- 2016ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளதையொட்டி வெளியாகும் கட்டுரை இது. -
1.
‘தினமணி கதி’ரில் எழுதத் தொடங்கிய காலத்தில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் மூலமாக தொடர்பேற்பட்ட முக்கியமான நண்பர்களில் ஒருவர் ராஜமார்த்தாண்டன். எனக்கும் அவருக்குமிடையில் இணைவான பழக்கங்களும், இலக்கிய ஆர்வங்களும் இருந்தவகையில் அந்தத் தொடர்பு மேலும் விரிவு கண்டது. ராயப்பேட்டை நாகராஜ் மேன்சனில் ராஜமார்த்தாண்டன் தங்கியிருந்த காலப் பகுதியில், அனேகமாக ஒவ்வொரு ஞாயிறும் சந்திப்பதாக அது வளர்ந்திருந்தது. கும்பகோணத்தில் நடைபெற்ற நிறப்பிரிகை சார்பான புதுமைப்பித்தன் கருத்தரங்கில் இருவரும் ஒன்றாகவே சென்று நிகழ்வில் கலந்து கொண்டிருந்தோம். இவை இன்னொரு நெருங்கிய வட்டத்தில் எம்மை இழுத்திருந்தன. அக்காலத்தில் ராஜமார்த்தாண்டன் மூலமாக அவரது நண்பராக எனக்கு அறிமுகமான பெயர்தான் கவிஞர் சுகுமாரன். சில ஞாயிறுகளில் சுமுமாரனும் வரவிருப்பதாக ராஜமார்த்தாண்டன் சொல்லியபோதும், என்றைக்கும் அவரை அங்கு சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. நிறைய எழுதுகிறவரில்லை சுகுமாரன். அவரின் எழுத்தின் ஆழங்களால் இன்னுமின்னும் காணுதலின் விழைச்சல் அதிகமானபோதும், 2003இல் நான் இந்தியாவைவிட்டு புறப்படும்வரை அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் என்னை எட்டவேயில்லை. நாகர்கோவில் காலச்சுவடு தலைமை அலுவலகத்தில் 2014இல் அவரைக் காணவும் பேசவுமான முதல் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே, அவரது பெரும்பாலான நூல்களை நான் வாசித்திருந்தேன். அறிமுகப் படுத்தாமலே இருவரும் அறிமுகமாகியது அந்த ஆரம்பத்தின் முக்கியமான அம்சமெனக் கருதுகிறேன்.
2016ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு அறிவிக்கப்பட்ட சில நாள்களில், மீண்டும் அவரது கவிதைகளையும், உரைக்கட்டுத் தொகுப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வாசிக்க உந்துதல் ஏற்பட்டது. கவிஞராக, உரைக்கட்டாளராக, பத்தி எழுத்தாளராக, விமர்சகராக, நாவலாசிரியராக, இதழியலாளராக, மொழிபெயர்ப்பாளராக, சினிமா ஆர்வலராக, தொலைக்காட்சி மற்றும் நூல் வெளியீட்டுத்துறைகளில் பணியாற்றியவராக பல்வேறு அம்சங்களில் அவரது இலக்கியப் பங்களிப்பு இருந்திருப்பதை அப்போது புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
பல்வேறு கலை, இலக்கியத் துறைகள் சார்ந்து காத்திரமாக இயங்கியுள்ள கவிஞர் சுகுமாரன் அவற்றில் ஓரிரு அம்சங்களில் முக்கியமான, தனித்த ஆளுமையாக விளங்கியிருக்கிறார். குறிப்பாக கவிதைப் படைப்பு, கவிதை விமர்சனம் சார்ந்த துறைகளில் அவை நிகழ்ந்திருப்பதாகக் கொள்ளமுடியும்.
தமிழில் பத்தியெழுத்து என்கிற வகையினமானது பரவலாகவும் ஆழமாகவும் உண்மையான அதன் அர்த்தத்தோடு இருக்கவில்லையென்று பொதுவாகக் கூறமுடியும். ஆனால் ‘வெளிச்சம் தனிமையானது’, ‘தனிமையின் வழி’, ‘இழந்தபின்னும் இருக்கும் உலகம்’, ‘திசைகளும் தடங்களும்’ போன்ற சுகுமாரனின் தொகுப்புகளின் பல பதிவுகளும் பத்தியெழுத்து வகைக்கு முக்கியமான பங்களிப்புச் செய்தவையாய் அமைந்திருக்கின்றன. விளக்கம், சுருக்கம், அடர்த்தி, விமர்சனமுமான அவற்றின் பண்பு இவற்றில் மிகச் சிறப்பாக அமைந்து காணப்படுகின்றன.
தமிழ் – மலையாளம் ஆகிய இருமொழிகளின் இலக்கிய ஊடாட்டத்திலும் அவரது பங்களிப்பு முக்கியமாயிருந்ததாக கருதமுடிகிறது. பஷீர், தகழி, ஓ.வி.விஜயன், பணிக்கர், குமாரன் ஆசான், ஏ.ஐயப்பன் போன்ற மலையாள இலக்கியவாதிகள்பற்றி நிறையவே சுகுமாரன் எழுதியிருக்கிறார். இவைபற்றிய என் முழுமையான பதிவாக இல்லாவிட்டாலும், ஒரு அறிமுகத்துக்கான விகாசத்துடன் இவ்வுரைக்கட்டை இங்கே பதிவாக்குகிறேன்.
2.
ஏற்கனவே வெளிவந்திருந்த ‘கோடைகாலக் குறிப்புகள்’, ‘பயணியின் சங்கீதம்’, ‘சிலைகளின் காலம்’, மற்றும் ‘வாழ்நிலம்’ ஆகிய நான்கு கவிதை நூல்களுடன் பின்னால் வெளிவந்த கவிதைகளையும் உள்ளடக்கி ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ என்ற தலைப்பில் உயிர்மை வெளியீடாக 2006இல் வெளிவந்திருக்கும் தொகுப்பு சுகுமாரனின் தடத்தை தமிழ்க் கவிதையுலகில் பதித்திருக்கிறதென்பது மிகையான வார்த்தையில்லை.
தொகுப்புகளின் தலைப்புக் கவிதைகளான ‘கோடைகாலக் குறிப்புகள்’, ‘பயணியின் சங்கீதம்’, ‘சிலைகளின் காலம்’, ‘வாழ்நிலம்’, ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ ஆகிய கவிதைகளோடு ‘ஸ்தனதாயினி’, ‘கபாலீஸ்வரம்’, ‘அவரவர் வீடு’, ‘முதலாவது வார்த்தை’, ‘கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்’ ஆகியவை இத்தொகுப்பின் முக்கியமான கவிதைகளாக எனக்குத் தோன்றுகின்றன.
அறுபதுகளிலிருந்து வீறாக வளர்ந்துவந்த புதுக்கவிதை இடையில் நீர்த்துவிட்டதோ என எண்ணுமளவிற்கு அதிகமாகவும், செறிவின்மையுடனும் வெளிவர ஆரம்பித்த காலத்தில், வீறார்ந்த கவிதைகளைப் படைக்கத் துவங்கிய சில கவிஞர்களில் சுகுமாரனும் ஒருவராக இருந்தார். அக் காலமே புதுக்கவிதை தான் நடந்துவந்த பாதையிலிருந்து விலகி மறுபடி வேறொரு கோணத்தில் முன்னேறிய காலமுமாக இருந்தது. வெவ்வேறு காலப் பகுதியில் வெளியான சுகுமாரனின் கவிதைகளை நோக்கினால், புதுக்கவிதையின் மாற்றத்தைப் போலவே, அவரின் வளர்ச்சியிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுகொள்ள முடியும்.
‘காற்றைக் கடந்தன யாருடையதோ சொற்கள்
‘கொடுமையானது
இந்தக் கோடைக் காலம்’
இல்லை
எப்போதும் நாம் வாழ்வது கோடைக் காலத்தில்’ (கோடைக்கால பயணியின் குறிப்புகள்) என்றும்,
‘எனது நிலக்காட்சி மாறிக்கொண்டிருக்கிறது
அங்கே
வற்றிப்போயிருக்கிறது நதியின் சங்கீதம்
அங்கே
கூடுகள் தகர்ந்து அலைகின்றன கிளிகள்
அங்கே
எரியும் நிலத்தில் உருகுகின்றன தாவரங்கள்
எனது பிரக்ஞை
சந்தை நெரிசலில் ஊன்றுகோல் தொலைத்த குருடனாய்த் தடுமாறுகிறது’ (பயணியின் சங்கீதம்) என்றும்,
‘நீரில் மரணம் இனிது
அதனினும் இனிது
நிலத்தின் வாழ்வு’ (வாழ்நிலம்) என்றும்,
‘அரிசித் தாம்பாளத்திலிருந்து
காகித வெளியை அடைய
எழுத்தைத் திறந்து
வரிகளைத் திறந்து
வந்திருந்தாள் குட்டிப் பெண்
மகிழ்ந்து கசிந்தேன்
எனினும்
வார்த்தைகளாலேயே இனி
பூமியை வாசிப்பாள் என்பதால்
மனவெளியில் ஏதோ நெக்குவிடும் பேரோசை (பூமியை வாசிக்கும் சிறுமி) என்றும்,
இன்று எனக்கு
யோசிக்க பரிமாற பிழைக்க
மூன்று மொழிகள் தெரியும்
உபரியாக மௌனமும் (முதலாவது வார்த்தை)
என்றும் வரும் வரிகளிலிருந்து கவிதைத் துறையில் கவிஞர் சுகுமாரனின் வளர்ச்சி, மற்றும் மாற்றங்களை அவதானிக்க முடிகிறது. இதை சுகுமாரனே தனது ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ கவிதைத் தொகுப்பு முன்னுரையில் தெளிவாகக் கூறியிருப்பார்: ‘எழுதத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் கவிதைபற்றி உருவாக்கி வைத்திருந்த கருத்துக்கள் செயல்பாட்டில் தேவையற்றவையாயின. வாழ்வின் சலனத்துக்கு ஏற்ப மாற்றமடைந்தன. புதிய நிலைகளுக்குச் சென்றன. பாதிப்பகளுக்கு உள்ளாயின. அவற்றிலிருந்து மீள முயன்றன.’
எழுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து கவிதை எழுதப் புகுந்த சுகுமாரனின் முப்பதாண்டு படைப்புகள் அவரது கவிதையுலகின் ஒரு கட்டமாகிறது என்பது எனது கருத்து. இனி என்பது எச்சமாய் நிற்கிறது.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அவருடைய வாழ்க்கையொன்றும் இலகுவான, சுகமான பாதையில் நடந்ததென அவரது பதிவுகள்மூலம் கொள்ள முடியவில்லை. சாதாரண மனிதனை அழுத்தும் வாழ்க்கையின் அத்தனை அழுத்தங்களிலும் தோய்ந்து, நொந்து, இலக்கியங்களில் ஆசுவாசம்கொண்டு அவர் காலங்களைக் கடந்து வந்திருப்பது தெரிகிறது. இந்த அனுபவங்கள்தான் கவிதானுபவமாக கவிஞர் சுகுமாரனில் வெளிவந்திருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.
இது தமிழ்க் கவிதை பொதுவாக அடைந்துகொண்டிருந்த மாற்றமும், வளர்ச்சியும்தான். இதில் சுகுமாரனின் இடம் எங்கு இருக்கிறதெனில், இத்தனை அழுத்தங்களுள்ளும் மூழ்கிவிடாமல் கெம்பி எழுந்து சகிப்பும், சாகஸமும் கண்டதுதான். அதனாலேயே தன்னுணர்வின் இப் பகிர்வு, சித்தாந்தங்களுக்குள்ளான அழுந்துதலாகப் போய்விடாமல் அவரை கைதூக்கிவிட்டிருக்கிறது. அனுபவத்தினுள்ளே இருந்தல்ல, அனுபவத்தின் வெளியிலிருந்தே கவிதை தன் உணர்வோடும், உயிரோடும் பிறக்கிறதெனின், அந்த விலகிநிற்றல் கவிஞனுக்கு அவசியமே ஆகிறது. சுகுமாரனின் கவிதைகள் பெரும்பாலானவற்றிலும் வாசகன் காணக் கிடப்பது இந்த ஆத்மசுத்திதான்.
இன்னொரு வகையில் பார்க்கப்போனால் Lyrical poem என்ற பண்பு சார்ந்து அவரது பல கவிதைகள் இருப்பதைக் கவனிக்கமுடியும். குறிப்பாக நீண்ட கவிதைகளில் இந்த பண்பு அதிகமும் துலங்குவதாகக் கொள்ள ஒரு வாசகனுக்கு நிறையவே இவற்றில் ஊடு இருக்கிறது. ‘கபாலீஸ்வரம்’, ‘கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்’ போன்றவை அத்தகையன.
சுகுமாரனுக்கு கவிதைபற்றிய கறாரான வரையறுப்பு இருப்பதாய்க் கொள்கிறபோதே, அவருக்கு கவிதைக் கொள்கையென்பது நிலைமாறாததாய் இல்லையென்றும், ‘கவிதைக்கு நிர்ணயித்த போக்குகள் எதுவும் கிடையாது’ (உண்மையின் கரிப்புகள்) எனச் சொல்வதிலிருந்து கொள்ளமுடிகிறது. இதை அவரது உரைக்கட்டுகளின் ஊடாகவும், கவிதைகளின் ஊடாகவும் காணமுடியும்.
கவிதையின் பயணமென்பது இரு தளங்களில் நிகழ்வதாய் நான் கருதுகிறேன். ஒன்று, கவிதைப் படைப்பு. இன்னொன்று, கவிதை விமர்சனம். இந்த இரண்டும் ஒரே ஊற்றிலிருந்து பீரிட்டெழும் விந்தையாக சுகுமாரனின் கவிதைப் பயணம் அமைந்திருக்கிறது. அதை மிகக் கறாரான கவிதைச் சிந்தனையோடு அவர் செய்துகொண்டிருக்கிறார்.
‘எழுத்து’ காலத்தில் வளர்ந்த கவிதையை புதுக்கவிதையென்றும், அதற்கு முந்திய காலகட்டத்து கவிதையை நவீன கவிதையென்றும் இவர் வகுப்பதுபோல் தோன்றுகிறது. இது வரலாற்றுப் போக்கில் மிகச் சரியாகவே பொருந்திப் போகிறது. தொண்ணூறு வரை இருந்த புதுக்கவிதைகளின் போக்கு இன்று மாறியுள்ளதென்றும், இரண்டாயிரத்துக்கு மேலே தோன்றி இன்றுவரை வந்துகொண்டிருக்கும் புதுக்கவிதையானது முந்திய காலகட்டத்து கவிதைகளோடுள்ள உறவை பெரும்பாலும் இறகிறகாய் உதிர்த்து வருகின்றதென்றும் கவிதையுலகில் இன்று இருக்கும் விமர்சன அபிப்பிராயம் அவரது பகுப்பின் நீட்சியானதென கொள்ளமுடியும்.
புதுக்கவிதை தோன்றிய காலத்து உணர்வு இன்றைக்கு கவிதைப் பொருளாக பெரும்பாலும் இல்லை. அகமன அவலங்களையும், சமூக வெளியின் இருண்மைகளையும் அவை முதன்மைப் படுத்தியிருந்தன. ஒருவகையில் இதை மேனாட்டுத் தாக்கத்தின் விளைவெனச் சொல்லமுடியும். அவ்வகையான உறவுகள் பின்னால் உதிர்க்கப்பட்டு நிலம் சார்ந்த, மொழி சார்ந்த, தமிழ் வாழ்நிலை சார்ந்ததாக கவிதையின் சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாற்றங்களை கேலியாகவும், உரைநடைத் தன்மையதாகவும், நேரடித்தனமாகவும், இசைத்தன்மை சார்ந்ததாகவும் இருபத்தோராம் நூற்றாண்டுக் கவிதை இருப்பதான அவதானிப்பு சுகுமாரனிடம் இருக்கிறது. இந்தத் தடத்திலேயே இவரது கவிதைபற்றிய மதிப்பீடுகளும் இருந்திருக்கின்றன. நவீன காலக் கவிஞர்களான பசுவய்யா, விக்கிரமாதித்யன், தேவதச்சன், சுயம்புலிங்கம், சங்கரராமசுப்பிரமணியன் போன்றவர்களின் கவிதையைக் கவனிக்கிற இடத்தில் இந்தப் பார்வையின் கீறுகள் வந்துவிழுவதைக் காணமுடிகிறது. இது விமர்சனரீதியாக முக்கியமானதொரு அம்சமென நான் கருதுகிறேன். இந்தப் பார்வையினால்தான் சமகால கவிதையின் வளர்ச்சியையும் மாற்றத்தையும் அளவிட்டுக்கொள்ள முடியுமென்பது சரியான கணிப்பீடே.
கல்வி நிறுவனங்கள் சார்ந்த விமர்சன மரபிலிருந்து, வாசிப்பினதும் அனுபவத்தினதும் அடிப்படையிலான விமர்சனப் போக்குகளை அமைத்துக்கொள்ளும் நிறுவனங்கள் சாரா உதிரியான விமர்சகர்களே பெரும்பாலும் எந்த மொழியிலும் இலக்கியத்தின் சரியான திசையை நெறிப்படுத்தியிருக்கிறார்கள். ‘கவிதை அனுபவமும் கருத்தும் ஒருங்கிணைந்த படிமம் என்ற கருத்தைக் கவிதையியலின் ஆதாரமாகக் கருதுகிறேன்’ என சுகுமாரன் குறிப்பிடுகிறார். அந்தவகையில் தமிழ்க் கவிதையின் இந்த புதிய பண்பு பெண்கவிதையின் வெளிப்பாட்டுக்கு அதிக அழுத்தமும், முக்கியத்துவமும் கொடுத்திருப்பதை நம்மால் கவனிக்கக்கூடியதாயுள்ளது. பசுவய்யா (சுந்தர ராமசாமி)வின் கவிதைகளை மொத்தமாக விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்ட ராஜமார்த்தாண்டனுக்குப் பிறகு, அவரது கவிதைகளை அதிகமும் விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டது கவிஞர் சுகுமாரனென்றே தெரிகிறது. பெண்களின் கவிதைகளையும் காலம், கலாச்சாரம், மொழி, விடுதலை, பெண்ணுடல் ஆகிய தளங்களில் வைத்து விமர்சனம் செய்த ந.முருகேசபாண்டியன் போன்ற சிலரில் சுகுமாரனும் ஒருவர். அவரது பெண் கவிதைகளின் மீதான பார்வை முக்கியமானது. பெண் கவிதைமொழியை ஆரோக்கியமாக முன்னெடுக்க அது உதவுவது.
இந்த வளர்சிதை மாற்றத்தை புரிந்து அதற்கான தளத்தில் கவிதைகளின் தன்மையையும் தரத்தையும் தரப்படுத்தும் சுகுமாரனது முயற்சி தமிழில் முன்மாதிரி. வேறு சிலரால் இக்கூறு அணுகப்பட்டிருப்பினும், தமிழில் தானே சிறந்த கவிஞராக இருப்பதினாலும், மலையாளம் ஆங்கிலம் ஆதிய மொழிகளிலிருந்து கவிதைகளை மொழிபெயர்த்திருப்பதினாலும் கவிதையை அதன் ஆகக்கூடுதலான எல்லைவரை சென்று உணர இவரால் முடிந்திருக்கிறதெனக் கொள்வதில் தவறில்லை. அதனடியான விமர்சிப்பு தமிழுக்கு ஆக்கபூர்வமான நன்மையை அளிக்கக்கூடியது.
3
‘கவிதையின் திசைகள்’ என்ற தலைப்பில் உலகக் கவிதைகள், ‘பாப்லோ நெரூதா கவிதைகள்’ என்ற தலைப்பில் நூறு பாப்லோ நெரூதாவின் கவிதைகள், ‘அஸீஸ் பே சம்பவம்’ என்ற துருக்கிய எழுத்தாளர் அய்பர் டுன்ஷினதும், ‘பட்டு’ என்ற தலைப்பிலான அலெக்சான்ட்ரோ பாரிக்கோவினதும் நாவல்களென ஆங்கிலம் வழியாகவும், பத்து மலையாளப் பெண் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பான ‘பெண் வழிகள்’, அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘சினிமா அனுபவம்’, உண்ணி.ஆர்’இன் சிறுகதைகளின் தொகுப்பான ‘காளி நாடகம்’. சக்கரியாவின் நாவலான ‘இதுதான் என் பெயர்’ ஆகியவற்றை மலையாளத்திலிருந்தும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவை தேவையான காலத்தில் வெளிவந்து தமிழ்ப் படைப்பாளிகளின் பார்வைக்கு அயல்மொழி, உலகமொழி இலக்கியங்களை முன்வைத்தன என்றால் மிகையில்லை.
மலையாள கவிஞர் விஜயலட்சுமியின் ‘முறை’ என்ற கவிதை வெளிவந்தபோது அதை சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் அப்போது தமிழ் மாதவிதழ் ஒன்றில் வாசித்திருந்தேன். தீவிரவாதிகள், நக்ஸலைட்டுகள் என்ற பெயர்களில் இடதுசாரிகளினதும் புரட்சியாளர்களினதும் கொலைகள் காட்சிப்படுத்தப்படுவதை கண்ணீரும் ரத்தமுமாக கவிதை புலப்படுத்தியிருந்தது. பலரின் மனத்தை உலுப்பிய கவிதை அது. தமிழில் படைக்கப்பெற்றதுபோன்ற மொழிபெயர்ப்புத்திறனுக்காகவே இன்றும் என் மனத்தில் அகலாதிருக்கிற கவிதையும் அது.
அவமானப்படுத்தப்பட்ட சடலம்
இரவில் என்னிடம் சொன்னது:
பார்த்தாயா, என் கைகளில் திணிக்கப்பட்டிருப்பதை?
இல்லை, அந்தத் துப்பாக்கி நிச்சயமாக என்னுடையதல்ல.
எனக்கு வெடிகுண்டுகளைத் தெரியாது,
என்மேல் பதிந்தவற்றைத் தவிர.
தாக்குதல்பட்டியல்கள் செருகப்பட்ட
அந்த டயரிக் குறிப்புகளும் என்னுடையவையல்ல…. என்று தொடங்கி,
‘உறங்காமலிருங்கள்
விடியப்போவது
உங்கள் முறை’ என ‘முறை’யென்ற தலைப்பிலான அக்கவிதை முடிந்திருக்கும்.
கவிதை, அதன் விமர்சனம் ஆகியவற்றில் கவிஞர் சுகுமாரனின் முக்கியமான பங்களிப்புகள்போலவே, திருவனந்தபுரத்திலிருந்துகொண்டு மலையாள மொழி இலக்கியத்தின் சமகால போக்குகளையும், படைப்புகளின் தோற்றங்களையும் தமிழுக்குக் கொண்டுவந்துகொண்டிருக்கும் இந்த செயற்பாட்டையும் என்னால் கருத முடிகிறது.
சினிமாவும், இசையும் சுகுமாரனின் அக்கறையில் இலக்கியம்போலவே முக்கியத்துவம் பெறுகின்றன. அவை குறித்தான பல உரைக்கட்டுகள் அவரது தொகுப்புகளில் உண்டு. நடனமணி சந்திரலேகா, நகுலன், பஷீர், சுந்தர ராமசாமியென செய்யப்பட்ட பல்வெறு ஆளுமைகளின் அறிமுகம் அவருக்கான வழியில் பெரும் வாசக இன்பம் செய்வது.
இயல் விருது இம்முறையும் தகுதியான ஒரு இலக்கியவாதிக்குச் சென்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தன்னை எந்தவேளையிலும் முன்னிலைப்படுத்தாத, கூச்ச சுபாவமுள்ள இந்த ஆளுமையை கண்டெடுத்து வாழ்நாள் சாதனை விருதளிக்கும் கனடா இலக்கியத் தோட்டத்தின் இந்தக் கவனத்தை எவ்வளவும் பாராட்டினாலும் தகும்தான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.