இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலங்கை வானொலியின் முன்னாள் நிகழ்ச்சித்தயாரிப்பாளரும் வானொலி ஊடகவியலாளருமான காவலூர் ராஜதுரை நேற்று (14-10-2014) மாலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இயங்கிய காவலூர் ராஜதுரையின் கதை வசனத்தில் வெளியான பொன்மணி திரைப்படம் இலங்கை தமிழ்த் திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது. கொழும்பில் வசீகரா விளம்பர நிறுவனத்தின் இயக்குநராகவும் இயங்கிய காவலூர் ராஜதுரை பல வருடங்களாக அவுஸ்திரேலியா சிட்னியில் தமது குடும்பத்தினருடன் வசித்தார். இங்கு இயங்கும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினதும் மூத்த உறுப்பினரான காவலூர் ராஜதுரை சிறுகதை, விமர்சனம், கட்டுரை, விளம்பரம் முதலான துறைகளிலும் எழுதியிருப்பவர். சில நூல்களின் ஆசிரியருமாவார்.
"பல்துறை ஆற்றல் மிக்க செயற்பாட்டாளர் காவலூர் ராஜதுரை" - அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அனுதாபச்செய்தி
கலை , இலக்கியம், வானொலி, தொலைக்காட்சி, சினிமா, நாடகம், மற்றும் விளம்பரம் முதலான துறைகளில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி நீண்ட காலமாக இயங்கிய காவலூர் ராஜதுரையின் மறைவு ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு என்று அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் அதன் நடப்பாண்டுத் தலைவர் டொக்டர் நடேசன் வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமது பூர்வீக ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தனது இயற்பெயருடன் ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டு நீண்ட நெடுங்காலமாக கலை, இலக்கியம் சார்ந்த பல்வேறு துறைகளில் தனது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்திவந்த காவலூர் ராஜதுரை தமது 83 வயதில் அவுஸ்திரேலியா சிட்னியில் காலமாகிவிட்டார் என்பதை அறிந்து எமது சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம். காவலூர் ராஜதுரை இலங்கையில் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாம் சார்ந்திருந்த துறைகளில் ஆக்கபூர்வமாக உழைத்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரையில் நான்கு தலைமுறைகாலமாக அவர் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளை வழங்கியவர். சிறுகதை, விமர்சனம், நாடகம், வானொலி ஊடகம், இதழியல், திரைப்படம், தொலைக்கட்சி, விளம்பரம் முதலான பல்வேறு துறைகளில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ளார். எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் உருவாக்கப்பட்ட காலத்தில் அதன் ஸ்தாபக உறுப்பினராக இணைந்துகொண்டதுடன் - சங்கம் மெல்பன், சிட்னி, கன்பரா முதலான மாநில நகரங்களில் நடத்திய எழுத்தாளர் விழாக்களில் இடம்பெற்ற கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர். மெல்பனில் எழுத்தாளர் விழா நடைபெற்ற சமயம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட சில தரமான குறும்படங்களை காண்பித்தார். அவுஸ்திரேலியாவில் தரமான குறும்பட பிரக்ஞையை வளர்ப்பதற்கும் அவர் கணிசமான பங்களிப்பு வழங்கியவர். அவரது பணிகளை பாராட்டி கௌரவிக்கும் முகமாக எமது சங்கம் சில வருடங்களுக்கு முன்னர் அவருக்கு விருது வழங்கி பாரட்டியிருக்கிறது. எம்மவர் பலரது நூல்கள் வெளியான சந்தர்ப்பங்களில் அவை குறித்து விமர்சனங்கள் எழுதி ஊக்கமளித்தும் வந்திருக்கும் காவலூர் ராஜதுரை மொழிபெயர்ப்புத்துறையிலும் ஈடுபட்டவர். அவரது மறைவினால் கவலையுற்றிருக்கும் அவரது மனைவி உட்பட குடும்பத்தினருக்கும் அவரது நெருங்கிய நண்பர்களுக்கும் எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவலூர் ராசதுரை
பிறப்பு கரம்பொன், ஊர்காவற்துறை, இலங்கை
இறப்பு அக்டோபர் 14, 2014
சிட்னி, ஆத்திரேலியா
காவலூர் இராசதுரை ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் வாழ்ந்து வருகின்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடுள்ளவர். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் காவலூர் இராசதுரை.
வானொலியில் 'கலைக்கோலம்' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியை இலங்கை வானோலியில் மிகச்சிறப்பாக தயாரித்து வழங்கி, கலை, இலக்கியம் சம்பந்தமான தரமான விமர்சனப்போக்கை உருவாக்க காரணமாக அமைந்தவர். விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாக ஈழத்து மெல்லிசைப் பாடல்களை அரங்கேற்றியவர்.
எழுத்துத்துறை: தேவ கிருபையை முன்னிட்டு வாழும் என்ற சிறுகதை இலங்கையில் தமிழ்க் கல்விப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுகதை இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு தர்மயுக் என்ற இதழில் வெளியாகியது. சுதந்திரன், வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் எழுதி தமது ஆற்றல்களை விரிவுபடுத்திக் கொண்டார். தீவிர வாசிப்புப் பழக்கத்தினால் ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.
நாடகத் துறை: இவரது படைப்புகள் நாடகமாக, தொலைக்காட்சி நாடகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.காலங்கள் என்ற தொலைக்காட்சி நாடகம் இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டது. வீடு யாருக்கு? என்ற புதினம் மேடை நாடகமாகியுள்ளது. [ அறிஞர் அ.ந.கந்தசாமியின் புகழ்பெற்ற நாடகமான 'மதமாற்றம்' நான்காவது தடவையாகக் கொழும்பில் மேடையேறியபோது அதனைத் தயாரித்து வெளியிட்டவர் எழுத்தாளர் காவலூர் ராஜதுரை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி காவலூர் ராஜதுரையும், அறிஞர் அ.ந.க.வும் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். - பதிவுகள் -]
திரைப்படத் துறை: பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது அதன் நிர்வாகத் தயாரிப்பாளருமாவார். யாழ்ப்பாணத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலித்த இத்திரைப்படம் பல விமரிசகர்களால் விமரிசிக்கப்பட்டது.
யூனிசெப் நிறுவனத்திலும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் பின்னாளில் சொந்தமாக வசீகரா என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தையும் கொழும்பில் நிறுவினார். புலம் பெயர்ந்து தற்போது சிட்னியில் வாழ்ந்து வருகிறார். இவரது புதல்வர் நவீனன் ராசதுரையும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
வெளியிடப்பட்ட நூல்கள்:
1. குழந்தை ஒரு தெய்வம் (சிறுகதைத் தொகுதி, 1961)
2. வீடு யாருக்கு? (புதினம், 1972)
3. ஒரு வகை உறவு (சிறுகதைத் தொகுதி, 1976)
4. விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்
5. A Prophet Unhonoured (ஆங்கிலச் சிறுகதைகள்
நன்றி: விக்கிபீடியா