமே வெளிப்படும் என்பதற்கும் வலுசேர்க்கும் விதமாக, “தற்பெருமை, தற்புகழ்ச்சி முதலியவற்றில் ஈடுபடுவோர்பொதுவாக தாழ்வு மனப்பான்மை உடையவராகவே இருப்பர்.” (மனோதத்துவ மருத்துவம்,ப.85) என ஆர்.எம்.சோமசுந்தரம் கூறியுள்ளார். மேலும் தி. ஆறுமுகம், “தமது வனப்பும் வளமும் சிறந்தவையாகக் கருதித் தம்மைத் தாமே புகழ்ந்துக் கொள்ளல்” (தொல்காப்பியமும் உளவியலும், ப.41) என வியப்பிற்கு விளக்கம் கூறியுள்ளார். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.
புறமொழி
புறமொழி என்பது ஒருவரை ஒருவர்புறங்கூறும் தன்மையாகும். இதனை, “குமரப் பருவத்தினரும் ஒருவரைப் பற்றி ஒருவர் புறங்கூறும் உளப்பாங்கை அறிய முடிகிறது.” (மேலது) என தி. ஆறுமுகம் கூறியுள்ளார். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.
வன்சொல்
வன்சொல் எனப்படுவது மற்றவர்கள் மனம் வருந்தும்படியாக கூறும் கடுஞ்சொல். இதனை, “வன்சொல்லாவது கடுஞ்சொல். ஏன் கொம்பும் காலும் முளைத்த கொடுஞ் சொல்லுமாம்! (க என்பதன் முன் கொம்பு (n); அதன்பின் கால் (h) என்பது ‘கொ’). மாந்தப் பிறவியை விலங்குப் பிறவியாக்கக் கூடியது வன்சொல். வன்னெஞ்சம் உள்ளிருப்பதன் அடையாளம் வன்சொல். அவ்வன்சொல்லின் வெளிப்பாடு வன் செயலாம் கொடுமை! இன்சொல்லாம் தேன் - தீம்பால் - இருக்க வேண்டிய இடத்தில், தேளையும் பாம்பையும் வைத்திருந்தால் எப்படியாம்? வன்சொல்லுக்கு அதன் கொடுமை விளக்க இப்பெயரைச் சூட்டினார்தொல்காப்பியர்.” (தொல்காப்பியர்காட்டும் குடும்பம், பக்.30 - 31.) என இரா. இளங்குமரனார்கூறியுள்ளார்.
சினத்தின் காரணமாகவே கடுஞ் சொற்கள் பிறக்கின்றன என்பதை, “சினத்தின் காரணமாக இளையோரிடம் பெரும்பாலும் ஏற்படுவது எதிர்வினை பேசுதலேயாகும். அவர்கள் சினமூட்டியவர்களைத் திட்டவும் வசைப் பாங்குடன் பேசவும் செய்கின்றனர்;.” (இளையோர்உளவியல், தொகுதி -2, ப.86) என அ.அப்துல்கரீம் கூறியுள்ளார். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.
பொச்சாப்பு
பொச்சாப்பு என்பது சோர்வு. இதனை, “செய்ய வேண்டுவன செய்யாச் சீர்கேடு அன்றியும், எல்லாமும் செய்ததாக முழங்கி ஆர்ப்பதும் பொச்சாப்பினர்இயல்பாம். பொய்த்து ஆர்ப்பு, பொச்சாப்பு.” (தொல்காப்பியர்காட்டும் குடும்பம், ப.31) என இளங்குமரனார்கூறியுள்ளார். மேலும், தி. ஆறுமுகம், “இளையோர்பருவத்தினரும் விரும்பத்தக்க ஒரு செயலைச் செய்ய முற்படும் நிலையில் உறுதியின்றிச் செயல்படுகின்றனர்என்பதிலிருந்து உணர முடிகின்றது.” (தொல்காப்பியமும் உளவியலும், ப.41) என்கின்றார். அதாவது தான் செய்யும் செயலில் உறுதியின்மையும், செய்ய துணிந்ததைச் செய்யாமையும், செய்யாததனைச் செய்ததாகக் கூறுவதனையும் பொச்சாப்பு எனக் கூறுகின்றனர். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.
மடிமை
மடிமை என்பது எவ்வித முயற்சியும் செய்யாமை. அதாவது சோம்பிய உள்ளம். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.
குடிமை
தன் குலத்தின் பெருமையினை நினைத்து தானே இன்பமடைதல் குடிமை ஆகும். இதனை,
“தூவல் கள்ளின் துனைதேர் எந்தை”(அகம்.298(15))
எனும் அகநானூற்று பாடலில் ‘மழை போன்று பொழியும் கள்ளையும், விரைந்த செலவையுடைய தேரையும் கொண்ட எம்தந்தை’ எனுமிடத்தும், 280(7-10), 310(8-9), 350(10-15), 352(8) ஆகிய பாலடிகளிலும் குடிமை யெனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன.
இன்புறல்
தாமே இவ்வுலகினில் இன்பமுடையவர்என நினைக்கும் தன்மை. இதனை,
“காஞ்சி நீழல் தமர்வளம் பாடி”(அகம்286.(4))
எனும் அகநானூற்று பாடலில் ‘காஞ்சி மரத்தின் நிழலில், தம் சுற்றத்தாரின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருப்பர்’ எனுமிடத்து இன்புறலெனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.
ஏழைமை
ஏழைமை என்பது பேதைமையாகும். அதாவது அறிவின்மையால் தோன்றுவது. இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.
மறப்பு
மறப்பு என்பது தன்வாழ்வினில் நடந்ததனை மறத்தல். அதாவது, தான் செய்வதாகச் சொன்னதனை மறந்துவிடுதல், மற்றவர்கள் தனக்கு செய்ததனை மறந்துவிடுதல் எல்லாம் மறப்பின் பாற்படும். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.
ஒப்புமை
திருமணமான அல்லது காதலித்துக் கொண்டிருக்கின்ற ஆணோ பெண்ணோ தன்னால் காதலிக்கப்படவரை போலவே உள்ளனர்என மற்றவர்களை தன்னுடைய காதலியோடு காதலனும், காதலனோடு காதலியும் ஒப்புமைப் படுத்திப் பேசுவது ஒப்புமையாகும். இதன் விளைவினை தமிழண்ணல் அவர்கள், “காதலித்தப்பின் அல்லது திருமணமான பிறகு ஆடவன் தன்னவளை, வேறு பெண்களுடன் ஒப்பிட்டு எண்ணலாகாது. அவளும் தன் கணவனைப் பிற ஆடவருடன் ஒப்பிட்டு எண்ணலாகாது. இவ்வுணர்வுகள் தவறான வழிக்கு இட்டுச் செல்லும். தனக்கு ஒருத்தி என அமைந்து விட்டால், அவள் தான் தனக்கு எல்லாம் என எண்ண வேண்டும்.” (தொல்காப்பியர்விளக்கும் திருமணப் பொருத்தம், ப.46) என கூறியுள்ளார். இதனை இரா. இளங்குமரனார்அவர்கள் கூறுமிடத்து, “ஒருவர்இயல்செயல் மற்றொருவரை ஒப்ப இருத்தல் இயற்கை. ஆனால், உள்ளார்ந்த அன்பினர்தாமே அவராகவும் அவரே தாமாகவும் உடையார், அவ்வியல் செயல் உடையாரைக் கண்டு உணரினும் ஒப்பிட்டுக் கூற மனமொவ்வார்!” (தொல்காப்பியர்காட்டும் குடும்பம், ப.34) என்கின்றார்.
இவ்வொப்புமையைக் குறித்து அறுவகை இலக்கண நூலாசிரியர்வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,
“தன்னுடைக் கேள்வனைத் தலைவியை விழைவார்ப்
பகைத்தலும் மாந்தர்தம் பண்பில் பழமையே”(அறு.பொரு.42)
என கூறுகின்றார். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.
மேலே கூறிய பண்ணிரண்டுவகை ஒப்புமையில்லாத குணங்களும் தமிழ்க் காதலுக்கு ஆகாத பண்புகளாகக் கருதப்பட்டன. அவற்றுள் அகநானூற்றில் குடிமை, இன்புறல் எனும் மெய்ப்பாடுகளை மட்டுமே விளக்கப் பாடல்கள் அமைந்துள்ளன. ஏனைய பத்து மெய்ப்பாடுகளை விளக்க அகநானூற்றில் பாடல்கள் இடம்பெறவில்லை. ஆதலால் சங்க இலக்கியமான அகநானூறு அக்கால மக்களின் நற்குணங்களையும், நற்பண்புகளையும் எடுத்துக் கூறும் இலக்கியமாக அமைந்துள்ளது.
முடிவுரை
காதலித்த பெண்ணைக் கைவிடுதல் - ஏமாற்றுதல். ஒருவகையில் இவ்வகையான ஒழுக்கமின்மைதான் ‘அனைவருக்கும் தெரிவிக்கும் வகையிலான திருமணம்’ என்ற கருத்தாக்கத்தைத் தோற்றுவித்தது. கற்பு எனச் சொல்லப்படுவது சடங்குகளோடு கூடிய திருமண முறை என்றும், கொடுத்தற்குரிய மரபினர்கொடுக்க, கொள்ளுதற்குரிய மரபினர்கொள்வது. தலைவி பெற்றோரை விட்டுத் தலைவனுடன் ஒன்று சேர்ந்து தனிவழி போகுமிடத்தும், கொடுப்பதற்குத் தலைவியின் உறவினர்கள் (தமர்) இல்லாதவிடத்தும், சடங்கு முறையோடு கூடிய மணம் நடைபெறுதலும் உண்டாம். உடன்போக்கு என்பது ஒருவகையான திருமண நிகழ்ச்சியாயிற்று. சங்ககால சமூகத்தில் குடும்பத்தில் கணவனாகயிருக்கும் ஆண், குடும்பத்துக்கு வெளியே காமக்கிழத்தி காதற்பரத்தை முதலான பெயர்களில் பல பெண்களோடு பாலியல் சேர்க்கை கொள்ளுவதிலிருந்து அவனைத் தடுக்கும் வழக்கமோ சட்டமோ கிடையாது. இத்தகைய ‘மீறல்களை’ அன்றைய சமூகம் பொருட்படுத்தவில்லை. பாலியல் உறவுகள் ஒழுக்கக் கேடானவையாக அன்று பழிக்கப்படவில்லை. மனித இனம் தற்போது நாகரிகம் பெற்று சிறந்து விளங்குவதற்குக் காரணம் திருமணம். அவர்தம் வாழ்க்கை முழுமையான பயனைப் பெறுவது திருமண வாழ்விற்குப் பிறகுதான். திருமணம் சமுதாயத்தில் தனிச் சொத்துரிமை வளர்ச்சிக்கு வித்திட்டதாகவும், ஆண்வழிச் சமுதாயத்திற்கு அடிக்கோலியதாகவும் தெரிகின்றது. பண்ணிரண்டு வகை ஒப்புமையில்லாத குணங்களும் தமிழ்க் காதலுக்கு ஆகாத பண்புகளாகக் கருதப்பட்டன. அவற்றுள் அகநானூற்றில் குடிமை, இன்புறல் எனும் மெய்ப்பாடுகளை மட்டுமே விளக்கப் பாடல்கள் அமைந்துள்ளன. ஏனைய பத்து மெய்ப்பாடுகளை விளக்க அகநானூற்றில் பாடல்கள் இடம்பெறவில்லை. ஆதலால் சங்க இலக்கியமான அகநானூறு அக்கால மக்களின் நற்குணங்களையும், நற்பண்புகளையும் எடுத்துக் கூறும் இலக்கியமாக அமைந்துள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர்: - பேரா.பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர்- 632001. விளாப்பாக்கம் - 632521 -