தமிழ் எழுத்துலகில் பெண் எழுத்தாளராக புகழுடன் வலம் வந்த ராஜம் கிருஷ்ணன் திங்கள் கிழமை இன்று இரவு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. 1925ல் திருச்சிக்கு அருகே உள்ள முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருடன் திருமணமானது. பள்ளி சென்று முறையான கல்வி பயிலாவிடினும், மின் பொறியாளரான கணவர் உதவியால் புத்தகங்களைப் படித்து, தாமே கதைகள் எழுதத் துவங்கினார். 1970ல் தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையைக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து, அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை உள்ளிட்ட சமூக அவலங்கள் குறித்து எழுதியுள்ளார். கலைமகள் இதழில் கதைகள் பல எழுதியுள்ளார். அதன் ஆசிரியர் கி.வா.ஜகன்னாதனால் எழுத்துலகில் வளர்க்கப்பட்டவர். 1953ல் கலைமகள் விருது, 73ல் சாகித்ய அகாதெமி விருது, 91ல் திருவிக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் தம் 90ம் வயதில் காலமானார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் முதுமையில் வறுமையால் வாடிய சென்னையில் விஷ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் தங்கினார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் காலமானார்.
நன்றி: http://www.dinamani.com
அவள் விகடன்: இந்த வேருக்கு நீர் இல்லை!
சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி. 'வேருக்கு நீர்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இதுபோல எண்ணற்ற விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த எண்பத்தி இரண்டு வயதான ராஜம் கிருஷ்ணன் இன்று இருப்பதோ பாலவாக்கம் விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில்! குடும்ப உறவுகளின் உன்னதம் குறித்து எவ்வளவோ எழுதியவர், இன்று ஒற்றைப் பறவையாய் ஒதுங்கியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.
மெலிந்த தேகம்.. தொடை எலும்பு முறிவால் கையில் 'வாக்கர்'.. என்று முதுமையின் வாட்டம் தெரிந்தாலும் பேச்சின் கம்பீரம் என்னவோ அப்படியே இருக்கிறது.
''என்னை எதுக்குப் பார்க்க வந்திருக்கீங்க? ஐ'ம் ஜஸ்ட் எ டஸ்ட்'' என்றவரை ஆசுவாசப்படுத்திப் பேச்சுக் கொடுத்தோம்..
''அன்னிக்கு என் பேச்சைக் கேக்க ஆயிரம் பேர் இருந்தாங்க. இன்னிக்குப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லை'' என்றபடியே பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தார்.
''1925-ல முசிறியில பிறந்தேன். சின்ன வயசுலயே எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. ஆனா, என் பெற்றோர் என்னை ஸ்கூலுக்கு அனுப்பலை. அந்தக் காலத்துல பெண்கள் வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்க. எனக்கும் பதினைந்து வயதில் பால்ய விவாகம் நடந்தது.
ஒன்பது நாத்தனார், மாமியார், மாமனார்னு நான் வாழ்க்கைப்பட்டது பெரிய குடும்பம். ரொம்பவே கஷ்டப்பட்டோம். என் கணவர் கிருஷ்ணன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். வீட்டில் நிறைய புத்தகங்கள் வாங்கிப் போடுவார். லைப்ரரிக்குப் போயும் நிறையப் படிப்பேன். பதினாறு வயசுல கதைகள் எழுத ஆரம்பிச்சேன். அதெல்லாம் தொடர்ந்து பத்திரிகைகளில் பிரசுரமாகி, எழுத்தாளர்கள் வரிசையில் எனக்கு ஒரு தனி இடம் கிடைச்சது'' என்றவர் முகத்தில் மெலிதான பூரிப்பு. தொடர்ந்த ராஜம் கிருஷ்ணன், ''தாம்பரத்துல மூணு கிரவுண்ட்ல வீடு வாங்கினோம். நிம்மதிக்குக் குறைவில்லை. நான் கதை எழுதும்போதெல்லாம் என் கணவர் பேனாவுக்கு மை போட்டுத் தருவார். என் துணிமணிகளை அயர்ன் பண்ணித் தருவதும் அவர்தான். என் கதைகளைப் படிக்கக்கூட அவருக்கு நேரம் இருக்காது. ஆனாலும், நான் எழுத அவ்வளவு ஊக்கம் கொடுத்தார்..'' என்று நெகிழ்ச்சியோடு சொன்னவர், தன் எழுத்து அனுபவங்களின் பக்கமாகப் பேச்சைத் திருப்பினார்.
''1970-ல் தூத்துக்குடி உப்பளத்துக்குப் போய் அங்கு வாழும் மீனவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர்களுக்குக் குடிக்கக்கூடத் தண்ணீர் கிடையாது. மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டே வாழ வேண்டிய நிலை. பரிதாபத்துக்குரிய அந்த மனிதர்களின் அவல நிலையை 'கரிப்பு மணிகள்' என்ற நாவலாக எழுதினேன். அதற்கு இரண்டு விருதுகள் கிடைத்தன.
1972-ல் பீகாரில் கொள்ளையர்கள் அராஜகம் செய்து கொண்டிருந்த சமயம். அப்போ அந்த கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து பல மாதங்கள் அவர்களுடனே இருந்து பார்த்தவற்றை 'முள்ளும் மலரும்' என்ற தலைப்பில் எழுதினேன். பெண் சிசுக் கொலை, கோவா விடுதலை, சோவியத் நாடுகள் பற்றிய கட்டுரைத் தொடர்கள் என நான் எழுதாத விஷயங்களே இல்லை. பாரதியார் பற்றி நிறையப் புத்தகங்கள் வந்திருக்கு. ஆனால், 'முற்போக்குவாதியான பாரதியின் இறப்புக்குப் பின் செல்லம்மாளுக்கு மொட்டை அடித்தது ஏன்?' என்ற விவகாரத்தை ஆராய்ந்து 670 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டேன். இப்படி என்னுடைய 80-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது'' என்று நிறுத்தியவர், எதையோ நினைவுக்குக் கொண்டு வந்தவர் போல மேலே பேசினார்.
''ஒரு கட்டத்தில் என் கணவருக்குப் பக்கவாதம் தாக்கி நடமாட முடியாமப் போச்சு. தன்னோட தொண்ணூறாவது வயசுவரைக்கும் எனக்குத் துணையாவும் தூணாவும் இருந்தார். எங்களுக்குக் குழந்தைகளும் இல்லை. அவர் மறைவுக்குப் பின் 'என் ஒருத்திக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு?'னு உறவுகளும், நட்புகளும் கேட்டதால வீட்டை வித்துட்டேன். நான் எழுதிய அத்தனை படைப்புகளையும் எடுத்துச் செல்ல இடம் இல்லாததால் எல்லாத்தையும் தீ வெச்சுக் கொளுத்தினேன்.
கையில் இருந்த லட்சக்கணக்கான பணத்தை யார் யாரோ பகிர்ந்துக்கிட்டாங்க. பாங்க்ல இருந்த பணமும் என்னாச்சுன்னு தெரியலை. பங்களாவில் வாழ்ந்த நான் சகலத்தையும் இழந்து சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில வாடகைக்குக் குடிபோனேன். அங்க இருந்தப்போ, வரதட்சணை கேட்டுப் பொண்டாட்டியைக் கொடுமைப்படுத்தறவன்.. தினமும் குடிச்சிட்டு மனைவியை அடிச்சு உதைக்கிறவன்.. இப்படிப்பட்ட ஆட்களையெல்லாம் பார்த்தப்போ இன்னும்கூட பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கலையோன்னு தோணுச்சு'' என்றவரின் குரலில் பெரும் துயர்.
''எட்டு மாசத்துக்கு முன்னால ஒரு ஆக்சிடென்ட்ல எனக்குக் கால் எலும்பு முறிஞ்சு போச்சு. ஆபரேஷன் நடந்து அஞ்சு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். என் தோழியான திலகவதி ஐ.பி.எஸ்., பாரதி சந்துரு இருவரும் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்து விட்டாங்க. என்னால இப்ப நடக்க முடியலை. இந்த வாக்கர் உதவியா இருக்கு. எத்தனையோ பேருக்கு ஒரு கஷ்டம்னா ஓடிப்போய் உதவி பண்ணினேன். இப்போ எனக்கு உதவத்தான் யாருமில்லை. பார்ப்போம்..''
கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி அந்த இரும்பு மனுஷி நமக்கு விடை கொடுக்க, சமூகத்துக்காக எவ்வளவோ அக்கறையோடு யோசித்த ஒரு மனுஷிக்கு இந்த சமூகம் செய்திருக்கும் மரியாதையைப் பார்க்க பயமாகத்தான் இருந்தது.
நன்றி: அவள் விகடன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜம் கிருஷ்ணன்
ராஜம் கிருஷ்ணன் மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
பிறப்பும் இளமைக் காலமும்
1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருக்கு மணம் செய்விக்கப்பட்டார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.
எழுத்து
1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர்.
இவரின் 80-க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.
முதுமைக் காலம்
ஆசிரமத்தில் ராஜம் கிருஷ்ணன்கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில், 2002 ஆம் ஆண்டில், அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. முதுமையில் வறுமையால் வாடிய இவர் தற்போது சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் உள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார்.[1]
விருதுகள்
கடந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முகங்களுள் ஒன்றான திருமதி. கிருஷ்ணன் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர். அவற்றுள் சில:
1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
1953—கலைமகள் விருது
1973— சாகித்திய அகாதமி விருது
1975—சோவியத் லாண்ட் நேரு விருது
1991—திரு.வி.க. விருது
நூல்கள்
இவரின் படைப்புகளுள் சில:
கூட்டுக் குஞ்சுகள்
வனதேவியின் மைந்தர்கள்
உத்தரகாண்டம்
மாறி மாறி பின்னும்
மலர்கள்
பாதையில் பதித்த அடிகள்
உயிர் விளையும் நிலங்கள்
புதியதோர் உலகம் செய்வோம்
பெண் விடுதலை
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
காலந்தோறும் பெண்மை
கரிப்பு மணிகள்
வளைக்கரம்
ஊசியும் உணர்வும்
வேருக்கு நீர்
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
இடிபாடுகள்
அலை வாய்க்கரையில்
சத்திய தரிசனம்
கூடுகள்
அவள்
முள்ளும் மலர்ந்தது
குறிஞ்சித் தேன்
சுழலில் மிதக்கும் தீபங்கள்