முன்னுரை
உலக மொழி வரலாற்றில் மேனாட்டு இலக்கண மரபுகளாகிய கிரேக்க லத்தீன் மரபுகளும் வடமொழி இலக்கண மரபும், தமிழ் இலக்கண மரபும் மிகப் பழமையானவைகளாகும், சிறப்புடையனவாகும். இப்பழமையான மூன்று மரபுகளின் தன்மை, வளர்ச்சி, வரலாறு ஆகியவற்றை ஆராயும் போது தமிழ் மரபு மற்ற இரு மரபுகளினின்றும் தனித்து நிற்கும் சிறப்புடையது என்பது புலனாகின்றது. என்கிற கூற்றுக்குகேற்ப தமிழ் இலக்கண மரபு பொருளதிகாரத்தின் பால் சிறப்பு பெற்றுள்ளது. பொருளதிகாரத்தில் பொருள் ,பொருளைப் புலப்படுத்தும் வடிவம், பொருளைப் புலப்படுத்தும் முறை ஆகிய மூன்றும் இலக்கிய ஆய்வுக்குத் தேவை. பொருளதிகாரம் அம்முறையில் மலர்ந்த பொது இலக்கணமாகும். பொருளே அகம் புறமாய், களவு கற்பாய் நிற்கும். செய்யுளியல் வடிவை நினைவுபடுத்தும் உவமை மெய்ப்பாடு பொருளியல் என்பன பொருள் புலப்பாட்டு முறைகளை அறிவிக்கும் இவ்வாறு மூன்று நிலைகளில் இலக்கியக் கூறுகளை பொருளதிகாரத்தில் காணலாம். தமிழ் மொழியில் தொல்காப்பித்திற்கு அடுத்து வந்துள்ள இலக்கண நூல்களில் நம்பியகப்பொருளும் ஒன்று, இந்நூலில் உள்ள களவியல் பகுதியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழர்களின் களவியல் சிந்தனை எந்த அளவில் தொல்காப்பியர் காலத்தில் இருந்து வந்துள்ளது என்பது புலப்படும் அந்த வகையில் இந்த இரண்டு பகுதிகளையும் ஒப்பிட்டுப்பாக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பிய களவியல் உள்ளடக்கம்
தொல்காப்பியக் களவியல் பகுதியில், களவு ஒழுக்கத்தின் இயல்பு, காதல் முன்னைய நல்வினையால் விளைவது முதற் சந்திப்பின் விளைவு, மானுட மகளே எனத்துணிதல், தலைவன்கூற்று, தலைவன் தோழியிடம் பேசுதல், களவுப் புணர்ச்சிக்கு நிமித்தக் காரணங்கள், கைக்கிளைப் பெருந்திணை, அன்பின் ஐந்திணைக்கு உரிய உணர்வு நிலைகள், களவு ஒழுக்கத்தில் தலைவன் கூற்றுக்கள், தலைவியின் வேட்கைக் குறிப்பு, கண்களே உணர்த்தும் மகளிர் அல்ல நடையில் பேசுதல், களவுக் காலத்தில் தலைவி கூற்றுக்களும் மெய்ப்பாடுகளும், தலைவி சினந்து பேசும் இடம், தோழி கூற்று, செவிலக்கூற்று, நற்றாய் கூற்று, ஐயம் தெளிதல் காதலர்கள் தாமே சந்தித்துக் கொள்ளுதல், தலைவி குறியிடம் கூறுதல் தோழியும் களஞ்சுட்டல், தாய் என்பது செவிலியைக் குறித்தல் தோழி செவிலியின் மகள், தோழி உதவுங்காலம், தோழியின் உதவி பகற்குறி, இரவுக்குறி இடங்கள், தந்தை தமையன் அறிதல், இருவகைத் திருமணம் போன்ற நிகழ்வுகள் தொல்காப்பியரின் களவியல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
நம்பியகப்பொருளின் களவியல் பகுதி
நம்பியகப் பொருளில் களவின் இலக்கணம், கைக்கிளையின் பாகுபாடு, காட்சி , ஐயம், துணிவு, குறிப்பறிதல், களவிற்கு உரிய கிளவித்தொகை இயற்கைப்புணர்ச்சி, தலைவியின் எய்தும் புணர்ச்சிவ கை, தெய்வத்தின் எய்தும் புணர்ச்சியின் விரி, தலைவியின் எய்தும் புணர்ச்சியின் விரி, வன்புறையின் வகை, வன்புறையின் விரி, தெளிவு இன்னதென்று, பிரிவு வழி மகிழ்ச்சி , பிரிவு வழிக் கலங்கல், பிரிவு வழிக் கலங்களின் விரி, இடந்தலைப்பாடு, இடந்தலைப்பாட்டின் வகை, இடந்தலைப்பாட்டின் இலக்கண விரி, பாங்கன் கூட்டத்தின் வகை, பாங்கன் கூட்டத்தின் விரி, பாங்கி மதி உடன்பாட்டின் வகை, முன்னுற உணர்த்தலின் திறம், குறையுற உணர்த்தலின் திறம், இருவரும் உள்வழி இவன் வரவு உணர்த்தலின் திறம், பாங்கி மதியுடன்பாட்டின் விரி, பாங்கியின் கூட்டத்தின் வகை, இரந்து பின் நிற்றலும் சேட்படையும், மடற்கூற்றும் மடல்விலக்கும், குறை நேர்தலும் மடற்கூற்று ஒழிதலும், குறை நயப்பித்தலும் மறுத்தலும், குறை நயப்பித்தலும் நயத்தலும், கூட்டல் கூடல் ஆயங்கூட்டல், வேட்டல், பாய்கியிற்கூட்டத்து விரி இவை எனல், பகற்குறியின் வகை, பகற்குறியின் விரி, ஒருசார் பகற்குறியின் வகை, ஒருசார் பகற்குறியின் விரி, பகற்குறி இடையீட்டின் வகை, பகற்குறி இடையீட்டின் விரி, இரவுக்குறியின் வகை, இரவுக்குறியின் விரி, இரவுக்குறி இடையீட்டின் வகை, அல்லகுறி வருந்தொழிற்கு அருமை, இரவுக்குறி இடையீட்டின் விரி, இவை எனல் வரைதல் வேட்கையின் வகை, வரைதல் வேட்கையின் விரி, வரைவு கடாதலின் விரி, ஒரு வழி தணத்தல், ஒரு வழி தணத்தலின் விரி, வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரித்தலின் விரி, என்று நம்பியகப்பொருள் களவியல் பகுதிகள் அமைந்துள்ளன.
பொருளதிகார வளர்ச்சி
தொல்காப்பியத்தின் மையத்தைக் கொண்டு பின் வந்த இலக்கண ஆசிரியர்கள் பொருளதிகாரத்தை, தேவையானக்கூறுகளை விரித்து இலக்கணம் செய்துள்ளனர். அந்த வகையில் தொல்காப்பியர் கூறிய நூட்பாக்களைக் கொண்டு அதனைச் சற்று விரித்து நம்பியகப்பொருள் இலக்கணம் தோன்றியுள்ளது. எனவே நாற்கவிராச நம்பி என்பார் அருகணது சரணம் பொருந்திய உத்தமனும் புளியங்குடியில் வாழ்ந்தானும் முத்தமிழ் ஆசானும் ஆகிய உய்ய வந்தான் என்பானின் மைந்தர், வடமொழி, தென்மொழி ஆகிய இரு கலைகளிலும் வல்ல குரிசில், அகத்தியனிடம் இயற்றமிழ் உணர்ந்த பன்னிரு மாணாக்கரில் தலைவனாகிய தொல்காப்பியனால் செய்யப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தைத் தழுவியும், சாண்றோரின் இலக்கியங்களை ஆராய்ந்தும், கிளவிகளைத் தொகுத்து முறைப்படுத்திச் கூத்திரம் வகுத்து அகப்பொருள் விளக்கம் என்னும் நூலை இயற்றியவர். மற்றும் அந்நூலுக்கே மயக்கமறப்பொருளை விரித்தும் எழுதியுள்ளார். என்று நூலாசிரியர் குறிப்பு விளக்கம் தருகின்றது. அந்த வகையில் தொல்காப்பித்தைத் தழுவித் தான் நம்பியகப்பொருள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அது தொல்காப்பியத்தை விட வளர்ச்சி பெற்று எழுதப்பட்டுள்ளது.
நம்பி - தொல் - ஒற்றுமை
தொல்காப்பியம் நம்பியகப்பொருள் இரண்டு நூல்களுக்குமிடையே களவியலில் நிறையா ஒற்றுமை காணமுடிகின்றது. அதாவது தொல்காப்பியர் கூறிய கருத்தினை அப்படியே எடுத்துக் கொண்டு அதற்கு சொற்களை மாற்றி நூற்பா எழுதியுள்ளதை நம்பியகப்பொருளில் காணமுடிகின்றது.
தொல்காப்பியம்
களவொழுக்கத்தின் இயல்பினைக் கூறும்போது அவர் தந்துள்ள நூற்பா
“ இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
ஆன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
குhமக்கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த்த துணைமையோர் இயல்பே” - 1038
ஏன்று தொல்காப்பிய நூட்பா அமைத்துள்ளார். இங்கு ‘மறையோர் தேஎத்து மன்றம் எட்டனுள்’ என்பது உரையாசிரியர்கள் பார்வையில் பல்வேறு பொருளைத் தருகின்றது. இளம்பூரனார் மறையோர் தேஎத்து மன்றல் என்ற தெர்டரில் மறையோர் என்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு அந்தணர் என்றும் தேஎம் என்பதனை அவர்களது நூல் என்றும் கருத்துரைக்கின்றார். நச்சு மறையோர் என்பதனை மறைஓர் எனப்பிரித்து மறை ஓரிடத்துக் கூடிய மனம் எட்டு எனக் கூறுகிறார். ஆக மொத்தத்தில் தொல்காப்பியர் கூறிய மறை என்பது யாது? ஏனத் தெரியவில்லை, ஆனால் அனைத்து உரையாசிரியர்களும் இளம்பூரணரை அடியொற்றி வேதம் என்னும் பொருளைக் கொண்டு அந்நூலில் கூறப்பட்டுள்ள எட்டு வகையான திருமண முறைகளைக் கூறியுள்ளனர். அதாவது 1.பிரமம் 2. பிரசாபத்தியம் 3. ஆரிடம் 4. தெய்வம் 5. கந்தருவம் 6. அசுரம் 7. இராக்கதம் 8.பைசாசம் என்பதாகும்.
நம்பி
இவ்வாறு உரையாசிரியர்கள் கூறிய கருத்துக்கள் பல்வேறான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் நம்பியகப்பொருள் களவின் இயல்பு என்பதை களவின் இலக்கணம் எனக்கொடுத்து மறை என்பதன் குழப்பத்தைப் போக்கும் விதமாக
“உளமலி காதற் களவெனப் படுவது
ஒரு நான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப” - 117 நம்பி
எனக் கூறியுள்ளது. இங்கு ‘ஒரு நான்கு வேதம்’ என்னும் போது எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்று நான்கு வேதங்களையும், அந்நூல்கள் கூறுகின்ற இருநான்கு மன்றல் என்பதால் எட்டு திருமணங்களையும் குறிக்கிறது. அதாவது தொல்காப்பியர் கூறிச் சென்ற மன்றம் மறை போன்ற சொற்களை விளக்கும் விதமாக நாற்கவிராயர் தெளிவாக ‘ஒரு நான்கு வேதத்து இரு நான்கு மன்றம்’ என்கிறார். இது தொல்காப்பியர் தழுவல் என்பது தெரிகிறது.
முதல் சந்திப்பின் விளைவு
முதல் தலைமகனும் தலைமகளும் சந்திக்கின்றபோது ஐயம் தோன்றும் என்கின்றது தொல்காப்பியம்
“சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப
இழிந்துழி இழிபே சுட்டலான” - 1040
அதாவது தலைவன் தலைவியர் பேரழகுடையராய் அவர்கள் சந்திக்குமிடமும் காணவுலகம் போன்ற சிறப்புடையது, எனவே தலைவன் ‘இவள் தெய்வமகளோ’ என ஐயுறுவாள். என்று நூட்பா விளக்கமளிக்கிறது. இது போன்று பொருளியலில் உள்ள நூட்பாவும் தலைமகன் ஐயுறும் நிகழ்வு எடுத்தாளுகின்றது.
“உயர்மொழிக் கிளவி உறழுங் கிளை
ஐயக் கிளவி ஆடூஉ விற்கு உரித்தே” (பொரு – 42)
இங்கு உரை தருகின்ற இளம்பூரணர். ஐயப்படுபவன் தலைவன் என்று கொள்க தலைமகள் ஐயப்படக்கூடாது. என்னையெனின் அவள் ஐயப்படுங்கால் தெய்வமோ வென்று ஐயுறுதல் வேண்டும் அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும் அஃது ஏதுவாகக் காம நிகழ்ச்சியுண்டாகாது. என்கின்றார்.
நம்பி
நம்பியகப்பொருள் ஐயம் பற்றிக் கருத்துரைக்கும் போது தலைமகள் வடிவும் அவளைத் தான’; கண்ட இடமும் சிறப்புடைய ஆய காலத்துத் தலைமகன்பால் ஐயம் நிகழும் என்றவாறு என்கிறது.
“ மடமான் நோக்கி வடிவங் கண்ட
இடமும் சிறந்துழி எய்துவது ஐயம்” - 120 நம்பி
இங்கு தொல்காப்பியர் கருத்துடன் இயைந்து போவது காண முடிகின்றது. இங்கு தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ள சிறந்துழி ஐயம் என்னும் சொல் அப்படியே கையாளப்பெற்றுள்ளது. ‘சிறந்துழி எய்துவது ஐயம்’ என்று நம்பியகப்பொருளில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
துணிவு
தலைமகன் ஐயப்பட்டு பின்பு தலைவி இவள் இந்த உலகத்து சாதாரணப் பெண் என்கின்ற துணிவினை அடைகின்ற செய்தியை தொல் நம்பி இரண்டுமே ஒன்று போல நூட்பா அமைத்துக் காட்டுகின்றன.
“வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று
அன்னவை பிறவும் ஆங்கு அவன் நிகழ
நின்றவை களையும் கருவி என்ப” -1041 தொல்
எழுதிய வல்லியும் தொழில்புனை கலனும்
வாடிய மலரும் கூடிய வண்டும்
நடைபயில் அடியும் புடைபெயர் கண்ணும்
அச்சமும் பிறவும் அவன்பால் நிகழும்
கச்சமில் ஐயம் கடிவன வாகும்” - 121 நம்பி
இங்கு இரண்டு நூல்களுமே ஒரே கருத்தினைக் கூறுகின்றன. அதாவது ‘தலைவி சூடிய பூவில் வண்டு மொய்க்கும் அணிகலன்களை அணிந்திருப்பாள்’ வள்ளி என்பது தலைவியின் மார்பு மற்றும் உடலில் எழுதப்படும் ஓவியம், பிற மாலை முதலியவற்றுள் பூ வாடியிருக்கும் கண்கள் மருட்சியால் சுழலும், இமைக்கும், முகத்தில் அச்சம் தோன்றும் இவ்வுலக மகளே எனத் துணிவதும் என்று கருத்துரைக்கின்றன. இது இரண்டு நூல்களுக்கிடையே இருக்கின்ற ஒற்றுமையைக் காட்டுகின்றளன.
குறிப்பறிதல்
குறிப்பறிதல் என்பதும் தொல்காப்பித்தைத் தழுவித் தான் நம்பியகப்பொருள் கருத்துரைத்துள்ளது.
“ நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுதற்குத்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்” -1042 தொல்
இந்நூட்பாவி;ல் உள்ள குறிப்புரை என்பது நம்பியகப்பொருளில் நூட்பாவின் தலைப்பாக அமைந்துள்ளது. இங்கு
“அரிவை நாட்டம் அகத்து நிகழ் வேட்கை
தெரிய உணர்த்தும் குரிசிற்கு என்ப” -122 நம்பி
இரண்டு நூற்பாக்களுமே காதலர்களின் கண்கள் இரண்டும் அவர்களது உள்ளக்குறிப்பை அறிவிக்கின்றன என்பதாக அமைந்;துள்ளன. இவ்வாறு இருக்க நம்பியகப்பொருள் ஐயம் என்பதை கைக்கிளையின் பாகுபாடு என்கிறது.
நம்பி
“காட்சி ஐயம் துணிவு குறிப்பு அறிவென
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை”
இங்கு கைக்கிளையாவது காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் சொல்லப்பட்ட நான்கும் உடையதாம் என்கிறது. இது சற்று மயக்கத்தைத் தருகின்றது. இவ்விடம் தொல்காப்பியத்தோடு பொருந்திப் போகவில்லை.
ஊழ் பற்றிய கருத்து
பொதுவாக சங்க இலக்கியங்களில் தலைவனும் தலைவியும் சேர்ந்து காதல் புரிவது ஊழினால் வந்தது என்கின்ற செய்தி உண்டு. அந்தக் கருத்து தொல்காப்பியத்திலும் நம்பியகப்பொருளிலும் இடம்பெற்றுள்ளது.
“ ஒன்றே வேறே என்றிரு பால் வயின்
ஓன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஓத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே” -1039 தொல்
இந்நூற்பாவிற்கு உரையெழுதிய அனைத்து உரையாசிரியர்களும் ‘ஒன்றுபடுத்தவல்ல, உயர்ந்த ஊழின் ஆணையால் தம்முள் உரு, திரு, பண்பு, போன்றவற்றால் ஒப்புமையுடைய தலைவனும் தலைவியும் எதிர்பாராது சந்தித்துக் கொள்வர் என்கின்றனர். தலைவன் தiலிவியின் சந்திப்பு முன்பிறவியின் நல்வினை தீவினையால் வருவது என்பதாகக் கூறுகின்றனர்.
நம்பியகப்பொருளும் இக்கருத்தில் உடன்படுவது போன்று தெரிகின்றது, அதாவது நூட்பா 119 இல்
“ புணர்ப்பதும் பிரிப்பதும் ஆகிய பால்களுள்
புணர்க்கும் பாலில் பொருவு இறந்து ஒத்த
கறைவேற் காளையும் கன்னியும் காண்ப
இறையோன் உயிரினும் குறைவின்று என்மனார்”
என்கின்றது. முற்பிறப்பினும் காமம் நுகர்ந்தார் இருவரையும் மறு பிறப்பினும் கூட்டுவதும் பிரிப்பதுமாகிய நல்வினை தீவினை என்னும் இரண்டனுள் நல்வினை வயத்தால் தனியிடத்து எதிர்ப்படுவர் என்கிறது. இதில் தொல்காப்பியரின் கருத்து நம்பியகப்பொருள் கருத்து இரண்டும் ஒன்றுபட்டுக் காணப்படுகின்றன.
தலைமகன் கூற்று
தொல்காப்பியர் களவியல் தலைமகன் கூற்றில் கூறிய கருத்துக்களை நம்பியகப்பொருள் ஆசிரியர் பல்வேறு நூட்பாக்களாகப் பிரித்துள்ளார்.
“மெய்தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல்
இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்
நீடுநினைந்து இரங்கல் கூடுதல் உறுதல்
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
தீராத் தேற்றம் உளப்படத் தொகைக்கும்
பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்
பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்
நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்
குற்றம் காட்டிய வாயிற் பெற்பினும்
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்” - 1048 தொல்
இந்நூற்பாவில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் தலைவன் கூற்றாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார். அதாவது ‘தலைவியின் உடலைத் தொட்டு கூச்சத்தைப் போக்குதல், நெற்றிக் கூந்தல் போன்றவற்றைப் புனைந்து பாராட்டுதல், அவளை நெருங்கித் தழுவுதல் கூடி மகிழ்தல் இது போன்றவை இயற்கைப் புணர்ச்சியாகும் என்பர் ஆசிரியர்.
ஆனால் நம்பியகப்பொருள் இயற்கைப்புணர்ச்சி என்பதற்கு அதன் இலக்கணம் கூறிய அதாவது
“ தெய்வம் புணர்ப்பச் சிந்தையே றாகி
ஏய்துங் கிழத்தியை இறையோன் என்ப” - 124
என்று கூறி அதன் விரியையும் 125, 126, 127, என்று மூன்று நூட்பாக்களில் கூறியுள்ளார், இவை விரிவாகக் கருத்துரைத்துள்ளதைக் காட்டுகிறது. இவை தவிர
“ தீராத் தேற்றம் உளப்படத் தொகை இப்’
என்னும் தொல்காப்பியர் கூறும் ஒரு வரி நூட்பாவிற்கு நம்பியகப்பொருள் தனிநூட்பாவையே அமைத்துக் கொடுத்துள்ளது.
வன்புறை வகை
“ ஐயந் தீர்த்தல் பிரிவு அறிவுறுத்தலென்று
எய்திய வன்புறை இருவகைத்ததகும்” - 128
இங்கு வன்புறை என்பது வற்புறுத்தல் எனப்படும் ஐயந்தீர்த்தலும் பிரிவு அறிவுறுத்தலும் என்பதாக அமையும் என்கிறார். தொல்காப்பித்தில் தலைவியிடம் இன்பம் நுகர்ந்த பின்பு அவளது அச்சத்தைத் தீர்த்து உறுதி கூறித் தேற்றுதல் என்பதாக உள்ளது. ஏறத்தாழ இரண்டு கருத்துமே ஒன்றாக உள்ளன.
இடந்தலைப்பாடு
ஏன்னும் பகுதியில் நம்பியகப்பொருள் கூறியுள்ள கருத்து
“ தெய்வம் தெளிதல் கூடல் விடு;த்தல் என்று
இவ்வோர் மூவகை இடந்தலைப்பாடே” – 134
என்கிறது இந்நூட்பா தொல்காப்பியரின் தலைவன் கூற்றில் உள்ள
“ பெற்ற வழி மகிழ்ச்சியும் பிரிந்த வழி கலங்கலும்”
என்னும் வரிக்கு விளக்கம் போல அமைந்துள்ளது. இது நம்பியகப்பொருள் பின்னாளில் கிடைத்த சான்றுகளை வைத்து இடந்தலைப்பாட்டினை தொல்காப்பியத்தில் இருந்து சற்று விளக்கிக் கருத்துரைத்துள்ளது தெரிகிறது.அது போலவே தொல்காப்பியர் தலைமகள் கூற்றில் கூறியுள்ள
“ நிற்பவை நினைகி நிகழ்பவை உரைப்பினும்
குற்றம் காட்டிய வாயிற் பெற்பினும்” - 1048
என்பதற்குப் ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தனித் தலைப்பில் நம்பி பெரிய நூட்பாக்கள் இரண்டினைத் தந்துள்ளது. பாங்கன் கூட்டத்தின் வகை, அதன் விரி என்பதாக
“ சார்தல் கேட்டல் சாற்றல் எதிர்மறை
நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டல் என்று
ஆங்கெழு வகைத்தே பாங்கற் கூட்டம்
சார்தல் முதலாகப் பாங்கிற் கூட்டல் ஈறாக எழுவகை” -136
இரண்டாவது இதனுடைய விரியாக
“தலைவன் பாங்கனைச் சார்தலும் பாங்கன்
தலைவனை உற்றது வினாதலும் தலைவன்
உற்றது உரைத்தலும் கற்றறி பாங்கன்
கழறலும் கிழவோன் கழற்றெதிர் மறுத்தலும்
கிழவோற் பழித்தலும் கிழவோன் வேட்கை
………..
காட்டிய பாங்கற் கூட்டத்து விரியே” - 137
என்கிறது நம்பி, இது நம்பியகப்பொருளின் ஆசிரியர் பிற்காலத்தில் இயற்றியதால் சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்களைக் கொண்டு அதில் உள்ள கருத்துக்களை மையமாக வைத்து அதற்கு இலக்கணம் எழுதியுள்ளது போன்று தெரிகின்றது, இங்கு சொல்லப்படுகின்ற பாங்கன் கூட்டச் செய்திகள் இலக்கியத்தில் உள்ள செய்திகளே ஆகும். இந்த வகையில் தொல்காப்பிர் கூறிச் சென்றுள்ள ஒரு கூற்று பல நூட்பாக்களாக நம்பியில் இடம்பெற்றுள்ளது.
குறி
குறியிடம் பற்றிய செய்தி தொல்காப்பியத்தில் 7 நூட்பாக்களில் மிகக் குறுகிய செய்திகளுடன் இடம்பெற்றுள்ளன. அதாவது தலைவி தான் குறியி;;டம் கூறும் தன்மையர் என்பதை தொல்காப்பியம் கூறுகிறது.
“ அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின்
களம் சுட்டுக் கிளவி கிழவியதாகும்
தான் செலற்கு உரிய வழி ஆகலான” – 1066
“ தோழியின் முடியும் இடனுமாருண்டே” - 1067
இவ்வாறான குறி சுட்டும் தலைமக்கள் யார் என்று நம்பியகப்பொருள் கருத்துரைக்கவில்லை ஆனால் தொல்காப்பியர்
“குறியெனப்படுவது இரவினும் பகலினும்
அறியத் தோன்றும் ஆற்றது என்ப” - 1076
என்னும் நூட்பாவைக் கூறியுள்ளார். அதற்கு விளக்கம் தரும் வகையில் பகற்குறி, பகற்குறியின் வகை, அதன் விரி போன்ற கருத்துக்களில் நம்பி நூட்பா வரைந்துள்ளது.
“ கூட்டல் கூடல் பாங்கிற் கூட்டல்
வேட்டல் என்று ஒருநால் வகைத்தே பகற்குறி” – 151
என்கிறது. ஆனால் தொல்காப்பியம் இரவுக்குறி, பகற்குறிக்கு ஏற்ற இடம் மட்டும் குறிப்பிடுகிறது. ஆல்ல குறிப்படுதலும் கூறப்பட்டுள்ளது. ஆனால் நம்பியகப்பொருள் இரவுக்குறியின் வகை இடையீடு போன்றவற்றைக் கூறியுள்ளது. இது சங்கப்பாடல்களில் இடம்பெறும் கருத்துக்களைக் கொண்டு அமைத்துள்ளதாகத் தெரிகிறது.
முடிவுரை
தொல்காப்பியம் நம்பியகப்பொருள் இரண்டும் களவியலைப் பொருத்த வரையில் ஒற்றுமையுடன் காணப்படுகின்றன. நம்பி அவர்கள் சங்கப்பாடல்களைக் கொண்டும், களவியலுக்கு நூட்பா அமைத்துள்ளதைக் காணமுடிகிறது. ஆனாலும் தொல்காப்பித்தில் உள்ள தெளிவு நம்பியகப்பொருளில் காணமுடியவில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.