எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது. .... காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவை தள்ளுகிறான் இளைஞன். அவனுக்கு 19, 20 வயதிருக்கும். வழக்கம்போல கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்து உள்ளே சென்றால் அங்கே இரண்டு கட்டில்களில் இரண்டு பேர் தூங்குகிறார்கள். இளைஞன் அங்கேயிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்கிறான். துங்குபவர்களில் ஒருவர் சிவத்தம்பி, மற்றவர் அவருடைய அறைவாசி. இருவரையும் இளைஞன் உற்றுப் பார்த்தபடி காத்திருக்கிறான். கையை நீட்டி, முறித்து, உறுமி கண்விழிக்கிறார் சிவத்தம்பி. என்னைப் பார்த்ததும் சிரித்து எழும்பி பேசத் தொடங்குகிறார். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார். முழுக்க முழுக்க இலக்கியம்தான். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் அப்படிச் சென்று அதிகாலை உட்கார்ந்திருந்ததற்கு காரணம் இருக்கிறது. காலையில் சிவத்தம்பி யாரை முதலில் சந்திக்கிறாரோ அதன்படியே அன்றைய நாளின் திட்டம் உருவாகும். அன்றைய நாளை நான் கைப்பற்றி விடுகிறேன். நாங்கள் இருவரும் பக்கத்திலே இருக்கும் காந்தி லொட்ஜிற்கு காலை உணவு சாப்பிட நடந்து போகிறோம். வழக்கம்போல சாப்பாட்டுக்கான பணத்தை சிவத்தம்பியே கட்டுகிறார்.
ஒரு காலத்தில் இப்படித்தான் சிவத்தம்பியுடன் நான் பல நாட்களை கழித்திருக்கிறேன். அவர் எனக்கு ஒரு மூத்த அண்ணரைப்போல. நான் அன்றைய காலகட்டத்தில் எழுதிய சிறுகதை ஒன்றை விமர்சிப்பார். எப்பொழுதும் பாராட்டுத்தான். கைலாசபதி என்றால் நிறையுடன் குறைகளையும் சொல்வார். சிவத்தம்பி உணர்ச்சிவசப்படுபவர், அவரால் அழகைத்தான் காணமுடியும். எங்கள் பேச்சு புதுமைப்பித்தன், பாரதி என்று விரிவாகப் போகும். ஆங்கில இலக்கியம் என்றால் எங்கள் இருவருக்கும் அப்போது பிடித்தது ஜேம்ஸ் ஜோய்ஸ்தான். சில சமயங்களில் நண்பர்கள் எல்லோரும் ஒன்றுகூடுவதுண்டு. அனைவரும் இலக்கியக்காரர்கள்தான். மிகவும் நெருக்கமானவர்கள் என்றால் ஒருவரை ஒருவர் ‘பூசை’ என்று அழைத்துக்கொள்வோம். இது சிவத்தம்பி கண்டுபிடித்த புதிய வார்த்தை. ஏர்னெஸ்ட் ஹெமிங்வே எந்த ஒரு வார்த்தையை பார்த்தாலும் அதை ஒரு புதிய வார்த்தை போல பார்ப்பார் என்று சொல்வார்கள். சிவத்தம்பிக்கு அந்த பிரச்சினை கிடையாது. வார்த்தைகளை புதிது புதிதாக உண்டாக்கிவிடுவார். ‘என்ன பூசை! கன நாளாகக் காணேல்லை?’ என்பார். அன்பு நிறைந்துவிட்டபோது அப்படி அழைப்பார்.
அந்தக் காலங்களில் பாரதியாருக்கு அடுத்தபடி அவரைக் கவர்ந்தவர் ஆண்டாள்தான். ’கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்ற வரிகளை உணர்ச்சிபூர்வமாகக் கூறி சிலாகிப்பார். சில பாடல்களைச் சொல்லும்போது அவருக்கு கண்ணீர் வந்திருக்கிறது. நாங்கள் ஒருவரும் ஆண்டாளை படித்ததில்லை. அதற்குப் பிறகுதான் ஆண்டாள் படிக்கத் தொடங்கினோம். 1960 களில் ஒரு புத்தகம் நண்பர்களிடையே பிரபலமாகத் தொடங்கியிருந்தது. அதை அறிமுகப் படுத்தியது சிவத்தம்பிதான். Paul Potts என்ற எழுத்தாளர் எழுதிய Dante Called You Beatrice என்ற நூல் அப்பொழுதுதான் வெளிவந்திருந்தது. சிவத்தம்பி அதைப் படித்து கரைத்துக் குடித்துவிட்டார். அவர் படித்த பின்னர் நான் படித்தேன். அதன் பின்னர் நண்பர்கள் படித்தார்கள். புத்தகம் ஒரு சுற்றுப் போனது. திரும்பவும் சிவத்தம்பியிடம் போய்ச் சேர்ந்ததா தெரியாது. அது பரவாயில்லை. அவர் பேசும்போது பல வசனங்களை அந்த புத்தகத்திலிருந்து எடுத்து விடுவார். அப்படி அந்தப் புத்தகத்தில் என்ன இருந்தது? டான்ரே என்பவர் 13ம் நூற்றண்டு இத்தாலியின் புகழ்பெற்ற கவி. 9 வயதுச் சிறுமியை காதலித்து, நிறைவேறாத காதலை பெருங்காவியமாகப் படைத்தார். பாரதியாரும் ஒன்பது வயதுச் சிறுமியின் காதலில் விழுந்து கவிதை எழுதியது நினைவுக்கு வரும். Paul Potts என்பவர் நிறைவேறாத தன் காதலைப் பற்றி நூல் முழுக்க புலம்பியிருப்பார். அது ஒரு சுயசரிதைத் தன்மையான புத்தகம். காதலியின் அழகை முடிவில்லாமல் வர்ணித்து தள்ளுவார். அது எங்கள் எல்லோருக்கும் பிடித்துக்கொண்டது. ஏனென்றால் அந்த வயதில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நிறைவேறாத ரகஸ்யக் காதல் இருந்தது. புத்தகத்தில் ஒரு வசனம் வரும். ’காதல் என்பது ஆற்றைப்போல. திருப்பிக் காதலிக்கப்படாத ஒருவனின் காதல் கடலை அடையாத ஆற்றைப் போன்றது.’ சிவத்தம்பி அதை அடிக்கடி தன் பேச்சிலே மேற்கோள் காட்டுவார்.
சிவத்தம்பிக்கு யாழ்ப்பாணத்திலே அவருடைய ஊரிலேயே மிகச் சிறப்பாக கல்யாணம் நடந்தது. நாங்கள் நண்பர்கள் எல்லோரும் கொழும்பிலே இருந்தோம். சிலர் படித்தார்கள், சிலர் வேலையில் இருந்தார்கள். எப்படியும் கல்யாணத்திற்கு போவதென்று முடிவுசெய்தோம். எல்லோரும் காசுபோட்டு திருமணப் பரிசு வாங்கிக்கொண்டு கொழும்பிலிருந்து போனோம். சிவத்தம்பி மிகவும் மகிழ்வாகக் காணப்பட்டார். நாங்கள் பார்த்தது ஒரு புதிய மனிதரை. எங்களுக்கு விமரிசையாக விருந்து படைத்தார். பக்கத்தில் இருந்து ’சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள்’ என்று உபசரித்ததை மறக்க முடியாது. மணப்பெண்ணை எங்கள் ஒவ்வொருவருக்கும் அறிமுகம் செய்து வைத்து பெருமைப்பட்டார்.
நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது மூன்று நாடகங்கள் எழுதினேன். சிவத்தம்பி அந்த நாடகங்களை இயக்கி மேடையேற்றினார். நாடகம் எழுதுவதுதான் என் வேலையே ஒழிய அதில் நடிப்பவர்களை தெரிவு செய்வது, நடிப்புச் சொல்லிக்கொடுப்பது, காட்சி அமைப்பது அனைத்தையும் அவரே பார்த்துக்கொண்டார். ஒருமுறை எனக்கு பிடிக்காத ஒருவர், அவருக்கு நடிப்பு சுத்தமாக வராது, அவருக்கு சிவத்தம்பி முக்கியமான பாத்திரம் ஒன்றை கொடுத்துவிட்டார். என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவசர அவசரமாக நாடகத்தில் இரண்டாவது சீனை மாற்றி எழுதினேன். மேடையில் கதாநாயகனிடம் அந்தப் பாத்திரம் கன்னத்தில் அடி வாங்கும். பாத்திரமும் எறும்பு சைசுக்கு சிறிதாக்கப்பட்டுவிட்டது. ஏதோ என்னால் முடிந்ததை செய்து நாடகத்தை காப்பாற்றினேன்.
கொழும்பில் தமிழ் விழா நடந்தபோது சிவத்தம்பி ஒரு நாடகத்தில் நடித்தார். அதை பலர் இப்போது மறந்துவிட்டார்கள். மகாபாரதத்தில் ஒரு பகுதிதான் நாடகம். சிவத்தம்பி பீமனாக வேடம் தரித்தார். அவருடைய உயரமும் அகலமும் அந்தப் பாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. ஆனால் பிரச்சினை அவருக்கு ஒப்பனை செய்தவருக்குத்தான். ஒப்பனைப் பொருட்களை சேகரித்துக் கொடுப்பது என்னுடைய பொறுப்பில் விடப்பட்டிருந்தது. பட்டு வேட்டிகளும், பட்டுச் சேலைகளும் பீமனுடைய அரச உடையாகவும், அங்கவஸ்திரமாகவும் மாற்றம் பெற்றன. ஆனால் கழுத்திலும், கையிலும், இடையிலும், மார்பிலும் அணிவதற்கு ஆபரணங்கள் தேவை. அரசகுமாரனின் கம்பீரம் அப்படித்தான் வரும். நான் அப்பொழுது ஒரு பெண்ணை தீவிரமாகக் காதலித்தேன். அந்தப் பெண் பரதநாட்டியத்தின் தீவிர காதலி. அவருடைய பரதநாட்டிய நகைகளை கடன் வாங்கி ஒப்பனை செய்பவரிடம் ஒப்படைத்தேன். பீமனாக வேடம் போட்டவர் அத்தனை நகைகளையும் உடம்பில் தூக்கிக்கொண்டு, கதாயுதத்தை வலது கையில் தூக்கிக்கொண்டு மேடையில் தோன்றினார். ’கூறைச்சீலை கடன்கொடுத்தவள் பாயுடன் பின்னால் அலைவாள்’ என்பது எங்கள் ஊர் பழமொழி. நான் நாடகத்தை பார்க்கவில்லை. நான் கடன் கொடுத்த நகைகளை வைத்த கண் மாறாமல் பார்த்து பாதுகாத்தேன். நகைகளை அதே நிலையில், அதே எண்ணிக்கையில், அதே உருவத்தில் திருப்பாவிட்டால் காதல் சேதமாகிவிடும். அப்படியும் ஒட்டியாணம் இழுபட்டு வேறு உருவத்துக்கு மாறிவிட்டிருந்தது. பீமனுக்கும் ஒட்டியாணத்துக்கும் என்ன தொடர்பு என்பது எனக்கு இன்றுமட்டும் புரியாத புதிர். இந்த நகை கடன் சம்பவத்தால் காதல் கொஞ்சம் ஆட்டம் கண்டு பின்பு ஒருவாறு சரிபண்ணப்பட்டது.
சமீபத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் கனடா வந்திருந்தார். பேசிக்கொண்டிருந்தபோது தன்னிடம் 250 பொன்னாடைகள் இருப்பதாக அவர் கூறினார். அவர் சொல்லி வாய் மூடமுன் இன்னொரு எழுத்தாள நண்பர் தன்னிடம் 25 பொன்னாடைகள் இருப்பதாக சொன்னார். நாங்கள் ஒருவரும் அவர் வீட்டுக்கு போய் எண்ணிப் பார்க்கமாட்டோம் என்ற துணிச்சல்தான். இன்னொருவர், அவர் எழுத்து துறைக்கு வந்து இரண்டு வருடம் ஆகிறது, தன்னிடம் 5 பொன்னாடைகள் சேர்ந்துவிட்டதாக பெருமையடித்தார். அப்பொழுது நான் ’என்னிடம் ஒரு பொன்னாடையும் கிடையாது. அது சரி, பொன்னாடை எப்படியிருக்கும்?’ என்று கேட்டது நினைவுக்கு வந்தது.
இப்பொழுது ஞாபகம் வருகிறது. எனக்கு ஒரேயொரு முறை பொன்னாடை போர்த்தப்பட்டது. அதைச் செய்தது சிவத்தம்பி. அது நடந்து 25 வருடங்கள் ஆகியிருக்கும். இலங்கையில் ஓர் எழுத்தாளர் சந்திப்பு. 40 பேர் கூடியிருந்தோம். என்னுடைய மூத்த அண்ணர் நான் ஆப்பிரிக்காவில் இருந்து கொழும்பு போன சமயம் அதை ஏற்பாடு செய்திருந்தார். அந்தச் சந்திப்பில் சிவத்தம்பி பொன்னாடை போர்த்தும்போது ஒரு படமும் எடுக்கப்பட்டது. பேப்பரில் படமும் வந்தது. அதைப்பற்றி யாரோ எழுதியும் இருந்தார்கள். இப்பொழுது அந்தப் படம் இல்லை. ஞாபகத்தில் எஞ்சியிருப்பது சிவத்தம்பி கட்டிப்பிடித்து ‘பூசை, எப்படியிருக்கிறாய்?’ என்று கேட்டதுதான். அவரை வாசல் வரைசென்று ஓட்டோவில் ஏற்றி வழி அனுப்பினேன். அவரிடம் இன்னும் ஏதாவது அன்பாகப் பேசியிருக்கலாம். ஆனால் எனக்கு அதுதான் கடைசி சந்திப்பு என்பது அப்போது தெரியாது.
எங்கள் நண்பர் குழாத்தில் சிவத்தம்பி உண்டாக்கிய அந்தப் புதிய வார்த்தையை சொல்லி கூப்பிடுபவர்கள் இன்று யாராவது மிச்சம் இருக்கிறார்களா எனத் தெரியாது. இல்லையென்றுதான் நினைக்கிறேன். என்னை ’பூசை’ என்று அழைக்கக்கூடிய கடைசி ஆளாக சிவத்தம்பி இருந்தார். இன்று அவர் மறைந்துவிட்டார். அவர் உண்டாக்கிய வார்த்தையும் மறைந்தது.
APPADURAI MUTTULINGAM <amuttu@gmail.com