ஸியா என்பவன் பழஞ்சீன மாமன்னரின் காதலன். ஒருநாள், அரசருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன், கனிந்து சாறு சொட்டும் பீச் பழத்தைக் கடித்து ருசித்து அதன் சுவையில் மயங்கி பாதி கடித்த அந்தக்கனியை அரசருக்குக் கொடுக்க அவர் அதை வாங்கிச் சுவைத்தபடியே, “ஆஹா ! பழத்தை நான் ருசிக்க வேண்டும் என்பதில் உனக்குத் தான் எத்தனை அக்கறை ! உனது பசியை விட என் மீதான காதலே உனக்குப் பெரிதாக இருக்கிறதென்றறிந்து யாம் மிக மகிழ்ந்தோம்’, என்று கசிந்துருகுவார்.
பிற்கால எழுத்தாளர்களில் பலர் ஓரினச்சேர்க்கை குறித்தெழுதும் போது ‘பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்’ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர். இவ்விருவரிடையே நிலவிய ஒருபாலுறவு குறித்து வரலாற்று வல்லுனர் ஹான் ஃபெய் பதிந்திருக்கிறார். பெற்றவள் உடல்நலமில்லாமல் இருந்தாள் என்றறிந்ததும், மிஜி ஸியா அரசரின் ரதத்தை அனுமதி பெறாமல் உரிமையோடு எடுத்துக் கொண்டு பறந்து சென்று பார்த்ததை அவனது தாய்ப் பாசம், அன்னை மீதான பக்தி என்றெல்லாம் பாராட்டுவார். பின்னாளில் காதலனுடைய அழகனைத்தும் மங்க ஆரம்பித்ததும் அவனைப் பிடிக்காமல் போய் அவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தும் போது அச்சம்பவத்தைக் குறிப்பிட்டு தன் ரதத்தை அவன் திருடியதாகச் சொல்வார். பாதி கடித்த பழத்தைக் கொடுத்ததையும் குற்றமாகவே சொல்வார். அவன் அவரிடம் முன்பு போலவே பிரியமாக இருந்தாலும் அவன் மீதான அரசரது ஈர்ப்பு மறைந்து விடும். இதேபோல தொடக்கத்தில் அழகன்களுடைய வசீகரமும் புத்திசாலித்தனமும் மன்னர்களாலும் பிரபுக்களாலும் போற்றப் பட்டு பின்னாளில் அவர்களால் தூற்றவும் பட்டன.
சீனப் பெருந்தேசத்தில் முற்காலம் தொட்டே தன்பால் ஈர்ப்பும் உறவும் நிலவி வந்தற்கான வரலாற்றுப் பதிவுகள் நிறையவே இருக்கின்றன. ஹான் முடியாட்சிக்கு முன்னரே வாரிங் ஆட்சியில் எண்ணற்ற அரசியல் அறிவுரைகள் மற்றும் கதைகளின் தொகுப்புகள் கிடைத்துள்ளன. ஓரின நாட்டமுடைய ஆண்கள் பற்றிய பதிவுகளை ஒப்பு நோக்க பெண் மீது ஆசைப்படும் பெண்கள் பற்றிய பதிவுகள் அரிதாகவே கிடைக்கின்றன. அதுவும் இலைமறை காய்மறையாகச் சொல்லப்பட்டுள்ளன.
பொதுவாகவே, மன்னர்களின் பாலுறவு குறித்து பதியப்பட்டவற்றிலிருந்து சீன வரலாற்று நிபுணர்கள் ஒரு பொதுப் புரிதலைக் கொடுக்கிறார்கள். அதாவது, ஓர் அரசனின் ஒருபாலீர்ப்பு பற்றி எழுதப்பட்டிருந்தால் அவனில் எதிர்பாலீர்ப்பு குறைவு என்றே கொள்ள வேண்டும். நேர்பால், எதிர்பால் ஆகிய இருவித பாலுறவும் கொண்டவர்கள் தான் முற்காலத்தில் பரவலாக இருந்திருக்கிறார்கள். மன்னனின் விருப்பம் ஆண் துணை மீதிருக்கும் சூழலில் அரண்மனை அந்தப்புரங்களில் தனிமையில் தவிக்கும் பெண்களிடையே ஓரினச் சேர்க்கைகள் தோன்றிய நிகழ்வுகளும் யிங் ஷாவ் (கி.பி 140-206) போன்றவர்களின் சில பதிவுகளில் கிடைக்கின்றன.
வாரிங் காலத்தில் (கி.மு 841 - 221) மோ ட்ஸு அன்றைய அரசர்களைப் பற்றி மிக விரிவாகத் தனது கண்டனத்தைப் பதிகிறார். தமது உறவினர்களைத் தவிர தமக்கு மிகப் பிடித்த அழகிய ஆண்களை அரசதிகாரிகளாக நியமிப்பதால் நிர்வாகத்தில் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதே இவரது முக்கியக் குற்றச்சாட்டு. குறிப்பிட்ட ஓர் அரசரையோ சிற்றரசரையோ மட்டும் சொல்லவில்லாமல் ‘இன்றைய அரசர்களும் பிரபுக்களும்’ என்பது போன்ற சொற்றொடர்களின் மூலம் பொதுவாகவே பேசுகிறார். இவர் ஓரின ஈர்ப்புக்கு எதிரானவரில்லை. வேறுபாடுகள் காட்டும் அரசர்களின் போக்கைத் தான் கண்டிக்கிறார். ஒருவர் மீது அரசர் கொள்ளும் கண்மூடித்தனமான பற்றையும் அது கொணரும் கூடுதல் சலுகைகளையுமே இவர் விமரிசிக்கிறார். இவரது எழுத்துக்களிலிருந்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒருபால்காதல் இருந்திருக்கிறது என்பதையும் அதை அச்சமூகம் மிக இயல்பாக எடுத்துக் கொண்டிருந்தது என்பதையும் அறிய முடிகிறது. வாரிசைப் பெற்றெடுக்க மட்டும் பெண்ணைப் பயன் படுத்திவிட்டு ஆண்களுடன் பாலுறவு கொண்டு வாழ்ந்த, பெண்கள் மீது ஈடுபாடே இல்லாத அரசர்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள்.
வேய் அரசரும் லோங் யாங் பிரபுவும் மீன் பிடிக்கவென்று படகோட்டிச் சென்றனர். திடீரென்று பிரபு அழ ஆரம்பித்தார். அரசர் ஏனென்று கேட்டதும் பெரியமீன் ஒன்றைப் பிடித்தேனெறுரைத்தார். அதற்கெதற்காக அழுகிறாய் என்று மீண்டும் வினவியதும், “முதலில் ஒரு மீனைப் பிடித்த போது மகிழ்ந்தேன். ஆனால், அடுத்ததாய் இன்னொரு மேலும் பெரிய மீனைப் பிடித்ததுமே முதலில் பிடித்த சிறுமீனை நீரில் விட நினைத்தேன். அப்படி நினைத்த தவறுக்காக உங்களுடைய படுக்கையிலிருந்து விரட்டப் படுவேனென்று நினைத்ததுமே எனக்கு அழுகை வந்து விட்டது. ஏற்கனவே நாட்டிலுள்ள எண்ணற்ற அழகிகள் நான் உங்களோடு நெருக்கமாக இருப்பதைக் கண்டு என்மேல் பொறாமை கொண்டிருக்கிறார்கள். பிடித்த மீனை நான் விட்டது போல ஒருவேளை என்னையும் தாங்கள் விட்டுவிடுவீர்கள் என்றால் நான் எப்படி அழாமல் இருப்பது?” காதலனைத் திருப்திப் படுத்தி மகிழ்விக்க மற்ற அழகிய இளம்பெண்களைப் பற்றி இனி தன்னிடம் வந்து பேச முற்படுவோருக்கு மரண தண்டனை நிச்சயம் என்று அரசவையில் ஆணையிட்டார்.
சீனத்தில் நிலவும், ‘நிலத்தில் எத்தனை தான் மாடு போல உழைத்தாலும் சரியான வானிலை போன்ற மாயம் வேறொன்றில்லை. எத்தனை ஊழியம் செய்தாலும் நாடாள்வோனின் பிரியத்தைப் பெறுவதில் கிடைக்கும் லாபமே வேறு’, என்ற முதுமொழிக்கு மிக உறுதியான பின்னணியுண்டு. வரலாறெங்கும் பெண்கள் மட்டுமே நாடாண்டோரை வசீகரித்து மயக்கியதில்லை. அரசதிகாரிகள், அரண்மனைச் சேவகர்கள் உள்ளிட்ட ஆண்களும் தமது அழகாலும் ஆற்றலாலும் நாடாண்டோரின் சிந்தையை நிறைத்து அவர்களிடமிருந்து சலுகைகளையும் பிரியத்தையும் பெற்று மேலும் நெருங்கினர். இச்சையால் நெருங்கியவர்களைக் காட்டிலும் இச்சையைத் தூண்டி அதிகாரத்தைப் பெற்றவர்களே அதிகம். வெறும் வசீகரத் தோற்றத்தையும் அதிகாரத்தையும் மட்டுமே நம்பி இவர்கள் இவ்வாறு காய் நகர்த்தியதியல்லை. ஒவ்வொருவரிடமும் பாடுவது, இசைப்பது, நடமிடுவது, நடிப்பது, இயற்றுவது, தீட்டுவது போன்ற ஏதோவொரு தனித்துவ கலையாற்றல் இருந்தது.
பான் ஜாங் மிக அழகிய தோற்றம் கொண்டவன். எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும். ச்சூ மாநிலத்தின் வாங் ஜோங்ஸியான், அவனைப் பற்றி கேள்விப்பட்டு அவனைச் சந்திக்க வந்தார். அவனது எழுத்தாற்றலை நேரில் காண்பதே அவரது வருகையின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதன் பிறகு, அவனுடன் சேர்ந்து கல்வி பயில விரும்பினார். முதல் பார்வையிலேயே இருவரிடையே காதல் அரும்பியதென்பதே வரலாறு. அளவற்ற நெருக்கத்துடன் கணவன் மனைவி போல ஒரே படுக்கையையும் ஒரே தலையணையையும் உபயோகித்தனர். இருவரும் சேர்ந்தே இறந்தனர். லோஃபூ மலையில் அவர்களைச் சேர்த்துப் புதைத்த இடத்தில் நீண்ட கிளைகளும் பசிய இலைகளுமாய் ஒரு மரம் உடனே தோன்றியது. ‘ஒற்றைத் தலையணை மரம்’ என்று அழைக்கப் பட்டது.
ஸிமா ச்சியான் என்பவர் ஹான் முடியாட்சியின் (கி.மு206 – கி.பி220) வரலாற்றைப் பதிந்த முதல் நபர். இவர் தொடங்கி வைத்த வடிவ முறையில் தான் எல்லா வரலாற்றுப் பதிவுகளும் பிற்காலங்களில் பதியப் பெற்றன. இவரது பதிவுகளில் அரசர்களிடையேயான ஓரினச்சேர்க்கை பற்றிய ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. ஹான்னின் 25 அரசர்களில் 10 பேர் பாலுறவுத் தோழர்களாக அழகிய ஆண்களைக் கூடவே வைத்திருந்தனர். மாமன்னர்கள் காவ் (கி.மு 206-195) மற்றும் ஜிரு, ஹ்யூ (கி.மு 194-188) மற்றும் ஹோங்ரூ, வென் (கி.மு 179-141) மற்றும் டெங் டோங் & ஜாவ் டான் & பேய்கோங் போஜி, ஜிங் (கி.மு 156-141) மற்றும் ஜோ ரென், வூ (கி.மு 140-87) மற்றும் ஹான் யான் & ஹான் இயூ, லீ யான்னியான், ஜோவ் (கி.மு 86-74) மற்றும் ஜின் ஷாங், ஸுவான் (கி.மு 73-49) மற்றும் ஜாங் பெங்ஜூ, ஜுவான் (கி.மு 48-33) மற்றும் ஹோங் கோங் & ஷி ஸியான், ச்செங் (கி.மு 32-7) மற்றும் ஜாங் ஃபாங் & சுன்யூ ஜாங், ஆய் (கி.மு 6- கி.பி 1) மற்றும் தோங் ஸியான் ஆகியோர் அதிக தன்பாலீர்ப்பும் குறைந்த எதிர்பாலீர்ப்பும் தம்மில் ஒருங்கே கொண்டிருந்த முக்கிய அரசர்கள்.
மாமன்னர்களில் மிகப் பிரபலமான ஹான் வூடி ‘பட்டுச் சாலை’யை நிறுவியவர். சீனப்புத்தாண்டின் தொடக்க நாளை வகுத்தளித்த இவர் 16வயதில் அரியணையேறி 70வயதில் இறக்கும் வரை அரசாண்டவர். வாரிங் காலத்தின் அனைத்துப் பகுதிகளின் நாணய முறையையும் இணைத்து முறைப்படுத்தி ஒற்றை அரசாங்கக் களஞ்சியத்தை நிறுவியவர். அடுத்த 2000 ஆண்டுகளுக்கு பின்பற்றப் பட்ட அரசாங்கப் பொதுத்தேர்வு முறையை அறிமுகப்படுத்திய இவருக்கு ஹான் யான் என்ற காதலன் இருந்தான். இருவரும் சேர்ந்து கல்வி பயின்று காதலையும் வளர்த்தனர். இவ்விருவரிடையேயான காதலை அடிப்படையாகக் கொண்ட ‘நீர் விளிம்பு’ போன்ற பல்வேறு ஆக்கங்கள் தோன்றின. ஹான் யான் எட்டடி ஐந்தங்குலம் உயரமிருந்தான். சீனத்தில் இந்த உயரம் மிகமிக அரியது. அரண்மனைக்குள் விரும்பிய போது வரவும் போகவும் பல இரவுகள் அரசரின் அறையிலேயே தங்கிச் செல்லவும் அனுமதிக்கப் பட்ட ஒரே ஆணான இவனிடமிருந்த போர்த் தந்திரங்கள் அரசருக்கு விருப்பமாகவும் சாதகமாகவும் இருந்தன. நாளடைவில், அரசரின் சலுகையும் அணுக்கமும் ஹான் யானுக்குள் தேவைக்கதிக கர்வத்தை ஏற்படுத்தியது. அரசியின் வெறுப்பையும் விரோதத்தையும் இயல்பாகவே பெற்றிருந்தவன் அரசரின் ஆசைநாயகிகளுடன் ரகசியப் பாலுறவு கொண்டிருந்தான். திட்டம் போட்டு இளவரசர்களின் உதவியுடன் கையுங்களவுமாகப் பிடித்த அரசி அதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினாள். தனக்குப் பிறந்த மகனா இல்லை ஹான் யானுக்குப் பிறந்த மகனா என்றே தெரியாமல் அரியணைக்கான தனது வாரிசை எப்படி அறிவிப்பதென்ற இக்கட்டும் குழப்பமும் அவருக்கு ஏற்பட்டது. ஹான் யான்னை மரணதண்டனைக்கு உட்படுத்துவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவருக்கு. அவனது மரணத்துக்குப் பிறகு அவனைப் போலவே அழகிய தோற்றங்கொண்ட அவனது தம்பியை அரசர் தன் படுக்கைத் துணையாக்கிக் கொண்டு விட்டார்.
பேய் காய் (கி.மு 237-291), யூ ஸின் & வாங் ஷாவ் (கி.மு 513-581), ஜாங் ஹான்பியேன் & ஜோவ் ஸியாவ்ஷி (கி.பி 265-420) தவிர மாமன்னர்கள் ஸிஜோங் & ஜாங் லாங்கோவ் (கி.பி 874-889), வூஜோங் (கி.பி 1506-1522), ஷென்ஜோங் (கி.பி1573-1620), ஸிஜோங் (கி.பி 1621-1628), ச்சிங் முடியாட்சியின் மாமன்னர் பூ யீ ஆகியோர் தமது ஓரினப் பாலுறவு குறித்து வெளிப்படையாக இருந்தவர்கள்.
தன்பாலுறவுகளில் நிலவும் பெரும் சிக்கல்கள் தான் உளச்சிக்கல்களை என்றென்றைக்கும் வரலாற்றில் நிலைபெறச் செய்யும் அரிய கவிதைகளைத் தோற்றுவித்தன. மூன்று அரசுகளும் ஆறு முடியாட்சிகளும் காலகட்டத்தில் ருவான் ஜி (கி.பி 210- 263) ஸி காங்கின் காதலன். பிரபலமான கவிஞனான இவன் தன் கவிதையில் மிக அற்புத ஓவியம் போல ஓரினச்சேர்க்கையைச் சித்தரித்திருப்பான். அன்றைய காலகட்டத்தில் ஓர் ஆணுக்கு இன்னொரு ஆண்மீது இருக்கும் மையலையும் இச்சையையும் அழகுறச் சொல்லும் பல ஓரினக் காதல் கவிதைகள் அவரது ‘ஜேட் மாடம்’ தொகுப்பில் இடம் பெற்றிருக்கும். குட்டைக் கையின் காமம் என்ற பொருளில் ‘துவான்ஸ்யூ ஜி பி’ மற்றும் கடிபட்ட பீச் என்ற பொருளில் ‘ஃபெந்தாவ்’ போன்ற தன்பாலீர்ப்புடையோரைக் குறிக்கும் பதங்கள் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ல்யூ ஸியாவ்ஜோவ்வின் கவிதைகளில் காணக் கிடைக்கின்றன.
மிச்சமிருக்கும் கடிபட்ட பீச் பழத்தோடு
தன்னை ஒப்பிடுவானோ என்ற பயத்தில்
தயங்கித் தயங்கி மெதுவாய் நகர்ந்தாள்.
ஜின் ஆட்சியின் ஸ்யியன் பிரபு தனது எதிரியின் அவைக்கு மிக அழகிய வாலிபனை அனுப்பி தவறான அறிவுரை கொடுத்துக் குழப்பி தன் நோக்கத்தைச் சாதித்துக் கொண்டார். லோங் யாங் பிரபு மற்றும் வேய் அரசர் இருவரிடையே இருந்த தன்பாலுறவு இன்னொரு முக்கிய உதாரணம். மூன்றாம் நூற்றாண்டில் ஓரினச்சேர்க்கை மட்டும் அல்லது ஓரினச்சேர்க்கையும் எதிர்பாலுறவும் ஒருங்கே கடைபிடிக்கப்பட்டு வந்ததற்கான ஆதாரப் பூர்வப் பதிவுகள் நிறையவுண்டு. பொருளாதார வல்லமை மிகுந்த அரச குடும்பத்தினர், அரசதிகாரிகள், பிரபுக்கள், மேட்டுக்குடியினர் என்று அனைத்து ஆண்களும் இதில் அடங்குவர். இதுவே பல்வேறு அரசியல்கள் உருவாகவும் மணமாகாத பெண்களுக்கு திருமணத்தில் தயக்கங்கள் வருவதற்குக் காரணமானதுண்டு. கணவன் மனைவியரிடையே பிளவுகளும் பிரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.
150களில் ஹான் சீனத்தின் அரசாங்கத்தில் ஒரு தளபதி இருந்தார். அவர் பெயர் லியாங் ஜீ. அவர் இருவிதமான பாலுறவு வைத்திருந்தவர். ஹுவோ குவாங் இவரது ஆண் காதலர். ஹுவோ குவாங்கிற்கோ ஃபெங் ஜிடு என்ற இன்னொரு அடிமை வியாபாரியின் மீது மோகம். இதெல்லாம் குடிமக்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை. ஹுவோ குவாங் இறந்த பிறகு அவரது மனைவி அடிமை வியாபாரியுடன் வாழப் போனது தான் மக்களிடையே மிகுந்த பரபரப்புக்குள்ளாகிய விஷயம். சமூகக் கட்டமைப்பின் படி அந்த வியாபாரி ஓர் இரண்டாம் நிலையிலிருக்கும் பிரஜை. எந்தப் பெண்ணுமே இரண்டாம் பிரஜை தான். ஆகவே, இரண்டு இரண்டாம் பிரஜைகளும் இவ்வாறு வாழ்வில் இணைவதைத் தான் சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஸோங் முடியாட்சியில் மேட்டுக் குடியினர் மற்றும் வணிகர்கள் தான் பெரும்பாலும் வரலாற்றுக் கோப்புகளைப் பதிந்தனர். அதனால் தான், இந்தப் பிரிவினரிடையே நிலவிய ஓரினச் சேர்க்கை குறித்து அதிகமாகக் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட எல்லோருமே வாரிசுகள் பெற்றெடுக்க மனைவிகளையும் பாலிச்சைகளுக்கு ஆண் துணைகளையும் கொண்டிருந்தனர். அவைகளில் பாடுவதற்கென்று அழகிய இளம் வாலிபர்களும் விருந்தினர்களில் தன் ஆண்மையைக் காட்ட விரும்புவோருக்கு அழகிய பாடகிகளும் இருந்தனர்.
டாங் முடியாட்சியைச் சேர்ந்த ‘உயரிய பரவசம் குறித்த செய்யுளுரைகள்’ என்பதே சீனத்தின் பாலுறவு குறித்தும் உடலுறுப்புகள் குறித்தும் அவற்றின் செயலியக்கங்கள் அளிக்கும் இன்பங்கள் குறித்தும் பேசிய முக்கிய இலக்கியம். உடலுறவில் உச்சப் பேரின்பம் பெறுவது குறித்து படைப்பாளி அறிந்த அனைத்து நிலைகளும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. எதிர்பாலீர்ப்பும் உறவும் பற்றி நிறையவே பேசுகிற இந்தப் பதிவுகளில் ஒரு பகுதி முழுக்கவே பௌத்த மடாலயங்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையுறவு கொண்ட விவசாயிகள் பற்றியும் அதிகமாக எழுதப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் அழியாமல் கிடைக்கக் கூடிய ஒருபாலுறவு குறித்து பேசியவற்றில் ஆகப் பழைய ஆவணம் இதுவாகவே இருக்கும். ஆனால், எதையுமே நேரடியாகக் குறிப்பிடுவதில்லை. எல்லாமே, ‘ஒரே போன்ற இரண்டு ஜேட்’, ‘குட்டைக் கையின் காமம்’, ‘கடிபட்ட பீச் பழம்’ போன்ற சொற்றொடர்களால் சூசகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. பழம் இலக்கியங்களில் பரிச்சயமில்லாதவர்களுக்கு தலையும் புரியாது, வாலும் புரியாது என்பதால் பொருளுரைகளும் பொழிப்புரைகளும் உதவலாம்.
அந்நாட்டுச் செவ்விலக்கியத்தில் முக்கியமானதொரு சிக்கல் நிலவி வந்துள்ளது. வரலாற்றுப் பதிவுகளில் இருக்கும் பெயர்சொற்களிலிருந்து பால் வேறுபாட்டைப் பிரித்தறிவது கடினமாகவே இருக்கிறது. ஏனெனில், மற்ற மொழிகளில் இருப்பது போல சீனச் செம்மொழியில் ஆண் பால் பெண் பாலுக்குரிய விகுதிவேறுபாடுகள் இல்லை. டாங் முடியாட்சி கவிதைகளிலும் மற்ற கவிதைகளிலும் இதே நிலை தான். வாசிப்பவரின் மனம்போல எதிர்பாலுறவென்றோ நேர்பாலுறவென்றோ எடுத்துக் கொள்ள இடமளிக்கும்படி தான் அதிக ஆக்கங்கள் உள்ளன. முற்காலக் கவிதைகளில் கணிசமானவை பெண் குரலில் ஆண்களால் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக, பதின்பருவத்து உறவுகள் திருமணம் என்ற பெயரில் பிரிக்கப்படும் போது ஆண்கள் பெண் குரலில் பிரிவின் சோகத்தையும் தாபத்தையும் எழுதினர்.
முற்காலத்தில், தேசத்தின் முக்கிய மதங்கள் எதுவும் தன்பாலுறவை பாவம் என்றுரைத்ததில்லை. ஓர் ஆண் தன் கடமைகளை நிறைவேற்றி, ஆண் சந்ததிகளை உருவாக்கி விட்டால் அவனது ஓரினநாட்டம் அவனது சொந்த அந்தரங்கமாகி விடுகிறது என்பதே கஃப்யூஷியப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் சொல்வது. குல வாரிசாக ஓர் ஆண் வாரிசை உருவாக்காதவன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டானென்றால், அதைத் தான் பாவம் என்று அக்கால சமூகம் விமர்சித்தது. எதிர்பால் ஈர்ப்புடன் தன்பாலீர்ப்பும் ஒருங்கே கொண்ட மாமன்னர்கள் வரலாற்றேடுகள் நெடுகக் காணக் கிடைக்கின்றனர்.
யாங் என்ற ஆண்தன்மையை உடையவன் ஆண் என்றாலும் சிறியளவில் யின் எனும் பெண் தன்மையையும் கொண்டிருக்கிறான் என்பதே தாவோ மதத்திலுள்ளது. சில ஆண்களில் இந்த யின் மிகுந்து விடுவதுண்டு. அதனால் அவர்களில் பெண் தன்மையுடனான மெய்ப்பாடுகள் இருப்பது இயல்பு. அதொன்றும் இயற்கைக்குப் புறம்பானதல்ல. இந்த நோக்கில் தன்பாலுறவும் கூட இயற்கைக்குட் பட்டதாகவே தாவோவில் கருதுகிறார்கள். தாவோ மிக முக்கியமாக வலியுறுத்தும் யின் மற்றும் யாங்கின் சமச்சீர் எந்த அளவிற்கு இருக்கிறதென்பதைப் பொருத்தே இதெல்லாம் அமைகிறது. இரண்டு ஆண்கள் உறவுகொள்ளும் போதும் இரண்டு பெண்கள் உறவுகொள்ளும் போதும் யாங்-யாங் மற்றும் யின்–யின் கூட்டாகி விடுகிறது. இவ்விரண்டையும் சமச்சீரைக் குலைக்கும் அழிவுச் சக்தியாகவே காண்கிறது தாவோ.
இருந்தும், தாவோ மத தெய்வங்கள் எல்லாமே தனிமையிலோ தன்பால் தெய்வங்களுடனோ இருப்பதையே ஆலயங்களில் காணலாம் என்பது நகைமுரணாகத் தோன்றக் கூடியதாக இருக்கிறது. எடுத்துக் காட்டாக, மலைத் தெய்வமான ஷான்ஷென், மற்றும் பூமியைப் பராமரிக்கும் தெய்வமான துடிகோங் போன்றவற்றைச் சொல்ல முடியும். ஒவ்வொரு வட்டாரத்து ஆலயங்களிலும் இவ்விரு தெய்வங்களைக் காணலாம். பெரும்பாலும் இவ்விரு தெய்வங்களும் ஆண்பாலாகவே ஓரிடத்தில் சேர்ந்திருக்கும். மிக அரிதாகவே துடிகோங் பெண்பாலாக இருக்கும். வெவ்வேறு பாலின தெய்வங்களாக இருக்குமிடங்களில் இரண்டும் முதிய ஆணாகவும் முதிய பெண்ணாகவுமே சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ‘அசாதரணமானது’ எனக் கருதப்படும் அனைத்துமே ‘சாதாரணம்’ தான் என்று ஜுவாங்ஜி என்ற சீனத் தத்துவ ஞானி குறிப்பிடுவார். ஏனெனில், அவரது கோட்பாடுகள் முழு விடுதலை மற்றும் கட்டற்ற சுதந்திரத் தன்மைக்கே முக்கியத்துவமளிக்கின்றன. ஓரினச்சேர்க்கையாளர்கள் சுகித்த செயல் மற்றும் நிலைகளைச் சொல்லிக் குறிப்பிடுவதும் அல்லது வரலாற்றிலிருந்த ஓர் உதாரணத்தைச் சொல்லிக் குறிப்பிடுவதும் வழக்கில் இருந்திருக்கிறது.
வூ ட்ஸாவ் 1800ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்தார். இவர் பிறந்த இறந்த தேதிகள் துல்லியமாகத் தெரியவில்லை. வணிகரின் மகளான இவர் தானும் ஒரு வணிகரையே மணந்தார். தன் வாழ்வில் வந்த இவ்விரு ஆண்களிடம் இவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிகக் கசப்பானவை. ஆணினத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பினால், நண்பர்களாகவும் பாலுறவு இணைகளாகவும் வூ ட்ஸாவ் மற்ற பெண்களின் துணையையே எப்போதும் விரும்பி நாடினார். தன் வாழ்வின் பிற்பகுதியைத் தனிமையில் கழித்த வூ ட்ஸாவ், தாவோ மதப் புரோகிதரானார். முற்பகுதியில் ஏக்கவுணர்வுகள் தூக்கலாக இருந்த காமவுணர்வு சொட்டிய ஏராளமான கவிதைகள் எழுதியிருக்கிறார். மற்ற பெண் கவிஞர்களைப் போல இல்லாமல் இவரது கவிதைகள் பல்வேறு பாடுபொருள்களைக் கொண்டிருந்தன. எளிய மொழி, அந்தரங்க தொனி போன்றவற்றுடன் பன்முகத் தன்மை கொண்டிருந்தன. தான் வாழ்ந்த காலத்திலேயே பிராபல்யமும் புகழும் அங்கீகாரமும் பெற்ற இவரது கவிதைகள் சீனமெங்கும் பாடப்பட்டும் ரசிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. தன்பாலீர்ப்பு கொண்ட சீனத்தின் மிகப் பெரும் கவிஞராகக் கருதப்படுகிற இவர் மேலை நாடடுகளில் பெண்களிடையேயான ஒருபாலுறவு கருத்தரங்ககளில் இருட்டடிப்பு செய்யப்படுகிறார். (Kenneth Rexroth and Ling Chung ஆங்கில மொழியாக்கம் செய்த) வூ ட்ஸாவ் எழுதிய ‘விலைமகள் ச்சிங் லின்னுக்கு’ என்ற கவிதை –
சொர்கத்தின் பச்சைப் பவள நகரிலிருந்து கீழிறங்கி வந்த
தேவலோக மங்கை போல்
உனது மென்னுடல் மீது
பச்சை சிவப்பு பவள ஆபரணங்கள் கிணுகிணுக்கும்.
நாம் சந்திக்கும் கணத்தில் உனது ஒற்றைப் புன்னகை
ஒவ்வொரு சொல்லையும் மறந்து பேசாமல் நிற்கச் செய்து விடும்
மூங்கில்கள் மீது சாய்ந்து
எத்தனை நேரம் தான் மலர் சேகரிப்பா?
தனிமையில் உறையும் சமவெளியென
உனது பச்சை வண்ண ஆடை குளிரேறுகிறது
விநோத எண்ணங்கள் வளர்த்தபடி தனியே நிற்கும்
உன்னைக் கற்பனை செய்ய முடிகிறது
சேர்ந்து குவியும் நிழல்களூடே
நறுமணம் பரப்பும் விளக்கு போல் ஒளிர்கிறாய்
மது விளையாட்டுகள் விளையாடுகிறோம்
ஒருவருக்கொருவர் கவிதைகள் பரிமாறியவாறே
இதயத்தை உடைக்கும் ‘தெற்காற்றை நினைவுகூறல்’
வரிகளைப் பாடுகிறாய்.
பிறகு,
ஒருவர் மற்றவரது அழகிய புருவங்களை வருடுகிறோம்.
உன்னை முழுக்க ஆட்கொள்ள விழைகிறேன்
உனது வெண்ணை உடலையும்
விசுவாசமிகு இதயத்தையும் சேர்த்து.
வசந்தம் !
ஐந்து ஏரிகளை மூடுபனி மறைக்கிறது
அன்பே, செம்படகொன்றை வாங்கி
அழைத்துச் செல்வேன் தூர
உன்னை
இரண்டு பெண்களுக்கிடையில் இருக்கும் பாலுறவு பற்றி ‘சிவப்புப் படுக்கையின் கனவு’ என்ற பிரபல சீன நாவல் பேசுகிறது. இதை ‘கல் பற்றிய கதை’ என்றும் அழைப்பதுண்டு. கதையின் படி இரண்டு பெண்கள் மேடையில் இருவேறு எதிர்பால் பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தனர். படிப்படியாக இரண்டு பெண்களுக்கிடைய பாலுறவேற்படுகிறது. ஒருத்தி இறந்ததும் மற்றவள் அழுது அழுது மருகி தொடர்ந்து அவள் நினைவிலேயே காலங்கழித்தாள். முக்கிய தினங்களில் அவளுக்குப் படையலிட்டாள். இறந்தவள் நடித்து வந்த பாத்திரத்தை ஏற்று நடிக்க இன்னொரு பெண் வந்தாள். இவளை அடிக்கடி கடிந்து பேசினாள். இவளோ அவளிடம் அன்பு கொண்டாள். வந்தவள் வினயமாக, பழைய காதலியை மறந்து போனாயா என்று கேட்டபோது, “இதுவும் கணவன் மனைவி அன்பு போலத் தான். மனைவி இறந்து இன்னொருத்தியை மணந்து கொண்டாலும் முதல் மனைவியிடமும் தொடர்ந்து பிரியமும் காதலும் கொண்டிருக்க முடியும்”, என்று பதிலளிக்கிறாள். வாசகருக்கு இந்த நடிகையின் மேல் இரக்கம் பிறப்பது போல எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் இன்பம், பரவசம், சோகம், ஒருவர் மேல் இன்னொருவருக்கு இருக்கும் அளவற்ற ரசனை என்று ஏராளமான உணர்ச்சிகள் கலை நுட்பத்துடன் சொல்லப்பட்டுள்ளன.
அறிஞர் பீ யுவான் மற்றும் ஸுச்சோவ் நடிகர் லீ க்யூகுவானுக்கும் இடையில் திருமணம் போன்ற பந்தம் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. பகிரங்கமாக தமது உறவைச் சொல்லி சபதமெடுத்த பிறகு, ‘பீ யுவானின் மனைவி’ என்றே லீ க்யூகுவான் அழைக்கப்பட்டார். அந்தத் திருமணத்தை அடியொற்றி சென் ஸென் எழுதிய ‘படிநிலைப் பூக்களைப் பிரதிபலிக்கும் அரிய கண்ணாடி’ என்ற படைப்பினால் 200 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திருமணம் சீன மக்களின் நினைவில் இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் ஓரினச்சேர்க்கை வெளிப்படையாகவே நடைமுறையிலிருந்த போதிலும் ஃபூஜியன் மாநிலத்தில் 17ஆம் நூற்றாண்டில் ஒரு விநோத திருமண முறை இருந்திருக்கிறது. இது பற்றி அறிஞர் ஷென் ஃபூ மற்றும் எழுத்தாளர் லீ யூ ஆகிய இருவரால் பதியப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் நாடோடிக் கதை பாணியில் ‘முயல் குட்டியின் ஆன்மா’ என்றவொரு நாடகமும் தோன்றியுள்ளது. வயது கூடியவர் ‘தத்தெடுக்கப்பட்ட அண்ணன்’. ‘தத்தெடுக்கப்பட்ட தம்பி’யான இளைஞனின் குடும்பத்துக்கு வரதட்சணை கொடுப்பான். பாலுறவு அறியாத கன்னித்தன்மை கொண்ட ஆண் பிள்ளைக்கு தான் அதிக வரதட்சணை கிடைக்கும். “மூன்று கோப்பைத் தேநீர் பரிமாறுவது, ஆறு திருமணச் சடங்குகள் என்று எந்தத் திருமணத்திலும் முறையாக நடக்கக் கூடிய அனைத்துச் சடங்குகளும் இதில் நடக்கும்”, என்று லீ யூ இந்தச் சடங்கை விவரிப்பார். இளையவன் பெரியவனுடைய வீட்டுக்குப் போய் விடுவான். அங்கே இருக்கும் பெற்றோர் தான் அவனுக்கு மாமியாரும் மாமனாரும். அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதுடன், இன்னொரு பெண் மூலம் அண்ணனுக்கு ஏற்கனவே பிறந்திருக்கக் கூடிய பிள்ளைகளை வளர்க்கதெடுக்கவும் உதவுவான். வாரிசு பெற்றெடுக்கச் சொல்லி தம்பியின் குடும்பம் வலியுறுத்தும் வரை அவன் அங்கிருப்பான். ஒரே அண்ணனுக்கு ஒரே சமயத்தில் இது போலப் பல தம்பிகள் கூட இருப்பார்கள்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேலை நாட்டினர் முதன்முதலில் சீனாவுக்குப் போன போது அங்கே மிக இயல்பாக சமூகத்தில் இருந்த ஓரினச்சேர்க்கை முறைகளைக் கண்டு அதிர்ந்து போயினர். அது குறித்து நிறையபேர் பதிந்து வந்தனர். மன உடல் விகாரங்கள் என்று வகைப்படுத்தித் தான் வெள்ளையர்களால் அப்போது அதை அணுக முடிந்தது. அவர்கள் பதிந்தவையெல்லாம், “இதுபோன்ற கேவலமான வெறுக்கத்தக்க இயல்பல்லாத செயல்களை எந்த வெட்கமுமில்லாமல் கூச்சநாச்சமுமில்லாமல் செய்கிறார்கள் சீனத்தில் அரசுயர் அதிகாரிகள். அதைப் பற்றி வெளிப்படையாகப் பொதுவில் சொல்லவும் இவர்கள் தயங்குவதில்லை. ஒவ்வொருக்குப் பின்னாலும் பல்லக்குடன் சேவகப்படை போகிறது. அதில் கண்டிப்பாக கண்ணைப் பறிக்கும் அழகுடன் ஓர் இளம் வாலிபன் போவான். பதிநான்கு முதல் பதினெட்டு வயதில் இருக்கும் அவன் உயரிய வசீகர ஆடைகள் அணிந்திருப்பான்”, என்பது போல இருந்தன.
பௌத்தத்துக்குப் பிறகு, மேலை விஞ்ஞானம் தான் சீனக் கலாசாரத்தின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வெளி விஷயம். சமீபகாலம் வரை ஓரினச் சேர்க்கையை விநோதமென்றும் பாவம் என்றும் சொன்ன மேற்குக் கோட்பாடுகளை சீனத்தில் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். அதனால், இன்றைய காலகட்டத்தில் மேலை உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டு வரும் நவீன சீனத்தில் ஓரினச் சேர்க்கை இழிவாகவும் அவமானமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், தனிமனித அடித்தளத்தில் அமையப்பெறும் மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களை இன்று அணுகும் விதத்தில் சீனச் சமூகத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இன்றைய காலகட்டத்திலும் சீனச் சமூகக் கட்டடம் குடும்பச் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விழுமியங்களைச் சீனக் கலாசாரம் ஏற்க ஆரம்பித்த பிறகு தான் தம் மொழியில் எதிர்பாலுறவையும் தன்பாலுறவையும் தனித்தனியே குறிக்க சொற்கள் இல்லாததையே உணர்ந்தனர். சமீப நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த குழப்பங்கள் உருவாகும் வரை சீனதேசத்தின் கலை இலக்கியங்களில் ஓரினச்சேர்க்கை கொண்டாடப்பட்டே வந்துள்ளது. கலாசாரப் புரட்சி என்ற பெயரில் நடந்தேறிய அராஜகங்களில் நூல்கள், கவிதைகள், ஓவியங்கள் என்று எண்ணற்ற ஆக்கங்கள் தீயில் தொலைந்தழிந்தன. தப்பிப் பிழைத்த படைப்புக்கள் மிகச் சில மட்டும் தான் கிடைத்துள்ளன. பல நவீன ஆக்கங்களில் பாடுபொருள் உணர்த்துவது தன்பாலுறவா, எதிர்பாலுறவா என்று அறிவதே கடினமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், மேலைநாட்டுக் கோட்பாடுகளின் வருகைக்குப் பிறகு இலக்கிய ஆக்கங்கள் செய்த கற்றவர்களைக் கொண்ட மேட்டுக்குடியினர் பொதுவாக பாலுறவுகளைக் குறித்துப் பேசுவதே ஒருவிதத்தில் ஆபாசமென்று கருத ஆரம்பித்திருந்தனர்.
மிங் முடியாட்சி முடிந்து ச்சிங் முடியாட்சி தொடங்கிய காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சமூகக் குழப்பங்களின் காரணமாக அரசாங்கம் உறவு முறைகளை தனது நேரடிக் கண்காணிப்புக்குட் படுத்தியது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக அரசாங்கமே தண்டனைகளையும் அறிவித்தது. ஒரு மாதச் சிறை அல்லது 100 பிரம்படி என்பது குறைந்தபட்ச தண்டனையாக இருந்தது.
ச்சிங் அதிகாரி ஒருவர் தானிய வரி விதிக்கவென்று 1765ல் ஃபூச்சியான் மாநிலத்துக்குப் போன போது தான் கண்டு அதிர்ந்ததை, “அதைச் சிறு கோவில் என்கிறார்கள். அங்கே இருந்த பிரதிமையில் இரண்டு ஆண்கள் இறுகத் தழுவிய காட்சி. ஒரு முகம் வயதேறி சற்றே கரடுமுரடானது. இன்னொன்று பிஞ்சு முகம். சட்டவிரோத ஓரினச்சேர்க்கையில் நாட்டம் கொண்ட சில ராஸ்கல்கள் அங்கே வந்து தமக்கு அருளுமாறு வேண்டுகின்றனர். பிறகு, தமது இச்சைகள் நிறைவேற வழிபாடுகளும் செய்கின்றனர். அதற்குப் பெயர் ஹூ தியான்பாவ்வின் உதவி. வேண்டுதல் நிறைவேறிய பிறகு அங்கே மீண்டும் வந்து நேர்த்திக்கடனாக சிலையின் வாயில் பன்றிக் குடலையும் சர்க்கரையையும் தீற்றுகிறார்கள்”, என்றுரைத்ததாகப் பதிவுகள் உண்டு. அந்தக் குழுவின் பெயர் ஹூ தியான்பாவ். மிரண்டு போயிருந்த அதிகாரி தன் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதி மக்களின் ஒழுக்கக் கோட்பாடுகளில் ஏதும் சிதைவுகள் உருவாகுமோ என்று மிக அஞ்சினார். சிறுமதங்களாக உருவாகக் கூடிய அவற்றைத் தடுக்க உடனடி நடவடிக்கைக்கும் பரிந்துரைத்தார்.
எதிர் பாலீர்ப்பு கொண்டவர்கள் போல சமூகத்தில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவென்று குடும்பம் குழந்தை குட்டிகள் என்று வாழும் தன்பாலீர்ப்பும் உறவும் கொண்ட எண்ணற்ற ஆண்கள் இன்றைய காலகட்டத்திலும் இருக்கிறார்கள். தமது அந்தரங்க வாழ்க்கையில் ஓரின இச்சைகளைத் தீர்த்துக் கொள்வது இவர்கள் வழக்கம். இதற்கு முக்கிய காரணமாகச் சமூகத்தில் சொல்லப் படுவது பெற்றோர் மீதான பக்தியும் ஆண் வாரிசு பெற்றெடுக்கும் கடமையும். பெற்றோர் அவமானமாக உணர்கிறார்கள் என்பதால் தான் தமது தன்பால் நாட்டத்தை ரகசியமாக வைக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான இவ்வகை ஆண்கள் தமது வாழ்வு முறையைப் போலியென்றும் பொய்யானதென்றும் நினைப்பதாகச் சொல்கிறார்கள். மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உற்றார் எல்லோரையும் ஏமாற்றுவதாக குற்றவுணர்வில் புழுங்குகிறார்கள். இவ்வாறாக குற்ற உணர்வுகளைத் தவிர்க்க சிலர் சாமார்த்தியமாக வெளிநாட்டுப் போய்விடுவதுண்டு. மனைவியுடனான பாலுறவு ரசிக்காத இவர்களுக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளப் பிடிக்கவே செய்கிறது. இவ்வாறான 400 ஆண்களிடம் கணக்கெடுத்ததில் 85% மணமுடித்தவர்கள். அதே போன்ற இன்னொரு கணக்கெடுப்பில் 28% பேர் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் பாலுறவு கொண்டிருந்தனர்.
பெண்களில் தன்பாலீர்ப்பு கொண்டவர்கள் தம்மை லாஜி என்றோ லாலா என்றோ அழைத்துக் கொள்கின்றனர். சீனத்தில் இன்று சாதாரணமாகப் பயன்படும் இந்தச் சொல்லை ஆங்கிலப் பதத்தின் நேரடியான மொழியாக்கமாகக் கருதுகிறார்கள். பெண்களை விரும்பும் பெண்களும் கிட்டத்தட்ட அதேபோன்ற பிரச்சனைகளையே சந்திக்கின்றனர். என்றாலும், மணம் முடித்து ஆண்வாரிசைப் பெற்று விட்டால் ஆண் என்ன மாதிரி நடந்தாலும் குடும்பமும் சமூகமும் பொருட்படுத்துவதில்லை என்பது தான் முக்கிய வேறுபாடு. பெண்கள் எனும் போது குடும்பமும் சமூகமும் கருணையை முற்றிலும் மறந்து விடுகின்றன. பகிரங்கமாக வெளியிடத் துணியும் பெண்கள் இப்போதெல்லாம் அதிகரித்துள்ளனர்.
தன் மகளோ மகனோ ஓரினச் சேர்க்கையாளர் என்ற விஷயத்தை அறியவரும் போது தற்கொலைவரை போகும் தமது பெற்றோர்களுக்கு தான் உளவியல் உதவி வேண்டியிருக்கிறதென்று சொல்லும் இவர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளைச் சமாளிப்பதொன்றும் அத்தனை பெரிய சவால் இல்லை என்றே நினைக்கிறார்கள். தமது நட்பு வட்டத்தில் தம்மை யார் என்ன நினைப்பார்களோ என்ற அச்சத்திலும் தயக்கத்திலும் இன்னமும் நண்பர்களும் உறவினர்களும் சமூக ஒன்றுகூடல்களில் இவர்களைச் சேர்த்துக் கொள்ளத் தயங்கினாலும் அவர்களுடைய உள்ளார்ந்த ஆதரவு இல்லாமல் இல்லை.
பெருநகரங்களில் இருந்த ஓரினச் சேர்க்கையாளர்களில் பாதி பேர் திருமணம் முடித்ததோடு ஒன்றுக்கும் மேற்பட்ட பாலுறவுத் துணைகளைக் கொண்டிருந்தனர். அவ்வப்போது ஊருக்குப் போய் வரும் இவர்கள் பெருநகர மக்கள் வெள்ளத்தில் சுலபமாக இவ்வகை வாழ்க்கையை மேற்கொள்ள முடிகிறது. சொந்த ஊரில் குடும்பத்தை விட்டுவிட்டு பெருநகரத்துக்குப் போய் பொருளீட்டும் நெடிய மரபு பெருஞ்சீனத்திலுண்டு. ஷென்ஜென் நகரில் வாழும் 150000 ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இதுபோன்ற வாழ்க்கை முறையையே கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர் திருமணத்திற்கு பெண் பார்க்கவென்று கிளம்பும் போதே, படிக்கிறேன் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு வெளிநாடு கிளம்பிப் போய்விட முயல்வதே இவ்வாண்களின் வழக்கம். சொல்ல முடியாமல் தவிக்கும் பெரும்பாலோரிடையே துணிந்து சொல்பவர்களும் சிலருண்டு. அவ்விளைஞர்களுக்கு பெற்றோரைச் சமாளிப்பது மிகவும் சிரமமாகி விடுகிறது. முந்தைய தலைமுறையால் அதைப் புரிந்து கொள்வது கடினமென்று கருதி தயங்கித் தங்கிச் சொல்வோரும் உண்டு. சொல்லாமலே சாமர்த்தியமாக பெற்றோரைத் திருப்திப் படுத்தவென்று பெண்களிடம் நாட்டம் கொண்ட பெண்ணாகத் தேடிப் பார்த்து மணம் முடிக்க நினைப்போர் இப்போதெல்லாம் அதிகமாகி வருகிறார்கள். ஆனால், விவாகம் குறித்து பேசும் கட்டத்திலேயே பொருளாதாரம் போன்ற வேறுபல காரணிகளால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களால் அவ்வகை ஏற்பாடும் எளிதானதாக இருப்பதில்லை. சில சமயங்களில், ஓரினச் சேர்க்கையாளர் சாதாரண எதிர்பாலுறவுக்காரர் மீது மோகமோ காதலோ கொண்டு விடுவதும் உண்டு. அது போன்ற சூழல்கள் மிக அரிதென்ற போதிலும் பெரிய சிக்கல்களில் முடிகின்றன.
தொண்ணூறு சதவிகித ஓரினச் சேர்க்கையாளர்கள் முப்பது வயதாகும் போது பெரும்பாலும் பெற்றோருக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற திருமணங்கள் பெருகியபடியே தான் உள்ளன. வேறு எதில் இருமனம் ஒத்துப் போகிறதோ இல்லையோ இதில் இரு மனங்கள் தெளிவாகவே ஒத்துப் போகின்றன. இதுபோன்ற தன்பால் நாட்டம் கொண்ட ஆண்களும் பெண்களும் இன்றைய கணினி யுகத்தில் தேடலைப் பரவலாக்கிக் கொள்கின்றனர். பெற்றோரைத் திருப்திப் படுத்தவென்று இவ்வாறு தேடி மணம் புரியும் இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்; சமூகத்தையும் ஏமாற்றிவிடுகிறார்கள். ஒருவரை மற்றவர் குற்றம் குறை சொல்லாமல் குடும்பத்தில் எந்தக் குழப்பமோ பிரச்சனையோ இல்லாமல் சாமார்த்தியமாகச் சமாளிக்கிறார்கள். பரஸ்பரப் புரிதல் ஆரம்பத்திலிருந்து இருந்து விடுவதால், அவரவர் வழியில் தம் இணைகளுடன் அந்தரங்க வாழ்க்கையையும் தொடர்கிறார்கள். விவாகரத்து, மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்வது போன்றவற்றையே ஏற்றுக்கொள்ள மனதிடம் இல்லாத பெரும்பாலோர் இன்னும் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் வாழ்கின்றனர். அதனால், தமது பால்நாட்டம் குறித்து எதையுமே வெளியிடாமல் இம்முறையில் மணம் முடிப்போர் அதிகரித்து வருகின்றனர்.
தொலைத் தொடர்பு வழிகள் அதிகரித்திருக்கும் இந்நாளில், நேரில் பார்க்கும் முன்னரே இருவரும் பேசி விவாதித்து முடிவெடுக்கிறார்கள். தம்முடைய முழுத்தகவலையும் கொடுக்காமலே பேசிக்கொள்ள இவர்களுக்கு இணையப் பெருவெளி மிக உதவுகிறது. காதலிப்பது போலவோ, திருமணம் புரிய முடிவெடுத்திருப்பது போலவோ பெற்றோருக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். கூட்டம் கூடி நடக்கும் திருமணக் கோலாகத்தில் பொம்மைகளாக நிற்கும் இவர்கள் பெண் பார்ப்பது, பெற்றோர் பார்த்துப் பேசுவது என்று தொடக்கத்திலிருந்தே நடிக்கிறார்கள். சமூகத்தில் முகமூடியணிந்து பொய்யாகவும் அந்தரங்கத்தில் தமது பாலுறவுத் தேர்வுகளுக்கு உண்மையாகவும் வாழ்கிறார்கள்.
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான மேலும் பல சட்டச் சலுகைகள் உருவாவதையும் இத்திருமணங்கள் தள்ளிப்போடும் என்பது இதுபோன்ற திருமணம் செய்யாத ஓரினச் சேர்க்கையாளர்களின் அக்கறை. ஓரினச்சேர்க்கையாளர்களிடையே முறையாகவும் வெளிப்படையாகவும் சட்டப்படி செல்லும் திருமணங்கள் நடக்கும் சாத்தியங்கள் உருவாக இது தடையாக இருக்கும் என்பது என்பது இவர்கள் வாதம். சாதாரணப் பெண்ணை மணம் முடிப்பது பெண்பாலீர்ப்புடைய பெண்ணை மணம் முடிப்பதும் சட்டப்பார்வையில் ஒன்று தான் என்கிறார்கள் இவர்கள். இவ்வகைத் திருமணங்கள் சமூகத்துடனும் சட்டத்துடனும் சமரசம் செய்யும் செயல் என்ற நோக்கில் வாதங்களை முன் வைப்போர் எப்போதுமே ஓரின நாட்டமுடைய தாமே தழைந்து போக வேண்டுமா என்று கேட்கிறார்கள். இது போன்ற போலித்தனங்கள் முற்றிலும் மறைந்து சமூகம் உள்ளது உள்ளபடியே ஏற்க முன் வரவேண்டும் என்பதே இவர்களது விருப்பம். அதற்கு இவ்வகைத் திருமணங்கள் இடையூறாகவே இருக்கும்.
இன்றைய நிலையில் இவர்களுக்குப் பெரிய சமூக அங்கீகரிப்பும் இல்லை, பெரிய விலக்கலும் இல்லை. என்றாலும், அவர்களுக்கான சட்டச் சலுகைகள் அங்கீகாரமில்லாமல், அங்கீகாரத்துக்கான எந்தச் சின்ன இசைவுமில்லாமல் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கி விட்டிருக்கிறது. முயற்சிகள் பரவலாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெரியளவில் வருடாந்திர மாநாடுகள் கூடுகின்றன.
2003ல், திருமணச் சட்டத்தை மற்றியமைத்த போது ஓரினச் சேர்க்கையாளர்களிடையே திருமணம் பற்றியதே முதலில் இடம் பெற்ற விவாதம். பரிந்துரை நிராகரிக்கப் பட்டது. இது தான் முதன்முதலில் தன்பாலுறவு கொள்வோருக்கிடையே திருமணம் குறித்து பொதுவில் பேசப்பட்டது. புதிய திருமணச் சட்டம் அமுலுக்க வந்தும் சட்டத்தில் ஒருபால் ஜோடிகளுக்கு திருமணம் அனுமதிக்கப்படவில்லை. சமூகவியலாளரும் பாலுறவு நிபுணருமான லி டின்ஹே பல முறை முயன்றார். 2000 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் தேசிய காங்கிரஸ் கூட்டத்தின் போது இந்த விவகாரத்தை முன்வைத்தார். சீனச் சட்டத்தின் படி 35 முக்கிய பிரமுகர்களின் கையொப்பம் இல்லாமல் எந்தவொரு சட்டப்பரிந்துரையும் நடைமுறைக்கு வராது. பிரமுகர்களின் ஆதரவும் கையொப்பமும் கிடைக்கவில்லை. இதனாலேயே அந்தப் பெண்மணியின் அனைத்து முயற்சிகளும் வீணாகின. இணையத்தில் பல்வேறு வழிகளில் பல்லாயிரம் பேர்களுடைய விண்ணப்பங்களையும், பரிந்துரைகளையும் திடட்டியபிறகும் 2006 மற்றும் 2007 கூட்டங்களில் அவர் விவாதத்தை எடுத்தபோது மீண்டும் மறுக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஏற்கப் படுவதும் அமுலாவதும் இனி மிகக் கஷ்டம் என்றே ஓரினச் சேர்க்கையாளர்களும் அறிஞர் பெருமக்களும் சொல்கிறார்கள். மேலைநாடுகளில் தம்மைப் போன்றவர்களுக்காக ஊடகங்கள் உரக்க குரல் எழுப்புவது போல கீழை தேசத்தில், குறிப்பாக சீனத்தில் எழுப்புவதில்லை என்ற ஆதங்கம் பரவலாக இருந்து வருகிறது. இதனால், தம் பாலுறவு முறைகளை ரகசியமாகவே வைத்துக் கொள்ள வேண்டிய நிலை என்கிறார்கள். 1980 வரையிலும் கூட, அரசாங்கத்தின் ஒடுக்கு முறைகளைச் சகிக்க முடியாமல் ஏராளமான ஓரினச் சேர்க்கையாளர்கள் வெளிநாடுகளுக்குப் போகத் தீர்மானித்ததுண்டு. தைவானில் கல்வி அமைச்சு பகிரங்கமாகவே ஓரினச்சேர்க்கையாளர்களை இழிவாகப் பேசியும் அறிவித்துமுள்ளது.
சுமார் 30 மில்லியன் பேர் தன்பாலுறவுடையோர், அதாவது மக்கள் தொகையில் 2.3%. பால்வினை நோய்கள் பரவுவது குறித்த அக்கறை அதிகரித்து வருகிறது. பால்வினை நோய்களைப் பற்றிய விழிப்புணர்வும் அறிவும் இருக்கும் நிறையபேர் நோய் வந்தால் வரட்டுமென்று பாலுறவுத் துணைகளை மாற்றியபடியே தான் இருக்கிறார்கள். ``முன்பைவிட ஓரினச்சேர்க்கையாளர்களின் மீதான சமூகத்தின் சகிப்புத்தன்மை கூடி வருகிறதென்கிறது கணக்கெடுப்புகள். காவல் துறையினரின் கெடுபிடிகள் மற்றும் தொந்தரவுகள் இவர்களுக்கு இருந்து வருகிறது. காவலரிடம் அடிவாங்குவோரும் உளர். பணம், பொருள் பறிகொடுப்போரும் தொடர்ந்து அச்சுருத்தலைச் சந்திப்பதும் உண்டு.
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் தமக்கான சமூக அடையாளத்தை விரித்தபடியே தான் இருந்து வருகிறார்கள். தம்மின நண்பர்களைச் சந்திக்க அறிவுரைகள், பரிந்துரைகள், சிபாரிசுகள் தரும் சேவை மையங்களும் பெருநகரங்களில் பெருகி வருகின்றன. நகரங்களில் பெரியளவில் இவர்கள் ஒன்றுகூடும் பார், உணவகம், பூங்கா போன்ற இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. பேய்ஜிங்கின் தோங்தன் பூங்காவில் ‘எயிட்ஸ்’ விழிப்புணர்வு அச்சிட்ட தாள்களை தொண்டூழியர்கள் வினியோகிப்பார்கள். நைட்பேன் டிஸ்கோ என்ற இடத்தில் சாதாரண மக்களுடன் ஓரினச்சேக்கை ஆண்களும் கூடுவதுண்டு. அவ்வாண்கள் கூடிய ஆடுவதும் அவ்வப்போது நடக்கும். பேய்ஜிங்கின் பல்லடுக்கு வணிகவளாகத்தில் சனிக்கிழமைகளில் தவறாமல் ஒன்றுகூடும் ஓரின நாட்டம் கொண்ட பெண்களும் சமீபகாலங்களில் எண்ணிக்கையில் கூடி வருகின்றனர். கூடிக் கூடியிருந்து தத்தமது பிரச்சனைகளைப் பற்றிப் பேசவும் இளைப்பாறவுமே இவர்கள் இங்கு வருவது வழக்கம். அதே வேளையில், ஜோடி ஜோடியாக இறுகக் கட்டித் தழுவி நீண்ட ஆவேச முத்தமிடுவோரையும் இங்கே அவ்வப்போது காண முடியும். சிச்சுவானின் ச்செங்டூவில் லூ ஸுன் பூங்காவின் மாலை நேரங்களில் கூடுவார்கள். குவாங்ஜோவ்வில் மேலைநாகரிக மோஸ்தரில் பார்கள் உண்டு. ஷாங்காயிலோ இவர்கள் கூடும் சொகுசுக் கப்பல் கூடங்கள் கடலில் மிதக்கும்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய திரைப்படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தைவான், ஹாங்காங்க் போன்ற நாடுகளில் சின்னத் திரையில் காட்டப்படும் படங்களைக் கூட பெருஞ்சீனம் வெறுத்தொதுக்குகிறது. சில ஒருபாலுறவு காட்சிகள் கொண்டிருக்கும் காரணத்திற்காக ‘Farewell To My Concubine’ போன்ற விருதுகள் பெற்ற பல நல்ல திரைப்படங்கள் கூட அங்கே தடைசெய்யப் படுகின்றன.
நன்றி : உயிர்மை ஜனவரி 2010
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.