[வில்லியம் ஷேக்ஸ்பியர் ஞானஸ்நானம் பெற்ற தினம் ஏப்ரில் 26, 1564. அவர் பிறந்த தினம் ஏப்ரில் 23, 1564 என்று கருதப்படுகின்றது. அவரது மறைந்த தினமும் ஏப்ரில் 23, 1616. - பதிவுகள்-]
முன்னுரை
ஆங்கிலமொழியில் நன்றே எழுதிப் புகழீட்டிய வில்லியம் ஷேக்ஸ்பியர், என் இலக்கிய நாயகர்களின் முதல் வரிசையில் வீற்று இருப்பவர். அவர் இங்கிலாந்தின் முதலாவது எலிசபெத் மகாராணியின் காலத்தவர். அதாவது இன்றிருந்து 450 ஆண்டுகளுக்கு முன் பிறந்து 52 வருடங்கள் வாழ்ந்து இலக்கியப் படைப்பினையே தன் தொழிலாகச் செய்து பணத்துடனும் புகழுடனும் இறந்தவர். தன் 52 வருட வாழ்க்கையிலே 39-பிரபலமான நாடகங்களையும், 154-சொனெற்-ரகக் கவிதைகள், அத்துடன் ஆறு சங்கீதத்துக்கு உரிய சொனெற்றுக்களையும், ஐந்து நீள்-கவிதைக் கதைகளையும் எழுதியிருக்கிறார்.
இன்று பொதுமக்கள் ஆங்கிலத்தில் சாதாரணமாகச் சம்பாசிக்கும் போது கூட, ஷேக்ஸ்பியரின் பல எழுத்து ஓவியங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து ஓரிரண்டு சொற் தொடர்களையாவது பாவிக்காமல் நான்கோ ஐந்தோ நிமிடங்கள் கூடப் பேச முடியாது, என்று சொல்லப் படுகிறது. அந்த அளவுக்கு ஷேக்ஸ்பியரின் இலக்கியங்கள் ஆங்கில மொழியை மேன் மேலும் தளைக்கவும் உதவியுள்ளன என்பர். எனவே இவர் ஆங்கிலத்தில் ஒரு முக்கியமான நாடகக் கவி எனக் கருதப்படுபவர். தன் மொழிக்குச் சிறப்பூட்டிய ஓர் இலக்கிய மேதை.
நான் வாசித்து அறிந்த மற்றைய, முக்கியமாக ஆசியக் கண்டத்தின், மகா கவிகளை எனது இந்நாயகருடன் ஒப்பிடுவது எனில், தமிழில் திருவள்ளுவரும் சுப்பிரமணிய பாரதியாரும், வங்காள-ஆங்கில மொழிகளில் இரவீந்திரநாத் தாகூருமே என் கண் முன் வருகின்றனர். மனிதரின் இயல்புகள், வேறு வேறு சந்தர்ப்பங்களில் அவர்களின் பொங்கு உணர்ச்சிகள், மனிதரின் வாழ்க்கைத் தொழில்கள், கிரமங்கள், தொடர்புப் பிரச்சினைகள் முதலிய எல்லா அம்சங்களையும் அறிந்து, அவற்றைத் திறம்பட விளக்கி, பொழுது போக்காக நாங்கள் கற்று, பார்த்து, அனுபவித்து, பலனும் பெறும் முறையில், ஷேக்ஸ்பியர் தனது இலக்கியப் படைப்புக்களைச் செய்திருக்கிறார்.
வள்ளுவர் ஓர் ஆசான்போல நேரிடை முறையில் விளக்கிய அதே விடயங்களை, எம் ஆங்கில மகாகவி, ஒரு நண்பரைப் போன்று சுவராசியமாகவும் நடைமுறையிலும், சொல்லிக் காட்டாது சொல்லித் தருகிறார்.
பிறப்பும் குடும்பமும் பின்னணியும்
வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564 ஏப்ரில் 23ல் பிறப்பைப் பதிந்து, 1616 ஏப்ரில் 23 அன்று இறந்தவர். இவர் பிறந்தது, இங்கிலாந்தின் இதயம் என அழைக்கப்படும் (நானும் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து, தொழில் செய்த) பேர்மிங்காமிற்குக் கிட்டிய ஸ்ர்றற்போட்-அப்போன்-ஏவன் என்னும், வோறிக்ஷையர் பகுதியின், சிறு நகரில். இவருடைய தந்தையார் ஜோன் ஷேக்ஸ்பியர், ஒரு கையுறை-கம்பளி வியாபாரியும் நகர-பிதாவும் ஆனவர். எம் வில்லியம், அவரின் எட்டுப் பிள்ளைகளில் மூத்தவர்.
தன் 14வது வயது வரை தம் நகரின் மிகச் சிறந்த பள்ளியில் கற்று வந்த வில்லியம், தன் 18ம் வயதில், தன்னால் கற்ப நிலை அடைந்த ஆன் ஹதவே எனும் 26-வயது மாதை மணந்து, அந்தப் பிள்ளையுடன் மூன்று ஆண்டுகளில் பிறந்த இரணைகளுமுடன், ஓர்ஆணும் இரு பெண்களுக்கும் தந்தையானார். தகப்பனார் தயவில் தாம் ஐவரும் மேலும் வாழ விருப்பின்றி, தன் 22வது வயதில் நாடகத் துறையில் சேர்ந்து சம்பாதிப்பதற்கு லண்டன் மாநகரம் சென்று தனியனாகவே அடுத்த 25 வருடங்களைக் கழித்து நாடக ஆசிரியராகவும், நடிகராகவும், நாடக சாலை நடத்துனராகவும் பங்குதாராயும் அயராது உழைத்தார். பின், சிறிது சிறிதாகத் தன் பங்கு இலாபங்களை மீட்டு, தனது புகழ் உச்சி நிலையில் இருக்கும் போதே பிறந்த நகருக்குச் திரும்பி, ஓய்வெடுத்து இறந்தார்.
இடையில், இரண்டு வருடங்களுக்கு மட்டுமே, 1592ம் ஆண்டில் வெடித்த கொள்ளை நோய் காரணமாக, இவரின் நாடக அரங்கு மூடப் பட்டது. இக் காலத்தில் கூட, வில்லியம் மேலும் நாடகங்களை எழுதிக் கொண்டே இருந்தார். இவரின் சொனெற்றுகளும், உலகின் மிகச்சிறந்த கவியாக்கங்களில் சில என இன்று தரங் காணப்பட்டுள்ளன. அன்று ஆண் மக்களே குடும்ப வாரிசுகள். மகனும் பின் இறக்க, பேரரும் இன்றி அவரின் சந்ததி தரிக்கவே இல்லை.
ஷேக்ஸ்பியரின் எழுத்தோவியங்கள்
இவரின் நாடகங்கள் பலரகப் பட்டவை. நகைச்சுவை-இன்பியல்-மகிழ்முடிவு நாடகமுறை ஆக்கங்கள் ஒரு ரகம். இவற்றை ஆங்கிலத்தில் கொமெடிகள் (comedies) என்பர். இவைக்கு எதிரானவை, துன்பியல்-அவலநிகழ்ச்சி-இடர் அல்லது பெரிய விபத்துகளை உள்ளடக்கிய நாடகங்கள். இவற்றை ஆங்கிலத்தில் ர்றஜெடிகள் (tragedies) என்பர். அத்துடன், ஷேக்ஸ்பியர், வரலாற்று நாடகங்களையும் (historical plays ) எழுதியுள்ளார்.
மேற்கூறிய பிரதான ரகங்களின் உள்ளும், உப பிரிவுகள் உண்டு. அந்த நுணுக்கங்களை, ஷேக்ஸ்பியரின் 39 நாடகங்களையும் பெயர் கூறி விவரித்து, கீழே நோக்குகிறோம்.
இன்பியலை அடக்கிய இவரின் நாடகங்களுள் வெறோனாவின் இரு கனவான்கள் (Two Gentlemen of Verona), காதலின் தோல்வியடைந்த உழைப்பு (Love's Labour Lost), சண்டைக்காரியைப் பழக்கியெடுத்தல் (Taming of the Shrew), தவறுகளால் வந்த நல் விளைவுகள் (Comedy of Errors), எனும் நான்கு நாடகங்களும் முன்வந்த (early) மகிழ் முடிவு நாடகங்கள் எனவும், வின்ட்ஸரின் மகிழ்ச்சி மிக்க மனைவிமார் (Merry Wives of Windsor), பன்னிரண்டாவது இரவு அல்லது வேறேதோ (Twelfth Night or What You Will), கோடை கால நடு-இரவின் கனவு (Midsummer Night's Dream), வெனிஸ் மாநகரத்து வியாபாரி (Merchant of Venice), உன் விருப்பம் போலவே (As You Like It), எனும் ஐந்து நாடகங்களும் இடை இன்பியல் நாடகங்கள் (middle comedies) எனவும், அளந்த படியே நடந்தவை (Measure for Measure), ஒன்றையுமே பற்றியில்லா மோகம் (Much Ado About Nothing), நல்லாய் முடிவது எதுவும் நன்றே (All's Well That Ends Well) எனும் நாடகங்கள் மூன்றையும் இருட்டு (dark) இன்பியல் நாடகங்கள் எனவும், பிற்கால இலக்கிய ஆய்வாளர்கள் வகுத்திருக்கின்றனர்.
அதே போல, ஜோன் மன்னன் (King John), இரண்டாவது றிச்சட் மன்னன் (King Richard II), நான்காவது ஹென்றி மன்னன் --- முதலாம், இரண்டாம் பாகங்கள் (King Henry-IV: First and Second Parts), ஐந்தாவது ஹென்றி மன்னன் (King Henry-V), ஆறாவது ஹென்றி மன்னன் --- முதல், இரண்டாம், மூன்றாம் பாகங்கள் (King Henry-VI, First, Second, and Third Parts), மூன்றாவது றிச்சட் மன்னன் (King Richard-III), எட்டாவது ஹென்றி மன்னன் (King Henry-VIII) முதலிய பத்து நாடகங்களும் சரித்திர (historical) நாடகங்கள் என்று ஆராய்ச்சியாளரால் பின்னர் வகுக்கப்பட்டு இருக்கின்றன.
ஷேக்ஸ்பியரின் துன்பியல் ரீதியானவை (tragedies) என்று கணிக்கப் படும் நாடகங்கள் எவை எனில்: மக்பெத் (Macbeth), லியர் மன்னன் (King Lear), றோமியோவும் ஜுலியெற்றும் (Romeo and Juliet), டென்மார்க்கின் இளவரசன் ஹம்லெற் (Hamlet, Prince of Denmark), வெனிசின் ஆபிரிக்க இஸ்லாமியன் ஒத்தெல்லோ (Othello, The Moor of Venice) என்னும் ஐந்துமே.
இவற்றை விட, ர்றொயிலசும் கிறெஸ்ஸிடாவும் (Troilus and Cressida), அதென்சின் ரிமொன் (Timon of Athens), கொறியோலனஸ் (Coriolanus), ஜுலியஸ் சீசர் (Julius Caesar), அந்தோனியும் கிளியப்பெற்றாவும் (Antony and Cleopatra), ரைற்றஸ் அன்ட்றோனிகஸ் (Titus Andronicus), எனும் ஆறும், உரோமன்-கிரேக்க (Greek and Roman) நாடகங்களெனவும், சூறாவளி (Tempest), குளிர்காலத்துக் கதை (Winter's Tale), சிம்பலீன் (Cymbelene), ரையறின் இளவரசன் பெரிக்கிள்ஸ் (Tyre, Prince of Pericles), மூன்றாவது எட்வேட் (Edward-III), ஒரே குடும்பத்து இரு பெருமக்கள் (Two Noble Kinsmen) என்னும் ஆறும் ஷேக்ஸ்பியரின் பிந்திய நாடகங்கள் (Late Plays) எனவும் அடையாளப் படுத்தி வகுக்கப்பட்டு உள்ளன.
இப்போதைக்கு என் ஆங்கில இலக்கிய நாயகரின் நாடகங்களை விடுத்து, அவர் எழுதியுள்ள நீள்கவிதைக் கதைகளையும் சொனெற் கவிதைகளையும் அவற்றின் பெயர்கள், எண்ணிக்கைகள், பெருமைகளையும் சற்று உற்று நோக்குவோம்.
ஷேக்ஸ்பியர் எழுதிய நீள்-கவிதைக் கதைகளாவன: வீனசும் அடோனிசும் (Venus and Adonis), லுகிறீசின் கற்பழிப்பு (The Rape of Lucrece), ஒரு காதலரின் குற்றச்சாட்டு (A Lover's Complaint), உணர்ச்சியுள்ள யாத்திரிகன் (The Passionate Pilgrim), பீனிக்ஸ் பறவையும் கரும்புறாவும் (The Phoenix and The Turtle), எனும் ஐந்துமாகும். இதில் வீனசும் அடோனிசும், 1194 வரிகள் அடங்கிய ஆறடிச் செய்யுள்களையும் 39 வரிகளிலே இரு நடனப் பாட்டுக்களையும் கொண்டது.
லுகிறீசின் கற்பழிப்பு, 265 ஏழடிச் செய்யுள்களால் ஆக்கப்பட்டு, மொத்தம் 1855 வரிகளைக் கொண்டு அமைக்கப் பட்ட ஒரு சுவராசியமான, தர்ம-நீதிக் கதை எனலாம். ஒரு காதலரின் குற்றச்சாட்டு, 47 ஏழடிச் செய்யுள்களால் ஆக்கப்பட்ட கதைக் கவிதை. உணர்ச்சியுள்ள யாத்திரிகன், 14 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பெரும்பாலும் ஆறடி, ஏழடிச் செய்யுள் ஆக்கங்களுடன் இடையில் 12-அடி, 14-அடிக் கவியுருவங்களும் பாவித்து வடிக்கப் பட்டு, மொத்தம் 209 அடிகளுடன் விளங்கும் கதைக் கவிதை.
கடைசியான பீனிக்ஸ் பறவையும் கரும் புறாவும் என்பது, 13 நாலடிச் செய்யுள்களையும் ஆறு மூன்றடிச் (சிந்து போன்ற) செய்யுள்களையும் பாவித்து ஆக்கியுள்ள மிகச்சிறிய சோகக் கதைக்கவிதை எனலாம்.
இப்போ எம்நாயகர் ஷேக்ஸ்பியரின் சொனெற் கவிதைகளையும் சொனெற் சங்கீதக் கவிதைகளையும் நோக்குவோம். முதலில் நாம் எம் ஞாபகத்தில் முன் கொணர வேண்டியது என்ன எனில், சொனெற் என்பது ஆங்கிலக் கவிதையில் மிகவும் பிரபலியமான செய்யுள் உருவ முறை என்பதே. சென்ற நூற்றாண்டுகளில் முன்னணி ஐரோப்பிய கவிஞர்கள் சிலரால் சீராக்கப் பட்டு அவர்களின் பெயர்களைத் தாங்கிய 10-12 சொனெற் ரகங்கள் சாதாரண பாவனையில் உள்ளன. இவற்றில் ஒரு ரகம் ஷேக்ஸ்பியராலேயே முதன் முதல் அமைக்கப் பட்ட படியால் அவரின் பெயரைக் கொண்டே (Shakespaerian Sonnet) என அழைக்கப்படும். இதன் இலக்கணம் என்ன எனில்: 14 அடிகளைக் கொண்ட செய்யுள்கள். ஓவ்வொரு அடியும் 10 ஆங்கில-ரக அசைகளைக் கொண்டது. அந்தப் பத்து அசைகளும் ஐந்து சோடிகளாக, அதாவது ஐந்து சீர்களில், முதலாவது அசை, ஓசை குறைந்தது ஆகவும், இரண்டாவது அசை, ஓசையில் உரத்த சத்தமுடையதாகவும் இருக்கும். ஆங்கிலத்தில் இந்த முறையை Iambic Pentameters என அழைப்பர்.
மேலும், ஆங்கிலக் கவிதைகள் தம் அடிகளின் (வரிகளின்) கடைசியிலுள்ள சொற்களின் முடிவிலேயே தம் எதுகைகளைக் கொண்டிருப்பது ஒரு விசேட சிறப்பு. ஷேக்ஸ்பியரின் சொனெற்றுக்களின் எதுகை முறை, ababcdcdefefgg எனும் சூத்திரத்தால் அறியப்படும்.
அவரின் நாடகங்களும் கவிதைக் கதைகளும் ஷேக்ஸ்பியருக்கு இலக்கிய உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன. அதே போல் அவைக்குச் சளைக்காமல், அவரின் 160 சொனெற் ஆக்கங்களும், கவிஞர்கள் மத்தியில் அவரின் நிலையையும் புகழையும் உயர்த்தி நிற்கின்றன.
முடிவுரை
ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அக்காலத்து எலிசபெத் மகாராணியாரே (தன்னைப்பற்றியும் ஷேக்ஸ்பியர் நாடகம் எழுதுவார் என்று நினைத்தோ என்னவோ) வருடத்துக்கு மூன்று தடவையாகப் பத்து வருடங்களுக்கு இடைவிடாது சென்று பார்த்தார் எனச் சொல்வர்.
ஷேக்ஸ்பியரின் அபாரத்திறமையில், பல கூடியவயதான, சமூகத் தலைவர்களே பொறாமை கொண்டதாகவும் கதைகளுண்டு. 14 வயது மட்டுமே பள்ளியில்படித்து, நான்காண்டுகள் தகப்பனாரின் வியாபாரத்தில் உதவி செய்த அனுபவத்துடன் மட்டும், அரச குடும்பங்களின் விவரங்கள், சட்ட-நுணுக்கவிளக்கம், கவிதை-சொல்நடை மொழியாட்சி, ஐரோப்பிய வரலாறு, முதலிய அறிவுத் திறனுடன் 52 வருடங்களுள் 39 நாடகங்கள், 5 நீள்-கவிதைக் கதைகள், 160 சொனெற்றுக்கள் எல்லாவற்றையும் முதற்தரச் சிறப்புடன் ஒருவர் ஆக்கியிருக்க முடியுமா? இவரின் பெயரில் நிலவி வரும் இலக்கியங்களில் சிலவற்றையாவது கல்வியிலும் சமூக அந்தஸ்திலும் அவரிலும் மிக மேம்பட்டிருந்த சேர் பிறான்சிஸ் பேக்கன், பைரன் பிரபு, முதலியோர் எழுதினரா? எனும் கேள்விகள், காலத்துக்குக் காலம் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் எழுந்து ஒரு முடிவும் இன்றி மடிந்துள்ளன.
அவருடைய நடத்தையிலும், குற்றச் சாட்டுகள், அவரின் காலத்துக்குப் பின் அங்காங்கே எழுந்து புசுபுசுத்து உள்ளன. உதாரணம்: 25 வருடங்கள் குடும்பம் இன்றி லண்டனில் வாழ்ந்து அடிக்கொருக்காலே அவர்களைக் காணத் தன் பிறப்பிட வீட்டுக்குச் சென்றமையும், அப் பிரயாணங்களின் போது அவசிய இடைத் தங்கலாக ஒக்ஸ்போட் நகரில் பல இரவுகள் இவர் வசித்த சத்திரத்தின் உரிமைப் பெண்ணின் மகன், ஷேக்ஸ்பியருக்குப் பிறந்தவனா? எனும் கிண்டல்! இப்படியான அவதூறுகளுக்கு நாம் செவி சாய்க்காது, எம் நாயகரின் இலக்கியத்தை மட்டும் பேணி இரசிப்போமாக!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.